19. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.8
(100)

தொல்லை – 19

விடியற்காலை எழுந்தவுடன் கதிரும் அஞ்சலியும் குலதெய்வ கோயிலுக்குக் கிளம்பத் தயாரானார்கள்.

சுதாலட்சுமியோ அவர்களுடைய சடங்குகளுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார்.

“அஞ்சலி நான் கொடுத்த பட்டுப் புடவைய கட்டிக்கோம்மா…”

“சரிங்க அத்த..” என்றவள் புடவையை நேர்த்தியாகக் கட்டி அழகாகத் தயாராகி வந்தாள்.

சுதாலட்சுமிக்குத் தெரியாமல் நேற்று கதிருடன் ஒரே அறையில் ஒன்றாக இருந்ததால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அஞ்சலிக்கு சங்கடம் உண்டானது.

சங்கடத்துடன் தன்னவனின் செயலில் வெட்கமும் பிறந்தது.

“அஞ்சலிம்மா… இங்க வா..”

“சொ.. சொல்லுங்க அத்த…”

“நேத்து ரொம்ப கோபப்பட்டு திட்டிட்டேன் மன்னிச்சுடுமா.. தப்பா எடுத்துக்காத.. அந்த நேரத்துல என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல…” என்றார் கதிரின் அன்னை.

“ஐயோ நான் பண்ணது தப்புதானே அத்த… நான்தான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்…” என்றாள் அவள்.

“நீ என்ன விரும்பியா பண்ணின..? விடும்மா.. மதுரா எங்ககிட்ட உண்மைய சொல்லிருக்லாம்.. ஹூம்ம்.. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.. நீ வருத்தப்படாத…

இன்னைக்கு எல்லாம் முறைப்படி நடக்கப் போகுது… இனி நீ குற்ற உணர்ச்சியோட வாழ வேணாம்… நீயும் என் பையனும் சந்தோஷமா இருந்தாலே எனக்குப் போதும்…” என அவர் கூற அஞ்சலியின் முகம் மலர்ந்தது.‌

“சரி சரி பொம்பளைங்க நாமளே ரெடி ஆயிட்டோம்.. என் புருஷனையும் உன்னோட புருஷனையும் இன்னும் காணோம்.. நீ போய் கதிர் ரெடியாகிட்டானான்னு பாருமா..” என்றவர் தன் கணவனைத் தேடிச் சென்றார்.

துரையோ அஞ்சலியின் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன இருந்தாலும் உனக்கு உண்மை தெரிஞ்சதும் நீ என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கணும் முத்து.. நான் கோபப்படுவேன்னு மறைச்சா மட்டும் எல்லா பிரச்சனையும் சரி ஆயிடுமா..? இது நம்ம பசங்க வாழ்க்கை..” என அழுத்தமான குரலில் பேசிக் கொண்டிருந்த துரையோ தன் முன்னே வந்து நின்ற மனைவியின் விழி அசைவில் அமைதியானார்.

“ஏங்க.. உங்க பையன்தான் இத பத்தி பேச வேணாம்னு சொல்லிட்டானே.. இப்போ எதுக்கு நீங்க நடந்து முடிஞ்சதைப் பத்தி கோபமா பேசுறீங்க..? அவனுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான்… அவங்கள கிளம்பி கோயிலுக்கு வர சொல்லுங்க..” எனத் துரைக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினார் சுதாலட்சுமி.

மனைவியின் வார்த்தைகளுக்கு கட்டப்பட்டவராக,

“சரி விடு முத்து… நடந்தது நடந்து போச்சு.. கதிருக்கு அஞ்சலியைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. கிட்டத்தட்ட ஒரு வாரமா புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டாங்க இனி அவங்கள பிரிக்கிறது சரியா இருக்காது.. மதுராகிட்டேயும் பேசியாச்சு.. இன்னைக்கு நம்ம குலதெய்வ கோயிலுக்கு நீயும் தங்கச்சியும் வந்துருங்க.. எல்லா பிரச்சனையையும் சரி செய்யணும்…” என்றார்.

முத்து ஒரு கணம் அதிர்ந்தாலும் துரையின் கூற்றை அவருடைய மனம் ஆமோதித்தது.

உண்மை தெரிந்த பின்பு கூட பிரச்சினையை பெரிது பண்ணாமல் அவர்கள் அஞ்சலியை ஏற்றுக் கொண்டது அவருடைய மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது.

“சரி ஐயா… நாங்க வந்துர்றோம்…” என உறுதியளித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார் முத்து.

கதிரோ பட்டு வேஷ்டி சட்டை அணிந்து தயாராகி நின்றவன் அறைக்குள் நுழைந்த அஞ்சலியை இரசித்தான்.

“வா வா அம்மு… காலைல இருந்து உன்னைப் பார்க்கவே முடியலையே..” அவனுடைய விழிகள் அவளை வருடின.

“அத்த கூட இருந்தேன் மாமா..” என்றாள் அவள்.

“ம்ம் அத்த முக்கியமா..? புருஷன் முக்கியமா..?” எனச் சீண்டினான் அவன்.

“இது என்ன கேள்வி மாமா..?” என்றவளை அவன் நெருங்க அவளோ பின்னால் நகர்ந்தாள்.

அவனுடைய பார்வையில் அவளுக்கோ முகம் முழுவதும் சிவந்து விட்டது.

“இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்குடி.”

“இது அத்த கொடுத்தாங்க மாமா..”

“ஓஹ்… இந்தப் புடவையை விட நேத்து நீ போட்ருந்த நைட்டி இன்னும் ரொம்ப நல்லா இருந்துச்சு..” என கள்ளச் சிரிப்பு சிரித்தவனை முறைத்துப் பார்த்தவள்,

“ஹையோ கோவிலுக்கு போகும் போது என்ன பேச்சுப் பேசுறீங்க..?” என்றாள் வெட்கம் வெடிக்கும் குரலில்.

“ஹா ஹா கூல் அம்மு..” என்றவன் அவளை நெருங்க,

“என்கிட்ட வராதீங்க மாமா..” என்றாள் அவள்.

“அடியேய் எனக்கு நீ வேணும் இப்போ..”

“ஐயோ கோவிலுக்கு போகணும் நான் கீழ போறேன்..”

“ஏய் ஒரே ஒரு கிஸ் கொடுத்துட்டுப் போடி..” என்றான் அவன்.

“சீ போங்க மாமா..” என்றவள் சிறு சிரிப்போடு வாயிலை நோக்கிச் செல்ல,

“இப்போ மட்டும் நீ கிஸ் கொடுக்கலைன்னா அப்படியே அந்த பால்கனில ஏறி நின்னு கீழ குதிச்சிடுவேன்..” என விளையாட்டாக கூறினான் அவன்.

நடுங்கிப் போய்விட்டாள் அவள்.‌

அவளுடைய முகம் நொடியில் மாறிப்போனதைக் கண்டதும் தன்னுடைய விளையாட்டை கை விட்டவன் வேகமாக அவளை நெருங்கி வந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டான்.

அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழியத் தொடங்கியது.

“ஹேய் அம்மு.. என்னம்மா..?”

“ஏங்க இப்படி அபசகுனமா பேசுறீங்க..?” என்றவளுக்கு அழுகையில் உதடுகள் துடித்தன.

“ஏய் அது ஃபன்னுக்கு சொன்னேன் டி..”

“நான்தான் நேத்தே உங்ககிட்ட சொன்னேன்ல.. நான் இதுவரைக்கும் எதுக்குமே ஆசைப்பட்டது இல்ல.. ஆனா இப்போ உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்.. இப்படி எல்லாம் பேசாதீங்க மாமா.. எனக்கு கஷ்டமா இருக்கு.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிஷம் சத்தியமா நான் செத்துருவேன்..” என அழுதவாறு கூறியவளை பார்த்து அதிர்ந்து விட்டான் அவன்.

அவளுடைய வார்த்தைகள் அவனை உறைய வைத்தன.

“பைத்தியமா நீ..?” என அதட்டியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி இதெல்லாமா பெருசா எடுத்துப்ப..?” என கடிந்து கொண்டவன் அவளுடைய விழிகளைத் துடைத்து விட்டான்.

அவளோ தன்னவனை ஆழ்ந்து பார்த்தவள், அவனுடைய கன்னக்களைப் பற்றிக் கொண்டாள்.

“என்கிட்ட இனி விளையாட்டுக்கு கூட இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. கஷ்டமா இருக்கு.. நீங்க எப்பவும் நல்லா இருக்கணும்…” என்றவளை அதிகம் பிடித்துக் கொண்டது அவனுக்கு.

“சரிங்க மேடம்.. இனி விளையாட்டுக்கு கூட இப்படி பேச மாட்டேன் போதுமா..?” என அவள் முன்பு கைகட்டி குனிந்து சொன்னவனைப் பார்த்துச் சிரித்தவள் தன் கூச்சத்தை விடுத்து மெல்ல அவனுடைய கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள்.

அந்த ஒற்றை முத்தத்தில் சொக்கித்தான் போனான் அவன்.

அவளுடைய புடவையை சற்றே விலக்கி பளிச்செனத் தெரிந்த அவளுடைய வெற்று இடையில் தன் கரத்தைப் படர விட்டவன் அவளுடைய இதழ்களை நோக்கிக் குனிய,

அவனுடைய தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“இப்போதைக்கு இது போதும்.. அத்த தேடப் போறாங்க.. நான் கீழ போறேன்..” எனத் திரும்பியவளின் இடையை அழுத்தமாகப் பிடித்து அவளை தன்னை நோக்கி திரும்பச் செய்தவன்,

“இன்னைக்கு உங்க அப்பாவும் அம்மாவும் கோயிலுக்கு வருவாங்க. அவங்ககிட்ட எல்லா உண்மையும் அப்பா சொல்லி எல்லாத்தையும் பேசி முடிச்சிருப்பாரு.. நீ எதுக்கும் பயப்படாத…” என்றான்.

“சரி மாமா..”

“ஹாங் அப்புறம் நாளைக்கு நாம சென்னை போறோம்.. உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடு..” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.

“என்ன மாமா சொல்றீங்க..? சென்னை போகணுமா..? ஏன் சென்னை போகணும்..?” எனக் கேட்டவளின் நெற்றி முட்டிச் சிரித்தவன்,

“அடிப்பாவி என்னோட ஆபீஸ் வேலை எல்லாமே சென்னைலதான் இருக்கு.. இது எதுவுமே உனக்குத் தெரியாதா..?” என அவன் வியப்பாகக் கேட்க,

“இல்லையே..” என மறுத்து தலையசைத்தாள் அவள்.

“சரிதான்.. என்னப் பத்தி உனக்கு முழுசா எதுவும் தெரியல போல.. சென்னை வந்து பாரு.. உன் மாமனைப் பார்த்து அசந்து போயிடுவ..” என்றவன் அவளை விடுவித்தான்.

“இப்பவும் அசந்துதான் போயிட்டேன்..” என்றவள் சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

******

குலதெய்வ கோயிலுக்கு முத்துவும் சீதாவும் வந்து சேர்ந்தனர்.

சுதாலட்சுமியோ இன் முகத்தோடு அவர்களை வரவேற்றார்.

முத்துவும் சீதாவும் துரையிடமும் சுதாலட்சுமியிடமும் வந்த உடனேயே மன்னிப்பை யாசித்தனர்.

துரையோ அவர்களைப் பார்த்து “முத்து… இனி இதைப் பத்தி பேசி மனசை கஷ்டப்படுத்திக்க வேணாம்… மதுரா அவசரப்பட்டு தப்பான முடிவை எடுத்துட்டா.. அஞ்சலி நல்ல பொண்ணு… அவளோட வாழ்க்கையை நாம முழு மனசோட ஆசீர்வதிக்கணும்…” என்றார்.

சுதாலட்சுமியோ “சம்மந்தி… நீங்க கவலைப்படாதீங்க… இனி எல்லாம் நல்லதா நடக்கும்…” என ஆறுதல் கூறினார்.

சீதாவின் முகத்தில் தெரிந்த சங்கடத்தை உணர்ந்து கொண்ட சுதாவோ அவரைத் தன் இயல்பான பேச்சினால் சமன் செய்து விட, சடங்குகளோ ஆரம்பித்தன.

ஐயர் மந்திரங்கள் ஓத அஞ்சலியின் கழுத்தில் கதிர் மஞ்சள் கயிற்றை மூன்று முடிச்சுகளுடன் மீண்டும் கட்டினான்.

சீதாவின் விழிகள் கண்ணீரை பொழிந்தன.

அஞ்சலியின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என நினைத்த அந்தத் தாயின் உள்ளம் மகிழ்ந்தாலும் மதுராவை நினைத்து வருத்தமும் கொண்டது.

தவறே செய்தாலும் மதுரா அவருடைய மகள் அல்லவா..?

சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.

அஞ்சலியின் கண்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்தன.

குங்குமத்தை எடுத்து அவளுடைய நெற்றியில் வைத்தவன்,

“இப்போ சந்தோஷமா பொண்டாட்டி..?” எனக் கேட்டான்.

“ஆமா மாமா…” என மெல்ல முனகினாள் அவள்.

பின்னர் ஐயர் தாலியைப் பிரித்து தங்கத்தில் கோர்க்கும் சடங்கை முறைப்படி செய்தார்.

சுதாலட்சுமியும் துரையும் முத்துவும் சீதாவும் அவர்களை ஆசீர்வதித்தனர்.

கதிரோ அஞ்சலியின் கரத்தைப் பற்றியவன் “இனி எல்லாம் நல்லதா நடக்கும் அம்மு…” எனக் காதலோடு கூறினான்.

அஞ்சலியின் மனச் சஞ்சலங்கள் முற்றுமாக அழிந்தே போயின.

“கல்யாணத்தை பதிவு பண்ணிடலாம் பா..” என்றான் கதிர்.

“சரிப்பா ஏற்பாடு பண்றேன்..”

“முடிஞ்சா இன்னைக்கே பண்ணிடுங்கப்பா.. நாளைக்கு சென்னைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்..” என்றான் கதிர்.

“சரிப்பா..” என்ற துரையோ அதற்கான ஏற்பாடுகளை அக்கணமே செய்ய ஆரம்பித்தார்.

இவர்களுடைய சென்னைப் பயணம் எப்படி இருக்குமோ..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 100

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “19. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் . சென்னை போய் இந்த மதுரா பேய் இவனைப் பார்த்து பேராசைப் பட்டு ஏதாவது ஏடாகூடமாக பண்ணிணா அவ்வளவு தான். விஷக் குட்டி பார்த்து நல்லா கதற விடுங்கள் அந்த பணப்பிசாசான சுயநலவாதி மதுராவை. எங்கள் அஞ்சலி செல்லத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.👌👌👌👌👌👏👏👏👏🤩🤩🤩🤩🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!