காயத்ரி, கையில் சூடான உணவுப் பாத்திரமும், மாத்திரையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் ஏறினாள்.
மனதில், “நிவேதா இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை இன்னைக்கு நானே ஊட்டி விடணும் இன்னைக்கு எப்படி தப்பிக்கிறான்னு பார்ப்போம்..” என்ற எண்ணமே. அவளது அறைக்கதவின் கைப்பிடியைத் தொடும் அந்த நொடி வரை, அனைத்தும் இயல்பாகத்தான் இருந்தது.
ஆனால் கதவைத் தள்ளி திறந்தவுடன், அந்த ஒரு கணத்தில், உலகமே இடிந்து விழுந்ததுபோல் தோன்றியது.
மெத்தையின் அருகில், நிவேதா சுயநினைவற்றபடி தரையில் பரந்து கிடந்தாள்.
அவளது முகம் பசுமையாக, உயிர்ப்பற்ற ஓவியம்போல இருந்தது.
காயத்ரியின் இதயம் துடிக்க மறந்தது. கையில் இருந்த உணவும், மாத்திரையும் நழுவி தரையில் விழுந்தன.
அவள் தொண்டையில் வார்த்தைகள் அடைத்த வண்ணம் இருக்க மிகவும் சிரமப்பட்டு,
“நிவேதா…!” எனக் கத்தியபடி குரல் துடித்தது.
கண்களில் நீர் அளவில்லாமல் பெருகியோட அவள் பக்கத்தில் மண்டியிட்டு, மகளின் தலையை தன் மடியில் வைத்தாள்.
உடல் எந்த அசைவுமின்றி இருந்தது. அச்சம், துயரம், அதிர்ச்சி அனைத்தும் ஒரே நேரத்தில் மார்புக்குள் பாய்ந்தன.
அந்த நொடி, கீழே இருந்த கருணாகரனும் காயத்ரியின் கூக்குரலைக் கேட்டு மேலே பாய்ந்து வந்தார்.
அந்தக் காட்சியைப் பார்த்ததும், அவரது இதயத்தில் திடீரென ஊசி குத்தியது போல ஒரு வலி ஏற்பட்டது.
காயத்ரி என்ன நடந்தது என்று சொல்லும் முன்பே, நிவேதாவை தூக்கிக், வேகமாக வைத்தியசாலைக்குப் புறப்பட்டார்.
வைத்தியசாலையில் மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர்.
காத்திருப்பு அறையில் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
அந்த இடம் மட்டும் தான் அமைதியாக இருந்தது. மனமோ போர் கால முரசுகள் கொட்டுவது போல இதயம் மாறி மாறி துடிக்கத் தொடங்கியது
மூன்று மணி நேரம் கழித்து, மருத்துவர் வந்தார்.
“கவலைப்பட வேண்டாம். உடலில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனா, அதிகமான மன அழுத்தம் தான் இந்த மயக்கத்துக்கு காரணம் இப்போ அவங்களுக்கு ரொம்ப ரெஸ்ட்டு தேவை கொஞ்சம் புது இடங்களுக்கு கூட்டி போங்க,
சந்தோஷமான நினைவுகளை உருவாக்குங்க ஒருவேளை இந்த மயக்கத்துக்கு அப்புறமா பழைய நினைவுகள் திரும்ப வர வாய்ப்பு இருக்கு கண் முழிக்கட்டும் பார்ப்போம் 20 மினிட்ஸ்ல கண் முழிச்சிடுவாங்க இப்போதைக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..” என்று டாக்டர் கூறவும்,
காயத்ரி, கருணாகரன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘நாம செய்த மடத்தனம்தான் இப்படி ஒரு நிலைக்கு வழி வகுத்ததோ..!’ என்ற குற்ற உணர்வு அவர்களின் மனதை வாட்டியது.
அந்த சமயம் கார்த்திகேயனும் மருத்துவமனைக்கு வந்து சேர, காயத்ரி எதுவும் பேசாமல், கண்களில் நீர் துளிர்ததபடி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
நிவேதா, மெத்தையில் காய்ந்த பூ போல, உயிர்ப்பின்றி படுத்திருந்தாள்.
நீண்ட காத்திருப்புக்குப் பின், அவளது கண்கள் மெதுவாக திறந்தன. ஆனால் விழித்தவுடன், அனைவரையும் புதிதாகப் பார்த்தாள். முற்றிலும் அறிமுகமற்ற முகங்களைப்போல அவளது பார்வை விசித்திரமாக இருந்தது.
“நீங்க யாரு?” என்ற கேள்வி அவளது உதடுகளில் இருந்து வந்தபோது, மூவரின் உள்ளமும் சிதறியது.
கார்த்திகேயனும் அதிர்ந்தபடி மருத்துவரை உடனே அழைத்து வந்தான்.
“ஹாய் நிவேதா இப்போ எப்படி இருக்கீங்க இப்போ கொஞ்சம் பெட்டரா பீல் பண்றீங்களா..?”
“டாக்டர் நான் நிவேதா இல்லை..”
“இல்லம்மா உங்களுக்கு மெமரி லாஸ் ஆயிட்டதால உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சு உங்க பெயர் நிவேதா இது உங்க அம்மா காயத்ரி இது உங்க அப்பா கருணாகரன்.” என்று மெதுவாக அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் அவள் இருவரையும் சற்று குழப்பத்துடன் பார்த்து, எதுவும் பேசாமல் சிந்தனையில் மூழ்கினாள்.
மருந்தின் தாக்கம் காரணமாக தலை சுற்றுவது போலிருக்க மீண்டும் உறக்கம் அவளை வருடி அணைத்துக் கொண்டது.
மருத்துவர், “இப்போ ஓய்வெடுக்க விடுங்க தலை அடிபட்டது காரணமாக மறதி மீண்டும் ஏற்பட்டிருக்கலாம் ஸ்கேன் செய்து பார்த்தால்தான் எதையும் தெளிவாகக் கூறலாம் கொஞ்சம் பொறுமையாக இருங்க..” என்று அறிவுறுத்தினார்.
இரண்டு நாட்கள் பல சோதனைகள், ரிப்போர்ட்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. எந்த பாதகமான முடிவும் அந்த ரிப்போர்ட்டுகளில் தெரியவில்லை. முன்னையதை விட இந்த ரிப்போர்ட்டில் மேலும் பல முன்னேற்றங்கள்தான் இருந்தன.
அதனால் ரிப்போர்ட்டை பார்த்ததுமே,
“ஒரு பிரச்சனையும் இல்லை தாராளமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்..” என்று டாக்டர் கூறிவிட்டார். ஆனால் வீட்டிற்கு வந்த பின், நிவேதாவின் நடத்தை மாறியது.
திடீரென,
“அம்மா… நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா?” என்று கேட்டாள்.
இதுவரையில் வீட்டை விட்டு ஒருபோதும் வெளியே நிவேதா போனதே இல்லை. முற்றிலும் புதிதான ஒன்றாக காயத்திரிக்கு உணர்த்தியது.
காயத்ரியும் கருணாகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அப்போதுதான் மருத்துவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ‘புது இடங்கள், புது அனுபவங்கள் அவளுக்கு நல்லது..’
அதனால எதுவும் பேசாமல் அவளை அனுப்பி வைத்தனர். இருந்தும் காயத்ரியின் மனதில் எங்காவது மகள் மயங்கி விழுந்து விடுவாளோ என்ற பயமும் ஒரு ஓரத்தில் இருந்தது.
எங்கே வேண்டுமானாலும் போகட்டும்… சந்தோஷமாக இருந்தாலே போதும். பழைய நினைவுகள் வந்தாலும் வந்துவிடட்டும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மகள் ஆரோக்கியமாக இருந்தால் சரி என நிவேதாவை அவளது போக்கிற்கே தாய், தந்தையர் இருவரும் விட்டு விட்டனர்.
வீட்டை விட்டு வெளியே வந்த நிவேதா, விரைவாக காரின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள்.
அவளது விரல்கள் தன்னிச்சையாக அலைபேசியைத் தேடின. சில நொடிகள் கழித்து, ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்தினாள். கண்ணில் சிறு பதட்டமும், குரலில் கூர்மையும் கலந்திருந்தது.
“ராஜேஷ்… நான் சொன்ன விஷயத்த எப்போ முடிச்சு தரப்போறீங்க? அந்த டீடெயில்ஸ் உடனே என்னோட போனுக்கு வந்தாகணும்,” என்று கட்டளையிடுவது போல் கூறினாள்.
அந்தப் பக்கத்தில், ராஜேஷ் சற்று நெருடலுடன்,
“மேடம்… நீங்க சொன்ன விஷயத்தை நான் தேடிக்கிட்டு தான் இருக்கேன் இன்னும் கொஞ்சம் டைம் வேணும் சீக்கிரமா கண்டுபிடிச்சு சொல்றேன்..” என்று கூற, நிவேதா சுருக்கமாக “ஓகே” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.
கார் உள்ளே இருந்த நிவேதா கடுமையான சிந்தனைக்குள் மாட்டிக் கொண்டாள். அது அவளது மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
**********************************************
கமிஷ்னர் ஆபீஸில் மகிழ்மதி, ராம் பிரசாத் முன், கைகளைக் கட்டி, தலைகுனிந்து நின்றாள்.
அவளது முகத்தில் தோல்வியின் நிழல் தெரிந்தது. அந்தக் காட்சி ராம் பிரசாத் மனதில் கோபத்தின் தீயை ஏற்றியது.
“மகிழ்மதி… உங்ககிட்ட ஒரு விஷயத்தை ஒப்படைச்சா, நீங்க இப்படித்தான் பொறுப்பில்லாம நடந்துப்பீங்களா? உங்க மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சேன், ஆனா இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல,” என்ற அவரது வார்த்தைகள் வேகமாக கோபக்கனலுடன் வெளிவந்தன.
“சாரி சார்… பர்சனலா ஒரு பிரச்சனை… அதுல மாட்டிக்கிட்டேன் அதனால நீங்க சொன்ன நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு போக முடியல..” என்றாள் அவள், குரல் நடுங்கியபடி.
“உங்ககிட்ட எப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கல இது உங்க முதல் கேஸ் இதிலேயே நீங்க ஒரு பிளாக் மார்க்கு வாங்கிட்டீங்கன்னா அடுத்த கேஸ்ஸ உங்களை நம்பி எப்படி கொடுக்க முடியும்..?” என்று கமிஷனர் ராம் பிரசாத் கேட்க,
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“மகிழ்மதி உங்கள பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும் நீங்க இப்படி டியூட்டி டைம் பண்ற ஆளே இல்ல அப்படி என்னதான் பிரச்சனை சொல்லுங்க நான் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்..”
ராம் பிரசாத் முகத்தில் சலிப்புத் தெளிவாகத் தெரிந்தது.
“எனிவே… உங்கட பர்சனல் பிரச்சனைகள் கடமையை பாதிக்கக் கூடாது போலீஸ் ட்ரைனிங்க்ல எடுத்த சத்தியப்பிரமாணம் நினைவில் இருக்கு தானே..?”
“யெஸ் சார்…” என்று மெளனமாக பதிலளித்தாள் அவள்.
“ஓகே நெக்ஸ்ட் என்ன செய்யப் போறீங்க பர்சனல் பிரச்சனைகளை முடித்துவிட்டு வாரீங்களா இல்லான்னா இந்த கேஸ இன்வெஸ்டிகேட் பண்றீங்களா..?” என்று ராம் பிரசாத் புருவத்தை உயர்த்திக் கேட்க,
“நான் இப்பவே ரகுவரன் சார நேர்ல சந்திச்சு அந்த அக்யூஸ்ட விசாரிக்கிறேன்..” என்று தலையை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையுடன் தைரியமாக கூறினாள் மகிழ்மதி.
அவளது இந்த துணிச்சலான பேச்சு தான் ராம் பிரசாத்துக்கு மிகவும் பிடித்தது.
சிறு புன்னகையுடன் ராம்பிரசாத் தலையசைக்க சல்யூட் அடித்து விட்டு அவ்வறையை விட்டு வெளியே வந்தவள், காரை எடுத்துக்கொண்டு அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரனை சந்திக்கப் புறப்பட்டாள்.
அவளது கார் நகர்ந்து செல்வதை விட அவளது உள்ளம் மிக வேகமாக சிந்தனைகளால் நகர்ந்து கொண்டிருந்தது.