நெஞ்சம் – 30
கணவனின் மனம் புரிய, தெரிய மகிழ்ச்சியாக வளைகாப்பிற்கு சம்மதித்து இருந்தாள் மலர். நிவேதாவை அழைக்க வேண்டும் என்று மலரே கூற, ஆச்சரியப்பட்டான் அர்விந்த். அப்போது தான் ரிஷப்ஷன் அன்று யாருக்கும் தெரியாமல் அவள் மலரிடம் பேசியதை அவனிடம் தெரிவித்தாள் அவள். மிகுந்த கோபப்பட்டான் அர்விந்த்.
“நீ ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?”
“எப்படி சொல்றது? நம்ம வீட்டுக்கு வந்தப்போபோவும் அதே மாதிரி உங்ககிட்டே அவங்க பேசினதை கேட்டேன், அதுக்கு நீங்க அவங்களுக்கு எந்த பதிலும் சொல்லலை…. அமைதியா தான் இருந்தீங்க! எனக்கு எவ்ளோ வருத்தமா இருந்தது தெரியுமா?”
“அவ டிப்ரஷன்ல பேசுறானு விட்டேன்…. என்கிட்ட அவ பேசலாம், ஏன்னா எனக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்கு. ஆனா உன்கிட்ட பேச அவளுக்கு எந்த ரைட்சும் இல்லை. அப்போவே சொல்லி இருந்தா அவளுக்கு எப்படி புரிய வைக்கணுமோ அப்படி வைச்சு இருப்பேன்.” ஆத்திரம் குறையாமல் அவன் பேச,
“இப்போ நான் புரிய வைச்சுக்கிறேன், நீங்க வழக்கம் போல் நிவேதாவுக்கு நல்லவராவே இருங்க!” என்றாள் மலர் கிண்டலாக.
வளைகாப்பு நாள், பொலிவிழந்து இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாக இருந்ததில், உற்சாகமாகவே இருந்தாள் மலர். அவளை அப்படி பார்க்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
அர்விந்த் மற்றவர்களை பொறுத்தவரை பழக கடினமானவன், சட்டென்று கோபப்படுபவன். அதே போல் மலர், மிகவும் மென்மையானவள், வேறு யாரிடமும் சட்டென்று பேசி விட மாட்டாள். ஆனால் இவர்கள் இருவரும் அவர்களின் இயல்பிற்கு தலைகீழாக தான் அவர்களின் இணையிடம் நடந்துக் கொள்வார்கள். அத்தனை காதல், உரிமை அவர்களிடத்தில் இருக்கும்.
ஜனனி இடையில் ஒரு முறை வந்து மலரை பார்த்துச் சென்றதோடு போனில் தான் பேசுவாள்.இப்போது வளைக்காப்பிற்கு நான்கு நாட்கள் முன்பே வந்து இறங்கியவளுக்கு, தம்பி அவன் மனைவியிடம் பழகும் விதம் கண்டு அத்தனை ஆச்சர்யம்.
“என்னமா இது? வழக்கம் போல் கேலி கிண்டல் பண்ணாலும், அவன் மலர் கிட்டே பேசுற விதமே மாறி போச்சு…. அவனுக்கு இப்படி எல்லாம் லவ் வரும்னு நான் நினைச்சே பார்க்கலைமா…. இந்த ஓவர் ஆங்க்ரி பேர்ட் பசங்க எல்லாம் இப்படி தான் அடங்கி போவானுங்க போல…. டெய்லி பார்க்கிற உனக்கு பொறாமையா இல்லையா மா?” அருணாவை வம்புக்கு இழுத்தாள் ஜனனி.
“ம்ம்….கொஞ்சம் இருந்துச்சு…. ஆனா மலர் நல்ல பொண்ணு, என்னை வேறயா பார்க்க மாட்டா, இப்போவும் என் வீட்டுக்காரர்னு சொல்ல மாட்டா, உங்க பிள்ளைனு தான் சொல்வா. இப்போ எனக்கு சந்தோஷம் தான், என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கு, அவன் சந்தோஷமா இருக்கான். இதை விட வேற என்ன வேணும்?”
“என்னமா இப்படி பண்றீங்களே மா….” என்றாலும் அம்மாவை கட்டிக்கொண்டாள் ஜனனி.
இவர்கள் இப்படி என்றால், மலர் வீட்டில்,
என்னடி மாப்பிள்ளை கிட்டே இப்படி பேசுற? கொஞ்சம் பொறுமையா பேசு என்பார்கள். அவர்கள் இன்னுமே நெருங்கி வரவில்லை. அர்விந்தாக இப்போதெல்லாம் அவர்களை அழைத்து பேசுகிறான். கனிமொழியை பெங்களூரில் தான் கல்லூரி சேர்க்க போகிறான் அர்விந்த். மாமா சொல்வது தான் அவளுக்கு வேதவாக்கு. இப்போது தான் பரீட்சை முடிந்து இருக்கும் அவள், இப்போது இருந்தே இவர்களுடன் பெங்களூரில் தான் இருக்க போகிறாள். பாட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. அனைத்தையும் கேட்டுக் கொள்வார்.
மலருக்கு சர்ப்ரைஸ் பிளான் செய்து இருந்த மகனை கிண்டல் அடித்து கொண்டு இருந்தார் தியாகு. நான் அவளை பால் வாங்குற விஷயத்தில ஜெயிக்க வைச்சதுக்கு, ப்ரோபசர் எனக்கே ஒரு பையன் லெக்சர் கொடுத்தான், அவன் எங்கேனு தெரியுமா டா?
அவரின் கிண்டலில் கொஞ்சம் கூச்சப்படாமல், “இப்போ அந்த பையனையே ஜெயிச்சுட்டாப்பா அந்த பொண்ணு” என்றான் அசராமல்.
“வெட்கமா இல்லையா டா இப்படி சொல்ல?” மகனை ஆழம் பார்த்தார் தியாகு.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு பா” என்றவனை பாய்ந்து அணைத்து கொண்டார் தியாகு,
“இப்படி வெடுக்கு வெடுக்குனு பேசுறானே, குடும்பத்தில ஒட்டுதல் இல்லாம இருக்கானேனு உன்னை பத்தி நிறைய கவலைப்பட்டு இருக்கேன்… ஆனால் இப்போ அதெல்லாம் வீண் கவலையா தெரியுது. உன்னை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ மலரை கவனிச்சுக்கிற விதம் பார்த்து பெருமையா இருக்கு. ஒரு நல்ல வாழ்க்கைத் துணைங்கிறது அமையனும்னு சொல்வாங்க எல்லாரும் ஆனா என்னை பொறுத்தவரை அது அப்படி இல்லை, நாமளும் அதை அமைச்சுக்க உண்மையான அன்பு, புரிதலோடு, ஈகோ இல்லாம முயற்சி பண்ணனும். இப்படியே இரு டா” என்றார் மனநிறைவோடு.
நண்பர்கள் சொந்தங்கள் என நிறைந்து இருந்தனர் அந்த மினி ஹாலில். நல்ல நேரம் ஆரம்பிக்க, மலரை அழைத்து வந்து மனையில் அமர வைத்தனர். அப்போது தான் நிவேதாவும் சரியாக வந்தாள். இன்னும் அவள் எதிர்பார்ப்பிற்கு எந்த வரனும் அமையவில்லை அவளுக்கு. இன்று என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என்று ஆர்வத்தில் தான் வந்து இருந்தாள். அர்விந்திற்கும் மலருக்கும் சரியாக வராது என்பது அவள் எண்ணம்.
அவளை அமரவைத்து விட்டு மனைவியை பார்ப்பதற்கு வசதியான இடத்தில் போய் நின்றுக் கொண்டான். அவனிடம் பேசலாம் என்று அவனை பார்த்த நிவேதாவிற்கு பலத்த ஏமாற்றம். அவளின் பக்கம் கூட திரும்பவேயில்லை அவன். அவனின் கவனம் முழுவதும் மலரின் மேல் தான் இருந்தது. அவளும் அவ்வப்போது கணவனை பார்த்து பார்த்து புன்னகைக்க நிவேதாவால் அங்கே இருக்கவே முடியவில்லை. பாதியில் எழுந்து வெளியில் செல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள்.
மலருக்கு வளையல் எல்லாம் அடுக்கியபின், ஜனனி அர்விந்திற்கு சைகை காட்டினாள். அவன் ஏற்பாடு செய்து இருந்த ஆட்களுக்கு அவன் சைகை செய்ய, விளக்குகள் மங்கலாக்கபட்டு திரை ஒன்று தோன்றியது. அதில், மலர் மற்றும் அர்விந்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் வர, அர்விந்த் குரலில் அவளால் அவன் வாழ்வில் நடந்த மாற்றத்தை சொல்லி இருந்தான் அவன். அவர்கள் திருமணத்தை சந்தேகப்பட்ட பலருக்கு, குறைவாக நினைத்த சிலருக்கு அவனின் அந்த பேச்சு, அவனின் அந்த காதல் பிரமிப்பை தந்தது. அனைத்தையும் பேசியவன், இறுதியாக,
ஒரு கல்யாணம் நடக்க பல பேர் காரணமா இருக்கலாம் ஆனா அந்த கல்யாணத்துக்கு காரணம் எதுவும் இருக்கக் கூடாது. எங்க கல்யாணத்துக்கு எந்த காரணமும், எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, எங்க ரெண்டு பேர் மனசும் அதில் இருந்த நேசமும் மட்டும் தான் காரணம்! என்று முடித்தான். அதோடு விளக்குகள் எரிய, பாடல் ஒலிக்க,
திருநாள் இந்த
ஒரு நாள் இதில் பல
நாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன்
மனமே
அவளை பார்த்து புன்னகைத்தபடியே, கட்டி இருந்த வேஷ்டியை தூக்கி கட்டிக்கொண்டே நடந்து வந்தவனை விழிகளை விரித்தபடி காதல்பொங்க ரசித்தாள் மலர். அவனின் விழியின் விழியில் இருந்த நிறைவு அவனின் இந்த ஜென்மமே முழுமை பெற்ற உணர்வை கொடுத்தது அவனுக்கு. அவள் அருகில் வந்தவன் குனிந்து, அமர்ந்திருந்த அவளை அலேக்காக தூக்க பாடல் மாறியது,
மீனுக்கு மீனுக்கு
பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு
அப்பாவா ஆனா
சந்தோஷம் ….
தூக்கியவளின் நெற்றியில் முத்தமிட்டு அவன் இறக்கி விட, பெரியவர்கள் குதூகலமாகி மிகுந்த சிரிப்புடன் கைத்தட்டினார்கள். பின் தம்பதிகளை பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து மறக்காமல் ஆரத்தியும் எடுத்து திருஷ்டி கழித்தார்கள். சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்று நிவேதாவை தியாகு பிடித்து வைத்ததில், அவளால் கிளம்பவே முடியவில்லை. முள்ளில் மேல் இருப்பதை போல் இருந்தாள் அவள். அவளுக்கு வாய் மொழியாக பதில் கொடுத்தால் கூட அவளுக்கு உரைக்காது இது நன்றாக வேலை செய்தது. சொல்லிகாமலே அவள் விடைபெற பார்க்க, அவளின் மேலேயே கண் வைத்திருந்த மலர், அவளிடம் சென்று,
“நீங்க இப்படி சொல்லிக்காம போறது நல்லது தான், இனிமே எங்க வாழ்க்கையில் வராதீங்க. ஆனாலும் உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்க ஆசைபடுறேன் நான. நீங்க இவரை வேண்டாம் சீக்கிரம் முடிவெடுத்ததால தான் எனக்கு அவர் சீக்கிரம் கிடைச்சார். அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு நீங்க விரும்பின மாதிரி நல்ல வாழ்க்கை கிடைக்கும், எங்களை பார்த்து பொறாமை படாதீங்க, கெடுக்க நினைக்காதீங்க… இந்த வாழ்க்கை வேண்டாம்னு நீங்களா தான் முடிவு எடுத்தீங்க இப்போ கிளம்புங்க” என்றவள் மறக்காமல் தாம்பூல பையை கொடுத்தாள். எதுவும் பேசாமல் வேகமாக வெளியேறினாள் அவள். வந்தே இருக்கக் கூடாது என்று வருத்தப்பட்டு கொண்டு சென்றாள்.
நிவேதா கிளம்பியவுடன், “என்னடி பெரிசா பேசப்போறேனு பார்த்தா சீக்கிரம் முடிச்சிட்டே” என்றான் அர்விந்த். சற்று தள்ளி நின்று அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“நான் பேச வேண்டாம்னு தானே நீங்க இதெல்லாம் செஞ்சீங்க?”
“லூசு! இது நான் என் பொண்டாட்டிக்காக செஞ்சது. எல்லார் மாதிரியும் அவளும் தெரிஞ்சுக்கட்டும், அவ்ளோதான். உனக்கு ஒரு பெர்சென்ட் கூட நம்ம வாழ்க்கையை நினைச்சு எந்த கலக்கமும் குழப்பமும் இருக்க கூடாது.”
“அடிப்படை அன்பு இல்லைனா இந்நேரம் நாம சந்திச்ச பிரச்சனைக்கு நம்ம வாழ்க்கை ஆட்டம் கண்டிருக்கும். எனக்கு இப்போ நல்லா புரியுது. இந்த அர்விந்திற்கு மலர் மேலேயும் மலருக்கு அர்விந்த் மேலேயும் லவ்வோ லவ்னு.
மூன்று மாதம் கழித்து,
கர்ப்பத்தில் இருந்த போது அம்மாவை படுத்தியது போதும் என்று முடிவு செய்த குழந்தை அழகாக சுகப்பிரசவத்தில் எந்த குறையும் இல்லாமல் பிறந்தது. மகளுக்கு அகிலா என்று பெயர் சூட்டினான் அர்விந்தன். அவர்களின் உலகம், அவர்களை முழுமையாக்க வந்தவள் என்று பொருள் கொள்ளுமாறு அம்மன் பெயரான அகிலாண்டேஸ்வரியின் சுருக்கமாக வைத்தான்.
சுபம்.
எபிலாக்
ஏழு வருடம் கழித்து
காலை ஐந்தரை மணி,
திருச்சி உச்சி பிள்ளையாரை தரிசிக்க படியேறி கொண்டு இருந்தார்கள் அர்விந்தனும் மலரும். சன்னதியை அடைந்தவர்களை அடையாளம் கண்டுக் கொண்ட ஐயர், வாங்கோ வாங்கோ, நல்லா இருக்கீங்களா? என்று நலம் விசாரித்து, அர்ச்சனை சாமான்களை வாங்கி கொண்டார். உள்ளே செல்லும் முன்,
“பையன் பேர், நட்சத்திரம் மட்டும் சொல்லுங்கோ. அடுத்த தடவை வரும் போது சொல்ல தேவை இருக்காது” என்று சிரித்தார்.
“ஆமா, ஒரே ஒரு தடவை தானே அவனுக்கு அர்ச்சனைக்கு பேர் கொடுத்தோம் உங்களுக்கு மறந்து இருக்கும்.” என்றாள் மலர். மகனுக்கு இப்போது தான் இரண்டு வயதாகிறது.
“அருண், பரணி நட்சத்திரம்” என்றான் அர்விந்த். அருணாச்சலேஷ்வரை மறக்காமல் மகனுக்கு பெயர் வைத்திருந்தாள் மலர்.
அவருக்கு மனப்பாடம் ஆகி இருந்த மற்ற குடும்ப ஆட்களின் பெயர், ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கூறி அர்ச்சனை செய்தார்.
“இந்த வருஷ வேண்டுதல் முடிஞ்சாச்சா?” தாரளமாக தட்சணை கொடுத்த அர்விந்திடம் விசாரித்தார் குருக்கள்.
“ஆமா சுவாமி, இன்னைக்கு ஊருக்கு கிளம்புறோம்” என்றான். அவர் விலக, அங்கிருந்த சின்ன பாறையில் மலரோடு அமர்ந்து அந்த காலை நேரத்து காற்றை ஆழ்ந்து சுவாசித்து அந்த நிமிடத்தை அனுபவித்தான் அர்விந்தன்.
“அகிலா பிறந்த உடனே வேண்டுதல்னு சொன்னீங்க, அப்புறம் இப்படி ஆறு வருஷமா தொடர்ந்து செய்றீங்க?”
மகள் பிறந்ததில் இருந்து வருடா வருடா சமயபுரம் வந்து முடி காணிக்கை செலுத்துகிறான் அர்விந்தன். இப்போது மகனுக்கும் இரண்டு வயதாகி விட குடும்பத்தோடு வந்து அம்மனுக்கு தங்கத் தேர் இழுத்தான்.
“ம்ம்…. இதோ இந்த நிமிஷம் நீ என் பக்கத்தில இருக்கே, ரெண்டு பேருக்கும் எவ்வளவு நிறைவா இருக்கு, அதுக்கு நன்றி சொல்ற மாதிரினு வைச்சுக்க. ரெண்டாவது குழந்தை வேணும்னு நீ அடம் பிடிச்ச அப்போ நான் உன்னை நம்பி சரினு சொல்லலை, அந்த சமயபுரத்து அம்மனை நம்பித்தான் சொன்னேன். கடவுள் புண்ணியத்தில் உனக்கு அருண் வயத்தில் இருந்த அப்போ எந்த பிரச்சனையும் இல்லை. அதுக்காக நாம கடவுளை மறந்திடக்கூடாது. அகிலா பிறக்க நீ பட்ட கஷ்டம் எனக்கு இன்னும் கண்ணிலேயே இருக்கு” என்றான்.
“இன்னுமும் அதை எல்லாம் நினைக்கணுமா?”
“அதை நினைக்கலை, ஆனா குடும்பம், மனைவி, பிள்ளைகள்னு எதுவும் இல்லைனா என்னோட வெற்றி, தோல்வி, சந்தோஷம், அனுபவம்னு எதுக்குமே வேல்யு இல்லையே…. யாருகிட்டே நான் அதெல்லாம் சொல்லுவேன்? ஸோ … எனக்கு எல்லாம் தந்த கடவுளுக்கு என்னோட காணிக்கை. ஏன் முடி காணிக்கை ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா? முடியை ஒருத்தரோட அழகோட சம்பந்தபடுத்தி வைச்சு இருக்காங்க, அப்படிப்பட்ட முடியை கடவுளுக்கு கொடுக்கும் போது அவங்களோட, பெருமை, ஈகோ, அகந்தை எல்லாம் கடவுள் கிட்டே கொடுக்கிற மாதிரி. நல்ல குடும்ப வாழ்க்கைக்கும் இந்த குணங்கள் சரியா வராது. ஸோ அது எப்போதும் நியாபகத்தில இருக்க மாதிரி இந்த வேண்டுதல் இருக்கட்டுமே.”
“இருக்கட்டுமே! முடி வளர்ற கொஞ்ச கேப் வரைக்குமாது உங்க டீம்ல இருக்க பொண்ணுங்க உங்களை பார்க்காம இருப்பாங்க….”
“நான் முடி இறக்கினா ரொம்ப ஹான்ட்சம்மா இருக்கேன்னு சொல்றாங்க”
“சொல்வாங்க சொல்வாங்க…. ஓனர் நான் இருக்கேன்னு சொல்லி வைங்க….”
“உனக்கு மட்டும் தான் நான்! கவலையே படாதே”
முற்றும்.
நன்றி!
Fantastic ending valid love