உறைய வைத்தே
உயிர்வதை செய்யாதே…
உன் நேச கனம்
உள்ளுயிரும் தாளாது!!!
———
சட்டென முத்தமிட்டு விட்டதில் ஆடவனைத் திகைப்புடன் பார்த்த பிரகிருதிக்கு கை நடுக்கம் தொடங்கியது.
அதனைக் கவனித்துக் கொண்டவனுக்கு சிறு குழப்பம் ஏற்பட, “நீ ஓகே தான?” என்றான்.
“ம்ம்” எனத் தலையசைத்தவளை அபிராமி வலுக்கட்டாயமாக அழைத்து பேச்சு கொடுத்தார். கோபித்துக் கொண்டு சென்று விடுவாளோ என்ற பயம் அவருக்கு.
அவருடன் இணைந்து இன்னும் நான்கு பெண்மணிகள் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்க, சில நிமிடத்தில் பிரகிருதிக்கு வியர்த்து விட்டது.
உடல் நடுக்கம் அதிகரிக்க, பேசவே இயலாதவாறு திக்கத் தொடங்கினாள்.
அவளை விசித்திரமாகப் பார்த்த அபிராமி, “என்னமா ஆச்சு?” எனக் கேட்க,
“ஒ… ஒன்னும் இல்ல” என்றாலும் முழுதாய் சமாளிக்க இயலாமல் தன்னவனைத் தேடி அலைபாய்ந்தது அவளது விழிகள்.
தூரத்தில் நின்றிருந்த ஷக்தி மகிழவனுக்கு பிரகிருதியின் அலைப்புறுதல்கள் புரிந்ததோ என்னவோ, புயல் வேகத்தில் அவளருகில் வந்தான்.
“என்ன ஆச்சு ருதி?”
அவள் பதில் கூற இயலாமல் திண்டாட, அவளிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணிகள் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.
ஷக்தி அவர்களைக் கண்டுகொள்ளாது, “உனக்கு ப்ரெஷ் ஏர் வேணுமாடா?” எனக் கேட்டதில், வேகமாகத் தலையாட்டினாள். கண்ணில் வெள்ளியாய் மின்னியது நீர்த்துளி.
அவளை அழைத்துக்கொண்டு பின் பக்கம் இருக்கும் பிரைவேட் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவன், “ரிலாக்ஸ் பண்ணிக்கோ ருதி. உடம்பு சரி இல்லையா? எங்கயும் ஹர்ட் ஆகுதா? நான் உன்னை டிஸ்கம்ஃபர்ட் பண்ணிட்டேனா?” என வரிசையாய் கேள்வி கேட்க, அவள் தலையைப் பிடித்து கொண்டாள்.
“ஐயோ கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?” எனக் கத்தி விட்டவள், கழுத்தை நழுவிக் கொண்டிருந்த வைர நெக்லஸை கழற்றி தூக்கி எறிந்தாள்.
காதில் மினுமினுத்து அருவருப்பைக் கொடுக்க தோடையும் அவசரமாகக் கழற்றினாள்.
அவளைத் திகைப்புடன் பார்த்திருந்த ஷக்தி மகிழவனுக்கு புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
“ருதி” அவள் தோளைப் பிடிக்கப் போக, “தொடாதீங்க… எனக்குப் பிடிக்கல!” என்று மூச்சு வாங்க குரலை உயர்த்தியவள், அவனது அதிர்ந்த முகத்தையும் சுற்றுப்புறத்தையும் மனதில் வைத்து காலைக் குறுக்கி அமர்ந்து கொண்டாள்.
மூக்கு நுனி சிவந்திருந்தது. கண்ணில் நீர்த்திவலைகள் படிந்திருக்க, அவளது கேவலும் அதிகரித்தது.
“என்னை விட்டுப் போக போறியா?” ஷக்தியின் குரலிலும் ஒரு நடுக்கம். அவளது வித்தியாசமான செயல்முறைகள் அவனது மூளையைக் குழப்பி விட்டு, தற்போது என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாத நிலையைக் கொடுத்தது.
“நான் போகல. நீங்களே என்னை போக சொல்லிடுவீங்க” அழுகுரலில் கூறியவளைப் புரியாது பார்த்தான். அவனது விழிகள் அவள் தூக்கி எறிந்த வைரத்தின் மீது பதிந்தது.
அவளுக்கென ஆசைப்பட்டு வாங்கிய பொருளை இரண்டாவது முறையாக அவமதித்து இருக்கிறாள். வேறொருவர் என்றால் அவளைக் காயப்படுத்தி இருப்பார்கள்.
ஆனால், அவனுக்கு அவள் மீது கோப உணர்வுகளும் காயப்படுத்தும் வார்த்தைகளும் என்றும் வராதே! வைரத்தை விட அவளது உள்ளம் அவனுக்குப் பெரிது எப்போதும்!
“உனக்கு என்ன ஆச்சு ருதி. ரெசார்ட்டுக்குப் போகலாமா?” மென்மையாக கேட்டான் ஷக்தி.
“ம்ம்!” தலையை ஆட்டியவளை மற்றவர்களிடம் கூறி விட்டு அழைத்துச் சென்றான்.
ரெசார்ட்டினுள் நுழைந்ததும், “குடிக்க ஹாட் வாட்டர் தரட்டா ருதி?” என்றவனுக்கு அவளை எப்படியாவது அமைதிப்படுத்த வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்தது.
தலையை உருட்டியவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது. இன்னும் கை நடுக்கம் நிற்காததில் ஷக்தி மகிழவனுக்கு செய்வதற்ற நிலை.
“நம்ம வேணும்னா உங்க வீட்டுக்குப் போகலாமா ருதி. எனக்கு… எனக்கு உன்னை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு புரியல. உன் அம்மா கூட இருக்கியா?” எனக் கேட்டதும், அவளுக்கு கண்ணீர் மழை பொழிந்தது.
“என்னை அம்மா கூட விட்டுட்டு நீங்க போயிடுவீங்க தான? என் அப்பா மாதிரி உங்களுக்கும் என்னை பிடிக்கல அப்படி தான?” மீண்டும் கேவல் உயர, அவளுக்குப் புரிய வைக்க முயன்று தோற்றான் ஆடவன்.
“ப்ளீஸ் ருதி… எனக்கு ஒரு மாதிரி நெஞ்செல்லாம் வெய்ட்டா இருக்கு. நீ ஏன் இப்படி வியர்டா பிஹேவ் பண்ற?” ஷக்திக்கு ஆயாசமாக இருந்தது.
பேயறைந்ததை போல நின்றவளின் நெற்றியில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.
“உங்களுக்கும் நான் வியர்டா இருக்குறது தெரியுதா? நான் நான் ஒழுங்கா தான… நான் நான் நிறைய பிராக்டிஸ் பண்ணி தான பங்க்ஷன்க்கு வந்தேன். ஆனா அவங்க என்கிட்ட நான் பிராக்டிஸ் பண்ணாத கேள்வியைக் கேட்பாங்கன்னு எதிர்பார்க்கல மகிழ். திடீர்னு பேபி பத்தி எல்லாம் பேசுனாங்க… எனக்கு எனக்கு… பதில் சொல்லத்தெரியல. நான்… அவங்க முன்னாடி வியர்டா பிஹேவ் பண்ணிட்டேனோ? என்னை… என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுடுமா?” எனத் திகிலுடன் கேட்டாள்.
“பிடிக்கும் பிடிக்காதது அடுத்தது… நான் நான் அதுக்கு பதில் எதுவும் ரிகர்சல் பண்ணலையே” என்றவளை அதிர்ச்சி விலகாது பார்த்தான்.
“எதுக்கு ரிகர்சல் பண்ணனும் ருதி?”
“எதுக்குன்னா… என்ன கேள்வி இது? உங்களுக்கு தெரியாதா…” உதட்டைப் பிதுக்கி கேட்டவளிடம், “என்ன தெரியாதா? எனக்குப் புரியல” என்றான் மீண்டும்.
“என் அப்பா சொல்லிருப்பாங்க தான… நான் உங்ககிட்ட கரெக்ட்டா தான ஆக்ட் பண்ணுனேன். இன்னைக்கு… இன்னைக்கு அந்த ஜுவெல்ஸ், சடன் கேள்வி எல்லாம் எனக்கு ஒரு மாறி ஆக்கிடுச்சு… அப்பாட்ட சொல்லிட மாட்டீங்க தான? அப்பா அடிப்பாரு மகிழ். ப்ளீஸ். இனிமே நான் கரெக்ட்டா ரிகர்சல் பண்ணிட்டு வரேன். அந்த ஜுவெல்ஸ்… அதைக் குடுங்க போட்டுக்குறேன்” என்று படபடப்பாக கேட்டாள்.
அவள் தூக்கி எறிந்த நகையை பேண்ட் பாக்கெட்டினுள் வைத்தே வந்திருந்தான்.
அவளது உதறல்களை எல்லாம் மெல்லிய வலியுடன் ஏறிட்டவன், குரலை உயர்த்தி “ருதி” என அதட்ட, அதில் கப்சிப்பென வாயை மூடியவள், “ப… பயமா இருக்கு மகிழ். கத்… கத்தாதீங்க ப்ளீஸ்…” என அவசரமாக சோபாவில் அமர்ந்து காலை கட்டிக்கொண்டு குறுகினாள்.
அவளைத் தொடவும் முடியாமல், பாவையின் உள்மன போராட்டங்கள் புரியவும் செய்யாமல் தடுமாறிப் போன ஷக்திக்கு நெஞ்சில் ஊசியாய் வலி குத்தியது.
“உன் அப்பா ஏன் உன்னை அடிச்சாரு. நான் மாமாகிட்ட பேசுறேன். உன்னை அடிக்க மாட்டாங்க ருதிடா. என்னைப் பாரேன். என் கண்ணைப் பாரு…” என்றிட, அவளால் தற்போதிருக்கும் நிலையில் அவன் கண்ணைப் பார்த்து பேச இயலவில்லை.
“நான் உன் அப்பாட்ட என்ன ப்ராப்ளம்னு கேட்கட்டா?” ஷக்தி சொன்னதும் அவனது கையைப் பிடித்துக் கெஞ்சத் தொடங்கி விட்டாள்.
“வேணா வேணா மகிழ். அப்பா என் மேல கம்பளைண்ட் வராம நடந்துக்க சொன்னாங்க. இப்ப நடந்தது தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாங்க. நீங்க… நீங்களே என்னைக் கொன்னுடுவீங்க…: எனத் தேம்பி தேம்பி அழுக, ஷக்திக்கு அழுத்தம் அதிகரித்தது.
அவளை கையாளத்தெரியா இயலாமை அவனை சோர்வுற வைத்தது.
“ஐ ஆம் நாட் எமோஷனலி நார்மல் பெர்சன் ருதிடா. நிஜமா எனக்கு எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. உன் கண்ல வர்ற தண்ணியை நிறுத்தணும். என்ன செய்ய… ஏது செய்ய… ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்” என்றவன் அங்கும் இங்கும் கண்களை உருட்டிக்கொண்டு வரவேற்பறையில் நடந்தான்.
அவனைக் கண்டு அரண்டவள், “நீங்க நீங்க ரிலாக்ஸா இருங்க ப்ளீஸ்… நா… நானும் எமோஷனலி பாலன்ஸ்ட் இல்ல மகிழ்” எனும்போதே அவள் குரல் உள்ளே சென்றது.
அதில் நின்று விட்டவன், அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து “தெளிவா சொல்லு ருதி. என்ன ஆனாலும் உன்னை யார்ட்டயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ப்ராமிஸ்!” என்றான் தன் தலை மீதே கை வைத்து.
“நிஜமாவா?” குரல் கமற அவள் கேட்க,
“நிஜமாடா” என்றான் உயிர் வரைத் தீண்டும் மென்மையுடன்.
சில நொடிகள் அமைதி காத்தவள், “என்… என்னால ரிகர்சல் பண்ணாம, முன்னாடியே மெண்டலி ப்ரிப்பேர் பண்ணாம எங்கயும் போக முடியாது மகிழ். நான் ப்ரிப்பேர் பண்ணி வச்சுருக்குற கேள்வியைக் கேட்டா நார்மலா இருப்பேன். இதே திடீர்னு புதுசா கேள்வி கேட்டா ஸ்ட்ரக் ஆகிடுவேன்.
திடீர்னு வெளில கூட்டிட்டுப் போனா, நிறைய கூட்டம் இருந்தா, பளிச்சுன்னு மினுமினுனு ஷைனிங்கா ஜுவெல்ஸ் போட்டா, ஷைனிங்கான லைட்ஸ் பார்த்தா, டிஸ்டர்ப் ஆவேன் ரொம்ப… எனக்கு யார்கூடவும் இன்டராக்ட் பண்றதே பிடிக்காது. சொசைட்டிக்காக, நான் நார்மலா இருக்கேன்னு நம்ப வைக்கிறதுக்காக பேசுறது சிரிக்கிறது நடக்குறது கூட எல்லாமே… எல்லாமே… வெறும் சொஸைட்டிக்காக தான்.
எனக்குப் பிடிச்சு மத்தவங்க பேசுறதை கவனிச்சு சிரிக்க மாட்டேன். எனக்கு யார் பேசுறதயும் கவனிக்கப் பிடிக்காது. கண்ணைப் பார்த்து பேச பயமா இருக்கும். ஆனா மத்தவங்களுக்காக ஐ காண்டாக்ட் பண்ணிப்பேன். என் வேலையே நான் தனியா ரெக்கார்ட் பண்ணா போதும்ன்றனால தான், அதை மட்டும் பிடிச்சு செய்வேன். மத்தபடி எப்பவும் யாருக்கும் தெரியாத, யாராலும் கவனிக்க முடியாத ஒரு மாஸ்க் எப்பவும் எனக்குள்ள போட்டுப்பேன். அப்படி எனக்குப் பிடிச்ச மாறி இருக்கணும்னு நினைச்சாலும் அப்பா அப்பா என்னை அடிப்பாரு…” என நீண்டதாகப் பேசி முடித்தவளை அயர்ந்து பார்த்திருந்தான் ஷக்தி மகிழவன்.
“இதெல்லாம் ஏன் ருதிடா?” அவள் வார்த்தைகள் தந்த வேதனையின் வெளியீடாக சிதறி வந்தது அவனது கேள்வி.
“இது ஒரு வகையான ஆட்டிஸம். மாஸ்க்ட் ஆட்டிஸம்னு சொல்லுவாங்க. வெளில, மத்தவங்களுக்காக நடிச்சுப்பேன். பட், அதுவே என்னை ஸ்ட்ரெஸ் பண்ணும். நான் தனியா, இருட்டுக்குள்ள எனக்குப் பிடிச்ச மாறி, ஐ காண்டாக்ட் இல்லாம, ஒரு ஹியூமன் பீயிங் இப்படி தான் பிஹேவ் பண்ணனும்னு சொசைட்டி வகுத்து வச்சுருக்குற எல்லைக்குள்ள ரியாக்ட் பண்ணாம, எனக்கு கம்பர்ட்டபிளா இருக்குற மாறி இருந்துப்பேன். மத்த எல்லார்கிட்டயும் ஒரு மாஸ்க் போட்டு செயற்கையா, அவங்களுக்கு ஏத்த மாதிரி நடந்துப்பேன்” என சொல்லி முடித்ததில் ஷக்தி மகிழவன் மூச்சு விடவும் மறந்து பேரமைதி காத்தான்.
அவ்வமைதியிலேயே புரிந்து விட்டது, இனி அவனுடன் தான் இருக்க அனுமதிக்கப்போவதில்லை என!
கண்ணைக் கரித்துக்கொண்டு வந்த விசும்பலை அடக்கியவள், “இனிமே நான் பேபிக்கான கேள்விக்கும் கரெக்ட்டா ப்ரிப்பேர் பண்ணிட்டே வரேன் மகிழ். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ் மகிழ். அப்பாட்ட சொல்லிடாதீங்க. என்னை அடிச்சுருவாங்க மகிழ். எல்லார்ட்டையும் சொல்லிடுவாங்க. அப்பறம் எனக்கு வேலை கூட தர மாட்டாங்க மகிழ்… நீங்க… நீங்க எனக்கு கிஸ் கூட குடுத்துக்கோங்க. நான்… நான்… எதுவும் சொல்ல மாட்டேன். நா… நா உங்களுக்கு கிஸ் தரட்டுமா?” என அவனை சமாதானம் செய்யும் பொருட்டு இன்னும் கொஞ்சம் காயப்படுத்தி வைத்தாள் பிரகிருதி.
அவளைத் தடுத்து நிறுத்தியவனின் தாடை இறுகிப்போனது.
“கிஸ் லஞ்சமா ருதி. அது மனசுல இருந்து, உனக்கா தோணுனது இல்லையா. எனக்காக நடிச்சுக்கிட்டியா? எல்லார்கிட்டயும் நடிக்கிற மாதிரி என்கிட்டயும் நடிக்கிறியா ருதிடா…” இதுவரை அவன் வாழ்வில் கண்ட வேதனையிலும் பெரும் வேதனை தன்னவள் வலியில் உழலும் இந்நொடியே என்பது போல, ஒட்டுமொத்த வலிகளையும் ஒற்றை வார்த்தையில் தேக்கி கேட்டவனை பேச்சற்று பார்த்தாள் பிரகிருதி.
“நான் நடிக்கலைன்னா உங்களுக்கு என்னைப் பிடிக்காது மகிழ்…” கேவிக் கேவி அழுதவளை இழுத்து அணைக்கச் சொல்லி கரங்கள் உத்தரவிட, அவளது மனநிலை உணர்ந்து அமைதி காத்தான் அவன்.
“நீ என் வைஃப். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்ல என் கூட இருக்கணும். உன் மூச்சோட சவுண்ட், உன் கையோட ஹீட் எனக்கு எப்பவும் வேணும்” என்றவனை இமைக்காது பார்த்தவள், “நிஜமா இனியும் என்கூட முன்ன மாதிரி பேசுவீங்களா?” என்றாள் நம்பாத தன்மையுடன்.
அதில் உள்ளம் உருகிப்போக, “பேசுவேன் ருதிடா…” என்றவனிடம்,
“முன்னாடி மாதிரி என் கையைப் பிடிச்சுப்பீங்களா?” எனக் கேட்டாள் ஏக்கமாக.
சட்டென அவள் கையைப் பிடித்துக்கொண்டவன், “இறுக்கமா பிடிச்சுப்பேன்டா…” என்றிட,
“முத்தம் குடுப்பீங்க தான?” சந்தேகமாக விழி விரித்து அவள் வினவ, “இப்ப குடுத்துக்கட்டாடா?” அதற்கு மட்டும் அவளை நோக வைக்க மனமின்றி அனுமதி கேட்டான்.
“ம்ம்” வேகமாகத் தலையாட்டினாள். வேண்டாமென மறுத்தால், பிரிந்து விடுவானோ என்ற பயத்துடன்.
அவளது அனுமதி கிட்டிய நொடியில், கன்னமிரண்டிலும் மீசை உராய அழுத்த முத்தமிட்டவன், நெற்றி மத்தியிலும் ஈரம் படர ஆழ்ந்த முத்தத்தை வைத்தான். என்றும் உன்னை விட மாட்டேன் என்ற அழுத்தம் அதில் மிகுதியாய் உணர, மெல்ல மெல்ல அழுத்தம் குறைந்து மனம் குளிர்ந்தது பிரகிருதிக்கு.