என்‌ பிழை‌ நீ – 32

4.8
(22)

பிழை – 32

அவள் புருவம் யோசனையில் இடுங்கவும்..

“என்னப்பா சொல்ற நம்ம இனியாள் டாக்டருக்கு படிச்சிருக்கா?” என்றார் முத்துலட்சுமி ஆச்சரியமாக.

“ஆமாமா.. ஆனா, குழந்தை பிறந்ததால அவங்களால படிப்பை கண்டினியூ பண்ண முடியல. இடையில கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சு.. அதான் திரும்ப நம்ம காலேஜ்லயே சேர்ந்து படிக்கலாமேன்னு நான் கேட்டுகிட்டு இருக்கேன். படிப்ப முடிச்சா நம்ம ஹாஸ்பிடல்லையே வேலை பார்க்கலாம் இல்ல”.

“என்ன இனியாள் டாக்டர் படிப்பு எவ்வளவு பெரிய படிப்புன்னு தெரியுமா.. மக்களுக்கு சேவை செய்யுற படிப்பு.. அந்த படிப்பை போய் பாதியிலேயே விட்டுட்டு காதல், கல்யாணம்னு போயிட்டியேமா.. படிப்ப முடிச்சுட்டு இத பத்தி எல்லாம் யோசித்து இருக்கலாம் இல்ல”.

அவருக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. பெரும் சங்கடமாக இருந்தது.

அவள் கூறிய எந்த உண்மையையும் பாரிவேந்தன் அவரிடம் இன்னும் விளக்கி கூறவில்லை. அதன் விளைவே அவரின் இத்தகைய வார்த்தைகள்.

“சரி மா அதை எல்லாம் விடுங்க.. இப்போ என்ன சொல்ற இனியாள் நம்ம காலேஜ்லயே ஜாயின் பண்ணிக்கிறியா?”.

“இல்ல டாக்டர் யாழ் நிலாவை வச்சுக்கிட்டு எப்படி காலேஜுக்கு போக முடியும்? நான் போயிட்டா அவளை யார் பார்த்துக்குறது?”.

“அதெல்லாம் நீ ஒன்னும் வருத்தப்பட தேவையில்லை. அதான் நான் இருக்கேன்ல நான் பாத்துக்குறேன் என்கிட்ட கொடுத்துட்டு போ” என்றார் முத்துலட்சுமி.

“ம்ம்.. நல்ல கதையா இருக்கே.. உங்கள பாத்துக்கவே ஒரு ஆள் வேணும் நீங்க யாழ் நிலாவை பார்த்துக்க போறீங்களா.. அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். நம்ம ஹாஸ்பிடல் சைல்ட் கேர் சென்டர்ல யாழ்நிலாவை கொடுத்துட்டு நீ காலேஜ்க்கு போ ஈவினிங் காலேஜ் முடிஞ்சு வரும் பொழுது அவளை பிக்கப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்துடு”.

இனியாளுக்கும் அவனின் யோசனை சரியாக பட. பல மாதங்கள் கழித்து அவளின் முகம் பிரகாசித்தது.

முதல் முறை அவளின் முகத்தில் ஒரு வித பிரகாசத்தை கண்டான் பாரிவேந்தன். அது அவனுக்குள்ளும் அத்தனை மகிழ்ச்சியை வாரி வழங்கியது.

இதை பார்ப்பதற்காக தானே அவனும் அவளுக்காக என பார்த்து பார்த்து அனைத்தையும் செய்கிறான்.

“பாரி இத மறந்துட்டேன் பாரு, இவ திரும்ப படிப்பை தொடரணும்னா அவ புருஷன் கிட்ட கேட்கணுமே.. அவர் சம்மதிச்சா தானே படிக்க முடியும்” என்ற தன் தாயின் கேள்விக்கு நொடியும் தாமதிக்காமல், “சம்மதம் தான் மா” என்றான் சட்டென்று.

“என்னப்பா அதுக்குள்ள சம்மதம்னு சொல்ற”.

“அது.. அதெல்லாம் அவர் கிட்ட நான் முன்னாடியே பேசிட்டேன் ‌மா. அவர் சம்மதம் சொன்ன பிறகு தான் இனியாள் கிட்ட கேட்கிறேன். நீ என்ன சொல்ற?” என்றான் அவளை நேர் பார்வை பார்த்தவாறு.

என்ன சொல்லுவாள்..

முடியாது என்றா கூற போகிறாள்..

நடக்காது என்று நினைத்த விஷயம் மீண்டும் அரங்கேற போவதை எண்ணி அவளின் கண்கள் மெலிதாக கலங்கி விட மகிழ்ச்சியோடு சம்மதமாக தலையசைத்தாள்.

முதல் முறை உயிர்ப்போடு மன நிறைவாக சிரிக்கிறாள்.

அவளின் சிரிப்பையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பாரிவேந்தன்.

“சரி, உன் பழைய காலேஜ்ல இருந்து டிசி வாங்கி இங்க ஜாயின் பண்ணிடலாம்”.

“சரி டாக்டர், நான் மதன் சார் கிட்ட பேசி டிசி வாங்குறதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்றது தான் தாமதம், “நோ.. நோ.. அதெல்லாம் எதுவும் தேவையில்லை. அவருடைய நம்பரை என்கிட்ட கொடு நானே பார்த்துக்குறேன்”.

“இல்ல டாக்டர், அவர் எனக்கு தெரிஞ்சவர் தான் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்”

“அது எனக்கு தெரியாதா.. உன்னை அவ்வளவு லவ் பண்ணி இருக்கான். ஹெல்ப் பண்ணுவானா மாட்டானானு எனக்கு தெரியாதா” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தவன்.

“வேண்டாம் இனியாள், நீ அவருடைய நம்பரை என்கிட்ட கொடு எனக்கு என்னென்ன சர்டிபிகேட் வேணும்னு நானே அவர்கிட்ட டீடைலா சொல்றேன்”.

“சரிப்பா எனக்கு கொஞ்சம் கால் வலியா இருக்கு நான் உள்ள போய் படுக்கிறேன்” என்றவாறு முத்துலட்சுமி மெதுவாக எழுந்து அறைக்கு சென்று விட்டார்.

வேலையாளும் அன்று நேரமே வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட.

தனித்து விடப்பட்டது என்னவோ இனியாளும், பாரிவேந்தனும் தான்.

பாரி வேந்தனின் பார்வை நொடிக்கு ஒரு முறை இனியாளின் மேலேயே நிலைத்திருந்தது.

பாரிவேந்தனுக்கு சம்மதமாக தலையசைத்த இனியாள் அவன் கேட்டது போலவே மதனின் செல்பேசி எண்ணை அவனிடம் கொடுத்தாள்.

“நான் வேணும்னா இப்ப அவருக்கு போன் பண்ணி பேசிட்டு உங்க கிட்ட கொடுக்கிறேன் நீங்க அப்படியே அவரோட பேசிக்கோங்க டாக்டர். நீங்க தனியா கால் பண்ணா அவருக்கு உங்களை யாருன்னு தெரியாது இல்ல”.

“சரி, கால் பண்ணி கொடு”.

அவன் கூறியது போலவே மதனின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தவள், “ஹலோ சார் எப்படி இருக்கீங்க?”.

……

“நான் நல்லா இருக்கேன் சார். நான் திரும்பவும் காலேஜ் கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன். அதான் அங்க டிசி வாங்குவதற்கான ஃபார்மாலிட்டிஸ் பத்தி கேட்கலாம்னு கால் பண்ணேன்”.

பாரி வேந்தன் தன் எதிரே பேசுபவளின் உரையாடலை கவனிக்காதது போல் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டு இருப்பது போல் பாவனை செய்து கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆனால், அவனின் கவனம் மொத்தமும் இனியாள் பேசுவதிலேயே தான் நிலைத்திருந்தது.

அவன் என்ன கூறினானோ மெலிதாக சிரித்தவள், “அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல சார். நான் இங்க சேஃபான இடத்துல தான் இருக்கேன்”.

‘ரொம்பத்தான் அக்கறை’ என்று நொடிந்து கொள்ளாமல் பாரிவேந்தனால் இருக்க முடியவில்லை.

தன்னை நினைத்து அவனுக்கே வியப்பாக தான் இருந்தது.

‘நாம ஏன் திடீர்னு இவ்வளவு கோபப்படுறோம். இனியாள் மனசுல அந்த மதன் கிடையாது. அவ ஜஸ்ட் பிரண்டா நினைச்சு தான பேசுறா.. நாம ஏன் இதை பெருசா எடுத்து ரியாக்ட் பண்ணனும்’ என்று எண்ணியவன், ‘ஒருவேளை, நாம இனியாள் மேல ஓவரா பொசசிவ்வா இருக்கோமோ?’ என்று சிந்தித்தான்.

‘என் பொண்டாட்டி கிட்ட வேற ஒருத்தவன் கடலை போட்டா பொசசிவ்னஸ் வரத்தானே செய்யும்’ என்று தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டான்.

அதற்குள் இனியாள் மதனிடம் பேசிவிட்டு செல்பேசியை பாரிவேந்தனை நோக்கி நீட்டவும்.

அதை வாங்கி தன் காதுக்கு கொடுத்தவன், மதனிடம் டிசி வாங்குவதை பற்றி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அதற்குள் யாழ்நிலா சிணுங்க தொடங்கவும், “பசிக்குது போலருக்கு” என்றவாறு எழுந்து பாரிவேந்தனின் அருகில் வந்தவள் குழந்தையை வாங்கிக் கொண்டு திரும்பவும்.

வேண்டுமென்றே அவளின் சேலையின் நுனியில் காலை வைத்தான் பாரி வேந்தன்.

அதில் நிலை தடுமாறியவள் குழந்தையுடன் சேர்ந்தே தொப்பென்று பாரிவேந்தனின் மடியில் விழுந்தாள்.

தன் குழந்தையுடன் சேர்த்து தன் மனைவியையும் பூக்குவியல் போல் இன்பமாக தாங்கினான் பார்வேந்தன்.

அவளுக்கு தான் தன் செயலில் தன்னை நினைத்தே பெரும் சங்கடமாக இருந்தது.

பதட்டமாக அவனிலிருந்து விலகியவள், “சாரி.. சாரி டாக்டர்.. கவனிக்கல” என்று பதறினாள்.

“இட்ஸ் ஓகே நானும் கவனிக்கல” என்று பெயருக்கு கூறியவனிற்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்திருக்க வேண்டும்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் படபடத்து போனவள் வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.

அடுத்தடுத்த வேலைகள் வேகமாக அரங்கேறின. மதன் பழைய கல்லூரியிலிருந்து அவளின் டிசியை பெற்றுக் கொடுக்கவும், அதை வைத்து பாரிவேந்தன் தங்கள் கல்லூரியிலேயே அவளை சேர்த்தும் விட்டு விட்டான்.

அன்று இரவு இனியாளுக்கு அழைப்பெடுத்த அனிதா ஒரு வார்த்தையும் பேசாமல் அப்படியே அமைதியாக இருந்தாள்.

“ஹலோ யார் பேசுறது.. கால் பண்ணிட்டு இப்படி பேசாம இருந்தால் எதுக்கு கால் பண்றீங்க?” என்று இனியாள் கோபத்தில் சிடுசிடுக்கவும்.

“ஆமா, உனக்கு கால் பண்ணி இருக்க கூடாது தான் என்னோட தப்பு தான்”.

சட்டென்று அனிதாவின் குரலை கேட்டவள் இன்பமாக அதிர்ந்தாள், “அ.. அனிதா.. அனிதா நீ தான?”.

தன் கையில் ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட்டை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை இனியாளின் பதட்டமான உடல் மொழியில் அவள் மேல் படிந்தது.

முத்துலட்சுமி மாத்திரையை போட்டுவிட்டு படுத்து விட.

குழந்தையும் தூங்கிவிட்டாள்.

யாரிடமிருந்தோ அழைப்பு வரவும் அறைக்குள் இருந்து பேசினாள் குழந்தை எழுந்து விடுவாள் என்று ஹாலிற்கு தன் செல்பேசியுடன் இடம் பெயர்ந்தாள் இனியாள்.

ஆனால், அங்கே இருந்த பாரிவேந்தனை அவள் சற்றும் கவனிக்கவில்லை.

“பேசாதடி! அன்னைக்கு காலேஜ்ல மயக்கம் போட்டு விழுந்து நீ ப்ரெக்னன்ட் கன்ஃபார்ம் ஆனதும் என்ன நடந்தது என்று புரியாமல் நான் எவ்வளவு பயந்து போனேன்னு தெரியுமா.. உன் அப்பா வந்து உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு போயிட்டாரு.. அதுக்கு அப்புறம் நீ எங்க இருக்க என்ன ஆனனு ஒண்ணுமே தெரியல. எத்தனை தடவை உன் நம்பருக்கு கால் பண்றது.. எத்தனை தடவை கால் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னே வருது. சரி, வீட்டுக்கு போய் பார்க்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தா உன் அண்ணி துரத்தி விடுறாங்க.. உன்னை பற்றி எதுவுமே தெரியாது இனியாள் செத்து போயிட்டானு சொல்றாங்க.. இப்ப கூட மதன் சார் உனக்கு டிசி அப்ளை பண்றதை எதேர்ச்சையா பார்த்தேன். அப்புறம் அவர் கிட்ட தான் உன்னுடைய நம்பர் வாங்கி கால் பண்றேன். எங்க தான் டி இருக்க.. என்ன ஆச்சு உனக்கு?” என்று படபடவென பரிதவிப்பான குரலில் பொறிந்து தள்ளினாள்.

தன் நண்பியின் வார்த்தைகள் அவளுக்குள் மெல்லிய வலியை கொடுத்தாலும், தன் வாழ்க்கையில் இதுவரை நடந்த அனைத்து விஷயங்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டாள்.

“என்னடி சொல்ற.. இவ்வளவு நடந்து இருக்கா.. நீ ஏன் என்கிட்ட எதையுமே சொல்லல? நான் உனக்கு ஹெல்ப் பண்ணியிருப்பேன்ல”.

“யார்கிட்டயும் ஹெல்ப் கேட்கிறதுக்கு தோணலடி. எல்லாரும் என்னை தப்பா தானே பாப்பாங்க.. நான் சொல்ற விஷயம் எல்லாருமே நம்புவாங்களானு தெரியாது இல்ல.. என் வீட்டிலேயே யாரும் நம்பல” என்றாள் விரக்தியான குரலில்.

“நான் நம்புவேன் டி.. உன் கூடவே இத்தனை வருஷம் இருந்து இருக்கேன். எனக்கு தெரியாதா உன்ன பத்தி.. கண்டிப்பா நான் நம்பி இருப்பேன். நீ ஏன் என்கிட்ட சொல்லல?”.

“சரி விடு நீ எப்படி இருக்க?”.

“ம்ம்.. நல்லா இருக்கேன். இப்ப தான் ஒரு ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணி இருக்கேன்”.

நண்பிகள் இருவரும் பல மாதங்கள் கழித்து பேசிக்கொள்வதால் இடைப்பட்ட காலத்தில் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒருவரோடு மற்றொருவர் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!