உயிர் 18:
அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு மீனாட்சியை முதலிரவுக்காக அலங்கரித்திருந்தனர்.
மன உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.
வடிவாம்பாளோ , “இந்த புடவை நல்லா இல்லை வேற மாத்திடு மீனாட்சி..” என்றார்.
அதை வாங்கியவள் மாடியில் இருக்கும் அறைக்கு போகுமுன் தாகமெடுக்கவே, சமயலறைக்குச் சென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்.
சமயலறைக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலையாட்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“ என்ன சொல்லுத சுப்பு…?நம்ம ஈஸ்வரனோட நிலம் பூராவும் நெருப்பு பிடிச்சிருச்சா..? எப்படி…? எப்ப நடந்துச்சு..?”
“ அதை ஏன் கேக்குற..? இன்னைக்கு விடியக்காலையில தான் நெருப்பு பிடிச்சிச்சு…முக்கால்வாசி நிலம் எரிஞ்சி போச்சு… பாவம் ஈஸ்வரன் அடுத்த வாரந்தேன் அறுவடை செய்யனும்னு சொல்லிட்டு இருந்தான் . அதுக்குள்ள இப்படியாகிட்டு. தங்கச்சிக்கு ஆஸ்பத்திரி கட்டனும்… புது வீடு பாதிலேயே நிக்குது…ரொம்பவே ஒடிஞ்சி போய்ட்டானாக்கும்…” என்றார் சுப்பு.
“ எப்படி நெருப்பு பிடிச்சிருக்கும்னு தெரியுமா..?”
“இ…இல்ல..அது…தெரியல…எனக்கும் தெரியாது…”
“ ஏன் தடுமாறுத..? பரவாயில்ல உனக்கு தெரிஞ்சா எனக்கு மட்டும் சொல்லுவே..நான் ஆரு கிட்ட போய் சொல்லப் போறேன்…”
“ ஏய்…வள்ளி..!அதேன்.. எனக்கு தெரியதுங்கறேன்ல..”
“ ஓ..சரிக்கா… தெரியலைன்னா…விடு..விடு..பாவம் நம்ம ஈஸ்வரன். அதுக்கு நேரம் சரியில்லை. எல்லாம் விதி…” என்ற பெருமூச்சுடன் நகரப்போன வள்ளியின் கையை பிடித்து இழுத்தாள் சுப்பு.
“ என்ன சுப்பு..?என்ன வேணும்.?”
“ அது வந்து.. நெருப்பு
பிடிச்சது விதி இல்ல வள்ளி.. மனுசங்க சதிதேன்…” என்று நிறுத்திவிட்டு சுத்தியும் பார்வையை சுழல விட்டுவிட்டு, “தயவு செஞ்சி நா உங்கிட்ட சொல்ற விசயத்தை ஆரு கிட்டயும் சொல்லக்கூடாது…சரியா..?” என்றாள் சுப்பு.
“ சத்தியமா சொல்ல மாட்டேன்..”என்றாள் வள்ளி.
உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியின் செவி கூர்மையடைந்தது.
“ அது நேத்து காலையில என் மருமவனையும் மகளையும் மொத பஸ்ல ஊருக்கு அனுப்பி வச்சிட்டு வந்துட்டு இருந்தேனா…அப்ப…அப்ப..ப்ப..”என நிறுத்தினாள்.
“ சட்டுன்னு சொல்லு சுப்பு..”
“ நம்ம சங்கர பாண்டியன் அய்யாவோட மருமவன் இருக்காப்பலயே…!”
“ஆரு…நம்ம மீனாட்சியை இப்ப கண்ணாலம் கட்டிருக்காறே அந்த பட்டணத்துக்காரரா..?”
“ ஆமா…அவருதேன்.. கல்யாண வேட்டி சட்டையோட நம்ம ஈஸ்வரனோட நிலத்துக்கு போனாரு. கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுட்டு இருந்தாரா…அப்பறம்..அப்பறம்..நா அவரு என்ன பண்றாருன்னு பாத்தேனா…”
“ ஏய்…சுப்புலட்சுமி இப்ப நீயு பட்டுன்னு விசயத்தை போட்டு உடைக்கப் போறீயா..? இல்லையா..?”
“ ஆத்தி….கத்தாத டி…சொல்லுதேன்…அவரு தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி வரப்புல போட்டுட்டாரு…எனக்கோ படக்குன்னு ஆகிட்டு. இந்த மாசம் வெயில் சாஸ்தியா இருந்ததுனால நெருப்பு மளமளன்னு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு…அவரு சுத்தியும் பாத்துட்டு வேக வேகமா நடந்து போயிட்டாரு…நாந்தேன் ஓட்டமா ஓடி போய் அக்கம் பக்கத்துல இருந்தவகளை கூட்டியாந்தேன். அவங்கதான் நெருப்பை அணைச்சாங்க…”
“ ஏய்…! கூறுகெட்டவளே..! அந்த பட்டணத்துக்காரர் தான் நெருப்பு வச்சாருன்னு வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே…? வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த…? பாவம்ல அந்த ஈஸ்வரன் பையன்…மீனாட்சியையும் விட்டுக் கொடுத்துட்டு நிலத்தையும் இழந்துட்டு நிக்குறான்…நான் போய் ஈஸ்வரன் கிட்ட சொல்லுதேன் இரு…” என அலறியவளின் வாயைப் பொத்திய சுப்பு , “அடியேய்…ஏன்டி சண்டை கோழி மாதிரி சிலிர்த்துக் கிட்டு வர்ற…கொஞ்சம் கூட மண்டையில உனக்கு ஒண்ணுமில்லை. நீ பண்ணுன விசயத்தை நான் பண்ண மாட்டேனா…? ம்ம்…நாம சொன்னா உடனே சங்கர பாண்டியன் அய்யா அப்படியே நம்பிருவாரு பாரு…பொய் சொன்னதா சொல்லி என் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுருவாரு. முடிஞ்சா ஆளையும் போடுவாரு அந்த மனுசன். நமக்கு ஏன் பெரிய இடத்து பொல்லாப்பு..? அதுவும் இல்லாம மீனாட்சி புள்ளைக்கு இப்பதேன் கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதோட வாழ்க்கை தெடங்கறதுக்கு முன்னமே குழப்பம் பண்ண விரும்பல நானு. அவரு ஏன் அப்படி செஞ்சாருன்னு தெரியல…ஆனா தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ண நா விரும்பல…விட்டுடு…இந்த விசயத்தை இங்கனயே மறந்துட்டு போறது தான் உனக்கும் எனக்கும் நல்லது. நா மனசு கேக்காம தான் உன்கிட்ட சொன்னேன். தயவு செஞ்சு யாருக்கிட்டயும் உளறி வைக்காத…பிரச்சினை பெருசாகிடும். இது எம்மேல சத்தியம்…வா இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா திட்டு தான் விழும்.போய் நம்ம வேலையை பாப்போம்” என சத்தியம் வாங்கிக் கொண்டு சுப்பு வள்ளியை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
திறந்திருந்த சமயலறை ஜன்னலின் பின்புறமிருந்து அனைத்தையும் கேட்ட மீனாட்சிக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது .
தன் தந்தை மீது வெறுப்பு தோன்றியது மட்டுமின்றி ஆதியின் மீது அளவிலா ஆத்திரம் தோன்றியது.
அவன் கொடுத்ததை விட நூறு மடங்கான வலியினை அவனுக்கு திருப்பித் தர மனம் கொதியாய் கொதித்தது.
லேசில் அடங்க மறுக்கும் ஆத்திரம். ஆதியின் மனதை கூறு போட எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டாள் மீனாட்சி.
அதே சமயம் ஈஸ்வரனின் நிலையினை நினைத்தவளுக்கு வேதனை மனதை அழுத்தியது .
அவளுக்குத் தெரியாததா..? அவனது அயராது உழைப்பும்…அவனது பணத்தேவையும்…மனம் பதறி பரிதவித்தது ஈஸ்வரனுக்காக.
தன்னாலும் தன் தந்தையாகவும் எத்தனையெத்தனை துன்பம் அவனுக்கு.
அவனது வாழ்க்கையில் நல்லதென்பதே நடக்காதா…? என்று மனதினுள் மறுகினாள்.
“மீனாட்சி என்ன மா சமயக்கட்டுல என்ன பண்ற..? உங்க அத்தகாரி புலம்பிட்டு இருக்கா. நீ வேற புடவை கட்டுலயா..?நடந்ததையே நினைச்சிட்டு இருக்காத மீனாட்சி . நிச்சயம் ஈஸ்வரன் நல்ல நிலைமைக்கு வருவான். நீ மாடிக்கு போ..” என அவளை மாடியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலிரவு அறைக்கு அழைத்துச் சென்றார்.
கூடவே வடிவாம்பாளுடன் அவரின் நெருங்கிய சொந்தகார பெண்கள் சிலரும் மீனாட்சியை அறைக்குள் அனுப்பி வைத்தனர் .
மனம் முழுவதும் ரணமாய் வலிக்க இதயத்தில் யாரோ பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல அழுத்தத்துடன் பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.
கதவின் மேல் தாழ்பாளை போட்டுவிட்டு திரும்பினாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் ஆறடி உயரத்தில் ஆண்மை ததும்பிய முக வசீகரத்தோடு ஜன்னலோரம் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.
மனதில் அலையலையாய் எண்ணங்கள் முட்டி மோதிக்கொண்டு இருந்தன.
மெல்லிய கொலுசொலியுடன் காற்றில் மிதந்து வந்த மல்லிகை மணமும் அவனை திரும்பச் செய்தது.
மிதமான ஒப்பனையுடன் அடர்பச்சை புடவையில் தேவதையென ஒளிர்ந்தாள்.
அவளருகே வந்தவன் அவளது முகத்தை தனது கரங்களால் நிமிரத்தினான்.
அவளது மதி வதனைத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
நீண்ட கயல் போன்ற விழிகள் சிவந்து ஜீவனற்று இருந்தது.
சட்டென்று கையை பின்னிளுத்து கொண்டான்.
“ஏன் நிறுத்திட்ட…? இதுக்குதானே இவ்வளவு ஆர்பாட்டம்..? எடுத்துக்கோ ….இந்த உடம்பை எடுத்துக்கோ…உனக்கு என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ..! ஆனா எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு முதல்ல…!” என்றவள் குரலில் அவ்வளவு அழுத்தம்.
“ கேளு…மீனாட்சி…”
“ ஈஸ்வரன் மாமாவோட நிலத்துல நெருப்பு வச்சது யாரு..? நீதானே…? உண்மையை மட்டும் சொல்லு….”
அவளது வார்த்தையில் அதிர்ந்தவன் அமைதியாக நின்றிருந்தான்.
அருகில் வந்தவள் அவனது சட்டையை பிடித்து, “ சொல்லு…” என்றாள் அழுத்தமாக.
தொண்டயில் சிக்கிய முள் போல வார்த்தைகள் வர மறுத்தன.
“ஆ…ஆமா…மீனாட்சி…எதுக்குன்னா…!” என மேலும் பேச முயன்றவனை தடுத்து, “உன்னோட எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை…” என்றவள் ஆக்ரோஷமாக அவனது சட்டையை பிடித்து இழுத்து, “ என் மாமா உனக்கு என்ன டா பாவம் பண்ணுனாரு…? எத்தனை வஞ்சம் உன்னோட மனசுல…கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலையா…உனக்கு..? நீயெல்லாம் ஒரு மனுசனா..? ச்சீ…பாழாப்போன இந்த உடம்புக்காக தானே இத்தனையும் செஞ்ச எடுத்துக்கோ…எடுத்துக்கோ..” என கத்திவிட்டு தனது புடவையை உருவி அவனது முகத்தில் எரிந்தாள்.
அவளது , “ என் மாமா…” என்ற வார்த்தையிலேயே துடித்துப் போனான் ஆதி.
அடுத்து அவளது செயலில் விக்கித்துப் போய் நின்றிருந்தான்.
இத்தனை ஆக்ரோஷமாக அவளைப் பார்த்ததில்லை அவன்.
மென்மையிலும் மென்மையான மனம் படைத்தவள் இன்று ஆங்கார ரூபிணியாய் நின்றிருந்தாள்.
“ மீனாட்சி…சொல்றது கேளு…!” என அவளருகே செல்ல முயலும் போது, “வராத…கிட்ட வராத…!” என அனைத்து பொருட்களையும் தரையில் தட்டி விட்டாள். பால், பழங்கள், இனிப்புகள் என அனைத்தும் தரையில் சிதிறியது.
வேகமாக அவளருகே சென்றவன் அவளது கைகளை பிடிக்கவும் , சிறிதும் யோசிக்காமல் அருகில் உள்ள கத்தியை எடுத்து கை நரம்பில் வெட்டிக் கொண்டாள்.
“ மீனாட்சி…” எனப் பதறிஅலறியவன் அவளைத் தொட்டு தூக்க வர, மீண்டும் ஆங்காரமாக “பக்கத்துல வராத…என்னோட கழுத்த அறுத்துக்குவேன்…நீ செஞ்சா எல்லாத்தையும் கூட பொறுத்துக்குவேன்…ஆனா என் மாமாக்கு செஞ்ச பச்சை துரோகத்தை நான் மன்னிக்கவே மாட்டேன்…. மாட்டேன்..”என கூறி மயங்கிச் சரிந்தாள்.
இரத்தம் பீறிட்டு கிளம்பியது அவளது கைகளில்.
உயிரை பிடிங்கி வெளியே எறிந்தது போன்றதொரு வலி அவனுள்.
புடவையை அவளுக்குச் சுற்றி கையில் ஏந்திக்கொண்டு கதவை திறந்து கீழே ஓடினான்.
“ மாமா…மாமா…” என அவன் கத்திய கத்தலில் அனைவரும் பதறி ஓடி வந்தனர்.
இரத்த வெள்ளத்தில் அவனது கைகளில் கிடந்த மீனாட்சியை பார்த்தே பதறிய சங்கர பாண்டியன்,” அய்யோ.. மீனாட்சி..!” என பதறி ஓடி வர , அவரை மறித்து நின்றார் கோமதி. “ இனி அவ உம்ம பொண்ணு இல்ல. அவளுக்கு நீரு பண்ண நல்லதெல்லாம் போதும். அவ கிட்ட போகக் கூட அருகதை இல்லை உமக்கு… அவளை எந்த நிலைமைக்கு ஆளாக்கி வச்சிருகீக…? வேண்டாம் நீரு இங்கனயே இரும்..”என அதிகார குரலில் கூறியவர் , “ மணி போய் வண்டி எடு…நேரா நம்மூரு ஆஸ்பத்திரிக்கு வண்டிய விடு…” எனக் கூறினார்.
மகளது நிலை பெற்ற வயிரை பதறச் செய்தாலும் கணவனின் அகங்காரத்தை அடக்க தக்க பதிலடியை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அத்தனை ஆக்ரோஷம் அவருள். இத்தனை வருடங்களாக எத்தனையோ விஷயங்களை பொறுத்துப் பார்த்தவருக்கு இன்று மகளது நிலை அவரை நிலைகுலைய வைத்திருந்தது.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் எவ்வளவோ சகித்துக் கொண்டவருக்கு கணவரது வரட்டு பிடிவாதத்தால் மகள் அடைந்து துன்பம் கொதித்தெழச் செய்திருந்தது.
அதன் விளைவு அவரை தள்ளி நிறுத்திவிட்டு வீட்டில் பல வருடங்களாக வேலை செய்யும் விசுவாசியான மணியை அழைத்துக் கொண்டு வண்டியில் அழுகையுடன் காரினை நோக்கி விரைந்தார்
காரில் மீனாட்சியை கிடத்திய ஆதி சுற்றி வந்து ஏறிக்கொண்டான். மகளது தலையை தன் மடியில் வைத்தார் கோமதி.
ஆதி அவளது கால்களை தன் மடியில் வைத்துக் கொண்டான். காலையில் அவன் அணிவித்த புத்தம் புதிய மெட்டி அவனைப் பார்த்து சிரித்தது.
சீறிக்கொண்டு மருத்துமனைக்குச் சென்றது கார்.