இப்படிப்பட்ட உடைகளை எல்லாம் அவள் சினிமா பாடல்களில் தான் பார்த்திருக்கிறாள்.
ஷாலினி கொண்டு வந்த அனைத்துமே விலை உயர்ந்த லெகங்காக்களும், லாங் கவுன்களுமாகவே இருந்தன.
இந்த வகை தான் தங்களுக்கு வேண்டும் என்று சூர்யா முன்னதாகவே அவளிடம் கூறிவிட்டான். எனவே, அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் துணிகளை மட்டுமே ஷாலினி இங்கே கொண்டு வந்திருந்தாள்.
வேதவள்ளிக்கு அவற்றையெல்லாம் தொட்டுப் பார்க்கவே சற்று தயக்கமாக இருந்தது. உடைகள் அனைத்துமே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. அதன் விலை எப்படியும் பல ஆயிரம் இருக்கும் என்று எண்ணியவளுக்கு உடைக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
சிறு வயதில் அவளின் தந்தையும், தாயும் உடைகளுக்கு எல்லாம் தேவையில்லாத செலவு செய்யக்கூடாது என்று கூறியது அவளுக்கு நினைவு வந்தது.
“இத ட்ரை பண்ணி பாருங்க மேடம் உங்க கலருக்கு ரொம்ப சூட் ஆகும்” என்றவாறு பிங்க் நிறத்தில் ஒரு லெகங்காவை அவள் நீட்டவும்.
அது முழுவதும் கற்களாலும், மணிகளாலும் வேலைபாடு செய்யப்பட்டிருந்தது. அதை தூக்கவே இருவர் வேண்டும் போல அத்தனை கணம்.
அதன் அருகில் சென்று தொட்டு பார்த்தவளுக்கு அதன் விலையை பார்த்ததும் தலை சுற்றாத நிலை தான்.
கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை தொட்டுவிட்டது அதனின் விலை..
இவ்வளவு விலை உயர்ந்த ஆடைகள் இருக்கின்றதா என்று ஆச்சரியமாக பார்த்தவளிற்கோ இப்பொழுது அதை தொடக்கூட தயக்கமாக இருந்தது.
ஷாலினியும் வேதவள்ளியின் நிறத்திற்கு தகுந்தார் போல் நான்கு, ஐந்து உடைகளை எடுத்து அவளின் முன்பு வைத்தவள், “இது எல்லாமே உங்க கலருக்கு ரொம்ப சூட் ஆகும். உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை ட்ரை பண்ணி பாருங்க மேடம்”.
வேதவள்ளி தன் கைகளை பிசைந்து கொண்டு தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
சற்று நேரம் பொறுத்து பார்த்த சூர்யா தன் பொறுமையை இழந்தவன் வேகமாக தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அவளை நோக்கி வந்து அவளின் கையை பற்றி சற்று தூரம் தனியாக அழைத்து வந்தான்.
“அவங்க தான் ட்ரை பண்ணி பார்க்க சொல்றாங்கல்ல.. எதுக்கு அப்படியே நிக்குற? உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை ட்ரை பண்ணி பார்க்க வேண்டியது தானே” என்று கிசுகிசுப்பாக கடுகடுத்தான்.
“இல்ல.. அது எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. எதுக்காக இவ்வளவு விலைல பார்க்கணும். ஒரு டிரஸ்காக இவ்வளவு பணத்தை வீணாக்கணுமா?” என்றவளை உறுத்து விழித்தவன், “லுக்! இது நம்ம ரிசப்ஷனுக்காக வாங்குறது. இப்படித்தான் இருக்கும்! உனக்கு எது பிடிச்சிருக்கு அதை மட்டும் செலக்ட் பண்ணு பணத்தை பத்தி எல்லாம் நீ எதுக்கு யோசிக்கிற” என்று கராராக கூறவும்.
இவளுக்கும் வேறு வழியில்லாமல் மீண்டும் உடைகள் இருந்த இடத்திற்கு சென்றாள்.
அவள் எவ்வளவு முயற்சித்தாலும் அவளால் முடியவில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவளை எடுக்க விடாமல் தடுத்தது.
அவளின் செயலில் தன் பொறுமையை முற்றிலுமாக இழந்த சூர்யாவோ அவனே வந்து ஒவ்வொரு உடையாக பார்வையிட தொடங்கி விட்டான்.
அதில் வீற்றிருந்த மிளகாய் பழ சிவப்பு நிற லெகங்கா அவனின் கவனத்தை ஈர்த்தது.
அதை தன் கையில் எடுத்தவன், “இதை போட்டுட்டு வா”.
“சூப்பர் சார்.. நான் கூட மேடம் கிட்ட இத தான் ட்ரை பண்ணி பார்க்க சொன்னேன். அவங்களுடைய கலருக்கும் சைஸுக்கும் இது அவங்களுக்கு பெர்பெக்டா சூட் ஆகும்” என்கவும்.
அதை எடுத்துக் கொண்டு தயக்கத்தோடு அறைக்குள் நுழைந்தாள் வேதவள்ளி.
ஷாலினியும் அவளின் பின்னோடு செல்ல..
தன் பின்னோடே வரும் ஷாலினியை புரியாமல் பார்த்தவள், “நானே போட்டுப்பேன் நீங்க எதுக்கு வரிங்க?”.
“இல்ல மேடம் இது போட கொஞ்சம் வெயிட்டா இருக்கும். நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று அவள் மறுத்தும் கேட்காமல் அவளுக்கு உதவி செய்தாள்.
இவளை தனியே அனுப்பினால் அந்த உடையை தூக்கவே இவளின் சக்தி மொத்தமும் போய்விடும் என்பதை அவள் முன்பே கணித்திருந்தாள்.
அந்த உடையை அணிந்து கண்ணாடியில் தன்னை பார்த்தவளிற்கோ அத்தனை ஆச்சரியமாக இருந்தது.
“எப்படி இருக்கு மேடம்?” என்ற ஷாலினியிடம், “படத்துல வர ஹீரோயின் போல இருக்கு” என்று தன்னையும் மீறி கூறிவிட்டாள்.
அவள் கூறியதை கேட்டு ஷாலினி சத்தமாக நகைக்கவும்.
தன் நாக்கை கடித்த வேதவள்ளி, “இல்ல, படத்துல தானே இப்படி எல்லாம் டிரஸ் பண்ணுவாங்க அதான் அப்படி சொன்னேன்” என்று மழுப்பவும்.
“உண்மையிலேயே இந்த டிரஸ்ல நீங்க ஹீரோயின் மாதிரி தான் இருக்கீங்க. உங்களுக்கு இது ரொம்ப அழகா இருக்கு. சூர்யா சாருடைய செலக்சன் எப்பவுமே பெஸ்டா தான் இருக்கும். இந்த டிரஸ் விஷயத்துல மட்டும் இல்ல, உங்க விஷயத்துலயுமே அவர் பெஸ்ட்டா தான் செலக்ட் பண்ணி இருக்காரு”.
இப்பொழுது வேதவள்ளிக்கு அவளுக்கு எப்படி பதில் உரைப்பது என்று தெரியவில்லை அமைதியாகிவிட்டாள்.
தான் அணிந்த உடையை வெளியே வந்து சூர்யாவிடம் அவள் காண்பிக்கவும். அவனுக்குமே அது திருப்தியாக இருந்தது.
“ஓகே ஷாலினி இதுவே ஓகே தான். உங்களுக்கு பேமென்ட் வந்துடும் நீங்க கிளம்புங்க”.
அடுத்து மேகப் ஆர்டிஸ்ட், ஹேர் டிரஸ்ஸிங், மெஹந்தி என ஒவ்வொரு ஆளாக வந்து அன்றைய நாளே வேதவள்ளிக்கு ரெக்கை கட்டிக்கொண்டு பறந்து விட்டது.
தன் கையையும் காலையும் மருதாணி போட வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு அப்படியே சோபாவில் தூங்கியும் போய்விட்டாள்.
சூர்யாவும் அறைக்குள் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்க.
இரவு நேரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் வீட்டில் வேலை செய்பவர்களும் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
வேதவள்ளியும் தூங்கிவிட்டாள், யாரும் ஹாலில் இல்லாததை அறிந்த மெஹந்தி போடும் பெண், “இந்த பொண்ண பாத்தா சாதாரணமான பொண்ணா தான் இருக்கா.. எப்படி சூரியா சாரை கரெக்ட் பண்ணி இருப்பா?” என்று மெல்லிய குரலில் தன் அருகில் வேதவள்ளியின் காலுக்கு மருதாணி போட்டுக் கொண்டிருந்தவளிடம் கேட்க.
அவளோ பெருமூச்சோடு, “இதுக்கு நான் என்னன்னு பதில் சொல்றது? அவளுக்கு லக்கிருந்து இருக்கு அவ்வளவு தான்” என்றாள் தன் தோள்களை குலுக்கிக் கொண்டு.
“இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்திருக்குறவங்க தான் ஆம்பளைங்கள எப்படி மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு எல்லா வித்தையும் தெரிஞ்சவங்களா இருப்பாங்க.. அதுவும் பணக்கார ஆம்பளைங்கன்னா உடனே மயக்கிடுவாங்க” என்று கூறவும்.
அவளின் வார்த்தை அறையில் இருந்து வெளியே வந்த சூர்யாவிற்கு தெளிவாக காதில் விழுந்து தொலைத்தது.
அதுமட்டுமின்றி, அப்பொழுது தான் கொடுக்க வேண்டிய அனைவருக்கும் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த தாத்தாவின் காதிலும் இவ்வார்த்தைகள் தவறாமல் விழ, அவருக்குமே அத்தனை கோபம் எழுந்தது.
அவர் கோபமாக அவர்களை திட்டுவதற்கு முன்னதாக, “என்ன பேசுறிங்க நீங்க ரெண்டு பேரும்.. உங்களை இங்கே மெஹந்தி போடுவதற்காக தான் வர சொன்னேன். இப்படி தான் அடுத்தவங்களை பத்தி தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசுவீங்களா?” என்று சூர்யா கத்தி இருந்தான்.
அவனின் சத்தத்தில் கண்விழித்த வேதவள்ளியோ ‘இங்கே என்ன நடக்கிறது’ என்று புரியாமல் பார்க்க.
அவள் அருகில் வேகமாக விரைந்து வந்தவன் அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தவாறு ஒற்றை கையால் அவளின் முகத்தை தாங்கி, “ஆர் யூ ஓகே” என்றான் காற்றுக்கும் வலிக்காத குரலில்.
அவனின் இந்த திடீர் செயலில் வேத வள்ளிக்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை. தடுமாற்றத்தோடு என்ன செய்வதென்று புரியாமல் திருதிருத்த விழிகளோடு அவனை பார்த்துக்கொண்டு நின்று இருந்தவள் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.
“நானும் இவளும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு பிரஸ்ல நியூஸ் கொடுத்துட்டோம். அப்படி இருந்தும் என் வைஃபை பத்தி தப்பா பேச உங்களுக்கு எல்லாம் என்ன ரைட்ஸ் இருக்கு. மரியாதையா இப்போவே இங்க இருந்து வெளியில் போங்க.. இனி இவளை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனீங்க நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று கர்ஜித்தான்.
“சாரி சார்” என்று தங்களின் தலையை தாழ்த்திக் கொண்டு கூறியவர்கள் வேகமாக வெளியேறிவிட்டனர்.
அப்பொழுது தான் தூங்கி விழித்த வேதவள்ளிக்கு சூர்யாவின் செயலுக்கான அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், அவனின் அருகாமை அவளை வெகுவாக தடுமாறச் செய்தது.
மீண்டும் அவளை நோக்கி, “ஆர் யூ ஓகே?”.
அவனின் இந்த மென்மை தன்னையும் மீறி அவளை ஏதோ செய்தது.
அவளோ தன் தலையை நாலாபுரமும் ஆட்டி வைக்க.
அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த தாத்தாவை பார்த்த சூர்யா, “தாத்தா பிரஸ்ல நியூஸ் கொடுத்த பிறகும் இப்படியே பேசினா என்ன அர்த்தம்?”.
“விடு சூர்யா அவங்க எல்லாம் அப்படித்தான். ஏதாவது ஒரு கண்டன்ட் கிடைச்சா போதும் தேவையில்லாத பேச்செல்லாம் பேசுவாங்க” என்றவருக்கும் சூர்யாவின் இத்தகைய செயல் அவரின் மனதை குளிர்விக்க செய்தது.
கொஞ்சம் கொஞ்சமாக நிச்சயம் வேதவள்ளியின் மனதை சூரியா புரிந்து கொள்வான் என்று எண்ணிக்கொண்டார்.
இன்னமும் வேதவள்ளி சூர்யாவின் அணைப்பில் தான் இருக்கிறாள்.
அவளுக்கு தான் இதில் தடுமாற்றம் ஏற்பட்டது போலும்.. அவனிடம் அப்படி எந்த ஒரு தடுமாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
அப்பொழுது தான் தான் வேதவள்ளியை தன்னுடன் இறுக்கிக் கொண்டு நின்றிருப்பதை கவனித்தவன், சுதாரித்து சட்டென்று அவள் மேலிருந்த தன் கையை விலக்கிக் கொண்டான்.
அவனுக்குமே சங்கடமான நிலை தான். அதிலும், தன் தாத்தாவின் முன்னிலையில் தான் இப்படி நடந்து கொண்டது பெரும் சங்கடமாக இருந்தது.
இருவரின் நிலையையும் புரிந்து கொண்ட தாத்தா, “உள்ள போய் படுமா” என்றதும்.
தலையை குனிந்து கொண்டே ‘சரி’ என்பது போல் உருட்டிவிட்டு குடுகுடுவென அறைக்குள் சென்று மறைந்தாள்.
‘தான் ஏன் திடீரென அவளிடம் இப்படி நடந்து கொண்டேன்?’ என்று சூர்யாவிற்கே கேள்வி எழ.
‘இந்த விஷயத்தில் தானும் சம்பந்தப்பட்டிருக்கிறோம் அல்லவா.. தன்னால் அவளுக்கு எந்த ஒரு அவப்பெயரும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் நாம் அவளிடம் இப்படி நடந்து கொள்கிறோம்’ என்று தனக்குத்தானே கூறியும் கொண்டான்.
அதன் பிறகு இதை பற்றி அவன் பெரிதாக சிந்திக்க முற்படவில்லை.
தாத்தாவும் இவர்களை சரியாக கவனித்திருக்கிறார் என்பதை அறியாத சூர்யா அவரிடம் வேறு பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
“என்ன தாத்தா இன்விடேஷன் எல்லாம் வச்சிட்டீங்களா?”.
“ம்ம்.. வச்சுட்டேன் சூர்யா காளிதாஸ் வீட்டுக்கும் வச்சுட்டேன். அவனுடைய பொண்ணால இதை கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியலையாம்” என்றார் வெறுமையான குரலில்.