ஹர்ஷாவின் மனைவி அம்ருதா என்று அறிந்ததில், ‘ஹா.. ஹா.. ஹா.. இது போதுமே எனக்கு. உன்னை காயப்படுத்த இதைவிட வேற பெட்டெரான ஆப்ஷன் கிடையவே கிடையாது. ஹர்ஷா.. இன்னைக்கே உனக்கு எதிரா எல்லா வேலையும் ஆரம்பிக்கிறேன்.’ என்றவள் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தவள் மூளையில் மின்னல் வெட்டியது. அவளது அலைபேசியில் நிரஞ்சனாவின் நம்பரை தேடி கண்டுபிடித்தவள், உடனே நிரஞ்சனாவிற்கு அழைப்பை விடுத்தாள்.
மறுபக்கம் அழைப்பை ஏற்று காதில் வைத்த நிரஞ்சனாவோ “ஹலோ.. ” என்றதும்,
“ஹலோ.. நிரஞ்சனா.. நான் தாரிக்கா பேசுறேன்.”
‘தாரிக்காவா? ‘என்று அதிர்ந்தவள், “தாரிக்கா, நீங்க எதுக்கு இப்போ எனக்கு கால் பண்ணுனீங்க?” என்று கோபமாக கேட்க,
“ஒரு முக்கியமான விஷயமாதான் உனக்கு இப்போ கூப்பிட்டேன். நீ உடனே உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க காஃபி ஷாப்க்கு வந்துடு. நானும் வந்துடுறேன். நாம அங்க வச்சு டீடெயில்லா பேசுவோம்” என்றாள்.
“நீங்க கூப்பிட்டா நான் ஏன் வரணும்?”
“உனக்கு உன்னோட அக்கா அம்ருதாவை பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க அக்கா வாழ்க்கையை நிம்மதி இல்லாம பண்ண உனக்கு இது ஒரு நல்ல சான்ஸ். இப்போ சொல்லு வரியா? இல்லையா?” என்றதும்.
சற்றே சிந்தித்தவள், “சரி எப்போ வரணும் சொல்லுங்க” என்றாள்.
“குட்.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடு. நானும் அதே டைம்ல அங்க இருப்பேன்.”
“சரி, நானும் வந்துடுறேன்” என்றதும் மறுமுனையில் அழைப்பு துண்டிக்க பட்டது.
சரியாக அரை மணி நேரத்தில் இருவரும் காஃபி ஷாப்பை வந்தடைந்தனர். இருவரும் ஒரே டேபிளில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருக்க,
“சொல்லுங்க தாரிக்கா? எதுக்கு இப்போ என்னை இங்க வர சொன்ன்னீங்க? உங்களாலதான் எங்க குடும்பம் மொத்தமும் பல பிரச்சனைல சிக்குச்சு. ஏதோ அம்ருதாவை பழி வாங்க ஒரு வாய்ப்புனு சொன்னதாலதான் இங்க வந்தேன்” என்றதும்,
“ஆமா.. அந்த ஆளை கல்யாணம் பண்ணினதும்தான் அவளுக்கு ஓவரா திமிர் ஆகிடுச்சு. என்ன பேசினாலும் அமைதியா வாங்கிட்டு நிக்கிறவ ஒரு நாள் என் கன்னத்துலயே அரைஞ்சுட்டா” என்றவள் சட்டென நிமிர்ந்து “ஆமா.. இப்போ எதுக்கு நீங்க அவரை பத்தி பேசுறீங்க? முதல்ல இத்தனை நாள் எங்க போனீங்க? உங்களால நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?” என்றதும்,
“என்னால உங்க அக்கா வேணும்னா கஷ்டப்பட்டிருப்பா. உனக்கு என்ன? அதை பார்த்து சந்தோஷமாதானே இருந்திருக்கும்?” என்றதும்.
“அது வேணும்னா உண்மைதான். இதை விட பெருசாலாம் யாராலயும் அவளை நோகடிக்க முடியாது.”
“அதுக்குதான் புது ஐடியாவோட வந்திருக்கேன் நிரஞ்சனா. இதனால உனக்கும் எனக்கும் கண்டிப்பா பயங்கர மன திருப்தி கிடைக்கும்.”
நிரஞ்சனாவிற்கு பேச்சே வரவில்லை. ஒரு நிமிடம் அதிர்ச்சியின் பிடியில் சிக்கியவளை, “நிரஞ்சனா..” என்று தாரிக்கா அவள் தோளை பிடித்து உலுக்கிய பின்னரே சுயம் அடைந்தாள்.
“என்ன சொல்றீங்க? நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்க,
“உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன கிடைக்க போகுது? அதுவும் இந்த விஷயத்துல?” என்றதும்,
“ஆமா… அதுவும் சரிதான். சரி இப்போ அதுக்கு என்ன? அதுதான் டைவர்ஸ் ஆகிடுச்சே. இனிமேல் உங்களால என்ன பண்ண முடியும்?”
“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? புரிஞ்சுதான் பேசுறியா?” என்றதும் அவளை முறைத்தாள் நிரஞ்சனா.
“சரி.. சரி.. முறைக்காத. நானே சொல்றேன்” என்றவள் தன்னுடைய திட்டங்களை பற்றி விளக்கமாக கூற கூற நிரஞ்சனாவின் முகம் பளிச்சிட்டது.
“நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சுதுல?” என்றதும் “ஆம்” என்பது போல் மேலும் கீழும் தலையாட்டினாள் நிரஞ்சனா.
“சரி நம்ம இரண்டு பேரும் சேர்ந்தா இத சரியா செஞ்சு முடிக்க முடியும். நீ உடனே உன்னுடைய வேலையை ஆரம்பி. நாளைக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் நான் இதே இடத்துக்கு வந்துடுவேன். அதுக்குள்ள நீ, நான் கேட்ட எல்லாத்தையும் கொண்டு வரணும். இதை மட்டும் நீ சரியா செஞ்சு முடிச்சீனா இனி அவுங்களால நிம்மதியா தூங்க கூட முடியாது. உங்க அக்காவை திரும்ப உங்க வீட்டுக்கே அனுப்புறேன், நான் அந்த ஹர்ஷா வாழ்க்கையில் திரும்ப நுழையுறேன்” என்றாள் தாரிக்கா.
உடனே முகம் முழுவதும் புன்னகையுடன் “டீல்” என்பது போல் சைகை செய்தாள் நிரஞ்சனா.
ஷாப்பிங் சென்றவர்கள் அப்படியே ஹோட்டல், பீச் என நேரம் செலவழித்துவிட்டு வீடு திரும்பியவர்கள் ஆத்யாவின் பிறந்த நாளுக்காக வாங்கிய பொருட்களுடன் வந்திருந்தனர். அதை பார்த்த கீர்த்தனாவிற்கோ அதீத கோபம் வர அதை புரிந்து கொண்ட பார்த்திபன் கீர்த்தனாவை எதுவும் பேச விடாமல் அவர்களது அறைக்கு அழைத்து கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் நடக்க போகும் பிரச்சனை பற்றி அறியாமல் ஹர்ஷாவும், அம்ருதாவும் நிம்மதியாக உறங்கி போயினர்.
அடுத்த நாள் காலை பொழுது விடிந்திட நிரஞ்சனா அம்ருதாவின் அறைக்குள் சென்றவள் அவளது அறை முழுவதும் அவளுக்கு தேவையானதை தேட தொடங்கினாள். இதோ.. இதேதான் என்று கண்டுபிடித்து எடுத்து கொண்டவள் “ம்மா… இன்னைக்கு நான் சீக்கிரம் காலேஜ் போகணும். நான் கிளம்புறேன் பாய்..” என்றவள் காவேரி அதை கேட்டுவிட்டு அடுத்த வார்த்தை பேசும் முன்னரே வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
தாரிக்கவை பார்ப்பதற்காக அவள் கூறிய நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பி காபி ஷாப் முன்பு நின்று காத்திருக்க தொடங்கினாள் நிரஞ்சனா. தாரிக்காவோ அவள் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்தவள், நிரஞ்சனாவிடம் தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு, “சரி நான் அங்க போய்ட்டு என்ன நடந்துச்சுனு உனக்கு அப்புறமா கால் பண்ணி சொல்றேன்.” என்றவள் அடுத்த நிமிடமே,
“அது உனக்கு தேவையே படாது. நான் அங்க போனா உங்க அக்கா தானா உங்க வீட்டுக்கு திரும்ப வாழா வெட்டியா வந்துடுவா. அவளாவே அழுதுட்டே கதை கதையா சொல்லுவா அப்போ கேட்டுக்கோ” என்றதும் நிரஞ்சனா முகத்தில் எல்லையற்ற ஆனந்தம். அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டு சென்ற தாரிக்கா நேராக ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.
இங்கு கீர்த்தனாவை பார்த்திபன் இரவு எவ்வளவோ சமாதான படுத்த முயன்றும் முடியவில்லை. காலையில் ஹர்ஷாவும், அம்ருதாவும் கீழிறங்கி வர தன் மகன் உண்டு முடிக்கும் வரை பொறுமை காத்த கீர்த்தனா இப்போது பேச வாயை திறக்க, அவரை பேச விடாமல் கடைசி முயற்சியாக தனது அறைக்கு அழைத்து சென்று சமாதானம் செய்ய முயன்றார் பார்த்திபன்.
“இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை கீர்த்தனா?”
“ஹர்ஷா ஆத்யாவை சொந்த பிள்ளையை போல கவனிக்கிறதும் அவளுக்காக கணக்கு பார்க்காமல் செலவழிக்கிறதும் எனக்கு சுத்தமாக பிடிக்கல. நான் இன்னைக்கு அதை பத்தி அவுங்ககிட்ட பேசியே தீருவேன்” என்று கூற பார்த்திபனும் எவ்வளவோ கூறி பார்த்து விட்டார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
“என்னவோ செய். அவன் இப்போதான் கொஞ்ச நாளா சந்தோஷமா இருக்கான். அது உனக்கு பொறுக்களையா?” என்றதும்.
“அவன் சந்தோஷமா இருக்குறது எனக்கு பொறுக்காம போகுமா? என்ன பேசுறீங்க நீங்க? நான் அவனோட அம்மா”
“அப்போ அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ.”
“நான் அப்படிதான் நடந்துகிறேன். ஹர்ஷாவுக்கும், அம்ருதாவுக்கும் குழந்தை பிறக்கட்டும். அப்போ அவன் இப்படியெல்லாம் செலவு பண்ணினா நானே சந்தோஷ படுவேன். ஆனா யாரோ பெத்த பிள்ளைக்கு இவன் ஏன் செலவு பண்ணனும் என்று அவர் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபாடும்போதே ஹர்ஷாவும் அம்ருத்தாவும் அறையின் முன்பு வந்து நின்றனர்.
கீர்த்தனா பேசிய அனைத்தையும் இருவரும் கேட்டிருக்க அம்ருதாவின் விழிகளில் இருந்து தாரை தாரையாக வழிந்தது உவர் நீர். ஹர்ஷாவிர்கோ கோபம் எல்லையை மீற “அம்ருதா நீ பாப்பாவை தூக்கிட்டு நம்ம ரூம்க்கு போ நான் வரேன்” என்றதும், “சரி” என்று தலையசைத்தவள் குழந்தையோடு முன்னோக்கி செல்ல, அவளை தடுத்தார் கீர்த்தனா.
“இதோ பாரு அம்ருதா. ஏதோ என் மகனுக்கு பிடிச்சுதேனுதான் உன்னை அவனுக்கு கட்டி வச்சோம். உன்னோட பிள்ளைக்கு பர்த்டே பார்ட்டி வைக்கணும்னா அதை உன்னோட காசுல உங்க வீட்டுல வச்சிருந்திருக்கணும். நீ பண்றது உனக்கே சரியா இருக்கா? நீ எவனுக்கோ பெத்துகிட்ட பிள்ளைக்கு என் மகன் செலவு பண்ணனுமா?” என்றதும் ஹர்ஷாவுக்கோ சுர்ரென்று கோபம் வர.. அதில்,
“வாயை மூடுங்கம்மா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாது.” என்றான் அந்த வீடே அதிரும் வண்ணம்.
அதில் ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தவர் “என்னடா? அவளுக்காக என்னை வாயை மூட சொல்லுற அளவுக்கு வந்துட்டியா?”
என்றதும் அனைவரும் சத்தமாக சண்டை போட்டு கொள்ள, அதை பார்த்து அழ தொடங்கினாள் ஆத்யா. இதை பார்த்த ஹர்ஷாவோ தனது கோபத்தை கட்டுப்படுத்தியவாறு,
“நான் உங்களுக்கு எத்தனை முறை தெளிவுபடுத்தணும்? ஆத்யாவ என்னோட பொண்ணாவே பார்த்துப்பேன்னு சொல்லிதான் அம்ருதாவை கல்யாணம் பண்ணினேன்.” என்று கூறி கொண்டிருக்கும்
அதே தருணம், வீட்டின் கேட் முன்பு வந்து நின்றாள் தாரிக்கா. தாரிக்காவை பார்த்த வாட்ச்மேனோ ‘இப்போது இவளை உள்ளே அனுப்பலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் இருக்க,
“என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்குற? நான் யாருன்னு மறந்து போச்சா? ஒழுங்கா கேட்டை திறந்து விடு” என்றதும் இவளை பற்றி தெரியும் என்பதால் மறு பேச்சு பேசாமல் கேட்டை திறந்து விட்டார்.
வீட்டிற்குள் அனைவரும் சண்டை போடும் சத்தம் கேட்க, தாரிக்காவிற்கு மேலும் குஷியாகி போனது.
ஹர்ஷாவோ “அம்மா.. உங்களுக்கு கடைசியா சொல்றேன். இனிமேல் ஆத்யாவை யாரோ பெத்த பொண்ணுங்குற வார்த்தை உங்க வாயிலருந்து வரவே கூடாது. அவளை என்னோட போனாதான் வளர்க்க போறேன். இனி அவ என்னோட பொண்ணுதான்..”
என்றதும் கைதட்டியபடியே உள்ளே நுழைந்தாள் தாரிக்கா. தாரிக்காவை பார்த்த அம்ருதாவிற்கோ உடல் நடுக்கமுற தொடங்கியது. ‘தாரிக்கா.. நீயா?’ என அம்ருதா அதிர்ந்து போய் அவளை பார்க்க குடும்பமே தாரிக்காவை கோப பார்வை பார்த்தது.