பிறகு, பத்திரிக்கையை வைத்த இருவரும், “கண்டிப்பாக கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடனும். ஏதாவது சாக்கு சொல்லி வராமல் இருந்திடாதடா” என்று உரிமையாக பாரிவேந்தனிடம் கூறினர்.
“அது எப்படிடா வராமல் இருப்பேன். என்னுடைய ரெண்டு பெஸ்ட் பிரண்ட்ஸ்க்கு கல்யாணம் நான் வராமல் இருப்பேனா..” என்றவாறு அவன் அவர்கள் கொடுத்த பத்திரிக்கையை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ பாரிவேந்தனை ஒரு நொடி பார்த்தவள், “ம்ம்” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
அரவிந்திற்கு இனியாளிடம் பேசவே முகம் இல்லை. என்ன தான் அவன் இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், இனியாளையும் யாழ் நிலாவையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் செய்த தவறு அவன் கண் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது.
ஆகையால், எதுவும் பேசாமல் அப்படியே வெளியேறி விட்டான்.
பாரி வேந்தன் அவர்களை அனுப்புவதற்காக வாசலுக்கு வரவும் விதுஷா, “என்ன பாரி இன்னும் அவங்ககிட்ட நீ உண்மையை எல்லாம் சொல்லலையா?”.
“அவ படிப்பு முடிஞ்சதும் எல்லாமே நடக்கும். இன்னும் கொஞ்சம் நாள் தானே”.
பாரிவேந்தனுக்கும், இனியாளிற்கும் திருமணம் நடந்து விட்டால் தன் குற்ற உணர்ச்சி தீர்ந்துவிடும் என்று எண்ணிய அரவிந்தும், “ஆமா டா விது சொல்றது சரி தான். ரொம்ப நாள் இந்த விஷயத்தை இழுத்துகிட்டே இருக்காத.. சீக்கிரமா அவங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லு அவங்களும் உன்னை புரிஞ்சுப்பாங்க. ஆன்ட்டிக்காகவாவது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்” என்று விட்டு இருவரும் அங்கிருந்து விடை பெற்று சென்றனர்.
இத்தனை நாட்களும் விதுஷா தன் காதலை ஏற்க வேண்டுமே, அவளை கரம் பிடிக்க வேண்டுமே என்ற எண்ணத்திலேயே சுற்றிக் கொண்டிருந்த அரவிந்தின் மனம் சமீபமாக குற்ற உணர்ச்சியில் மறுக தொடங்கியது.
அதிலும், பாரிவேந்தன் இவனிடம் பரிவாக பேசும் பொழுதெல்லாம் இவனுக்குள் அத்தனை குற்ற உணர்ச்சி. அதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக பாரிவேந்தனை தவிர்க்க தொடங்கி விட்டான்.
அவர்களை அனுப்பி வைத்துவிட்டு இவன் வீட்டிற்குள் நுழையவும் முத்துலட்சுமி, “பாரி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”.
அவர் எதைப் பற்றி பேசப் போகிறார் என்பது இவனுக்கு மட்டும் தெரியாதா என்ன..
“சொல்லுங்கம்மா” என்றவாறு அவர் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
“எப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க?”.
சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்தை கூறிவிட்டார்.
அவரை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், “பண்ணிக்கலாம் மா இப்ப என்ன அவசரம்?”.
“என்ன அவசரமா? உனக்கு வேணும்னா அவசரம் இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு அவசரம் தான். எனக்கு மட்டும் என் பேரப்பிள்ளைகளை பார்க்கணும்னு ஆசை இருக்காதா.. ஏதோ யாழ்நிலா இருக்கிறதால் அவளை பாத்துகிட்டு என் ஆசையை தீர்த்துக்கிட்டு இருக்கேன். அதுக்காக எனக்குன்னு பேர பிள்ளைகள் வேண்டாமா?”.
இனியாளும் அருகில் தான் குழந்தையுடன் நின்று இருந்தாள். அவளில் தன் பார்வையை பதித்து மீண்டவன், “எல்லாம் நடக்கும் போது நடக்கும் மா.. நீங்க ப்ரீயா விடுங்க” என்றான் அவரை சமாதானப்படுத்தும் முனைப்போடு.
“இங்க பாரு இனியாள் நான் உன்கிட்ட அப்போவே சொன்னேன்ல.. இவன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் இப்படித்தான் பண்ணுவான். நானும் எத்தனை வருஷமா இவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு கேட்டுட்டு இருக்கேன் தெரியுமா.. சரின்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறான்” என்று வருத்தமாக இனியாளிடம் முறையிடவும்.
அவளுக்கோ இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.
“ஏன் டாக்டர் அம்மா தான் ஆசைப்படுறாங்களே அவங்களுக்காக நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல”.
“அப்படி சொல்லுமா.. என்னோட மனசு எல்லாருக்கும் புரியுது. ஆனா, நான் பெத்த பிள்ளைக்கு மட்டும் புரிய மாட்டேங்குது” என்றார் வருத்தமான முகத்தோடு.
‘எனக்கும் பண்ணிக்கணும்னு ஆசை தான். ஆனா, நீ ஒத்துப்பியானு தெரியலையே?’ என்று இனியாளை பார்த்துக் கொண்டே மானசீகமாக அவளிடம் பேசியவன்.
தன் தாயின் கையை பற்றி கொண்டு, “அம்மா நீங்க ஆசைப்படுவதெல்லாம் சீக்கிரமே நடக்கும் சரியா.. தேவையில்லாம அத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்காதீங்க.. டேப்லெட்ஸ் எல்லாம் கரெக்டா போட்டிங்களா?” என்று எது எதுவோ பேசி அவரின் மனதை திசை திருப்பி விட்டான்.
இனியாளும் அதற்கு மேல் இந்த விஷயத்தில் எதுவும் பேசவில்லை. தேவையில்லாமல் அவனின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்க அவள் விருப்பப்படவில்லை.
தனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள் தான்.
வேலை போட்டு கொடுத்திருக்கிறார்கள் தான்.
அதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது அதிக பிரசிங்கித்தனமாக இருக்கும் என்று எண்ணிய இனியாள் அதற்கு மேல் பாரிவேந்தனிடம் எதுவும் கேட்கவில்லை.
நாட்கள் அதோ இதோவென்று வேகமாக உருண்டோட. அரவிந்த் மற்றும் விதுஷாவின் திருமண நாளும் வந்து சேர்ந்தது.
முத்துலட்சுமி அழகிய பட்டுப்புடவையை அணிந்திருந்தவர். இனியாளுக்கும் இந்த திருமணத்திற்காக பட்டுப்புடவை வாங்கித் தருமாறு பாரிவேந்தனிடம் கூறியிருந்தார்.
இனியாள் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்து கூறியும் அவர் விடுவதாக இல்லை.
பாரிவேந்தனை கேட்கவும் வேண்டுமா.. தன் தாயே கூறிய பிறகு விடுவானா அவன். கையோடு அவளை அழைத்து சென்று அவளுக்கு தகுந்தார் போல் தங்க நிறத்தில் அழகிய பட்டுப்புடவையை வாங்கி கொடுத்து விட்டான்.
முத்துலட்சுமியின் அருகில் அவன் வாங்கி கொடுத்த பட்டுப்புடவையை உடுத்தி தயாராக நின்று இருந்தாள் இனியாள்.
யாழ்நிலாவிற்கும் அதே தங்க நிறத்தில் பட்டு பாவாடை சட்டை வாங்கி கொடுத்திருந்தான்.
“யாழ் நிலாவுக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று முத்துலட்சுமி திருஷ்டி கழித்துக் கொண்டு அமர்ந்திருந்த சமயம் தான் பாரிவேந்தன் இவர்களை நோக்கி அதே தங்க நிறத்திலான வேட்டி சட்டையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவனை பார்த்த முத்துலட்சுமிக்கு கண்கள் குளிர்ந்து விட்டது. முதல் முறை தன் மகனை வேட்டி சட்டையில் காண்கிறார். அவருக்குள் அப்படி ஒரு ஆனந்தம்.
“உனக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு பாரி” என்றார் மனமாற.
“தேங்க்ஸ் மா.. விதுஷா தான் இன்னைக்கு கண்டிப்பா இந்த வேட்டி சட்டையில் தான் வரணும்னு சொல்லிட்டா” என்று அனைத்து பழியையும் தூக்கி விதுஷாவின் தலையில் போட்டான்.
இல்லையென்றால் இவர்கள் மூவர் மட்டும் ஒன்று போல் தங்க நிறத்தில் உடை அணிந்து இருப்பதை பார்த்து அவருக்கு ஏதேனும் தவறாக தோன்றி விடுமோ என்ற எண்ணத்தில் தான் இப்படி கூறினான்.
அதன் பிறகு இவர்கள் அனைவரும் கிளம்பி மண்டபத்தை சென்று சேரவும். முத்துலட்சுமி இவர்களுக்கு இரண்டு அடி முன்னே நடந்து செல்ல..
பாரிவேந்தன் வேண்டுமென்றே இனியாள் அருகில் அவளே அறியாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.
இனியாள் கையில் யாழ் நிலாவை ஏந்தியவாறு அவ்விடத்தின் பிரம்மாண்டத்தை மெய் மறந்து பார்த்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
பாரிவேந்தன் தன் அருகில் நடந்து வந்துக் கொண்டிருப்பது அவளுக்கு சற்றும் கருத்தில் படவில்லை.
அப்படியே பட்டிருந்தாலும் அவள் தவறாக எண்ணி இருக்க மாட்டாள் அது வேறு விஷயம்..
பாரிவேந்தன் காரிலிருந்து இறங்கியதும் தன் தாய் அருகில் தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.
இனியாள் தான் குழந்தையுடன் இரண்டு அடி பின்னே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அதன் பிறகு அந்த இடத்தின் பிரம்மாண்டத்தில் லயித்து போனவள் அதை சுற்றி முற்றி பார்த்து கொண்டே வர.
யாரின் கவனத்தையும் கவராதவாறு மெதுவாக நடந்த பாரிவேந்தன் இனியாளின் அருகில் ஜோடியாக அவன் ஆசைப்பட்டது போலவே நடக்க தொடங்கி விட்டான். அவனுக்கே இதெல்லாம் புதிதாக இருந்தது.
‘ஏதோ டீனேஜ் பையன் போல ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்’ என்று தனக்குத்தானே எண்ணியவனுக்கு முகம் பிரகாசித்தது.
மணவறையில் அமர்ந்திருந்த விதுஷா அவனை மேடைக்கு வருமாறு கண்களால் அழைக்கவும்.
முத்துலட்சுமியும் இனியாளும் கீழே அமர்ந்து விட. பாரிவேந்தன் மட்டும் அவர்களை நோக்கி சென்றான்.
“என்னடா ரெண்டு பேரும் ஜோடி போட்டுட்டு வரீங்க” என்று கிண்டலாக கேட்டாள் விதுஷா.
தன் தலையை கோதி வெட்க புன்னகையை சிந்திய பாரிவேந்தன் “அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. நாங்க ஜஸ்ட் எதேர்ச்சையா தான் வந்தோம்”.
அவனை தன் ஒற்றை புருவத்தை ஏற்றி சந்தேக பார்வை பார்த்தவள், “பார்த்தா அப்படி தெரியலையே.. ஏதோ பிளான் பண்ணி ஒரே கலர்ல குடும்பமா டிரஸ் போட்டுட்டு வந்திருக்கிற மாதிரி இருக்கு. அதுவும் ஆன்ட்டிக்கு தெரியாம ஜோடியா வேற அவளோடு நடந்து வர.. என்ன ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட போலருக்கே”.
“சும்மா இருடி இன்னைக்கு உனக்கு தான் கல்யாணம். கொஞ்சமாவது கல்யாண பொண்ணா லட்சணமா வெட்கப்படு” என்றவனோ அரவிந்தின் அருகில் சென்று அவனின் மாலையை சரி செய்தவாறு, “இவள கட்டிக்கிட்டு எப்படி தான் குப்பை கொட்ட போறியோ தெரியல டா” என்றான் கிண்டலாக.
அவனுக்கு பதில் உரைக்க கூட முடியாமல் மெல்லிய சிரிப்போடு அமைதியாக அமர்ந்திருந்தான் அரவிந்த்.
இந்த திருமணத்தில் அவனுக்காக அனைத்தையும் ஓடி ஓடி செய்தது பாரிவேந்தன் தான்.
இவன் அழைக்காமலேயே இவனுக்கு அனைத்து உதவியும் செய்தான். அதை எல்லாம் பார்க்கும் பொழுது அரவிந்தின் மனதிலோ குற்ற உணர்ச்சி டன் கணக்கில் குடியேறிவிட்டது.
உண்மையை கூறப் போனால் பாரிவேந்தனின் முகத்தை கூட எதிர்நோக்க முடியாத அளவிற்கு அவனின் மனம் வெதும்பிக் கொண்டு இருந்தது.
சில சமயம், ‘உண்மையை கூறி மன்னிப்பு கேட்டு விடலாமா?’ என்று கூட எண்ணி இருக்கிறான்.
ஆனால், ‘உண்மைகள் தெரிந்து விட்டால் விதுஷா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டாளே’ என்று எண்ணியவனோ திருமணம் வரையும் எப்படியாவது அமைதி காக்க வேண்டும் என்ற முடிவோடு பாரி வேந்தனிடம் எதையும் கூறாமல் அமைதியாக இருக்கிறான்.
இனிதே விதுஷா மற்றும் அரவிந்தின் திருமணமும் நிறைவடைந்தது.
முத்துலட்சுமி மட்டும் ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் அவ்வபொழுது பாரிவேந்தனை பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவர் அருகில் அமர்ந்திருந்த இனியாளின் பார்வையில் இருந்தும் அவரின் வருத்தம் தப்பவில்லை.
“ஏன் பாரி டாக்டர் கல்யாணம் பண்ணிக்காம இப்படி எல்லாம் மேடமை பீல் பண்ண வைக்கிறார்” என்று எவ்வளவு தடுத்தும் இனியாளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவளை பொருத்த மட்டும் இவர்களிடம் அனைத்துமே இருக்கிறது. படிப்பு, வசதி, திறமை, அழகு என அனைத்துமே பாரிவேந்தனிடம் இருக்கிறது.
அனைத்தும் இருந்தும் அவன் ஏன் திருமணம் செய்து கொள்ள மாட்டேங்கிறான் என்ற சந்தேகம் தான் அவளுக்குள் எழுந்தது.