அத்தியாயம் 26
“சொல்லு பல்லவி அன்னைக்கு நான் உன் கிட்ட உண்மையை சொல்லி இருந்தால் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருப்பியா?” என்று கேட்டான் ராகவ்.
“கண்டிப்பா உங்களை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன் அந்த ஹோட்டல் ரூமில் என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க மேல எந்த தப்பும் இல்லை அவள் உங்களுக்கு கொடுத்த மருந்தோட வீரியம் அவள் உங்க கிட்ட தப்பா நடந்துக்கிட்ட பொழுது உங்களால் தடுக்க முடியலை அவ்வளவு தான்.
ராகவ் நான் ரொம்ப ப்ராக்டிகல் அன்னைக்கு ஒருவேளை நீங்க என் கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லி இருந்தால் நம்ம கல்யாணத்துக்கு நான் சம்மதம் தான் சொல்லி இருப்பேன்” என்றவள், “வேற எதாவது பேசனுமா?” என்றாள்.
“இப்போ என்னை கல்யாணம் பண்ணிப்பியா பல்லவி” என்றான் ராகவ் சிறிதும் யோசிக்காமல்.
அவனைப் பார்த்து புன்னகைத்த பல்லவி “சத்தியமா மாட்டேன் ராகவ்” என்றாள். “திலீப் தான் காரணமா?” என்று அவன் கேட்டிட, “திலீப்பை நான் லவ் பண்ணுறது மட்டும் காரணம் இல்லை என்னை வேண்டாம்னு குப்பை மாதிரி தூக்கிப் போட்ட ஒருத்தர் எப்பவுமே என் வாழ்க்கைக்கு தேவை இல்லை. உங்களுக்கு எப்பவுமே என் வாழ்க்கையில் இடமில்லை” என்று அழுத்தமாக கூறியவள், “நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
“பல்லவி ஒரு நிமிஷம்” என்ற ராகவ்விடம், “என்ன” என்றாள் பல்லவி. “ஐ யம் ரியலி ஸாரி” என்று அவன் கூறிட, “உங்களை மன்னிச்சுட்டேன் ராகவ்” என்றவள் கிளம்பி சென்று விட்டாள். அவன் தான் செல்லும் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன பவி ஏன் ஒரு மாதிரி இருக்க” என்ற திலீப்பின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவள், “என்னை எப்போவும் விட்டுற மாட்டீயேடா” என்றாள்.
“என் உயிரே போனாலும் உன்னை விட மாட்டேன் டீ என்னை நம்பு” என்றான் திலீப் வர்மன்.
“என்ன ராகவ் பல்லவி கிட்ட பேசிட்டியா” என்ற ரஞ்சித்திடம், “பேசிட்டேன் டா. நான் முட்டாள் டா நான் முட்டாள் அன்னைக்கே பல்லவி கிட்ட சாம்பவி பற்றி சொல்லி இருந்தால் இன்னைக்கு அவள் என் மனைவியா என் கூட இருந்திருப்பாள். தப்பு பண்ணிட்டேன் பெரிய தப்பு பண்ணிட்டேன் இனி அவளோட வாழ்க்கையில் எப்போவுமே நான் இல்லைன்னு சொல்லிட்டு போய் விட்டாள்” என்று அழுத தோழனை அணைத்துக் கொண்டான் ரஞ்சித்.
“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல வந்தேன்” என்ற ரஞ்சித்திடம், “என்ன விஷயம்” என்றான் ராகவ். “மச்சான் ஒரு விஷயம் சொல்றேன் தயவு செய்து கேளு அந்த சாம்பவி உனக்கு வேண்டாம். அவள் ஒரு கேடு கெட்ட பொறுக்கி எவனோ ஒருத்தன் கூட ஹோட்டல் ரூம்ல ச்சீ” என்றான் ரஞ்சித்.
“என்ன சொல்லுற ரஞ்சித்” என்ற ராகவ்விடம், ஒரு ஃபோட்டோவைக் காட்டினான்.
சதீஷ் சாம்பவியின் இடையில் கை வைத்து அவளை ஹோட்டல் அறைக்குள் அழைத்துச் செல்லும் புகைப்படம் இருக்க ராகவ் அதிர்ந்து போனான்.
“அவள் ஒரு பொறுக்கி டா நீ மட்டும் தான் அவள் கூட இருந்ததுனு நீ நினைச்சுட்டு இருக்க ஆனால் அவள் பாரு எவனோ ஒருத்தன் கூட ச்சே” என்ற ரஞ்சித் தோழனை அணைத்துக் கொண்டான்.
“இந்த பொறுக்கிக்காக என் பல்லவியை இழந்துட்டேன் மச்சி” என்ற ராகவ் மீண்டும் மீண்டும் அழுது கொண்டு இருக்க, ரஞ்சித் தான் தோழனை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் தவித்தான்.
“ராகவ் பாவம் தான் ஆனால் , திலீப் அவன் வாழ்க்கையே பல்லவி தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் திலீப், பல்லவி கல்யாணம் மட்டும் தடை படவே கூடாது” என்று ரஞ்சித் உறுதியாக இருந்தான்.
“என்ன மாமா சொல்லுறீங்க கல்யாணம் உங்க கிராமத்தில் வைக்க போறீங்களா?” என்ற திலீப்பிடம், “ஆமாம் மாப்பிள்ளை நம்ம வீடு நல்ல பெரிய வீடு. அந்த காலத்து வீடு என் கல்யாணம், அக்கா கல்யாணம் எல்லாமே அங்கே தான் நடந்துச்சு இப்போ உங்க கல்யாணமும் அங்கே நடந்தால் நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்” என்றார் வாசுதேவன். “சரிங்க மாமா உங்க இஷ்டம்” என்றான் திலீப் வர்மன்.
“இன்னைக்கு சாயந்திரம் நாம எல்லோரும் ஊருக்கு கிளம்பலாம்” என்று அவர் கூறிட ,அவனும் சரியென்று கூறினான்.
சதீஷை பார்த்து “இவர் யாரு மாமா” என்ற திலீப்பிடம், “சித்தியோட தம்பி” என்ற பல்லவி , “சரி நீ சீக்கிரம் கிளம்பி வா” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
“கல்யாணம் பண்ணிக்க ஊருக்கு போறியா பல்லவி கல்யாணம் தான் ஆனால் அந்த திலீப் கூட இல்லை இந்த சதீஷ் கூட” என்று நினைத்து பற்களைக் கடித்தாள் சாம்பவி.
“நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க பூர்வியை தனியா விட்டுட்டு எப்படி வருவது அதனால் நான் கல்யாணம் நடக்கும் போது வரேன்” என்று புவனேஸ்வரி கூறிட ராகவ், சிவச்சந்திரன் இருவரும் சென்றனர்.
“மச்சி காரை நான் ஓட்டுறேன்டா” என்ற ரஞ்சித்திடம் , “இல்லை நானே ஓட்டுறேன்” என்றான் திலீப். “திலீப் ரஞ்சித் ஓட்டட்டுமே” என்று பல்லவி கூறிட, “சரி ஓகே” என்றான் திலீப்.
“இப்போவே பொண்டாட்டி தாசனா மாறிட்டீயே மாப்பிள்ளை” என்று ரஞ்சித் கிண்டலடிக்க, “நாளைக்கு உங்களுக்குனு ஒருத்தி வரும் போது பார்க்கிறேன் ரஞ்சித்” என்று பல்லவி கூறிட மூவரும் சிரித்தனர்.
“ராகவ் நீங்க வாங்க நாம தனியா வரலாம்” என்ற சாம்பவியிடம், “இல்லை சாம்பவி நீ அங்கிள், ஆண்ட்டி கூட போ நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட வரேன்” என்று அவளை கழட்டி விட்டான் ராகவ்.
“என்ன பண்ணுறாங்க இந்த காதல் ஜோடிகள்” என்று கண்ணாடி வழியாக பின்னாடி பார்த்திட, இரண்டும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க, “அடத் தூக்கத்துக்கு செத்தவங்களா இளம் ஜோடிகள் ரொமான்ஸ் பண்ணிட்டு வருவாங்க அது ஒரு என்டர்டெயின்மென்ட்டா இருக்கும்னு பார்த்தால் இதுங்க இரண்டும் தூங்கி வழியுதுங்களே” என்று தலையில் அடித்துக் கொண்டான் ரஞ்சித்.
“டேய் பொறுக்கி ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுடா” என்ற ராகவ் சாலையை வெறிக்க ஆரம்பித்தான்.
“திலீப், பல்லவி” என்று ராகவ் கூப்பிட, மெல்ல கண் விழித்தாள் பல்லவி. “என்ன ராகவ்” என்று அவள் கேட்டிட, “ரஞ்சித்க்கு கொஞ்சம் தூக்கம் வருதாம். எனக்கும் தான் அதான் கொஞ்ச நேரம் திலீப்பை டிரைவ் பண்ண சொல்ல எழுப்பினேன் தப்பா எடுத்துக்காதே” என்றான் ராகவ்.
“இட்ஸ் ஓகே ராகவ் அவன் தூங்கட்டும் நான் டிரைவ் பண்ணுறேன் எனக்கும் டிரைவிங் தெரியும்” என்ற பல்லவி டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.
ராகவ், ரஞ்சித் இருவரும் பின்னால் போக, “மூன்று பேரும் எப்படி அங்கே தூங்க முடியும் யாராவது ஒருத்தர் முன்னாடி உட்காருங்க” என்று அவள் கூறிட, ராகவ் அமர்ந்தான்.
பல்லவி காரை இயக்கினாள். ராகவ் அவளிடம் பேசலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலே இருக்க, “எதாவது பேசிட்டு வாங்க ராகவ் அப்போ தான் எனக்கும் தூக்கம் வராது” என்று பல்லவி கூறிட அவனும் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“திலீப்பை எழுப்பி இருக்கலாமே பல்லவி” என்ற ராகவ்விடம், “அவன் தூங்கட்டும் ராகவ். இந்த கொஞ்ச நாளாக தான் கொஞ்சம் நிம்மதியா தூங்குறேன்னு சொல்கிறான் அவனோட தூக்கத்தை ஏன் கெடுக்கனும்” என்றாள் பல்லவி.
“திலீப் கொடுத்து வச்சவன் பல்லவி” என்ற ராகவ்விடம், “சத்தியமா சொல்றேன் ராகவ் அவன் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சுருக்கனும்” என்றவள் சாலையில் கவனத்தை செலுத்தினாள்.
மெல்ல கண் விழித்து எழுந்த திலீப் தன் மீது ஏதோ அழுத்துவதைப் போல இருக்க கண்களை கசக்கி விட்டு பார்த்திட ரஞ்சித் தான் அவன் மீது விழுந்து தூங்கிக் கொண்டிருக்க, “டேய் பொறுக்கி தள்ளிப் படுடா” என்று அவனைத் தள்ளி விட, “ஆ ஆ நாயே ஏன்டா தள்ளி விட்ட தலையிலே டோர் அடிச்சுருச்சு” என்றான் ரஞ்சித்.
“எழுந்துட்டீங்களா?” என்ற குரலில் இருவரும் திரும்பிட, பல்லவி இருவருக்கும் டீயை கொடுத்தாள். “எங்கே இருக்கோம் பவி” என்ற திலீப்பிடம், “டீ கடையில் இன்னும் பத்து நிமிஷத்தில் ஊருக்கு போய் விடலாம்” என்றாள் பல்லவி.
“இவன் என் பக்கத்தில் தூங்குறான்னா யாரு கார் ஓட்டுனது ராகவ்வா” என்ற திலீப்பிடம் முன் சீட்டை காட்டினாள் பல்லவி. அங்கே ராகவ் தூங்கிக் கொண்டிருக்க, “அப்போ நீ தான் டிரைவ் பண்ணுனியா பவி” என்றான் திலீப்.
“ஆமாம்” என்று அவள் காலரை தூக்கி விடுவது போல தனது துப்பட்டாவில் செய்ய அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “சரி இனி நான் கார் ஓட்டுறேன்” என்றான் திலீப்.
“ஒரு வழியாக ஊருக்கு வந்தாச்சு” என்ற திலீப் , “வீடு ரொம்ப அழகா இருக்கு பவி” என்றான். அவனைப் பார்த்து புன்னகைத்த பல்லவி, “சரி இந்த ரூம் நீ எடுத்துக்கோ” என்றாள்.
“மச்சி இங்கே பம்புசெட் இருக்காமே அங்கே குளிக்க போவோமா” என்ற ரஞ்சித்திடம், “நீங்க போங்கடா நான் வரவில்லை” என்றான் திலீப்.
“இவன் எங்கே டா இங்கே” என்ற ராகவ்விடம் , “யாருடா?” என்று திரும்பி பார்த்தான் திலீப். “இவன் அந்த சாம்பவியோட தாய்மாமாவாம் பல்லவி தான் சொன்னாள். இந்த ஊரோட பஞ்சாயத்து தலைவராம்” என்றான் திலீப்.
“தாய்மாமா வா இவன் கூட” என்று பற்களைக் கடித்த ரஞ்சித்திடம், “அமைதியா இரு” என்றான் ராகவ். “என்னடா ஏதோ சொல்ல வந்துட்டு அமைதியா இருக்கீங்க” என்ற திலீப்பிடம், “நீ இனிமேல் முடிஞ்ச அளவு பல்லவி கூடவே இருடா” என்றான் ராகவ்.
“ஏன் டா” என்ற திலீப்பிடம், “சொல்லுறதை செய்யேன்டா” என்ற ரஞ்சித் ராகவ்வை அழைத்துக் கொண்டு சென்றான்.
“என்ன யோசனை” என்ற ரஞ்சித்திடம், “எனக்கு என்னவோ இந்த கல்யாணத்தில் இவனும், சாம்பவியும் எதுனாலும் பிரச்சினை பண்ணுவாங்களோனு தோனுது” என்றான் ராகவ்.
(…அடியே…)