ஆழி 6 

5
(5)

ஆழி 6 

 

செத்துவிடலாம் என்று மனம் முடிவு செய்ததும், உடம்பு தளர்ந்தது. அதுவரை கவனிக்கப்படாத அச்சங்கள், வினோதமான காற்றின் சலசலப்பு, புல்லுக்குள் ஓடும் சிறிய உயிரினங்களின் சப்தங்கள், தூரத்தில் கேட்கும் இரவில் அலறும் மிருகத்தின் குரல் எல்லாம் ஒரே நேரத்தில் காதை கிழிக்கத் தொடங்கியது. இருள் சூழ்ந்த காட்டு பகுதி தன்னையே பிசாசாக மாறி, அவளை நோக்கிப் பாயத் தயாராக இருப்பது போல் தோன்றியது.

 

தரையைப் பார்த்தால் அவளது நிழலே அவளை அச்சுருத்தி அலற வைத்தது. அவளது போனி டெயில் காற்றில் அசைந்தாடி மோகினி அவதாரமாக மிரட்டியது. 

 

சாவை நினைத்த அச்சமும், தனிமைக்கு பயப்படுவதும், அந்நியனிடம் எதிர்பார்த்து நிற்பதும் சேர, தன்னை நினைத்தே அசிங்கமாகவும் இருந்தது ஆழினிக்கு. இப்படியெல்லாம் சாக நினைக்கும் பெண் இல்லை அவள். கலகலப்பும் குறும்பும், தைரியமும் சாகசங்களும் வாழ்க்கையில் திரில்லும் இருக்க வேண்டுமே என்றும் விரும்பும் பெண் அவள். 

 

அவளது வாழ்க்கை முறையும் அதுதான். ஆனால் இப்போதைய அவளது உடல்நிலை? நடக்க கூட முடியாமல் கனிவும் கருணையும் இல்லாத இரக்கமற்ற ஒருவனிடம் ஆதரவையும் துணையையும் பிச்சை கேட்டு நிற்கும் நிலைதான் அவளை பலவீனமாக்கியது. 

 

இதுநாள் வரை யாரிடமும் கையேந்தி நின்றதே இல்லை அவள். அவளது தந்தை அந்த அளவிற்கு அவளுக்கு ட்ரெயினிங் தந்திருக்கிறார். அவர் ஒருவிதமான கேரக்டர். 

 

அவளது காலடியில் மிதிபடும் இலைசருகுகளில் நெரிபடும் ஓசையும், ஓரிரு பறவைகளின் வினோத ஒலிகள், காற்றுகள் ஒன்றோடு ஒன்று உரசும் ஹோஓஓஓஓ வென்ற சப்தங்கள் எங்கேயோ ஓநாயோ எதுவும் ஊளையிட பள்ளத்தின் விளிம்பில் நின்றிருந்த பெண்ணிற்கு அச்சத்தில் உச்சி முதல் பாதம் வரை உதறியது. பயத்தில் உச்சா வரும் போல இருக்க, முதலில் அந்த பாரத்தை இறக்கலாமா என்று சுற்றிலும் பார்த்தாள். 

 

முதல்ல விழுந்து சாகலாம், அதற்கு பிறகு என்ன நடந்தால் என்ன என்று பள்ளத்தின் விழிம்பு சென்று எட்டிப் பார்த்தாள், கீழே கீழே ஆழம் செல்லச் செல்ல கருங்கடலென சுழன்றாடும் இருள் அவளை விழுங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதைப் போலவே அவளை உள்ளே இழுத்தது. 

 

காற்றின் அலறல் அவளை வாவென்று அழைப்பது போலவே அவளது இதயத்தை பலவீனப்படுத்தி தட்டி அழைத்தது. அடிவயிற்றில் இருந்து அச்சம் போன்ற உணர்வு எழ, நெஞ்சம் நடுநடுங்கியது. 

 

அவள் ஒரு அடியை முன்னே எடுத்து வைத்தால் கீழேதான் விழவேண்டும். மனதும் புத்தியும் பலவீனமாக வேலை செய்ய, கண்களை இறுக மூடிக்கொண்டு வலது காலைத் தூக்கினாள், 

 

“ஏய் நில்லு” அவளை அழைத்தவன் வேகமாக ஓடி வரும் ஷூ தடத்தின் சப்தம், காதில் விழ, அந்த நொடியில் மனதில் ஒரு வெறி, தன்னை காக்க வருபவனின் கைக்கு சிக்காமல் இந்தப் பாதாளத்தில் விழ வேண்டும் என்று கிளர்ந்தது மனதில். 

 

“ஏய் இடியட் கேர்ள் நில்லு”

 

அந்தக் குரல் காதைத் துளைத்த நொடியில் அதை மீறி செயல்பட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளியது அவளை. தன்னை காயப்படுத்தும் ஆணின் மனதை தானும் காயப்படுத்த வேண்டும் என்ற வெறி அவளுள். 

 

ஒருவேளை தான் இறந்து போனால் அதுவே அவனை காலம் முழுவதும் வதைக்கும் அல்லவா. ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாது போனது குற்ற உணர்வாக உறுத்திக் கொண்டே இருக்கும். புத்தி பேதலித்துப் போக கண்டதும் மூளைக்குள் குறுக்கும் மறுக்கும் ஓடியது. 

 

பின் வரும் காலடிச் சத்தம், ஷூ தடத்தின் ஒலியோடு கலந்து அவனது அழுத்தமான குரலும் இணைய, அவளது மூச்சைக் கூட நிறுத்த வைக்கும் அளவுக்கு மனதில் பல்வேறு குரல்கள் நெகட்டிவ் எண்ணங்களை விதைத்தது.

 

இப்போ சிக்கினால் அவமானம், பள்ளத்தில் விழுந்துவிட்டால் சாவு எதை தேர்ந்தெடுப்பது என்ற போராட்டம் அவளது உள்ளத்தை கிழித்தெடுக்க அலைபாய்ந்த மனது சாவையே தேர்ந்தெடுத்தது. 

 

அவள் பள்ளத்தை நோக்கி வேகமாக நகர்ந்தாள். ஆனால் அடுத்த கணமே

அவளது போனி டெயில், அவனைத் துரத்தி வந்தவன் விரல்களில் சிக்கியது. அவளது போனி டெயில் ஹேர் அவனது அகன்ற கரங்களுக்குள் சிக்கி இழுபட்டது. மறுகரத்தால் அவளது தோள் பற்றி வலிமை கூட்டி அவளை தூக்கிப் பிடித்து இழுக்க,

 

அதிர்ச்சியோடு பின்வாங்கியவள், சமநிலை கலைந்து விழுந்துவிடும் முன்னே, அவனது அகன்ற கை அவளது தோளைப் பற்றி இழுத்து தன் மார்போடு வலுவாகக் கட்டிக்கொண்டது. 

 

அதிர்ச்சி அடைந்த அவள் விழிகளை அவனது சிவந்து சினந்த விழிகள் சந்தித்தது. இருவரது விழிகளும் ஒன்றிணைய அவளுக்கோ மயக்கம் வரும் போல இருந்தது. 

 

அவனிடமிருந்து தப்பிக்கப் போராடினாள். அவனை விட்டு விலக முயன்றாள். அவனோ ஆவேசமாய் நகைத்தபடி அவளை தன்னோடு அணைத்தான். 

 

“எங்கே ஓடு பார்ப்போம். அடிபட்டு ரத்தம் கசியும் இந்தக் காலை வச்சுட்டு ஓட முடியுமா உன்னால” அழுத்தமான உதடுகள் அவள் காதோரம் பேசிட. 

 

அவள் தேகம் உதறியது அவன் பேச்சில், அவன் மீதான அச்சமா இல்லை ஈர்ப்பா? என்று அவள் குழம்பினாள். அந்தக் குரலில் இருந்த வெப்பம், அவள் இதயத்தை சில்லென்று துளைத்தது. 

 

அவள் இன்னும் எதிர்க்க, அவன் சிரிப்பை விடாமல் மெதுவாகச் சொன்னான் “இன்னுமா சாக ஆசை வருது உனக்கு?” 

 

அவளது மூச்சு தடுமாறியது. இதயம் வேகமாகத் துடித்தது. அது அச்சத்தாலா? அல்லது அவன் கேட்கும் கேள்வியாலா?

 

விடுதலை வேண்டுமென்ற அவசரத்தை விட, அவனது கைகளின் உறுதி அவளுக்குள் வேறு ஒரு உணர்வைத் தூண்டியது. அவன் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பது ஆபத்தா? அல்லது பாதுகாப்பா? என்ற கேள்வி அவளை உள்மனதில் உலுக்கியது. இப்பொழுது புதிதாக ஒரு பயம் அவளைப் பிடித்தாட்டத் தொடங்கிட, அவனிடமிருந்து தன்னை விடுவிக்க வலுவாகப் போராடினாள். 

 

அவன் மார்புக்குள் சிக்கிக் கொண்ட அவளது சிறிய மூச்சுகள், அவனது இதயத் துடிப்போடு கலந்தன. அந்தத் துடிப்பின் சத்தம் அவளை மயக்கத்துக்குள் இழுத்தது.

 

“விடு…” திமிறினாள் அவன் கைகளில் இருந்து. 

 

ஆனால் அவளது குரல் காற்றின் சிறு சலசலப்பாய் மட்டுமே வெளிப்பட்டது. கோபமோ, வலியுறுத்தலோ இல்லை அதில் அவள் மீதே நிச்சயமில்லாத தயக்கம் மட்டுமே இருந்தது.

 

அவன் அந்தக் குரலைக் கேட்டு ஏளனமாகச் சிரித்துவிட்டு அவளது பார்வையை நேராகச் சந்தித்தான்.

“விடுறேன்னா நீ செத்துப் போய் விடுவே. நீ செத்துட்டா என்னோட ஆசை எப்படி நிறைவேறும் ஹான்” பெண்களை வேட்டையாடும் வில்லனாய் தென்பட்டான் அவளது கண்களுக்கு. 

 

“உன்னை நம்பித்தான் வந்தேன். ஆனால் நீ நீ தப்பு பண்ணாத தவன்” பள்ளத்தின் விளிம்பில் வைத்து தன் உணர்வுகளுடன் விளையாடும் அரக்கனைக் கண்டு நடுங்கியவளின் இதயத் துடிப்பு அவனது உரம் பாய்ந்த மார்பில் எதிரொளித்தது. 

 

அவளது விரல்கள் அவன் மார்பில் பதிந்து தள்ளியது அவனை. அது எதிர்ப்பாகத் தோன்றினாலும், உண்மையில் அது ஒரு குழப்பமான சூழ்நிலைதான் அவளுக்கு.

 

மரங்களின் அடர் இருளும், காற்றின் சப்தமும், பின் தொடரும் நிழல்களும் இருந்தாலும், அவர்கள் இருவருக்குமிடையே அந்த நொடியில் மட்டும் வேறு ஒரு உலகம் உருவானது. அச்சமும் ஈர்ப்பும் கலந்து எரியும் ஸ்லோ பர்ன் பயர் போலே மெல்ல மெல்ல பற்றி எரிய ஆரம்பித்தது. 

 

அவன் விழிகள் சொல்லும் கதையை ஆழ்ந்து படிக்க முற்பட்டவளுக்கு தோல்வியே மிஞ்சியது. 

 

அவன் மெதுவாக அவளது தலையின் பின்புறத்தில் விரல்களைச் சுற்றி, ஓர் இறகின் தொடுதலைப் போல் தடவினான்.

“நான் தொட்டா ஈஸியா நீ மயங்கிடுவ. செக் பண்ணலாமா” என்றான் அவன். 

 

“விடு என்னை. எப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னை நிப்பாட்டி வதைக்கிற நீ” அவள் அழுதபடி அவனின் இழுவிசைக்கு உட்பட்டு அவன் மார்பில் சாய்ந்தவுடன், கீழே பள்ளம் இன்னும் தனது கருங்கண்களால் அவளை நோக்கி அழைப்பது போன்ற மாயை எழுந்தது அவளுக்கு. அதைக் கண்டு மிரண்டவளின் பார்வை அதிலிருந்து விலகி, அவனை நோக்கிப் போயிருந்தது.

 

அவள் திமிரவும், இருவரும் சேர்ந்து பள்ளத்தில் விழப் போய் சுதாரித்து வலது காலை கல் மீது விசை கொடுத்து ஊன்றி மறுபக்கம் விழுந்தான். 

 

கல்லும் வேர்களும் உடம்பில் குத்த, உருண்டு சென்று ஓரிடத்தில் தங்கினார்கள். 

 

பாறையை ஒத்த உடம்பு வாகு கொண்டவனுக்கு கூர் கற்கள் குத்தி ரத்தம் வருவது வலிக்கவில்லை. தோல் கிழிந்து ரத்தம் கசிவதைக் கூடக் கண்டுகொள்ளவில்லை அவன். 

 

எழுந்து நின்றவன் அவளையும் கையைப் பற்றி இழுத்து நிற்க வைத்தவன் அவளை ஓங்கி அரைந்திருந்தான். 

 

“யூ இடியட்?” அவன் குரல் அமைதியைக் கிழித்து அவன் செவியை அடைத்தது. 

 

“உயிர் வேண்டாம். சாகிற ஆசை இருந்ததுன்னா என்கூட வவ்வால் மாதிரி தொத்திக்கிட்டு வராம வீட்டுலயே ஒரு முழம் கயிற்றில் தொங்க வேண்டியதுதானே, செத்து தொலையுற சனியன் இங்க வரைக்கும் வந்து சாகணுமா. நீயெல்லாம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். போ போய் சாவு” அவளை முன்னோக்கி தள்ளினான். 

 

தடுமாறிக் கீழ மல்லாக்க விழப் பார்த்தவளை இழுத்து நேராக நிற்க வைத்தான். 

 

கண்கள் கலங்கி நின்றிருந்தாள் அவன் முன்பு. 

 

“இங்கே இந்தப் பள்ளத்தில் குதிச்சா என்ன ஆகும் தெரியுமா? எலும்பு கூட மிஞ்சாது. அப்படி இருந்தா அது உன்னோட அதிர்ஷ்டம். ஆனால் மரக்கிளைகளில், பாறைகளில் மாட்டிக் கொண்டால், உயிரோடு மாட்டிகிட்டு இருக்க உன்னை மிருகமும் பறவைகளும் கொத்திக் குதறி சதையை பிச்சுப் பிச்சு தின்னும். உன்னோட சதையை உன் கண் முன்னவே தின்னு பசியாறும். எத்தனை ஆபத்து? இந்த முட்டாள்தனம் பண்ணும் முன் அதையெல்லாம் யோசிச்சிருந்தா இப்படிப் பண்ணுவியா?”

 

அவன் சொல்வது போல நடந்திருந்தால் எப்படியோ தெரியவில்லை. ஆனால் அவன் விளக்கி விளக்கிக் கூறவும் அவளது உதடுகள் நடுங்கி நன்றி சொல்லக்கூட வார்த்தைகள் வரவில்லை. 

 

“உன்னோட வலி வேதனைகளை மற்றவர்கள் சுமக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. யாரும் வரமாட்டாங்க. அவசியமுமில்லை புரியுதா” என்று அவளுக்கு விளக்கி விளக்கிக் கூறவும், அச்சத்தில், அவமானத்தில் வெளிரி நின்றாள். 

 

ஒரு நொடி அமைதியானது. காற்று மட்டும் ஆவேசமாக அவள் கூந்தலை அசைத்தது.

பின்னர் அவன் சற்றே பின்வாங்கி, சுவாசத்தை அடக்கிக்கொண்டு, அவள் மீதிருந்து பார்வையை விலக்கினான். அந்தக் கணத்தில் அவளுக்கு தெரிந்தது அவன் கோபம் தான், ஆனால் அந்தக் கோபத்துக்குள் புதைந்து கிடப்பது அவனின் பதற்றம். ஒரு நொடி தாமதித்தாலும் இப்பொழுது இவள் இல்லையே என்று. 

 

அவளது கண்களில் தண்ணீர் வழிந்தது. முதலில் ஓரிரு துளிகள் அரும்பி பின்னர் கட்டுப்பாடின்றி வழிந்தோடியது. அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, இரு கை விரல்களால் தனது டாப்சின் ஓரம் பிடித்தபடி நின்றாள்.

 

“ஏன் இன்னும் நிற்கிறே? போ! அப்படி மரத்துக்கடிய உட்கார்ந்து வேற என்ன பண்ணி என்னை டார்ச்சர் பண்ணலாம்னு பிளான் பண்ணு” என்று தவன் சுருக்கமான குரலில் சொன்னான்.

 

அவனது பேச்சில் காயப்பட்டவளாய் தலை தூக்கிப் பார்த்தாள் அவனை, அவன் முகத்தில் எந்த இரக்கத்தின் சுவடும் இல்லை.

கண்கள் சிவந்து, உதடுகள் பிடிவாதமாக முரட்டுத்தனமாய் இறுகியிருந்தது. ஒரு பாறையைப் போல் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதவனிடம் ஏன் இரக்கத்தை எதிர்பார்க்கவேண்டும் அது கிடைக்காது ஏமாற வேண்டும்? அவளுக்கு அதெல்லாம் அப்போதைக்கு புரியத்தானில்லை. 

 

“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய். எனக்கு ஹர்ட் ஆகுது?” என்று குரல் நடுங்கி கேட்டாள் அவள். அவளின் உள்ளே பயமும் கோபமும் பெருக்கெடுத்தது. 

 

அவளது கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லவில்லை. ஒரு குளிர் காற்று வீசியது போல அவன் பார்வை அவளைக் உறுத்து நோக்கிட, அவளுக்கு உடல் முழுக்க நடுக்கம் வந்தது.

 

அந்த மௌனம், வார்த்தைகளால் சொல்ல முடியாத தண்டனையைப் போல் இருந்தது அவளுக்கு. 

 

அவளது கன்னங்களை நனைக்கும் கண்ணீரைப் பார்த்தவனுக்குள் ஒரு ஏளன சிரிப்பு, பெண்கள் என்றாலே அழுகைதான் போல என்ற எண்ணம் இன்னும் உறுதியாகவே செய்தது. “இப்போ அழுதால் எல்லாம் தீரும்னு தோணுதா? உன் கண்ணீர் இங்கே யாருக்கும் புரியாது அவசியமுமில்லை. காட்டு மிருகத்திடம் சிக்காமல் உயிர் தப்பிக்கணும். அதுமட்டும்தான் நமக்கு முக்கியம்” இரக்கமில்லாது கூறினான். 

 

அவன் பேச்சில் வந்த முட்டிக்கொண்டு அழுகை நின்று போனது. 

 

ஒரு அடி விலகி நின்று, கைகளை மார்பில் கட்டிக்கொண்டு, குளிர்ந்த பார்வையுடன் அவளை நோக்கினான்.

 

“இனிமே இந்த மாதிரி பைத்தியக்கார செயல் செய்ய நினைச்சா… என் வழியிலேயே வராதே,” சொல்லிவிட்டு 

“இருட்டிருச்சு. தங்கிட்டுதான் போகணும். இங்கயே இரு சாப்பிட எடுத்து வரேன்” போனான். 

 

அவள் நிலைகுலைந்து நின்றாலும், தன்னை விட்டு விலகும் ஆணின் முதுகைப் பார்த்தபோது, அவன் தன் கோபத்தை மறைத்து நடந்தாலும், அதுவும் ஒரு ஆறுதல் உணர்வையே அளித்தது. தனிமையின் அரட்டலுக்கு அவனது கோபம் இதமாகவே இருந்தது அப்போதைக்கு. 

 

பள்ளத்திலிருந்து விலகி, மரங்கள் அடர்ந்த ஓரத்தில் ஒரு பெரிய கல்லின் மேல் அவள் அமர்ந்தாள். காடு முழுவதும் இரவின் நிழல் பரவி, ஓய்வெடுப்பதற்காக கூட்டை நாடும் பறவைகளின் குரல் மட்டும் கிழித்துக்கொண்டிருந்தது.

 

தவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது “உன் கண்ணீர் யாருக்கும் அர்த்தமில்லை… என் வழியிலேயே வராதே”

 

அந்தக் குரல், குளிர் காற்றில் கூட அவளை நடுங்கச் செய்தது.

ஆனால் அந்தக் கோபக் குரலின் கட்டளை தொணி? அது அவளின் உள்ளத்தை கிழித்தது. 

 

“என்னை காப்பாற்ற வந்தவன்… ஏன் இப்படிக் கடுமையா பேசுறான்? போனவன் அப்படியே போகவேண்டியதுதானே” என்று துடித்துப் போனாள். 

 

காற்று அவள் நெற்றியில் உள்ள வியர்வையைத் தொட்டு ஆற்ற முனைந்தது. 

 

அவள் கண்ணீர் துடைத்துக் கொண்டு, இருட்டில் தொலைவில் அவன் போன திசையை நோக்கி பார்த்தாள். அவன் எப்போ திரும்பி வருவானோ என்ற எதிர்பார்ப்பை மறைக்க முயன்றாலும், மனம் மட்டும் அந்த நம்பிக்கையை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!