சில தினங்களுக்கு முன்பு அம்ருதாவிடம் வம்பிழுத்த அதே நபர்தான் தன் நண்பர்களுடன் மீண்டும் அம்ருதாவை பற்றியும் அவளது கடந்த காலத்தை பற்றியும் மோசமாக பேசி கொண்டிருந்தான். அவன் பேசியதை கேட்டவர்கள்,
“அப்படீங்குற? ஒருவேளை இருக்குமோ?” என்றதும், “ஆமாம் டா” என்று சிரித்தபடியே அவர்களுக்குள் மேலும் பேச தொடங்க, ‘இன்னும் இங்கேயே நின்றால் தேவையில்லாத வார்த்தைகளை கேட்க நேரிடும். அம்ருதாவின் கடந்த காலத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டலோ அல்லது சண்டையிட்டாலோ, ஒருவேளை அது அம்ருதாவிற்கே அவமானமாக திரும்பிவிட்டால் என்ன செய்வது?’ என்று எண்ணியவன், ஐஸ் கிரீம் வாங்கியதும் வேகமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றான்.
அவனால் அம்ருதாவை பற்றி கிஞ்சித்தும் தவறாக நினைக்க முடியவில்லை. ஆனால் அவன் மனமோ ‘இது என்னடா பெரிய தலைவலி?’ என்று எண்ணி கொண்டது. எவ்வளவு முயன்றும் அவர்கள் பேசிய வார்த்தைகளில் இருந்தும் அதனால் ஏற்பட்ட குழப்பத்திலிருந்தும் வெளிவரவே முடியவில்லை. தன்னை சாதாரணமாக காட்டி கொள்ள முயன்று அதில் தோற்று போனான் ஹர்ஷா.
ஆத்யாவிடம் ஐஸ் க்ரீமை கொடுத்தவன் அமைதியாக அமர்ந்து கொள்ள, இவ்வளவு நேரம் நன்றாக பேசி, சிரித்து விளையாடிபடி இருந்தவன் திடீரென அமைதி ஆனதும் அம்ருதாவிற்குதான் என்னவோ போல் ஆனது. அவனது குழப்பமான முகம் அப்பட்டமாக தெரிய, ‘வேலையில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமா?’ என்று எண்ணி கொண்டவள் அவன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“நேற்று வரை நல்லாதானே இருந்தான்? இப்போது கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் கூட பிள்ளையுடன் மகிழ்ச்சியாக இருந்தானே? என்று எண்ணியவளுக்கும் முகம் வாடி போனது. கடலையே வெறித்தவாரு நின்றிருந்தவன் பிறகு ஆத்யாவின் “அப்பா..” என்ற அழைப்பில் சுயம் அடைந்தான்.
சிறிது நேரம் ஆத்யாவுடன் செலவழித்த பின்னர்
அம்ருதாவை பார்த்து கிளம்பலாமா? என்று முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு கேட்க அவளுக்கோ அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. ‘இது என்ன வேதனை? இப்போதான் ஏதோ கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். இந்த விதிக்கு அது பொறுக்கலையா?’ என்று எண்ணியவள் ஆத்யாவை தூக்கி கொண்டு அவன் பின்னாலேயே நடந்தாள்.
காரினுள் ஏறி வீடு செல்லும் வரைக்கும் கூட அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மனம் வாடி போனாள் அம்ருதா. ஆத்யா வெளியே வேடிக்கை பார்த்தப்படியே கேள்விகள் கேட்டு கொண்டே வர, அதற்க்கு அம்ருதா பதில் சொல்லவும் சில நிமிடங்களிலேயே வீடு வந்து சேர்ந்தனர். இன்னமும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரவு உறங்கும் நேரமும் வந்துவிட்டது. இன்றும் காவேரி ஆத்யாவை தூக்கி கொண்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். இருவரும் தனித்திருக்க அவனது பாரா முகம் அம்ருதாவிற்கு கோபத்தையே வரவழைக்க வேகமாக அவனை நெருங்கியவள் “இப்போ என்னதான் உங்களுக்கு பிரச்சனை? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று கேட்டேவிட்டாள்.
“ஒன்னும் இல்ல அம்ருதா. நீ போய் தூங்கு” என்றிட அதில் மேலும் மேலும் கோபமே துளிர்த்தது. “இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?” என்றதும்,
“இன்டீரியர் மாத்தனும்னு சொன்னேன்ல? எதுவுமே செட் ஆகலமா. அதான் கொஞ்சம் டென்ஷன். வேற ஒன்னும் இல்ல” என்று கூறி சமாளிக்க, “ஊஃப்.. அவ்வளவுதான..? சரி அதனால என்ன? பொறுமையா யோசிச்சா கிடைக்க போகுது. இப்போ வந்து தூங்குங்க. காலைல எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”
“சரி” என்று எழுந்தவன் “நீயும் வா தூங்கலாம்” என்று அவளை படுக்கைக்கு அழைத்து சென்று அவளை அணைத்த படியே உறங்கி போனான். அவன் உறங்கி விட்டானா? என்று உறுதி செய்தவள் அவனுடைய உறக்கம் கலையாதவாறு மெல்ல விலகி சென்றவள் அவளது லேப்டாப்பில் இணையதளத்தின் உதவியுடன் உள் கட்டமைப்புகளை மாற்றுவது பற்றி அறிந்து கொண்டவள் ஏ.ஐ உதவியுடன் அதனை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டாள்.
நேரம் விடியற்காலை நான்கு மணியை தொட அப்போதே தனது வேலையை முடித்தவள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஹர்ஷாவின் கை வளைவுக்குள் சென்று அவனது அணைப்புக்குள் நிம்மதியாக உறங்கி போனாள்.
அடுத்த நாள் காலை பொழுது அழகாக விடிய தன் கை வளைவுக்குள் உறங்கி கொண்டிருந்தவளை பார்த்தவன் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவனையும் மீறி தானாக அவளது நெற்றியில் முத்தம் பதித்தன அவனது தடித்த அதரங்கள்.
“உன்னோட கடந்த காலம் என்னனு எனக்கு சுத்தமா புரியல அம்மு. ஆனா அது என்னவா இருந்தாலும் கண்டிப்பா உன்மேல எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்புறேன். உனக்கு நான் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் துணையா இருப்பேன்” என்றவனோ, மீண்டும் அவளுக்கு ஒரு முத்தத்தை வழங்கியதும் உறக்கத்திலும் புன்னகையித்தாள் அம்ருதா.
அதை கண்டு தானும் புன்னகையித்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய வேலையை பார்க்க தயாராகி இருந்தான். இரவு தாமதமாக உறங்கியதால் இன்னும் அவள் எழாமல் இருக்க, ‘இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே? உடம்பு எதுவும் சரி இல்லையா?’ என்று அவள் நெற்றியை தொட்டு பார்க்கவும் அவன் தொடுதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் அவன் தயாராகி நிற்பதை பார்த்ததும் உடனே கடிகாரத்தை பார்த்தாள்.
“அச்சச்சோ.. இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” என்றவள் அவசர அவசரமாக எழ முயல,
“ஹேய்… ஏன் இவ்வளவு அவசரமா எழுந்திரிக்கிற? தூக்கம் வந்தா தூங்கு. உனக்கும் உடம்பு சரி இல்லையோனுதான் பார்த்தேன்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் இருங்க” என்றவள் முகம் கழுவி விட்டு வந்ததும் தன்னுடைய மடி கணினியை எடுத்து அவள் தயார் செய்த இன்டீரியர் டெகரேஷன் ஐடியாவை ஹர்ஷாவிடம் திறந்து காண்பித்தாள்.
அதை பார்த்து மிரண்டு போனான் அவன். அம்ருதாவை பற்றிய குழப்பம் ஒரு புறம் இருந்தாலும் ரெஸ்டாராண்டிற்கு சரியான ஐடியா கிடைக்கவில்லையே என்பதிலும் சற்று தலைவலியாகத்தான் இருந்தது அவனுக்கு. ஆனால் அவன் பிரச்சனைக்கு தீர்வுடன் வந்தவளை ஆச்சரியமாக அவளை பார்த்தவன்,
“அம்மு.. இதை நீயா ரெடி பண்ணின? எப்படி பண்ணின?” என்று வியப்பாக கேட்க,
“உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று தனது கைகளை பிசைந்தபடி அவன் பதிலுக்காக அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள் அம்ருதா. அவன் இமை சிமிட்டாமல் அவள் தயார் செய்த டிசைன்னையே ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, உங்களைத்தான் கேக்குறேன் பிடிச்சிருக்கா சொல்லுங்க என்று அவள் மீண்டும் கேட்க,
“பிடிச்சிருக்காவா? ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… இட்ஸ் அமேசிங்..” என்றவன் மறுநொடியே அவளை இழுத்து அணைத்திருந்தான். மகிழ்ச்சியின் மிகுதியில் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன், லேப்டாப்பை எடுத்துகொண்டு வெளியே வந்தான். அதை காவேரியிடமும், ஆறுமுகத்திடமும் அம்ருதாவை பாராட்டியப்படியே காண்பிக்க, இருவருக்குமே தன் மகளின் செயலிலும் மருமகனின் பாராட்டிலும் மனம் நெகிழ்ந்து போனது.
“நல்லாருக்கு மாப்ள உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிதான்” என்றார் ஆறுமுகம். காவேரியும் அதற்க்கு ஆம் என்பதுபோல் தலையசைக்க இவை அனைத்தையும் ஒரு ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்த நிரஞ்சனாவை திரும்பி பார்த்தான் ஹர்ஷா.
நிரஞ்சனாவிற்கோ ‘என்னவோ சொன்ன? அம்ருதாவுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு. இப்போ பார்த்தியா? என்பது போல் தோன்றியது அவன் பார்வை. உண்மையும் அதுவே. அதில் வெறுப்பாக முகத்தை சுழித்தவள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள். அம்ருதாவிற்கு அங்கே ஒரே பாராட்டு மழைதான்.
பின்னர் அவளை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றவன் அம்ருதாவிடம் “இதே டிசைன்தான் நம்ம ரெஸ்டாரண்ட்ல வைக்க போறேன்” என்றான்.
அவளும் “சரி” என்பது போல் தலையாட்ட, “ஆனா அம்ருதா, ஃபெஸ்டிவல் டேஸ் வருது, இதை நான் சீக்கிரமே செஞ்சு முடிச்சாகனும். உங்க வீட்டுக்கும் ரெஸ்டாரண்ட்க்கும் தூரம் அதிகமா இருக்கு. டைம் ரொம்ப வேஸ்ட் ஆகுது அம்மு. நான் வீட்டுக்கு போகவா? நீ வேணும்னா இன்னும் இரண்டு நாள் கூட இரு. நான் அப்புறமா வந்து கூட்டிட்டு போறேன்” என்றதும் அவனை பார்த்து முறைத்தவள்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்களும் உங்க கூடவே வரோம்” என்றதும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், “நீ இருக்கணும்னு ஆசைப்பட்டா இருந்துட்டு வா அம்மு” என்றான் அவள் ஆசைக்காக மட்டும்.
“இல்ல.. நாங்களும் வரோம்” என்றவள் அதற்கு மேலும் அவனது பதிலுக்காக காத்திராமல் தன்னுடைய உடைமைகளை அவசர அவசரமாக எடுத்து வைத்துவிட்டு தானும் தயாராகி ஆத்யாவையும் தயார் படுத்தியவள் தன் அன்னையிடம் கூற சென்றாள்.
“அம்மா… அவருக்கு முக்கியமான வேலை இருக்காம். அவரால இவ்வளவு தூரம் வந்துட்டு வந்துட்டு போக முடியல. அதனால நாங்க இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்பறோம்” என்றதும் காவேரிக்கு திடீரென கூறுவதால் முகம் வாடி போனது. ஆனாலும் தன் மகள் “எங்கள் வீட்டுக்கு போகிறோம்” என்று உரிமையாக கூறியதில் அவருக்கு மகிழ்ச்சிதான்.
“சரிம்மா.. மாப்ள அவசர வேலை எல்லாம் முடிஞ்சதும் இன்னொரு நாள் கண்டிப்பா வந்து இரண்டு பேரும் ஒரு வாரம் தங்கிட்டுதான் போகணும்” என்றதும் ஹர்ஷாவும் சரி என தலை ஆட்டினான்.
மூவரும் கிளம்பி செல்ல ஆறுமுகத்துக்கும், காவேரிக்கும் முகம் வாடினாலும், நிரஞ்சனாவோ, “ஹப்பாடா.. சனியனுங்க போய் தொலைஞ்சதுங்க” என்று நிம்மதி அடைந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது. இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த கணவன் மனைவியாய் மாறி போயினர். ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு அவரவர்களுக்கு தேவைப்பட்ட தனிப்பட்ட சுதந்திரத்தையும் இடைவெளியும் கொடுத்து நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வு காதல், கூடல் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
ஆத்யாவிற்கு இன்னும் இரண்டு நாட்களில் பிறந்த நாள் என்பதால் அன்று அம்ருதாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றியிருந்தான் ஹர்ஷா. ஆத்யா அவள் விருப்பத்திற்கு ஜாலியாக ஓடி கொண்டிருக்க இருவரும் அவள் பின்னாடியே சென்றனர்.
அதே தருணம் தாரிக்காவும் அங்கு வந்தவள் ஹர்ஷாவை பின்னிருந்து பார்க்கும்போதே அடையாளம் கண்டுகொண்டாள். அவனுடன் இருக்கும் அவனது மனைவியை இன்று எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று அவர்கள் கண்ணில் படாமல் அவர்களை பின் தொடர, அம்ருதா திரும்பியதும் தாரிகவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் வராத குறைதான்.
‘இ.. இது… அவள்தானே.? அ.. அம்ருதா தானே?’ என்றவள் மீண்டும் ஒரு முறை நன்றாக உற்று நோக்க, ஓ… மை.. காட்.. இது அவதான்.. அவளேதான்’ என்றவள் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் என பலவாரான பாவனைகள் தோன்றி மறைந்தது. ‘ஹர்ஷாவின் நிம்மதியை கெடுக்க அவன் மனைவி என்ற அங்கீகாரத்திலேயே ஒருத்தி கிடைத்து விட்டாளே. இதை விட வேறு எந்த விடயத்தால் அவனை காயப்படுத்திவிட முடியும்? என்று எண்ணியவள் வில்லத்தனமாக சிரித்து கொண்டாள்.