அவன் சென்று மறையும் வரையிலும் அவனின் முதுகையே வெறித்துப் பார்த்தவளுக்கு என்ன மாதிரியான உணர்வு என்றே தெரியவில்லை.
முன்பு போல் அவனின் முகத்தை பார்த்து இவளால் பேச முடியவில்லை. ஏதோ ஒரு தடுமாற்றம்.. ஆனால், அது காதலா என்று கேட்டால் தெரியவில்லை..
‘எப்படியோ பாரியின் வாழ்க்கை சரியாகிவிட்டது. அவனுக்கு வாழ்க்கை துணை கிடைத்து விட்டாள். இனி தன் பெற்றோருக்காகவாவது தான் யாரையாவது மணந்து தானே ஆக வேண்டும். யாரையோ மணப்பதற்கு அரவிந்தை மணந்தால் என்ன?’ என்று தோன்றி விட்டது.
காரை கிளப்பி கொண்டு வீடு சென்று சேர்ந்தாள்.
வீட்டிற்குள் அவள் நுழையும் பொழுதே அவளின் அன்னை ராதா சோர்வான குரலில், “வாடா சாப்பிடுறியா?”.
அவருக்கும் மகளின் வாழ்க்கையை எண்ணி பெரும் வருத்தம் இருக்கின்றது.
ராஜசேகர், “அவளுக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்போ பண்ணிக்கட்டும். அதுவரைக்கும் நீ அவளை போர்ஸ் பண்ணாதே ராதா” என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
எனவே, அவரால் மகளை வற்புறுத்தவும் முடியாமல். அவள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வாளோ என்ற எதிர்பார்ப்போடு, அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.
தன் தாயின் அருகில் சென்ற விதுஷா எதுவும் கூறாமல் அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“ஆமாமா, நான் அரவிந்தை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்”.
“ரொம்ப சந்தோஷம்டா.. நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ.. உன் மனசுக்கு புடிச்ச மாதிரி நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான். எனக்கு தேவை என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையனும். அவ மனசுக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமான வாழ்க்கை அவளுக்கு அமையனும்ன்றது மட்டும் தான். மாப்பிளை யாரா இருந்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்று கண்களில் மெல்லிய கண்ணீரோடு அவர் கூறவும்.
அவரின் வார்த்தையில் இருந்தே எந்த அளவிற்கு அவர் தன் வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டிருக்கிறார் என்பது விதுஷாவிற்கு நன்கு விளங்கியது.
தன் தாயை இத்தனை நாட்கள் எவ்வளவு வருந்த வைத்திருக்கிறோம் என்று எண்ணும் பொழுதே அவளுக்கும் சங்கடமாகி போனது.
அதன் பிறகு ராதா தன் கணவரிடம் மகிழ்ச்சியோடு இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.
அவருக்கும் தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ச்சி தான். அனைவருமே இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர்.
அரவிந்த் பாரிவேந்தனின் வாழ்க்கையில் விளையாடியதை பற்றி அறியாத விதுஷா அவனை திருமணம் செய்து கொள்ள தயாராகிவிட்டாள்.
அரவிந்த் செய்த காரியங்கள் எல்லாம் தெரிந்திருந்தால் நிச்சயமாக இவள் அவனை மணக்க சம்மதித்திருக்கவும் மாட்டாள், அவனை மன்னித்திருக்கவும் மாட்டாள்.
பிற்காலத்தில் தெரிய வரும் பொழுது இவளின் நிலை என்னவாக போகிறதோ..
காலம் தாழ்த்தாமல் மறுநாளே ராஜசேகரும், ராதாவும் அரவிந்தின் பெற்றோரிடம் பேசினர். அவர்களுக்கும் இதில் பரிபூரண சம்மதம்.
விதுஷா அரவிந்திடம் அவனின் காதலை தான் ஏற்றுக் கொண்டதாக எதுவுமே கூறவில்லை. நேராக தன் பெற்றோரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள்.
அரவிந்திற்கும் எப்படியோ விதுஷா தனக்கு கிடைத்தால் போதும் என்ற எண்ணம் தான்.
அவள் தன்னிடம் சம்மதம் கூறினால் என்ன?
அவளின் பெற்றோரிடம் சம்மதம் கூறினால் என்ன?
எப்படியும் எங்களுக்கு தானே திருமணம் நடக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் முக்குளித்துக் கொண்டு இருந்தான்.
மறுநாள் வழக்கம் போல் பாரிவேந்தன் மருத்துவமனை வந்தவனுக்கு முதலில் கிட்டியது விரைவில் நடக்கவிருக்கும் விதுஷா மற்றும் அரவிந்தின் திருமண செய்தி தான்.
அதை கேட்ட அவனுக்குமே அவ்வளவு மகிழ்ச்சி. மனமாற அவர்களுக்கு தன் வாழ்த்தை தெரிவித்தான்.
அந்த வார விடுமுறை தினத்திலேயே அவர்களுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி இன்று அவர்களின் நிச்சயமும் இனிதே நிறைவடைத்தது.
பாரிவேந்தனும் தன் தாயுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டான்.
இனியாளையும் அவன் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்து பார்த்து விட்டான். ஆனால், அவள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாள்.
இப்படி விசேஷங்களுக்கு எல்லாம் செல்ல சற்றும் அவளின் மனம் விரும்பவில்லை. ஏதோ ஒரு நெருடல்..
யாரைப் பற்றியும் தெரியாது.. புதிய இடத்தில் புதிய மனிதர்களுடன் கலந்துரையாடும் பொழுது இவளை பற்றி கூற வேண்டி வரலாம், மற்றவர்களின் கேள்விகளுக்கு பயந்தே அங்கே செல்வதை தவிர்த்துக் கொண்டாள்.
நிகழ்ச்சி இனிதே நிறைவடையவும் முத்துலட்சுமியின் பார்வை வருத்தம் கலந்த ஏக்கத்தோடு தன் மகனை தழுவி மீண்டது.
இப்படி ஒரு நாள் தன் மகனின் வாழ்க்கையிலும் வந்து விடாதா என்ற ஏக்கம் தான் அவர் மனதில் அந்த நொடி ஓடிக் கொண்டிருந்தது.
தன் மகன் இதை எல்லாம் எப்பொழுதோ கடந்து சென்று விட்டான் என்பதை அறியாத அவரின் மனமோ தனக்குள்ளேயே தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டது.
யாழ்நிலாவிற்கு இப்பொழுது ஐந்து மாதம் பூர்த்தியாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உட்கார துவங்கி விட்டாள்.
அறையில் இருந்து வெளியே வந்த முத்துலட்சுமி சற்று முக சுழிப்போடு வந்து சோபாவில் அமரவும்.
அவரின் முகத்தை பார்த்த இனியாள், “என்னாச்சு மேடம்?”.
“கால் ரொம்ப வலிக்குது மா.. யாழ் குட்டி என்ன பண்றீங்க?” என்றவாறு அவள் கையில் இருந்த குழந்தையை கொஞ்சினார்.
குழந்தையும் அவரிடம் தாவி செல்ல ஆசையாக வாங்கிக் கொண்ட முத்துலட்சுமி குழந்தையுடன் குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்தார்.
இனியாள் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவள், வெந்நீரை எடுத்துக் கொண்டு முத்துலட்சுமியை நோக்கி வந்து அவரின் பாதத்தை அந்த மிதமான உப்பு கலந்த சுடுநீரில் வைத்து எடுக்க சொன்னவள். அவரின் கால்களுக்கு தைலம் தேய்த்து பிடித்து விட்டாள்.
“பரவாயில்ல மா இதெல்லாம் நீ எதுக்கு பண்ற விடு.. அதுவே சரி ஆகிடும்” என்றவருக்கோ இனியாளின் செயல் அவரின் மனதை குளிர்விக்க செய்தது.
“பரவாயில்ல இருக்கட்டும் மேடம். உங்கள பாத்துக்குறதுக்காக தானே நான் இங்க வேலைக்கு வந்து இருக்கேன். நானே செய்யுறேன் என் அப்பாவுக்கு கால் வலி வந்தா நான் தான் பிடித்து விடுவேன். நீங்களும் எனக்கு அம்மா மாதிரி தானே” என்றவாறு அவரின் பாதத்தை பிடித்து விட்டாள்.
அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்த பாரிவேந்தன் அவளின் வார்த்தையை தன் காதில் வாங்கியவாறு இதழில் மெல்லிய புன்னகையோடு தன் தாய்க்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
உடனே யாழ்நிலா அவனை நோக்கி பாயவும், அவளை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவாறு இனியாளை தன் பார்வையால் வருடினான்.
முத்துலட்சுமி மற்றும் இனியாளின் பிணைப்பை பார்க்கும் பொழுது அவனுக்குமே மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.
இனியாள் அவருக்கு பாதத்தை பிடித்து விட்டவள் தன் கைகளை கழுவி விட்டு வரவும்.
“இனியாள் இங்க வந்து உட்காரு” என்றான் தன் எதிரே இருக்கும் இருக்கையை கண்களால் காண்பித்தபடி.
அவளும் மறு பேச்சு பேசாமல் வந்து அமரவும்.
“நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு இருக்க?” என்றவனின் கேள்வி புரியாமல் அவள் அவனை பார்க்கவும்.
“இனியாளோட லைஃப்ல நெக்ஸ்ட் என்ன பண்ண போறான்னு தான் கேட்கிறேன்”.
முத்துலட்சுமிக்கும் இப்பொழுது எல்லாம் பாரிவேந்தனின் வார்த்தைகள் இனியாளின் மேல் ஏதோ ஒரு உரிமை உணர்வோடு இருப்பதை கவனித்தார். ஆனால், சத்தியமாக கணவன் என்ற உரிமையோடு தான் தன் மகன் அவளிடம் பேசுகிறான் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையுமே திறந்த புத்தகமாக அவள் பாரிவேந்தனிடம் கூறிவிட்டாள். அப்படி இருக்கையில் பாரிவேந்தன் இப்படி ஒரு கேள்வி எழுப்பவும் அவன் என்ன கேட்கிறான் என்பது இனியாளுக்கு சற்றும் புரியவில்லை.
“நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல டாக்டர்”.
“நீ ஏன் உன்னுடைய படிப்பை கண்டினியூ பண்ண கூடாது”.
“அது.. அது எப்படி டாக்டர்? இனிமே எப்படி பண்ண முடியும்?” என்று தயங்கியவாறு அவள் கேள்வி எழுப்பவும்.
“ஏன் முடியாது? நம்ம காலேஜிலேயே நீ பண்ணு.. நம்ம ஹாஸ்பிடல்லையே ட்ரைனிங் பண்ணி இங்கேயே உனக்கு விருப்பம் இருந்தா நீ ஒர்க் பண்ணலாம். இல்லனா, நீ வெளியில எங்கேயாவது ஒர்க் பண்ணனும்னாலும் பண்ணலாம்”.
“இல்ல டாக்டர்.. இனிமே அதெல்லாம் எப்படி சரி வரும்?”.
“ஏன் சரி வராது? மத்த ப்ரொபஷன் மாதிரி கிடையாது நம்ம ப்ரொபஷன். டாக்டருக்கு படிக்கிறவங்க எல்லாருக்குமே மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் முக்கியமா இருக்கணும். அது உனக்கு இருக்கு.. சந்தர்ப்ப சூழ்நிலையால் நீ உன் படிப்பை டிஸ்கன்டினியூ பண்ற மாதிரி ஆகிடுச்சு. ஆனா, திரும்ப உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது நீ ஏன் அதை விடனும்? உன் படிப்பை தொடரலாமே.. நல்ல படியா படிச்சு முடிச்சு மக்களுக்கு நீ இதை ஒரு சேவையா நினைச்சு செய்யலாமே.. நம்ம ஹாஸ்பிடல்ல கூட எத்தனையோ ஏழை மக்களுக்கு பீஸ் இல்லாம ட்ரீட்மென்ட் பார்க்கிறோம். எத்தனையோ ஏழை பசங்க ஃப்ரீயா நம்ம காலேஜ்ல படிக்கிறாங்க.. நீயும் நம்ம டிரஸ்டோட ஸ்பான்சர்ஷிப்ல நம்ம காலேஜ்லையே உன்னுடைய படிப்பை முடிக்கலாம் நீ என்ன சொல்ற?”.
அவனின் வார்த்தை அவளுக்குள்ளும் புதைந்து கிடந்த ஆசையை தூண்டி விட்டது. இனி நடக்கவே நடக்காது என்று எண்ணிய அவளின் வாழ்நாள் லட்சியத்தை நடத்தி காட்ட முடியும் என்று அவன் உறுதி அளிக்கும் போது இவளால் மறுக்க முடியுமா என்ன?
அதிலும், அவளின் தந்தையின் ஆசை.. அதை நிறைவேற்ற தனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அதை பலமாக பற்றி கொள்ள தானே அவளும் நினைப்பாள்.