எத்தனை வலிகளை அவன் கடந்து வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த வேதவள்ளிக்கும் கண்களில் கண்ணீர்.
அவன் கூறுவது பொய்யாக இருக்குமோ என்ற ஐயம் கூட இல்லை. அத்தனை நம்பிக்கை அவன் மேல்..
“அவ சொல்றது எதுவும் உண்மை இல்லடி. நான் அவளை காதலிக்கலைனா செத்துடுவேன்னு சொன்னா.. அவ காதல் உண்மைன்னு நினைச்சு நான் அவளை காதலிச்சேன்.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, எனக்கே தெரியாம அவ பர்த் கண்ட்ரோல் பில்ஸ் யூஸ் பண்ணிட்டு இருந்தா கடைசியில் குழந்தை பிறக்காததுக்கு நான் தான் காரணம்னு சொல்லிட்டு விவாகரத்தும் பண்ணிட்டு போயிட்டா.. இதில் என் தப்பு என்னடி இருக்கு?” என்று அவன் ஆதங்கமாக கேட்கவும்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இருந்தோ கண்ணீர் வேகமாக வெளியேறியது.
அவளால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தன்னவன் வேறொருத்தியை காதலித்திருக்கிறானா..
திருமணம் முடித்திருக்கிறானா..
அவளுடன் குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணி இருக்கிறானா..
அப்பொழுது அனைத்திலுமே நான் இரண்டாவது தான் என்று எண்ணும் பொழுதே அவளுக்குள் பெரும் வலி எழுந்தது.
அவளின் நிலை அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால், என்ன சொல்லி அவளை சமாதானம் செய்வது என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை.
இதற்கு மேல் இங்கே இருப்பது வீண் என்று தோன்றவும், “வீட்டுக்கு போய் பேசிக்கலாம் டி” என்றவனோ அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
சீதாவும் ராமுடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்தாள். முன்னதாகவே ஏன் இந்த விஷயத்தை எல்லாம் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று.
ராமும் அனைத்து விஷயத்தையும் கூறி முடிக்கவும். இப்பொழுது சீதாவிற்கும் சூர்யாவின் மேல் பரிதாபப்படுவதா அல்லது வேதவள்ளியை நினைத்து பரிதாபப்படுவதா என்று புரியவில்லை.
அவர்களின் கார் வீட்டிற்கு செல்லாமல் அவர்களின் கெஸ்ட் ஹவுஸை நோக்கி சென்றது.
“இந்த நேரத்தில் வீட்டுக்கு போனா தாத்தா நம்ம முகத்தை பார்த்து ஏதோ பிரச்சனைனு நினைச்சிடுவார். இன்னைக்கு நாம இங்கேயே இருக்கலாம்” என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தான்.
அவன் கூறியதை எல்லாம் செய்தாளே தவிர, அவளிடம் எதிலுமே சற்றும் உயிர்ப்பில்லை.
நுழைந்ததுமே அவளை இழுத்து இறுக்கமாக தனக்குள் புதைத்துக் கொண்டான் சூர்யா.
அவளுக்கும் அவனின் அணைப்பில் இருந்து விடுபட மனமில்லை. அதே நிலையில் இருந்தவளின் கண்ணீர் மட்டும் நிற்காமல் சுரந்தது.
“சாரி டி.. உன்கிட்ட நான் இது எல்லாத்தையும் முன்னாடியே சொல்லி இருக்கணும். சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோன்ற பயமும் இருந்துச்சு. ஆனாலும், தப்பு தான்.. என்னை மன்னிச்சிடு”.
“எனக்கு உங்களுடைய சிச்சுவேஷன் நல்லாவே புரியுது சூர்யா. அவங்க உங்களை எவ்வளவு ஹர்ட் பண்ணிட்டு போயிருக்காங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனாலும், என்னால ஏத்துக்க முடியல.. எல்லாத்துலயும் நான் ரெண்டாவது தான் இல்ல” என்றாள் ஆதங்கமாக.
“ஆமா, நீ ஃபர்ஸ்ட் கிடையாது. ஆனால், அவளை விட உன் மேல நான் பல மடங்கு காதல் வச்சிருக்கேன் டி. அவளாவது என்னை என் பின்னாடியே சுத்தி செத்துடுவேன்னு மிரட்டி லவ் பண்ண வச்சா.. ஆனால் நீ அப்படி எதுவுமே செய்யல.. என்னை விட்டு விலகி விலகி போன.. நானே தான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்படி பார்த்தா என்னுடைய உண்மையான காதல் அவளுக்கு கிடைக்கல.. உனக்கு தான் டி கிடைச்சிருக்கு”.
வேத வள்ளிக்குமே அவனின் நிலை புரிந்தது. ஆனாலும், ஏற்றுக்கொள்ள தான் முடியவில்லை.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் தளும்பி கொண்டே இருந்தது.
“அவ சொல்ற மாதிரி நமக்கு குழந்தை பிறக்காதுனு நினைத்து பயப்படுறியா டி?”.
அவனுக்கு ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைத்தவள், “எப்படி இருந்தாலும் நீங்க அவளோட தான ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருக்கீங்க” என்றாள் தன் மூக்கை உறிஞ்சியபடி.
இப்படி ஒரு கேள்வியை அவளிடம் இருந்து அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு என்ன தான் கூறுவான் ஆம் என்று கூறினால் அவள் மனம் எப்படி பாதிக்கும் என்பது அவனுக்கும் நன்கு புரிந்தது. ஆனாலும், உண்மை அது தானே..
எந்த ஒரு பெண்ணாளுமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தானே இது.
தன் கணவன் வேறொருத்திக்கு சொந்தமான பிறகு தான் தனக்கு சொந்தமாகி இருக்கிறான் என்பது தெரிய வந்தால் எந்த ஒரு பெண்ணால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனாலும், தனக்கு இவள் மேல் இருக்கும் காதல் உண்மை என்பதை இவளுக்கு எப்படியாவது வெளிப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் அவனிடம் நிறையவே இருந்தது.
அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளின் கன்னத்தை தன் கையில் தாங்கியவாறு அவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டான், “இங்க பாரு, நீ சொல்றது எல்லாமே உண்மை தான். என் வாழ்க்கையில முதல்ல வந்தது அவ தான். அதை என்னால இனி மாத்த முடியாது டி.. அப்படி எனக்கு மட்டும் மாத்த ஒரு சான்ஸ் கிடைச்சா நிச்சயமா நான் எப்பயோ மாத்தி இருப்பேன். லைஃப்ல எதையும் டெலிட் பண்ற ஆப்ஷன் இல்லையே.. அப்படி இருந்தா பலருமே அவங்களுக்கு பிடிக்காத சம்பவத்தை எரேஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. பட், அதை ஏத்துக்கிட்டு கடந்து போவது தானே வாழ்க்கை.. எனக்கு உன்னுடைய சிச்சுவேஷன் புரியுது. ஆனா, எந்த விதத்திலயுமே நான் உன்னையும் அவளையும் கம்பேர் பண்ணி பார்த்தது கிடையாது. அப்படியே கம்பேர் பண்ணி பார்த்திருந்தாலும் அவளை விட எல்லா விதத்துலயுமே நீ தான் டி பெஸ்ட்.. என்னுடைய முழு காதலும் முழு மனசோட உனக்கு தான் கிடைச்சிருக்கு. அவளும் நானும் கல்யாணம் பண்ணி வாழ்ந்தோம் தான். ஆனால், அவளுக்கு என்னுடைய குழந்தை கிடைக்கல.. அதுவும் உனக்கு தான் டி கிடைக்கப் போகுது” என்று எது எதுவோ பேசி அவளை சமாதானம் செய்தான்.
அவனின் சமாதான மொழிகளில் கொஞ்சமாக அவளின் முகம் தெளிவடைவதை கண்டவன் அவளின் நெற்றியில் தன் இதழை அழுத்தமாக பதித்தான்.
அவளின் கண்கள் தானாக மூடிக்கொண்டது.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவன் அவளின் முகம் முழுவதும் முத்தமழையை பொழிய துவங்கி விட்டான்.
அவளை அப்படியே தன் கையில் ஏந்தியவன் அறைக்குள் சென்று அவளை மஞ்சத்தில் சரித்து அவளோடு இரண்டற கலக்க துவங்கி விட்டான்.
அவளுக்கும் அவனை தடுக்க தோன்றவில்லை. முழு மனதோடு அவனை ஏற்க முடிவெடுத்து விட்டாள்.
இந்த விஷயத்தை அவளிடம் கூறாமல் இருந்ததால் அவனுக்குள் தோன்றிய அழுத்தமும் இப்பொழுது முற்றிலுமாக அவனிடம் இருந்து விலகி இருந்தது. அவளோடு முழு மனதோடு ஒன்றிணைந்தான்.
முழு மனதோடும் முழு காதலோடும் அவளில் உருகி குழைய.. தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றனர்.
அவளும் அவனை மொத்தமாக தனக்குள் உள்வாங்கிக் கொண்டாள்.
சட்டென்று அக்ஷ்ராவின் வார்த்தைகள் அவளின் செவியை தீண்டியது. இதே போல் தானே அவளுடனும் உருகி குழைந்து இருப்பான் என்று எண்ணும்பொழுது அவளின் விழியோரம் நீர் கசிந்தது.
அவனுக்கு ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவள், “இப்படி தானே அவங்களோடவும் ஒன்னா இருந்திருப்பீங்க?” என்று ஒரே வார்த்தையில் அவனை வலிக்கச் செய்தாள்.
ஆம், கத்தி இன்றி ரத்தம் இன்றி அவனின் மனதை கூறு போட்டு விட்டாள்.
வலிக்கிறது தான்..
ஆனாலும், அவளுக்கு இதைவிட அதிக வலி இருக்குமே என்பதை உணர்ந்தவன். தன் வலியை கைவிட்டு அவள் வலியை போக்க முடிவு செய்து விட்டான்.
எவ்வளவு தான் முயற்சித்தாலும் அவளால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை. மனம் முழுக்க அக்ஷ்ராவின் வார்த்தையால் ரணமாக இருந்தது.
“இந்த விஷயத்துல உன்னை எப்படி சமாதானம் செய்வதுனு எனக்கு சத்தியமா தெரியலடி. ஆனா, நீ எனக்கு அவளை போல இல்லை. நீ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. அவளோட இனி உன்ன கம்பேர் பண்ணாத டி. அவ உன் ஓரத்துக்கு கூட வர முடியாது. நீ ரொம்ப பியூர்.. எனக்கு உன்ன அவ்வளவு பிடிக்கும். நான் என்ன செஞ்சா நீ இந்த விஷயத்தை மறப்பனு சொல்லு நான் செய்றேன்”.
எதையாவது செய்து அவள் மனதிலிருந்து இதை அழித்துவிட மாட்டோமா என்ற முனைப்பு தான் அவனிடம்.
ஆனால், அவளுக்குள் இருக்கும் வலி வடுவாய் மாறுமே தவிர, முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை அவன் அப்பொழுது அறியவில்லை.
இருவருக்குமான முதல் கூடல் தான்..
ஆனால், இருவருமே மன நிறைவாக இல்லை. இவருக்குள்ளும் பல வருத்தங்கள்.
அப்படியே அன்றைய நாள் கழிந்தது. மறுநாளே வீட்டிற்கு வந்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்புக்கு திரும்ப நினைத்தாலும் அவளால் முடியவில்லை.
அவளுக்காக என சூர்யா அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான். தன் வாழ்க்கையில் அவளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்த வேண்டி அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான்.
அவள் மேல் தான் கொண்டுள்ள காதலை அவளுக்கு தினம் தோறும் உணர்த்திக் கொண்டே இருந்தான். ஆனாலும், ஒரு நாள் கூட அவன் அவளை விட்டு விலகி இருக்கவில்லை. சிறு விலகல் கூட அவர்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் பெரிதாக இருந்தது.
எனவே, என்ன ஆனாலும் அவளுடன் ஒன்றிணைந்து தான் இருந்தான்.
அவளுக்குமே அவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் இல்லை.
இப்படியே அவர்களின் நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழிந்து கொண்டிருக்க.
அன்று வேதவள்ளியின் தந்தையின் இறந்த தினம்.
அன்று தானே சூர்யாவின் தாயும் தந்தையும் கூட இறந்தார்கள்.
அவளிடம் அனைத்து உண்மையையும் அன்றே சூர்யா கூறிவிட்டான்.
எத்தனை விஷயங்களை தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஏற்கனவே, அவனுக்கு இரண்டாம் மனைவி என்ற ஆதங்கம். இதில், தன் தந்தையின் இறப்பிற்கு அவனின் தந்தை தான் காரணம் என்ற உண்மை தெரிந்த பிறகு அவளால் நிதானமாகவே இருக்க முடியவில்லை.