7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே!

4.7
(3)

அத்தியாயம் 7

நின் முத்தம்
நான் ஏற்க…
என் முத்தம்
நீ ஏங்க…
நம் முத்தம்
நாணலாகி நழுவிடுதே
நேசமாய்…!!!

————————————-

ஒரு பக்க கன்னத்தில் ஈரம் படர, மறுகன்னத்திலும் முத்தமிட்டு இருந்தான் ஷக்தி மகிழவன்.

நடுக்கம் கொண்ட கரங்களை இறுக்கி மூடிக் கொண்ட பிரகிருதி, இயல்பாக இருக்க முனைந்தாள். வீட்டில் சொன்ன அறிவுரைகள், பார்த்த படங்களை வைத்து அடுத்தது இப்படி தான் நடக்கும் என ஒரு கணிப்பு இருந்தது அவளுக்கு. ஆனால் அதுவும் ஒரு பயத்தையே கொடுத்தது.

அவனோ அடுத்த கட்டத்திற்கு நகர இயலாமல், அவள் முகம் பார்க்க, அவளது இதழ்கள் தவிப்பில் துடித்துக் கொண்டிருந்தது.

பாவையின் மனப்போராட்டம் அறியாதவனாக, “காபி குடிக்கப் போலாமா?” எனக் கேட்க, படக்கென கண்ணைத் திறந்தவள், “என்னது?” எனக் குழப்பமாக வினவினாள்.

“காபி?” மீண்டும் அவன் கூறியதில் அவனிடம் இருந்து விலகி தலையசைத்தாள்.

“ப்ரெஷ் அப் ஆகிட்டு வரேன்…” என ஷக்தி குளியலறைக்குள் புகுந்து கொள்ள, பிரகிருதிக்கு இன்னும் இதழீரத்தின் மிச்சம் கன்னத்தில் படர்ந்திருந்த உணர்வு.

சிலிர்க்க வேண்டிய மனமேனோ சில்லிட்டது.

ஒன்றும் செய்யத் தோன்றாது அப்படியே நின்றிருந்தவளை, ஷக்தி தான் உலுக்கினான்.

“போலாமா ருதி?”

அக்கேள்வியில் இயல்பு மீண்டவள், “ம்ம்” எனத் தலையசைத்து அவன் பின்னே செல்ல, “ட்ரைவரை வர சொல்லலாமா?” எனக் கேட்டாள்.

“இந்த ரோடோட டெட் எண்டுல ஒரு காபி ஷாப் இருந்துச்சு ருதி. நடந்து போகலாமா?” ஷக்தி அவள் முகம் பார்க்க, அதற்கும் சிறு தலையசைப்பு.

அவளை சாலையோரத்தில் விட்டுவிட்டு வாகனம் வரும் பக்கம் அவன் நடந்தான். இருவரின் கரங்களும் மெல்ல உரசிச் சென்றது.

அவளைப் பாதுகாக்கும் பொருட்டு, பிரகிருதியின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

அவளது அமைதி அவனை என்னவோ செய்ய, “அப்செட்டா இருக்கியா ருதி? கிஸ் பண்ணது கம்ஃபர்ட்டபிளா இல்லையா?” எனக் கேட்டதில்,

“அப்படி இல்லை…” என வலிய புன்னகைத்து வைத்தாள்.

அந்த சமாளிப்பும் போலி நகையும் புரியாதவனாக சற்றே நிம்மதி கொண்டவன், “உனக்கு எதுவும் பீல் ஆச்சா?” எனக் கேட்க, அவனது கேள்வியில் திருதிருவென விழித்தாள்.

“என்ன… என்ன பீல் ஆகணும்?”

“எனக்கு இது எல்லாம் ஒரு லாஜிக் மெக்கானிசம் மாதிரி தான் இருக்கும். உள்ள பீல் பண்ணுவேன். பட் என்னால எக்ஸ்சாக்ட்டா சொல்ல முடியாது. நிறைய படத்துல கிஸ் சீன் பாத்துருக்கேன். சோ உனக்கும் கொடுக்கணும்னு தோணுச்சு. அந்த கிஸ் என்னைக் கொஞ்சம் ‘லைட்டா பீல்’ பண்ண வைக்குது ருதி. உள்ளுக்குள்ள சம் எபக்ட்… பட் புரியல!” என்றவனின் கையழுத்தம் அதிகரிக்க, அவளுக்கு பதிலற்ற நிலை.

அவனைப் பொறுத்தவரை, காதல் உணர்வுகள் தாப செயல்கள் அனைத்தும் அவளும் உணர்ந்து செயல்படும் போது தான் ஒரே சீரான உணர்வில் வெளிவரும். அவளது நடுக்கம் அவனைக் குழப்பி விட்டது. அடுத்ததாக இதழ் முத்தம் கொடுக்க அவன் மனம் உந்தியபோதும், அவளது சீரற்ற நடுக்கத்தில் அவனுக்கு அடுத்ததாக அவளை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. அதனாலேயே பேச்சை மாற்றி விட்டான்.

பிரகிருதிக்கு அவனிடம் எப்படி விளக்கவென்று தெரியாது அமைதியாக வர, காபி ஷாப்பும் வந்து விட்டது.

இருவரும் கண்ணாடித் தடுப்போரம் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர். பதினோரு மணியளவிலேயே பனிமூட்டமாகத் தான் காட்சியளித்தது உதகை.

கண்ணாடியில் பனி உறைந்திருக்க, காபியின் அடர்ந்த நறுமணமும் ஊசியாய் துளைத்த குளிரும் பிரகிருதியை அமைதியாக அமர விடவில்லை.

கண்ணாடி வழியே தெரிந்த இயற்கைக்கு காட்சிகள் மனதை கொள்ளையடிக்க, அதில் சில கணங்கள் மூழ்கிய ஷக்தி மகிழவன், “இந்த சீனரிஸ் உன்னை மாதிரியே இருக்கு…” என்றதில் அத்தனை நேரமும் டேபிளின் மீது படிந்திருந்த சிறு துளி நீரின் மீது கோலமிட்டுக் கொண்டிருந்த பிரகிருதி நிமிர்ந்தாள்.

“என்னை மாதிரியா?”

“ம்ம்… உன்னைப் பார்த்தா மனசுக்குள்ள ஒரு… ஒரு… ஒரு…” சொல்ல இயலாமல் அப்படியே தேங்கியவனின் புருவ மத்தியில் முடிச்சு உருவாக, அவளுக்கு ஏனோ அழுகை வரும்போல இருந்தது.

தன்னையும் புரிய வைக்க இயலவில்லை, அவனையும் புரிந்து கொள்ள இயலா துயர நிலை.

பின், மீண்டும் அவனே ஆரம்பித்தான். “நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே ருதி” என்று.

கண்ணைச் சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், “என்ன கேட்டீங்க?” என்றாள் குழப்பமாக.

“கிஸ் பண்ணும்போது எப்படி பீல் பண்ணுனன்னு கேட்டேனே?”

அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளமாக அவளது கண்கள் கண்ணீரை பொழிந்து விட்டது.

அதனைக் கண்டு ஒரு நொடி திகைத்த ஷக்தி மகிழவனின் தெளிந்த முகம் சட்டென இருளடைந்தது.

“கிஸ் பண்றப்ப எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டியா?” முகம் இறுக கேட்டதில், “இல்ல பிடிச்சுருந்துச்சு” என்றாள் அழுகையினூடே.

“அப்பறம் ஏன் உன் கண்ணுல இருந்து தண்ணி வருது…”

“தெரியல!” உதட்டைப் பிதுக்கிக் கூறியதில், “எனக்கு தான பீலிங்ஸ சொல்ல முடியாது. உனக்குச் சொல்ல முடியும் தான?” ஷக்தியின் விழிகளில் ஒரு வித நெருப்பு படலம். அவள் முத்தம் வேண்டாமென்று கூறி இருந்தால், அவன் நெருங்கி இருக்க மாட்டான் தானே… வேண்டுமென்றே அவளைக் காயப்படுத்தி விட்டது போல அவள் கண்ணீர் உகுத்ததில் அவனது நெஞ்சம் தீயாய் எரிந்தது.

அதில் பயந்து விட்டவள், “என் மேல கோபமா இருக்கீங்களா?” எனத் தேம்பியபடி கேட்க,

“மே பி…” என்று காபியைக் குடிக்காமல் எழுந்து விட்டவன், விறுவிறுவென வெளியில் சென்று விட்டதில் அவள் விக்கித்து அமர்ந்திருந்தாள்.

தன்னைத் தனித்து விட்டுச் சென்றதில் உள்ளூர பயம் சூழ்ந்தது அவளுக்கு. அதனை முகத்தில் காட்டாது இருக்க அரும்பாடுபட்டவள், மெல்லமாய் எழுந்து வெளியில் செல்ல காபி ஷாப்பின் வாசலிலேயே ஷக்தி நிற்பதைக் கண்டு நிம்மதியுற்றாள்.

இருவரும் ஏதும் பேசவில்லை. வரும்போது இருந்த நெருக்கமும் கையணைப்பும் போகும்போது இருக்கவில்லை.

இருவருக்குள் ஏற்பட்டிருந்த இடைவெளி மறுநாள் வரையிலும் நீடித்திருந்தது. காலையில் எழும்போதே பிரகிருதிக்கு லேகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

குரலில் உற்சாகத்தை ஏற்றிக்கொண்டவள், “ஹாய் அத்தை. எப்படி இருக்கீங்க?” என உண்மையான பாசத்துடன் கேட்க,

“நல்லாருக்கேன் பிரகா. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க. ஹனிமூன்லாம் எப்படி போகுது?” என்றார் அக்கறையாக.

“நல்லா போகுது அத்தை. இங்க கிளைமேட் சூப்பரா இருக்கு” என்றாள்.

“ம்ம்… இதுவரை நான் அவனை எத்தனை தடவை இந்த மாதிரி ஹில் ஸ்டேஷன்க்கு போகலாம்னு கூப்பிட்டு இருக்கேன் தெரியுமா. அவன் வந்ததே இல்ல. நீ கூப்பிடவும் வந்துருக்கான்னா, உன் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டான் என் பையன். அவனைப் பத்திரமா பார்த்துக்கோ பிரகா” என்றதில் அவளிடம் சிறு குற்ற உணர்வு.

பால்கனியில் தனித்து நின்று காபி அருந்தி கொண்டிருந்தவனின் மீது பார்வை படர்ந்தது.

எதையும் ஆராயும் நோக்கில் பார்க்கும் ஆழ்ந்த பார்வை. அடர்ந்த கேசம். உடற்பயிற்சியால் இறுகிப் போன புஜங்கள். முகத்தில் அசாத்திய அழுத்தம். அதையும் தாண்டிய அவள் மட்டுமே உணரும் அப்பாவித்தனம். கண்களின் வழியே காட்சிப்படுத்தாத மறைக்கப்பட்ட உணர்வுகள். அதையும் பெற்ற அன்னையைத் தாண்டி அவள் மட்டும் தானே உணர்கிறாள்? அவனைப் புரிந்து கொள்ள முயல வேண்டியது அவளது கடமை அல்லவா? அதனை விடுத்து தனக்குள்ளேயே உழல்வதில் நியாயமில்லை எனப் புரிய ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளுக்கு, தன்னைப் பற்றி தெரியும்போது தெரிந்து கொள்ளட்டும் அது வரையில் அவன் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டுமென உறுதிமொழி எடுத்துக்கொண்டாள், அன்றே அந்த உறுதி தகர்தெறியப்படப்போவது புரியாமலேயே.

“ஹலோ ஹலோ” லேகா அலைபேசியில் கத்திக் கொண்டிருக்க, சட்டென நிகழ்வு மீண்டவள் “ஹான் சொல்லுங்க அத்தை” என்றாள்.

“நான் சொல்ல வந்ததை விட்டுட்டு வேற ஏதோ பேசிட்டு இருக்கேன் பாரு… பிரகா, இந்த விஷயத்துல நேரடியா உனக்கு போன் பண்றதுக்கு காரணம் உன்னால அவனை சமாளிக்க முடியும்ன்றதுனால தான்” எனப் பீடிகையுடன் தொடங்கினார்.

“என்னன்னு சொல்லுங்க அத்தை!”

“நம்ம சொந்தத்துல, ஷக்திக்கு அத்தைப் பொண்ணு ஒருத்திக்கு ஊட்டில தான் இன்னைக்கு ரிசப்ஷன் நடக்கப்போகுது. நாளைக்கு கல்யாணம். நமக்குத் பத்திரிக்கை வச்சாங்க. இங்க, உன் மாமாவுக்கு திடீர்னு வேலை வந்துடுச்சு. நீங்க ரெண்டு பேரும் அங்க தான் இருக்கீங்கன்னு சொன்னதும், ஷக்தியோட அத்தை, மகனையும் மருமகளையும் கூட அனுப்பி வைக்க முடியாதான்னு கோச்சுக்குறாங்க. நீயும் ஷக்தியும் போயிட்டு வந்துடுங்க” என உத்தரவாகக் கூற, அவளிடம் சிறு அதிர்வு.

“என்ன அத்தை திடீர்னு சொல்றீங்க?”

“எப்ப பாரு ஷக்தி மாதிரியே கேட்காத பிரகா. அவனுக்கு தான் எல்லாமே ப்ரீ பிளானா சொல்லனும்னா உனக்குமா? பேச வேண்டிய விதத்துல பேசி கூட்டிட்டுப் போயிட்டு வா…” என்றார் அதட்டலாக.

“அதில்ல அத்தை… நான் பங்க்ஷன்கு போடுற மாதிரி ட்ரெஸ், ஜுவல்ஸ் எதுவும் எடுத்துட்டு வரல” அவள் சமாளிக்க,

“ம்ம்க்கும்… உன் பக்கத்துல இருக்கறவன் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல பிரகா. கோடிக்கணக்குல டர்ன் ஓவர் பாக்குறவன். அவன் நினைச்சா பாதி ஊட்டியைவே விலைக்கு வாங்கிடுவான். ஆனா நினைக்க மாட்டான். அதான் பிரச்சினை. அவனுக்கு வர்ற ப்ராஃபிட்ல முக்கால்வாசி அவன் நடத்துற அறக்கட்டளைக்குத் தான் போகும்…” என்றார் சலிப்பாக.

இது பிரகிருதிக்குப் புது செய்தி.

“என்ன அறக்கட்டளை அத்தை?” அவள் வினவிட,

“உனக்கே தெரியாதா பிரகா… மூளை வளர்ச்சி இல்லாத பசங்களுக்குன்னு நடத்துற ஆர்கனைசேஷன் அது” என்றவர் சட்டென பேச்சை மாற்ற, “சரி சரி இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். நீ அவனோட ஷாப்பிங் போயிட்டு வந்து, பங்க்ஷன்க்கு கிளம்புங்க. லொகேஷன் அனுப்பி விடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டார்.

மீண்டும் பிரகிருதியின் கருவிழிகள் ஆடவனின் வதனத்தைத் தொட்டு மீண்டது.

தன்னைப் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்காக அவனே ஒரு அமைப்பை உருவாக்கி, உதவி செய்கிறான் எனப் புரிய அவன் மீதான மதிப்பும் அன்பும் அதிகரித்தது அவளுக்கு.

அதனை மீறியும் திருமண விழாவிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சுணங்கிப் போனாள்.

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டுத் தன்னை திடப்படுத்திக் கொண்டவள், அவனருகில் சென்றாள்.

அவளைப் பார்த்து விட்டு மீண்டும் பார்வையைத் தூரத்தில் தெரிந்த மலை மீது பதித்தான் ஷக்தி மகிழவன்.

“இன்னும் என்மேல கோபமா மகிழ்?” தழுதழுப்புடன் பிரகிருதி கேட்க,

“தெரியல மே பி. உள்ளுக்குள்ள ஒரு மாதிரி எரிஞ்சுட்டே இருக்கு. என்னால உன் கண்ணுல தண்ணி வந்தது எனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்ல ருதி” என்றான் அழுத்தமாக.

அவனது வார்த்தைகள் அவளைப் புன்னகைக்க வைத்தது. “நீங்க என்னை கம்ஃபர்ட்டபிளா தான் எப்பவும் வச்சுப்பீங்க மகிழ். நேத்து எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. டிராவல் டயர்டா கூட இருக்கும்…” எனத் தன்னை மறைத்து புன்னகை கொண்டாள்.

அவளது வார்த்தையும் புன்னகையும் போதுமானதாக இருந்தது அவனை நம்ப வைக்க.

“இப்போ நீ ஓகே தான?” அவளை ஆராய்ந்தபடி ஷக்தி கேட்க,

“ம்ம் நான் ஓகே தான். நம்ம ஷாப்பிங் போகலாமா?” எனக் கேட்டாள் வேகமாக.

“போகலாம் ருதி” என்றவனின் இதழ்களிலும் குறுநகை.

“அப்பறம், அத்தை போன் பண்ணுனாங்க” என்றதும் அவன் முகம் மாறியது.

“எனக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணுனாங்க. எனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் தான் இப்படி பண்றாங்களோ… ப்ச்” என எரிச்சல் கொண்டான்.

“போகலைனா என் மேல கோபப்படுவாங்க மகிழ்” பிரகிருதி மெதுவாய் கூற, “அப்போ நீ மட்டும் போயிட்டு வா” என்றான் வெடுக்கென.

“நான் மட்டும் எப்படி…? எனக்கு அங்க யாரையும் தெரியாதே” திணறியவளின் பாவனை கண்டு, “ப்ச் ஜஸ்ட் லீவ் மீ அலோன்” என்று மீண்டும் வெளியில் பார்வையைத் திருப்பினான்.

கண்ணில் நீர் தேங்கிட, உள்ளே சென்றவளிடம் “கிளம்பு ஷாப்பிங் போகலாம்…” என்றதில்,

“பங்க்ஷன்க்கு?” அவள் நிமிர்ந்து கேட்க,

“கண்டிப்பா போகணுமா ருதி?” சிறு சலிப்பு அவனிடம்.

“போகலைனா அத்தை கோச்சுப்பாங்க மகிழ் “

“உனக்குப் போகணும்னா சொல்லு போகலாம். அத்தை ஆட்டுக்குட்டிக்காக எல்லாம் போக முடியாது” என்றவனை விழி அகல பார்த்தவளுக்கு பொய் சொல்ல மனமில்லை என்றாலும் பொய்யே கூறினாள், “எனக்கும் போகணும்? என்று.

பின், அவளுக்காகவே அவனும் கிளம்பினான். ரிஸப்ஷன்க்கு செல்லவென்று விலையுயர்ந்த மேக்சியை எடுத்துக் கொடுத்தவன், அதற்கு தோதாய் வைர நெக்லஸ் ஒன்றையும் தேர்ந்தெடுக்க, அவளது முகம் இருண்டுப் பின் தெளிவானது.

“இந்த நெக்லஸ் உனக்கு சூட்டாகும்” என்ற ஷக்தி மகிழவன் பல லட்சங்களைத் தாங்கிய சிவப்பும் மஞ்சளும் கலந்த கற்கள் கொண்ட மினுமினுப்பான வைர நெக்லஸை எடுத்தான்.

அதனைக் கண்டு எச்சிலை விழுங்கியவள், “நல்லாருக்கு மகிழ். ஆனா இவ்ளோ காஸ்ட்லியா எதுக்கு?” எனத் தயங்கிட,

“உன்னை விட காஸ்ட்லி இல்லையே” ஒரே வார்த்தையில் அவளது மதிப்பை உணர்த்தியவனை மலைத்துப் பார்த்தாள் பிரகிருதி.

———————————

அத்தியாயம் 8

நேசம் பிறக்கும்
நேரம் எதுவென்று கேட்டால்
என்செய்வேன் பெண்ணே!

நேராய்
நோக்கும்
நொடியொன்றே போதாதா…
நின் நேசம் நான் உணர…!

———————————-

தன்னவன் ஆசையாகத் தேர்ந்தெடுத்த மஞ்சள் நிற மேக்சியும் வைர நெக்லஸும் அதனைத் தோற்கடிக்கும் விதமாக மின்னும் கம்மலும் இரண்டையும் தோற்கடிக்க முயற்சிக்கும் விதமாய் பாவையின் புன்னகையும் அவளது இதழ்களை அலங்கரித்தது.

தயாராகி வந்த பின்னரும் ஷக்தி மகிழவனின் பார்வை அவளைத் தவிர வேறு எங்கும் நகரவில்லை. அவனது பார்வையை உணர்ந்தபின்னே அவளுள் ஏற்பட்ட குறுகுறுப்பு இதயத்தை சிலிர்க்க வைத்தது.

“என்ன பாக்குறீங்க?” வேறு எங்கோ பார்த்தபடி அவள் கேட்க,

“தெரியல. பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது ருதி…” ஷக்தி மென்மையாய் பதில் அளித்ததும்,

“எவ்ளோ நேரமோ?” என்றாள் கிண்டலாக.

தீவிர சிந்தனைக்குப் பிறகு, “ம்ம்… மே பி டில் மை லாஸ்ட் ப்ரெத்” என்றதில் அவளுள் அத்தனை ஆர்ப்பரிப்பு.

“உங்களுக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா மகிழ்?” லேசாய் விழி கலங்கி கேட்டவள் சட்டென கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

தன் கண்ணீரைக் கண்டால், அவனால் காயப்படுவதற்காக எண்ணி விடுவானோ என்ற பதற்றம் அவளுக்கு.

அக்கேள்விக்கு மென்புன்னகையை பரிசாய் தந்தவனிடம், “வாய் வார்த்தயா சொல்ல மாட்டீங்க அப்படித்தான?” என உதட்டைச் சுழித்தாள்.

“சொல்ல வார்த்தை இல்ல. உங்கிட்ட உணர்த்த என் உணர்வுகளும் என்கிட்ட இல்ல. பட் உணர்த்துவேன் ருதி” அவனது கூர்பார்வை அவளது விழிகளுடன் கலக்க, தித்திப்பாய் நகர்ந்தது அந்நொடி.

பிரகிருதிக்கு கன்னமெல்லாம் சிவந்து போனது.

“நம்ம லவ் மேரேஜ் கூட இல்லை. அரேஞ்சு மேரேஜ் தான? அப்பறம் எப்படி இவ்ளோ தோணுது உங்களுக்கு” இமை சுருங்க அவன் உயரத்திற்கு கழுத்தை நிமிர்த்திக் கேட்டாள்.

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் ருதி. உன்னைப் பார்த்ததும் எனக்குத் தோணுச்சு, நீ என்கூட எப்பவும் இருக்கணும். இருப்பன்னு… அப்ப இருந்தே உன்கிட்ட என் லைஃப் மொத்தத்தையும் ஷேர் பண்ணிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன். பட், அம்மா உங்கிட்ட உண்மையை மறைச்சு தான் இதெல்லாம் ஏற்பாடு பண்ணிருப்பாங்கன்னு எனக்குத் தெரியல. தெரிஞ்சுருந்தா கண்டிப்பா இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்க மாட்டேன். உன்னால என்கூட லைஃப் லாங் இருக்க முடியுமா ருதி?” உயிர் உருக கேட்டு விட்டு பாவையைப் பார்த்தான் படபடப்பாக.

“உங்களால என் கூட லைஃப் லாங் இருக்க முடிஞ்சா… என்னாலயும் முடியும்!” உதடு துடிக்க கூறியவள், முயன்று அவனைப் பாராது தவிர்த்து விட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவளது கூற்றும் உடல்மொழியும் புரியாதவனாக ரிஸப்ஷனை நோக்கி பயணம் செய்தான் தன்னவளுடன்.

கார்டன் வியூவுடன் கூடிய பார்ட்டி ஹாலில் தான் ரிசப்ஷன் நடைபெற்றது. அதிக கூட்டமில்லை. பெரிய இடமாதலால் இருக்கும் கூட்டமும் பிரிந்து அமர்ந்து பஃபே முறையில் உண்டு கொண்டிருந்தது. அதனால் ஷக்தி மகிழவனுக்கு மூச்சு முட்டும் அளவு அழுத்தம் இருக்கவில்லை.

அதீத வெளிச்சமும் கண்ணைக் கூசும் வகையில் விளக்குகளும் பிரகிருதிக்கு தலைவலியை உண்டு செய்தது. ஆகினும் சிரித்த முகத்தை மாற்றாது, தனது அத்தையென ஷக்தி அறிமுகம் செய்த அபிராமியுடன் சேர்ந்து மற்றவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

ஷக்தியைப் பற்றி உறவினர்களுக்குத் தெரியுமாதலால் அவனைப் பற்றி அவ்வப்பொழுது குழுவாக நின்று கிசுகிசுப்புடன் பேசிக்கொண்டவர்கள் அனாவசியமாக அவனருகில் வந்து பேசவில்லை.

“மூளை வளர்ச்சி இல்லாதவனாம்… இவனுக்கு கல்யாணம் வேற பண்ணி வச்சுருக்கா பாரு லேகா…” எனச் சித்தி முறையுள்ள மல்லிகா மற்ற பெண்மணிகளிடம் குசுகுசுவெனக் கூற,

“பார்த்தா அப்படி தெரியலையே மல்லி” இது ஷக்திக்கு தூரத்து சொந்தமான பெண்மணி.

“பார்த்தா தெரியாது கவி. பேசிப் பார்த்தா தெரியும் கொஞ்சம் நட்டு கழண்டவன்னு…”

“அப்படியா சொல்ற. இரு நான் பேசிப் பார்த்துட்டு வரேன்” எனக் கவி என்றவர் ஷக்தியின் முன் சென்று நின்றார்.

“என்னப்பா நல்லாருக்கியா?” எனக் கேட்டதும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த ஷக்தி மகிழவன் அவரை யாரெனப் பார்த்தான்.

“என்னைத் தெரியல. நான் உனக்கு பெரியம்மா முறை ஷக்தி. உன் கல்யாணத்துக்கு உன் அம்மா என்னை எல்லாம் கூப்பிடவே இல்ல. எங்க உன் பொண்டாட்டி?” எனச் சுற்றும் முற்றும் தேடினார்.

அந்தப் பெண்மணிகள் பேசியதெல்லாம் ஷக்தி மகிழவனுக்கும் நன்றாகவே கேட்டது. பிரகிருதிக்கும் தான்.

ஷக்திக்கு ஒவ்வாத உணவு வகைகள் ஏதேனும் இருந்தால், தானே தட்டை நிரப்பி தரலாம் என்ற எண்ணத்தில் அவன் அருகில் நெருங்கும்போதே இந்தப் பெண்மணிகளின் நக்கல் பேச்சு தெரிந்தது.

ஷக்தி பதில் அளிக்கும் முன்னே, அங்கு பிரகிருதி வந்திருந்தாள்.

“ஹலோ. நான் தான் மகிழோட வைஃப். இவங்க யாரு மகிழ்?” என வினவினாள் புரியாத பாவனையுடன்.

“எனக்குப் பெரியம்மாவாம். பட் அவ்ளோவா பார்த்ததில்லை ருதி” என்றான்.

“ஓஹோ! சரி உங்களுக்கு சாப்பிட என்ன வேணும். தோசை ஓகேவா?” எனக் கேட்டுக்கொள்ள, “ம்ம்” எனத் தலையசைத்தான்.

இருவரும் கவியை ஒரு பொருட்டாக மதியாது போக, சுண்டிய முகத்துடன் மல்லிகாவிடம் வந்தவர், “எனக்கு ஒன்னும் அந்தப் பையனைப் பார்த்தா லூசு மாறி தெரியல மல்லி. தேவை இல்லாம போய் அசிங்கப்பட்டது தான் மிச்சம்…” என்றார் எரிச்சலாக.

மல்லிகாவோ “இரு உனக்கு நான் ப்ரூவ் பண்றேன்…” என்றவர், வேண்டுமென்றே அவனுக்கு ஒவ்வாத உணவுகளைத் தட்டில் வைத்து ஷக்தியின் முன் வைத்தார்.

“இதை சாப்பிடு ஷக்தி. எவ்ளோ நேரம் சும்மாவே இருப்ப…” என வலுக்கட்டாயமாக கையில் கொடுக்க, “எனக்கு வேணாம் சித்தி” என்றான் கண்டிப்பாக.

“சும்மா சாப்பிடுப்பா. உனக்கு சிக்கன் பிடிக்கும் தான?”

“தெரியல. ஆனா சாப்பிடுவேன்” என்றவனின் பதிலில் கவி கன்னத்தில் கை வைத்தார்.

“அப்போ உனக்கு சிக்கன் பிடிக்காதா? சரி விடு பன்னீர் எடுத்துட்டு வரேன் அது சாப்பிடுவ தான?” எனும்போதே தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தனது மகளென்று.

அந்த வாண்டு கையில் பீ பீ வைத்திருக்க, அவனது காதருகில் வந்து வேண்டுமென்றே பீப் பீப் எனச் சத்தம் கொடுக்க, மெல்ல எரிச்சலடைந்தான்.

“பாப்பா அந்தப் பக்கம் போய் விளையாடுறீங்களா?” பொறுமையை இழுத்துப் பிடித்து அவன் கூற, அந்தச் சிறுமியும் சமத்தாகத் தான் தலையசைத்தாள். ஆனால் மல்லிகா விடவில்லை. தன்னுடனே இழுத்து வைத்துக்கொண்டதில் சிறுமியின் அராஜகம் அதிகம் ஆக, ஷக்தி தலையைப் பிடித்துக்கொண்டான்.

ஒருவித இறுக்கம் சூழ அமர்ந்திருந்தவனிடம், “இப்ப ஹனிமூன் வந்துருக்கீங்களா ஷக்தி. எப்ப சென்னைக்குப் போறீங்க? உன் பொண்டாட்டியும் வேலைக்குப் போறாளா? நீங்க தனியா போய்ட்டதா லேகா அக்கா சொன்னாங்களே. இந்த பிரச்சினையோட தனியா எப்படி மேனேஜ் பண்ற?” என அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, ஏற்கனவே ‘மைண்ட் டிஸ்டர்ப்’ ஆனதில் அவரது கேள்வி எதுவும் அவனது மூளையைச் சென்றடையவில்லை.

“தெரியல… எனக்கு எனக்கு கன்ஃபியூசிங்கா இருக்கு. ருதி… ருதி…” எனத் தன்னவளைத் தேடி விட்டான் சற்று நேரத்தில்.

ஷக்தி மகிழவனின் குரல் கேட்டு ஓடி வந்த பிரகிருதி “என்ன மகிழ்? என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?” எனக் கேட்க, “ஐ திங்க், ஐ ஆம் ஓகே” என்ற ஒற்றை வார்த்தையினுள் அத்தனை நடுக்கம் அவனுக்கு.

மல்லிகா தான் அவனை ட்ரிக்கர் செய்து விட்டார் எனப் புரிய, அவரைத் தீயாய் முறைத்து வைத்தவள், “கொஞ்சம் ப்ரெஷ் ஏர் வாங்குங்க” என பார்ட்டி ஹாலுக்குப் பின்பக்கம் இருக்கும் பிரைவேட் கார்டனில் அமர வைத்தாள்.

“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க மகிழ்” என அவன் முதுகை நீவி விட,

சற்றே ஆசுவாசமானவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“பெர்மிஷன் தேவை இல்லையா?” அந்த நிலையிலும் அவள் கண்பார்த்துக் கேட்டான்.

“நீங்க என் கையைப் பிடிக்கத்தான் பெர்மிஷன் கேட்கணும். நான் கேட்கத் தேவையில்லை” மிடுக்காய் வெளிவந்தது அவளது பதில்.

அதில் அவனது மொத்த அழுத்தமும் பனிக்காற்றின் வழியே பறந்தோடிப் போனது போலான மாயை!

“உங்கிட்ட நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கேன் ருதி. உன்னை ஹக் பண்ணட்டா?” எனக் கேட்க, அவளின் முகம் சடுதியில் மாறி விட்டது.

“வேணாம் மகிழ்” என்றதில் ஷக்தி அவளை வற்புறுத்தவில்லை. “சரி நீ போய் பார்ட்டியை என்ஜாய் பண்ணு. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்” என்றான் இயல்பாக.

“ம்ம்…” அவள் எழுந்து கொள்ள, “ருதி” என அழைத்தான்.

“சொல்லுங்க மகிழ்!”

“உன் கையோட ஹீட் வேணும்” உருக்கும் பார்வை பார்த்தான் ஆடவன்.

அதில் விருட்டென அவனது கையைப் பிடித்தவள், “நான் உங்க கூட இருக்கணும்னா சொல்லுங்க இருக்கேன்” என்றாள் பரிவாய்.

“இந்தக் கேள்வியே தப்பு ருதி. நீ என்கூட இருக்க வேணாம்னு நான் சொல்ல மாட்டேன் எப்பவுமே!”

சில நொடிகள் இருவரிடமும் பேரமைதி.

“எனக்கு ஆட்டிசம் இருக்கு. பட் லூசு இல்ல ருதி. உனக்குப் புரியுது தான என்னை?” என்றதில் அவள் பொங்கி விட்டாள்.

“லூசா நீங்க?”

“அதான் இல்லைன்னு சொல்றேனே ருதி” பாவமாக அவன் கூற,

“ஐயோ அதில்ல… கண்டவங்க என்ன வேணா பேசட்டும். எனக்குத் தெரியும் உங்களை! பேசுற அவங்க தான் லூசு. இங்க உங்களைக் கூட்டிட்டு வந்துருக்கவே கூடாது. என் தப்பு தான்… உங்களை ஹர்ட் பண்ண வச்சுட்டேனா?” என்றாள் வருத்தத்துடன்.

“இல்ல ருதி. நீ கூட இருக்குறவரை ஐ அம் ஓகே” என்றவனின் மனத்தாங்கல் தன்னவளின் கோபத்தில் கரைந்து போனது.

“நீங்க இருங்க வரேன்…” என்றவள் விறுவிறுவென மல்லிகாவிடம் சென்றாள்.

சிலநொடிகளில் அவனும் அவள் பின்னே செல்ல, அங்கோ பிரகிருதி மல்லிகாவை முறைத்தபடி நின்றிருந்தாள்.

“என்னங்க பிரச்சினை உங்களுக்கு? நீங்க ரொம்பத் தெளிவோ? பெரிய சைக்கியாட்ரிஸ்ட்டு அவரைச் சோதிச்சு ப்ரூப் பண்ண வர்றாங்க… அவர கழண்ட கேசுன்னு சொல்ல உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும். அதுவும் இனி என் முன்னாடி அவரைப் பேச யாருக்கும் தைரியம் இருக்கக்கூடாது” என்றாள் கம்பீரத்துடன்.

அபிராமி பதற்றத்துடன் “என்னமா ஆச்சு?” என வினவ, “இங்க பாருங்கமா. இப்ப இவங்க இங்க இருந்து கிளம்பல. நான் என் புருஷனைக் கூட்டிட்டுக் கிளம்பிடுவேன். அப்பறம் இந்த விஷேஷம் இல்ல. ஒட்டுமொத்தமா எந்த விசேஷத்துக்கு என் குடும்பத்துல இருந்து ஈ காக்கா கூட வராது” எனத் தீர்மானமாய் உரைத்தவளின் அதிகாரத் தோரணையில் அசந்து நின்றது அபிராமி மட்டுமல்ல ஷக்தி மகிழவனும் தான்.

திடீரென விழாவிற்கு வருகைத் தர வேண்டியதாகப் போனாலும், மணப்பெண்ணிற்கும் வைர மாலையைப் பரிசாக வாங்கி இருந்தான். இதுவரை அவனை மட்டுமாக எந்த விழாவிற்கும் உறவினர்கள் அழைத்ததில்லை. முதன்முறை, திருமணம் ஆனதால் தான், அதுவும் லேகாவின் கட்டாயத்தின் பெயரிலேயே அங்கு அனுமதித்தனர். ஆனால், அவன் விலையுயர்ந்த பரிசை வாங்கி வருவானென அபிராமியே எண்ணவில்லை. வியந்து போயிருந்தார்.

அதில் அவன் மீது தனிப்பட்ட அபிப்ராயமும் எழ, பிரகிருதி கோபப்பட்டதும் பதறி விட்டார்.

“ஏன் மல்லி… எங்க எதை பேசுறதுன்னு விவஸ்தை இல்லையா உனக்கு? என்ன இருந்தாலும் என் நாத்தனாரோட பையன் அவன். அவனை எப்படி தப்பா பேசலாம்… நீ முதல்ல கிளம்பு” என்று மல்லிகாவுடன் சண்டையிட்டு அவரை அனுப்பி வைத்த பிறகே பிரகிருதி தனது ஆட்டத்தை நிறுத்தினாள்.

ஷக்தி மகிழவன் தான், “ரிலாக்ஸ் ருதி. ஏன் இவ்ளோ லவுடா பேசுற. சில்” எனச் சமன்படுத்த முயல, “உங்களை பத்தி யார் பேசுனாலும் நான் அமைதியா இருக்க முடியாது மகிழ்” என்றாள் இன்னும் சினம் தீராதவளாக.

அவளது உடல்மொழியில் கோபத்தை உணர்ந்தவனுக்கும் எப்படி எதிர்வினையாற்றுவதென்று தெரியவில்லை. ஆனால், மனதில் அழுத்தம் முற்றிலும் குறைந்திருந்தது. இதழ்களில் குட்டி நகை வீற்றிருக்க, அந்த புன்னகையின் ஆயுள்காலம் குறைவென்று அறியாதவனாக, அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தான் ஷக்தி மகிழவன்.

உறவு தொடரும்

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!