எதிர் முனையில் பாரிவேந்தனிடம் அமைதி மட்டுமே நிலவியது, எந்த ஒரு பதிலும் இல்லை.
“என்கிட்ட பேச மாட்டியா டா?”.
“சொல்லுடா என்ன பேசணும்?” என்றான் பெரு மூச்சோடு.
“என்னை மன்னிச்சிடு டா” என்றான் நா தழுதழுக்க.
“உன்ன மன்னிக்கிற மனநிலையிலோ தண்டிக்கிற மனநிலையிலோ நான் இல்ல அரவிந்த். நீ பண்ணது ரொம்பவே பெரிய தப்பு. ஆனா, அத நீ இப்போ உணர்ந்துட்டேன்னு சொல்ற.. இருந்தாலும், உடனே என்னால எப்படி உன்னை மன்னிக்க முடியும். உன் லைஃபை நீ பாரு இந்த விஷயத்தை இதுக்கு மேல என்கிட்ட பேசாத” என்று விட்டான் கராராக.
“விதுஷா எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கா” என்றான் வெறுமையான குரலில்.
“வாட்! டைவர்ஸ் நோட்டீஸா? ஏன், என்னாச்சு?”.
“அவளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்ச பிறகு என்னோட சேர்ந்து வாழ முடியாதுன்னு சொல்றா டா. நான் பண்ணது பெரிய தப்பு தான். அதுக்காக அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது. நானும் அவகிட்ட எவ்வளவோ பேசி பாத்துட்டேன். என்னோட வாழவே முடியாதுன்னு சொல்லிட்டா”.
“ஓ! அதனால தான் விதுஷா அப்ராட் போறாளா?”.
இது அரவிந்திற்குமே புதிய செய்தி தான்.
அவன் கூறுவதை கேட்டு அதிர்ந்த அரவிந்த், “என்னடா சொல்ற அப்ராட் போறாளா?”
“ஆமா டா, ஏன் உனக்கு தெரியாதா?”.
“தெரியாதுடா.. டூ டேஸ் முன்னாடி அவள பாக்க போனேன். என் கிட்ட ரொம்ப கோவமா பேசி என்னை வெளியில் அனுப்பிட்டா.. இனிமே அவளுக்கும் எனக்கும் எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு சொன்னா.. நான் கூட கோபத்தில் தான் பேசுறான்னு நினைச்சேன். ஆனா, உண்மையிலேயே இப்படி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டு அப்ராட் போவான்னு நான் நினைச்சு கூட பாக்கல டா”.
பாரி வேந்தனுக்கும் இப்பொழுது என்ன கூறுவது என்று தெரியவில்லை. அரவிந்தின் மனநிலை அவனுக்கும் நன்கு புரிந்தது. ஆனாலும், என்ன பேசுவது என்று புரியவில்லை.
“இந்த விஷயத்துல விது யார் பேச்சையும் கேட்குற மாதிரி இல்ல” என்று விட்டு அழைப்பை துண்டித்தவன் விதுஷாவிற்கு அழைப்பு விடுக்கவும். அவளோ தான் ஏர்போர்ட்டில் இருப்பதாக கூறினாள்.
“விது நீ அங்கேயே வெயிட் பண்ணு நான் உடனே அங்க வரேன்” என்று அவனும் அரவிந்தை கையோடு அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டை அடைந்தான்.
அரவிந்தால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘நான் செய்த தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா’ என்று அவனின் மனம் கதறி துடித்தது.
ஆனால், தான் என்ன கூறினாலும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாள் என்ற நிதர்சனமும் புரிந்தது. எதுவுமே பேசவில்லை அமைதியாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.
ஆனால், அவளோ அவனின் முகத்தை கூட திரும்பியும் பார்க்கவில்லை. பாரிவேந்தனிடம் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தாள்.
“எதுக்கும் ஒரு தடவை நல்லா யோசிச்சு பாரு விது.. இது உன் லைஃப் மன்னிக்கலாமே”.
விதுஷாவிற்காக மட்டுமே அப்படி கூறினான். அரவிந்தை மன்னிக்க அவன் முன் வரவில்லை. ஆனால், தன் தோழிக்காக சிந்தித்தான்.
“நான் முன்னாடியே சொன்னது தான் பாரி இது என்னோட லைஃப் நீ தலையிடாதே” என்று மீண்டும் அவனின் வாயை அடைத்தவள்.
“கிளம்புறேன் பாரி திரும்ப இது விஷயமா எனக்கு யாரும் போன் பண்ணாதீங்க” என்று விட்டு அரவிந்தையும் முறைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
அரவிந்திற்கு அவளிடம் மன்னிப்பு கேட்க கூட நா எழவில்லை. நொறுங்கிப் போய் நின்று இருந்தான். எதற்காக அவன் இத்தனையும் செய்தானோ அனைத்துமே இப்படி பொய்த்து போய்விட்டதே என்ற ஆதங்கம் அவனை அடுத்த வார்த்தை பேச விடாமல் தொண்டையை அடைத்தது.
“சரி விடு அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு. அவ மனசு மாறுவா” என்ற பாரிவேந்தனுக்கு சம்மதமாக தலையசைத்த அரவிந்தும் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
அப்படியே நாட்கள் நகர கோவிலில் பாரிவேந்தனுக்கும் இனியாளுக்கும் எளிமையாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. இனியாளின் குடும்பத்தாரும், விதுஷாவின் பெற்றோரும், முத்துலட்சுமியின் தோழி அலமேலுவும், ரம்யாவையும் மட்டும் தான் அழைத்திருந்தனர்.
மிக மிக எளிதாக திருமணம் நடைபெற்றது.
ஏற்கனவே, ரெஜிஸ்டர் திருமணம் நடைபெற்று விட்டதால் கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை முடித்தார்கள்.
இவர்களுக்கு திருமணமான செய்தியும் மருத்துவமனையில் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி விட்டது.
இப்பொழுது அனைவர் முன்னிலையிலும் இனியாள் தான் பாரிவேந்தனின் மனைவி என்ற விஷயம் தெரிந்து விட்டது.
அவள் மேல் தன்னால் ஏற்பட்ட களங்கம் மொத்தத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அவனே துடைத்தெடுத்து விட்டான்.
அவளை இப்பொழுது கலங்கமற்றவளாகவும் மாற்றி விட்டான்.
திருமணத்திற்கு வந்திருந்த நித்யாவிற்கும் நித்யாவின் அம்மாவிற்கும் தான் மனம் ஆறவில்லை. எத்தனை வசதியான குடும்பத்திற்கு இனியாள் வாக்கப்பட்டு போகிறாள் என்று பொறுமிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
இடையில் அவ்வபொழுது முகிலன் மட்டும் வந்து தன் தந்தையை பார்த்துவிட்டு சென்றான் தான்.
அவனுக்குமே அனைத்து விஷயத்தையும் நாராயணன் விளக்கி கூறியிருந்தார். பாரிவேந்தன் மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்ட பின்னர் அவனும் பாரிவேந்தனிடம் சண்டை இட்டதற்கு மன்னிப்பை யாசித்து இருந்தான்.
இப்பொழுது அனைவருமே ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து விட்டனர். இதில் நித்யாவிற்கும் பாக்யாவிற்கும் தான் இனியாளின் வாழ்க்கையை பார்க்க பார்க்க புகைந்து கொண்டே இருந்தது.
நாராயணனும் தற்பொழுது உடல் நிலையில் நன்கு தேறிவிட்டார்ர். கையும், காலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல் பட தொடங்கிவிட்டது.
முன்பை விட இப்பொழுது நன்றாகவே தெளிவாக பேசவும் தொடங்கிவிட்டார்.
அவர் எப்படிப்பட்ட வாழ்க்கையை தன் மகளுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ அதை கடவுளே அவளுக்கு அமைத்து கொடுத்துவிட்டார் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்து போனார்.
“உன் மாமனார் மூஞ்சில சிரிப்ப பாத்தியா டி. பொண்ணு அவர் ஆசைப்பட்ட மாதிரி டாக்டர் ஆயிட்டா, அது மட்டும் இல்லாம நல்லா பணக்கார வீட்டுக்கு மருமகளா வேற போயிட்டா.. அந்த குஷில உன் மாமனாருக்கு உடம்பு கூட சரியாயிடுச்சு போலருக்கே” என்று பாக்கியா நித்யாவின் காதை கடிக்கவும்.
“ஆமாமா, நாம அவருக்கு ட்ரீட்மென்ட் பண்ணோமே எங்கேயாவது அவருடைய உடம்பு சரியாச்சா.. பொண்ண பார்த்ததும் உடம்பு தானா சரியா போயிடுச்சு”.
ஒருபுறம் அவர்கள் வழக்கம் போல் அடுத்தவரை பார்த்து வயிற்று எரிச்சல் படுவதை நிறுத்தாமல் செய்து கொண்டு தான் இருந்தனர்.
அரவிந்துமே இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தான். ஆனாலும், பழையபடி அவன் யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை.
அவனுக்கு தன்னை நினைத்தே அத்தனை அவமானமாக இருந்தது. என்ன தான் பாரிவேந்தனும் இனியாளும் மற்றவர்களிடம் இதை பற்றி எல்லாம் கூறாவிட்டாலும் அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்வு அவனை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை.
விதுஷா தன்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு ஆளே மாறிப் போய்விட்டான்.
முகமே பொலிவிழந்து எப்பொழுதும் வருத்தமாகவே காணப்பட்டது.
யாருடனும் சரியாக பேசுவதில்லை. தனக்குள்ளேயே முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டான்.
இப்பொழுது கூட பாரிவேந்தன் வற்புறுத்தி கூப்பிட்டதால் மட்டுமே திருமணத்திற்கு வந்திருக்கிறானே தவிர, இங்கேயும் ஒதுங்கி தான் நின்றிருக்கிறான்.
பாரிவேந்தனுக்குள் அத்தனை மகிழ்ச்சி.. அவளுக்கு எதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று எண்ணினானோ தான் நினைத்தது போலவே அனைத்தையுமே சரி செய்து விட்டோம் என்ற திருப்தி அவனின் முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.
அவளுக்கு என்ற அங்கீகாரத்தையும் வழங்கி விட்டான்.
அவளின் படிப்பையும் படிக்க வைத்து விட்டான்.
அவளின் ஆசை படியே அவளை மருத்துவர் ஆக்கிவிட்டான்.
அவளின் குடும்பத்தோடும் இணைய வைத்து விட்டான்.
இனி அவளுக்கு எந்த ஒரு மன வருத்தமும் இருக்காது என்பதை அறிந்த பின்னர் தான் அவனுக்கு நிம்மதியே வந்தது.
ஐயர் மந்திரங்களை கூறி முடித்ததும் மங்கள நாணை அவள் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக முழு மனதோடு ஏற்றுக் கொண்டான்.
பாரிவேந்தனின் கையால் மாங்கல்யத்தை பெற்றதும் அவளுக்குள் சொல்லல்லா உணர்வு.. கண்கள் கலங்கி கண்ணீரை கொட்ட தயாராகியது.
பிறகு, பெரியவர்களிடம் ஆசி வாங்கி தங்களின் இல்லம் நோக்கி புறப்பட்டனர்.
இப்பொழுதெல்லாம் முத்துலட்சுமி தான் யாழ்நிலாவை தன் அருகிலேயே தூங்க வைத்துக் கொள்வதாக சொல்லி இரவு வேலைகளில் அவரே பார்த்துக் கொள்கிறார்.
பாரி வேந்தனுக்குமே அது நன்கு வசதியாகி போனது.
எப்பொழுதும் போல் இலகுவான உடைக்கு மாறிய இனியாள் தூங்குவதற்கு தயாராகி வந்து கட்டிலில் படுக்கவும்.
அவளின் செயலையே கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாரிவேந்தன், “என்னடி நீ பாட்டுக்கு வந்ததும் தூங்க போற?”.
“ஏன் வேற என்ன பண்ணனுமாம்”.
“இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டி” என்றவனை உறுத்து விழித்தவள், “அப்படியா! இந்த விஷயம் எனக்கு தெரியாம போயிடுச்சே” என்றாள் ஆச்சரியப்படுவது போல் பாவனை செய்து.
“சரி, அதான் இப்போ தெரிஞ்சிடுச்சுல.. வந்து புருஷன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றவாறு அவன் எழுந்து நிற்கவும்.
அவளோ நேராக வந்து பட்டென்று அவனின் காலில் விழ குனிந்து விட்டாள்.
அவளின் கையை பற்றி பதறியவாறு நிமிர்த்தியவன், “என்னடி பண்ற?” என்றான் பதட்டமான குரலில்.
“நீங்க தான காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னீங்க அதான்..” என்றவளை முறைத்து பார்த்தவன், “நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன். உடனே காலில் விழுந்துடுவியா?”.
“விழுந்தாலும் தப்பில்லை.. என் புருஷன் தானே” என்றாள் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி.
“சரி, சரி வா டைம் வேஸ்ட் பண்ணாம ஃபர்ஸ்ட் நைட்டை கொண்டாடுவோம்”.
“ஐயோ! ச்சீ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றவாறு அவள் வெட்கத்தோடு தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
“இல்லன்னா மேடம்க்கு ஒண்ணுமே தெரியாது பாரு.. கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தையும் பெத்து ஃபர்ஸ்ட் நைட்டையும் கொண்டாடி முடிச்சவங்கடி நம்ம.. நாம ஒன்னும் மத்த கப்பல்ஸ் மாதிரி ரெகுலர் டைப் கிடையாது. நாம எல்லாத்திலுமே அட்வான்ஸ் தான்” என்று தன் ஒற்றை கண்ணை சிமிட்டினான் கேலி புன்னகையோடு.
“ஐயோ! கொஞ்சம் சும்மா இருக்கீங்களா” என்றவாறு அவள் தன் முகத்தை மூடிக்கொள்ளவும்.
அவளை அப்படியே தன் கையில் தாங்கியவன் மஞ்சத்தில் சரித்து அவள் மேல் படர்ந்து அவர்களின் முதலிரவை கொண்டாட முதல் அடியை எடுத்து வைத்து விட்டான்.
எவ்வளவு வருத்தத்தை அவர்கள் எதிர் நோக்கினார்களோ..
எத்தனை இன்னல்களை அவர்கள் சந்தித்தார்களோ..
இப்பொழுது இருவரும் ஒன்றாக அத்தனை மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.