“அப்போ இது எல்லாமே ஆஷா தான் செஞ்சிருக்கா இல்ல” என்று கோபமாக கேட்டாள் அனிதா.
“ம்ம்.. ஆமா, மதன் சார் மேல இருந்த லவ்வால இப்படி செஞ்சிருக்கா”.
“பெரிய லவ்.. மண்ணாங்கட்டி லவ்.. அதுக்காக அவ இப்படி பண்ணது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. இதனால் உன் வாழ்க்கையே இப்ப நாசமா போயிடுச்சு”.
“இப்படி எல்லாம் நடக்கும்னு அவளும் எதிர்பார்க்கலையே.. அவர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்றதை தடுப்பதற்காக தான் அவ இப்படி செஞ்சிருக்கா.. நான் தூங்கிடுவேன்னு நினைச்சிருக்கா.. ஆனா, என்ன பண்றது இப்படி எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு” என்றாள் வருத்தமாக.
“உன் மனசுல என்ன பெரிய அன்னை தெரசானு நினைப்பா.. உனக்கு கொஞ்சம் கூட அவ மேல கோபமே வரலையா? உன் லைஃபை ஸ்பாயில் பண்ணி இருக்கா.. இதனால உனக்கும் வீட்ல இருக்கவங்களுக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனையாகி இருக்கு. ஈஸியா அவளை எப்படி மன்னிக்க உனக்கு மனசு வருது. உன் அளவுக்கு எனக்கு பெரிய மனசு எல்லாம் இல்ல.. அவளை நான் நிச்சயமா சும்மா விட மாட்டேன்” என்று கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள்.
“அனிதா ஒரு நிமிஷம் கோவப்படாம நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.. அவ பண்ணது தப்பு தான். அதை அவளுமே ரியலைஸ் பண்ணிட்டா.. அவ என்கிட்ட நிறைய தடவை சாரி கூட கேட்டுட்டா.. இப்படி எல்லாம் நடக்கும்னு அவ நினைச்சு பண்ணலையே.. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.. அவ மேல இன்னமுமே எனக்கு வருத்தம் இருக்கு தான். அதுக்காக அதையே இழுத்து பிடித்து வைத்திருக்கவும் எனக்கு இஷ்டம் இல்லை. எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு இனி வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது?” என்றாள் வெறுமையான குரலில்.
“இவ்வளவு பெரிய வேலைய பாத்துட்டு ஒன்னும் தெரியாதவ மாதிரி அவ காலேஜ்ல சுத்திகிட்டு இருந்தா.. எனக்கு அதை நினைக்க நினைக்க கோபம் கோபமா வருது இனியாள். எனக்கு மட்டும் இந்த விஷயம் எல்லாம் அப்போவே தெரிஞ்சிருந்தா அவளை உண்டு இல்லைன்னு செஞ்சிருப்பேன்”.
“சரி விடுடி, எதுக்கு இப்போ அவளை பத்தி பேசிகிட்டு.. அவளும் மதன் சாரும் கல்யாணம் பண்ணி என்னமோ பண்ணிட்டு போறாங்க அதை பத்தி நமக்கு என்ன?”.
‘பெரிய தியாகினு நினைப்பு இவளுக்கு மனசுல’ என்று பாரிவேந்தனாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“இந்த விஷயம் எல்லாம் மதன் சாருக்கு தெரிஞ்சதால தான் அவளுடைய லவ்வ அக்சப்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரோ.. நானும் நீ போன பிறகு நோட் பண்ணேன். இவ மதன் சார் பின்னாடியே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கா.. ஆனா, மதன் சார் இவளை கண்டுக்க கூட இல்லை”.
“ம்ம் தெரியும். அது அவங்களுடைய பர்சனல்”.
“இவள மாதிரி ஆளுக்கு எல்லாம் மதன் சார் கிடைக்கவே கூடாது டி. அவளுடைய லவ்வுக்காக எப்படி சுயநலமா நடந்துக்கிட்டா.. உன் வாழ்க்கையையே அழிச்சிட்டா.. அவளுடைய லவ் சக்ஸஸ் ஆகாம அவ கஷ்டப்படணும். அப்ப தான் உன்னுடைய நிலைமை அவளுக்கு புரியும்”.
“போதும் அனிதா அவங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணிட்டு போகட்டும் அவங்க லைஃப்ல என்ன நடக்குதுன்னு பாக்குறது நம்ம வேலை இல்ல.. இதுல முடிவு பண்ண வேண்டியது மதன் சார் தான்”.
“சரி, மதன் சார் தான் உன்ன விரும்புறேன்னு சொல்றாரு இல்ல நீ ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாது கொஞ்சம் யோசிச்சு பாரேன்”.
“என்னடி விளையாடுறியா.. நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”.
“ஏன் டி முடியாது? எப்படி பார்த்தாலும் உன் லைஃப் இப்படி ஆனதுக்கு அவங்க ரெண்டு பேருமே காரணம் தானே.. அவர் மேல இருக்கிற லவ்வால் தானே ஆஷா இப்படி எல்லாம் நடந்துகிட்டா.. நீ மட்டும் மதன் சாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஷாவையும் பழி வாங்கின மாதிரி இருக்கும்ல”.
“உளறாத அனிதா.. இப்போ அவள பழிவாங்குறதால மட்டும் எனக்கு சந்தோஷம் கிடைச்சிட போகுதா.. யாரையுமே கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் நான் இல்லை என் லைஃப் அவ்வளவு தான்”.
“ஏன் டி இப்படி எல்லாம் சொல்ற.. அப்ப உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?”.
“அதான் என் பொண்ணு இருக்காளே”.
“பெண் குழந்தையா பிறந்திருக்கு?” என்று ஆச்சரியமாக கேட்டாள் அனிதா.
“ம்ம்.. யாழ்நிலா அவ பேரு.. எனக்கு அவ மட்டும் போதும். இப்போ பாரி சார் என்னை அவருடைய காலேஜிலேயே சேர்த்து விட்டிருக்கிறார். எப்படியாவது படிச்சு முடிச்சு அவங்க ஹாஸ்பிடல்லையே வேலை பார்த்துகிட்டு இப்படியே நான் என் காலத்தை ஓட்டிடுவேன்”.
“ஏன் டி உனக்கு என்ன வயசா ஆகிடுச்சு.. இன்னும் லைஃப்ல நீ எதையுமே அனுபவிக்கல” என்று ஆதங்கமாக கேட்டாள்.
“எனக்கு அந்த இன்ட்ரஸ்ட் எல்லாம் போயி பல நாள் ஆகுது அனிதா. எப்போ என் அப்பா என்னை வீட்டை விட்டு வெளியில் போக சொன்னாரோ அப்போவே என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இனி நான் வாழுறது எல்லாம் என் பொண்ணுக்காக மட்டும் தான். எப்படியோ வாழ்ந்து தான் ஆகணும்னு தெரிஞ்சு போச்சு அதுல மத்தவங்களுக்கு பிரயோஜனமா இருக்கணுமேனு தான் நான் என் படிப்பை கன்டினியூ பண்ணலாம்னு இருக்கேன். என் அப்பாவோட ஆசையும் நிறைவேறுன மாதிரி இருக்கும்ல..” என்னும் பொழுதே அவளின் மனதிற்குள் ஒரு வித நெகிழ்வு.
“என்னை கேட்டா.. நீ மதன் சாரை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு தான் சொல்லுவேன். யார் யாரோ பண்ண தப்புக்கு நீ ஏன் டி தண்டனையை அனுபவிக்கணும். அப்படி மதன் சாரை கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லனா, உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ல”.
“சரி இத பத்தி விடு வேற ஏதாவது பேசலாமா?”.
பல மாதங்கள் கழித்து தன் தோழியுடன் உரையாடியதில் இனியாளின் மனம் சற்று லேசானதை போல் இருந்தது.
அதே மனநிலையோடு அவள் அழைப்பை துண்டித்து விட்டு திரும்பவும், அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பாரிவேந்தன்.
அவனை நோக்கி மெல்லிய புன்னகையை உதிர்த்தவள் அறைக்குள் செல்ல முற்படவும்.
“இனியாள் ஒரு நிமிஷம் இங்க வா” என்று அழைத்தவன் பார்வையால் தனக்கு எதிரே இருக்கும் இருக்கையை காட்டவும்.
அவளும் அமைதியாக அங்கே அமர்ந்து கொண்டாள்.
அவளின் முகம் முன்பை விட கொஞ்சமே கொஞ்சம் தெளிவாக இருப்பது போல் இவனுக்கு தோன்றியது. அது மீண்டும் அவள் தன் படிப்பை தொடர போகும் மகிழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டவன்.
“நாளைக்கு ஷாப்பிங் போகலாம். உனக்கு காலேஜுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்”.
“ஐயோ டாக்டர்! அதுக்கு எதுக்காக நீங்க.. நானே பார்த்துக்கிறேன். இதுக்காக நீங்க உங்க வேலையை விட்டுட்டு வர வேண்டாம்”.
“அதெல்லாம் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை நான் பாத்துக்குறேன். மார்னிங் ரெடியா இரு” என்றவனுக்கு அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.
மறுநாள் குழந்தையை முத்துலட்சுமியிடம் கொடுத்துவிட்டு இனியாளை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்ற பாரிவேந்தன் அவள் கல்லூரிக்கு போட தேவையான உடைகளை முதலில் வாங்கினான்.
பிறகு, அவளின் படிப்பிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
அவள் வேண்டாம் என்று மறுத்தும் அனைத்து இடங்களிலும் அவனே பணத்தை கொடுத்து அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தான்.
அனைத்துமே ட்ரஸ்டின் செலவு என்று கூறி அவளின் வாயையும் அடைத்து விட்டான்.
இன்று தான் மீண்டும் தன் கல்லூரி படிப்பை துவங்க போகிறாள் இனியாள். இத்தனை நாட்கள் வறண்டு போய் கிடந்த அவளின் மனதிற்குள் மெல்லிய சாரல் வீசுவது போல் இதமாக இருந்தது அவள் மீண்டும் கல்லூரிக்கு செல்ல போகும் நிகழ்வு.
காலை எழுந்ததும் யாழ் நிலாவையும் கிளப்பியவள் தானும் கிளம்பி முத்துலட்சுமியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பினாள்.
“ஒரு நிமிஷம் நானும் ஹாஸ்பிடல் தான் போறேன் உன்னை அப்படியே டிராப் பண்ணிடுறேன்” என்ற பாரி வேந்தனிடம் அவளுக்கு மறுக்கவும் முடியவில்லை.
அவனுக்கு சம்மதமாக தலையசைத்தவள் அவனுடன் காரில் ஏறிக் கொண்டாள்.
இம்முறையும் பின் இருக்கையில் தான் அமர்ந்தாள். அது வேறு பாரி வேந்தனுக்கு பெரும் கடுப்பாக இருந்தது.
இதுவரை அவள் பாரி வேந்தனுடன் தனிமையில் செல்லும் பொழுதெல்லாம் அவனுக்கு அருகில் முன்னிருக்கையில் அமரவே மாட்டாள்.
என்ன இருந்தாலும் அது அவளுக்கான இடம் இல்லை என்பது போல் பின்னால் தான் ஏறிக்கொள்வாள்.
ஆனால், அவனுக்கோ அவளை தன் அருகில் அமரச் செய்ய வேண்டும் என்று அவ்வளவு ஆசை.
அதை அவளிடம் வெளிப்படையாக கூறவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
எப்படியோ தன்னுடன் அவள் வருவதே போதும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவன் கண்ணாடியோடு அவளை பார்த்துக் கொண்டே தான் மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
அது பெரிய பரப்பிலான இடம் அதற்குள்ளேயே முத்துலட்சுமி மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும், மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக மருத்துவமனையின் உள்ளேயே டே கேரும் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த டே கேரில் தான் இனியாளும் யாழ்நிலாவை விட்டுவிட்டு கல்லூரிக்கு செல்ல போகிறாள்.
பாரிவேந்தன் தான் அவளை அழைத்துக் கொண்டு டே கேரிற்கு வந்தான்.
அங்கே இருப்பவர்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக அவனுக்கு வணக்கம் தெரிவிக்கவும்.
அவனும் பதிலுக்கு சிறிய தலையசைப்புடன் அங்கேயே நின்றிருந்தான்.
டே கேர் வரையிலும் வந்துவிட்டவளிற்கு ஏனோ யாழ்நிலாவை அங்கே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை.
ஏனோ, மனம் பிசைவது போல் ஒரு தடுமாற்றம்.
அவள் பிறந்த இத்தனை நாட்களில் அவளை விட்டு இவள் பிரிந்ததே கிடையாது. முதல் முறை அவளை விட்டுவிட்டு செல்ல போகிறாள்.
அவள் இவளை எண்ணி அழுவாளா?
அல்லது, அங்கே இருப்பவர்கள் யாழ் நிலாவை நன்றாக பார்த்துக் கொள்வார்களா?
தன்னை தேடி அழுதால் எப்படி சமாதானம் செய்வார்கள்? என்ற பல சிந்தனை அவளின் மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
தன்னையும் மீறி அழுத்தமாக யாழ்நிலாவை பற்றி கொண்டு நின்றாள்.
என்ன இருந்தாலும் அவளிற்குள் இருக்கும் தாய்மை உணர்வு தலை தூக்க தொடங்கியது.
தந்தை யார் என்று தெரியாத போதிலும் தன் மகள் என்று முழு மனதோடு ஏற்றுக் கொள்ள துணிந்தவள், கொஞ்சம் கொஞ்சமாக
யாழ்நிலாவின் மேல் மொத்த பாசத்தையும் கொட்ட தொடங்கி விட்டாள்.
இவளின் சிறு வயதில் இவளின் தந்தை இவள் மேல் வைத்த பாசத்தை போல்..