அன்று காலையிலேயே ரம்யா சிரித்த முகமாக பாரிவேந்தனின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளை வரவேற்ற முத்துலட்சுமி, “என்னம்மா இன்னைக்கு எனக்கு டெஸ்ட் எடுக்கிற வேலை கூட இல்லையே.. என்ன திடீர்னு வந்திருக்க?”.
“நம்ம இனியாள் மேடமுடைய ரிப்போர்ட்டை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ரிசல்ட் வந்ததும் எனக்கு அதை சொல்லாமல் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு இருக்க முடியல.. அதான் உடனே எடுத்துட்டு வந்துட்டேன்”.
அவள் கூறுவதை கேட்டு புரியாமல் விழித்த முத்துலட்சுமி, “என்ன ரிசல்ட்?” என்றவாறு அதை பிரித்துப் பார்த்தார்.
ஆம், இனியாள் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறாள்.
அதை பார்த்தவருக்கோ அத்தனை சந்தோஷம். முதல் குழந்தையை தான் அவள் தனிமையிலேயே சுமந்து அத்தனை இன்னல்களுக்கு நடுவே பெற்று எடுக்க வேண்டியதாக போய்விட்டது.
ஆனால், இம்முறை அவளை அனைவருமே உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டனர்.
அப்பொழுது மருத்துவமனை செல்வதற்கு தயாராகி தன் மகளையும் அழைத்து கொண்டு வெளியே வந்த இனியாள், “என்ன ரம்யா திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து இருக்கீங்க உட்காருங்க”.
“மேடம் உங்களுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை தான் கொண்டு வந்தேன்”.
“ஓ! அத வீட்டுக்கே கொண்டு வந்துட்டீங்களா.. நானே ஹாஸ்பிடல் வந்தா பாத்திருப்பேனே”.
“ரிசல்ட் பாசிட்டிவ் வந்திருக்கு மேடம் என்னால சந்தோஷம் தாங்க முடியல.. அதான் உடனே இதை உங்ககிட்ட எல்லாம் சொல்லணும்னு வந்துட்டேன்” என்றதுமே இனியாளுக்கும் அத்தனை மகிழ்ச்சி.
முதல் பிரசவம் தான் அவள் கருவுற்றதே அவளுக்கு தெரியாமல் போய்விட்டது. அதனால் இம்முறை தான் ஏதோ முதல் முறை கர்ப்பமாக இருப்பது போல் அவளுக்குள் அத்தனை சந்தோஷம்.
“ஐ! மம்மி அப்போ எனக்கு தம்பி பாப்பா வரப்போகுதா” என்று யாழ்நிலா துள்ளி குதிக்க துவங்கி விட்டாள்.
அப்போது தான் தானும் மருத்துவமனை செல்வதற்காக கிளம்பி வெளியே வந்த பாரிவேந்தன், “என்ன ரம்யா காலையிலேயே வந்து இருக்கீங்க?” என்று மூன்றாவது முறையாக அதே கேள்வியை அவனும் கேட்டான்.
“நான் மேடம் கிட்ட ஒரு ரிப்போர்ட்டை கொடுப்பதற்காக வந்தேன் டாக்டர். நான் கிளம்புறேன் மேடம்” என்று விட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டாள்.
“என்னம்மா என்ன ஆச்சு என்ன ரிப்போர்ட்?” என்று அவன் தன் தாயை பார்க்கவும்.
“அதை நீ இனியாள் கிட்டயே கேட்டுக்கோ” என்றவர் யாழ்நிலாவை தன்னோடு அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டார்.
“என்னடி யாருமே ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க.. என்ன விஷயம்?” என்கவும்.
அவளோ இவனிடம் எப்படி கூறுவது என்று தயக்கமாக, “அது வந்து..” என்று இழுத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளின் முகமோ வெட்கத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண்டது.
அவளின் காதருகே குனிந்தவன் கிசுகிசுப்பாக, “இப்படி எல்லாம் ப்ளஷ் ஆகாதடி.. காலையிலேயே மனுஷனை இப்படி கொல்லுறியே.. அப்புறம் திரும்ப பஸ்ட்ல இருந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்புற மாதிரி ஆகிடும்” என்றான் கிறக்கமான குரலில்.
அவளின் கையில் இருந்த ரிப்போர்ட்டை இவனே பறித்து பிரித்துப் பார்த்தான்.
பிரித்துப் பார்த்தவன் முகத்திலோ எந்த ஒரு உணர்ச்சியும் தென்படவில்லை.
இனியாளோ அவனின் முகத்தில் எழும் உணர்வுகளை காண வேண்டி அவனையே சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் முகம் எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காமல் போகவும் ‘புஸ்’ என்று ஆகிவிட்டது.
“ஓ! பிரெக்னன்சி டெஸ்ட் ரிப்போர்ட்டா” என்றவாறு மீண்டும் அவன் அதை இனியாளின் கையில் வைக்கவும்.
அவளுக்கோ கோபம் சுர்ரென்று ஏறியது.
“என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல? நான் பிரெக்னண்டா இருக்கேன்”.
“ம்ம்.. தெரியுதே டி. அதான் அந்த ரிப்போர்ட்ல எழுதி இருக்கே” என்று அவன் தன் தோள்களை குலுக்கி கொண்டு கூறவும்.
அவளுக்கு கோபம் பல மடங்காக அதிகரித்தது.
கோபத்தில் அவனை அடித்துக் கொண்டே, “நான் பிரெக்னண்டா இருக்கேன்னு சொல்றேன். நீங்க எந்த ஒரு ரியாக்ஷ்னும் தராமல் இருக்கீங்க”.
“ரியாக்ஷ்ன் எல்லாம் கொடுத்து பல நாள் ஆகுது டி மக்கு.. நான் ஒரு கைனோ அதை மறந்துட்டியா என்ன.. நீ ப்ரெக்னண்டா இருக்கிறது எனக்கு எப்பவோ தெரியும்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள், “அப்புறம் ஏன் என்கிட்ட எதையுமே சொல்லல”.
“நீயா கண்டுபிடிச்சு எப்போ சொல்றேன்னு பார்க்கலாம்னு தான் நான் எதுவும் சொல்லல” என்றவாறு அவளின் நெற்றியை முட்டினான்.
அவளோ அவனிடம் இருந்து இரண்டு அடி பின்னே நகர்ந்தவள், “என்ன பண்றீங்க எல்லாரும் இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்போ ரூமுக்கு போலாமா” என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் கேட்கவும்.
முற்றிலுமாக கரைந்து போனவள் அவனிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் யாருமே அவளை ஓடி ஆடி வேலை செய்யவே விடவில்லை. மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தை தவிர்த்து வீட்டில் அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.
அதிலும், பாரிவேந்தனை பற்றி கேட்கவும் வேண்டுமா..
முதல் பிள்ளைக்கு அவள் எத்தனை துன்பத்தை தாங்கினாளோ.. அனைத்திற்கும் சேர்த்து இரட்டிப்பாக அவளுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க முடிவு செய்துவிட்டான்.
யாழ்நிலாவோ தனக்கு தம்பி பாப்பா வரப்போகிறான் என்ற ஆனந்தத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த மூன்று மாதமும் இப்படியே மகிழ்ச்சியாக கழிந்தது.
அன்று காலையிலேயே பாரிவேந்தன் அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தான்.
அவனை பின் இருந்து அணைத்த இனியாள், “என்ன அவசர அவசரமா கிளம்புறீங்க”.
அவளின் கையை பற்றி முன்னே வர செய்தவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
வழக்கத்தை விட அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்படவும், அவனின் அணைப்பிலிருந்தே நிமிர்ந்து பார்த்தவள், “என்னாச்சு?”.
“இன்னைக்கு விதுஷா ஃபாரின்ல இருந்து வரா.. அவளை ரிசீவ் பண்ண தான் ஏர்போர்ட்டுக்கு போறேன்”.
“இல்ல நானும் வரேன் ப்ளீஸ்..” என்று தன் கண்களை சுருக்கி கெஞ்சுதலாக கேட்டவளை வேண்டாம் என்று விட்டுவிட்டு செல்ல பாரிவேந்தனுக்கு மனம் வரவில்லை.
“சரி, ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே” என்றவாறு அவன் அவளை நோக்கி குனியவும்.
அவன் என்ன கேட்கிறான் என்பது புரிந்ததும், அவன் கேட்டதை இரட்டிப்பாக வாரி வழங்கினாள் இனியாள்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் கிளம்பி சென்று அரவிந்தையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்தனர்.
அரவிந்த் முற்றிலுமாக ஆளே மாறிப் போய் விட்டான். அவனின் தோற்றம், நடை, உடை, பாவனை என அனைத்துமே மாறிப் போய்விட்டது.
மனதளவிலும், உடலளவிலும் மிகவும் துவண்டு போய் இருக்கிறான் என்பது அவனின் தோற்றத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.
விதுஷா அவனுக்குள் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறாள் என்பது அனைவருக்கும் நன்றாக விளங்கியது.
ஆனால், புரிந்து கொள்ள வேண்டியவளோ கோபமாக இருக்கிறாளே என்ன செய்ய முடியும். அவளின் கோபமும் நியாயமாக இருப்பதால் யாரும் அவளிடம் நெருங்கவே முடியவில்லை.
விமானம் தரையிறங்கி விட்டதற்கான அறிக்கை வரவும். அவளை காண வேண்டி ஆவலாக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.
அவளும் ஜீன் பாண்ட் டி-ஷர்ட் சகிதம் கண்களில் கூலர்சுடன் வெளியே வந்தவள். அருகில் ஒரு ஆடவனுடன் சிரித்து சிரித்து பேசியவாறு வந்து கொண்டிருந்தாள்.
அதை பார்த்த அரவிந்தின் மன ஓட்டமோ எங்கெங்கோ சென்றது.
பாரி வேந்தனையும் இனியாளையும் பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் அரவிந்தை அழுத்தமாக பார்த்துவிட்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டாள். அதன் பிறகு அவள் அவனின் புறம் திரும்பவே இல்லை.
“எப்படி இருக்க விது? ஜர்னி எல்லாம் எப்படி இருந்துச்சு?”.
“குட் பாரி இது என்னோட ஃபிரண்ட் ராபர்ட்”.
இருவரும் அத்தனை நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர். அதை பார்க்கும் பொழுதெல்லாம் அரவிந்திற்கோ திக் திக் உணர்வு தான்.
ஏற்கனவே விதுஷா தனக்கு விவாகரத்து கொடுக்கப் போகிறாள் என்ற வருத்தத்தில் இருந்தவனுக்கு அவள் வேறொரு ஆடவனுடன் வந்து இறங்கியதை பார்த்ததும் முற்றிலுமாக நொறுங்கிப் போய்விட்டான்.
இன்னமுமே அவள் தன்னவள் தான் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எங்கே அவள் தன் கையை விட்டு சென்று விடுவாளோ என்ற வருத்தம் அவனின் மனதை அழுத்த அவனின் தொண்டையை எதுவோ அடைத்துக் கொண்டு பேசவே விடவில்லை.
அனைவரும் கிளம்பி அருகில் இருந்த உணவகத்திற்கு தான் முதலில் சென்றனர்.
பாரி வேந்தன் ராபர்ட் உடன் பேசிக்கொண்டே இனியாளையும் அழைத்துக் கொண்டு நாசுக்காக அங்கிருந்து நகர்ந்து விட்டான், விதுஷாவிற்கும் அரவிந்திற்கும் தனிமையை கொடுக்க வேண்டி.
விதுஷா தன் செல்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாளே தவிர, அவனுக்கு எந்த ஒரு பதிலும் அவள் அளிக்கவில்லை.
“மன்னிச்சிடுடி.. இனிமே இப்படி எந்த தப்பும் செய்ய மாட்டேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால யோசிச்சு கூட பாக்க முடியாதுடி. உன்னால மட்டும் எப்படி என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்று சற்று நேரமாக தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டான்.
அவனின் கேள்வியில் அதிர்ந்து அவனை பார்த்தவள், “கல்யாணமா என்ன உளறுற?” என்று அவனை பொசிக்கிவிடும் பார்வை பார்த்தாள்.
ஆனால், அவனிடம் இவ்வாறு கூறியது நம் பாரிவேந்தன் தான் என்பதை அப்பொழுது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.