ஆழி 7
அவள், ஒரு மரத்தின் வேர் பிளவுகளில் அமர்ந்து, கால்களை மடித்தபடி இருந்தாள். தவன் போன பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் போகும் பொழுது சட்டையை நீரில் அலசி உலர்த்த போட்டுவிட்டு போயிருக்க, காற்றில் அசைந்தாடி வெகு சீக்கிரமே காய ஆரம்பித்தது.
வெகு அருகில் பின்புறமிருந்து இலைகளின் சரசர சப்தம் கேட்க, அங்கிருந்து எழுந்து நிற்க முயற்சித்தாள்.
“நான்தான் அப்படியே இரு” அவனின் குரல் ஒலிக்க, நிம்மதியாக உணர்ந்தாள்.
இருக்கைகளிலும் பழங்களும் செடியின் வேர்களும் இருந்தது.
அவள் அருகில் அதையெல்லாம் வைத்தவன் ஒரு மரக்கிளையை எடுத்து, அவளது பாதத்தில் படிந்திருந்த உடுப்பை மேலேற்றினான். அவளது காயம் இப்பொழுது கொஞ்சமாக காய ஆரம்பித்திருக்க, “காயம் சீக்கிரம் ஆறிடும். நாளைக்கு காலையில் நீ நடக்கலாம்” என்று கூறிவிட்டு
“இந்த டாப்ஸ் முழுவதும் ரத்தமா இருக்கு. எப்படியும் ரத்த வாடைக்கு மிருகங்கள் வரும். அதனால இதை கழட்டி வீசிட்டு என்னோட சர்ட் போட்டுக்கோ. அதுவே உனக்கு முழங்கால் வரைக்கும் வரும்” அவளிடம் இயந்திரம் போலக் கூறிவிட்டு அவளை கைகளில் தூக்கிக்கொண்டு நீருக்குள் இறங்கினான்.
“சீக்கிரம் குளிச்சுட்டு வா. நான் இங்கயே இருக்கேன். மறக்காமல் உன்னோட உடைகளை இங்கேயே விட்டுரு. மண் தரையில் விட்டா ரத்த வாடையை வச்சு நம்மை நெருங்கிடும் மிருகங்கள்” என்றவன் அவளுக்கு அருகிலேயே இருந்தான்.
அவளோ குளிக்காமல் அவனையே யோசனையாக பார்த்தாள். அவன் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்து அஞ்சினாள்.
அவள் அப்படியே நிற்கப் பார்த்தவன் “சீக்கிரம் வந்து தொலை”, காய்ந்தான் அவளிடம்.
அவன் கூறியதற்காக பறக்க பறக்க குளித்தவள் அவன் கூறியது போலவே குளித்து அவன் சட்டையை அணிந்தாள், பேண்ட் மற்றும் உள்ளாடையை மட்டும் அலசி உலர்த்தப் போட்டுவிட்டு முன்பிருந்த இடத்திலேயே அமர்ந்தாள்.
“இங்கருந்து நாம கிளம்பியே ஆகணும். காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்க இங்கதான் வரும்” என்று அவள் காயத்தில் மூலிகை சாற்றை பிழிந்து விட்டான்.
“காடு பத்தி எல்லாமே தெரியுதே உனக்கு?” புருவம் உயர்த்தி வினாவினாள்.
“தெரிஞ்சு என்ன பண்ணப்போற?” பேச்சு வெடுக்கென்று கொட்டினாலும் அவனது செயல் இதமாகத்தான் இருந்தது.
அவனை இரக்கமற்றவன் என்று அவசரப்பட்டு தீர்ப்பளித்த தன்னை உள்ளுக்குள் கண்டித்துக்கொண்டாள்.
“ஐம் சாரி”
“எதுக்கு, செத்து தொல்லையட்டும்னு விடாம உன்னை சாகாமல் தடுத்ததுக்கா?” நக்கலான குரலில் வினவியவன் “ம் உன்னோட உடம்பில் இருக்க காயத்துக்கு இதை தடவிக்க” அவள் கையில் மீதமிருந்த மருந்தை கொடுத்தான்.
‘இந்த திமிர்தான் இவனை தப்பானவனாக காட்டுகிறது நமக்கு’ இம்முறை அவனை அந்நியமாகப் பார்த்துவிட்டு மருந்தை பூசினாள். இரண்டு மணிநேரம் அப்படியே சென்றிருந்தது.
“நான் கொடுத்த மருந்தால் இப்போ வலி மரத்துப் போயிருக்கும். அதனால தாராளமா நடக்கலாம். மருத்தோட வீரியம் குறைய ஆரம்பிக்கும் போது உன்னை தூக்கிக்கறேன். இப்ப நடந்து வா” என்றவன் அவளை எதிர்பார்க்காமல் நடக்க.
டாப்ஸ் தண்ணீரோடு சென்றயிருக்க, உலர்ந்திருந்த இதர உடைகளை அணிந்து கொண்டாள்.
சாப்பிட்டது, ஓய்வெடுத்தது, குளித்து முடித்து சுத்தமான ஆடைகளை அணிந்தது எல்லாம் அவளை தெம்பாக்கியிருந்தது. தெளிவாக இருந்தாள்.
“நடந்துருவியா. இல்ல பள்ளம் தேடிப் போவியா”
“அப்போ இருந்த மனநிலை அதுதான். ஆனா அதுக்காக என்னை பயந்து போகும் பொண்ணுன்னு நினைச்சுடாதே. நான் எப்போவேனும் சும்மா இருக்கிறேனா? காட்டுல பாதை தெரியாம பயணிச்ச அனுபவம் எனக்கு குவியல் குவியலா இருக்கு. சொல்லப்போனா நான்தான் உன்னை வழி காட்டணும் போலிருக்கே,” என்று சிரிப்போடு, சவால் கலந்த ஜம்பத்தோடு அவனை நோக்கினாள்.
“ஹா ஹா… சரி அப்படியே இருக்கட்டும். ஆனால் நீ வழிகாட்டினால் காடுவிட்டு கடலுக்கே இல்ல போய் சேருவோம்?” அவளது சவாலை முறியடித்தான் நக்கல் குரலில்.
“அப்போ பார்க்கலாமா?” அவனை நேருக்கு நேர் பார்த்து நின்றாள்.
“ம்ம்ம்? ஆனாலும் பரவாயில்லை, உன்னோட பின் நடந்தால் வழிதவறினாலும் பள்ளத்திலாவது விழலாம்” என்று கண்களில் ஒளி மிளிர அவளைப் பார்த்தான்.
“சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்காத. நம்ம ரெண்டு பேருக்குமே உயிர் முக்கியம். அதனால பாதையை நானே காட்டுறேன் வா” அவனை அழைத்தாள்.
ஒருநிமிடம் அவளை ஊன்றி பார்த்தவன் “சரி. பாதை நீ சொல்,” என்றான்.
இருவரும் நடக்க, அவனது முகம் எப்போதும் போலக் கடினமாக இருந்தது. கண்கள் நேராக முன் பாதையை மட்டுமே நோக்கியிருந்தன.
அவன் அவளைப் பார்க்கவேயில்லை. அருகே சென்றபோதும், ஒரு வார்த்தையும் பேசவில்லை.
நடக்கும் பொழுது கால்கள் தடுக்கி இருமுறை அவன் மீது விழுந்தாள்.
அவளுக்கே சங்கடமாக இருக்கவும் “அது வந்து சாரி” மன்னிப்புக் கேட்க நினைத்தாள்.
அவள் அவனை பார்த்து சொல்ல அவனோ அவளை பாராமல், அந்தக் கணத்தில் அவன் தோளின் அசைவின் மூலமே பதில் கூறினான்.
அவன் தன் உலகில் அவளை சேர்க்காமல், தன் பாதையில் தொடர்ந்து சென்றான்.
அவன் தன்னை காப்பாற்றிய பொழுதும் காட்டுக்குள் வந்த பிறகும் அதற்குப் பின்னான நிகழ்வுகளையும் வைத்து அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை அவளால். அவனது கடுமையான தோற்றமும் பேச்சிற்கும், தனக்கு உதவி செய்வதற்கும் சம்பந்தமே இல்லாதது போலவே தோன்றியது. இவனா அவன் என்று நினைக்க தோன்றியது.
அவன் தூரமாக நடந்து போனாலும், அவன் உருவம் அவளது பார்வையிலிருந்து விலகவில்லை.