இந்தரும் சகுந்தலாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட விழி நேராக மார்க்கண்டேயரிடம் அதை பற்றி நியாயம் கேட்க இரண்டு அடி எடுத்து வைக்க வேகமாக அவள் அருகே ஓடி வந்த இந்தர் அவளைப் பிடித்து தடுத்து
“சொன்னா கேளு விழி.. அப்பாகிட்ட இப்ப நீ எதுவும் பேசாத ப்ளீஸ்.. ரொம்ப கோவத்துல இருக்கே.. அப்பா கிட்ட நான் பேசுறேன்… இப்ப போய் நீ எதுவும் சண்டை போடாத.. வேணாண்டி.. பெரிய பிரச்சனை ஆயிடும்.. சொன்னா கேளு..” என்றான்..
“இனிமேதான் பெரிய பிரச்சினையாகணுமா? இப்ப நடந்தது உனக்கு பெரிய பிரச்சினையா தெரியலையா? இன்னிக்கு ரெண்டுல ஒன்னு அவரை கேட்டுட்டு தான் விடுவேன்.. என்னதான் நெனச்சிட்டு இருக்காரு அவரு.. நான் எங்க வீட்ல இருந்து அழகா அந்த போட்டியை அட்டென்ட் பண்ணி இருப்பேன் இல்ல..? அங்கிருந்து ஒரு வாரம் முன்னாடி என்னை இங்க கூட்டிட்டு வந்து பால்ல எதையோ கலந்து கொடுத்து எவ்வளவு கீழ் தரமான வேலை எல்லாம் பண்ணி இருக்காரு.. சரியான தர்ட் ரேட்டட் கிரிமினல் உன் அப்பா.”
அவள் சொன்ன நொடி அவனால் அவள் பேசியதை பொறுக்க முடியவில்லை.. மறுபடியும் ஓங்கி அறைந்திருந்தான் அவளை..
“மலர்.. அவர் என்ன வேணா பண்ணி இருக்கட்டும்.. அதுக்காக அவரை பத்தி நீ இவ்வளவு கேவலமா பேசுவியா..? அவர் உன்னை விட வயசுல பெரியவரு.. என்ன இருந்தாலும் அவரு வயசுக்கு நீ மரியாதை கொடுத்து தான் ஆகணும்.. அவர் இந்த வீட்டோட குடும்ப தலைவர்.. அதை ஞாபகம் வச்சுக்கோ.. இதுவரைக்கும் எங்க அம்மா கூட அவரை எதிர்த்து பேசினதில்லை.. அப்படி இருக்கும்போது நீ அவரை என்னவெல்லாம் பேசற.. அதெல்லாம் எங்க வீட்ல இருக்குற யாராலயும் தாங்க முடியாது..”
“அப்போ நீயும் கேக்க மாட்ட.. என்னையும் கேட்க விட மாட்டே.. உங்க அப்பாவை கேள்வி கேட்கிறேன்னு சொன்னா என்னை அடிப்பே… அப்பறம் நான் எதுக்குடா இந்த வீட்ல இருக்கணும்? நான் யாருடா இந்த வீட்ல..?”
“மலரு.. நான் உன்னை அடிச்சது தப்புதான்.. அதுக்காக கோவத்துல என்ன என்னவோ பேசாதடி.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது.. ஆனா அவர் என் அப்பா.. என்னை சின்ன வயசுல இருந்து தான் உயிர்ல சுமந்து வளர்த்தவரு.. அவரு அவமானப்படுறதை என்னால ஒத்துக்க முடியாது.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ.. முதல்ல மாடிக்கு போ.. நம்ம ரூமுக்கு போ.. நீ வா என்னோட..” அவள் கையைப் பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் அவன்..
அவளோ அவன் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்க போராடியவள் அது முடியாமல் அவனுடனேயே இழுபட்டு சென்றாள்..
அறைக்குள் சென்றதும் கதவை தாழிட்டவன் “இங்க பாருடி அம்மு.. என் தங்கம் இல்ல..? கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு.. அவர் உனக்கு பண்ணுனது அநியாயம் தான்.. நான் தான் அவர்கிட்ட இதை பத்தி கேட்கிறேன்னு சொல்றேன் இல்ல..? நடந்தது நடந்து போச்சு.. இது ஒன்னும் உலகத்தோட கடைசி நாள் கிடையாது.. அடுத்த வருஷம் திரும்ப இதே மாதிரி போட்டி வரும்.. நிச்சயமா நான் அதுல உன்னை கலந்துக்க வைக்கிறேன்.. இப்போதைக்கு இதை மறந்துரு ப்ளீஸ்..”
“ஓ.. அடுத்த வருஷம்.. வேணாம் இந்தர்.. எனக்கு வாயில வேற மாதிரி ஏதாவது வந்திட போகுது.. ஏன்.. அடுத்த வருஷம் உங்க அப்பாக்கு இந்த மாதிரி மருந்து கிடைக்காதா… இல்ல நீ தான் எனக்கு பாலை கொண்டு வந்து கொடுக்க மாட்டியா? இனிமே எப்படி உன்னை நம்புவேன்? ஆசையா பேசுற மாதிரி பேசி எதையாவது எனக்கு கலந்து கொடுத்து என் கனவெல்லாம் சுக்கு நூறா உடைக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? இனிமே எப்படி நம்புவேன்? போடா.. என்னோட பேசாத.. இப்ப என்ன உங்க அப்பாவை நான் ஒரு கேள்வியும் கேட்க கூடாது.. அவ்வளவு தானே? கேட்கல டா.. கேட்கல.. இப்படியே இந்த ரூம்லயே ஒரு நடைப்பிணமா உக்காந்து இருக்கேன்.. ஆனா உங்க அப்பா செஞ்சதுக்கு ஒரு கேள்வி கூட கேட்காம என்னையும் கேள்வி கேட்க விடாம இப்படி உன் காதல் பேரை சொல்லி என்னை கட்டிப்போட்டு வச்சிருக்க பாரு.. உன்னை என்னால மன்னிக்கவே முடியாது.. இனிமே என்னோட பேசவே பேசாத.. தயவு செஞ்சு என்னை கொஞ்சம் தனியா விடு”
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அப்படியே அந்த கட்டிலில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடி தன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டு இருந்தாள்..
அவள் கோபத்தை எப்படி தணிப்பது என்று தெரியாமல் யோசித்தவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளரங்க வில்வித்தை களத்துக்கு சென்றான்.. அவள் கையில் வில்லையும் அம்பையும் கொடுத்து
“அதோ.. அங்கே எதிரே இருக்கே டார்கெட் போர்ட்.. அது நானுன்னு நினைச்சுக்கோ.. உனக்கு எவ்ளோ அம்பு விடணுமோ விடு.. அந்த டார்கெட் போர்டு ஒடஞ்சு சிதறி போனாலும் பரவாயில்லை..”
அவன் சொன்னதைக் கேட்டவள் “அதை நீன்னு நினைக்க மாட்டேன்.. அது அந்த வில்லன் மார்க் மாமான்னு தான் நினைப்பேன்.. அந்த டார்கெட் போர்டு இன்னிக்கு உடைஞ்சு பீஸ் பீஸா போகல என் பேரு மலர் இல்லை..” என்றவள் சரமாரியாக அந்த இலக்கு பலகையை நோக்கி விறு விறு என அம்புகளை செலுத்தினாள்..
அவனோ கவலை நிறைந்த முகத்தோடு அவளையே பார்த்திருந்தான்.. ஏதோ ஒரு விதத்தில் அவளுடைய ஏமாற்றத்துக்கு அவனும் காரணமாகி விட்டான்… அவன் செய்தது தவறு என்று அவனுக்கு புரிந்தது.. ஆனால் எந்த நிலையிலும் தன் தந்தையை விட்டுக் கொடுக்கும் நிலையில் அவன் இல்லை.. அவரை யாரும் அவமரியாதையாய் பேசுவதை அவன் அனுமதிக்கவே மாட்டான்..
சொன்னபடியே எல்லா அம்புகளும் சரியாக அந்த இலக்கு பலகையை சென்று தாக்கி இருந்தது.. இலக்கு பலகை லேசாக விரிசலே விட்டிருந்தது.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அம்புகளை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்.. அவள் கோபமோ தணியவே இல்லை அதன் பிறகும்..
அவள் கையை பிடித்து தடுத்தவன் “ஏய் மலர்.. கொஞ்சம் பிரேக் எடுத்துக்கடி.. உனக்கு உடம்பு சரியில்லாம போயிட போகுது..” என்றவன் அவளிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கி வைத்துவிட்டு அவளை அறைக்கு அழைத்து போய் கட்டிலில் அமர வைத்தான்..
“இங்க பாரு.. எனக்கு தெரியும்.. உனக்கு ரொம்ப பெரிய தப்பு நடந்திருக்கு.. ஆனா அடுத்த முறை இந்த தப்பு நடக்காம நான் பாத்துக்கிறேன்.. அடுத்த முறை நீ ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப்ல கலந்துக்கலன்னா நான் ஆர்ச்சரியையே விட்டுடுறேன்.. இது நான் உனக்கு கொடுக்கற பிராமிஸ்..”
“ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி எங்க அம்மா வீட்டுக்கு நான் போனப்போ இதே மாதிரி தான் நீ ஒரு பிராமிஸ் பண்ணே எனக்கு.. நினைவிருக்கா?” என்று உதட்டை பிதுக்கியவள் “இனிமே நான் எப்படி உன்னை நம்புவேன்.. நீ பண்ற பிராமிஸ் நீ கொடுக்குற வார்த்தை இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே வராது.. உன் காதலால என்னை எதுவும் செய்ய முடியாதவளா மாத்தி வச்சிருக்க.. உன்னோட லவ் என்னோட வீக்னஸ் ஆயிட்டு இருக்கு இந்தர்.. ப்ளீஸ் என்னை தனியா இருக்க விடு.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத.. ஒரு நாலஞ்சு நாள் நான் தனியா இருந்து யோசிக்கணும்..”
“நீ என்ன வேணா யோசி ஆனா..”
“ப்ளீஸ் இந்தர்.. எதுவும் பேசாத.. நீ கிளம்பு.. இல்ல நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போறேன்..”
“மறுபடி மறுபடி விட்டுட்டு போறேன்னு சொல்லாதடி.. இந்த மூணு மாசம் நீ இல்லாம ரொம்ப தவிச்சு போயிட்டேன் டி.. நீ உங்க அம்மா வீட்ல தான் இருந்தே.. தினமும் வந்து நான் உன்னை பார்த்துக்கிட்டே தான் இருந்தேன்.. ஆனா எனக்கு நீ என் கூடவே இருக்கணும்.. என் கண் பார்வையிலேயே இருக்கணும்.. உன்னை விட்டு என்னால இருக்க முடியாதுடி.. என்கிட்டே இருந்து உன்னை பிரிச்சு எடுத்துட்டு போறதுக்கு உனக்கே உரிமை கிடையாது.. இதை மட்டும் நல்லா இந்த மரமண்டைல போட்டுக்க.. சும்மா சும்மா எப்ப பாரு அம்மா வீட்டுக்கு போறேன்.. அம்மா வீட்டுக்கு போறேன்ன அடிச்சே கொன்னுடுவேன்..”
அப்போதும் அவள் அவனை முறைத்தபடி அமர்ந்திருக்க அங்கு இருந்து எழுந்து அந்த அறையை விட்டு வெளியே போனான் அவன்..
நேராக மார்க்கண்டேயனிடம் சென்றான்.. அவன் போகும்போது அவர் தன் அறைக்குள் தான் இருந்தார்..
கதவை அடைத்து விட்டு தான் அவரை கேள்வி கேட்க தொடங்கியிருந்தான் அவன்..
“என்னப்பா வேலை பண்ணி வச்சிருக்கீங்க? ஏன் பா இப்படி பண்ணீங்க?” என்று மனதில் அடக்கப்பட்ட கோபத்தோடு அடிக்குரலில் கேள்வி கேட்க தொடங்கினான்..
“என்னடா பண்ணேன்.. என்ன பண்ணேன்.. நீ எனக்கு தெரியாம என்னென்னவோ வேலை எல்லாம் பண்ண.. அதுக்கு பதிலா நானும் உனக்கு தெரியாம என்னால முடிஞ்சதை பண்ணேன்..”
அவர் தெனாவட்டாய் பதில் சொல்ல “ஏம்பா மலர் அவளோட கனவை அச்சீவ் பண்றதுல உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? வீட்டு வேலை செய்யறதுலயோ உங்களுக்கும் எனக்கும் மதிப்பு கொடுக்கிறதுலயோ எந்த குறையும் வைக்கலையேபா அவ.. எல்லா விஷயத்திலயும் சரியா தானே இருக்கா.. அவ சும்மா இருக்கற நேரத்துல தானே அவளோட பேஷன் அந்த ஆர்ச்சரி அதை ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறா.. அவ வேர்ல்ட் சாம்பியன் ஆனா நமக்கும் பெருமை தானே பா… நீங்க ஏன் பா இப்படி கூடவே இருந்து அவ கழுத்தை அறுத்துட்டீங்க..?”
அவன் மெதுவாய் தான் பேசினான்.. மிதமான குரலில் தான் பேசினான்.. ஆனால் அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை சாட்டையால் அடித்தது போல் தான் இருந்தது..
இதுவரை அவன் பேசியிராத விதத்தில் பேசிக் கொண்டிருந்தான் அவரிடம்..
“இங்க பாரு.. அவ வேர்ல்ட் சாம்பியனாகறது உனக்கு வேணா பெருமையா இருக்கலாம்.. அது எனக்கு பெருமையான விஷயமே இல்ல.. வீட்டு பொம்பளைங்க குடும்பத்துக்கு அடங்கி தான் இருக்கணும்.. வெளியில ஸ்டேட் சாம்பியன் நேஷனல் சாம்பியன்னு போய்ட்டு இருந்தானா வீட்ல இருக்குற ஆம்பளைங்களை மதிக்க மாட்டா.. நான் உனக்கு எப்பவும் நல்லது தான் பண்ணுவேன்.. இப்பவும் நல்லது தான் பண்ணி இருக்கேன்..”
அவர் சொல்லி முடிக்கும் முன் இடைப்புகுந்தவன் “இல்லப்பா.. நீங்க என் வாழ்க்கையையே கெடுத்து இருக்கீங்க.. இப்போ உங்களுக்கு அது புரியாது.. என் மலர் பழைய மலரா எனக்கு திருப்பி கிடைப்பாளான்னே தெரியல.. ரொம்ப கோவத்துல இருக்காப்பா.. உங்க மேல கொலவெறியில இருக்கா.. நான் தான் அவளை பேசி அடக்கி வச்சிருக்கேன்.. அவ கோவம் ரொம்ப நியாயமானது பா.. என்னால அவளுக்கு பதில் சொல்லவே முடியல… கொஞ்சம் கூட உங்களுக்கு இப்படி பண்ணிட்டோமேன்னு ஃபீலிங்கே இல்லையாப்பா..?”
அவன் கேட்ட கேள்விக்கு இடவலமாக தலையாட்டி திட்டவட்டமாய் மறுத்திருந்தார் மார்க்கண்டேயன்..
“அப்போ.. உங்களுக்கு யாரை பத்தியும் எதை பத்தியும் கவலை இல்லை.. என் வாழ்க்கையை பத்தி கவலை இல்லை.. பிருத்வி வாழ்க்கையை பத்தியும் கவலை இல்லை.. உங்களுக்கு கவலை எல்லாம் உங்க வீட்டுல உங்க ரூல்ஸ் படி எல்லாம் நடக்கணும்.. பொம்பளைங்க உங்க வீட்டுக்குள்ள அடங்கியிருக்கணும்.. அதுதானே..? இத்தனை நாளா அம்மாவை அடக்கி வீட்டிலேயே வச்சிருக்கிற மாதிரி இனி இந்த வீட்டில் பொறக்குற மருமகளா வர அத்தனை பெண்களையும் அடக்கி வைக்கணும்னு நினைக்கிறீங்க.. ரொம்ப தப்பு பா.. இனி உங்களுக்கு நான் உடந்தையா இருக்க மாட்டேன்.. இனிமே உங்களோட நான் பேசவும் மாட்டேன்.. இது தான் நான் உங்களோட பேசுற கடைசி பேச்சு.. என்னைக்கு என் மலர் உங்களை மன்னிக்கிறாளோ அன்னைக்கு தான் நான் உங்களோட மறுபடியும் பேச தொடங்குவேன்.. ஐ அம் சாரி பா.. இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல..” சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து அறையை விட்டு வெளியே வந்தான் இந்தர்..
விழியோ யோசித்து யோசித்து மன அழுத்தத்தை அதிகப்படுத்தி கொண்டிருந்தாள்..
அதே நேரம் அவர்கள் திருமணத்திற்கு வந்திருந்த ஊர்மிளா அதன் பிறகு அப்போது தான் ஹாஸ்டலில் இருந்து விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தாள்..
நடந்த விஷயத்தை கேள்வி பட்டவள் விழிக்காக மிகவும் வருத்தப்பட்டாள்..
திருமணத்தின் போது முகமலர்ச்சியோடு இருந்தவளை அந்த நிலையில் பார்க்க ஒரு மாதிரி இருக்க அடுத்த நாள் அவளை கிளப்பி அகடமிக்கு அழைத்து சென்றாள் அவள்.. இந்தரோ மார்க்கண்டேயனோ அவளை எதுவும் சொல்லவில்லை…
ஊர்மிளாவுக்கும் லட்சுமன் வித்யா இருவரும் நல்ல நண்பர்கள்.. லக்ஷ்மனுக்கும் அவளுக்கும் இடையில் ஒருவித நேசம் கலந்த உறவு ஓடிக்கொண்டிருந்தது என்று கூட சொல்லலாம்.. அவர்களுக்குள் இருந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக நேசமாக மாறி கொண்டிருந்த காலம் அது..
அகடமிக்கு சென்றவளிடம் லக்ஷ்மன் நலம் விசாரிக்க அவளும் விழியின் முன்னால் அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..
லக்ஷ்மன் விழியிடம் “என்ன மேடம்? இப்படி செலக்சனுக்கு வராம போயிட்டீங்க? அந்த வித்யாவும் வரல.. இப்ப வித்யா ஃபோனும் எடுக்க மாட்டேங்கறா.. இந்தர் சார் கால் பண்ணி பண்ணி பார்த்துட்டார்.. கட் பண்ணிக்கிட்டே இருக்கா.. இந்தர் சார் உங்ககிட்ட இது பத்தி எதுவும் கேட்க வேண்டாம்ன்னு சொன்னார்.. எனக்கு தான் மனசு கேட்கல.. அவ்வளவு ரிகரஸா ப்ராக்டிஸ் பண்ணிங்களே மேடம்.. நீங்க இதை மிஸ் பண்ணது எனக்கு கஷ்டமா இருக்கு…”
அவன் சொன்னதை கேட்டவள் “ஆமா.. ஏன் வித்யா வரல..? என்ன ஆச்சு அவளுக்கு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நீங்க கால் பண்ணி பார்த்தீங்களா?” என்று கேட்டாள் லக்ஷ்மணை..
“இல்ல மேடம்.. என் காலையும் எடுக்கல..”
அவன் சொன்னதும் ஊர்மிளா தன் கைபேசியில் இருந்து அவளுக்கு அழைத்துப் பார்த்தாள்.. ஆனால் அவள் அழைப்பையும் ஏற்கவில்லை வித்யா..
“வித்யா நம்பர் உங்க கிட்ட இருந்தா எனக்கு குடுங்க..” என்று கேட்டாள் விழி..
அவனும் வித்யாவின் நம்பரை கொடுக்க அவள் எண்ணுக்கு தன் கைபேசியில் இருந்து அழைத்தாள் மலர்..
அழைப்பை ஏற்ற வித்யா “ஹலோ யாரு?” என்று கேட்க அவள் குரலிலோ உயிரே இல்லை..
“வித்யா.. நான் மலர் பேசுறேன்..” என்றதும் அவள் அழைப்பை துண்டிக்க போக “ப்ளீஸ்.. ஃபோனை கட் பண்ணாத.. நானும் காம்பெடிஷன் அட்டென்ட் பண்ணல.. நீயும் அட்டென்ட் பண்ணல.. நான் அட்டென்ட் பண்ணாததுக்கு ரீசன் இருந்தது… நீ ஏன் அட்டென்ட் பண்ணல..?
நீ சொன்னா தானே தெரியும்.. ஏன் உங்க வீட்ல பெரியவங்க காம்ப்படிசனுக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களா?”
ஒருவேளை தனக்கு இருக்கும் நிலைமை தான் அவளுக்குமோ என்ற சந்தேகத்தில் விழி கேட்க வித்யாவோ கரகரத்த குரலில் அடுத்த நொடி அழுது விடுபவள் போல
“இ…இல்லக்கா எங்க..எங்க வீட்ல என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க.. ஆனா என்னை எதுவும் கேட்காதீங்க அக்கா… நடக்க கூடாததெல்லாம் நடந்திருச்சு.. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.. இனிமே எனக்கும் ஆர்ச்சரிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது…” குரல் உடைந்து அழுதே விட்டாள் அவள்..
அவள் சொன்னதைக் கேட்டவள் அதிர்ந்து போனாள்..
“என்ன வித்யா சொல்ற நீ? எவ்ளோ நல்ல ஆர்ச்சர் நீ.. இப்படி பேசலாமா? இங்கே இருக்கிற பிகினர்ஸ்கெல்லாம் நீதான இன்ஸ்பிரேஷனா இருக்கணும்.. நீ இப்படி பேசினா எப்படி?”
“இன்ஸ்பிரேஷனா.. என் வாழ்க்கையே கையை விட்டு போயிடுச்சு அக்கா.. எங்க வீட்ல எல்லாரும் பயந்து போய் இருக்காங்க.. நான் வெளியிலேயே என் முகத்தை எப்படி காட்டுறதுன்னு தெரியாம உட்கார்ந்து இருக்கேன்.. இனிமே ஆர்ச்சரியை பத்தி எனக்கு எந்த ஆசையும் கிடையாது.. அஸ்பிரேஷனும் கிடையாது.. நான் இப்படியே இருந்துடறேன்.. இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க…” அவள் வார்த்தைகளில் ஒரு வித விரக்தி..
“நீ நிஜமாவே இந்த அகாடமி மேலயும் இந்தர் மேலயும் கொஞ்சமாவது மதிப்பு வச்சிருந்தேன்னா என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லு.. அப்பதானே அதுக்கு ஏதாவது சொல்யூஷன் இருக்கான்னு பார்க்க முடியும்..?”
அவளோ அந்தப் பக்கம் கதறி அழுது கொண்டிருந்தாள்..
வில்விழிக்கோ ஒன்றும் புரியவில்லை..
“வித்யா என்னம்மா ஆச்சு?” என்று பதறியபடி கேட்டாள்.. விஷயம் எதோ மிகவும் பெரியதாய் இருக்கும் என தோன்றியது அவளுக்கு..
“அக்கா என் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க அக்கா.. நேத்து அகாடமியில இருந்து நைட் 8 மணிக்கு ஆட்டோல வீட்டுக்கு திரும்பி வந்தேன்.. அந்த ஆட்டோக்காரர் என் மூஞ்சில ஏதோ ஸ்ப்ரே அடிச்சார்… அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல.. காலைல எட்டு மணிக்கு ஒரு ஹோட்டல் ரூம்ல நான் இருந்த நிலைமை ஐயோ வேணாம் கா.. என்னை எதுவும் கேட்காதீங்க..” அழைப்பை துண்டித்து இருந்தாள் அவள்..
அவளால் பேசக்கூட முடியவில்லை.. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.. தொண்டை அடைக்க அழுதவளின் குரல் மீண்டும் மீண்டும் வில்விழியின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது போல இருந்தது.. அந்த குரல் அவள் மனதை என்னவோ செய்தது..
“ஐயோ இந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கு.. யார் அந்த பொறுக்கிங்க.. அவ வாழ்க்கையை இப்படி கெடுத்தது..” என்று யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்த ஊர்மிளாவும் “என்ன அண்ணி? என்ன ஆச்சு? வித்யா கிட்ட பேசினீங்களே.. என்ன சொன்னா?” என்று கேட்க
“ஊர்மி நான் முதல்ல இந்தர் கிட்ட பேசணும்.. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்..” என்று சொல்லிவிட்டு இந்தரை தேடிச் சென்றாள்..
ஊர்மிளாவும் லக்ஷ்மனும் எதுவும் புரியாமல் அங்கேயே நின்று கொண்டிருக்க இந்தரிடம் வில்விழி விஷயத்தை சொன்னாள்.. அவனும் அதிர்ந்து போனான்..
தலையில் அடித்துக் கொண்டு “நானே அவளை வீட்ல கொண்டு விட்டுட்டு வந்து இருக்கணும்.. அவ்வளவு நைட்ல அவளை ஆட்டோவில தனியா அனுப்பிச்சது என் தப்பு தான்.. நான் தான் ஆட்டோ ஏத்தி விட்டேன் மலரு.. அந்த டிரைவர் நம்பர் கூட..”
ஒரு நிமிஷம் யோசித்தவன் அவன் கைபேசியை எடுத்து அவன் சேமித்து வைத்திருந்த அந்த ஆட்டோ டிரைவரின் எண்ணுக்கு வில்விழியின் கைபேசியிலிருந்து அழைத்தான்..
அவனும் எடுத்து “ஹலோ யாரு..” என்க “அது என் பையனை தினமும் ஸ்கூல்ல கொண்டு விட்டு கூட்டிட்டு வரணும்.. நீங்க கொஞ்சம் நான் சொல்ற அட்ரஸ்க்கு வர முடியுமா..?”
அவன் கேட்டவுடன் பணம் வருகிறது என்ற நினைப்பில் “இப்பவே வரேன் சார்.. நீங்க அட்ரஸை என் ஃபோனுக்கு அனுப்பிடுங்க..” என்று இணைப்பை துண்டித்தான் அவன்..
“மலரு.. அவனுக்கு நான் சொல்ற அட்ரஸை உன் ஃபோன்ல இருந்து அனுப்பு..”
அவன் சொல்ல அவளும் அதே போல செய்தாள்.. அவள் அனுப்பிய முகவரி வித்யாவினுடையது..
ஊர்மிளாவிடமும் லக்ஷ்மணிடமும் நடந்த விஷயத்தை சொல்ல அவர்களும் பதறி போனார்கள் விஷயத்தை கேட்டு.. நால்வரும் கிளம்பி வித்யாவின் வீட்டிற்கு செல்ல சரியாக அந்த ஆட்டோக்காரன் அங்கே வந்திருந்தான்..
அவனைக் கண்ட அடுத்த நொடி வண்டிக்குள் நுழைந்து அவன் சட்டையை பிடித்திருந்தான் இந்தர்.. ஓங்கி அவன் முகத்தில் குத்திவிட அவன் உதடு கிழிந்து ரத்தம் வந்தது..
“சார் ஏன் சார்.. நீங்க எதுக்கு சார் என்னை அடிக்கிறீங்க?” என்று கேட்டவன் நிமிர்ந்து இந்தரின் முகத்தை அப்போதுதான் பார்த்தான்..
உடனே அவனுக்கு விஷயம் புரிய அவன் கையில் இருந்து திமிறி தப்பி ஓட முனைந்தான் அவன்..
ஆனால் இந்தர் அவனை இரும்பு பிடியாய் பிடித்திருந்தான்.. அவனை இழுத்துக் கொண்டு போய் வித்யா வீட்டு அழைப்பு மணியை அழுத்த வெளியே கதவை திறந்து கொண்டு வந்தவள் அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து அதிர்ந்து போனாள்..
அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் “அடப்பாவி.. ஏன்டா இப்படி பண்ண..? நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்..? என் வாழ்க்கையை ஏன் டா இப்படி கெடுத்த..” என்று அவனை சரமாரியாக அடிக்கவும் தொடங்கியிருந்தாள்..
அவர்களின் அன்னை தந்தைக்கும் விஷயம் புரிய அவர்களும் சேர்ந்து அவனை அடிக்கத் தொடங்கினார்கள்..
இந்தர் அவளிடம் “வித்யா.. கொஞ்சம் விஷயத்தை கேளு.. முதல்ல இவன் ஏன் இதை பண்ணான்? எதுக்கு பண்ணான்னு தெரிஞ்சுக்கணும்.. அதுக்கப்புறம் இவனை போலீஸ்ல புடிச்சு கொடுத்து இதுக்கு காரணம் யாருன்னு கண்டுபிடிக்கணும்.. அவங்களையும் போலீஸ்ல புடிச்சு கொடுக்கணும்…”
அவன் சொல்லிக் கொண்டே போக அந்த ஆட்டோ டிரைவரோ “எனக்கு பணம் கொடுத்தாங்க சார்.. அதுக்கு ஆசைப்பட்டு தான் இதை பண்ணிட்டேன்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இந்த பொண்ணு மேல மயக்க மருந்து மட்டும் தான் அடிச்சேன்.. மயக்கமா இருந்தவளை நாலு பசங்க வந்து அவங்க கார்ல ஏத்திட்டு போயிட்டாங்க..”
“அவங்க யாருடா?” என்று இந்தர் கேட்க “அவர் பேரு விஷ்வானு சொன்னார் சார்.. இவங்க ஏதோ போட்டியில் கலந்துக்க கூடாதுங்கறதுக்காக இப்படி பண்ணதா அவங்க பேசிக்கிட்டாங்க… மத்தபடி இந்த பொண்ணை என்ன பண்ண போறாங்கன்னு கூட எனக்கு தெரியாது சார்.. எனக்கு அவசரமா பணம் தேவைப்பட்டதனால பண்ணிட்டேன்..”
அவன் சொன்னதை கேட்ட இந்தருக்கோ ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது..