அன்றைய உணவு நேரம் முன்னே எப்படி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி அவர்களுக்கு கை துடைக்க துவாலையும் கொடுத்து பிறகு தாங்கள் உண்பார்களோ அதே போலவே இன்று பெண்கள் மூவருக்கும் உணவு வேளையில் பணிவிடை செய்தார்கள் அந்த வீட்டின் ஆடவர்கள்.. அதன் பிறகே அவர்கள் உணவு உண்டார்கள்..
முதல் முறையாக அந்த வீட்டில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இருந்தது.. உணவு உண்டுவிட்டு சக்தியோடு ப்ருத்வி விளையாட போகிறேன் என்று அவளை தூக்கி கொண்டு போயிருந்தான்.. அவளும் தன் சித்தப்பாவோடு நன்கு ஒட்டிக்கொண்டாள்..
இந்தரோ “டேய்.. நானே அவளை பொறந்ததுலருந்து பார்க்காம இன்னிக்கு தான் பார்க்கறேன்.. அதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு நான் இவளை யார்கிட்டயும் தரமாட்டேன்” என்று சொல்லி முதலில் மறுத்தான் தான்..
ஆனால் அதன் பிறகு ப்ருத்வி சொன்ன வார்த்தையில் தன்னாலேயே குழந்தையை அவனிடம் கொடுத்து இருந்தான்..
“டேய்.. எனக்கு புரியுது டா.. ஆனா விழி இந்த வீட்டை விட்டு போனப்ப நீ எவ்வளவு நாள் ரொம்ப வெறுமையா இருக்குன்னு சொல்லி சின்ட்டூவை உன்னோட வெச்சுக்கிட்டு விளையாடுவ.. இப்ப எனக்கும் அப்படிதான்டா இருக்கு.. தனியா உட்கார்ந்திருந்தா மானு நெனைப்பும் சின்ட்டூ நெனைப்புமாவே இருக்குடா.. எவ்வளவு நேரம் தான் என் புலம்பலை எல்லாம் கர்ணா கிட்ட புலம்பி அவன் உயிரை எடுக்கிறது.. பாவம் டா அவன்.. சக்தியோட சிரிப்புல என் மனசு கொஞ்சம் லேசாயிடுது டா..”
அவன் கண்களும் கலங்கி இருக்க அதற்கு மேல் சக்தியை கொடுக்காமல் இருப்பானா இந்தர்..
“போடா… அவளை தூக்கிட்டு போய் விளையாடிட்டு இரு..” என்று சொல்லி அவனிடம் சக்தியை கொடுத்து அனுப்பினான்.
இரண்டடி எடுத்து வைத்தவன் இந்தர் புறம் திரும்பி “ஆமா வில்விழியை கூட தான் நீ மூணு வருஷமா பாக்கல.. இப்பதானே அவளோட சேர்ந்துருக்க.. அவ மூணு வருஷமா தனியா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காடா.. அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணு..”
அவன் சொன்னதை கேட்டு இதழ் விரித்தவன் “நீ சொல்றதும் கரெக்ட் தான்.. சரிடா.. நீ குழந்தையை எடுத்துட்டு போ.. நான் அவளை பாக்குறேன்..” என்றான் தனிச்சையாக..
தங்கள் அறைக்கு வந்தவன் வில்விழி அலமாரியை திறந்து கொண்டு அப்படியே கண்கள் கலங்க நின்றிருப்பதை பார்த்தான்..
அவனுக்கு புரிந்தது.. அந்த அலமாரியில் அவளுடைய ஆடைகள் அவள் எப்படி வைத்து விட்டு போயிருந்தாளோ அதே நிலையில் தான் இப்போதும் இருந்தன..
அவ்வப்போது அவள் புடவை ஒன்றை எடுத்து தன் நெஞ்சில் இறுக்கியபடி அவளை நினைத்து மருகிக் கொண்டிருப்பான் இந்தர்..
மூன்று வருடங்களாக இப்படிப்பட்ட தாப வாழ்க்கையையே அவன் வாழ்ந்திருக்கிறான் என்று உணர்ந்தவளுக்கு தன்னவனின் வலி அவளுக்குள்ளும் வலியை தான் கொடுத்தது..
ஆனால் இங்கேயே இருந்திருந்தால் தன் கனவுகளை மொத்தமாய் அழித்து சகுந்தலாவை போல் தன்னையும் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்திருப்பார்கள் என்று தெரிந்துதான் அவள் இங்கிருந்து விலகிச் சென்றிருந்தாள்..
அவளுக்கு நெஞ்சில் அப்படி செய்வதற்கு நிறைய சக்தி தேவையாக இருந்தது.. வேறு வழியின்றி மனதை பாறையாக்கிக் கொண்டுதான் அவள் இந்தரை விட்டு பிரிந்தாள்..
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் இப்போது திரும்பி வந்ததே அந்த வீட்டில் இருந்த நடைமுறைகளை கொஞ்சமாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்..
இந்திர தனுஷ் ஆர்ச்சரி அகாடமி பங்குகளை சம்யுக்தாவிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்த உடனேவே அவள் புரிந்து கொண்டாள்.. இந்தர் அவளைப் பிரிந்து ஜீவனற்று போய் இருப்பான் என்றும் அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்தி இருக்க முடியாது என்றும் புரிந்ததனால் தான் சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு உடனேவே இங்கு கிளம்பி வந்து இருந்தாள்.. எல்லாவற்றையும் மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு..
அதற்கான முதல் அடியை எடுத்தும் வைத்திருந்தாள் ஆனால் இந்தரின் காதலை மூச்சு முட்ட அனுபவித்தவளாயிற்றே.. இப்படி அவனை வருத்த வேண்டி இருக்கிறதே என்று மனம் முழுக்க பாரமாய் இருந்தது அவளுக்கு..
இந்தர் உள்ளே வந்தான்..
“நான் அம்மா வீட்டுக்கு போய் மானுவை கூட்டிட்டு வரலாம்னு நினைக்கிறேன்..
அவள் நேரடியாக விஷயத்துக்கு வர “போலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் விழி..” என்றான்..
“சொல்லு..” என்பது போல் அவனை பார்க்கவும்
“அப்பா அம்மாகிட்ட நடந்துக்கிட்டது ரொம்ப அதிகம் தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா நீ போட்ட கண்டிஷன்ஸ்.. அதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லை.. அந்த கோவத்துலதான் அவர் அப்படி நடந்துட்டு இருப்பார்.. ஆனா அதுக்காக இன்னிக்கு நீ அப்பாகிட்ட பேசுனது ரொம்ப அதிகம்.. என்ன இருந்தாலும் என் அப்பா.. அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும் இல்ல..? அப்படியே நீ பட்டுனு மரியாதை இல்லாம பேசற.. அது தப்புன்னு உனக்கு தோணவே இல்லையா?”
நிதானமாக பேசினான் இந்தர்.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவள் பிரிவு அவனுக்குள் அவ்வளவு பொறுமையை தந்து இருந்தது.. ஒரு பெருமூச்சு விட்டாள்..
“ஆமா.. இந்தர்.. நான் அவரை மரியாதை இல்லாம ரொம்ப ரூடா தான் பேசுனேன்.. ஒத்துக்கிறேன்.. ஆனா அவர் அத்தை கிட்ட நடந்துக்கிட்ட முறை சரியா?”
“சரியில்ல தான்.. ஆனா அதை அம்மா கேட்கட்டுமே.. நீ எதுக்கு அவர்கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசுன..?”
அவன் விழியோடு விழிகள் கலந்து அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை..
“அ..அது கேட்கிறதும் கேட்காததும் அவங்க சாய்ஸ் தானே விழி.. அதை நீ எப்படி கையில எடுத்துக்க முடியும்..?”
“ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோ இந்தர்.. நான் இங்க வந்தது இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டது.. உன் அப்பாவை மட்டும் மாத்தறதுக்கு இல்லை.. உங்க அம்மாவையும் மாத்தறதுக்கு தான்.. அவங்க அப்படி இருக்கறதுனால தான் எனக்கும் மானுக்கும் அதே கொடுமைகள் தொடருது.. அவங்க மாறினா எங்களுக்கும் இந்த அடக்குமுறை இருக்கிற வாழ்க்கையிலருந்து விடுதலை கிடைக்கும்.. அவங்க அவங்களா பேச மாட்டாங்க.. அவங்களை பேச வெக்கணும்..”
ஒரு பெருமூச்சை விட்டு “இப்பதானே தொடங்கி இருக்கேன்.. பாக்கலாம்.. உங்க அப்பாவை மரியாதை இல்லாம பேசினேன்னு சொன்னீங்களே.. நான் கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததுலருந்து இந்த வீட்டை விட்டு வெளியே போற வரைக்கும் என்னைக்காவது உங்க அப்பா கிட்ட இந்த மாதிரி பேசி இருக்கேனா?”
“இல்ல.. எனக்கு அதுதான் ஆச்சரியமா இருக்கு.. இன் ஃபேக்ட் அப்பா என்னை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு சொன்ன அப்புறம் அன்னைக்கு ரூம்ல வந்து என்னோட அவ்வளவு சண்டை போட்டே.. ஆனா அடுத்த நாளிலிருந்து அவர் முன்ன நீ என்னை பேர் சொல்லி கூப்பிடுறதை நிறுத்திட்டே.. என்னோட வாங்க போங்கன்னு மரியாதை கொடுத்து தானே பேசினே..”
“அப்படி இருந்தவ தான் இப்ப இப்படி பேசி இருக்கேன்.. நான் இவ்வளவு ரூடா நடந்துக்கறதுக்கு காரணம் இல்லாம இருக்கும்னு நினைக்கிறீங்களா? அவரை எதிர்த்து கேள்வி கேட்டா அவர் எவ்ளோ ரூடா மாறுறார்.. நீங்க பாத்தீங்கல்ல? அத்தை கையில குழம்பை ஊத்திட்டு கொஞ்சம் கூட அதை பத்தி கவலையே இல்லாம அதெல்லாம் ரொம்ப சகஜங்குற மாதிரி இருக்காரு.. அவங்க வலி அவருக்கு புரியல.. வக்கீலுக்கு படிச்சவங்கள ரொம்ப சாதாரணமா ஒரு வார்த்தை கூட தனக்காக பேச முடியாதபடி இந்த வீட்டுக்குள்ளேயே அடக்கி வெச்சிருக்கிறார்.. அவங்களுக்கும் மனசு இருக்கு.. அவங்களுக்கும் கனவு இருக்கும்.. அவங்களுக்கு அதை புரிய வைக்கணும் அதுக்கு தான் நான் வந்திருக்கேன்..”
“புரியுது ஆனா அது அவங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்.. அதுல நாம ஏன்..”
“சரி.. அவங்க பேச வேண்டாம்.. நீ பேசலாம்ல..? உன் அம்மாக்கு கையில சூடான குழம்பை ஊத்தி சிவந்து இருக்குன்னு பார்த்தும் உன் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? உன் அம்மாக்கு மருந்து போடுறேன்னு சொன்ன.. ஆனா எவ்வளவு நாள் மருந்து போட்டுக்கிட்டே இருப்ப?”
“அவங்களே பேசாம இருக்கும்போது நான் எப்படி விழி கேட்க முடியும்?”
“உன் அப்பா உன் அம்மாவை இப்படி காயப்படுத்தறது ஒன்னும் முதல் முறை இல்லையே.. ஒவ்வொரு முறையும் என்ன கோவம் இருந்தாலும் தன் கையில இருக்கிற பொருள் என்னன்னு கூட பாக்காம அவங்க பக்கம் அதை விட்டெறிஞ்சு மனுஷத்தன்மையே இல்லாம நடந்துக்குறவர் தானே அவரு.. அவரு நேரடியா அவங்களை அடிக்க மாட்டார்.. ஆனா ஒரு பொருளை அவங்க முன்னாடி தூக்கி போட்டு உடைக்கும் போது அதைவிட அதிகமா வலிக்கும் இந்தர்.. சில சமயம் அப்படி அவர் தூக்கி போடுற பொருள் உடைஞ்சு சிதறி உங்க அம்மாக்கு அடி கூட பட்டிருக்கு.. ஏன் அத்தை அவர்கிட்ட ஒரு வார்த்தை நீங்க எதிர்த்து கேட்க கூடாதான்னு நான் கேட்டப்போ உங்க அம்மா என்ன பதில் சொன்னாங்க தெரியுமா?”
இந்தருக்கோ தன் அன்னையை நினைத்து கொஞ்சம் கண்கள் கலங்கித் தான் போயின..
“அவரை எதிர்த்து கேள்வி கேட்டா அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்டில இருக்க முடியாது.. என் பிள்ளைகளை விட்டுட்டு நான் எங்க போவேன்னு சொல்லு.. என்னால என் பிள்ளைகளை விட்டுட்டு இருக்க முடியாது.. அதுக்கு பதிலா அவர் பேசுற பேச்சையும் இந்த மாதிரி அவர் என்னை அவமானப்படுத்தி நடந்துக்கறதையும் பொறுத்துக்கிட்டு அவர் சொல்றபடி எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்துருவேன்னு சொன்னாங்க.. இதை கேக்குறப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா? உங்க அம்மா அப்பாக்குள்ள பெரிய சண்டை எதுவும் வரல.. ஆனா உங்க அம்மா மனசுல எவ்ளோ போராட்டம் இருக்கும்ன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? உன் அப்பா உன் அம்மாவை இப்படியே காலம் முழுக்க காயப்படுத்திக்கிட்டே இருப்பாரு.. நீ அதுக்கு மருந்து போடுவ.. அப்படித்தானே..? உன் அப்பா செஞ்சது தப்புன்னு நீ கோவமா பேச வேண்டாம்.. அட்லீஸ்ட் சாதாரணமாவாவது சொன்னியா..? இல்லல்ல..? அதான் அவரை அத்தை கேள்வி கேட்டுருந்தா எப்படி இருக்கும்னு அவருக்கு காமிக்க வேண்டி இருந்தது.. அதைத்தான் நான் செஞ்சேன்.. எனக்கும் நான் இப்படி செய்யறது சந்தோஷமா இல்லை.. ஆனா வேற வழி இல்ல.. அத்தையையும் அவரையும் மாத்தியே ஆகணும்.. அத்தை அவங்களுக்காக பேச ஆரம்பிக்கணும்.. அப்பதான் இந்த வீட்ல பொண்ணுங்கள்லாம் மூச்சு விட்டு வாழ முடியும்..”
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு அவள் பேசியதெல்லாம் நியாயமாகவே பட்டது..
“இந்தர்.. கணவன் மனைவிங்கறவங்க லைஃப் பார்ட்னர்ஸ்.. அவங்க அவர்கிட்ட வேலை பாக்குற அடிமை கிடையாது.. அவங்களுக்கும் கனவு மனசு எல்லாமே இருக்கும்.. அஃப்கோர்ஸ் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்.. ஆனா அந்த காம்ப்ரமைஸ் ரெண்டு சைடும் இருக்கணும் இந்தர்.. காம்ப்ரமைஸ் மரியாதை அன்பு காதல் ஆசை இதெல்லாம் ம்யூசுவலா இருக்கும் போது தான் வாழ்க்கை நல்லா இருக்கும்.. ஆனா ஒரு சைடே விட்டுக் கொடுத்துட்டு போனா முதல்ல வலிச்சிட்டே இருக்கிற மனசு ஒரு ஸ்டேஜ்ல மரத்து போயிடும்.. எனக்கும் அத்தைக்கும் என்ன டிஃபரன்ஸ்னா அத்தை அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய் கிடக்கிறாங்க.. அவங்க ஆசை கனவு எல்லாத்தையும் மீட்டு எடுக்கவே முடியாத அளவுக்கு குழி தோண்டி புதைச்சிட்டாங்க.. நான் அப்படி இல்ல.. அவங்க மரத்துப்போன மனசை மீட்டு கனவை உயிரோட கொண்டு வரணும்னு நான் பார்க்கிறேன்.. சொல்லு.. நான் நினைக்கிறது தப்பா?”
“புரியுது விழி.. இனிமே நானும் இந்த சேஞ்சை கொண்டு வர்றதுக்கு உனக்கு துணையா இருப்பேன்..”
அவன் சொன்ன அடுத்த நொடி புன்னகைத்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து “தேங்க்யூ..” என்றாள்..
அவள் கைகளின் மேல் தானும் கை வைத்து “சாரிடி..” என்றவனின் மார்பில் புதைந்து ஒரு முறை அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் விழி..
அவனும் பதிலுக்கு அவளை அணைக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவன் கைகள் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டன..
அந்த அணைப்பில் தானும் உருகியவள் மெல்ல அவனுக்குள் மூழ்கத் தொடங்க அவன் கைகளோ அவள் உடலில் அத்து மீறி பயணிக்க ஆரம்பித்தது..
சிறிது நேரம் அவன் அணைப்பிலும் தேடலிலும் மயங்கி கிடந்தவள் தன்னை உணர்ந்த நொடி அவனிடம் இருந்து பதறி விலகினாள்..
“ஐயோ விழி.. கண்ட்ரோல் டி.. முதல்ல செய்ய வந்த வேலையை முடி.. அப்புறம் இவனோட தானே காலம் ஃபுல்லா இருக்க போற.. பாத்துக்கலாம்..”
தனக்கு தானே உள்ளுக்குள் கடிந்து கொண்டவள் “அது.. நான் அகாடமி போகணும்னு சொன்னேன்ல..? போலாமா?”
அவள் கேட்கவும் அவனும் அவளை ஆழ்ந்து அளப்பது போல் பார்த்த படி
“ம்ம்.. மேடம் கண்ட்ரோல்ல இருக்கீங்களா? பாக்கறேன்டி.. எத்தனை நாள் உன்னை நீயே போய் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கிறேன்னு..” மனதில் நினைத்தவன் “அகடமி தானே..? போலாம்..” என்று ஒரு மார்க்கமாய் அவளை பார்த்தபடி சொல்லிவிட்டு தன் காரின் சாவியை எடுக்க போக சட்டென அவன் கையைப் பிடித்து தடுத்தாள் விழி..
“எனக்கு கார்ல போகவேணாம்.. பைக்ல போகணும்..” என்க
“ஓகே..” என்றவன் பைக் சாவியை எடுக்கவும் பட்டென அவன் கையில் இருந்து அதை பறித்துக் கொண்டாள் விழி..
அவள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அவன் புல்லட் வண்டியை எடுக்கவும் அவனும் ஹெல்மெட்டை மாட்டியபடி பின்னால் ஏறி அமர்ந்தான்..
“ஏய்.. நீ புல்லட் ஓட்டுவியா? அங்க போய் புல்லட் ஓட்ட கத்துக்கிட்டியா?”
“ம்ம்.. அங்க போய்……. நிறை…..ய்ய கத்துக்கிட்டேன்..” அவன் விழிகளை பார்த்து அழுத்தமாய் சொன்னவள் “நல்லா பிடிச்சுக்கிட்டியா?” என்று கேட்க..
ஒழுங்காய் பிடித்துக் கொள்ளாமல் “ம்ம்.. அதெல்லாம் பிடிச்சாச்சு.. பிடிச்சாச்சு.. நீ கிளம்பு..” என்று அவன் அலட்சியமாய் சொல்லி முடிக்கவில்லை வண்டி நாலு கால் பாய்ச்சலில் வேகமாக கிளம்பியது..
கிளம்பிய வேகத்தில் அப்படியே பின்னால் வந்து முன்னால் சாய்ந்தவன் அவள் தோள்கள் இரண்டையும் அழுத்தமாய் இறுக பற்றி இருந்தான்..
“அடியேய்.. என்னடி இவ்ளோ வேகமா போற?” என்று கேட்க
“ஏன் நீ வண்டியில போகும்போது ஸ்லோவா மாட்டு வண்டி மாதிரியா ஓட்டிட்டு போவ? இப்படித்தானே போவ..? நானும் அதே மாதிரி போறேன்.. ஏன் பசங்க மட்டும் தான் வண்டியில் வேகமா போகலாமா? நாங்களும் போவோம் இல்ல.. ரோடு காலியா தானே இருக்கு.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா அதுக்காக டிராஃபிக் ரூல்ஸ் ப்ரேக் பண்ண மாட்டேன்.. ஸ்பீட் லிமிட்டும் கிராஸ் பண்ண மாட்டேன்.. கவலைப்படாதே..” என்றவள் நன்றாய் தான் வண்டியை செலுத்தினான்..
இடை இடையில் வேகத்தடை வந்த போதெல்லாம் ஆணவனுக்கு தான் அவஸ்தையாய் போனது..
வண்டியின் வேகத்தை சிறிதும் குறைக்கவில்லை அவள்.. அடுத்த 15-வது நிமிடம் அகாடமி வாசலில் இருந்தாள்..
அகாடமி உள்ளே கால் எடுத்து வைத்த உடனேயே அவளுக்கு முதல் முதலில் இதே திடலில் இந்தரை சந்தித்த தருணம் நினைவுக்கு வந்தது..
அது ஒரு வில்வித்தைக்கான மாவட்ட அளவிலான போட்டி.. இந்த்ரதனுஷ் ஆர்ச்சர அகாடமியில் நடந்து கொண்டிருந்தது..
அந்த மாவட்டத்தில் இருந்த அத்தனை வில்வித்தை போட்டியாளர்களும் போட்டிக்காக அந்த அகாடமிக்கு வந்திருந்தார்கள்..
இந்த்ரதனுஷ் ஆர்ச்சரி அகாடமி போலவே இன்னொரு ஆர்ச்சரி அகாடமி தான் விஷ்வஜித் ஆர்ச்சரி அகடமி.. அங்குதான் விழி பயிற்சி மேற்கொண்டிருந்தாள்..
இந்திர தனுஷ் தன்னுடைய அகாடெமியில் மிகச் சிறந்த மாணவி வித்யா அடுத்து அறிவித்த போட்டியில் பங்கு பெற இருந்ததால் அவள் தான் எப்படியும் ஜெயிப்பாள் என்ற தீர்மானத்தோடு போட்டியாளர்களின் பின்னே அமர்ந்து போட்டியின் நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்தான்..
ஆனால் வித்யாவுக்கு எதிராய் போட்டி போட்டுக் கொண்டிருந்த மாணவி தன்னுடைய எல்லா அம்புகளையும் சரியாக தங்க நிற வளையத்துக்கு அருகில் எய்து புள்ளிகளில் பெரிய வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டே இருந்தாள்..
பின்னே அமர்ந்திருந்த இந்தருக்கோ விஸ்வஜித் அகாடமியில் இப்படி ஒரு ஸ்டூடண்டா? அட.. யாருடா அவ..? அல்மோஸ்ட் எல்லா ஏரோஸூமே கோல்ட் ரிங் கிட்ட ஷூட் பண்றா..”
வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் தனிச்சையாக எழுந்து அவள் யார் என்று பார்க்க போட்டி நடந்து கொண்டிருந்த பகுதியின் பக்கவாட்டிற்கு வந்தான்..
வந்தவன் வில்விழியின் முகத்தை பார்த்த மறு நொடி அவனுக்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத ஈர்ப்பு அவளிடம்..
“யார் இந்த பொண்ணு..? பார்க்க இன்ட்ரஸ்டிங்கா இருக்காளே..”
அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவளோ சரியாக தங்க நிற வளையத்திற்குள் தன் அடுத்த அம்பை எய்திருந்தாள்.. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் மலர்விழி என்று அவள் பெயரை சொல்லி அவள் எடுத்திருந்த புள்ளிகளின் விவரங்களையும் அறிவிக்க அதைக் கேட்டு மெச்சுதலாய் புருவம் உயர்த்தினான் இந்தர்..
அடுத்த அம்பு எரியும் இடைவெளியில் எதேச்சையாய் இந்தரின் பக்கம் பார்த்தவள் அவன் தன்னையே விழுங்குவது போல் பார்த்திருக்க அவன் பார்வை அவளுக்குள் என்னென்னவோ ரசாயன மாற்றங்களை நிகழ்த்துவது போல் இருந்தது.. அவளுக்கும் அவனை பார்த்த நொடி உள்ளுக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.. ஒரு வித ஈர்ப்பு அந்த முகத்தில்.. என்னவென்று புரியவில்லை அவளுக்கு..
“என்ன..? இந்த கோச் நம்மளை இப்படி பார்க்கிறார்..” என்று யோசித்தவள் அதன் பிறகு எய்த அம்புகள் அத்தனையும் அவள் சொல் பேச்சை கேட்கவில்லை..
அங்கு இருந்த அறிவிப்பாளர் கூட திடீரென மலர்விழிக்கு என்ன ஆயிற்று என்று மைக்கிலேயே கேக்கும் அளவு அவள் அம்புகள் தங்க நிற வளையத்தில் இருந்து பாதை மாறி கருப்பு நிற வளையத்தில் சென்று தாக்கும் அளவுக்கு அவள் கவனத்தையும் மனதையும் முழுவதுமாய் சிதறடித்திருந்தது இந்தரின் பார்வை..