27. நேசம் கூடிய நெஞ்சம்

5
(11)

நெஞ்சம் – 27

 அன்று இரவு இருவரும் அவரவர் கோணத்தில் இருந்தே சிந்தித்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் மற்றவர் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்றே இருந்தது. அத்தனை நாள் காதலில் தீவிரமாக இருந்தவள் இன்று தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலை ஒதுக்கி விட்டாள். தன் பிள்ளைக்கு ஆபத்தோ என்ற உணர்வில் கொந்தளித்து விட்டாள். அதில் அவள் மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் வேறு விதமாக வெளிவந்து விட்டது.

அவனுக்கோ, தான் அவளை எந்த விதத்திலும் தவறாக நடத்தவில்லையே? தன் மனைவியாக தானே எண்ணி இருந்தேன் என்ற வருத்தம், ஆதங்கம்.

மறுநாள் நாள் விடிய, இறுக்கமான முகத்துடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

“ஏன் மறுபடி டாக்டரிடம்?” என்று கேட்ட அருணாவிடம்,

“மலருக்கு நிறைய சந்தேகம் மா, அதெல்லாம் அவளே டாக்டர் கிட்டே கேட்டு தெளிஞ்சுக்கட்டும், நாம எவ்ளோ சொன்னாலும் நம்ப மாட்டா!” என்றான். அருணா அதை தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளாமல் நல்லவிதமாக எடுத்துக் கொண்டு,

“சரிமா, நல்லா தெளிவா எல்லாம் கேட்டுக்கோ” என்று அனுப்பி வைத்தார்.

மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியில்,

“நாம ஹாஸ்பிடல் போக வேண்டாம், எங்கேயாவது கோயிலுக்கு போங்க ப்ளீஸ்” என்றாள் மலர்.

“ஏன் போக வேண்டாம்? நேத்து என்னை அவ்ளோ கேவலமா பேசி மாத்திரை எல்லாம் விட்டு வீசினே? இப்போ திடீர்னு புத்தி வந்துடுச்சா? என்றான் ஆத்திரமாக.

“நீங்க இவ்ளோ உறுதியா அழைச்சுட்டு போகும் போதே தெரியுது உங்க மேலே தப்பு இல்லைன்னு!”

அவள் சட்டென்று இறங்கி வரவும், அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி ஆனான். எதுவும் பேசாமல் அவள் சொன்னது போல் வழியில் இருந்த கோயிலில் வண்டியை நிறுத்தினான். அவளும்

எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி கோயிலுக்குள் சென்றாள். அவன் காரை நிறுத்தி விட்டு வருவதற்குள் அவனுக்காக காத்திருக்காமல் வேகமாக உள்ளே சென்று விட்டாள் மலர். காரை நிறுத்தி விட்டு வந்தவனுக்கு அவளின் செயல் மிகுந்த கடுப்பைக் கொடுத்தது.

“ரொம்ப ஓவரா தான் பண்றா” என்று பல்லை கடித்து தனக்குள் முனகியவன் வேகமாக கோயிலுக்குள் விரைந்தான். அந்த காலை நேரத்தில் நாலைந்து பேர் மட்டுமே அங்கே இருந்தனர். மலர் அந்த விஸ்தாரமான கோயிலின் பிரகாரத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். அவளின் முகத்தில் இருந்த உணர்வு அவன் நெஞ்சை பிசைய, அதை அக்கறையாக வெளிப்படுத்தாமல் கோபமாக வெளிப்படுத்தினான்.

“உன்னை யார் இப்போ என்ன கொடுமை பண்ணா? ரொம்ப பண்றே…. சாமி கும்பிடலைனா கிளம்பு வீட்டுக்கு போலாம்” என்று சிடுசிடுத்தான்.

“கொஞ்சம் பேசணும் உட்காருங்க ப்ளீஸ், வீட்டுக்கு போய் இதெல்லாம் பேச முடியாது” என்றாள். அவன் அமர,

“என்னை மறுபடி என்மேலே குறையா? உன் கால்ல விழணுமா?” என்னவென்று புரியாத மன அழுத்தத்தில் படபடத்து அவளை மீண்டும் காயப்படுத்தினான் அர்விந்த்.

“இன்னைக்கு அப்பறம் நான் மறுபடி ஏதும் பேச மாட்டேன்” என்றவள்,

“உங்க மேலே தப்பு இல்லைன்னு மட்டும் நிருபிக்க உடனே ஆக்ஷன் எடுத்து என்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போக ரெடி ஆனீங்க…. அதே வேகத்தை உங்க மனசை திறந்து என்கிட்ட பேசுறதில காட்டலாம்ல?” என்றாள் ஆதங்கமாக.

அன்று வரை வீட்டின் செல்ல பிள்ளையாய் இருக்கும் அரவிந்திற்கு, படிப்பு வேலை, திருமணம் என அனைத்தும் அவன் விருப்பபடி தான். அவனின் இத்தனை வயதிற்கு, எதற்கும் யாருக்கும் விளக்கம் அளித்தோ, விளக்கி கூறியோ அவனுக்கு காரியங்கள் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தான் தனது என்று சிந்தித்து பேசி வாழ்ந்தவனுக்கு, தன் வாழ்க்கை துணையின் அலைப்புறுதல் மிகுந்த மன அழுத்தத்தை தந்தது. தான் விரும்பும் தன் மனைவி, அவளிடம் இவ்வளவு அன்பாக இருந்தும் தன்னை பற்றி இப்படி பேசிவிட்டாள் என்று இறுக்கமாகி விட்டான். மேற்க்கொண்டு அவன் மனதை திறக்காமல், எதையும் பேசி சரி செய்ய நினைக்காமல் அவளே அவனை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான் அர்விந்த்.

“என்ன பேசணும்? தப்பா பேசி நடந்துகிட்டது எல்லாம் நீ! என்னை என்ன சொல்ல சொல்றே?”

“நான் அந்த மாதிரி பேசினதுக்கு என் மனசில நம்மளை பத்தி இருந்த குழப்பம் தானே காரணம்! அதை தெளிவுப்படுத்த நீங்க எனக்கு உதவ கூடாதா?”

“நீ குழம்பி, என்னைப் பத்தி தப்பு தப்பா பேசிட்டு என்னையே காரணம் சொல்றே! சபாஷ்…. அப்படி நான் என்ன பண்ணேன்? விருப்பபட்டு தானே உன்னை கல்யாணம் பண்ணினேன்? என்னைக்காவது உன்னை ஹர்ட் பண்ணி இருக்கேனா? இல்லை எங்க வீட்டிலே உன்னை வித்தியாசமா நடத்தினோமா?” கோபமாக கேட்டான் அர்விந்த்.

அவனின் அந்த விருப்பம் எந்த அளவில் என்பது தானே அவளின் குழப்பம். அதை எப்படி கேட்பது என்று அவள் யோசிக்கும் போதே, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அர்விந்த்,

“இதுக்கு தான் பொருந்தா திருமணம் எல்லாம் செய்யக் கூடாதுனு சொல்றாங்க போல், கொஞ்சம் கூட திங்கிங் லெவல் இல்லை உனக்கு….சே….” என்று வார்த்தையை விட்டான். அதை கேட்டப் பின், அமர்ந்த இருந்தவள் சட்டென்று எழுந்து விட்டாள்.

“மன்னிச்சுடுங்க, வாங்க போலாம்” என்றவள் வேகமாக நடக்க தொடங்கினாள்.

அவள் படக்கென்று கிளம்பவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் பேச்சை விட்டாளே என்று பெருமூச்சு விட்டபடி அவள் பின்னே நடந்தான்.

“டாக்டர் கிட்டே எல்லாம் கேட்டுக்கிட்டியா? ஒன்னும் குழப்பம் இல்லையே?” என்றவரிடம் தலையை மட்டும் அசைத்து சிரித்து மழுப்பினாள் மலர்.

அன்றிரவு, அவர்கள் அறையில்,

“நான் கொஞ்ச நாள் எங்க அம்மா வீட்டில் இருக்கணும் நினைக்கிறேன்” என்றாள் அமைதியாக அதே சமயம் அழுத்தமாக.

அவளை அனுப்ப விருப்பம் இல்லாதவன்,

“ஏன் இங்க நாங்க உன்னை கொடுமை பண்றோமா?” என்றான் வெடுக்கென்று.

“டாக்டர் என்னை ரொம்ப கேர்புல்லா இருக்கணும் சொன்னாங்க…. நான் இங்க அப்போ வேஸ்ட் தானே?”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிய, வேகமாக சிவந்த முகத்துடன் கையை ஓங்கி விட்டான் அர்விந்த். பின் நிதானித்து,

“சே, உன்னை போய்….” என்று பாதியில் நிறுத்தி விட்டு வெளியில் சென்று விட்டான். அவன் சொல்ல வந்தது உன்னை போய் இவ்ளோ லவ் பண்றேனே என்று. அதை அவன் முழுதாக சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை. அவன் சொல்லாததால், அந்த வாக்கியத்தை தன் இஷ்டத்திற்கு, உன்னை போய் கல்யாணம் பண்ணினேனே என்று எடுத்துக் கொண்டாள் மலர்.

அடுத்த நாள் இரவே அவள் கிளம்புமாறு அவளுக்கு இரயிலில் திருவண்ணாமலை வரை டிக்கெட் எடுத்து விட்டான் அர்விந்த். அவள் மனதை போட்டு அலட்டிக் கொள்கிறாள் அதனால் அவள் அம்மாவுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாள் என்று வீட்டில் காரணம் கூறினான். தியாகுவிடம் அழைத்து சென்று விடுமாறு கேட்டுக் கொண்டான். அவன் சென்றால் இருவருக்கும் தேவையில்லாத பேச்சு வளரும் என்று அவன் செல்வதை தவிர்த்தான். அவனுக்கு இப்போது லீவு எடுக்க சூழ்நிலை இல்லை என்று சொல்லியதில் அவனின் அக்கறையில் பெரியவர்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் மலருக்கு அவனின் விலகல் புரிந்தது. எதிர்மறையாக ஏதாவது பேசினால், பழைய அர்விந்த் போல், கோபப்படுவான், எதவாது திட்டுவான், பேச்சு வளரும் என்று எதிர்பார்த்த மலருக்கு அவனின் மௌனமும் சட்டென்ற நடவடிக்கையும் அதிர்ச்சியை கொடுத்தது.

அவனை அவள் மோசமாக சித்தரிக்க அவனுள் மிகுந்த ஆவேசம். அவளின் பேச்சு அவனின் மன அமைதியை குலைக்க, மலர் கேட்டதும் அவளை அனுப்ப தயார் ஆனான். சிறிது நாள் பிரிவு இருவருக்கும் நல்லது என்று நினைத்தான் அர்விந்த்.

மலர் பெட்டியில் அவள் உடைகளை அடுக்கி கொண்டு இருக்க, அவனின் ஆபிஸ் நாற்காலியில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்விந்த். அவன் அவளை பார்க்கிறான் என்று உள்ளுணர்வு கூறினாலும் திறும்பி கூட பார்க்காமல் இருந்தாள் மலர். நேற்று இரவில் இருந்து அவளிடம் ஒரு வாரத்தை கூட பேசாமல் இருப்பவனிடம் நெருங்கவே பயமாக இருந்தது அவளுக்கு. அவளுக்கே தான் சற்று அதிகமாக பேசி விட்டோம் என்ற வருத்தம் இருக்க, அமைதியாகவே இருந்தாள்.

அர்விந்தின் நிலையோ சொல்ல முடியாததாக இருந்தது. எழுந்து சென்று அவளை இறுக்கி அணைத்து, என் அன்பு கொஞ்சம் கூட உனக்கு புரியலையா டி? உன்னை வெறும் சந்தோஷம் தர்ற பொருளா வா நான் நடத்தினேன் என்று கட்டிக் கொள்ள துடித்தது. ஆனாலும் அமைதியாக உணர்வுகளை அடக்கிக் கொண்டு இருந்தான். காலமெல்லாம் அவளிடம் பேசி பேசி நம்ப வைத்து தான் வாழ்க்கை நடத்த முடியாது அவளே தெளியட்டும் என்று இருந்தான்.

இரவு கிளம்பும் நேரமும் வந்து விட, அர்விந்தின் முகம் அவளை பிரியும் ஏக்கத்தில், வருத்தத்தில் இன்னும் இறுக்கமாகி விட்டது. அவனை பார்க்கவே பயமாக இருந்தது மலருக்கு. அவனின் உணர்வுக்கு கோபம் என்று வேறு வர்ணம் பூசினாள் மலர். ஆனாலும் அவனிடம் பேசாமல் செல்ல முடியாது என்று உள்ளம் தவிக்க, மெதுவாக அவனை நெருங்கினாள்.

அவள் நெருங்க, அவன் இளகினான். இருவரின் விழிகளும் சந்திக்க, அவன் விழியின் விழியில் இருந்த ஈரத்தில், தவித்து துடித்து அவளை அணைக்க போனவனின் கரங்களை அவள் வார்த்தைகள் அப்படியே நிறுத்தின. என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்க நினைத்தான்.

“உங்களுக்கு இனியும் என்கூட வாழ விருப்பம் இருந்தா சொல்லுங்க, நான் வரேன். வெறுப்பா இருக்கு வேண்டாம்னு சொன்னாலும் சரி தான். ஆனா வேண்டாவெறுப்பா மட்டும் இருக்காதீங்க. உங்களை இக்கட்டில நிறுத்தி கல்யாணம் பண்ணது தப்பு தான். ஆனா நீங்க கஷ்டப்பட்டு என்கூட இருக்க வேண்டாம்” என்றாள்.

அவ்வளவு தான் இளகிய அவன் மனம் இரும்பானது. அவன் அவளோட வேண்டா வெறுப்பாக வா குடும்பம் நடத்தினான்? இவளுக்கு என்ன கொழுப்பு? கொந்தளித்தது அவன் மனம்.

அதன்பின் முற்றிலும் அவள் கிளம்பும் வரை அவன் அவளிடம் எதுவுமே பேசவில்லை. அருணாவும் தியாகுவும், அர்விந்தையும் மலரையும் ஒன்றாக நிறுத்தி ஆசிர்வாதம் செய்ய, மலருக்கு கண்கள் உடைப்பெடுத்தது.

“நீ அழுறது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு மலர்! இந்த வீட்டில இருந்து கிளம்ப முடியாம கிளம்புறனா, இங்க நீ சந்தோஷமா இருக்கேனு தானே அர்த்தம்? நான் நல்ல மாமியார் தானே?” என்றார் அருணா சிரித்தபடி. மகனின் முகமும் அவர்களுக்கு அவன் வருத்தத்தை சொல்லியது. அதனால் சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி அப்படி பேசினார்.

“நிச்சயமா அத்தை, அதில் என்ன சந்தேகம்?” என்று அவரை கட்டிக் கொண்டாள் மலர்.

“சீக்கிரம் வந்துரு மா! டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு போனா திரும்ப வர ஆறு மாசம் ஆகும், இப்போவே ரொம்ப பிரிஞ்சு இருக்க வேண்டாம்” என்றார் அருணா.

சொல்லவேண்டியவன் சொல்லவில்லையே? எதிர்காலம் என்ன வைத்து இருக்கிறது என்று தெரியாமல் மனப் பாரத்தோடு, அவள் மன்னவனை நினைத்தபடி ஊருக்கு பயணப்பட்டாள் மலர்.

“அவர்கள் கிளம்ப, ஏண்டா பொண்டாட்டி ஊருக்கு போறது பிடிக்கலைனா அனுப்பாம இருக்கலாம்ல…. இப்படி வருத்தமா இருக்கே?” அருணா சலித்துக்கொள்ள,

“நான் சொல்லாமலே உங்களுக்கு புரியுது, அவளுக்கு என்னை புரியலையே….?” அர்விந்த் அலுத்துக்கொள்ள,

“நான் உன் அம்மா டா…. அவளுக்கு உன்னை புரிய கொஞ்ச நாள் ஆகும்…. அதுக்கு முதல்ல நீ மனசு விட்டு அவகிட்டே பேசி பழகணும். இப்போவே அவளா தான் உன் மூஞ்சியை மூஞ்சியை பார்த்து உன்கிட்டே பேசி உன்னை புரிஞ்சுக்க முயற்சி பண்றா…. சின்ன பொண்ணு டா.”

“என்ன மனசு விட்டு பேசுறது? நான் செய்றது எல்லாம் புரியாதா?”

“பேசணும்! கண்டிப்பா பேசணும், அவ்ளோதான் சொல்லுவேன்…. உன் பொண்டாட்டி திரும்ப சீக்கிரம் வரணும்னா, போன்லயோ நேர்லயோ, நீ இல்லாம இருக்க ரொம்ப கஷ்டமா இருக்குடி, ஒழுங்கா நம்ம வீட்டுக்கு வந்து சேருடினு சொல்லு!” அதட்டி விட்டு சிரித்தபடி போனார் அருணா.

சொல்வானா அர்விந்த்?

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

1 thought on “27. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!