லண்டனுக்கு கிளம்ப எண்ணிய நேஹா தனது நண்பனின் உடல்நலம் கருதி பத்து நாட்கள் கள்ளிக்குடியிலேயே தங்க வேண்டியதாயிற்று.
மருத்தவமனையிலிருந்து தேனிக்கு செல்வதா..? இல்லை கள்ளிக்குடிக்குச் செல்வதா..? என்ற குழப்பம் ஆதிக்கு.
வடிவாம்பாளோ ,” நீ தேனிக்கு வந்துரப்பு….அங்க போனா உனக்கு செய்யறதுக்கு யார் இருக்கா..?உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ தெரியாது….ஆனா எல்லாத்தையும் சீக்கிரம் பேசி சரி பண்ணிடு…யாருதேன் இந்த உலகத்துல தப்பு பண்ணல…அதையே நினைச்சு வாழ்க்கையை வீணடிச்சுக்க கூடாது. அடுத்தடுத்து வேலையை பாக்கனும்.”
” ம்ம்ம்..” என பெருமூச்சு விட்டவர் ,” காரை வரச்சொல்லனும்…நீ எங்க வர்ற..?சொல்லுப்பா…” என்றார்.
“அம்மா…நான் கள்ளிக்குடிலயே இருக்கேன். இங்க பள்ளிக்கூடம் கட்டுற வேலை அப்படியே நிக்குது. சீக்கிரம் முடிச்சி கொடுத்துட்டு நான் லண்டன் கிளம்பனும் மா.” என்றான்.
“சரி அப்ப உன் கூட நானும் இங்கனயே தங்கிக்குறேன்…”
“ அம்மா…ப்ளீஸ்…நீங்க தேனிக்கு கிளம்புங்க…நான் பாத்துக்குறேன்…உங்களுக்கு இங்க என்ன வேலையிருக்கு..? ஊர்ல கரும்பையெல்லாம் கட்டி வெளியூருக்கு அனுப்புற வேலயிருக்குதுல்ல…அதைப் போய் பாருங்க….” என திட்டவட்டமாக அவர் தங்குவதை மறுத்துவிட்டான்.
இங்கிருந்தால் கண்டிப்பாக கோமதியிடமும் மீனாட்சியிடமும் வம்பிழுத்துக் கொண்டிருப்பார் எனத் தெரியும் அவனிற்கு.
எனவே அவரை ஊருக்கு அனுப்புவதே சரியெனத் தோன்றியது .
பத்து நாட்களும் மருத்துவமனையிலிருந்து பார்த்துக் கொண்டு அரை மனதாக ஊருக்கு கிளம்பிச் சென்றார்.
மயில்வாகனம் அடிக்கடி அலைந்தால் உடல்நலம் சரியில்லாமல் போய்விடுவதால் அவர் தேனியிலேயே இருந்தார்.
மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு மாதம் ஆயிற்று .
அந்த பெரிய வீட்டில் அவன் மட்டுமே தனி ஆளாக இருந்தான்.
கோமதி தங்களுடைய வீட்டிலிருந்து தான் அவனிற்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்து தருவார்.
முதலில் மறுத்த ஆதி பிறகு நிதர்சனம் புரிய அவரது உதவியை ஏற்றான்.
கிளம்புவதற்கு முன்பு ஈஸ்வரனிடம் , “ உங்க கோபம் புரியுது…ஆனா ஆதியும் நல்லவன் தான். ஏனோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டான். நீங்க இழந்ததை கண்டிப்பா மீட்டெடுத்துடுவீங்க. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கோங்க. அது நானா இருந்தா இன்னும் சந்தோஷம். என்னவோ தெரியல இப்பயெல்லாம் உங்கள ரொம்ப பிடிக்க ஆரம்பிக்குது. லவ் வான்னு கேட்டா தெரியலை….ஆனா உங்க கூட என்னோட வாழ்க்கை இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது….” என்றாள்.
“ புத்தி கெட்டதனமா பேசாத..உனக்கான வாழ்க்கை இது இல்ல..உனக்கான வாழ்க்கை அங்கனதேன் இருக்கு. நீ பாக்குற வேலையை விட்டுட்டு இங்கன வந்து இருப்பியோ..?என்ன உங்கிட்ட ஒரு பத்து கோடிக்கு சொத்து இருக்குமா..? அம்புட்டையும் வித்துபுட்டு இங்கன …இந்த கிராமத்துல வந்து இருப்பீகளோ…? சிரிப்பு காமிக்காம கிளம்புற வழியைப் பாரு. காசு இருந்தா என்னத்தையும் பேசலாம்…” என்றான்.
சுருக்கென்று அவளுக்கு. ஆயிரம் கோடிக்கு அதிபதி அவள்.
தன்னுடைய உயரம், தகுதி, அந்தஸ்து எதைப் பற்றியும் சிறிதும் யோசிக்காமல் அவனிடம் கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“ எனக்குன்னு யாருமில்லை.
இங்க உங்களையெல்லாம் பாத்த பிறகு உங்க கூடவே இருந்திடனும் தோணுது. எனக்கு வேற எப்படி சொல்றதுன்னு தெரியலை. பட் ஐ ஃபீல் சம்திங் ஸ்பெஷல் வித் யூ… வெயிட் பண்றேன்…எவ்வளவு நாளானாலும் வெயிட் பண்றேன்…நீங்க உங்க கமிட்மெண்டெல்லாம் முடிச்சிட்டு வாங்க…ம்ம்கூம்…சொல்லுங்க… நானே வர்றேன்…உங்களைத் தேடி….பை…” என்றவள் சுற்றமுற்றும்பார்த்து விட்டு , “ அதுவரைக்கும் என் நியாபகமா…”என்றவள் எக்கி அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டாள்.
“ஏய்…ஏய்…!நில்லுடி….வந்தேன்…கொன்னேபுடுவேன்…” என கத்தினான்.
அன்று காலை ஆதி குளித்து விட்டு இடையில் டவலுடன் ஒரு கையிலும் ஒரு காலிலும் கட்டுடன் மெதுவாக கெந்தி கெந்தி நடந்து வந்தான்.
கீழே இருந்த ஈரத்தை கவனிக்காதவன் வழுக்கி கீழே விழுந்தான்.
வலி உயிர் போனது, “ஸ்… ஆ….ஆ…” என முணங்கினான்.
தற்செயலாக அவனுக்கு சாப்பாடு கொடுக்க வந்த மீனாட்சி இதனை பார்த்துவிட்டாள்.
எழுந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
தோய்ந்து போய் அமர்ந்தான்.
தன்னுடைய நிலையை எண்ணி முதன்முதலாக கோபம் வந்தது.
“ ஆஆஆஆ….” என வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.
சாப்பாட்டினை மேசையின் மீது வைத்தவள் ஓடிச் சென்று அவன் எழுத்துக் கொள்ள உதவினாள்.
ஆறடி உயரத்தில் திடகாத்திரமாக இருந்தவனை தளிர்மேனியுடையவளால் எழுப்பி நிற்க வைக்க முடியவில்லை.
அவளும் சேர்ந்து அவன் மீதே விழுந்தாள்.
அது வேறு இன்னும் வலியை அவனுக்கு கொடுக்க , அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
வீட்டின் பின்புறம் சென்று தொழுவத்தில் இருந்த மணியின் உதவியோடு அவனைத் தூக்கி மெல்ல அழைத்து வந்து அவனறையிலுள்ள கட்டிலில் அமர வைத்தாள்.
பின்னர் வலியில் முகம் சுருங்கி கொண்டிருந்தவனிடம், “உங்க உடுப்பு எல்லாம் எங்கன இருக்கு..?” என்றாள்.
“அந்த கப்ஃபோர்ட்ல இருக்கு…ஷ்ஷ்…ப்பா..” என்றான்.
குத்துமதிப்பாக சில ஆடைகளை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
ஆடையை திருப்பி திருப்பி பார்த்தவன்,மெல்ல எழுந்து கொள்ள முயற்சித்தான்.
“ அதான் எடுத்து கொடுத்துட்டேன்ல திரும்ப எழுந்து கீழ் விழுகுறதுக்கா…?” என எரிச்சலுடன் கேட்டாள்.
“ம்ம்…ட்ரெஸ் மட்டும் தான் எடுத்து கொடுத்திருக்க…இன்னர்ஸ் வேணுமே…அதான்…”
இன்னர்ஸ் என்ற வார்த்தையை புகழினி பயன்படுத்துவாள் என்பதால் அதன் அர்த்தம் உணர்ந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதீத வலியுடன் தேக்கி தேக்கி நடந்து வந்தவன் அவளருகே நெருக்கமாக நின்றான்.
இத்தனை பக்கத்தில் இடையில் டவலுடன் அவனை பார்த்தவளுக்கு தூக்கிப் போட்டது.
பதட்டத்தில் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ள வந்தாள் ,அவன் அவளின் பின்னாலிருந்த கப்ஃபோர்டை எக்கித் திறந்து தன்னுடைய உள்ளாடைகளை எடுத்தான்.
அவளோ அருவருப்புடன் முகத்தை சுளித்தாள்.
ஈஸ்வரனுடன் கைக்கோர்த்து நடந்த போதும் ,அவனது தோளில் சாய்ந்து இருந்த கணத்தில் கூட அவளுக்கு இவ்வளவு அசௌகரியமாக இருந்ததில்லை.
அவளது முகச்சுளிப்பு அவனை அதிகமாக காயப்படுத்தியது.
மெல்ல எடுத்துக் கொண்டு அவளை விட்டு நகர்ந்தவன் , அவளை திரும்பி பாராமலே கரகரப்பான குரலில், ”உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றி மீனாட்சி…! போய்டு…நான்…நானே…என்னை பாத்துக்குறேன்…. போகும் போது கதவை மட்டும் லேசா சாத்திட்டு போ…” என்றான்.
அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அவளது அருவருப்பான முகமே மனதில் ஆழப் பதிந்து போனது.
கணவன் மனைவிக்கான உறவில் அருவருப்பும் , வெறுப்பும் அந்த திருமண பந்தத்தையே பலகீனமாக்கும்.
அந்த பலகீனமான உறவை அவன் விரும்பவில்லை.
ஏதோ ஒரு புள்ளியில் தன் காதல் கைசேரும்.. மீனாட்சி தன் அன்பை புரிந்துகொள்வாள் என்று நினைத்தவனுக்கு இப்போது அந்த நம்பிக்கை சரிந்து கொண்டே வந்தது.
அதற்கு பிறகு அவளை ஆதி சந்திக்கவில்லை.
நான்கு மாதங்கள் கழிந்திருந்தது.
அவர்களின் உறவில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஓரளவிற்கு தேறியிருந்தான் ஆதி.
ஆனால் கை, கால்களை ஓரளவிற்கு மேல் அசைத்தால் வலி ஏற்பட்டது .
லண்டனுக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டான்.
கோமதியின் வீட்டிற்கு வந்தான்.
கோமதி சங்கரபாண்டியனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.
“ அத்தை….மாமா…நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல லண்டனுக்கு கிளம்பறேன். “ என மொட்டையாக கூறினான்.
கோமதியோ, “ அப்ப மீனாட்சி…?” என்றார்.
“ அது…அவ…அவளுக்கு விருப்பமில்லாம தானே கல்யாணம் நடந்தது…அவ என் கூட வர மாட்டா…அவளுக்கு இந்த ஊர் தான் பிடிச்சிருக்கு…உங்க கூட இருக்க அவளுக்கு பிடிச்சிருக்கு …அவளுக்கு பிடிச்சவங்களும்…இங்க..தானே” என முடிப்பதற்குள், “ நானும் உம்ம கூடவே வர்றேன்…நான் இங்க இருந்தா சரிப்படாது. ஈஸ்வரன் மாமாவும் கல்யாணத்தை பத்தி யோசிக்காது….எனக்கும் டிக்கெட் போடுங்க…” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
ஆதிக்கு தன் காதுகளை நம்பவே முடியவில்லை .
ஆனால் கடைசியாக அவள் சொன்ன வாக்கியம் அவனது நெஞ்சை தைத்தது.
“ அப்பவும் அவனுக்காக தான் பாக்குறாளா..? என் நினைப்பு கொஞ்சம் கூட அவளுக்கு இல்லையா…?” என மனம் வெந்து போனான்.
உடலும் மனமும் இறுகிப் தான் போனது.
லண்டனுக்கு கிளம்புவதற்கு முன்பு மீனாட்சி ஈஸ்வரனை சந்தித்து பேசி விட்டு தான் கிளம்பினாள்.
அடுத்த இரண்டு நாட்களில் மீனாட்சியுடன் லண்டனுக்குப் பறந்தான் ஆதி.