அக்ஷ்ரா வேதவள்ளியை மேலிருந்து கீழ் வன்மமாக பார்த்தவளின் பார்வை இறுதியில் அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கையில் நிலைத்தது.
“ஹாப்பி மேரீட் லைஃப் வேதவள்ளி” என்றவள் தன் நெற்றியை லேசாக தேய்த்து யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டே, “ஆமா, நீங்க ரெண்டு பேரும் எத்தனை மாசமா லவ் பண்றீங்க?” என்று சட்டென்று கேட்கவும்.
இத்தகைய கேள்வியை எதிர்பாராத வேதவள்ளியோ தடுமாறிப் போனாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவள் திருதிருவென விழிக்கவும்.
அவளை பார்த்த சூர்யா, “இவள ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததுல இருந்து” என்றான் வேதவள்ளியை பார்த்துக்கொண்டே.
அவனின் பதிலில் இவளும் அவனை பார்க்க.. இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன.
அது அக்ஷ்ராவிற்கு எரிச்சலை கொடுக்க, “வெல், சூர்யாவை பத்தி எனக்கு ரொம்பவே நல்லா தெரியும். அவனை பத்தி முழுசா.. தெரிஞ்ச முதல் பொண்ணு நான் தான்” என்று சற்று அழுத்தமாக அவள் கூறவும்.
வேதவள்ளி அவள் கூறுவதை புரியாமல் பார்த்தாள் என்றால், சூர்யாவோ தன் நெருப்பை கக்கும் விழிகளால் அவளை முறைத்து பார்த்தான்.
அக்ஷ்ராவின் அருகில் நின்று இருந்த பிரேமோ சூர்யாவை பார்த்து நக்கலாக புன்னகைத்துக் கொண்டே நின்றிருந்தான்.
அவள் கூறுவதன் அர்த்தம் புரியாத வேதவள்ளி அவள் எதையோ கூறுகிறாள் என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டு நின்றாள்.
“உனக்கு சூர்யாவை பத்தி ஏதாவது டவுட்ஸ் இருந்தா எப்ப வேணும்னாலும் என்னை காண்டாக்ட் பண்ணி கேளு.. உனக்காக எல்லாமே நான் சொல்லித் தருவேன். அண்ட் ஆல்சோ, சூர்யாவை பத்தி முழுசா தெரிஞ்ச பொண்ணு என்பதால் அவனை எப்படி ஹாண்டில் பண்றதுன்றதும் எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு சூர்யா விஷயத்துல என்ன டவுட்னாலும் என்னை க்ண்டாக்ட் பண்ணலாம்” என்று அவள் அர்த்தமாக கூறவும்.
பாவம், அவள் கூற வருவதன் அர்த்தம் தான் வேதவள்ளிக்கு புரியாமல் போனது.
அவளுக்கு சம்மதமாக வேதவள்ளி தலையசைக்கவும். அதை பார்த்த சூர்யாவிற்கு கோபம் தலைகேற வேதவள்ளியின் கையில் மீண்டும் அழுத்தத்தை கொடுத்தவன், “நோ நீட்! அப்படி உங்ககிட்ட கேட்டு என்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இவளுக்கு என்னைக்குமே வராது. ஷி நோஸ் மீ வெரி வெல்.. அதே போல எனக்கும் இவளை பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். அதனால தான் பார்த்த கொஞ்ச நாளிலேயே இவ மேல எனக்கு உண்மையான காதல் வந்துச்சு. அண்ட் ஆல்சோ, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல்..” என்றான் அழுத்தமாக.
அதில் அவளுக்கு முகம் கருத்து விட.. அவனை முறைத்து பார்த்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள். பிரேமும் இருவரையும் முறைத்து பார்த்து விட்டு செல்ல.
வேதவள்ளியோ பாவமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு அவன் அழுத்தமாக தன் கையை பிடித்திருப்பதை பார்த்தவள், அப்படியே திரும்பி அவனையும் பாவமாக பார்த்து வைத்தாள்.
அவளுக்கு அவனின் அழுத்தம் நிச்சயமாக வலியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
அவனிடம் இருந்து அவன் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை உருவிக்கொள்ள முயற்சித்தவாறு நின்றிருந்தாள்.
அவளின் நிலையை உணர்ந்த சூர்யா தன் அருகில் நின்று இருந்த ராம்குமாரிடம், “கொஞ்ச நேரம் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரோம் டா” என்றவாறு வேதவள்ளியின் கையை பற்றி தன்னோடு அழைத்துக் கொண்டே அறைக்குள் சென்றான்.
அறைக்குள் சென்ற பிறகு தான் அவளின் கையையே அவன் விட்டான்.
‘என்ன இது கைக்குள்ள இருந்து கலகலன்னு எலும்பு நொறுங்கின சத்தம் எல்லாம் கேக்குதே’ என்றவாறு தன் கையை மெதுவாக தூக்கி பார்த்தவளுக்கு இன்னமுமே வலித்துக் கொண்டு தான் இருந்தது.
சூர்யாவோ கோபமாக அறைக்குள்ளேயே நடை பயிற்சி செய்தவன். தன் தலையை கோதி கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தவாறு, “ஸ்டுப்பிட்! அறிவு இருக்கா உனக்கு.. அவ தான் அவ்வளவு பேசுறானா.. நீயும் சரின்னு அவகிட்ட தலையை ஆட்டுற” என்று சட்டென்று வேதவள்ளியை சாடவும்.
அவன் எதற்காக தன்னை திட்டுகிறான் என்பது கூட விளங்காமல் அவனை மிரட்சியாக பார்த்தாள் வேதவள்ளி.
‘நாம என்ன பண்ணோம்.. திடீர்னு எதுக்கு இவர் நம்மளை இப்படி திட்டுறாரு?’ என்று நொந்து போய் அவள் நின்று இருக்கவும்.
“எனக்கு வர கோபத்துக்கு.. இனி அவ ஏதாவது சொல்றான்னு சரின்னு மண்டையாட்டு அப்புறம் இருக்கு உனக்கு..” என்றான் தன் பற்களை கடித்துக் கொண்டு.
அவளுக்கு தான் இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே நின்று இருந்தாள்.
அந்நேரம் சரியாக தாத்தா வந்து கதவைத் தட்டி இவர்களை மீண்டும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
‘எப்படியோ தப்பிச்சிட்டோம்’ என்று நிம்மதி பெருமூச்சை விடுவதற்குள்ளாகவே மீண்டும் அவள் கையை பற்றிய சூரியா மேடையில் நின்றான்.
‘என்ன இவரு கையையே விட மாட்டார் போலருக்கே. அதான் ரிசப்ஷன் வச்சாச்சு இனி எல்லாரும் நாங்க லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நம்ப போறாங்க.. இவர் எதுக்காக இப்படி கையை புடிச்சுக்கிட்டே சுத்துறாரு’ என்று அவனிடமிருந்து விடுபட முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டே நின்று இருந்தாள்.
வேதவள்ளியின் அருகில் நின்று இருந்த சீதாவோ ராம்குமாரை தன் பார்வையால் வருடிக்கொண்டு நின்று இருக்க.
ராம்குமார் அவள் தன்னை பார்க்கும் அரவம் உணர்ந்தாலும் பார்க்காதது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாக ரிசப்ஷன் இனிதே நிறைவடையவும் அனைவரும் வீடு நோக்கி புறப்பட்டனர்.
அவளின் உடைகளையும், மேக்கப்புகளையும் களைவதற்கும் ஆட்கள் வந்து அனைத்தையும் சரியாக செய்து விட்டு சென்ற பிறகு தான் வேதவள்ளிக்கு ஆசுவாசமாகவே இருந்தது.
அனைத்தையும் கலைந்து விட்டு டி-ஷர்ட்டும் ட்ராக் பாண்டும் அணிந்தவளுக்கு தூக்கம் கண்ணை கட்டியது. அப்படியே கட்டிலில் விழுந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து ராம் கிளம்ப முனைகையில் அவனின் முன்னே வந்து நின்றாள் சீதா.
“நீ இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க? மணி என்ன ஆகுதுன்னு பார்த்தியா” என்று அவன் சற்று கண்டிப்பான குரலில் கேட்கவும்.
“லேட் நைட் ஆயிடுச்சு ஆட்டோ எதுவுமே கிடைக்கல என்னை கொஞ்சம் ஹாஸ்டல்ல டிராப் பண்ணிடுறீங்களா ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
இந்நேரத்தில் அவளை தனியாக அனுப்புவதும் அவளுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்ந்த ராம்குமார், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. டிரைவரை அனுப்பி வைக்கிறேன் நீ போய் இறங்கிக்கோ” என்றவாறு டிரைவரை அழைக்கவும்.
“ஒன்னும் தேவையில்லை, நீங்க வரர்தா இருந்தா வாங்க.. இல்ல, நான் எப்படியோ போய்க்கிறேன்” என்று தன் முகத்தை திருப்பி கொண்டு நடக்க துவங்கி விட்டாள்.
“சரியான இம்சை எப்படியோ போ” என்று இவனும் முணுமுணுத்துவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவனிடம் கோபித்துக் கொண்டு வந்த சீதா கோபத்தில் வேகமாக நடந்து கொண்டே வாய்க்குள்ளேயே ராமிற்கு திட்டி கொண்டு இருந்தாள்.
“ஓவரா பண்றாரு.. ஒரு பொண்ணு எப்படி அன் டைம்ல தனியா போக முடியும்.. கொஞ்சமாவது ஒரு மனசாட்சி இருக்கா.. டிரைவரை விட்டு அனுப்பி வைக்கிறாராம். அப்புறம் இவர் எதுக்காக இருக்காரு.. இவரால் என்னை டிராப் கூட பண்ண முடியாதா” என்று பொறிந்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளை யாரோ பின் தொடர்ந்து வருவது போல் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள்.
இரண்டு தடியர்கள் அவளின் பின்னோடு நடந்து கொண்டு வர. அவர்களை பார்த்தவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
ஆள் அரவமற்ற வீதியில் நடந்து கொண்டிருக்கிறாள். தன் நடையில் வேகத்தை கூட்டி வேக வேகமாக நடந்தாள்.
அவர்களும் இவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இவளை நோக்கி முன்னேறவும், ஒரு கட்டத்திற்கு மேல் ஓடவே தொடங்கி விட்டாள்.
அவர்களும் இவளின் பின்னோடு துரத்திக் கொண்டே ஓடி வரவும். சீதாவிற்கு கை கால்கள் எல்லாம் பயத்தில் வெடவெடக்க தொடங்கி விட்டது.
வேதவள்ளியை போல் இல்லாமல் இவள் சற்று தைரியமானவள் தான். ஆனாலும், இப்படியான இக்கட்டான சூழலில் தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது என்ற பயம் அவளுக்குள் பிடித்துக் கொண்டது.
“ஏய்! நில்லு” என்றவாறு அவ்விருவரும் அவளை நோக்கி ஓடி வரவும்.
வேகமாக ஓடி வந்து தன் முன்னே எதிலோ மோதி நின்ற சீதா படபடக்கும் இதயத்தோடு உன் விழிகளை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள்.
அவளை காக்க யாரேனும் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அவள் பார்க்க. ஆனால் அங்கே நின்று இருந்ததோ சடகோபன்..
இவளையே பார்த்து கோணலாக புன்னகைத்தவர், “என்ன குட்டி இப்படி ஓடுற?” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றிருப்பவளையே தலை முதல் கால் வரை அழுத்தமாகப் பார்த்தார்.
அவரின் பார்வையே இவளுக்கு அருவருப்பை கொடுக்க.. தன் முகத்தை சுழித்தவள் இரண்டடி பின் நகர்ந்து நின்றாள்.
அந்த அடியார்களும் அவளின் பின்னே வந்து நிற்க. அவளுக்கோ இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை.
“உன் பிரண்டுக்கு தான் ஸ்கெட்ச் போட்டோம். அவ தான் எப்படியோ அந்த பணக்காரனை புடிச்சுட்டாளே.. இனி, அவ பக்கத்துல போக அவன் விடமாட்டான். அந்த பொண்ணு எப்படியோ தப்பிச்சுட்டா மனசே ஆறல. ஆனா, என்ன பண்றது அதான் லட்டு மாதிரி நீ இருக்கியே.. உன்னையாவது மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான் உடனே தூக்கிடலாம்னு வந்துட்டோம்” என்று ஒரு மார்க்கமான குரலில் அவர் கூறவும்.
அவரின் குரலே சீதாவின் ஈரக்குலை வரை நடுங்க செய்தது.
“தேவையில்லாம பண்ணாதீங்க மரியாதையா வழிய விடுங்க” என்று அந்த நிலையிலும் சற்று தைரியமாக தான் பேசினாள்.
“அட.. பரவாயில்லையே.. அந்த பொண்ணு மாதிரி நீயும் பயப்படுவனு பார்த்தால் ரொம்ப தைரியமானவளா தான் இருக்கியே” என்றவாறு அவளின் கையை அவன் அழுத்தமாக பற்றவும்.
அவனிடமிருந்து விடுபட முயற்சித்தவாறு, “கையை விடு” என்று கத்திக் கொண்டே இருந்தாள் சீதா.
அவள் எதிர்பாராத சமயம் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சடகோபன். அதில் நிலை குலைந்து போன சீதா கண்களில் கண்ணீரோடு அங்கிருந்து தப்பிக்க தனக்கு வழி கிடைக்காதா என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“டேய் அவளை வண்டியில் ஏத்துங்கடா” என்று விட்டு சடகோபன் முன்னே செல்ல.
அவர் கூறியதை போலவே சீதாவின் இரு பக்கமும் வந்து நின்ற இருவரும் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏற்ற முற்பட்டனர்.