6 – உள்நெஞ்சே உறவாடுதே!

5
(6)

உள்ளத்தின் உள்ளர்த்தம்
உணர வழி தேடும்
உனதிரு விழிகளுக்கு
எப்படியடி புரிய வைப்பேன்?

உயிரில்லா என்மொழிகளிலேயே
உயிருள்ள என்னுணர்வுகள்
உருகிக் கிடக்கிறதென்பதை!!!

———————

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா ருதி?” தனது ஆடையை பையில் வைத்தபடி கேட்டான் ஷக்தி மகிழவன்.

“ம்ம் வச்சுட்டேன்…” என்றவளின் குரலில் ஸ்ருதி குறைந்திருந்தது.

அதனைக் கவனியாதவன், “பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு. வா கிளம்பலாம்” என்றிட, “ம்ம்” என்றாள் அமைதியாக.

சென்னையில் இருந்து கோவைக்கு மறுவீடு செல்ல ஆயத்தமாகினர் புதுமணத் தம்பதியர்கள். லேகா தான் மகனைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார். பிரகிருதிக்கு ஊருக்குச் செல்ல பிடித்தமில்லை என்பதால் அவனை வற்புறுத்தவில்லை.

தனது மனைவியின் பிடித்தமின்மையை அவளது உடல்மொழிகளில் புரிந்து கொள்ள இயலவில்லை ஷக்தி மகிழவனுக்கு.

அவள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொண்டாலும், அவளிடம் எப்போதும் இருக்கும் பளிச் புன்னகை சற்றே குறைவதைக் கவனித்துக் கொண்டான்.

ஆனால், அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் குழம்பி பின் அமைதியாகி விட்டான்.

இருவரும் தத்தம் வேலைக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தனர்.

கோவைக்குச் சென்று இறங்கியதும், அவர்களை ஆர்த்தியும் ரவிதரனும் வரவேற்க, ஷக்தி கண்ணிற்கு தெரியாத புன்னகையுடன் உள்ளே சென்றான்.

அங்கு, சொந்தம் பந்தமென வீடு முழுதும் ஆள்கள் புது மணமக்களை பார்க்க வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் ஷக்தியின் முகம் சோர்வடைந்தது.

“இவ்ளோ பேர் வர்றாங்கன்னு சொல்லவே இல்ல ருதி” சிறு ஏமாற்றம் அவன் குரலில்.

சொந்தங்களைக் கண்டதும், அவள் புன்னகை முகத்துடன் அவர்களிடம் நலம் விசாரித்தபடி, “எனக்கும் தெரியாது மகிழ். இந்த அம்மா பார்த்த வேலையா இருக்கும். சாரி…” என்றாள் கெஞ்சலுடன்.

“உங்களுக்கு ஆக்வர்டா இருக்கா?” அவன் முகம் பார்த்து பிரகிருதி வருத்தமாகக் கேட்க, “மே பி. என்னால சொல்ல முடியல. பட் உனக்காக இருக்கேன்” எனும் போதே, நான்கு பெண்மணிகள் நசநசவெனப் பேசும் சத்தமும், இரண்டு வயது குழந்தை எதற்காகவோ கத்தி அழும் சத்தமும், ஒருவர் மாறி ஒருவர் ஷக்தியிடம் கேள்வியாகக் கேட்பதும் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

இவர்களிடம் இப்போது சிரித்துப் பேச வேண்டுமா? அல்லது இயல்பாக பதில் கொடுக்க வேண்டுமா? அல்லது இங்கிருந்து நகர்ந்து விட வேண்டுமா? என ஒரு நொடி குழம்பி விட்டான்.

இதில் உணவு வகைகளையும் கட்டாயப்படுத்தி உண்பதற்காக தட்டில் வைத்து விட்டனர்.

அதனைக் கண்டதும் பிரகிருதி, “அம்மா மதியத்துக்கு சாம்பார் பொரியல் போதும்னு சொல்லிருந்தேன்ல?” எனக் கேட்க,

“அதெப்படி விருந்துக்கு வர்றப்ப வெறும் சாம்பார் மட்டும் வைக்க முடியும் பிரகா. மாப்பிள்ளைக்குத் தடபுடலா செஞ்சுக் குடுக்கணும் இல்லன்னா மரியாதைக்கு குறைச்சல் ஆகிடும். உனக்கு இதெல்லாம் தெரியாது. அமைதியா இரு” என்று அடக்கி விட்டார்.

அதில் தனது தட்டில் கவனம் இருந்தாலும், மற்றவர்களிடம் பேசினாலும் கணவன் மீது கண்ணாக இருந்தாள் பிரகிருதி. அவன் விழிகள் அங்கும் இங்கும் தடுமாறி உருண்டது.

“ஆர் யூ ஓகே மகிழ்?”

“ஐ ஆம் ஓகே!” புருவ மத்தியில் சிறு முடிச்சுடன் பதில் அளித்தவனின் குழப்பத்தை நொடியில் உணர்ந்து கொண்டாள்.

அதற்கு மேல் அவனை அப்படியே விட மனமில்லை. “உங்களுக்கு பிரைவசி வேணுமா? எரிச்சலா இருக்கா?” என அவனது மன உணர்வைத் துல்லியமாகக் கேட்டு விட, “ஐ திங்க் சோ ருதி” என்றான் கலக்கமாக.

“வாங்க… ரூம்க்குப் போகலாம்” என டைனிங் டேபிளில் இருந்து எழுந்து விட, அவனும் பாதி உணவில் எழுந்து கொண்டான்.

“என்னடி சாப்பிடாம எந்திரிக்க வைக்கிற?” சொந்த பந்தங்கள் அவர்களை ஒரு மார்க்கமாகப் பார்த்ததில் ஆர்த்தி கடிந்தார்.

“இவருக்கு டிராவல் டயர்ட்மா. ரெஸ்ட் எடுக்கட்டும். என் ரூம்ல விட்டுட்டு வரேன்…” என்று அவனைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றவள்,

“இது என் ரூம் மகிழ். இங்க யாரும் வர மாட்டாங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க! ம்ம்?” என அவன் கையைப் பிடித்து அமைதியாக்க,

“எனக்கு இவ்ளோ கிரௌட், இவ்ளோ குவெஸ்டீன்ஸ், ஓவர் லோட் அக்கறை இதை ஹேண்டில் பண்றது கஷ்டம் ருதி. நான்… நான் உன்னை எதுவும் டிஸ்அப்பாய்ண்ட் பண்ணிடலை தான?” எனக் கேட்டுக்கொண்டவனுக்கு அவளது மென்குரலும் தன்னைப் புரிந்து தனியே அழைத்து வந்த விதமும் எரிச்சலை எல்லாம் களைந்து சட்டென்ற புத்துணர்வைக் கொடுத்திருந்தது.

புரிதல் செய்யும் மாயங்களில் அவன் மயங்கித் தான் போனான்.

புன்னகை மாறாது தலையாட்டியவள், “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. இங்க இருந்து போற வரைக்கும் உங்களை கம்ஃபர்ட்டா வச்சுருக்குறது என் பொறுப்பு ஓகே வா?” என்றவளின் பேச்சில் மெய்யுருகிப் போனான்.

துளியாய் புன்னகையை சிதறடித்தவன், “என்னவோ இங்க இருந்து நழுவிப்போற ஃபீல் ருதி” என இதயத்தைத் தொட்டுக் காட்டியவன், “உனக்கு எதுவும் புரியுதா?” என்றான் யோசனையாக.

அவனது உணர்வின் மொழிகள் புரிந்து சிவந்த கன்னமதை அவனுக்கு காட்டாமல் மறைத்த பிரகிருதி, “கையைக் கழுவாம வந்துருக்கேன். கையில இருந்து ரசம் தான் நழுவிப் போயிட்டு இருக்கு” எனக் கிளுக்கிச் சிரிக்க, ஷக்தி போலியாய் முறைத்தான்.

அதில் நன்றாக சிரித்து விட்டவள், “நான் எல்லாரையும் அனுப்பி விட்டுட்டு வரேன். கொஞ்சம் தனிமையை என்ஜாய் பண்ணுங்க…” என்று விட்டு நகர போனவளின் கையைப் பிடித்தான்.

“சீக்கிரம் வா! இப்போ எல்லாம் தனிமைல நீயும் இருக்கணும்னு தோணுது” என்றவனின் பேச்சில் இம்முறை மெய்யுருகிப் போவது அவள் இதயம் ஆகிற்று.

“எனக்கும் இங்க இருந்து ஏதோ நழுவிப்போற ஃபீல் மகிழ். உங்களுக்குப் புரியுதா?” எனத் தனது இதயத்தைத் தொட்டுக் காட்டிக் குறும்பாக சிரித்தவளின் கூற்று புரியாது அவன் விழிக்க, அந்த அப்பாவித்தனம் அவளை இன்னுமாக ஈர்த்தது.

ரவிதரன் மனையாளைக் குழப்பமாகப் பார்க்க, ஆர்த்திக்கு மருமகனின் செயல்முறைகள் வித்தியாசமாக இருந்தது.

திருமணத்தன்று அவனை அந்த அளவு சரியாக கவனிக்கவில்லை. ஆனால் இப்போது ஏதோ உறுத்திட, தனிமை கிடைத்ததும் மகளை பிடித்துக்கொண்டார்.

“மாப்பிள்ளை எல்லாம் ஓகே தான?” ஆர்த்தியின் கேள்வியைப் புரியாமல் தலை அசைத்த பிரகிருதி, “இதை எத்தனை தடவைமா கேட்பீங்க?” என சலித்து விட்டு, “தள்ளுங்க… அவருக்கு காபி போடணும்” எனத் தனது வேலையில் ஐக்கியமானாள்.

ஆனால் ஆர்த்தி விடவில்லை.

“மாப்பிள்ளை கொஞ்சம் முசுடு டைப்போ. சிரிக்கவே மாட்டுறாரு…”

“எனக்கு ஒன்னும் அப்படி தெரியல. எனக்கு அவர் சிரிச்ச முகமா தான் தெரியுறாரு” வெடுக்கென கூறினாள் பிரகிருதி.

“உன் ஒன்னு விட்ட சித்தப்பா அவர் பிசினஸ் பத்தி கேட்டதுக்கு பதில் சொல்லாம இருந்தாராமே. அவர் பெரிய பிசினஸ் பண்றாருன்னு சொல்லி தான பொண்ணு கொடுத்தோம். அவர் பதில் சொல்லாம இருந்தா பதட்டமா இருக்காதா?”

“ப்ச், இப்ப பிசினஸ் பத்தி கேட்கவாமா மறுவீட்டுக்கு வர சொன்னீங்க? அவர் கிரியேட் பண்ணுன கேம்ஸ் எல்லாம் எவ்ளோ ரீச் தெரியுமா… அந்த ஒரு வேலைக்கும் ஆகாத சித்தப்பா இவரைக் கேள்வி கேட்டாராம், இவர் பதில் சொல்லணுமாமே” ஷக்தியைப் பற்றி பேசியதில் அவளுக்கு எங்கிருந்து அத்தனை கோபம் பெருக்கெடுத்து வந்தது என்று அவளே அறியாள்.

“என்னடி வாய் ரொம்ப நீளுது” ஆர்த்தி மகளிடம் காய,

“அவரைப் பத்தி பேசுனா அப்படி தான் நீளும். அம்மான்ற உங்க அதிகாரத்தைக் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டுறதோட வச்சுக்கோங்க. என் புருஷன்கிட்ட காட்டுற வேலை எல்லாம் வேணாம்… இப்ப இங்க இருக்கவா? இல்ல அவரைக் கூட்டிட்டு கிளம்பவா? கிளம்புறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. உங்க பிலவ்ட் ரிலேஷன்ஸ்க்கு நீங்க தான் பதில் சொல்லியாகணும்” என்று திடமாகப் பேசிய மகளை வாயடைத்துப் பார்த்தார் ஆர்த்தி.

திருமணம் வேண்டாமென்று அவள் கதறியதெல்லாம் கண்முன் வந்து போக, “எப்படியோ நல்லாருந்தா சரி தான்…” என அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டே சென்றார்.

படபடத்து நடுங்கிய நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் பிரகிருதி. இவர்களுக்கு மகிழைப் பற்றி தெரிந்தால் நிச்சயம் அமைதியாக விட மாட்டார்கள் என்ற பயமே அவனுக்கு ஆதரவாக நிற்க வைத்தது. அதற்கும் மேல், ருதியிவளின் மகிழவனாய் மாறி விட்டவனை விட்டுக்கொடுக்க இயலுமா அவளால்? எதிரில் நிற்பவர்கள் தாய் தந்தையாக இருந்தாலும் அவனைக் குறைத்து மதிப்பிட சற்றும் இடம் கொடுத்தாளில்லை.

ஒரு நாள் கடந்தும் விருந்தினர் வந்து சென்றபடி இருக்க, ஷக்தி மகிழவனுக்கு புது இடமும் புது ஆள்களும் ஒரு வித தொந்தரவைத் தந்தது.

அதனை அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை என்றாலும் அவளுக்குப் புரிந்தது.

அதில் செய்வதறியாமல் சிந்தித்தவளுக்கு, தங்களை சென்னைக்கு அனுப்ப மாட்டார்கள் என்றும் புரிந்தது. அவனால் பிடிவாதமாகக் கூறி விட்டுச் செல்ல இயலும் தான், ஆனால் தனக்காக அவன் அமைதியாக இருப்பதும் புரிய, சட்டென ஒரு யோசனை உதித்தது.

அதனை செயல்படுத்த வேகமாக தனது அறைக்குச் சென்றவள், “மகிழ்” என அவன் முன்னே அமர்ந்தாள்.

அவனது ‘ரீடிங் நேரம்’ எனத் தெரிந்தாலும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

“ஃபைவ் மினிட்ஸ்” என்றவன் கண்ணைப் புத்தகத்தில் இருந்து பிரிக்காது இருக்க, அவள் முகம் சுருங்கியது.

இருந்தும் அவனது வழக்கத்தில் தொந்தரவு நேரக்கூடாதென்று ஐந்து நிமிடத்தை ஒரு யுகமெனக் கழித்தாள்.

புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவளை நோக்கி நிமிர்ந்த ஷக்தி, “சொல்லு ருதி” என்றான்.

“நம்ம நாளைக்கு ஊட்டிக்கு ஹனிமூன் போகலாமா?” படபடவென சொல்லி விட்டாள்.

ஆனால் அவனது அர்த்தப்பார்வையின் காரணம் பிறகே புரிய நாக்கைக் கடித்தவள், “அது… அது… ஹனி ஹனிமூன்னு சொல்லிட்டு ஊட்டிக்குப் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம். இங்க இருக்க இருக்க ஆளுங்க வந்துட்டே இருப்பாங்க மகிழ் அதான்…” என்றவளுக்கு அவனது ஆழப்பார்வை பதற்றத்தை உண்டு செய்தது.

முகம் கனிய, “உனக்கு இங்க இருக்கனும் தான?” என அவளுக்காக கேட்க, அவளோ “அப்படி ஒன்னும் இல்ல மகிழ்” என்றாள் அவனுக்காக.

“பட், அங்கேயும் புது இடம், புது சூழ்நிலை டக்குன்னு செட் ஆகுமான்னு தெரியல ருதி” எனச் சிந்தித்தவனிடம், “அங்க இது ஆஃப் சீசன் தான் மகிழ். கூட்டம் கம்மியா தான் இருக்கும். நம்ம சுத்திப் பார்க்க கூட போக வேணாம். ஜஸ்ட் ரிசார்ட்ல சில் பண்ணலாம். அமைதி இருக்கும், பர்ட்ஸ்ஸோட லைட் சௌண்டிங் இருக்கும், அப்படியே காம்மா இருக்கலாம்ல” எனக் கண்ணை மூடி சிலாகித்துக் கூற, அவள் மீதே கண்ணாக இருந்தவனுக்குள் நேச அருவி ஊற்றெடுத்தது.

தனக்காக அவள் ஒவ்வொன்றும் யோசிக்கிறாள். இதுவரை யாரும் அவனது மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முயன்றதில்லை. இந்த உணர்வு அவனுக்கே புதிதாய்!

“இதெல்லாம் தெரியல. ஆனா உங்கூட எங்க வேணாலும் போகலாம்னு தோணுது ருதி…” என்றவனின் கூற்றில் உள்ளம் நெகிழ்ந்தது அவளுக்கு.

“தேங்க்ஸ் மகிழ் நான் அம்மாட்ட சொல்லிட்டு வரேன். ஆனா இது உங்க முடிவுன்னு தான் சொல்லுவேன். நீங்களும் அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க ஓகே வா?” எனக் கிசுகிசுப்பாக விழிகளை உருட்டிக் கூறிய தோரணையில் இளகிப்போனது அவனது வதனம்.

ஆகினும், “ஏன் பொய் சொல்லிப்போகணும் இங்க செட் ஆகலைன்னு உண்மையை சொல்லிட்டே போகலாம்” எனப் புரியாமல் கேட்டவனிடம், “நீங்க காரியத்தையே கெடுத்துடுவீங்க போல. அப்டி சொன்னா பிரச்சினை தான் ஆகும். ப்ளீஸ்” எனக் கெஞ்சியதில் அவனும் அரைகுறையாகத் தலையசைத்தான்.

“சரி வந்துடுறேன்” என எழப்போனவளின் கையைப் பிடித்தான் ஷக்தி மகிழவன்.

சடாரென்ற அவனது தீண்டலில் விக்கித்து நின்றவளுக்கு கரங்கள் நடுக்கம் கண்டது.

ஆகினும் அவனது அண்மைத் தந்த தைரியத்தில் அதிகப்படியாக வெளிக்காட்டாமல் நின்றவளின் மனப்போராட்டம் அறியவில்லை அவன்.

“ஊட்டிக்குப் போனா, ஒரு கிஸ் பண்ணலாமா?” ஷக்தி ஏதோ ஆர்வத்தில் கேட்டதில் திகைத்து நின்றவள் “எப்… எப்போ?” என எச்சிலை விழுங்கினாள்.

“ஊட்டிக்குப் போனதும் தான். டேக் யுவர் டைம்” என்றவனுக்கு மறுத்து விடுவாளோ என்ற சிறு தவிப்பும் எழுந்தது.

அவனைப் பாராது சரியென தலையசைத்ததில் ஆடவனின் கருவிழிகளில் மின்னல் ஒளிர, அவளுக்கோ பதற்றமும் வெட்கமும் ஒரு சேர எழுந்தது.

அன்னையை எப்படியோ ஒப்புக்கொள்ள வைத்து விட்டவள், மறுநாள் கணவனுடன் கிளம்பி விட்டாள்.

ஓட்டுனரின் உதவியுடன் காரிலேயே பயணித்தனர்.

ரவிதரனே காட்டேஜ் புக் செய்திருந்தார். ஒரு அறை கொண்ட சிறு காட்டேஜ். மலை உச்சியில் வீற்றிருந்தது. கேட்டட் கமியூனிட்டி போன்று, அருகில் இருந்த காட்டேஜ்களும் ஒன்று போல காட்சியளிக்க, ஊட்டியின் பனி உடலைத் தாக்கினாலும், தன்னவன் கேட்ட முத்தம் என்ற வார்த்தை அவளுள் பெரும் தவிப்பைக் கிளறி விட்டிருந்தது.

இருவரையும் இறக்கி விட்ட ஓட்டுநர், “வெளில போறப்ப கால் பண்ணுங்க சார். நான் பக்கத்துல தான் தங்கி இருக்கேன்” என்று கூறிச் செல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

விஸ்தாரமான வரவேற்பறையை ஒட்டி இருந்தது பெரிய அளவிலான அறை. நடுவில் நான்கு பேர் படுக்கும் அளவு பெரிதான கட்டில். ரூம் ஹீட்டரின் உதவியால் குளிருக்கு இதம் கிடைத்தது.

“நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என அவனைப் பாராமல் தலைக் கவிழ்ந்தே கூறியவள் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, புது இடமாக இருந்தாலும் பிரகிருதியின் அண்மையினால் அதிக வித்தியாசம் தெரியவில்லை அவனுக்கு.

ஆகினும் தன்னைப் பாராது தவிர்த்த மனையாளின் செயலில் மனம் பாரமானது.

அவள் முகத்தைத் துடைத்தபடி வெளியில் வந்ததும், கட்டிலில் அமர்ந்திருந்தவன் விழிகளை நிமிர்த்தி “நான் ஏதாச்சு தப்பு பண்ணிட்டேனா ருதி” எனக் கேட்க, அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“ஏன் இப்படி கேட்குறீங்க?”

“நீ என் கண்ணைப் பார்த்து பேச அவாய்ட் பண்றியே ருதி. என் கூட இருக்க உனக்கு கஷ்டமா இருக்கா?” வார்த்தைகளில் உணர்வேதும் இல்லை. ஆனால், அக்கண்கள்! பெரியதொரு வலியை அவளுக்குள் கடத்தி இருந்தது.

சட்டென அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், “ஐயோ இல்ல மகிழ். உங்க மேல கோபம்னு நினைச்சுட்டீங்களா? அதெல்லாம் இல்ல!” எனத் திணறிட,

“அப்போ ஏன் என்னைப் பார்த்து பேச மாட்டுற?” என்றான்.

இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவளோ, “நீங்க… நீங்க கிஸ் கேட்டீங்க தான? அதான்… அதான் நெர்வஸா, ஷையா இருந்துச்சு. அதான்… உங்களை ஃபேஸ் பண்ண முடியல!” எனப் படபடவெனக் கூறியதும் அவனது இறுகிய புஜங்கள் சற்றே இளகியது.

“அவளோ தானா. ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் ஆகிடுச்சு எனக்கு…” என்றவன் “உன் கன்னத்தைப் பிடிக்கவா?” என அனுமதி கோர, மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

ஆனாலும் சிறு நடுக்கம் மேனியெங்கும்.

அவளிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் அவளது இரு கன்னத்தையும் மெல்லப் பற்றிக்கொண்டவனுக்கு என்ன மாதிரியான உணர்விது என்று தெரியவில்லை. ஆனால் பாதுகாப்பான, மனதிற்கு இதமான நெருக்கமாய் தோன்றியது.

அவள் கன்னம் தாங்கி நிமிர்த்தி தனது கண்களுடன் அவளது மருண்ட விழிகளைக் கலக்க வைத்தவன், “நீ என்னை ஃபேஸ் பண்ணுனா தான் என்னால உன்னை அனலைஸ் பண்ண ட்ரையாவது பண்ண முடியும் ருதி. என்னைப் புரியுது தான?” எனத் தவிப்புடன் வினவ,

“ஆனா உங்களால ஃபீலிங்க்ஸை அனலைஸ் பண்ண முடியாது தான?” அவளிடமும் அதே தவிப்பு. இதயத்தில் ஒரு சிலிர்ப்பு.

“ம்ம்… ஆனா உன் முகத்தை வச்சு என்னால உன் மைண்ட்செட்டை ரீட் பண்ண முடியும். இந்தக் கண்ல லைட்டா சிவப்பாகி தண்ணியா இருந்தா, நீ அப்செட்டா இருக்கன்னு புருஞ்சுப்பேன். அதே கண்ணுல பீலிங்ஸ் இல்லாம, ட்ரையா இருந்தா நீ கோபமா இருப்பன்னு புருஞ்சுப்பேன். அண்ட், இந்தக் கன்னம் ரெட்டாகி பார்க்கவே பிளசண்ட்டா இருந்தா, ‘யூ ஆர் இன் குட் மூட்’னு புருஞ்சுப்பேன் அவன் பேசப் பேச அவனது கட்டை விரல் இரண்டும் இரு கன்னங்களையும் மெலிதாய் வருடிவிட, உணர்வலைகளுக்குள் அடித்துச் செல்லப்பட்டவள், அவன் கைகளில் துவண்டாள்.

“இப்ப நீ குட் மூட்ல இருக்க ரைட்?” சின்னதாய் ஒரு முறுவலில் மனதில் ஏற்பட்ட பரவசத்தை வெளிப்படுத்திய ஆடவன், “கேன் ஐ கிஸ் யூ ருதி?” எனக் கிசுகிசுப்பான குரலில் மீண்டும் அனுமதி வினவ, அவளது விழிகள் தானாய் மூடிக்கொண்டது.

“சோ, இந்த சைகையை நான் எப்படி எடுத்துக்கட்டும்? உனக்கு ஓகேன்னா?” கேள்வியாய் அவன் வினவ, மூடிய விழிகளுடன் ‘ஆம்’ எனத் தலையசைத்தாள்.

“தேங்க்ஸ் ருதி பேபி…” தானாய் இதழ்கள் அசைய, அவளது சிவந்த கன்னமதில் தனது முதல் முத்தத்தை பதித்தான் ஷக்தி மகிழவன். நடுங்கி உதறிய உடலை தனக்குள் மறைத்துக்கொண்டு முத்தத்தை பெற்றுக்கொண்டவளுக்கு தன்னை மீறியும் விழிகள் கலங்க, அவளது முழு கலக்கத்திற்கும் காரணம் அறிந்த பின்னேயும் இதே போலான புரிதல் அவனுக்கு இருந்திடுமா என்றே உள்ளுக்குள் துளித்துளியாக நொறுங்கினாள் பிரகிருதி.

உறவு தொடரும்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!