உயிர்-25:
மீனாட்சிக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை தவிர வேறெங்கும் சென்றிராடதவளுக்கு லண்டன் என்பது வேற்று கிரகம் போல தோன்றியது.
விமான நிலையம், விமானப் பயணம், என அனைத்தையுமே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே வந்தாள்.
தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதே அவளுக்கு பெருந்துக்கமாக இருந்தது.
கடைசி வரை தந்தையிடம் சொல்லிக் கொள்ளலாமலேயே கிளம்பினாள் .
சங்கர பாண்டியனுக்கு சாட்டையால் அடித்த உணர்வு.
ஆசையாக வளர்த்த மகள் ஒரு முறையேனும் பேசிவிட மாட்டாளா… என்ற தவிப்பு அவரிடம். காலம் கடந்த ஞானோதயம்.
கோமதியை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுதாள்.
அவரும் அப்படியே. மகளுக்கென தனியே அறிவுரை மூட்டைகளை
அவிழ்த்து விடவில்லை.
ஏனெனில் தனது மகளுக்கு எங்கு எப்போது எப்படி நடந்து வேண்டுமென நன்றாக தெரியும்.
அவரது வளர்ப்பு அப்படி.
ஆனால் ஒரு தாயாக தன் மகளின் கையைப் பிடித்து கொண்டு ,“ இங்க பாரு மீனாட்சி…அம்மா உனக்கு புத்திமதி சொல்லுதேன்னு நினைக்காத. நடந்து முடிஞ்சத இனி யாராலும் மாத்த முடியாது. உடனே உன்னோட மனசை மாத்திட்டு உம் புருசனோட வாழ ஆரம்பிச்சிடுன்னு சொல்ல மாட்டேன். ஆனா ஒரு தாயாக என்னோட பொண்ணும் நல்லா சந்தோஷமா வாழனும்ன்னு ஆசை இருக்கத்தான் செய்யுது. உனக்கான நேரத்தை எடுத்துக்க…ஆனா எதுலையும் அவசரப்பட்டு முடிவெடுத்துடாதே…. யோசி…” என்றார்.
மீனாட்சியோ , “எப்படிமா அந்தாள் கூட போய்…சந்தோஷமா…? என்னோட சந்தோஷம் தான் எல்லாமே போச்சே…”என்றாள் நா
தழுதழுக்க…
“எல்லாத்துக்குமே விரும்பின வாழ்க்கை கிடைச்சிடாது. கிடைச்ச வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பு…ஆதி தம்பி ஒரு தடவை தப்பு பண்ணிடுச்சு தான்…அந்த குற்றவுணர்ச்சியே ஆதிக்கு ஆயுசு பூராவும் தண்டனைதேன்.. ரொம்பவே வாழ்க்கையை பத்தி யோசிச்சி சிக்கலாகிக்காத…” என்பதோடு முடித்து விட்டார்.
மகள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு சாமான்கள் எடுத்து வைத்திருந்தார் .
அனைத்து வகையான பொடி வகைகள், அப்பளம் அனைத்தையும் சற்று பெரிய டப்பாவில் அடைத்து கொடுத்திருந்தார்.
அனைத்தையும் எடை சரி பார்த்து வைத்திருந்தான்ஆதி.
பாண்டியன் தனது வேலையை முடித்து விட்டு வந்திருந்தான்.
அவனுக்குமே வருத்தமாக இருந்தது. அவளுடன் வம்பிளுத்து, சண்டைப் போட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கிய ஞாபகங்கள் ஒன்றன் பின்னே ஒன்றாய் வரிசைக் கட்டி நின்றது.
கிளம்பும் வரையிலும் ஆதியை முறைத்துக் கொண்டே இருந்தான் பாண்டியன்.
ஆதி தனது பிரம்மாண்டமான வீட்டினை தூய்மை செய்யச் சொல்லி ஆட்களிடம் கூறியிருந்தான்.
வீட்டில வேலை செய்யும் மூத்த பெண்மணிகள் இருவர் அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார்கள்.
தமிழ் பேசும் பெண்கள் சிலரை உதவி செய்வதற்கென நியமித்திருந்தான்.
வீட்டினுள்ளே அடியெடுத்து வைத்தவள் அதன் பிரம்மாண்டத்தை கண்டு திகைத்தாள்.
ஏதோ இந்திரலோகத்திற்கு வந்து விட்டதைப் போல் உணர்ந்தாள். ஆதியின் பணபலம் மற்றும் அந்தஸ்த்தையும் அக்கணமே உணர்ந்து கொண்டாள்.
“ இங்க பத்து ரூம்க்கு மேல இருக்கு…உனக்கு எது கம்ஃபர்ட்டபிளா இருக்குதோ …அதுல தங்கிக்க..” என்றான்.
மீனாட்சி சுற்றும் பார்த்தாள். வீட்டிற்குள்ளே ஆறு ஏழு வேலையாட்கள் அங்குமிங்கும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு வெளியே ஐந்தாறு பேர் இருப்பார்கள் என கணக்கிட்டவள் , “ இங்க ரூமுக்குள்ள ரூம்மு இருக்குற மாதிரி எதுனாலும் இருக்கா? ஏன்னா வீட்டு விஷயம் வெளியாட்களுக்கு தெரிய வேணாம்.” என்றாள்
ஆதிக்கும் புரிந்தது.
அங்கிருந்த ஒரு அறையைக் காட்டி,
“இதோ…! இது தான் கொஞ்சம் பெரிய ரூம்…உள் ரூம் இதுல தான் இருக்கு. அதுல நீ இரு. வெளி ரூம்ல நான் தங்கிக்கிறேன்…அப்பறம் சமையலுக்கு ஆட்கள் இருக்காங்க…நீ சமைக்கனும்ன்னு இல்லை. வீட்டு வேலை எல்லாத்துக்கும் ஆட்கள் இருக்காங்க…நீ எதுக்கும் கஷ்டப்படத் தேவையில்லை…” என்றான்.
அவளோ , “கொஞ்சம் உள்ள போய் பேசலாமா..? “ என்றாள்
“ ம்ம்…வா…” என்றவன் அந்த பெரிய அறையினுள் நுழைந்தான்.
வேலையாட்கள் அவர்களின் பயணப் பொதிகளை அறையினுள் வைத்து விட்டுச் சென்றனர்.
“இங்க பாருங்க…இந்த பணம் பகட்டு எதுவும் எனக்கு பிடிக்காது…இதெல்லாம் என் மனசை மாத்திடும்ன்னு தப்பு கணக்கு போடாதீக…என்னோட வேலைகளை நானே செஞ்சி தான் பழக்கம் . இங்கேயும் நானே செஞ்சிபுடுதேன்…வேத்து ஆளுகயெல்லாம் எனக்கு செய்ய வேணாம். உங்களுக்கு வேணும்னா நீங்க உங்க வேலைகளை செஞ்சிக்கோங்க. சுருக்கச் சொன்னா உம்ம வேலைகளை நீங்களே பாத்துக்கோங்க…என்னோட வேலையை நாம்பாத்துக்கிடுதேன். உங்க கிட்ட எந்த உரிமையும் கொண்டாட நான் விரும்பல…” என்றவள் தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று விட்டாள்.
ஆதியோ அங்கிருந்த மெத்தையில் பொத்தென்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
மீனாட்சியைப் பற்றி சற்று குறைவாகவே எடை போட்டுவிட்டான் போலும். அவளது வைராக்கியம் அவனை உலுக்கிப் போட்டது.
வெள்ளைப் பளிங்கினாலான அவனது மாட மாளிகை எந்த விதமான சிறு சலனத்தையும் அவளிடம் ஏற்படுத்தவில்லை.
அனைத்தும் அவளுக்கு புதுமையாக இருந்ததே தவிர ஆசையை ஏற்படுத்தவில்லை.
மெத்தையில் அப்படியே சரிந்து படுத்தான்.
அவனது கையும் காலும் வலித்தது தான்.
சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கச் சொல்லி மருத்துவர் கூறியிருந்தார்.
தினமும் தானே தான் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் .