நிறுவனத்தின் வாயிலுக்கு வந்தவள் “பெரிய இடமா இருக்கும் போல இருக்கு.. பில்டிங்கை பார்த்தாலே பயமா இருக்கு.. சரி.. உள்ள போய் பார்ப்போம்.. வேலை கிடைச்சா நல்லா கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன்..” அந்த கட்டடத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து பிரமித்தபடி அவள் உள்ளே செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள்..
அங்கே அமர்ந்திருந்த காவலாளி அவளைப் பார்த்து “மேடம்.. ஒரு நிமிஷம்.. நீங்க எங்கம்மா உள்ள போறீங்க? அதுவும் இந்த கம்பெனிக்கு உள்ள?” என்று கேட்டார்…
“இந்த கம்பெனில வாக்கின் இன்டெர்வ்யூ வச்சிருக்காங்க.. அதுக்குத்தான் போறேன்” தான் குறித்து வைத்துக் கொண்டிருந்த அந்த முகவரியை அவரிடம் காண்பித்தாள் அல்லி..
“அட்ரஸ் எல்லாம் கரெக்டு தான்… ஆனா இந்த கம்பெனியில பொண்ணுங்களை எடுக்க மாட்டாங்களே..” அவர் புருவம் சுருக்கி யோசனையாய் சொன்னார்..
“பொண்ணுங்களை எடுக்க மாட்டாங்களா? அப்புறம் ஏன் பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்குறாங்க? எல்லாரும் தானே பார்ப்பாங்க அந்த அட்வர்டைஸ்மென்ட்டை? வேலைக்கு ஆம்பளைங்க மட்டும் தான் வரணும்னு ஏதாவது சட்டம் இருக்கா நம்ம நாட்டுல?”
வம்படியாய் பேசியவளிடம் “சரிமா.. சொன்னா கேக்க மாட்டேங்குற.. உள்ள அருண்னு ஒருத்தர் இருப்பாரு.. அவர்கிட்ட போய் கேளுங்க”
அவளை அந்த காவலாளி அனுப்பி வைக்கவும் உள்ளே வந்தவளை அங்கு இருந்த அனைவரும் வினோதமாக பார்த்து வைத்தனர்…
அவளுக்கும் அங்கு ஆண்கள் மட்டுமே அமர்ந்து இருப்பதை பார்த்து புதிராக இருந்தது..
அப்போது அவள் எதிரே வந்த அருண் “ஹலோ.. யாருங்க நீங்க? எப்படி உள்ள வந்தீங்க? இங்க கேர்ள்ஸ்.. வுமன்.. யாரும் அலவுட் கிடையாது.. எதுக்கு வந்திருக்கீங்க நீங்க?”
நேர்காணல் அறையில் இருந்து ஆதித்யா வந்துவிட போகிறானே என்ற பயத்தோடு அவ்வப்போது திரும்பி திரும்பி நேர்காணல் நடக்கும் அறையை பார்த்தபடி கேட்டான்..
“ஹலோ.. என்னங்க.. ஆளாளுக்கு இப்படி கேக்குறீங்க? அங்க செக்யூரிட்டி என்னடான்னா உள்ள விட மாட்டேங்குறாரு… நீங்க என்னடான்னா விமன் அலவ்ட் கிடையாதுன்னு சொல்றீங்க.. நீங்கதானங்க வாக்கின் ஏட் கொடுத்திருந்தீங்க? அதை பார்த்து வந்தா இப்போ இவ்ளோ தூரம் வந்தப்புறம் லேடிஸ் அலவ்ட் கிடையாதுன்னு சொல்றீங்க?” கோபமாக கேட்டாள் அல்லிமலர்..
“ஏன் மேடம்.. ஒரு அட்வர்டைஸ்மென்ட் பார்த்தா ஒழுங்கா படிக்க மாட்டீங்களா? அந்த அட்வர்டைஸ்மென்ட் கீழ ஆண்களுக்கு மட்டும்தான் இங்கே வேலைன்னு போட்டு இருந்தோமே அதை பாக்கலையா?” என்றவன் நேரே வரவேற்பறை மேஜைக்கு சென்று அன்றைய செய்தித்தாளை எடுத்து வந்து அவளுக்கு காண்பித்தான்..
“இங்க பாத்தீங்களா? கிளியரா போட்டு இருக்கு.. ஒன்லி ஃபார் மென்.. நாட் ஃபார் லேடிஸ்.. ஒழுங்கா அட்வர்டைஸ்மென்ட்ட பாக்காம வந்துட்டு நீங்க எதுக்கு பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
அவன் அவள் தவறை சுட்டிக் காட்டி புரிய வைக்க முயல அவளோ அந்த குறிப்பை பார்த்து தலையில் கை வைத்து புருவத்தை நீவியபடி மனதிற்குள் “எப்படி மிஸ் பண்ணேன் இதை?” என்று யோசித்தாள்…
அவள் தான் தவறுதலாக அந்த விளம்பரத்தை முழுமையாக படிக்காமல் அவசரப்பட்டு அந்த வேலைக்கான நேர்காணலுக்கு வந்துவிட்டோம் என உணர்ந்து தன்னிடம் அதற்காக மன்னிப்பு கேட்டு விட்டு சென்று விடுவாள் என்று எதிர்பார்த்த அருண் அப்படி செய்யாமல் அடுத்து அவள் கேட்ட கேள்வியில் சிறிது அதிர்ந்து தான் போனான் அருண்..
“ஏன் சார்.. செக்ரட்டரி வேலைக்கு ஏன் சார் பொம்பளைங்களை எடுக்காம வெறும் ஆம்பளைங்கள மட்டும் தான் எடுப்போம்ன்னு அடம் பிடிக்கிறீங்க.. உங்க சேர்மேன்க்கு செக்ரெட்டரியா ஒரு பொண்ணு இருக்க கூடாதா? நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. எனக்கு குவாலிஃபிகேஷன் இருக்கு.. நீங்க என்னோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் பாருங்க.. ஸ்டில் நான் இந்த வேலைக்கு ஒத்து வரமாட்டேன்னு தோணுச்சுன்னா நீங்க என்ன அனுப்பிடுங்க..”
அவள் நியாயம் கேட்பது போல் பேச தொடங்க “ஐயோ. பிராப்ளம் உங்களால இந்த வேலை செய்ய முடியுமா செய்ய முடியாதாங்கிறது இல்ல மேடம்.. ப்ராப்ளம் எங்க பாஸூக்கு பொண்ணுங்களை பிடிக்காது.. நீங்க தயவு செஞ்சு பிரச்சனை பண்ணாம கிளம்புங்க.. இப்ப அவரு இன்டர்வியூ தொடங்கற நேரம்.. உங்களை பாத்தா ரொம்ப டென்ஷன் ஆயிடுவாரு..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆதித்யவர்மன் அங்கே வந்திருந்தான்.. அல்லி மலரை பார்த்தது தான் தாமதம்.. அவன் கண்கள் இடுங்கி கோவத்தில் சிவப்பேற அவர்கள் பக்கம் அனல் பார்வையை வீசிய படி நேரே அவர்கள்ள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்..
“அருண்.. யாரு இது? யார் இந்த யூஸ்லஸ் க்ரீச்சரை உள்ள விட்டது? எத்தனை முறை சொன்னேன் நான் இங்க ஒரு பொண்ணை பார்க்க கூடாதுன்னு.. அப்படி இருந்தும் இவ எப்படி உள்ள வந்தா? எதுக்கு வந்து இருக்கா இவ? மொதல்ல ஆஸ்க் ஹர் டு கெட் த ப்ளடி ஹெல் அவுட் ஆஃப் திஸ் ஆஃபீஸ்..” அவளை பார்த்த நொடியில் அவன் படபடவென பட்டாசாய் வெடிக்க
அல்லிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது..
“ஹலோ சார்.. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. என்ன நீங்க பாட்டுக்கு அவ இவன்னு மரியாதை இல்லாம பேசறீங்க? யூஸ்லஸ் க்ரீச்சர்ங்கறீங்க.. அப்படி என்ன உங்களுக்கு ஆம்பளைங்கற திமிரு?” அவன் அருகில் நின்று அவனை மேற்பார்வை பார்த்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தாள்..
அதுவரை அவன் கண்ணை ஏறெடுத்துப் பார்த்து எவரும் எதிர்த்து பேசியது இல்லை என்பதால் அவள் அப்படி பேசியது அவன் கோபத்தை இன்னும் பல மடங்கு அதிகரித்தது..
“என்னடி? என் கம்பெனிக்கு வந்து என் முன்னாடியே குரலை ஒசத்தி பேசுற? முதல்ல வெளியில போ..” அடிக்குரலில் அவளை முறைத்தபடி மிரட்டினான் அவன்…
கண்களில் இன்னும் கோபம் கொப்பளிக்க “ஏய்.. இந்த ‘டி’ போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. நீயே சொன்னாலும் நான் இங்க இருக்க மாட்டேன்.. உன் அம்மாவும் ஒரு பொண்ணு தானே...? நீ இப்படி பொம்பளைங்கள பேசுறேன்னு தெரிஞ்சா அவங்களே வெட்கப்படுவாங்க..”
அவள் அப்படி சொன்னது தான் தாமதம்.. அவள் கழுத்தில் தன் கையை வைத்து அழுத்தி இருந்தான் ஆதித்ய வர்மன்.. அவன் கண்கள் செந்தணலாய் மாறி இருந்தன.. அவளை அப்படியே இழுத்துக் கொண்டு போய் சுவற்றில் சாய்த்தவன் அவள் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கவும் அவள் கண்ணுக்குள் தீயாய் பார்த்தான்..
ஆதித்யாவின் கைகள் அல்லியின் கழுத்தை பதம் பார்த்துக் கொண்டிருக்க அவள் கழுத்து நெறிப்பட்டு அவள் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.. ஆனால் இது எதுவுமே அவன் கவனத்தில் இல்லை.. அவள் சொன்ன ஒரு வார்த்தை.. யாரைப் பற்றி அவன் நினைத்துக் கூட பார்க்க விரும்பமாட்டானோ யாரை மனதார வெறுத்தானோ அந்த தன் அன்னை என்ற சுயநலவாதியைப் பற்றி அவள் பேசவும் அவனுக்கு வெறியேறியது… தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரியாமல் சிறிது சிறிதாக அவள் உயிரை எடுக்கவே துணிந்து இருந்தான்..
ஆனால் அவளை நெருங்கி அவள் கண்ணை நேருக்கு நேர் பார்த்தவன் ஒரு நிமிடம் அமைதியாகினான்..
முதல்முறையாக ஒரு பெண்ணின் கண்ணை உற்று நோக்குகிறான்… முதல் முறையாக ஒரு பெண்ணை தீண்டி இருக்கிறான்.. அது ஒரு வித்தியாசமான உணர்வை அவனுக்குள் கொடுத்திருக்க அவன் மனம் தனக்குள் ஏற்படும் அந்த வித்தியாசமான உணர்வு இன்னதென தெளிவாக உணர முடியாமல் தவித்து குழம்ப அந்த குழப்பத்தின் சாயல் அவன் முகத்திலும் பிரதிபலித்தது.. அந்த குழப்பத்தில் இருந்து வெளி வர இயலாமல் கண்களில் குழப்பமும் வெறியும் கோபமும் மாறி மாறி நிழலாட அவளையே பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான்.. அவனையும் அறியாமல் அவள் கழுத்தில் அவன் கையின் பிடி இன்னும் இறுகியது…
அதற்குள் அருண் அவர்கள் அருகில் ஓடி வந்தான்..” பாஸ் பாஸ்.. அந்த பொண்ணு மூச்சு விட சிரமப்படுது பாஸ்… விடுங்க பாஸ்.. அவ செத்து போய்டுவா பாஸ்.. ப்ளீஸ் சொன்னா கேளுங்க.. விடுங்க பாஸ்.. விடுங்க பாஸ்..”
அவன் கையை பிடித்து இழுப்பதற்கு முயற்சி செய்தான்.. கையை சிறிது தளர்த்தியவன் அவன் பக்கம் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தான்.. அதில் பயந்த அருண் ஒதுங்கி சென்றான்..
அல்லி பக்கம் திரும்பியவன் பல்லை கடித்து கொண்டு தன் ஒற்றை கையால் அவள் கன்னங்களை அழுத்தி பிடித்தான்.. அவளுக்கோ அவன் பிடித்த பிடியில் வலி எடுக்க தொடங்கியது.. அவள் அவன் கையை தன் கன்னங்களில் இருந்து விலக்க முயற்சிக்க அவளுடைய முயற்சி அத்தனையும் பயனற்று போனது.. அவன் பிடி இரும்பு பிடியாய் இருந்தது..
“ஏய்.. ஏய்.. இங்க பாருடி.. இது என்னோட ஆஃபீஸ்.. என் இடம்… எனக்கு என்ன தோணுதோ அதை செய்வேன்.. என் ஆஃபீஸ்க்கே வந்துட்டு எனக்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா..? உங்களை பத்தி எல்லாம் எனக்கு தெரியாதா? பொண்ணுங்க எல்லாரும் இப்படித்தான் வேலை வேணும்னு கேட்டு வருவீங்க… அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எங்களை மயக்கி காதலிக்கிறேன்னு சொல்லுவீங்க.. அப்புறம் கல்யாணம் பண்ணிட்டு ஒரு புள்ளைய பெத்து போட்டுட்டு இன்னும் பணத்தோட வேற ஒரு இளிச்சவாயன் கிடைச்சா அவன் பின்னாடி ஈன்னு பல்லை காட்டிட்டு ஓடிருவீங்க.. உங்களை பத்தி எல்லாம் தெரியாது..? உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெறும் பணம்.. உங்களை யாரு சொகுசா வச்சுருக்கறானோ அவனோட ஒட்டிக்கிட்டு இருக்கிறது தானே உங்களோட புத்தி… இதெல்லாம் தெரியாம உங்களை மாதிரி கேடு கெட்ட பொண்ணுங்களை வேலைக்கு சேர்த்துட்டு ஏமாறுறவன் நான் கிடையாது.. நீ போயி வேற எவனையாவது ட்ரை பண்ணு..”
அவன் நாராசமாய் வார்த்தைகளை வெளியே விட்டுக் கொண்டிருக்க அப்படியே தன் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டாள் அல்லி..
“டேய் நீ மனுசனே இல்லடா.. மிருகம்.. ராட்சசன்.. மனுஷனா இருந்தா பொண்ணுங்களை பத்தி இவ்ளோ கேவலமா பேச மாட்டே.. இங்க நின்னுட்டு உன் கம்பெனியில் வேலை செய்யறதுக்கு நான் ஒன்னும் மானங்கெட்டு போயிடல.. ஒரு பொண்ணு நெனச்சான்னா என்ன எல்லாம் பண்ண முடியும்னு உனக்கு நான் காட்டுறேன்.. பொண்ணுனா வெறும் போகப்பொருள் கிடையாது.. அவ உலகத்தை அவளே உருவாக்கக்கூடிய அளவுக்கு அவ எவ்வளவு பெரிய சக்தின்னு உனக்கு ப்ரூவ் பண்றேன்”
அவன் முகத்திற்கு நேரே தன் கையால் சொடக்கு போட்டவள் “அண்ட் இது என்னோட சேலஞ்ச்னு நெனச்சிக்கோ”
அவள் கூறிவிட்டு வெளியே செல்ல போக அவளை சொடக்கிட்டு கூப்பிட்டான் அவன்..
“ஏய் இன்னிக்கு உன் உயிர் உன்கிட்ட இருக்குன்னா உன் அப்பன் ஆத்தா செஞ்ச புண்ணியத்துனால.. இன்னொரு நாள் நீ என் கண்ணுல பட்ட அதோட நீ தொலைஞ்சடி.. உயிரோடயே இல்லனா அப்புறம் உன் சேலஞ்சை எப்படி நெறைவேத்துவ.. பத்திரமா உன் வீட்டுக்கு போய் சேர்ற வழியை பாரு.. மறுபடியும் என் கண்ணுல பட்டுறாத.. அப்படி தப்பி தவறி உன்னை மறுபடியும் பார்த்தேன்னா…”
அவள் பக்கம் சுட்டு விரலையும் நடு விரலையும் ஒன்றாக நீட்டி அளை சுடுவது போல் சைகை காட்டி ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவன் நேர்காணல் செய்ய வேண்டிய அறைக்கு சென்றான்..