3…
பத்துவருடங்களுக்குப் பின்னர்…
தென்னகத்தின் மஹாராணியாகத் திகழும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி என்னும் ஊரில் உள்ள ஓர் சுற்றுலா தலங்கள் தான் தேக்கடி.
தேக்கடி பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்கும் புகழ் பெற்றது அங்கே புகைப்படம் எடுப்பதற்காகவே செல்லும் பயணிகள்தான் அதிகம்.
அதேசமயம் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன. இதெல்லாம் கேட்கவே ஆர்வமாய் இருக்கு இல்லையா. அதையெல்லாம் தண்ணீரில் படகில் மிதந்தபடியே வேடிக்கை பார்த்தால்.
ஆமாங்க…! இங்குள்ள பெரிய நீண்ட ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் அதேசமயம் கொஞ்சம் திகிலாகவும் தான் இருக்கும். சட்டுன்னு மேலே பாய்ஞ்சிட்டா என்ன செய்வோம் என்று. ஆனால் பாதுகாப்பான பயணமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதுமட்டும் அல்ல படகுச்சவாரி அங்கே பிரசித்தமான ஒன்றும் கூட.
அப்படிப்பட்ட இயற்கை அன்னையின் மடியில்தான் அந்த மாபெரும் ஹோட்டலும் இருந்தது.
அக்கால அரண்மனையின் எழிலும் தற்போதைய நவநாகரிக பாணியும் ஒரு சேர இணைந்து ஹோட்டலை மேலும் பன்மடங்கு அழகுடன் ஜொலிக்க வைத்தது. பார்ப்பவர்கள் யாரும் ஒருமுறையேனும் அங்கே காபி சாப்பிடுவது போலவாவது சுற்றிப்பார்க்க மாட்டோமா என்று ஏங்குவார்கள். அதே சமயம் ஒரு காபிக்கு அத்தனை விலை தரனுமா என்ற ஆதங்கத்தில் அதை கைவிட்டும் விடுவர்.
அங்கே உள்ள அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதிகொண்ட சொகுசு அறைகளாகும். ஒரு நாள் தங்குவதற்கு மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் ஆகும். அதாவது தங்குவதற்கு மட்டும்.
மற்றபடி இந்த ஹோட்டலில் உள்ள ஸ்பாக்கள் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையையும் ஐரோப்பிய மசாஜ்களையும் இணைந்து அளித்து வாடிக்கையாளர்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறார்கள். இதன் காரணமாகவே ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் அடுத்தமுறை இங்கே வர பிரியப்படுகின்றனர். கேரளாவில் மட்டும் இதே போல மூன்று ஹோட்டல்களை நிறுவியுள்ளார் ஜெயராமன்.
அந்த ஹோட்டல் எம்.டியும் சேர்மனுமான ஜெயராமன் தற்பொழுது மூன்று ஹோட்டல்களையும் கவனித்து வருகிறார். அவரது மகன் விக்ரமன்சேனா உலகம் முழுவதும் சிறிது காலம் சுற்றி வருகிறேன் என்று கிளம்பியவர் அங்கேயும் சும்மா இருக்காமல் தனது பிசினஸை ஆரம்பித்து சிறப்பாக நடத்திக்கொண்டுதான் உள்ளார்.
*****
ஹோட்டலில் தனக்கான அலுவலக அறையில் அமர்ந்து பலமான யோசனையில் ஆழ்ந்திருந்தார் ஜெயராமன்.
அவரது முகத்தில் லேசான பிடிவாதமும் ரோசமும் ஒருங்கே இணைந்திருந்தது. தான் பார்க்க வளர்ந்த ஒரு குட்டிப்பெண் தான் சொல்வதை எதிர்த்துப் பேசுவதா என்ற ரோஷம் அவருக்கு.
எதிரில் நின்றிருந்தவள், இதுவரை ஒருமணிநேரம் அவருக்கு புரிய வைக்க முயன்று, தோற்றுப் போனவளாய் அழுத்துப் போய் சோர்வாய் அவரையே பாவமாய் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அவரோ நீ என்னவோ பேசிக்கொள், எப்படியெப்படியோ கதை சொல்லிக்கொள். நான் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டேன் என்பது போல அழுத்தமாய் அமர்ந்திருந்தார் அந்த கம்பீரமான பிடிவாதக்குழந்தை.
தாட்சாவின் கண்களுக்கு தற்சமயம் அவர் அப்படித்தான் தெரிந்தார்.
அவரது கண்டுகொள்ளாத பாவனையில் கடுப்பானவளாய், “அங்கிள் ப்ளீஸ் நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சுக்கோங்க. ஆரம்ப காலத்தில் இருந்தே இப்படித்தானே நான் செய்யறேன்?… காலைல சஜித், அபி ரெண்டு பேரையும் ஸ்கூல் அனுப்பி வைச்சுட்டு, அப்பாகிட்ட என்னோட பிரம்மாண்ட ஹோட்டல்…” என ஆரம்பித்தவளை அவர் முறைக்கவும்.
சற்றே அசடு வழிந்தவளாக, “போதும் போதும்… அது உங்க ஹோட்டல் அளவுக்கு பெரிதாக இல்லைன்னாலும் ஓரளவு பெருசுதான்…” என்றவள் மீண்டும் அவர் அப்படியே முறைக்கவும்.
“சரி ஹோட்டல்ன்னு சொல்லலை போதுமா?. என்னோட குட்டி ரெஸ்ட்டாரெண்ட்டை அப்பாகிட்ட பார்த்துக்க விட்டுட்டு ஒன்பது மணிக்கு இங்கே வந்துடறேன். அப்புறம் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் இங்கே எல்லா டிப்பார்ட்மெண்டையும் மேற்பார்வை பார்க்க சொல்றீங்க… சொல்லப் போனா அதுக்கே நீங்க பல லட்சம் எனக்கு சம்பளமா தரனும் ஒவ்வொரு மாசமும். ஆனால் நான் கேட்டேனா?… இல்ல கேட்டேனான்னு கேட்கிறேன்… அவ்ளோ டீசண்ட் கேர்ள் நான் யூ நோவ்?…” நீளமாய் பேசிவிட்டு கொஞ்சம் மூச்சு வாங்கியவள் அவரைப் பார்த்தாள்.
அவரோ கொஞ்சமும் இளகாது அமர்ந்திருக்க, சோர்வுற்றவளாய்
அவர் அருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தவள், அவரது கைகளை பிடித்துவிட ஆரம்பித்தவாறே, “அங்கிள் ப்ளீஸ் அங்கிள். ஆறு மணிக்கு மேல சஜித்தும் அபியும் வந்திடுவாங்க. அவங்களுக்கு பாடம் சொல்லித்தரனும். அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு நான் ரெஸ்டாரெண்டை பார்த்துக்கணும்…” கிட்டதட்ட பத்தாவது தடவையாக இதைச் சொல்லி இருப்பாள் தாட்சா.
அவரோ நீ நூறு தடவை கூட சொல்லிக்கோ எனக்கு அது தேவை இல்லை என்பதுபோல அவள் சொல்வதை அசட்டை செய்தார். அப்படியே தோள்பட்டையில் பிடித்துவிட சைகையும் செய்தார்.
அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டே, “இப்படி நிறைய கமிட்மெண்ட் எனக்கு இருக்கு. இப்போ வந்து நைட் பதினோரு மணிவரைக்கும் இங்கே ஒர்க் பண்ண சொன்னா என்ன அர்த்தமாம்?…” தாட்சா கிட்டத்தட்ட கண்ணீர் விடாத குறைதான்.
ஜெயராமனும் தாட்சாவின் அப்பா சந்தனுவும் பள்ளி நண்பர்கள். என்னதான் இருவரும் நண்பர்கள் என்றாலும். ஜெயராமன் வீட்டில் ஸ்டேட்டஸ் பார்த்து சந்தனுவை ஒதுக்கிவிடுவார்கள்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி இருவரின் நட்பும் வளர, ஜெயராமன் சந்தனுவுக்கு மட்டுமின்றி தாட்சாவுக்கும் உற்ற துணையாகினார்.
ஆம் சந்தனுவிடம் சொல்லத் தயங்கும் விஷயத்தைக் கூட ஜெயராமனிடம் சொல்லி அழுவாள் தாட்சா. சொல்லப்போனால் ஜெயராமன் மட்டும் இல்லையென்றால் தாட்சா இப்பொழுது உயிருடன் இல்லை எனலாம். அவரிடம் அவள் சொல்லாத விஷயங்களும் உண்டு.
மற்றவர்களிடம் தன்னுடைய ஸ்டேட்டஸை கடைபிடிப்பவர், அவளிடம் மட்டும் ஏனோ நண்பராக மாறிவிடுவார். அவளது கலகலப்பான பேச்சும், அன்பான குணமும் அவரைக் குழந்தையாக்கியது.
இப்பொழுது கூட அவருக்கு கைவலிக்கிறது என்று புரிந்து கொண்டவளாகத் தானே முன்வந்து அழுத்தியும் விடுகிறாளே. அவளது பாசமான அதட்டலில் அவருக்கு வயதும் குறைந்து போகும், சிறுவனாக அடிபணிந்து போவார் சமயங்களில்.
ஆனால் அவளும் அதை பயன்படுத்திக் கொண்டு அட்வான்டேஜ் எல்லாம் எடுத்துக்கமாட்டாள். விலகி நிற்கவேண்டிய தருணத்தில் நாசுக்காக விலகிப் போய்விடுவாள். திரும்ப அவராக அழைக்கும் வரை அங்கே தலைகாட்டவும் மாட்டாள்.
ஜெயராமன் மனைவி அகிலாண்டேஸ்வரியும் அவர்களின் மகள் சிந்துஜாவும் வந்தால் தன்னுடைய லிமிட் எதுவோ அங்கே நின்றுகொள்வாள்.
ஆனாலும் அவர்களால் முடிந்த அளவு அவளைக் கொட்டி விட்டுத்தான் போவார்கள். தேளின் இயல்பு அதுதானே என்று அவளும் கண்டுகொள்ள மாட்டாள். அவள் படாத அவமானங்களா என்று. இப்படி தனக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தவளை.
“என்னம்மா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு பதிலும் சொல்லலைன்னா எப்படி?… நான் சொல்றதை கேட்பியா மாட்டியா?” கொஞ்சம் கோபமாகவேதான் கேட்டார் ஜெயராமன்.
அவரை உணர்வில்லாமல் பார்த்தவள், “சாரி சார். என்னால விக்ரம் சார்கிட்டே பி.ஏ வா இருக்க முடியாது… அவரோட ஸ்டேட்டஸுக்கு, சாதாரண டிகிரி படித்த என்னை அவரோட பி.ஏ வா ஏத்துக்க மாட்டார்” தாட்சா அங்கிள் என்ற அழைப்பில் இருந்து சார் என்ற பதத்திற்கு மாறவும்.
“ஓ. எம்பிளாயியா பதில் சொல்றியா?… அப்போ நானும் உன்னோட பாஸா சொல்றேன். நீ விக்ரம் கூட பணிபுரிந்துதான் ஆகணும்…” அவரும் கடுமையாகவே சொன்னார்.
“அங்கிள் ப்ளீஸ், என்னால அத்தனை நேரம் இங்கே இருக்கறது சாத்தியப்படாது. உங்களுக்கே தெரியுமே சஜித்தும் அபியும் நானில்லாம இருக்க மாட்டாங்கன்னு?…” தன் கைகளை இயலாமையாக விரித்து தாட்சாயினி சொல்லவும்.
அவளை மௌனமாக பார்த்தவர், “உங்களுக்குள் என்ன பிரச்சனை தாட்சா?… விக்ரமும் நீயும் சிறுவயது நண்பர்கள்தானே?…” அவர் அவளையே கூர்ந்து பார்க்க.
அவரது கேள்வியில் அவளுக்கு நெஞ்சே அடைப்பது போலாகவும், அருகில் இருந்த பென்சிலை தட்டிவிட்டு அதை எடுப்பது போல குனிந்து தன்னை சமாளித்தவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்றாள்.
“பத்து வருடத்திற்கு முன்னர் இருந்த நிலை இப்போ இல்லை அங்கிள் எல்லாமே மாறிட்டு. சோ நாங்க நண்பர்களும் இல்லை. எதிரியும் இல்லை…”
முடிவாய் கூறிய தாட்சாயினி அவரின் பதிலையும் எதிர்பாராது அங்கே இருந்து சென்றுவிட்டாள்.