“நீ சொல்றதும் சரிதான் பா. உன் பேர்ல தீராத பழியை போட்டுட்டு போயிட்டா.. அவ சொல்றது தப்புன்னு அவளுக்கு நிரூபிக்கிற மாதிரி இந்த கல்யாணம் நடந்து போச்சு. கடவுளா பார்த்து தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருக்காருன்னு நினைக்கிறேன். எப்படியோ இனி உன் வாழ்க்கை சரியாயிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு” என்று கூறியவர் திருப்தியோடு தூங்க சென்று விட்டார்.
சூர்யாவும் அறைக்குள் நுழைந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேதவள்ளியை பார்த்தான். அவளையே சற்று நேரம் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு ரிசப்ஷனில் அக்ஷ்ரா இவளிடம் பேசியது ஞாபகம் வந்தது.
தன் பற்களை கோபமாக கடித்தவன், “என்ன பொண்ணு அவளெல்லாம்.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம எப்படி எல்லாம் பேசிட்டா.. இவளுக்கு இன்னும் என்னுடைய பாஸ்ட் பத்தி எதுவும் தெரியாததால் அவ என்ன சொல்லுறானு புரியாம போயிடுச்சு. என் பாஸ்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சு இருந்தா இவ எவ்வளவு ஹர்ட் ஆகி இருப்பா ச்ச…” என்று எண்ணியவனும் அவளுக்கு மற்றைய பக்கம் வந்து படுத்து உறங்கி விட்டான்.
மறுநாள் விடியல் சூர்யாவிற்கு வேதவள்ளியின் முகத்தில் தான் விடிந்தது.
ஆம், அவனின் முகத்திற்கு வெகு அருகாமையில் தெரிந்த வேதவள்ளியின் முகத்தை பார்த்துக் கொண்டே தான் தன் விழிகளை திறந்தான்.
இத்தனை அருகாமையில் அவளை பார்த்தவனிற்கு சட்டென்று மூச்சு முட்டுவது போல் ஆகி விடவும்.
வேகமாக எழுந்தவன் சுற்றி முற்றி பார்த்தான்.
அவளோ தூக்கத்தில் உருண்டு இவன் அருகில் வந்து படுத்து கொண்டு இருந்தாள்.
அவளை முறைத்து பார்த்துவிட்டு எழுந்து குளியலறைக்கு சென்று விட்டான்.
இன்று சூர்யாவிற்கு அலுவலகத்தில் மீட்டிங் எதுவும் இல்லாததால் தாமதமாக சென்றால் போதும் என்று வீட்டிலேயே அமர்ந்து தன் லேப்டாப்பில் ஏதோ வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
வேதவள்ளியோ சுற்றி சுற்றி வந்தவளுக்கு போர் அடிக்கவும், தனக்கு காபியை போடலாம் என கிச்சனுக்குள் நுழைந்தாள்.
தாத்தாவும் அப்பொழுது ஹாலிற்கு வந்து சேர, “தாத்தா நான் எனக்கு காபி போட போறேன் உங்களுக்கும் வேணுமா?”.
“எதுக்குமா நீ இதெல்லாம் செய்ற.. அதான் வீட்ல வேலை செய்ய ஆள் இருக்காங்களே”.
“பரவாயில்ல தாத்தா சும்மாவே உட்கார்ந்து இருக்க எனக்கு போர் அடிக்குது. நானே காபி போட்டு கொண்டு வரேன்” என்று விட்டு நகர போனவள் அங்கே அமர்ந்திருக்கும் சூர்யாவை தயக்கமாக பார்க்க.
“சூர்யா உனக்கும் காபி வேணுமா?” என்றார் தாத்தா.
வேதவள்ளியை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் லேப்டாப்பில் தன் பார்வையை பதித்தவாறு, “ம்ம்.. போட சொல்லுங்க தாத்தா வீட்டில் தண்டமா இருக்கிறதுக்கு இதுக்காவது யூஸ் ஆகட்டும்” என்று வேதவள்ளியை குறைவாக பேசுவது போல் பேசி விட்டான்.
அவனின் வார்த்தை தாத்தாவிற்கு ஒரு மாதிரியாகிப் போக.
அவள் கிச்சனுக்குள் சென்றதும், “ஏன் சூர்யா இப்படி எல்லாம் பேசுற? அந்த பொண்ணு ஹர்ட் ஆகி இருக்கும்”.
“ஆனா எனக்கு என்ன தாத்தா?”.
“என்னப்பா இப்படி எல்லாம் சொல்ற.. அவ உன்ன நம்பி இந்த வீட்டுக்கு வந்து இருக்கா உன் பொண்டாட்டி”.
“போதும் தாத்தா.. திரும்ப இப்படி எல்லாம் அவ முன்னாடி பேசாதீங்க. எங்களுக்குள்ள நடந்தது ஜஸ்ட் ஆன் ஆக்சிடென்ட்.. அவள பத்தி யாரும் தப்பா பேசக்கூடாது என்பதற்காக தான் நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு வெளியில் சொல்லி இருக்கேன். மத்தபடி எனக்கு அவ மேல எந்த ஒரு இன்ட்ரஸ்ட்டும் இல்ல. கொஞ்ச நாள் அவ இங்க இருக்கட்டும். இந்த பிராப்ளம் எல்லாம் கொஞ்சம் சரியானதும் அவளுக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து நானே கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்ற ஐடியாவுல தான் இருக்கேன்”.
அவன் கூறியதை கேட்டு திகைத்த தாத்தா, “என்ன சூர்யா இப்படி எல்லாம் பேசுற?”.
“சாரி தாத்தா நான் பேசுறது உங்களுக்கு ஹர்ட் ஆகும்னு எனக்கு புரியுது. ஆனாலும், உங்களுக்கு பால்ஸ் ஹோப் கொடுக்க நான் விரும்பல. என்னால மேரேஜ் லைஃப்குள்ள நுழைய முடியாது தாத்தா ப்ளீஸ் டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ” என்று விட்டு லேப்டாப்பினோடு அறைக்குள் இடம் பெயர்ந்தான்.
அவனின் மனநிலை தாத்தாவிற்கும் புரியாமல் இல்லை. ஆனாலும், இப்படியே அவனை விட்டு விடவும் அவருக்கு மனமில்லை. அவனின் வாழ்க்கை மாற வேண்டும் என்று எண்ணினார்.
அவர் எண்ணியது பலிக்கும் காலம் வந்துவிட்டது என்று அவர் எண்ணி மகிழ்வதற்குள்ளாகவே இப்படி கூறிவிட்டு போகிறானே என்று செல்லும் அவனின் முதுகையே வேதனையோடு வெறித்துப் பார்த்தார்.
அப்பொழுது அவரின் முன்பு ஒரு காபி கப்பை நீட்டிய வேதவள்ளியை பார்த்தவர், “சூர்யா இப்படி சொல்லிட்டான்னு கவலை படாத மா. சீக்கிரமே அவன் மனசு மாறும்” என்று அவளுக்கு ஆறுதலாக பேசினார்.
“ஐயோ தாத்தா! எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு. நானே என்னை ஆஃபீஸுக்கும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரேனு எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா.. இப்போ அவரே என்னை இந்த வேலையெல்லாம் செய்ய சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு தாத்தா. அவர்கிட்ட இருந்து கை நீட்டி காசு வாங்கிட்டு இப்படி சும்மா உட்கார்ந்து சாப்பிட எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்போ தான் எனக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கு. நான் அவருக்கு போய் காபி கொடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறு அறைக்குள் சென்றாள்.
அவனும் தன் லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் வந்ததை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை.
டேபிளில் அவனின் லேப்டாப்புக்கு அருகே காபி கப்பை வைத்துவிட்டு அவள் நிமிரும் முன்னரே அவனின் கை பட்டு காபி கப் கீழே விழுந்து சுக்கல் சுக்களாக சிதறியது.
பதட்டமாக தன் வாயின் மீது கையை வைத்தவள் அவனை அதிர்ந்து பார்க்கவும்.
தன் கையில் பட்ட காபியை உதறிக் கொண்டே எழுந்தவன், “ஸ்டுப்பிட்.. இடியட்.. கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா.. இப்படி தான் காபி கப்பை கொண்டு வந்து பக்கத்துல வைப்பாங்களா.. அட்லீஸ்ட், சொல்லிட்டு வைக்கணும்ன்ற பேசிக் சென்ஸ் கூட உனக்கு இல்லை” என்று கண்டமேனிக்கு கத்த தொடங்கி விட்டான்.
அவனின் சாடலில் ஏற்கனவே பயந்து போய் நின்றிருந்தவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
“இடியட்! இந்த இடத்தை முதல்ல கிளீன் பண்ணு” என்றான் தன் பற்களை கடித்துக் கொண்டு.
அவளோ குடுகுடுவென கிச்சனை நோக்கி ஓடியவள் ஒரு துணியை கொண்டு வந்து அவ்விடத்தை சுத்தம் செய்தாள்.
“ஒரு காபி கூட ஒழுங்கா போட்டு கொண்டு வந்து கொடுக்க தெரியல இந்த லட்சணத்துல இவ்வளவு பெரிய வீட்டு மருமகள் ஆகணும்னு ஆசை” என்று அவன் ஏதேதோ பேசவும்.
அவனின் உண்மையற்ற சாடலில் அவளுக்கு கண்ணீர் பொலபொலவென கொட்ட தொடங்கி விட்டது.
“நான் ஒன்னும் பணக்கார வீட்டு மருமகள் ஆகணும்னு எந்த ஆசையும் படல” என்றாள் தன் மூக்கை உறிஞ்சியபடி.
“அதான் பார்த்தேனே.. ரிசப்ஷனை அவ்வளவு கிராண்டா பண்றதை பார்த்து நீ வாயை பிளந்துகிட்டு நின்னதை”.
“தப்பா பேசாதீங்க.. நான் ஒன்னும் அப்படி பாக்கல.. இது போல பெரிய பங்க்ஷன் எல்லாம் இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கிடையாது. இவ்வளவு பணம் செலவு பண்ணி பண்றதை நான் இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன். அதனால தான் அப்படி பார்த்தேன்.. நான் ஒன்னும் அலைஞ்சுக்கிட்டு எல்லாம் அப்படி பாக்கல” என்றாள் திக்கித் திணறி.
“முதல்ல வெளியில போ” என்றவனோ அவளை விரட்டாத குறையாக அறையை விட்டு வெளியே துரத்தினான்.
தன் முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்த வேதவள்ளியோ எதுவும் நடக்காதது போல் தாத்தாவின் முன்பு அமைதியாக அமர்ந்து அந்த காபியை பருக துவங்கினாள்.
அவனின் உண்மையற்ற சாடலில் அந்த காபி கூட அவளின் தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.
‘நான் பணத்திற்காக அலைகிறேனா.. பெரிய குடும்பத்து மருமகளாக நான் ஆசைப்படுகிறேன் என்று எப்பொழுது நான் கூறினேன். இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை தானே என் பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர். நான் போய் பணத்திற்காக அலைவது போல் பேசி விட்டாரே’ என்று எண்ண எண்ண அவளின் மனம் ஆறவில்லை.
சூர்யா வேண்டுமென்று தான் அவளிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டான். வேதவள்ளியின் விஷயத்தில் ஆரம்பத்தில் அவள் மேல் மிகவும் கோபமாக தான் இருந்தான்.
ஆனால், அவளுடன் திருமணமான பிறகு அவளின் நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்துக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் வேதவள்ளி அவனை அறியாமலேயே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த துவங்கிவிட்டாள்.
அது மேலும் தொடரக்கூடாது அவள் மனதிலும் தன் மேல் எந்த ஒரு அபிப்பிராயமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவளின் முன்பு கோபம் என்னும் முகமூடியை அணிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.
அவள் சென்றதும் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு தன் முகத்தை அழிந்த துடைத்தவன் மீண்டும் தன் வேலையை தொடர துவங்கி விட்டான்.
சற்று நேரம் பொதுவான விஷயங்களைப் பற்றி தாத்தா வேதவள்ளியுடன் பேசிக் கொண்டிருக்கவும்.
அவளின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யா கூறியதை மறக்க துவங்கியது.
“சரிமா நீ கொஞ்ச நேரம் போய் சூர்யா கூட பேசிட்டு இரு, நான் என் ஃப்ரெண்டுக்கு ஒரு கால் பண்ணனும் பண்ணிட்டு வந்துடறேன்” என்றவாறு அவர் எழுந்து செல்லவும்.
‘அவர் கூட போய் பேசுறதுக்கு நான் சும்மாவே இருந்திடலாம்’ என்றவாறு நொந்து போய் அவள் அமர்ந்திருக்கவும்.
“போ மா சூர்யா கிட்ட போய் பேசிட்டு இரு. அவனே எப்போவாவது தான் ஆபீஸ் போகாம வீட்டில் இருப்பான். அவன் ஆபீஸ் போக ஆரம்பிச்சுட்டான்னா உங்களுக்கு ஸ்பென்ட் பண்ண கூட டைம் கிடைக்காது”.
‘சுத்தம்.. இப்போ தான் திட்டு வாங்கிட்டு வந்தேன். மறுபடியும் பலி ஆடா அவருக்கு என்னை நேந்து விட்ட மாதிரி ரூமுக்கு அனுப்புறாரே’ என்று நொந்து கொண்டே வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாக அவருக்கு சிரித்துக்கொண்டே ‘சரி’ என்பது போல் தலையசைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.
சூர்யா அவளை சற்றும் கண்டுகொள்ளவே இல்லை. அவள் அறைக்குள் வந்ததை உணர்ந்தாலும் தன் வேலையிலேயே மும்முரமாக இருந்தான்.