சோதிக்காதே சொர்க்கமே 10

5
(6)
அவள் கேட்டதில் கோபமான தீனா அவளின் புஜத்தை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான். அவனின் நகங்கள் அவளின் புஜத்தை குத்தின.
ரூமுக்கு வந்த பிறகு அவளை விட்டு விட்டவன் சப்பென்று ஓங்கி ஒரு அறையை விட்டான். மானசா அதிர்ந்து விட்டாள். குழந்தை திடீர் சத்தத்தில் அழ ஆரம்பித்து விட்டது. அவளின் கரங்கள் அனிச்சையாக குழந்தையை தாலாட்ட ஆரம்பித்தது.
“தனியா இருக்கும்போது என்னை நீ செருப்பால் கூட அடி. நான் அமைதியா வாங்கிப்பேன். ஆனா சர்வன்ட்ஸ் முன்னாடி வாடா போடா வா போன்னு கூப்பிட்டா அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன். இந்த வீட்டுல எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை எப்பவும் நீ டச் பண்ண கூடாது. முக்கியமா என் ஈகோவை நீ சீண்ட கூடாது..” என்று எச்சரித்தான்.
இவளுக்கு வார்த்தை வரவில்லை‌. மூச்சி விடுகிறோமா என்று கூட தெரியவில்லை.
“நீ அழுதன்னுதானே நான் குழந்தையை உன்கிட்ட வாங்கி கொடுக்க வந்தேன்? என்னையே திட்டுற. இனிமே பார்த்து பேசு..” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இவள் சுவரோடு சாய்ந்தாள். குழந்தை பசியின் காரணமாக சிறு குரலில் சிணுங்க ஆரம்பித்தது. இவளின் தாலாட்டு போதவில்லை.
மணிக்கணக்காக அமர்ந்து அழ வேண்டும் என்று ஆசை. ஆனால் முடியவில்லை. கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவளின் கன்னத்தில் இருந்த ஐவிரல் அச்சை பார்த்து வீட்டின் பணியாட்கள் அனைவருக்கும் பரிதாபமாக இருந்தது. ஆனால் சுலோச்சனாவுக்கு பரிதாபம் இல்லை. தெரிந்துதானே கல்யாணம் செய்தாள், அனுபவிக்கட்டும் என்று நினைத்தாள்.
மானசா அங்கிருந்த பால்புட்டியை கையில் எடுத்தாள். கன்னத்தில் வைத்து அதன் வெதுவெதுப்பை அளந்தவள் தன் அறைக்கே கிளம்பி விட்டாள்.
குழந்தைக்கு பசியாற்றினாள். ஆனால் குழந்தை வழக்கம் போல் அரை குறையாகதான் குடித்தது.
குழந்தைக்கு டயப்பர் மாற்றிய பிறகு தொட்டிலில் கிடத்தினாள்.
குழந்தையின் பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தவள் தொட்டிலின் அருகில் அமர்ந்து விட்டாள்.
நம்மையே அடிக்கிறான். அதுவும் கலவியின் இன்பம் அவன் உடம்பை விட்டு போகாத ஒரு தருணத்திலேயே அடிக்க அவனுக்கு மனம் வருகிறது என்றால் இத்தனை மாதங்களும் ப்ரீத்தி இவனிடம் எந்த அளவுக்கு அடி வாங்கி இருப்பாள், எவ்வளவு வேதனை பட்டிருப்பாள்!? நினைக்கும்போதே இவளுக்கு கண்கள் கலங்கியது. ப்ரீத்தியின் நிலை யாருக்கும் வர கூடாது என்று வேண்டி கொண்டாள்.
இரவு உணவு தயாராகி விட்டது. சுலோச்சனா மணியை பார்த்து விட்டு சாப்பிட வந்தாள். மருமகளை காணவில்லை. மகன் அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான். இவளை பார்த்தும் பார்க்காதது போல் தன் அறைக்கு நடந்தான்.
படுக்கையறை கதவை திறந்தான். தொட்டில் பக்கத்தில் சுவரோடு சாய்ந்து அமர்ந்து உறங்கி போயிருந்தாள் மானசா.
அவளின் முன் மண்டியிட்டவன் அவளின் முகத்தை ஆதூரமாக பார்த்தான்.
“ஐயம் சாரி. நான் உன்னை அடிச்சிருக்க கூடாது..” என்று விக்கலின் நடுவில் சொன்னான்.
நாசியில் மோதிய வாசத்தாலும் அவனின் உளறலிலும் கண்களை திறந்தாள் மானசா
எதிரில் தீனா அமர்ந்திருந்தான். அவன் மேல் இருந்து மது வாசம் பயங்கரமாக வந்தது.
இவள் பயந்து பின்னால் நகர முயன்றாள். ஆனால் பின்னால் இருந்த சுவர் அவளை அதற்கு மேல் நகர விடவில்லை.
அவளின் கன்னத்தை அள்ளினான் இவன்.
“ஐயம் சாரி அம்மு..” என்று கொஞ்சினான்.
இவள் முகம் வெளுத்து விட்டது. உடம்பு நடுங்கினாள். “ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாதிங்க..” என்று கெஞ்சினாள்.
இவன் தலையாட்டினான். “நோ.. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். யூ ஆர் மை வைஃப். மை லைப்..” என்றவன் தன் நெஞ்சை தேய்த்தான்.
“உனக்கு வலிச்சதுதானே? எனக்கும் ரொம்ப வலிச்சது. உனக்கு கன்னம் சிவந்து போச்சி. என் தப்பு. நான் உன்னை அடிச்சிருக்க கூடாது..” என்றவனின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் கீழே குதித்து ஓடியது.
அவளின் கையைப் பிடித்தவன் தனது கன்னத்தில் வைத்தான். “என்னை அடிச்சிக்க. உன் கோபம் தீரும் அளவுக்கு அடிச்சிக்க..” என்றான்.
இவள் தன் கையை உருவ முயன்றாள். அவன் விடவில்லை.
“என்னை அடி..” என்று கெஞ்சினான்.
அவளின் கை கடைசி வரையிலும் எழவில்லை. இவன் அவளின் பாதம் பற்றினான். பாதத்தில் தன் நெற்றியை வைத்தவன் “சாரி.. ரொம்ப சாரி..” என்று கெஞ்சினான்.
அடிப்பவனை கூட நம்பி விடலாம். இதுபோல் நடிப்பவனை நம்ப கூடாது என்றது இவளின் மனம்.
பயங்கரமாக நடித்தான். போதை போட்டுவிட்டால் இவ்வளவு நடிக்க வருமா? இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளிடம் இருந்து வார்த்தைகள் கூட வரவில்லை. அவள் தன்னை மன்னித்து தன்னை அவளோடு அணைத்துக் கொள்வாள் என்று இவன் எதிர்பார்த்தான். தன்னை ஆறுதல் படுத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.
அவளின் பாதங்களை பற்றியிருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.
“என்னை மன்னிக்கலையா? உனக்கு கோபம் போகலையா?” என்று உளறியபடி கேட்டவன் தனது இரண்டு கைகளாலும் தனது கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டான். இவள் அமைதியாக பார்த்தாலே தவிர அவனை நிறுத்தவில்லை.
அவன் பத்து பதினைந்து அடிகளுக்கு மேல் கொடுத்துவிட்டு கைகள் ஓய அவளைப் பார்த்தான்.
“உனக்கு இப்பவும் கோபம் போகலையா?” என்று கேட்டவன் தொட்டிலை திரும்பிப் பார்த்தான். “உனக்கும் எனக்கும் நடுவுல பகை வர காரணம் இந்த குழந்தைதானே?” என்று கேட்டவன் தொட்டிலை நெருங்க முயல, இவள் பாய்ந்து போய் அவனுக்கும் குழந்தைக்கும் இடையில் நின்றாள்.
“குழந்தையை டச் பண்ணாத..” என்றாள் கோபத்தோடு.
“வாடி என் பத்தினி தெய்வமே! உனக்கு புருஷனை மன்னிக்க இஷ்டம் இல்ல. புருஷனோடு ஒரு வார்த்தை ஆசையா பேச மனசு இல்ல. ஆனா எவளோ பெத்த குழந்தைக்கு நீ அம்மாவா மாறுவியாம்.. தாலி கட்டிய என்கிட்ட காட்டாத உரிமையை இந்த குழந்தைகிட்ட காட்டுற. நான் என்ன ஏமாளியா?” என்று கேட்டான்.
இவனை விட்டால் உளறியே தன் செவியில் இருந்து ரத்தம் வர வைத்து விடுவான் என்பதை புரிந்து கொண்டவள் “போய் தூங்குங்க.” என்று சொன்னாள்.
“நோ. எனக்கு நீ வேணும்..” என்றான் கொஞ்சலாக.
அவளைத் தலைமுதல் கால் வரை பார்த்தவன் அவளின் வயிற்றில் கைப்பதித்தான். “நீ இன்னும் சாப்பிடலதானே? வா சாப்பிட போகலாம்..” என்று அவளை இழுத்துப் போனான்.
“என்னை விடுங்க. எனக்கு பசிக்கல..” என்றவளை டைனிங் ஹாலுக்கு இழுத்து வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.
எதிரில் இருந்த சுலோச்சனா மன நெருடலோடு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எதிரில் வந்து அமர்ந்த மருமகளையும் கூட்டி வந்த மகனையும் குழப்பத்தோடு பார்த்தாள். மகனிடம் இருந்து வந்த வாசத்தைக் கண்டு மூக்கை கசக்கினாள். மகனுக்கு இந்த பழக்கம் இருக்கின்றதா? இதுநாள் வரை இல்லையே. திடீரென்று ஏன் இன்று இப்படி ஒரு நிலையில் வந்து நிற்கிறான்? இவள் குழம்பினாள்.
“குடிச்சிருக்கியா?” என்று மகனிடம் கேட்டாள்.
அவன் அம்மாவை திரும்பி பார்த்து தன் உதட்டின் மீது விரல் வைத்தான். “நீங்க பேசக்கூடாது மாதாஜீ. எனக்கு நெஞ்சு முழுக்க வலி. காரணம் நீங்களும் இவளும்தான். தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு தாயும் சரியில்ல தாரமும் சரி இல்ல..” என்று புலம்பினான்.
அருகில் இருந்த பணிப்பெண்ணிடம் “நீங்க தள்ளி போங்க..” என்ற சொல்லிவிட்டு மனைவிக்கு இவனே உணவை பரிமாறினான்.
“நீ சாப்பிடு. என் உயிர் நீ. என் உடல் பொருள் ஆவி எல்லாம் நீ. நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.. வயிறு நிறைய சாப்பிடு..” என்று சொல்லி அவளின் தலையை வருடினான்.
அவள் தலையை திருப்பிக் கொண்டாள்.
“ஐயம் யுவர் ஹஸ்பண்ட். நான் உன்னை டச் பண்ண கூடாதா? நான் உன் அடிமை மானசா..” என்றான்.
அவள் முகத்தை சுளித்தாள்.
“என்னோட சொர்க்கம் நீ. ஆனா என்னை ரொம்ப சோதிக்கிற..” என்று புலம்பினான்.
இதையெல்லாம் காதில் கேட்டு தொலைய விதி நமக்கு என்று கடுப்பானாள் இவள்.
அவள் சாப்பிடாமல் அமர்ந்திருக்க, இவன் உணவை பிசைந்தான்.
“என் உயிரை நானே அடிச்சிட்டேன். நான் ரொம்ப பேட்..” என்று முனகியபடி அவளுக்கு ஊட்டி விட வந்தான்.
இவள் தலையை திருப்பிக் கொண்டாள்.
“தங்கம் இல்ல? என் புஜ்ஜிம்மா இல்ல? சாப்பிடு செல்லம். இனி நான் அடிக்க மாட்டான். ப்ராமிஸ்..” என்றான்.
அவன் அப்போதும் வாய் திறக்கவில்லை.
என்றும் இல்லாமல் இன்று மகன் குடித்து விட்டு வந்து விட்டானே என்ற அதிர்ச்சியில் இருந்து சுலோச்சனா சாப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவளின் நாற்காலி இரண்டடி நகர்ந்திருக்கும். குழந்தை அழும் சத்தம் கேட்டது.
மானசா உடனே நாற்காலியை விட்டு எழுந்தாள். ஆனால் அவளை தோளில் கை பதித்து அங்கேயே அமர வைத்தான் தீனா.
“சாப்பிடாம நீ எங்கேயும் போகக்கூடாது..” என்று உத்தரவு போட்டான்.
“குழந்தை அழுது. ப்ளீஸ் என்னை விடுங்க..” கெஞ்சினாள் அவள்.
“நோ. நீ போக கூடாது..” இவன் பிடிவாதமாக சொன்னான்
அவள் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்தது. குழந்தை விசயத்தில் சுலபமாக கண்ணீர் சிந்தி விடுகிறாள்.
அவள் கண்ணீரை பார்த்தவன் “நீ என் கண்ணின் மணி. அழ கூடாது..” என்றான்.
சுலோச்சனா மகனையும் மருமகளையும் மாறி மாறி பார்த்தாள். மானசாவின் தோளில் அழுத்தமாக பதிந்திருந்தது அவனின் கரம்.
“உங்க கால்ல கூட விழுறேன். என்னை விடுங்க..” என்று அவள் கெஞ்சி அழ, “நான் உனக்கு ஊட்டி விடுவேன்..” என்று தட்டை எடுத்தான் அவன்.
அவனின் கரம் நகர்ந்ததும் இவள் எழுந்து ஓடினாள்.
படுக்கையறைக்குள் நுழைந்து குழந்தையை அள்ளி தூக்கினாள். இவன் பின்னாலேயே வந்திருந்தான். அவள் குழந்தைக்கு பால் டப்பா மூலம் பசியாற்ற, இவன் உணவை அவள் வாயில் திணித்தான். அவள் விம்மிக் கொண்டே சாப்பிட்டாள்.
“என் இதயமெல்லாம் ரணம். நெஞ்செல்லாம் கசங்கி பிழிஞ்ச மாதிரி வலி. கரும்பு மெஷின்ல மாட்டிய மாதிரி என் பீலிங்ஸ் அழுது..” என்றான்.
இவள் அவன் உளறுவதையெல்லாம் தலையெழுத்தே என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் அறைக்கு வந்த சுலோச்சனாவுக்கு மானசாவின் கண்ணீர் முகம் நினைவுக்கு வந்தது. குழந்தை மீது அவள் உண்மையான பாசத்தைதான் வைத்திருக்கிறாள், நாம்தான் தேவையில்லாமல் அவள் மீது வெறுப்பை கொட்டுகிறோமோ என்று யோசித்தாள்.
அங்கே குழந்தை அரைகுறையாக பசியாறிய பிறகு தொட்டிலில் கிடத்தி விட்டு கண்ணீரை துடைத்தாள் மானசா.
அவன் போதையோடு காலி தட்டை கிச்சனுக்கு தூக்கி போனான்.
அவன் கையால் சாப்பிட்டு விட்டோமே என்று நினைத்தவளுக்கு வாந்திதான் வந்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றவள் தின்ற உணவு மொத்தத்தையும் வாமிட் செய்தாள்.
அவள் திரும்பி வந்தபோது ரூமின் நடுவில் நின்றிருந்தான் தீனா. அவளின் செயலில் அவனுக்கு இதயம் ரொம்ப உடைந்து விட்டது.
அவளை நெருங்கி அவள் முன் மண்டியிட்டான். “ஐயம் சாரி. உன்னை அடிச்சது என் தப்புதான். இனிமே அப்படி செய்ய மாட்டேன்..” என்று அவளின் தொடையோடு அணைத்து கெஞ்சினான்.
“நீங்க என்னை கல்யாணம் பண்ணாதே தப்புதான்..” என்றவள் அவனை விட்டுவிட்டு சென்று கட்டிலில் படுத்தாள்.
அவன் அடுத்த சில நிமிடங்களுக்கு அப்படியே மண்டியிட்டு இருந்தான். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளருகில் வந்து அருகில் சாய்ந்தான்.
“என் காதல் உனக்கு ஒருநாள் புரியும்..” என்று சொன்னான்.
அதுவரை உன் அருகில் இருந்தால்தானே என்று நினைத்தாள் அவள். குழந்தையை தூக்கி கொண்டு கிளம்பி விட கணக்கு போட்டு விட்டாள் அவள்.
தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!