உயிர் 23
நேஹாவோ பதறியபடி மீனாட்சியின் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
கிட்டத்தட்ட ஆதியை ஒருவழி செய்திருந்தான் ஈஸ்வரன்.
அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு.
உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அனல் மொத்தமும் ஆதியிடம் தீப்பிழப்புகளாக வெடித்துச் சிதறியது.
நேஹாவிற்கோ இவனுக்கு இவ்வளவு கோபம் வருமா…?எனத் தோன்றியது.
மீனாட்சியின் அலைப்பேசி ஐந்தாறு முறைக்கு மேல் அடித்து ஓய்ந்தது.
சங்கர பாண்டியனுக்கு அழைக்க முயன்று அந்த முயற்சியை கைவிட்டாள்.
மருத்துவர்கள் அவனுக்கு முதலுதவி அளித்தனர்.
“ எப்படி இப்படி ஆச்சு…?” என்றார் மருத்துவர்.
“ அது வந்து…” என நேஹா ஆரம்பிக்கும் முன்பே , “வண்டில இருந்து விழுந்துட்டேன் சார்…ஸ்..ஸ்..ஆ..” என வலியில் முகம் சுளித்தான்.
“ பார்த்தா அப்படி தெரியலையே…?”
“ சார் ஃபர்ஸ்ட் அவருக்கு டிரிட்மெண்ட்டை ஆரம்பிங்க…அவனால கையை அசைக்கக் கூட முடியலை…ப்ளீஸ்…என்னாச்சுன்னு பாருங்க..” என்றாள்.
“ ஓகே…ஓகே… நர்ஸ்… எமர்ஜென்சி வார்டுக்கு அழைச்சிட்டு போங்க…* என்றார்.
மீனாட்சி வேலையாக இருந்ததால் அலைப்பேசியின் ஒலி அவள் காதில் விழவில்லை.
சமையலை முடித்து விட்டு வந்தவள் தனது அலைப்பேசியை பார்த்தாள் .
நேஹா ஐந்திற்கும் மேற்பட்ட அழைப்புகளை விடுத்திருந்தாள்.
“ ஏன் இம்புட்டு தரம் கூப்ட்ருக்கா.?” என யோசித்தபடியே அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.
முதல் அழைப்பிலேயே எடுத்த நேஹா பதட்டத்துடன்,” மீனாட்சி…எங்க இருக்க? என்ன பிரச்சினைன்னு தெரியலை…ஈஸ்வரன் ஆதியை போட்டுஅடி அடின்னு அடிசசிட்டார். ஆதிக்கு ரொம்ப அடி…இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்…நீ கொஞ்சம் வர்றியா..? ஆதியால கை, காலை அசைக்கவே முடியல….ப்ளீஸ் மீனாட்சி….” என்றாள்.
மீனாட்சியோ சற்று திகைத்தாலும் ஈஸ்வரனின் நியாமான கோபத்தை அறிந்தவள் தானே…அவன் செய்தது நியாயமாகவே தோன்றியது.
“ மீனாட்சி…. மீனாட்சி…. லைன்ல இருக்கியா…?” என்றாள் நேஹா…
மீனாட்சியோ சாதாரணமாகவே, “ இப்ப என்ன பண்ணனும் நேஹா…?அவரு பண்ண தப்புக்கு தான் மாமா அடிச்சிருப்பாக. கண்டிப்பா உயிரு போயிடாது…கை காலை அசைக்க கொஞ்சம் நாளாகும் அம்புட்டுதேன்…நீ வடிவத்தைக்கு ஃபோன் போடு…அவுக வந்து பாத்துப்பாக…அவங்க மவனை…” என எள்ளலுடன் கூறினாள்.
எந்த ஒரு உயிரையும் சிரமப்படுத்த நினைக்காதவள்… எள் என்றால் எண்ணெய்யாக இருப்பவள் இன்று தாலி கட்டிய கணவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பது அவளை பெரிதாக பாதிக்கவில்லை போலும்…செய்த தவறுக்கு ஈஸ்வரன் தண்டனை கொடுத்துள்ளான் என்று தான் நினைத்தாள்.