அத்தியாயம் 17
கண் விழித்து எழுந்த பல்லவி தான் இருக்கும் இடம் கண்டு என்ன நடந்தது என்று ஒருவாறு யூகித்தவள் சாம்பவியை சென்று பார்த்தாள்.
“அக்கா உனக்கு என்ன ஆச்சு நைட்டு மயங்கி விழுந்துட்ட உன்னை அழைச்சிட்டு வருவதற்குள் நானும், ராகவ்வும் பட்ட பாடு இருக்கே ஐயோ, ஐயோ” என்று புலம்பினாள் சாம்பவி.
“பல்லவிக்கு ஒன்றும் புரியவில்லை இரவு தான் கண்ட காட்சி கனவா, நிஜமா” என்று குழம்பிப் போனாள். “என்ன இவள் நைட்டு வீட்டுக்கு வந்துட்டோம்னு சொல்லுறாள். அப்போ இவளும், ராகவ்வும்” என்று அவள் யோசிக்க யோசிக்க அவளுக்கு தலைவலி தான் வந்தது.
அந்த நேரம் வீட்டிற்கு விருந்தாளிகள் வர ஆரம்பிக்க பல்லவியும் இயல்பாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தாள்.
இங்கே ராகவ்வோ குற்றவுணர்ச்சியில் தவிக்க ஆரம்பித்தான். பல்லவி சிறு வயதில் இருந்தே நல்ல தோழி. தன் வீட்டில் அவளை திருமணம் செய்து கொள்ள சொன்ன போது அவன் மறுப்பு ஏதும் சொல்லவில்லை காரணம் அவனுக்கு பல்லவியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவள் தன் வாழ்க்கை துணையாக வந்தால் தன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைத்தான். அவளை காதலிக்கவும் ஆரம்பித்தான். எத்தனை சந்தோஷமாக அவன் நேற்று இரவு அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான் ஆனால் இன்று அவன் குற்றவுணர்ச்சியில் புழுங்கினான்.
ரஞ்சித் வந்து அவனை அழைத்திட அவனோடு பல்லவியின் வீட்டிற்கு சென்றான். சொந்த பந்தங்கள் நிறைந்து வழிந்தனர். ராகவ்வின் பெற்றோர் சந்தோஷமாக வாசுதேவன், செல்வராணி இருவரிடமும் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.
சாம்பவி கண்ணை கசக்கிக் கொண்டு ராகவ் முன்பு அங்கும், இங்கும் நடந்து கொண்டு இருந்தாள். குற்றவுணர்ச்சி தாங்க முடியாமல் தவித்தாள் ராகவ். அந்த நேரம் அழகான பட்டுடுத்தி மகாலட்சுமி போல சபைக்கு வந்தாள் பல்லவி. அவளைக் கண்ட ராகவ் ஒரு நிமிடம் சாம்பவியை மறந்தே போனான். மீண்டும் சாம்பவி வந்து சோகமான முகத்துடன் பல்லவி அருகில் அமர அவனுக்கு மீண்டும் குற்றவுணர்ச்சி தாங்க முடியாமல் நிச்சய பத்திரிக்கை வாசித்து தாம்பூலம் மாற்றப் போகும் சமயம் , “எனக்கு பல்லவியை பிடிக்கவில்லை” என்றான் ராகவ்.
“ராகவ் என்ன சொல்லுற” என்ற புவனேஸ்வரியிடம், “ஆமாம் அம்மா எனக்கு சாம்பவியைத் தான் பிடிச்சிருக்கு பல்லவியை பிடிக்கவில்லை” என்றான் ராகவ்.
“பைத்தியமாடா நீ உன்னை கேட்டு தானே கல்யாண ஏற்பாடு பண்ணுனோம்” என்ற சிவச்சந்திரனிடம், “ஆமாம் அப்பா எனக்கு பல்லவியை பிடிக்கவில்லை எனக்கு சாம்பவி தான் சரியாக இருப்பாள். பல்லவியை கல்யாணம் பண்ணி நான் அழைச்சிட்டு போனால் என் ஃப்ரெண்ட்ஸே கிண்டல் பண்ணுவாங்க” என்ற ராகவ்வின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் புவனேஸ்வரி.
“என்னடா பேசுற அவள் என்ன திடீர்னு இன்னைக்கா குண்டானாள். கல்யாணம் பற்றி வீட்டில் பேசி தானே நிச்சயம் பண்ண முடிவு பண்ணினோம். உனக்கு பல்லவியை பிடிக்கவில்லைனா அப்போவே சொல்லி இருக்கலாமே இப்படி ஊரைக் கூட்டி அந்த பொண்ணை அசிங்கப் படுத்துற” என்ற புவனேஸ்வரி மகனை மேலும் மேலும் அறைந்தார்.
“அம்மா ப்ளீஸ் அப்போ நான் குழப்பத்தில் இருந்தேன் ஆனால் இப்போ நான் தெளிவாக இருக்கேன் அதனால் தான் சொல்கிறேன் எனக்கு பல்லவி வேண்டாம் நான் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறேன்” என்ற ராகவ், “இஷ்டம் இருந்தால் எனக்கும் , சாம்பவிக்கும் கல்யாணம் பண்ணி வைங்க இல்லையா நாங்களே கல்யாணம் பண்ணிப்போம்” என்று கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான்.
நடந்த விஷயங்களை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழப்பத்தில் இருந்த பல்லவிக்கு இரவு தான் கண்ட காட்சி நிஜம் தான் என்று புரிந்தது. சொந்த தங்கையே தனக்கு இத்தனை பெரிய துரோகத்தை செய்து விட்டாளே என்று நொந்து கொண்டவள் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.
வாசுதேவன் நொந்து போய் இருக்க சிவச்சந்திரன் அவருக்கு ஆறுதல் கூறினார். “என்னை மன்னிச்சிடு வாசு” என்று தன் நண்பனின் காலில் விழப் போன சிவச்சந்திரனை தூக்கியவர், “என்ன காரியம் பண்ணுற சிவா அவன் பண்ணின தப்புக்கு நீ என்ன பண்ணுவ எல்லாம் என் மகளோட விதி” என்று நொந்து கொண்டார் வாசுதேவன்.
நடந்த நிகழ்வுகளை பல்லவி கூறிட சாம்பவி முகத்தில் ஈ ஆடவில்லை.
“என்ன சாம்பவி நீ பண்ணின களவாணித் தனத்தை சொன்னதும் ஆணி அடிச்சது போல நிற்கிற” என்றாள் பல்லவி.
“இல்லை அது ,அது” என்று சாம்பவி ஏதோ சொல்ல வர ,அவளது கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் வைதேகி.
“என்ன காரியம் டீ பண்ணி இருக்க ச்சீ நீ என் வயிற்றில் தான் பிறந்தியா அந்த பையனும், நீயும் லவ் பண்ணுறீங்கனு தானே டீ சொன்ன ஆனால் அவனை உன் வலையில் விழ வைக்க அவனுக்கு போதை மருந்து கொடுத்து அவன் கூட படுத்துருக்க ச்சீ” என்று அவள் கூந்தலைப் பற்றி அடித்தார் வைதேகி.
“அவளை அடிக்க கூடாது உன்னை தான் அடிக்கனும் என்னடீ பொண்ணு வளர்த்து வச்சுருக்க” என்ற வாசுதேவனிடம், “என்னை அடிச்சு கொன்னுருங்கங்க இப்படி ஒரு பொண்ணை பெத்ததுக்கு நான் செத்துப் போறேன்” என்றார் வைதேகி.
“இப்போ எதுக்கு நீங்க இரண்டு பேரும் புலம்பிட்டு இருக்கீங்க அதான் இவளுக்கும், ராகவ்க்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களே அப்பறம் என்ன விடுங்க” என்றாள் பல்லவி.
“என்ன பேசுற பல்லவி அவள் உன் வாழ்க்கையை அழிச்சுருக்காள்” என்ற வைதேகியிடம், “ஏன் சித்தி அவள் மட்டும் தான் என்னோட வாழ்க்கையை அழிச்சாளா? நீங்க இல்லையா?” என்று பல்லவி கேட்டிட வைதேகிக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.
எத்தனையோ நல்ல வரன்களை தட்டிக் கழித்த பெருமை வைதேகியையும் சேருமே ஆனால் சாம்பவி இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறாள் என்பது வைதேகிக்கே அதிர்ச்சி தான்.
“என்னடா சொல்லுற” என்ற ரஞ்சித்திடம், “ஆமாம் டா அன்னைக்கு ஒரு பெக் தான் டா குடிச்சேன் அது எப்படி இவ்வளவு போதை ஏறி சாம்பவி கிட்ட தப்பா நடந்துக்கிட்டு என்னால பல்லவிக்கு துரோகம் பண்ண முடியலைடா அதனால் தான் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினேன். ஆனால் ஏனோ சாம்பவியை என்னால முழு மனசோட ஏத்துக்க முடியலை அன்னைக்கு குற்றவுணர்ச்சி தாங்க முடியாமல் தான் நான் என் நிச்சயதார்த்தை நிறுத்தினேன் ஆனால் இப்போ பல்லவி எனக்கு சொந்தம் இல்லைங்கிற உண்மை என்னை வாட்டி வதைக்குதுடா. என்னால முடியல டா” என்று அழுதான் ராகவ்.
“பைத்தியம் மாதிரி பண்ணாதே ராகவ்” என்ற ரஞ்சித்திடம், “பல்லவி நிஜமாகவே திலீப்பை லவ் பண்ணுறாளா? ரஞ்சித்” என்றான் ராகவ்.
“நான் என்ன பொய்யா சொல்றேன் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழனும் தயவு செய்து நீ எந்த பிரச்சனையும் பண்ணாமல் இரு” என்ற ரஞ்சித் , “ஆனால் ஒரு விஷயம் மட்டும் இடிக்குது நீ ஏன் ராகவ் இவ்வளவு முட்டாளா இருந்திருக்க அந்த சாம்பவி சொன்னது எல்லாம் உண்மை தான்னு எப்படி நம்பின” என்றான் ரஞ்சித்.
“அது எப்படி டா ஒரு பொண்ணு இந்த விஷயத்தில் பொய் சொல்லுவாளா” என்ற ராகவ் விடம், “அவளுக்கும், உனக்கும் எல்லாமே நடந்திருக்கு சரி ஆனால் எப்படி. ஒரு பெக் குடிச்சா எல்லாம் போதை ஏறாது அது மட்டும் இல்லாமல் பல்லவி வேற மயங்கி விழுந்திருக்கிறாள் சம்திங் ராங்க். எனக்கு என்னவோ அந்த சாம்பவி தான் ஏதோ செய்து இருப்பாளோன்னு தோனுது” என்றான் ரஞ்சித்.
“இப்போவாச்சும் யோசி நீ சாம்பவியை கல்யாணம் பண்ணிக்கிறது உன்னோட தனிப்பட்ட விஷயம் . ஆனால் பாவம் பல்லவி அவளை லவ் பண்ணிட்டு இருக்கேன்னு வேற யார்கிட்டேயும் சொல்லிறாதே அவளும், திலீப்பும் தான் சேரனும்” என்று கூறிய ரஞ்சித் சென்று விட அமைதியாக யோசிக்க ஆரம்பித்தான் ராகவ்.
“என்ன டா சொல்லுற அந்த சாம்பவி இவ்வளவு வேலை பார்த்து இருக்காளா?” என்ற ரஞ்சித்திடம், “ஆமாம் டா எதார்த்தமா பல்லவி வீட்டுக்கு போனேன் அப்போ தான் பல்லவி இதைப் பற்றி அவள் வீட்டில் சொல்லிட்டு இருந்தாள். அதைக் கேட்டதும் ஷாக் ஆகிட்டேன் பாவம் டா ராகவ்” என்றான் திலீப் வர்மன்.
“சரி சார்வால் இப்போ என்ன பண்ணப் போறீங்க சாம்பவி தப்பான பொண்ணு அதனால் அவளை கழட்டி விட்டுட்டு பல்லவியை ராகவ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீயா?” என்றான் ரஞ்சித்.
“அடப்பாவி கிராதகா ஏன் டா என் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடப் பார்க்கிற” என்றான் திலீப் வர்மன்.
“உன் ஃப்ரெண்ட் ராகவ்க்கு இரக்கப் பட்டு அவன் கிட்ட உண்மையை சொல்லு , அப்படியே உனக்கும், பல்லவிக்கும் நடக்கிற பனிப்போர் பற்றியும் சொல்லு அவன் சாம்பவியை தூக்கிப் போட்டுட்டு பல்லவியை கல்யாணம் பண்ணிக்கட்டும். வந்துட்டான் நண்பனுக்கு இரக்கம் பட்டுக்கிட்டு உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன் கேளு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பல்லவியை சமாதானம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ அது தான் உனக்கு நல்லது” இல்லைனா.
(…. அடியே…)