“என்ன ஆச்சு குழந்தைய அவங்க கிட்ட கொடு ஈவினிங் பிக்கப் பண்ணிக்கலாம் காலேஜுக்கு டைம் ஆகுது இல்ல” என்றவாறு தன் கை கடிகாரத்தை பாரிவேந்தன் திரும்பி பார்க்கவும்.
குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக இனியாளின் முன்னே வந்து நின்ற பெண், “கொடுங்க மேடம்” என்றவாறு தன் கையை நீட்டினாள்.
ஏனோ தடுமாற்றத்தோடு அவளிடம் யாழ்நிலாவை கொடுத்த இனியாளின் முகம் கலக்கமாகவே இருந்தது.
“அவ அழுதானா இந்த பேக்ல பால் இருக்கு, அவளோட டாய்ஸும் இருக்கு.. அழுதா அதை வச்சு விளையாட்டு காட்டுங்க”.
“சரி மேடம் நாங்க பாத்துக்குறோம்”.
“இது என்னுடைய நம்பர்” என்று அவசரமாக ஒரு துண்டு சீட்டில் தன் செல் பேசி எண்ணை எழுதி அவர்களின் முன்பு நீட்டியவள், “அவ அழுதானா எனக்கு உடனே கால் பண்ணுங்க நான் வரேன்”.
பாரிவேந்தனின் இதழ் அவளின் செய்கையில் மெலிதாக விரிய இனியாளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல மேடம்.. டாக்டர் எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டாங்க.. நீங்க தைரியமா காலேஜ் போங்க ஈவினிங் நீங்க வர வரைக்கும் நாங்க பாப்பாவ பார்த்துக்கிறோம்”.
“ஆங்.. சரி” என்றவள் அழுத்தமாக யாழ்நிலாவின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு மனமே இன்றி அங்கிருந்து சென்றாள்.
பாரி வேந்தனும் அவர்களுக்கு சிறிய தலையசைப்பை கொடுத்துவிட்டு இனியாளுடன் வெளியேறியவன், “கேப் விழுந்திட்டதால எதுவும் வொரி பண்ணிக்க வேண்டாம். ஏதாவது டவுட்னா உனக்கு கிளாஸ் எடுக்கிறவங்க கிட்ட தைரியமாக கேளு.. அப்படி உனக்கு ஏதாவது கேட்க சங்கடமா இருந்தா என்கிட்ட கேளு நான் சொல்லி தரேன்” என்று அவளுடன் பேசிக்கொண்டே வர.
அவளோ தனக்குள்ளேயே ஏதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.
“இனியாள் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் அப்படி என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க?” என்ற பாரிவேந்தனின் வார்த்தைகள் அவளின் சிந்தனையை கலைக்க.
அவள் கூறியதை கேட்டு புன்னகைத்தவன், “இன்னும் நீ யாழ்நிலாவை பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கியா.. அதெல்லாம் அவங்க நல்லா கேர் பண்ணிப்பாங்க. நானும் பேஷண்ட்ஸ் இல்லாத ப்ரீ டைம்ல போய் யாழை பார்த்துக்கிறேன் யூ டோன்ட் வொரி.. நீ உன்னுடைய ஸ்டடிஸ்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு”.
அவனின் வார்த்தை அவளுக்கு பெரும் பலமாக இருந்தது.
அப்பொழுது அவர்களுக்கு எதிரே வந்த ரம்யா, “குட் மார்னிங் டாக்டர்” என்று விட்டு இனியாளை பார்த்து, “இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டே காலேஜா ஆல் த பெஸ்ட்” என்றாள் புன்னகையோடு.
“ரம்யா இவங்கள காலேஜ்கிட்ட விட்டுடுங்க.. எனக்கு ரவுண்ட்ஸ் போக டைம் ஆயிடுச்சு” என்றவாறு அவன் கிளம்பி விடவும்.
ரம்யா உடன் நடந்த இனியாளின் முகம் இன்னமுமே சோர்ந்து போய் தான் இருந்தது.
“என்னாச்சு இனியாள் காலேஜ் போக உங்களுக்கு விருப்பம் இல்லையா?”.
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல ரம்யா படிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை தான். இருந்தாலும், யாழ் நிலாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. இதுவரைக்கும் அவளை நான் தனியா விட்டதே இல்ல.. அங்க நல்லா பார்த்துப்பாங்க தான?”.
“ம்ம்.. அதெல்லாம் ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. நீ ஒன்னும் கவலைப்படாத நானும் அப்பப்போ போய் பாத்துக்குறேன் சரியா” என்று அவளுக்கு நம்பிக்கையளிக்கவும்.
அவளின் வார்த்தையை கேட்டு புன்னகைத்த இனியாள், “ரொம்ப தேங்க்ஸ் ரம்யா, நீயும் கொஞ்சம் பாத்துக்கோ” என்று விட்டு கல்லூரிக்கு சென்று விட்டாள்.
அன்று நாள் முழுவதும் அவளுக்கு புதுவித அனுபவமாக தான் இருந்தது. முதல் நாள் அனைவரிடமும் பேசி பழகி ஒரு வழியாக ஒன்றிவிட்டாள். ஆனால், யாழ்நிலாவின் எண்ணம் தான் அவளை வாட்டி வதைத்து விட்டது.
இடையில் பாரிவேந்தனும் வந்து குழந்தையை பார்த்து விட்டு செல்ல..
ரம்யாவும் அவ்வபொழுது அந்த புறம் செல்லும் பொழுதெல்லாம் யாழ்நிலாவுடன் விளையாடிவிட்டு சென்றாள்.
மதியமே பாரிவேந்தனுக்கு டியூட்டி முடிந்து விடவும் யாழ் நிலாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான். மதியம் முழுவதும் குழந்தையுடன் தான் அவன் தன் நேரத்தை செலவிட்டான்.
“உன் அம்மாவுக்கு உன்னை விட்டுட்டு இருக்க முடியாது போலருக்கு ரொம்ப தான் பண்றா.. உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று குழந்தையுடன் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தான்.
சாயந்திரம் போல் கல்லூரியை முடித்துக் கொண்டு வந்த இனியாள் யாழ்நிலாவை பார்க்கும் ஆர்வத்தோடு டே கேர் செல்லவும்.
அவளை அங்கு காணாமல் ஏமாந்து போனவள் வேகமாக பாரிவேந்தனின் அறை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
கதவை தட்டி அவனின் அனுமதியை பெற்றுக் கொண்டு அறையினுள் நுழைந்தவளின் பார்வையில் பாரிவேந்தன் பதியவே இல்லை. யாழ் நிலா மட்டும் தான் தெரிந்தாள். ஓடி சென்று பாரிவேந்தனிடமிருந்து யாழ்நிலாவை வாங்கி இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் ஊற்றெடுக்க..
அவளின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு இருந்தான் பாரிவேந்தன்.
யாழ்நிலாவின் முகம் முழுக்க முத்த மழையை பொழிந்தவளிற்கு இப்பொழுது தான் சற்று ஆசுவாசமாக இருந்தது.
“என்ன இனியாள் ஒரு நாளைக்கே இப்படியா?” என்ற பாரிவேந்தனை சங்கடமாக பார்த்த இனியாள், “டாக்டர் இனிமே என்னால் காலேஜுக்கு போக முடியுமானு தெரியல”.
“ஏன் அங்கே ஏதாவது பிரச்சனையா?”.
“இல்ல, எனக்கு அங்க போனாலும் இவ ஞாபகமாவே இருக்கு. நான் பேசாம வீட்டிலேயே இருந்து மேடமை பார்த்துக்கட்டுமா?”.
“என்ன இப்படி சொல்ற.. அங்க அங்க பொண்ணுங்க குழந்தையை பெத்துட்டு பிளைட்டே ஓட்டுறாங்க.. நீ என்னடானா படிக்கிறதுக்கு கூட முடியலன்னு சொல்ற.. ஸ்டார்ட்டிங்ல இப்படித்தான் இருக்கும். உனக்கு இங்க அப்படி என்ன தான் பிரச்சனை.. பாரு, யாழ் நிலா எப்படி சிரிச்சுக்கிட்டு ஜாலியா விளையாடிட்டு இருக்கானு.. அவளை பாத்துக்க தான் டே கேர்ல அத்தனை பேரு இருக்காங்க இல்ல.. கூட ரம்யா இருக்கா.. அது மட்டும் இல்ல நானும் இருக்கேன்” என்றான் சற்று அழுத்தமாக.
“அதுக்கு இல்ல டாக்டர்..” என்று அவள் தயங்கியவாறு எதையோ கூற வரவும்.
அவளின் முகத்தை நோக்கி தன் கையை நீட்டி பேசாதே என்பது போல் தடுத்தவன், “நோ மோர் எக்ஸ்கியூசஸ்.. நீ உன்னுடைய ஸ்டடிஸை கம்ப்ளீட் பண்ணிட்டு இந்த ஹாஸ்பிடல்ல டாக்டரா ஜாயின் பண்ற தட்ஸ் இட்!” என்று அதற்கு மேல் அவள் வாயே திறக்க முடியாத படி செய்து விட்டான்.
ஒருபுறம் தங்கள் குழந்தையின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பை பார்த்து அவனுக்குள்ளும் சிறு பொறாமை தலை தூக்கியது என்னவோ உண்மை தான்..
ஆனால், இதற்காகவெல்லாம் அவள் கல்லூரி படிப்பை கைவிடுவதில் அவனுக்கு சற்றும் விருப்பமில்லை.
ஏன் குழந்தையை கவனித்துக் கொள்வது தாய்க்கு மட்டுமே கடமை என்று எழுதி வைக்கப்படாத சட்டமா என்ன..
தந்தை பார்த்துக் கொள்ளக் கூடாதா? என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
ஆனால், இவன் தான் தந்தை என்பது இனியாளுக்கு தெரியாதே..
அது மட்டும் இன்றி, சம்பந்தமே இல்லாமல் அவள் குழந்தையின் மேல் காட்டும் பாசத்தை பார்த்து அவனுக்கு பொறாமையாக இருந்தது. தன்னை எண்ணி அவனுக்கே சிரிப்பு தான்.
இருப்பினும், இனியாளின் அன்புக்கு தான் ஏங்குவதால் தான் இத்தகைய எண்ணம் தோன்றுகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.
ரம்யாவும் அப்பொழுது வேலையை முடித்துக் கொண்டு பாரிவேந்தனிடம் விடை பெற்று விட்டு கிளம்ப எத்தனிக்க.
“ரம்யா ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் பாரி.
இனியாளும் குழந்தையோடு அங்கே தான் அமர்ந்திருந்தாள்.
“சொல்லுங்க டாக்டர்”.
“வினோத்துக்கு அவங்க அம்மா பொண்ணு பாக்குறாங்க அது பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?”.
அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத ரம்யா தடுமாற்றத்தோடு நின்று இருந்தாள்.
ரம்யாவின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசுவதை உணர்ந்த இனியாள் சட்டென்று குழந்தையுடன் எழுந்து வெளியே செல்ல முற்படவும்.
அதுவும் பாரிவேந்தனின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
“எங்க போற உட்காரு” என்றான் உரிமையோடு.
அவளால் அவனின் வார்த்தையை மீற முடியாமல் சட்டென்று அமர்ந்து கொண்டாள்.
இனி தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்று நினைத்து விட்டான் போலும்..
இதுவரை கடவுள் தங்களை வைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் போதும். அது அனைத்திற்கும் முற்றுப்புள்ளியை வைக்க எண்ணி விட்டான்.
“சொல்லு ரம்யா தெரியுமா தெரியாதா?”.
“ம்ம் கேள்விப்பட்டேன் டாக்டர்”.
“எப்படி?”.
“வினோத் டாக்டர் தான் சொன்னாங்க”.
“நீ உன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க? வினோத் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறான். அது உனக்கும் தெரியும், இப்போ எதுக்காக நீ அவனை வேண்டாம்னு சொல்ற?”.
“இதெல்லாம் சரி வராது டாக்டர். அவர் என் மேல வச்சிருக்க அன்பு எனக்கும் புரியுது. ஆனா, அவங்க அம்மாவுக்கு நான் அவங்க வீட்டுக்கு மருமகளா வருவதில் விருப்பமில்லை. நான் இந்த விஷயத்துல இதுக்கு மேல எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்க விரும்பல டாக்டர். அவங்க அம்மா ஒரு நாள் நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாங்க.. என்கிட்ட தனியா பேசணும்னு சொன்னாங்க. அவங்க மகனுக்கு அவங்க பெரிய இடத்துல இருந்து பெண்ணு எடுக்க ஆசைப்படுறாங்களாம்.
அவங்க மகன் டாக்டரா இருக்காராம்.. அவருக்கு டாக்டரா இருக்க பொண்ண பார்த்து கட்டினால் தான் அவங்க ஸ்டேட்டஸ்க்கு அது ஈகுவலாக இருக்குமாம். என்னை மாதிரி ஒரு பொண்ண அவங்க மகன் விரும்புறாருன்னு வெளியில் தெரிஞ்சா அது அவங்களுக்கு தான் அவமானமாம். என்னை பத்தி இவ்வளவு தரக்குறைவா நினைக்கிறவங்க வீட்டுக்கு என்னால எப்படி போய் குடும்பம் நடத்த முடியும் டாக்டர். இப்போ அவர் மேல இருக்க ஆசையினால் நான் அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாலும், பின்னாடி இந்த கல்யாணத்தால நாங்க ரெண்டு பேருமே கஷ்டப்படுவோம்.
அவங்க அம்மா பேசிய பேச்சுக்கு நிச்சயமா அவங்க மனசு மாற மாட்டாங்க.. எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டாங்க.. அவங்கள மீறி இவர் கல்யாணம் பண்ணாலும் அது சரி வராது. அவங்களுக்கு இவர் ஒரே பையன்.. அவங்க ஆசைப்படியே கல்யாணம் பண்ணி வைக்கட்டும்னு நினைத்து தான் நான் ஒதுங்கிட்டேன்”.