விடிய மறுக்கும் இரவே
ஸ்ரீ வினிதா
விடியல் – 01
நேர்மையான போலீஸ் அதிகாரி எனத் தெரிந்து பிடித்துத்தான் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாள் நந்தினி.
ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஏதோ முக்கிய வேலை என முணுமுணுத்து விட்டு மாலையைக் கழற்றி வீசிவிட்டுச் சென்ற கணவனின் செயலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவளுடைய முகத்தைக் கூட அவன் பார்க்கவே இல்லையே..
ஒரே ஒரு அழைப்பு வந்ததும் அவ்வளவு வேகமாக மணமேடையிலிருந்து வேட்டியுடனேயே எழுந்து சென்றிருந்தான் அவன்.
அங்கிருந்த அனைவரும் அவளைப் பாவமாகப் பார்க்க விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்துவிடாமல் இருக்க வெகுபாடுபட்டுப் போனாள் நந்தினி.
செல்லும்போது எப்போது வருவேன் என்று கூட அவன் சொல்லவே இல்லை.
தாலி கட்டிய பின்பு செய்யவேண்டிய சடங்குகள் எதுவும் அவர்களுக்கு நடக்கவே இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகக் காத்திருந்து பார்த்துவிட்டு புரோகிதரோ மணமேடையை விட்டுச் சென்றுவிட கூட்டமும் கலையத் தொடங்கியது.
மிகுந்த ஏமாற்றத்துடன் மணமேடையை விட்டு எழுந்து வந்தவள் இதோ அந்த மண்டபத்தில் அவளுக்கென ஒதுக்கப்பட்ட தனி அறையில்தான் அமர்ந்திருந்தாள்.
மாப்பிள்ளையின் அன்னை இல்லை இல்லை இப்போது அவளுடைய மாமியார் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
அந்த அறைக்குள் நுழைந்தவர் தயக்கமாக அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார்.
“தப்பா எடுத்துக்காதம்மா.. அவனுக்கு எப்போ பார்த்தாலும் வேலைதான் முக்கியம்… தன்னோட டியூட்டில ரொம்ப பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைப்பான்… கல்யாணத்துக்காக லீவு எடுத்திருந்தான்தான். ஆனா ஏதோ முக்கியமான வேலை வந்துருச்சு போல. நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காதம்மா..” எனக் கவலையுடன் கூறினார் அவர்.
அவரை அவளால் திட்டவா முடியும்..?
அவரும் என்னதான் செய்வார்..?
“இல்ல அத்தை எனக்குப் புரியுது. ஆனா எப்போ வருவாருன்னாவது சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல..? இப்போ வரைக்கும் வீட்டுக்குப் போகாம எல்லாரும் அவருக்காகத் தானே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.” என்றாள் நந்தினி வேதனையுடன்.
“நம்ம போயிடலாம்மா. அவன் இப்போதைக்கு வருவான்னு தோணல. ஏற்கனவே நாலு மணி நேரத்துக்கு மேல நாம வெயிட் பண்ணிட்டோம். நீ வா நாம கிளம்பலாம்..” என்றார் அவர்.
“சரி அத்த..” என்றாள் நந்தினி.
“சரிம்மா நீ கீழ வா. நான் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்..” என்றவாறு சுஜாதா கீழே சென்றுவிட வலித்த தலையை அழுத்திவிட்டாள் நந்தினி.
அவர் சென்ற அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவளுடைய அன்னை அறைக்குள் நுழைந்தார்.
“என்னடி இப்படி ஆயிடுச்சு?” என அவர் கேட்க,
“எனக்கு என்னம்மா தெரியும்? என்ன நடக்குதுன்னே புரியல… எந்தப் போலீசாவது கல்யாண மேடைல இருந்து டியூட்டி பார்க்கப் போய் நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா..? என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்டாரும்மா. என்கிட்ட சொல்லிட்டுப் போயிருந்தா கூட என் மனசு ஆறி இருக்கும்… நான் ஒருத்தி அவர் பக்கத்துல இருக்கேன்னு அவருக்குத் தோணவே இல்லையா..? திரும்பிக் கூட பாக்கல.
ஒரு மணி நேரமா அழுகையைக் கண்ட்ரோல் பண்ணிட்டு அப்படியே அந்த மணமேடைல இருந்தேன் தெரியுமா..? அசிங்கமா இருக்கு… எல்லாரும் என்னையே பாவமா பாத்துட்டு இருந்தாங்க..” எனத் தன் அன்னையிடம் கூறியவளுக்கு பொலபொலவென விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்துவிட்டது.
கழுத்தில் தாலி ஏறி அன்றே கண்ணீர் சிந்தும் தன் மகளைக் கண்டு நிர்மலாவுக்கு வேதனை அதிகரித்தது.
அவளுடன் சேர்ந்து அவரும் கவலைப்பட்டால் அவள் இன்னும் உடைந்து போய்விடுவாள் என்பதை உணர்ந்து கொண்டவர் “ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும்னு நினைக்கிறேன்டி. அதனாலதான் அவ்ளோ வேகமா போயிருப்பாரு… அசிஸ்டன்ட் கமிஷ்னர்னா சும்மாவா..? எவ்வளவு வேலை இருக்கும்..? அவர் தானே எல்லாத்தையும் பார்த்தாகணும்.
அவசரப்பட்டு அவர் வந்ததும் சண்டை ஏதும் போட்டுடாத… கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணு..” என்றார் அவர்.
“ஏன்மா என்னைப் பாத்தா உனக்கு சண்டை போடுறவ மாதிரியா தெரியுது..? கஷ்டமா இருக்குன்னுதானே உன்கிட்ட சொன்னேன்? நீயும் ஏன் இப்படிப் பேசுற..?” என அவள் அதற்கும் கவலை கொள்ள,
அவரோ அவளை நெருங்கி அவளுடைய கண்ணீர்த் துளிகளைத் துடைத்து விட்டார்.
“சரிம்மா.. அழாத.. இப்போ யார் வேணும்னாலும் இந்த ரூமுக்குள்ள வருவாங்க.. இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா ஏதாவது நினைச்சுப்பாங்க. அழாத கண்ணைத் தொடச்சுக்கோ..” என்றார்.
“அப்போ எனக்கு அழக்கூட உரிமை இல்லையா?” என இதழ்கள் துடிக்கக் கேட்டாள் நந்தினி.
“ஏன்டி என்ன சொன்னாலும் இப்படியே சொல்லிட்டு இருக்கப் போறியா..? முதல்ல கண்ணைத் தொடச்சிக்கோ… எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் வந்துருவாரு… அவரே வந்து உன் கிட்ட மன்னிப்பு கேட்பாரு..” என நிர்மலா கூறியதும் நந்தினியின் முகம் மெல்லத் தெளிவடைந்தது.
“சரிமா நான் அழுதேன்னு அப்பாகிட்ட சொல்லாதீங்க. அவர் ரொம்ப வருத்தப்படுவாரு. நான் நார்மலா இருந்தேன்னு சொல்லுங்க..” என்றாள் தன் விழிகளைத் துடைத்தவாறு.
“நீ அழுதேன்னு அவர்கிட்ட சொன்னா அவரும் சேர்ந்து அழ ஆரம்பிச்சிடுவாரு… ஏற்கனவே மணமேடைல இருக்கும்போது உன் கண்ணு கலங்கிச்சுன்னு அரை மணி நேரமா புலம்பிக்கிட்டே இருந்தாரு… இவ்வளவு நேரமும் அவரைச் சமாதானப்படுத்திட்டுத்தான் வந்தேன்… நீயும் அவர் முன்னாடி எதையும் காமிச்சுக்காத… இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லடி. இதைப் பெருசா எடுத்துக்காத. கீழ போகலாம் வா..” என்றார் அவர்.
“சரிமா..” என்றவள் எழுந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் அவர்களுக்காகக் காத்திருந்த காரில் அவள் ஏறிக்கொண்டதும் கார் மண்டபத்தை விட்டு அகலத் தொடங்கியது.
நேரே அவளுடைய கணவனின் வீட்டிற்குத்தான் கார் சென்றது.
அங்கேயும் அவள் வாயிலில் தனியாக நிற்க அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தவர்களோ கணவன் இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஆரத்தி எடுப்பதா எனத் தயங்கி நிற்க சுஜாதாவோ,
“அதெல்லாம் பரவாயில்ல.. மருமகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சுக்கோங்க..” என்றார்.
சில பல முணுமுணுப்புகளுக்குப் பின்பு அவளுக்கு மட்டும் தனியாக ஆரத்தி எடுக்கப்பட்டது.
அதன் பின்னரான சில சடங்குகளையும் அவள் தனியாகவே செய்ய மீண்டும் அழுகை வந்துவிட்டது அவளுக்கு.
“போதும் போதும்.. இந்த சடங்கு எல்லாம் இப்போ அவசியம் தானா..? அதான் உன் பையன் ஒன்னும் சொல்லாம கிளம்பிப் போயிட்டானே! அந்தப் பொண்ணை இப்படியே வச்சு சங்கடப்படுத்தாம அவனோட ரூமுக்கு அனுப்பி வைங்க..” என்றார் மாப்பிள்ளையின் தந்தை நாதன்.
சுஜாதாவோ தன்னுடைய மகளை அருகே அழைத்தவர் “அம்மாடி அமுதா உங்க அண்ணியை உள்ள அழைச்சிட்டுப் போம்மா..?” என அவர் கூற,
அமைதியின் உருவமாக உணர்ச்சிகளைத் தொலைத்த முகத்துடன் நந்தினியின் அருகே வந்த அமுதாவோ “வாங்க அண்ணி..” என அழைத்தாள்.
விட்டால் போதும் என எண்ணியவள் அறைக்குள் அமுதாவுடன் நுழைந்து கொண்டாள்.
“தேங்க்ஸ் அமுதா..” என்றாள் நந்தினி சிறு புன்னகையுடன்.
அமுதாவோ பதிலே கூறவில்லை.
சிறு தலை அசைப்புடன் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட ‘இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கின்றாள்? ஒருவேளை இதுதான் அவளுடைய சுபாவம் போலும்..’ என எண்ணிக் கொண்டவள் சோர்வுடன் அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் அவளுடைய அன்னையும் தந்தையும் அந்த அறைக்குள் நுழைய வேகமாகத் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டவள் “வாங்கம்மா வாங்க அப்பா..” என்றாள் அழுகையை மறைத்த புன்னகையுடன்.
“என்ன கண்ணம்மா உன்னோட முகம் இப்படி வாடிப் போயிருச்சு?” என அவளுடைய தந்தை ராமகிருஷ்ணனோ கவலையுடன் கேட்க,
“அப்படி எல்லாம் இல்லப்பா. நான் ஓகேதான்..” எனச் சமாளித்தாள் அவள்.
சற்று நேரம் அவளுடன் இயல்பாகப் பேசியவர்கள் எதை நினைத்தும் கவலைப்படக்கூடாது.. கணவனை அனுசரித்து நடக்க வேண்டும்.. மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் போன்ற வழமையான அறிவுரைகளை வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்புவதாக அவளிடம் விடை பெற்றுச் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
எத்தனை ஆசைகளுடன் இந்தத் திருமணத்தை எதிர்கொண்டாள்.
ஆனால் இப்போது எல்லாம் கருகிப் போனதைப் போல இருந்தது.
நந்தினியைப் பெண் கேட்டு சுஜாதாவின் குடும்பம்தான் அவர்களுடைய வீடு தேடி வந்தது.
மாப்பிள்ளைக்கு நல்ல பதவி.. ஓரளவு வசதியான குடும்பம்.. குடி சிகரெட் என்று எதுவும் இல்லை என்றதும் அவளுடைய குடும்பத்திற்கு அந்த வரனை மிகவும் பிடித்துக் கொண்டது.
அவளுக்கும் மறுத்துச் சொல்ல எந்தக் காரணமும் இருக்கவில்லை.
பிடித்துத்தான் சம்மதம் சொன்னாள்.
ஆனால் இப்போது ஏன் சம்மதம் சொன்னோம் என்ற அளவிற்கு அவளைச் சிந்திக்கச் செய்துவிட்டான் அவளுடைய கணவன்.
நேரம் இரவு எட்டைத் தொட்டதும் அவளுக்கு பொறுமை பறந்தே போனது.
புடவையை மாற்றிக்கொண்டு சுடிதார் அணிந்து கொண்டவள் தண்ணீரால் முகத்தை அடித்துக் கழுவினாள்.
கண்ணீருக்கு மட்டும் குறைவே இல்லை.
லிட்டர் லிட்டராக வழிந்து கொண்டே இருந்தது உவர்நீர்.
எரிச்சலுடன் குளியலறையில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவள் ‘தினம் தினம் இப்படித்தான் இருக்குமோ?’ என எண்ணிப் பயந்தாள்.
சற்று நேரத்தில் இரவு உணவு உண்பதற்காக அவளை அழைக்க வந்தாள் அமுதா.
“அண்ணி சாப்பிட வர்றீங்களா?”
“இல்ல அமுதா எனக்கு பசிக்கல.. வேணாம்..” என்றாள் நந்தினி.
ஒரு பேச்சுக்குக் கூட மீண்டும் அவள் அழைக்கவே இல்லை.
“சரி” என்ற தலையசைப்போடு அமுதா வெளியேறிவிட நந்தினிக்கு கோபம் இன்னும் அதிகரித்துத்தான் போனது.
சற்று நேரத்தில் சுஜாதாவோ ஒரு தட்டில் உணவோடு வந்தவர் “என்னம்மா சாப்பாடு வேணாம்னு சொன்னியாமே..? இத கொஞ்சமாவது சாப்பிடு..” என்றார் சங்கடமாக.
“இல்ல அத்தை ஜூஸ் குடிச்சேன். எனக்கு பசியே இல்ல. ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கினா கொஞ்சம் நல்லா இருக்கும்..” என்றாள் அவள்.
அதற்கு மேல் அவளை வற்புறுத்த முடியவில்லை.
“சரிம்மா அப்போ நீ தூங்கு. பசிச்சா கீழே வா. சாப்பாடு டைனிங் டேபிள்ல இருக்கும். பசிச்சா எடுத்து சாப்பிட்டுக்கோ..” என்றார்.
“சரி அத்தை..” என்றாள் நந்தினி.
“சரிம்மா நீ தூங்கு..” என்றவர் மீண்டும் சென்றுவிட நந்தினிக்கு வெறுத்துப் போனது.
என்னதான் சுற்றி இருப்பவர்கள் விழுந்து விழுந்து கவனித்தாலும் தாலி கட்டிய கணவனின் அருகாமையைத்தானே ஒரு பெண் விரும்புவாள்?
இங்கு தாலி கட்டியதிலிருந்து கணவனைக் கண்ணால் பார்க்கவே முடியவில்லையே.
‘என்னுடைய நிலைமை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது..’ என எண்ணியவள் முதலிரவைப் பற்றி அவள் நினைத்ததை எல்லாம் எண்ணிப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள்.
இதுவரை அவள் காதலித்தது இல்லை.
எந்த ஆணுடனும் நெருங்கிப் பழகியதும் இல்லை.
தனக்கான கணவனிடம் அவளுக்கென சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன.
காதலாய் அணைக்க வேண்டும்..
ஆசை முத்தங்களை அள்ளித் தர வேண்டும்..
தன்னுடைய பெண்மையை மென்மையாக அவன் திறக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டவளுக்கு அத்தனையும் ஏமாற்றத்தில்தான் முடிந்தது.
நேரமோ ஒன்பதைத் தொட்டிருக்க மீண்டும் விழிகளிலிருந்து வழிந்தது கண்ணீர்.
சலிப்போடு கண்ணீரைத் துடைத்துவிட்டு மலர்கள் தூவிய படுக்கையை வெறித்துப் பார்த்தவள் கோபமாக அந்த மலர்களை எல்லாம் தன் கைகளால் தரையில் தட்டிவிட்டு அந்தப் படுக்கையில் ஏறிப் படுத்துக்கொண்டாள்.
“ஃபர்ஸ்ட் நைட்டாவது மண்ணாங்கட்டியாவது..” என முணுமுணுத்துக் கொண்டவளுக்கு வேதனை நெஞ்சை அழுத்தியது.
🥀🥀