வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௰௧ (11)

4.7
(19)

அம்பு – ௰௧ (11)

தன் தந்தை விழியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட சந்தோஷ மிகுதியில் வெளியே சென்றவுடன் நேராக உற்சாகத்தோடு விழியை ஆசையாய் கையை விரித்து அணைக்க போன இந்தர்

சட்டென அவள் நிபந்தனைகள் நினைவுக்கு வர அவள் புறமிருந்து கையை இழுத்துக் கொண்டு அவள் பக்கத்தில் தன் தாய் மடியில் அமர்ந்து இருந்த சக்தியை தூக்கி அணைத்த படி

“சக்தி மா.. நீ இனிமே என்னை விட்டு எங்கேயும் போக மாட்ட டா.. என்னோட தான் எப்பவும் இருக்க போற..” கண்களில் நீர்துளி மின்ன சொன்னான் அவன்..

புருவம் சுருக்கி அவன் நடவடிக்கைகளை  பார்த்த விழியோ “என்ன பிருத்வி சொல்றாரு உங்கண்ணன்.. உங்க அப்பா என் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டாரா..?” என்று கேட்க

“கன்டிஷனா? என்ன கன்டிஷன்?” சகுந்தலா கேட்க

“நான் உங்களுக்கு அப்பறமா சொல்றேன் அத்தை..” என்றாள் வில்விழி..

“ஆமா.. விழி.. அப்பா ஒத்துக்கிட்டார்.. ஒரே ஒரு கண்டிஷன்ல மட்டும் ஒரு சின்ன சேஞ்ச்..”

“நான் தான் என் கன்டிஷன்ஸ்ல எந்த சேஞ்சும் இருக்காதுன்னு சொன்னேன் இல்ல..”

“இங்க பாரு.. நீ எப்படிப்பட்ட கண்டிஷனை போட்டேன்னு உனக்கு தெரியும்.. அவர் இறங்கி வந்து எல்லா கண்டிஷனுக்கு ஓகே சொல்லி இருக்காரு.. அதே மாதிரி நீயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம் இல்ல..? அந்த ஆர்ச்சரி அகடமி ஃபுல்லா உன் பேர்ல மாத்த சொன்னே.. அவர் மாத்தறேன்னு சொல்லி இருக்காரு.. ஆனா உன் பேர்லயும் இந்தர் பேர்லயும் சேர்த்து மாத்துறேன்னு சொல்லி இருக்காரு.. மொத்தமா தனியா உனக்கு மட்டும் கொடுக்க அவருக்கு இஷ்டம் இல்ல.. ஏன்னா அந்த அகடமில இந்தரோட இத்தனை வருஷ உழைப்பு இருக்கு.. அதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கிறாரு.. அது தப்பு இல்லையே விழி..”

ப்ருத்வி எடுத்து சொல்ல அவளுக்கும் அது சரி என பட “ஓகே.. இதுக்கு நான் ஒத்துக்குறேன்..” என்றாள்..

இந்தரோ “ஹே… சக்தி.. ஜாலியா நாம எல்லாம் ஒன்னா இருக்க போறோம்..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்

கண்கள் கலங்கிய காரணம் புரியாமல் கண்ணீர் வெளியேற அந்த சிறு குழந்தையோடு சிறு குழந்தையாய் மாறி துள்ளி குதித்து வீடு முழுவதும் சுற்றி வந்தான் இந்தர்..

முதல் முறையாய் அவனை இப்படி சிறுபிள்ளைத்தனமான செயல்கள் செய்து பார்க்கிறாள்.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. எவ்வளவு கம்பீரமாக ஆளுமையோடு மிரட்டிக் கொண்டிருந்தவன் அவன்..

அவன் அடங்கும் ஒரே ஒருவர் அவன் தந்தை மட்டும் தான்.. தனக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மூன்று வருட பிரிவு அவனை எப்படி தலைகீழாய் மாற்றி இருக்கிறது என்று யோசித்து யோசித்து நெகிழ்ந்து போனாள் விழி.. தனக்கான அவனின் காதல் அவளை கொஞ்சம் கர்வமாய் தான் உணர வைத்தது..

அதே மகிழ்ச்சியோடு ஒரு புன்முறுவல் பூத்தபடி அவனும் தன் குழந்தை சக்தியும் சேர்ந்து விளையாடுவதை கண் கொட்டாமல் முழுவதுமாக அவர்கள் ஓடிய இடமெல்லாம் பின் தொடர்ந்து பார்த்து தன்னை மறந்து ரசித்துக் கொண்டே இருந்தாள்..

சக்தியை தூக்கிக்கொண்டு அவளுக்கு விளையாட்டு காட்டுவதற்காக அந்த வரவேற்பறையின் ஒரு மூலையில் இருந்து வண்டி ஓட்டுவது போல ஓடி வந்து வில்விழியும் சகுந்தலாவும் அமர்ந்திருந்த மேஜைக்கு கொஞ்சம் முன்னால் சட்டென நின்று சக்தியை தலைக்கு மேல் தூக்கி உலுக்கவும் சக்தியோ களுக்களுக்கென தன் மழலை சிரிப்பால் அவன் கவனத்தை மொத்தமாய்  தன் புறம் ஈர்த்திருக்க

“ஹா ஹா.. அப்பாவோட ஜாலியா ரைட் பண்றீங்களா? இன்னொரு ரைட் போலாமா?” என்று கேட்டுக் கொண்டே சட்டென விழி பக்கம் பார்வையை திருப்பிட

 அவ்வளவு நேரம் தன்னையும் அறியாமல் அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென அவன் பார்வையை சந்தித்ததும் பார்வையில் ஒரு தடுமாற்றம்..

பட்டென அவன் பார்வையில் இருந்து விழியை அகற்றி வேறு புறம் திருப்ப அவனோ இதழுக்குள் புன்னகைத்தபடி

“நீ என்ன பண்ணாலும் என் மேல உனக்கு இருக்கிற லவ்வை மறைக்கவே முடியாதுடி.. நீயா ஆசைப்பட்டு தான் என்கிட்ட வருவேன்னு சொல்லி இருக்க இல்ல..? வர வைக்கிறேன்டி உன்னை.. இந்த ஆறு மாசத்துல யார் என்ன சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன்னு உன் வாயால சொல்ல வைக்கிறேன்..”

மனதிற்குள் கங்கணம் கட்டிக் கொண்டான் அவன்..

“அப்பாடா.. ஒரு வழியா உங்க அப்பாவே சம்மதிச்சுட்டாருல? இனிமே மலரு..” என்று சகுந்தலா ஏதோ சொல்ல வர

“அத்தை.. என் பேரை நான் வில்விழின்னு மாத்திட்டேன் அத்தை.. வேணும்னா நீங்க விழினு கூப்பிடுங்களேன்..”

அவள் மெதுவாய் சொல்ல “ஏன்.. மலர்விழிங்கற பேரு நல்லா தானே இருந்தது..” சகுந்தலா கேட்க

“ரொம்ப சாஃப்டா இருக்கு அத்தை.. அதான் எல்லாரும் ஈஸியா ஏறி மிதிக்கறாங்க..”

அவள் சொன்னதை கேட்டவர் பெருமூச்சு விட்டு “சரிமா.. உனக்கு அது தான் பிடிச்சிருக்குன்னா விழின்னே கூப்பிடுறேன்.. எல்லாரும் பேசினதெல்லாம் போதும்.. வாங்க முதல்ல சாப்பாடு சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பேசலாம்.. நான் போய் எல்லாம் ரெடி பண்றேன்..” என்று எழுந்தவரை கைபிடித்து தடுத்தாள் விழி..

“இருங்க அத்தை.. எங்க போறீங்க?”

“என்னமா கேள்வி இது..? எங்க போவேன்..? எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கப் போறேன்.. இப்போ உன் மாமனார் வந்துருவாரு.. எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறணும் இல்ல..? நேரத்துக்கு சாப்பாடு சாப்பிடாம பசி அதிகமாயிடுச்சுன்னா அவருக்கு கோபம் வேற அதிகமா வரும்மா.. உனக்கு டயர்டா இருந்தா நீ வேணும்னா ரெஸ்ட் எடுத்துக்கோ.. நான் போய் எல்லாம் செய்யறேன்..”

சொல்லியபடியே மறுபடியும் அவர் எழுந்து கொள்ள அவரை கைப்பிடித்து மறுபடியும் அங்கேயே இருத்தினாள் விழி..

“இல்ல அத்தை.. இனிமே சாப்பாடு எடுத்து வைக்கிறது.. பரிமாறுறது.. எல்லாமே மாமாவும் உங்க பிள்ளைங்களும் தான் செய்வாங்க.. இது மட்டும் இல்ல.. இத்தனை நாள் நாம என்னெல்லாம் வேலை செஞ்சுகிட்டு இருந்தோமோ அது அத்தனையும் அவங்க தான் செய்வாங்க..”

அவள் சொன்னதைக் கேட்டு எதுவும் புரியாமல் சகுந்தலா “என்னம்மா சொல்ற? அவங்க எப்படி செய்வாங்க? அவங்களுக்கு இதெல்லாம் செஞ்சு பழக்கம் இல்லம்மா.. இத்தனை வருஷமா நம்ம தானே செஞ்சுகிட்டு இருக்கோம்.. திடீர்னு அவங்களை செய்ங்கனா அவங்க எப்படி செய்ய முடியும்? உங்க மாமாக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான்..”

“மாமாக்கு தெரியும் அத்தை.. மாமா அந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டாரு..”

“என்ன சொல்ற? எனக்கு புரியல..”

விழி தன் நிபந்தனைகளை அவளிடம் கூற “இல்லம்மா.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. இத்தனை வருஷமா இந்த வேலையெல்லாம் நான் தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. அவருக்கு இதெல்லாம் ஒன்னுமே தெரியாது.. அவங்களால சமாளிக்க முடியாது விழி.. இதை பாரு.. இந்த கண்டிஷன் எல்லாம் நீ உன்னோட வச்சுக்கோ.. உங்க மாமாக்கு வேண்டியது எல்லாம் நான் தான் செய்வேன்..”

“ஓ அப்படியா அத்த.. நீங்களே செய்ங்க.. ஆனா நான் இந்த நிமிஷமே என் குழந்தையை தூக்கிட்டு இந்த வீட்டை விட்டு வெளிய போறேன்.. நான் இங்க இருக்க மாட்டேன்.. நான் உங்க புள்ளையோட சந்தோஷமா வாழணும்னு நினைச்சீங்கன்னா நீங்களும் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. இந்த ஆறு மாசம் இந்த வீட்ல அவங்க தான் வேலை செய்வாங்க.. என்ன அத்தை..? அவங்களுக்கு வராது வராதுன்னு சொல்றீங்க.. நம்ம எல்லாம் மட்டும் என்ன.. பிறக்கும்போதே சமையல் வேலை தெரிஞ்சிக்கிட்டா பொறந்தோம்..? ஒவ்வொரு வேலையும் தட்டு தடுமாறி கத்துக்கிட்டு தானே செய்றோம்.. அவங்களும் கத்துக்கிட்டு செய்வாங்க..”

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து இந்தர் பக்கம் திரும்பிய சகுந்தலா “என்னடா இதெல்லாம்?” என்று கேட்க

சகுந்தலா அருகே வந்து மண்டியிட்ட ப்ருத்வி “அம்மா நீங்க  நிறைய உழைச்சுட்டீங்கமா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. நானும் இந்தரும் எல்லா வேலையும் பார்த்துக்கிறோம்.. ஆறு மாசம் தானே மா.. அதெல்லாம் செஞ்சுக்குவோம்மா.. அப்பா கூட ஒத்துக்கிட்டாருமா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. நாங்க பாத்துக்கிறோம்.. நீங்க மகராணி மாதிரி கால் மேல கால் போட்டு உட்காருங்க.. சரியா?”

சகுந்தலாவோ கலங்கிய முகத்துடனே “எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா படல.. என்னவோ பண்ணுங்க.. நான் போய் உங்க அப்பாவை சாப்பிடவாவது கூட்டிட்டு வரேன்..”

“ஏன்மா நாங்க கூப்பிட மாட்டோமா? எங்களுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நீங்க எதுக்கு வரீங்க? அப்பாவை நாங்க கூப்பிடுறோம்.. நீங்க வாங்க..”

சகுந்தலாவை எழுப்பி தோளில் கையணைத்தபடி உணவு மேஜைக்கு அழைத்து சென்ற இந்தர் அவரை அவருடைய இருக்கையில் அமர வைத்துவிட்டு

“இங்கிருந்து நகர கூடாது.. நான் போய் அப்பாவை கூட்டிட்டு வரேன்..”

இந்தர் தன் தந்தையை அழைக்க அறைக்குள் செல்ல

போகும் அவனையே மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்திருந்தாள் வில்விழி..

ப்ருத்வியோ சமையல் அறைக்குச் சென்று ஏற்கனவே சகுந்தலா செய்து வைத்திருந்த உணவு பதார்த்தங்கள் அடங்கிய பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வந்து மேஜை மேல் வைத்து எல்லோருக்கும் சாப்பாட்டு தட்டுகளையும் மேஜையில் அடுக்கினான்..

இந்தர் உள்ளே சென்று தன் தந்தையிடம் விஷயத்தை சொல்லி அழைக்க அவரோ அவனை முறைத்துக் கொண்டே அவனோடு வெளியே வந்தார்..

சகுந்தலாவோ வெளியே வந்தவரை முகத்தில் பெரும் கலக்கத்துடன் பார்த்தவர் இருக்கையில் இருப்பு கொள்ளாமல் நெளிந்தபடியே அமர்ந்திருந்தார்..

சகுந்தலாவின் அடுத்த இருக்கையில் வில்விழி அமர்ந்திருக்க அங்கே வந்த மார்க்கண்டேயன்

“எல்லாரும் உக்காந்து சாப்பிடலாம்..” என்க

“அது எப்படி மாமா? என் கண்டிஷன் நினைவு இருக்குல்ல? நாங்க எப்படி என்னவெல்லாம் பண்ணுனோமோ அதை எல்லாம் அதே மாதிரி தான் நீங்க இப்ப பண்ணனும்.. அதுல எந்த சேஞ்சும் இல்லை.. அப்புறம் எப்படி எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட முடியும்..?”

விழி கேட்ட கேள்வியில் அங்கு இருந்த அத்தனை பேருக்குமே அந்த வீட்டில் உணவு பரிமாறும்போது நிகழும் நிகழ்வு முறை நினைவில் ஓடியது..

திருமணமாகி வந்த புதிதில் தங்கள் வீட்டில் உண்பது போலவே எல்லோரோடும் சேர்ந்து வில்விழியும் மான்விழியும் தங்கள் கணவர்கள் பக்கத்தில் சாப்பாட்டு மேஜையின் முன்னால் உணவருந்த அமர்ந்த போது வெளிப்பட்ட மார்க்கண்டேயனின் வார்த்தைகள்.. இப்போதும் அவள் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு தான் இருக்கிறது..

“இந்த வீட்டில ஆம்பளைங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்ச பிறகு தான் பொம்பளைங்க சாப்பிடணும்.. அவங்க அவங்க புருஷன் என்ன சாப்பிடறாங்க ஏது சாப்பிடறாங்கன்னு பார்த்து பார்த்து பரிமாறனும்.. இந்த வீட்டில பொம்பளைங்க இப்படி தான் இருக்கணும்..”

மான்விழியோ எதுவும் பேசாமல் அடுத்த நொடியே எழுந்து ப்ருத்விக்கு பரிமாறத் தொடங்க

ப்ருத்வி “அப்பா இன்னைக்கு ஒரு நாள் அவங்களும் நம்மளோட சாப்பிடட்டும்பா..  அவங்களுக்கும் கல்யாண களைப்பு இருக்கும்ப்பா..” என்க

அதற்கு மார்க்கண்டேயன் பதில் சொல்வதற்கு முன் மான்விழி

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. நான் உங்களுக்கு பரிமாறுறேன்.. நீங்க சாப்பிடுங்கங்க..” என்றாள்..

அவளை மெச்சுதலாய் பார்த்துக் கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..

வில்விழியோ இந்தரிடம் “இந்தர்.. எனக்கு பசிக்குது.. காலையிலிருந்து கல்யாண டென்ஷன்ல ஒழுங்கா சாப்பிடவே இல்ல.. டின்னர் நல்லா சாப்பிடலாம்ன்னு வந்து உட்கார்ந்தா உங்க அப்பா என்ன இப்படி சொல்றாரு.. எனக்கு பெருங்குடல் சிறுகுடலை தின்னுடும் போல இருக்கு.. ப்ளீஸ் இந்தர்.. இன்னைக்கு ஒரு நாள் நான் சாப்பிட்டுக்கறேனே.. நாளைல இருந்து உங்களுக்கு பரிமாறிட்டு அப்புறம் சாப்பிடுறேன்..”

“இந்தர்.. அது என்ன புருஷனை பேர் சொல்லி கூப்பிடுறது? இந்த வீட்ல இதெல்லாம் வழக்கம் இல்ல.. நாலு சொந்தக்காரங்க முன்னாடி இப்படி பேர் சொல்லி கூப்பிட்டா எங்க மானம் தான் போகும்..” கணீர் குரலில் மார்க்கண்டேயன் சொல்ல

“பேர் வச்சிருக்கிறது கூப்பிட தானே? இப்ப நான் பேர் சொல்லி கூப்பிட்டா நீங்க என்ன ஒரு அடி ஹைட்ல குறைஞ்சு போய்டுவீங்களா இந்தர்?”

அவளும் சளைக்காமல் கேட்க அதைக் கேட்ட மார்க்கண்டேயனோ இந்தரை பதில் சொல்ல கூட விடவில்லை

“மலர்..  இந்த வீட்டில இத்தனை வருஷமா இப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு.. இனிமேலும் இப்படித்தான் நடக்கும்.. பேர் சொல்லி கூப்பிடறது மட்டும் இல்ல வீட்டு வேலை சாப்பாடு எல்லாத்துலயும் இந்த வீட்ல என்ன வழக்கமோ அதை தான் ஃபாலோ பண்ணணும்.. ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட இந்த முறையை மாத்துறதுக்கு யாருக்கும் அனுமதி கிடையாது.. புருஷனை சாப்பிட உட்கார வெச்சு சாப்பாடு போடறதுலருந்து அவன் கை கழுவிட்டு வந்ததும் அவனுக்கு கை தொடைக்க டவல் கொடுக்குற வரைக்கும் எல்லாத்தையும் செஞ்சிட்டு தான் பொண்டாட்டிங்க சாப்பிடலாம்.. இந்த வீட்ல வழி வழியா இப்படித்தான் நடந்துட்டு இருக்கு.. இதை மாத்த நினைக்கிறவங்களுக்கு இந்த வீட்ல இடம் கிடையாது..”

அவர் நிர்தாட்சண்யமாக சொன்னதை கேட்டு அதிர்ந்த வில்விழி இந்தரை கேள்வியாய் பார்க்க அவனோ “மலர்.. என்னால அப்பாவை எதிர்த்து எதுவும் பேச முடியாது.. இந்த வீட்ல அப்பாவை மீறி யாரும் நடந்துக்க மாட்டோம்.. கொஞ்சம் பசியை பொறுத்துக்கிட்டு எனக்கு பரிமாறிடேன்.. அப்புறமா நீ சாப்பிடு.. நான்  வேகமா சாப்பிட்டுடுவேன்..”

வில்விழியோ கண்களில் ஏமாற்றத்துடன் எழுந்தவள் அவனுக்கு உணவை பரிமாற தொடங்க..

“மலர்.. ஃப்ரிட்ஜில ஐஸ் வாட்டர் இருக்கும்.. எனக்கு கொஞ்சம் ஐஸ் வாட்டர் வேணும்.. எடுத்துட்டு வரியா?”

இந்தர் கேட்க ஏற்கனவே அங்கே நின்று பரிமாறவே அவள் சிரமப்பட்டு கொண்டிருக்க அவளை குளிர் நீர் எடுத்து வர சொல்லி அவன் சொன்னது அவள் கோபத்தை இன்னும் கிளறி இருந்தது..

உள்ளே சென்று ஜன்னல் பக்கம் வெறித்து பார்த்து நின்று கொண்டிருந்தவள் வாய்க்குள் அவனுக்கு சரமாரியாய் முணுமுணுவென அர்ச்சித்தப்படியே குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்தாள்..

அதே நேரம் சமையலறைக்குள் வந்த சகுந்தலா “அம்மாடி மலரு.. இந்தா.. இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுக்க.. கொஞ்சம் பசி அடங்கும்.. சாப்டுட்டு தண்ணி எடுத்துட்டு வா.. நான் உங்க மாமாவை சமாளிச்சுக்கிறேன்..” என்றார் அவளிடம் ஒரு வாழைப்பழத்தை நீட்டியபடி..

“ஏன் அத்தை.. பசிச்சா இந்த வீட்ல சாப்பிட கூட கூடாதா? அதுக்கு கூட நமக்கு உரிமை கிடையாதா? என்ன அத்தை வாழ்க்கை இது? உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டதை நெனச்சு இப்ப நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்..”

“இல்லம்மா.. என் பையன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்.. இந்தர் ஒரு நாளும் அவங்க அப்பாவை மீறி நடந்துக்க மாட்டான்.. அவரை எதிர்த்து வாக்குவாதம் பண்ணவும் மாட்டான்.. ஆனா அவனுக்கு உன் மேல ரொம்ப அன்பும் அக்கறையும் இருக்கு.. இப்போ இந்த வாழைப்பழத்தை எடுத்துட்டு வந்து உன்கிட்ட கொடுத்து இருக்கேன் இல்ல..? இது நானா கொடுக்கிறேன்னு நினைச்சியா? இல்லடா.. உன்னை உள்ள அனுப்பிட்டு என்னை கூப்பிட்டு இதை கொண்டு வந்து உன்கிட்ட கொடுக்க சொன்னான்.. நீ அவனை தப்பா நினைக்காத.. அவன் இப்படித்தான்.. உன் விஷயத்துல மட்டும் இல்ல என் விஷயத்திலயும் இப்படித்தான்.. ப்ருத்வியாவது அவங்க அப்பாவை எதிர்த்து ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுவான்.. இவன் என்னைக்குமே அப்படி பேசினது இல்ல.. ஆனா இப்ப இதோ உன் பசியை போக்க வழி பண்ண மாதிரி எனக்கும் அவருக்கு தெரியாமல் ஏதாவது செஞ்சுகிட்டு தான் இருப்பான்..”

அந்த வாழைப்பழத்தை கையில் எடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்வு.. தன் மனைவிக்கான காதல் அன்பை கூட மறைத்து வைத்து காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு..

தன் தந்தையின் மீது வைத்திருக்கும் மரியாதை தன் மனைவி மேல் வைத்திருக்கும் காதல் இரண்டையும் விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் அவஸ்தை படுவது அவளுக்கு புரிந்தது..

ஆனாலும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. கொஞ்சம் சிரமப்பட்டு அந்த நிகழ்வை விழுங்கினாள் அவள்..

ஆனால் அந்த வீட்டில் இதே போன்ற பல சின்ன சின்ன அடக்குமுறைகளை விழுங்கிக்

கொள்ளத்தான் வேண்டி இருந்தது அதன் பிறகும்..

அன்றிரவு அவர்களுக்கு நடந்த முதல் இரவில் அந்தக் கோபத்தை பிரதிபலித்திருந்தாள் வில்வழி..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!