“ஆமா, நீங்க சொன்னது சரி தான். நான் அங்க போயிருக்க கூடாது. அவங்க நிலைமையை கேட்டதும் பாக்கனும்னு தோணுச்சு. அதான் பாத்துட்டு வரலாம்னு போனேன். இனிமே நீங்க என்ன சொல்றீங்களோ அதை மட்டும் தான் கேட்பேன். உங்க பேச்சை மீறி எங்கேயுமே போக மாட்டேன்” என்றவளோ அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
நாட்கள் இவர்களுக்கு நாள்தோறும் இப்படியே அழகாக சென்று கொண்டிருந்தது.
அக்ஷ்ராவோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துவிட்டாள். உடல்நிலை சற்றும் தேறாமல் இருப்பதால் அவளின் தாயும் அவளுடன் வந்து தங்கி கொண்டார்.
பிரேமோ இப்படி ஒருத்தி இருப்பதையே சற்றும் சட்டை செய்யவில்லை. தான் வேலைக்கு செல்வதும் பார்ட்டிக்கு செல்வதும் என கும்மாளமாக தன் நாட்களை செலவிட்டான்.
அவனின் நடவடிக்கையில் அக்ஷ்ராவிற்கு தான் மனம் வருந்தி போனது.
பொருத்து பொருத்து பார்த்தவள் முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டாள், “ஏன் பிரேம் என்னை அவாய்ட் பண்ற?”.
“நான் என்ன அவாய்ட் பண்றேன்?” என்றவாறு அவன் தன் தோள்களை குலுக்கிக் கொண்டு சட்டை செய்யாமல் கேட்கவும் இவளுக்கோ கோபம் தலைக்கேறியது.
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்க பிரேம் நீ உன் மனசுல.. நான் உன்னுடைய வைஃப்.. உடம்பு சரியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இப்ப டிஸ்டார்ஜ் ஆகி வந்து இருக்கேன். ஒரு நாளாவது என்னை ஹாஸ்பிடல் வந்து பாக்கணும்னு உனக்கு தோணுச்சா.. நீ பாட்டுக்கு ஜாலியா பார்ட்டிக்கு போற.. ஆஃபீஸ் போற.. உன் வேலைய மட்டும் பாக்குற.. என்னை ஒரு ஆளா கூட கன்சிடர் பண்ண மாட்டேங்குற..” என்று இத்தனை நாள் தன் மனதில் தேக்கி வைத்திருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கண்ணீரோடு சேர்த்து வெளியிட்டாள்.
“லுக் அக்ஷ்ரா! உன்னை மட்டுமே கவனிச்சுக்கிட்டு உன் கூடவே இருக்குறதுக்கு நீ ஒன்னும் எனக்கு மட்டும் பொண்டாட்டியா இருந்தவ இல்லையே” என்று ஒரே வார்த்தையில் அவளை நோகச் செய்து விட்டான்.
“அந்த சூர்யாவோட பொண்டாட்டி தானே நீ.. அதுக்கப்புறம் தானே நான் கூப்பிட்டதும் என்னோட வந்துட்ட.. என்னை விட பணக்காரனா எவனாவது வந்து இருந்தா அவனோடவும் நீ போயிருப்ப தானே?”.
“ச்சீ.. என்ன பிரேம் இப்படி எல்லாம் பேசுற?”.
“பின்ன வேற எப்படி பேசணும்னு சொல்ற.. இதுல உனக்கு உடம்பு சரியில்லை என்றதும் நான் வந்து ஐயோ அம்மான்னு உன்னோட ஹாஸ்பிடல்லையே தங்கணுமா.. அப்படி உருகி உருகி பார்த்துக்க நாம ரெண்டு பேரும் ஒன்னும் டிப்பிக்கல் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் கிடையாது. அதை முதல்ல மனசுல வச்சுக்கோ.. உனக்கு ஃபர்ஸ்ட் சூர்யாவை பிடிச்சிருந்தது அவனோட வாழ்ந்த.. அப்புறம் என்னை பிடிச்சிருந்தது என்னோட வந்துட்ட.. இதுக்கு அப்புறம் வேற யாரை உனக்கு பிடிச்சிருந்தாலும் நீ அவங்களோட தாராளமா போகலாம். நான் உன்ன போர்ஸ் பண்ணி என் கூட தான் இருக்கணும்னுலாம் ஒன்னும் பிரச்சனை பண்ண மாட்டேன். அதேபோல, எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன். என்னையும் நீ உன் கண்ட்ரோல்ல எடுக்கணும்னு நினைக்காத” என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிப்பது போல் அவளிடம் கூறினான்.
அவனின் இந்த அவதாரத்தில் ஆடிப் போன அக்ஷ்ரா, “என்ன பிரேம் இப்படி எல்லாம் பேசுற? உனக்காக தானே சூர்யாவை தூக்கிப் போட்டுட்டு வந்தேன்” என்றாள் நா தழுதழுக்க.
“நான் ஒன்னும் இல்லன்னு சொல்லலையா அக்ஷ்ரா.. அதே மாதிரி இப்பவும் உனக்கு யார் கூட போகனும்னாலும் நீ தாராளமா போகலாம். நான் ஒன்னும் உன்னை கண்ட்ரோல் எல்லாம் பண்ண மாட்டேன் பா.. அதே மாதிரி நீயும் என்னை எந்த ஒரு கண்ட்ரோலும் பண்ண கூடாது” என்று அழுத்தமாக கூறினான்.
என்ன தான் சூர்யாவை பணத்திற்காக திருமணம் செய்து இருந்தாலும், குழந்தையை தற்பொழுது வேண்டாம் என்று எண்ணியிருந்தாலும், அவனை தன் அருகில் அதிகமாக அவள் சேர்க்காமல் இருந்தாலுமே, அவனோடு வாழும் எண்ணத்தில் தான் இருந்தாள்.
இவன் தானே அவளின் மனதை கலைத்தான். தங்கள் ஆசைப்படி உல்லாசமாக இருக்கலாம் என்றெல்லாம் கூறினானே.. இப்பொழுது இப்படி எல்லாம் பேசவும் அவளுக்கு மனம் வெறுத்து போனது.
தான் செய்த மிகப்பெரிய தவறை இப்போது தான் உணர்கிறாள். அதுவும் காலம் கடந்த பிறகு..
அவள் செய்த தவறை திருத்தும் நிலையிலும் அவள் இல்லை.. மன்னிப்பு கேட்கும் அருகதையும் அவளுக்கு இல்லை.. அதை எல்லாம் எப்பொழுதே அவள் கடந்து வந்து விட்டாள்.
பிரேமை பொருத்த மட்டும் இருக்கும் வரை என்னுடன் நீ இருந்து கொள்ளலாம். இதற்கிடையில் எனக்கு வேறு யாரையாவது பிடித்திருந்தால் நான் அவளுடன் சென்று விடுவேன்.
அதற்காக உன்னையும் விட்டு விட மாட்டேன். உன்னையும் வைத்து பார்த்துக் கொள்வேன். இதற்கு விருப்பம் இருந்தால் என்னுடன் இரு என்று வெளிப்படையாகவே கூறி விட்டான்.
என்ன செய்வாள்?
என்ன அவளால் செய்து விட முடியும்..
வேறு வழி இல்லையே, தான் செய்த தவறுக்கான தண்டனையாய் இதை நினைத்துக் கொண்டு இருந்து தானே ஆக வேண்டும்..
தாயும் மகளும் தாங்கள் செய்த தவறை இப்பொழுது தான் உணர்ந்தனர். வாழ்க்கையில் பணத்தைவிட எதுவுமே முக்கியமில்லை என்று எண்ணியவர்களுக்கு பணத்தையும் விட உறவு தான் பெரிது என்று காட்டிவிட்டது பிரேமின் செயல்.
அதன் பிறகு பிரேமின் சொல்பேச்சுக்கு அடங்கி வேறு வழியில்லாமல் அவனுடன் நாட்களை கடத்த தொடங்கினாள் அக்ஷ்ரா.
அதிலும், இப்பொழுது அவளால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது என்பது வேறு பிரேமுக்கு நன்கு வசதியாகி போனது.
முதலெல்லாம் ட்ரிங்க்ஸ் பார்ட்டிகளுக்கு அவளை அழைத்து செல்பவனோ, இப்பொழுதெல்லாம் கப்பில் ஸ்வாப்பிங் பார்ட்டிகளுக்கு அவளை அழைத்து செல்ல துவங்கி விட்டான்.
அவள் முடியாது என்று மறுத்தாள் தன் வாழ்க்கையை விட்டு வெளியேறுமாறு கூறி மிரட்டுகிறான். தன் வாழ்க்கை அழிந்துவிட்டது என்பது அவளுக்கு கண் கூடாக தெரிந்து விட்டது.
இனி இது தான் தன் தலையெழுத்து என்று வாழ்க்கை போகும் போக்கில் வாழ தொடங்கி விட்டாள் அக்ஷ்ரா.
அன்று சீதா மற்றும் ராம்குமாரின் திருமண நாள். நேரமே சூர்யாவும் வேதவள்ளியும் கிளம்பி சென்று விட்டனர். அவர்கள் இருவரும் தானே அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். அதனாலேயே விரைவில் கிளம்பிவிட்டனர்.
ஒரு வழியாக குடும்பத்தார் சம்மதத்துடன் சீதாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான் ராம்குமார்.
அவர்களின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமைந்துவிட.. அடுத்து ராம்குமாரை கையில் பிடிக்கவே முடியவில்லை. ஹனிமூன் அது இது என்று பல நாட்கள் விடுமுறை எடுத்து விட்டான்.
அவர்களின் திருமணத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் வேதவள்ளி.
அவளின் தோள் உரச அவள் அருகில் வந்து நின்றவன், “என்னடி இப்படி பாக்குற?” என்றான் அவள் காதருகில் தன் மீசை முடி உரசும் அளவிற்கு கிசு கிசுப்பாக.
“நமக்கும் இப்படி கல்யாணம் நடந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் இல்ல.. எல்லாம் உங்களால தான்.. எல்லாமே அவசரத்துல நடந்திடுச்சு” என்று அவள் வருத்தமாக கூறவும்.
“நீ மட்டும் ஓகேன்னு சொல்லு.. இப்போவே.. இதே இடத்துலயே நானும் உனக்கு தாலி கட்ட ரெடியா தான் இருக்கேன்” என்றான் தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி புன்னகையோடு.
அதில் தன்னிலை மறந்தவள் அவனின் விழிகளில் கட்டுண்டு அவனை பார்த்துக்கொண்டே நின்று இருந்தாள்.
அவனுக்கும் அதே நிலை தான்..
அப்பொழுது கீழே அமர்ந்திருந்த ராம்குமாரோ சூர்யாவின் வேட்டியை பிடித்து இழுக்கவும் தான் தன்னிலை அடைந்தவன் அவனை பார்த்து, “என்னடா?” என்றான் சற்று எரிச்சலாக.
“டேய் இன்னைக்கு கல்யாணம் எனக்கு டா.. ஆனா, பார்த்தா நீ தான் ஹீரோவா இருக்க.. பாரு, எல்லாரும் உங்கள தான் பாக்குறாங்க” என்க.
சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவர்களை பார்த்து சிரிப்பதை உணர்ந்தவர்கள் அசடு வழிந்தவாறு நின்று இருந்தனர்.
அதன் பிறகு கிண்டல் கேலியுடன் அவர்களின் திருமணம் இனிதே நிறைவடைந்தது.
சூரியா பிசினஸ் சம்பந்தமாக இரண்டு நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் படி ஆகிவிட்டது.
“நான் போயிட்டு வர வரைக்கும் இரண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க.. தேவையில்லாத பிரச்சனை எதுவும் பண்ணிட்டு இருக்காதீங்க”.
“ஆமா, நாங்க ரெண்டு பேரும் குழந்தைங்க பாரு பிரச்சனை பண்ணிட்டு இருக்க.. போடா நீ இல்லனா இந்த வீட்ல ஒண்ணுமே நடக்காதுன்னு நினைச்சிட்டியா.. எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று தாத்தா அவனின் வாயை அடைத்துவிட்டார்.
அவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்பதை உணர்ந்த சூர்யா வேதவள்ளியை அழைத்து சென்று பத்திரமாக இரு, ஜாக்கிரதையாக இரு என்று பல அறிவுரைகளை வாரி வழங்கி விட்டே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருந்தான்.