அத்தியாயம் 23
“என்ன மச்சி ஏதோ யோசனையில் இருக்க” என்ற ரஞ்சித்திடம் , “ஒன்றும் இல்லை டா” என்ற திலீப் , “நீ ராகவ் கிட்ட சொல்லீட்டியா?” என்றான் திலீப் வர்மன்.
“அவன் கிட்ட என்ன சொல்லனும்” என்று கேட்டான் ரஞ்சித். “சாம்பவி அவனை ஏமாத்துற விஷயத்தை” என்ற திலீப்பிடம், “இப்போதைக்கு உனக்கும், பல்லவிக்கும் கல்யாணம் முடியட்டும் அப்பறம் சொல்லிக்கலாம்” என்றான் ரஞ்சித். “இது தப்பில்லையா? அவன் நம்ம ஃப்ரெண்ட் அவனோட எதிர்காலம் அந்த சாம்பவி கூட எப்படி டா எனக்கு பயமா இருக்கு” என்று திலீப் கூறிட, “இதோ பாரு மச்சி ராகவ் டிசர்வ்ட் இட். அவனுக்கும், சாம்பவிக்கும் இடையே நடந்த விஷயம் தெரிஞ்சதும் அவன் அவளை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணி இருப்பான். அப்படி இருக்கும் போது பல்லவியை ஏன் எல்லோர் முன்னாடியும் அசிங்கப் படுத்தனும் சொல்லு. இவன் ஒரு ஆம்பளை ஈஸியாக அந்த பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டான் அவளோட வலி அதைப் பற்றி அவன் யோசிச்சானா சொல்லு. அவள் அந்த என்கேஜ்மென்ட் நின்று போனப்ப எவ்வளவு டிப்ரசன்ல இருந்தால் தெரியுமா? கிட்டத்தட்ட இரண்டு மாசம் அந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை தங்கச்சி பண்ணின துரோகம், ராகவ் கொடுத்த வலி எல்லாம் அவளை எப்படி பாதிச்சுருக்கும் அதுக்கெல்லாம் தண்டனை வேண்டாமா?” என்றான் ரஞ்சித்.
“டேய் அதுக்காக அவன் அந்த சாம்பவி கூட எப்படி வாழ்வான்” என்ற திலீப்பிடம், “அவனுக்கும், சாம்பவிக்கும் கல்யாணம் நடக்காது ஆனால் இந்த உண்மையை உன் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் அவன் கிட்ட சொல்லுவேன் பல்லவி பாவம் மச்சான் அவளும் என்னோட ஃப்ரெண்ட் அவளுக்கு சரியான ஜோடி நீ தான். உன் கூட இருந்தால் மட்டும் தான் அவள் சந்தோஷமா இருப்பாள். அதனால் ராகவ் பற்றி யோசிக்காமல், நீ உன் கல்யாணம் பற்றி மட்டும் யோசி. அவனுக்காக கவலைப் பட அப்பா, அம்மா, தங்கச்சி, விக்ரம் இப்படி எல்லோரும் இருக்காங்க உனக்காக பல்லவி மட்டும் தான் இருக்காள் அவளை விட்டுறாதே” என்ற ரஞ்சித்தை அணைத்துக் கொண்டான் திலீப் வர்மன்.
“ஏன் நீ இல்லையா?” என்ற திலீப்பிடம், “இருக்கேன், இருக்கேன் இல்லாமல் எங்கே போகப் போகிறேன்” என்ற ரஞ்சித், “நேரம் ஆச்சுடா கிளம்பு” என்றான்.
“என்ன டா இன்னுமா ரெடியாகிட்டு இருக்க” என்ற படி வந்தார் சிவச்சந்திரன். “அப்பா நீங்க எப்போ வந்தீங்க” என்று ரஞ்சித் கேட்டிட, “இரண்டு பேரும் பேச ஆரம்பிச்ச உடனே வந்துட்டேன்” என்றவர், அதிர்ந்து நின்ற அவர்கள் இருவரையும் பார்த்து “வாசுவால என் கிட்ட எதையுமே மறைக்க முடியாது” என்ற சிவச்சந்திரன், “சாம்பவி பற்றி எல்லாமே வாசு என் கிட்ட சொல்லிட்டான்” என்றார்.
“அப்பா அது தெரிஞ்சும்” என்ற ரஞ்சித்திடம், “பல்லவி பொண்ணுடா, பொம்மை இல்லை ராகவ்க்கு வேணும்னா வச்சுக்கவும், வேண்டாம்னா தூக்கி எறியுறதுக்கும். அவளோட மனசுல திலீப் தான் இருக்கான். என் பையனோட வாழ்க்கைக்காக திலீப்போட வாழ்க்கை, பல்லவியோட வாழ்க்கை இரண்டையும் கெடுக்க என்னால முடியாது. ராகவ் பல்லவிங்கிற வைரத்தை தொலைச்சுட்டான். இனி அது அவனுக்கு எப்போவும் கிடையாது அதனால் நீங்க இரண்டு பேரும் பயப்படாமல் கல்யாண வேலையை பாருங்க” என்றார்.
அவரை அணைத்துக் கொண்ட திலீப்பின் தலையை கோதியவர், “நீயும் என் பையன் தான் திலீப் அப்பா உன் வாழ்க்கையை கெடுத்துற மாட்டேன்” என்று கூறினார் சிவச்சந்திரன்.
“தேங்க்ஸ் அப்பா” என்ற ரஞ்சித்திடம் , “சரி, சரி நேரம் ஆச்சு கீழே உங்களுக்காக அம்மா, ராகவ், பூர்வி எல்லோரும் வெயிட்டிங்” என்று அவர்களை அழைத்துச் சென்றார் சிவச்சந்திரன்.
“வாடா மகனே” என்ற செல்வராணி யின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் திலீப் வர்மன். “அம்மா காலில் மட்டும் தான் விழுவியா தம்பி” என்ற சங்கவியின் காலில் விழப் போன திலீப்பை தடுத்தவள், “அக்கா சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் இவரு தான் உன்னோட மாமா” என்று ஆதித்யனை அறிமுகம் செய்து வைத்தாள்.
ஆதித்யனும், திலீப்பும் கொஞ்ச நேரத்திலேயே நன்றாக ஒட்டிக் கொண்டனர். நிரஞ்சனா, நிரஞ்சன் கூட மாமா , மாமா என்று திலீப்பிடம் நன்றாக ஒட்டிக் கொண்டனர்.
ராகவ் சோகமாக அமர்ந்திருக்க, “என்ன உன் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை போலையே” என்ற ரஞ்சித்திடம், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை” என்று வராத புன்னகையை வம்படியாக வர வைத்தான் ராகவ்.
“என்ன வாசு உன் முகம் ஏன் வாடி இருக்கு” என்று சிவச்சந்திரன் கேட்டிட, “ராகவ் கிட்ட உண்மையை சொல்லிரு சிவா” என்றார் வாசுதேவன். “கண்டிப்பா சொல்ல மாட்டேன் நீ தானே சொன்ன பல்லவி மனசுல திலீப் தவிர வேற யாருக்கும் இடம் இல்லைன்னு இப்போ ராகவ்க்கு உண்மை தெரிந்தால் அவன் பல்லவி கல்யாணத்தில் எதுவும் பிரச்சினை பண்ணிட்டால் அதனால் முதலில் பல்லவி கல்யாணம் முடியட்டும் அப்பறம் நானே அவன் கிட்ட உண்மையை சொல்கிறேன்” என்று நண்பனின் கையை ஆதரவாக பற்றினார் சிவச்சந்திரன். “வா உள்ளே போகலாம்” என்று இருவரும் உள்ளே சென்றனர்.
“பொண்ணை சீக்கிரம் வரச் சொல்லுங்க, எவ்வளவு நேரம் தான் என் அண்ணன் காத்துட்டு இருப்பான்” என்று பூர்வி கூறிட, “ஏய் சும்மா இருடீ வாயாடி” என்றார் புவனேஸ்வரி.
“சங்கவி போயி பல்லவியை அழைச்சிட்டு வா” என்று ஆதித்யன் கூறிட, சங்கவி பல்லவியின் அறைக்கு சென்றாள்.
“என்ன பவி ரெடியாகிட்டியா” என்ற சங்கவியிடம், புன்னகையுடன் “ரெடியாகிட்டேன் அத்தாச்சி” என்றாள் பல்லவி. அவளது முகம் புன்னகையில் மலர்ந்திருக்க அவளது நெற்றி வழித்து சொடுக்கிட்டவள், “எம்புட்டு திருஷ்டி நீ எப்பவுமே சிரிச்சுட்டே இருக்கனும் பவி” என்றாள்.
“சரி, சரி வா இல்லைனா திலீப் கோவிச்சுட்டு இங்கேயே வந்துருவான்” என்று சிரித்த சங்கவி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அழகு பதுமையாக வந்து நின்ற பெண்ணவளைக் கண்டு சொக்கித் தான் போனான் திலீப் வர்மன். அவன் முகம் கொள்ளா புன்னகையுடன் அவளை பார்த்து ரசித்திட, அவனருகில் அமர்ந்திருந்த ராகவ் வேதனையில் புழுங்கினான்.
சாம்பவி நடக்கும் நிகழ்வுகளை பார்த்து எரிச்சலடைந்தாள். வைதேகியோ, “கடவுளே என் பொண்ணு கல்யாணம் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்தாலே போதும்” என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.
“என்ன வாசு இன்னைக்கே தட்டு தாம்பூலம் மாற்றிக் கொள்ளலாமா?” என்று சிவச்சந்திரன் கேட்டிட , “கண்டிப்பா சிவா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சுருவோம்” என்றார் வாசுதேவன்.
வாசுதேவன், வைதேகி தம்பதியர் செல்வராணியிடம் தட்டு, தாம்பூலம் மாற்றிக் கொண்டு திலீப் வர்மன், பல்லவி இருவரின் திருமணத்தை நிச்சயம் செய்ய சங்கவி திலீப்பின் கையில் மோதிரத்தை கொடுத்து பல்லவிக்கு போட்டு விடச் சொன்னாள். ஆதித்யனோ தன் தங்கை பல்லவியின் கையில் மோதிரத்தை கொடுத்து திலீப்பிற்கு போட்டு விடச் சொன்னான்.
திலீப் வர்மன், பல்லவி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொண்டார். இருவரின் முகத்திலும் சந்தோஷம் மட்டும் தான் இருந்தது. பல்லவியும், திலீப்பும் மாலையும், கழுத்துமாக நிற்க அவர்களை பல புகைப்படமாக எடுத்துக் கொண்டான் ரஞ்சித்.
“என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே பவி உனக்கு” என்ற திலீப்பின், தோளில் சாய்ந்து கொண்டவள், “சம்மதம்” என்று வெட்கத்துடன் கூறினாள்.
இதைக் கண்ட ராகவ்விற்கு மனம் வலித்தாலும் பல்லவியை திலீப் சந்தோசமாக பார்த்துக் கொள்வான் என்ற நினைப்பு கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. அவள் சந்தோஷமா இருக்கட்டும் என்று அவனது காதல் கொண்ட மனம் நினைத்தது.
“என்ன திலீப் இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்த” என்ற பல்லவியிடம், “உன் கிட்ட பேசத் தான் உன்னை தனியா இழுத்துட்டு வந்தேன்” என்றவன் தன் கழுத்தில் இருந்த மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். “என்ன பண்ணுறடா” என்ற பல்லவியிடம், “உன் கையால் மாலை போட்டு விடுவன்னு பார்த்தால் உன் அண்ணன் போட்டு விடுறாரு அதான் சரி, சரி இப்போ என் அக்கா உனக்கு போட்டு விட்ட மாலையை நீ என் கழுத்தில் போட்டு விடு பார்ப்போம்” என்று அவன் கூறிட, “நீ இருக்கியே” என்று சிரித்த பல்லவி அவன் கழுத்தில் மாலை அணிவித்து விட்டாள்.
“இப்போ சந்தோஷமா திலீப்” என்ற பல்லவியிடம், “என்னடீ நீ புருஷனை பெயர் சொல்லி கூப்பிடுற மரியாதையா மாமான்னு கூப்பிடு பார்ப்போம்” என்றான் திலீப் வர்மன்.
“மாமா வா நீயா போடா அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன்” என்று அவள் கூறிட, “ப்ளீஸ் செல்லம் ஒரே ஒரு வாட்டி கூப்பிடுடீ” என்று அவன் கெஞ்சிட , “சரி, சரி ரொம்ப கெஞ்சாதே ஒரே ஒரு தடவை தான் சொல்லுவேன்” என்ற பல்லவி, “திலீப் மாமா ஐ லவ் யூ” என்று கூறி விட்டு திரும்பிக் கொண்டாள்.
“செல்லம்” என்று அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன் , “ரொம்ப தேங்க்ஸ் டீ” என்று கூறிட, “பொறுக்கி தள்ளிப் போடா யாராவது பார்த்தால் மானம் போயிரும்” என்றாள் பல்லவி. “சரி, சரி” என்று அவளை விட்டவன் , “சரி வா சாப்பிட போகலாம்” என்று அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.
“ஐ லவ் யூ திலீப் மாமா வா, ரொம்ப சந்தோஷமா இருக்கியோ? மாலை எல்லாம் மாத்தி கல்யாண ஒத்திகையா கனவுல கூட உன் கல்யாணம் நடக்காது பல்லவி. நடக்கவும் விட மாட்டேன்” என்று பற்களைக் கடித்த சாம்பவி ராகவ்வை தேடினாள்.
“இந்த கலாபக் காதலன் அந்த பல்லவியை பார்த்து பெருமூச்சு விட்டுட்டு இருக்கானா? பேசாமல் இவனைக் கழட்டி விட்டால் என்ன” என்று தான் யோசித்தாள் சாம்பவி. “இரண்டு வருஷமா இவன் கூட சுத்திட்டு இருக்கேன் இன்னும் அந்த பல்லவியை பார்க்கும் போது எல்லாம் பழைய காதல் துளிர்விட்டு சோக கீதம் மனசுக்குள்ளேயே வாசிச்சுட்டு இருக்கிறான், ‘இப்போ தான் கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன். உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்னு’ ச்சே” என்றாள் சாம்பவி.
(…. அடியே…)