“உன் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் எந்த இடத்துல நடந்தது?” என்றார் நடுங்கும் குரலில்.
“அது காஞ்சிபுரம்கிட்டனு அம்மா சொன்னாங்க”.
“டேட், வருஷம் ஏதாவது ஞாபகம் இருக்கா?”.
“ம்ம்.. இருக்கு தாத்தா” என்று தன் தந்தை இறந்த தேதியையும் வருடத்தையும் அவள் கூறவும் அவர் இடிந்தே போய்விட்டார்.
ஆம், இவளின் தந்தையின் இறப்பிற்கு காரணமே சூர்யாவின் தந்தை தான்.
குடிபோதையில் அவர் வண்டி ஓட்டியதன் விளைவு தான் வேதவள்ளியின் தந்தை எதிர்புறத்தில் வருவதை கவனிக்காமல் இடித்து விட்டார்.
சரியாக அந்நேரம் பார்த்து குறுக்கே வந்த லாரி இவர்கள் இருவரின் வண்டியையும் அடித்து தூக்க அனைவருமே சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போயினர்.
அவள் கூறியதை கேட்டு தாத்தாவிற்கு நிலை கொள்ள முடியவில்லை. சூர்யாவிற்கும் தாத்தாவை போல அனைத்தும் விளங்கியது.
அவர் தடுமாறுவதை உணர்ந்தவன் அவர் அருகில் வேகமாக வந்து பிடித்துக் கொண்டான், “தாத்தா ரிலாக்ஸ்.. ஒன்னும் இல்ல, இங்க பாருங்க” என்று அவரை சமாதானம் செய்ய முயற்சித்தான்.
வேதவள்ளிக்கு சூர்யாவை இங்கே கண்டதும் பயம் தொற்றிக் கொண்டது.
‘எங்கே தன் தாய் தந்தையின் இறப்பை பற்றி நான் கூறியதை கேட்டு தான் அவர் உணர்ச்சிவசப்பட்டு இப்படி ஆகிவிட்டதோ’ என்று எண்ணி பயந்து போனவள் படபடத்து போய் நின்று இருந்தாள்.
“வேதா தாத்தாவுக்கு தண்ணி கொண்டு வா சீக்கிரம் போ..”.
அவனுக்கு ‘சரி’ என்று வேகமாக தலையசைத்தவள் குடுகுடுவென வீட்டிற்குள் சென்று குவளையில் தண்ணீரை கொண்டு வந்தாள்.
அதை அவரை குடிக்க செய்தவர்கள் அவரை சற்று ஆசுவாசப்படுத்தவும்.
வேத வள்ளிக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை. கைகளை பிசைந்து கொண்டு பரிதவிப்பாக நின்றிருந்தாள்.
‘வயதானவர் தன் கதையை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு இப்படி ஆகிவிட்டார்’ என்று எண்ணி வருந்தியவள்.
“சாரி தாதா நீங்க கேட்டீங்களேன்னு தான் நான் சொன்னேன்” என்றவள் சூர்யாவையும் பார்த்து, “சாரி” என்றாள் பரிதவிப்பான குரலில்.
தொட்டதற்கெல்லாம் தன்னை திட்டிக் கொண்டே இருப்பவன் இப்பொழுது என்ன சொல்லப் போகிறானோ என்று அவளுக்குள் படபடப்பாக தான் இருந்தது.
ஆனால், அவள் நினைத்ததற்கு நேர் மாறாக அவளை எதுவுமே சொல்லாதவன் தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்று விட்டான்.
அறைக்குள் சென்ற தாத்தா, “சூர்யா அந்த பொண்ணு என்ன சொன்னா தெரியுமா.. அவளுடைய அப்பாவோட சாவுக்கு காரணம் உன் அப்பா தான் டா. அன்னைக்கு ஆக்சிடென்ட்ல உன் அம்மாவும் அப்பாவும் இறந்தாங்களே அதே ஆக்சிடென்ட்ல தான் அவளுடைய அப்பாவும் இறந்திருக்கார். பாவம், அவங்க வாழ்க்கையே இவ்வளவு கஷ்டத்துக்கு போனதுக்கு நாம தான் காரணம். எனக்கு அதை கேட்டதும் கொஞ்சம் கூட ஜீரணிச்சுக்கவே முடியல. பாவம், எந்த தப்பும் பண்ணாத எத்தனை உயிரை உன் அப்பாவோட குடிப்பழக்கம் பலி வாங்கி இருக்குன்னு பாத்தியா” என்றார் ஆதங்கமாக.
“தாத்தா ரிலாக்ஸ்.. அவ சொன்னது எல்லாத்தையும் நானும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். நீங்க எமோஷனல் ஆகாதீங்க கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க”.
“நல்ல வேளை, அந்த பொண்ண கடவுள் உன் கிட்ட கொண்டு வந்து சேர்த்தார். நம்மால நடந்த தப்பை நாம தான் சரி பண்ணனும். தெரிஞ்சோ தெரியாமலோ எல்லா உண்மையும் நமக்கு இப்ப தெரிஞ்சிடுச்சு. கடவுள் போடுற முடிச்சு எல்லாத்துக்குமே ஒவ்வொரு காரணம் இருக்கும். சம்பந்தம் இல்லாம எதுக்காக வேத வள்ளியை அந்த கடவுள் உன் வாழ்க்கைக்குள்ள கொண்டு வர போறாரு.. இப்ப தெரியுதா அதுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்குனு.. நாம இனி அவளை சந்தோஷமா பாத்துக்கணும்”.
அவனும் அவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவன். அவரிடம் பேசி ஒருவாறு சமாதானம் செய்து அவரை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
வேதவள்ளியோ தன் கைகளை பிசைந்து கொண்டு பரிதவிப்பாக அறையின் வாயிலில் நின்று இருந்தாள்.
அவளை கண்டவன் ‘என்ன’ என்பது போல் அவளை பார்க்கவும்.
“தாத்தா இப்போ சரி ஆகிட்டாங்களா?”.
“ம்ம்.. தூங்கிட்டு இருக்காங்க நீ எதுவும் இப்ப போய் டிஸ்டர்ப் பண்ணாத”.
“இல்ல.. இல்ல.. நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். சாரி, எதேர்ச்சையா தான் பேசிக்கிட்டு இருக்கும் போது என் ஃபேமிலியை பத்தி சொன்னேன். அதை கேட்டு தாத்தா இவ்ளோ எமோஷனல் ஆவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. தப்பு என் மேல தான்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன் மன்னிச்சிடுங்க”.
அவளின் குரலே அவள் பயந்து போய் இருக்கிறாள் என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்தது.
“இட்ஸ் ஓகே.. ஃப்ரீயா விடு” என்று விட்டு அவன் நகர.
அவளோ வருத்தமாக தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
இந்த வீட்டில் அவள் மனம் விட்டு பேசும் ஒரே ஜீவன் தாத்தா தான். தன்னுடைய கதையை கேட்டு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணி குற்ற உணர்ச்சியோடு சுற்றி கொண்டு இருந்தாள்.
அதன் பிறகு அவளுக்கு சாப்பிடவும் தோன்றவில்லை. தாத்தாவை பார்த்து அவரிடம் பேசினால் தான் தன் மனம் சரியாகும் என்ற எண்ணத்தோடு சற்று நேரத்திற்கு ஒரு முறையாவது அறையையே நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள்.
சூர்யாவிற்குள்ளும் அத்தனை உணர்வுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. வேதவள்ளியின் குடும்பமே இப்படி உருக்குலைந்து போனதற்கு தன் தந்தை தான் காரணம் என்பதை கேட்டு அறிந்தவனுக்கு பெரும் குற்ற உணர்ச்சியாகி போனது.
அவர் செய்த தவறை எல்லாம் தன்னால் இனி திருத்த முடியாது. அனைத்தும் தன் கை மீறி போய்விட்டதே என்று எண்ணியவனுக்கு பெரும் வருத்தமாக இருந்தது.
அப்போது தான் வருத்தமான முகத்தோடு அமர்ந்திருக்கும் வேதவள்ளியை பார்த்தவன். அறைக்கு சென்று ஜீன் பேண்டும் டீ ஷர்ட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்து அவள் முன் நின்றான்.
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவள் புரியாமல் பார்க்க.
“வெளியில் போகலாம் வா” என்றான் தன் கையில் இருக்கும் வாட்சை சரி செய்து கொண்டு.
அவன் அழைக்கும் பொழுது மறுக்க முடியாதே.. அவனுக்கு சம்மதமாக தலையசைத்தவள் தானும் வேறு உடைக்கு மாறி அவனுடன் வெளியே செல்ல ஆயத்தம் ஆகி வந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டவனின் கார் சற்று நேரம் அமைதியாக சென்று கொண்டு இருந்தது.
அவனிடம் பேசும் மனநிலையில் அவளும் இல்லை. பேசினாலும் திட்டு தானே கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவள் அவனுடன் பேசுவதையே தவிர்த்து விட்டாள்.
சூரியா அவளின் மனநிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டானே தவிர, அவளை அழைத்துக் கொண்டு எங்கே செல்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.
ராம்குமாரின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தான், “ராம் இங்க இருக்க பீச்க்கு போகலாம் வரியா”.
ராம்குமார் தடுமாறியவாறு, “இல்லை சூர்யா, நான் கொஞ்சம் வெளியில் இருக்கிறேன்”.
“யார் கூட?”.
“அது வந்து.. பிரண்டு கூட”.
“அப்படி யாருடா என்னை விட முக்கியமான பிரண்ட் உனக்கு”.
“இப்ப தான் கொஞ்சம் நாளா பிரண்டா இருக்கோம். உன்னை விட முக்கியம் எல்லாம் இல்ல டா” என்றவன் ‘ஆ’ என்று அலறினான்.
“நான் பீச்ல வெயிட் பண்றேன். நீ யார் கூட வந்திருந்தாலும் சரி மரியாதையா பீச்சுக்கு வர” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
ராம்குமார் இன்று தான் முதல் முறை சீதாவை அழைத்துக் கொண்டு படம் பார்க்கலாம் என தியேட்டருக்கு வந்திருந்தான்.
ஆம், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கி விட்டனர். சீதாவின் துருதுரு பேச்சும், தைரியமும் ராம்குமாரை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது.
தினமும் அவளை அலுவலகத்திற்கு கொண்டு செல்வதும், அழைத்து வந்து விடுவதுமாகவே இருந்தவனின் மனம் சீதாவின் மேல் காதல் வயப்பட.. இருவருமே தங்கள் காதலையும் பகிர்ந்து கொண்டனர்.
இன்று தான் முதல் முறை இருவரும் தங்கள் நேரத்தை தனிமையில் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தோடு வந்திருந்தனர். அதற்கும் சூர்யா ஆப்பு வைத்து விட்டான்.
அழைப்பை துண்டித்த ராம், “ஆஆ.. ஏன் டி கிள்ளுன.. சூர்யா தான் கால் பண்ணான் பீச்சுக்கு வர சொல்றான்”.
“அவரை விட நான் முக்கியம் இல்லைனு சொன்னிங்கல்ல அதான் கிள்ளுனேன். நாமளே இன்னைக்கு தான் தனியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தோம். அதுக்குள்ள உங்க பிரண்டுக்கு மூக்கு வேர்த்துடுச்சு” என்று சீதா சிடுசிடுக்கவும்.
“என் பிரண்ட பத்தி ஏதாவது சொன்ன அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுவிட்டு சற்று நேரம் கழித்து பீச்சை அடைந்தனர்.
அது ஒரு பிரைவேட் பீச் ஏரியா. ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கே தான் சூர்யாவின் கார் சென்று நின்றது.
அவன் காரை விட்டு இறங்கவும் வேதவள்ளியும் இறங்கினாள்.
“இங்க எதுக்கு வந்து இருக்கோம்?”.
“சும்மா தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். நீயும் வீட்ல சும்மா தானே இருக்க.. அதான் உன்னையும் அழைச்சிட்டு வந்தேன்”.
“இப்போ எனக்கு ரிலாக்ஸ் பண்ற மூடு எல்லாம் இல்ல சார். தாத்தாவை பார்த்து பேசணும் அப்போ தான் எனக்கு ரிலாக்ஸ் ஆகும்” என்றவளை சூர்யா முறைத்து பார்க்கவும்.
அவனின் முறைப்பிற்கான காரணம் புரியாமல், “நான் தான் சாரி சொல்லிட்டேனே சார். தெரியாம தாத்தா கிட்ட சொல்லிட்டேன். அவர் இவ்வளவு எமோஷனல் ஆவார்னு நான் நினைச்சு கூட பாக்கல. இனிமே இப்படி பண்ண மாட்டேன் சாரி சார்”.
அப்பொழுதும் சூர்யாவின் பார்வை மாறாமல் அப்படியே இருக்க.
‘சும்மாவே என்னை நல்லா வச்சு செய்வார். இப்ப நானே அதுக்கு ஒரு நல்ல கன்டன்டா எடுத்துக் கொடுத்து இருக்கேன். என்ன எல்லாம் பண்ண போறாரோ’ என்று நொந்து போய் நின்று இருந்தாள்.
“உன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன். சார்னு கூப்பிடாத யாராவது கேட்டாங்கன்னா என்ன ஆகிறது?”.
உடனே அவனுக்கு வேகமாக சம்மதமாக தலையசைத்தாள்.
“என்ன இந்த பீச்ல யாருமே காணும். இன்னைக்கு பீச்க்கு லீவா?” என்றவளை திரும்பி புரியாமல் பார்த்த சூர்யாவை பார்த்தவள், “பீச்னா நிறைய பேர் வருவாங்களே.. யாருமே இன்னைக்கு வரலையே அதான் கேட்டேன்”.
“இது பிரைவேட் பீச் யாரும் வர மாட்டாங்க”.
“ஓ! அது எப்படி.. நான் இதுவரைக்கும் இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை”.
“இதுக்கு நாம தனியா பே பண்ணனும்”.
அவனின் வார்த்தையில் திருதிருவென விழித்த வேதவள்ளி, “பீச்சுக்கே காசு கட்டி வாங்கி வச்சிருக்காரா.. இவர் நிஜமாகவே ரொம்ப பெரிய பணக்காரரா இருப்பாரோ.. ஃப்ரீயாவே பீச்சை சுத்தி பாக்குறதை விட்டுட்டு இப்படி காசு கட்டி வாங்கி வச்சிருக்காரு.. இத சொன்னா நம்ம மேல கோபப்படுவார். நமக்கு எதுக்கு வம்பு அமைதியா இருந்துடுவோம்” என்றவாறு தன் வாயை மூடி கொண்டாள்.