அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6

4.9
(11)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

கவனத்தை ஈர்த்தவளே…!!

ஆதித்யா தன் காரில் இருந்து இறங்கி வரவும் அவனை பார்த்த அல்லிக்கு அவ்வளவு நேரம் இருந்த நம்பிக்கை இற்று போனது..

“அய்யோ இப்போ பார்த்து இந்த கார்ல இவன் தானா வரணும்.. இவன் எனக்கு உதவி செய்யப் போறானோ இல்ல இன்னும் உபத்திரவம் செய்ய போறானோ.. கடவுளே உனக்கு என் மேல கருணையே இல்லையா? உனக்கு என் மேல என்ன காண்டா இருந்தாலும் அதை வேற மாதிரி தீர்த்துகிட்டு இருக்கலாமே.. போயும் போயும் இவனோட ஏன் என்னை கோர்த்து விடுற அடிக்கடி?”

இப்படி எண்ணியபடி அந்த மனநிலை சரியில்லாத ஆளுடன் போராடிக் கொண்டிருக்க அவர்கள் அருகே வந்த ஆதித்யா அந்த ஆள் கையை அவள் தோளிலிருந்து பிரித்தெடுக்க முயன்றான்..

அவள் தோளை அவன் இறுக்கமாய் பற்றி இருந்தான்.. அவன் கைகள் இரண்டின் மேலும் ஓங்கி அடித்தான்.. அதில் அந்த ஆள் திமிறி தன் பிடியை தளர்த்த ஆதி அவன் திணறிய அந்த ஒரு நொடியை பயன்படுத்திக் கொண்டு அவனை சட்டென பிடித்து கீழே தள்ளினான்.

ஆதித்யா பக்கம் திரும்பிய அல்லி, “ஆதித்யா.. என்ன பண்றீங்க? அவருக்கு மனநிலை சரியில்லை.. அவரை போய் இப்படி அடிச்சு கீழே தள்ளிவிட்டு இருக்கீங்க?”

அவன் மேல் கோபப்பட்டாள் அவள்.. அவனுக்கோ தான் அவளை காப்பாற்றியதற்காக பாராட்டவில்லை என்றாலும் தன் மீது இப்படி கோபப்படுகிறாளே என்று வெறுப்பாய் போனது..

“ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவன் இப்ப திரும்பி வந்தான்னா உன்னோட நிலைமையும் அவன் நிலைமை மாறியே ஆயிடும்.. அவன் எழுந்து வரதுக்குள்ள இங்கருந்து போகணும்.. கெளம்புடி”

அவள் கையை பிடித்து தரதரவென்று இழுத்து தன் காரின் முன் இருக்கையில் அவளை தள்ளியவன் கதவை வேகமாய் சார்த்திவிட்டு அந்த ஆள் சுதாரித்து எழுந்து வருவதற்குள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை வேகமாக கிளப்பினான்..

“உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா? அவர் நிலைமையை பார்த்தீங்களா? தான் என்ன செய்யறோன்னே அவருக்கே தெரியல.. அப்படிப்பட்டவரை அடிச்சு கீழே தள்ளி வச்சிருக்கீங்க.. பாவம் எங்க எங்க அவருக்கு அடிபட்டிருக்கோ.. ” என்றவளை விசித்திரமாக பார்த்தான் ஆதித்யா..

“ஏய்.. நீ என்ன லூசாடி? இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தேன்னா அவன் உன்னை அலங்கோலமா ஆக்கி இருப்பான்.. நீயே சொல்ற இல்ல அவனுக்கு மனநிலை சரியில்லைன்னு.. அவனுக்கு தான் என்ன செய்யறோம்னே தெரியலன்னு சொல்ற இல்ல..? அப்ப உனக்கு புரிய வேண்டாமா? அவன் உன்னை எது செய்யறதுக்கும் யோசிக்க மாட்டான்னு… சட்டுனு அவனை புடிச்சு கீழ தள்ளிவிட்டுட்டு தப்பிச்சு ஓடாம அவனோட ஒக்காந்து சமாதானம் பேசிக்கிட்டு இருக்கியா? உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா?” அவள் மேல் எரிந்து விழுந்தான் ஆதித்யா..

“நீங்க சொல்றதை தான் நானும் சொல்றேன்.. அவ்வளவு வேகமா கீழ புடிச்சு தள்ளறதுக்கு பதிலா சட்டுனு என்கிட்ட இருந்து அவரை வெலக்கி உங்க பலத்தை யூஸ் பண்ணி அவரை தனியா இழுத்துட்டு போயிருக்கலாம் இல்ல? இப்ப என்னை இழுத்து கார்ல போட்டிங்களே அந்த மாதிரி..” என்றாள் அவன் பக்கம் கோபமாக திரும்பி..

“ஏய்.. இதுவரைக்கும் எந்த பொண்ணயும் திரும்பி பார்க்காதவன் நான்.. அவங்க எந்த நிலைமையில் இருந்தாலும் அதை பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாதவன் நான்..  ஆனா உனக்கு வந்து உதவி செஞ்சுட்டு இருக்கேன்..பாரு… என் புத்தியை செருப்பால அடிக்கணும்.. இந்த பொண்ணுங்களை பத்தி தெரிஞ்சிருந்தும் ஹெல்ப் பண்ணனும்னு வந்தேன் பாரு.. என்னை….” தலையில் அடித்துக் கொண்டான் அவன்..

பொதுவாக பெண்கள் பக்கம் திரும்பி கூட பார்க்காதவன் இன்று ஏன் அவள் அந்த ஆளோடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவள் உதவிக்கு வந்தான் என்பது அவனுக்கே புரியாத புதிராக தான் இருந்தது..

“உன்னை பத்தி தப்பா பேசி உன்னை விரட்டினாலும் கோவப்படுற.. நீ கஷ்டத்துல இருக்கும்போது உனக்கு ஹெல்ப் பண்ணாலும் என் மேல கோவப்படுற.. என்ன வித்தியாசமான பிறவிங்கடி நீங்கள்லாம்.. உங்களை புரிஞ்சுக்கவே முடியல.. நான் இத்தனை நாள் எப்படி இருந்தனோ அப்படி இருக்கறதுதான் சரி.. பொண்ணுங்க பக்கம் திரும்பினா அதோட அந்த ஆளு மூளை கழண்டு சுத்தறான் பாரு.. அந்த மாதிரி தான் நாங்களும் சுத்தணும்..” சரமாரியாக வாய்க்கு வந்தபடி அவளை திட்டி கொண்டு இருந்தான் ஆதித்யா..

ஆனால் இது எதையுமே கவனிக்காமல் மும்முறமாக அவள் கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அல்லி.. அது அவன் கோபத்தை இன்னும் உச்சிக்கு ஏற்றியது..

“ஒருத்தன் இங்க இப்படி புலம்பிட்டு இருக்கேன்.. நீ என்னடி அங்க தேடிட்டு இருக்க ஃபோன்ல” அவன் கேட்க அவளோ அவனை மருந்துக்கு கூட கண்டு கொள்ளவில்லை..

ஒரு எண்ணுக்கு அழைத்து காதில் வைத்து “ஹலோ.. லட்சுமி மேடம்.. இங்கே ரோட்ல ஒருத்தரு கொஞ்சம் வயசானவரு.. மனநிலை சரியில்லாம அலைஞ்சிட்டு இருக்காரு..” என்று அங்கு நடந்தது அத்தனையும் விவரித்தவள் “நான் அந்த அட்ரஸ் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்.. நீங்க கொஞ்சம் ரெண்டு பேர அனுப்பிச்சு அவரை கூட்டிட்டு போறீங்களா ..”

யாரிடமோ கேட்டுவிட்டு கைப்பேசியின் அந்தப்பக்கம் சம்மதம் கிடைத்தவுடன் அந்த ஆள் இருந்த முகவரியை அந்த எண்ணுக்கு அனுப்பி கொண்டிருந்தாள்..

“யாருக்கு ஃபோன் பண்ண இப்போ? “

அவன் அவளின்நடவடிக்கை எதுவுமே புரியாமல் கேட்க “அது நான் ரெகுலரா ஒரு முதியோர் இல்லத்துக்கு போவேன்.. அவங்க அனாதரவா இருக்கிற நிறைய வயசானவங்களுக்கு ஆதரவு கொடுக்குறாங்க.. இவரு மனநிலை சரியில்லாமயும் இருக்காரு.. கொஞ்சம் வயசானவராகவும் இருக்காரு.. ஒரு 50 வயசுக்கு மேல இருக்கும் போல இருக்கு.. அதான் அவங்களை ஆள் அனுப்பிச்சு கூட்டிட்டு போக சொன்னேன்.. அவருக்கு பாதுகாப்பாக ஒரு இடம் கிடைக்கும் இல்ல?”

அது ஏதோ அவள் தினமும் சாதாரணமாக செய்யும் வேலை என்பது போல சொல்லியவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா..

இதுவரை அவன் எந்த பெண்ணிடமும் இவ்வளவு நேரம் உரையாடியதே இல்லை.. அவன் உரையாடிய முதல் பெண்.. அவன் தீண்டிய முதல் பெண்..

அவன் கவனத்தை ஈர்த்த முதல் பெண் அவள்தான்.. அவளைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு..

அவன் இதுவரை சந்தித்த பெண்கள் எல்லோருமே சுயநலவாதிகளாய் மட்டுமே இருந்தார்கள்.. ஆனால் இவள் வித்தியாசமானவளாக இருக்கிறாள்.. தனக்கு துன்பம் கொடுத்தவருக்கும் நன்மையே நினைக்கிறாள்..

ஆனால் அப்படியும் சொல்லிவிட முடியாது.. அவனிடம் மட்டும் சண்டை போடுகிறாள்.. அந்த சண்டையிலும் ஒரு நேர்மை இருக்கிறது.. மற்ற பெண்கள்  போல ஆண்களை ஒட்டி உரசுவது கிடையாது..

அவள் தன்னோடு பேசும்போதும் சரி.. மிதுனோடு பேசும்போதும் சரி.. ஒரு கண்ணியத்தோடு பேசினாள்.. இப்போது அவனோடு காரில் வரும்போது கூட அவன் சத்ரேஷுடன்  காரில் போகும்போது எப்படி போவானோ அப்படி தான் இவளோடு போகும்போதும் உணர்ந்தான்..

ஒரு பெண் எப்படி இவ்வளவு நேர்மையாகவும் அன்புடையவளாகவும் கருணை இருக்கிறவளாகவும் இருக்க முடியும்?  அதே சமயம் எவ்வளவு புத்திசாலித்தனமாக அந்த டெண்டரை மிதுனுக்கு வாங்கி கொடுத்திருக்கிறாள்.. எல்லா விதத்திலும் ஒரு பெண் எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கிறாள் என்று அவளை மனதுக்குள் மெச்சினான் ஆதித்யா…

அதே சமயம் இப்படியும் அவன் மனம் யோசித்தது..”என்ன.. எனக்கு எதிரியா இருக்கா.. எனக்கு தகுதியான எதிரி தான்.. என்னை முதல் முதல்ல தோக்கடிச்சவளாச்சே.. இனிமேல் இவ வாழ்க்கையில தோல்வியை மட்டும் தான் பாக்கணும்.. அதுவும் என்னால தான் பாக்கணும்.. இவளை என்னிக்குமே ஜெயிக்க விடமாட்டேன்.. ஜெயிச்சுட்டான்னா அப்புறம் இந்த ஆதித்யா எதுக்கு?”

அவளை தோற்கடிப்பதே தன் வாழ்வின் குறிக்கோள் என உரு போட்டு தன் தலையில் ஏற்றிக் கொண்டான்..

“சரி.. உங்க வீடு எங்க இருக்கு சொல்லு.. நான் கொண்டு போய் விடறேன்”

அவன் கேட்கவும் அவள் தன் முகவரியை அவனிடம் சொன்னாள்.. அவள் வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டு அவள் பத்திரமாக உள்ளே செல்கிறாளா என்று பார்த்துவிட்டு பிறகு வண்டி எடுத்துக் கொண்டு போனான்..

தன் வீட்டிற்கு சென்றவன் வரவேற்பறையில் தன் தந்தை அமர்ந்திருப்பதைக் கண்டு “ஹாய் டாட்” என்றான்.

“ஹாய் ஆதி.. என்ன இன்னைக்கு சந்தோஷமா இருக்கே.. ஆனா நான் வேற மாதிரி கேள்விப்பட்டேனே.. நிச்சயமா இன்னைக்கு பயங்கர கோவத்தோடதான் வீட்டுக்கு வருவேன்னு நினைச்சேன்..” என்றார் அவர்.

“ஏம்பா.. என்ன கேள்விப்பட்டீங்க?” என்று அவன் கேட்க “இன்னைக்கு அந்த எஸ்கே ஏஜென்சிஸோட காண்ட்ராக்ட் உனக்கு கிடைக்கலையாமே.. அந்த எம் ஜே குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு போயிடுச்சுன்னு சொன்னாங்க.. அதனாலதான் நீ ரொம்ப கோவமா வீட்டுக்கு வருவேன்னு நினைச்சேன்.. ஆனா நீ என்னடான்னா இவ்ளோ கூலா இருக்க..?” என்று கேட்டார் அவர்..

“நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்.. ஆனால் என் கோபம் முழுக்க மத்தியானமே என் ஆஃபீஸ்ல இருக்குற மீட்டிங் ரூம்ல காமிச்சிட்டேன்.. அங்க இருக்கிற அத்தனை பொருளும் உடைஞ்சு போச்சு.. பாவம் அருண் தான் எப்பவும் போல என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டான்..”

மிகவும் சாதாரணமாக அவன் சொல்ல அவர் அவனை முறைத்தார்..

“கண்ணா.. நம்ம எப்பவுமே வாழ்க்கையில் ஜெயிச்சுகிட்டே இருக்க முடியாது.. ஏதோ ஒரு இடத்தில நமக்கு தோல்வி கிடைக்கும்.. அதை ஏத்துக்கணுமே தவிர இப்படி கோபப்பட்டா உனக்கும் நல்லது இல்ல.. மத்தவங்களுக்கும் நல்லது இல்ல.. கோவம் உன்னையும் அழிச்சுடும்.. உன்னை சுத்தி இருக்கிறவங்களையும் அழிச்சிடும்.. அதனால இனிமே ஏதாவது இந்த மாதிரி ஃபெயிலியர் வந்தா அதை லைட்டா எடுத்துக்கறதுக்கு பழகிக்கோ” அவர் அமைதியாக கூறினார்.

“அப்பா.. இனிமே எனக்கு ஃபெயிலியரே வராதுப்பா.. திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட் டைம்.. அதுவும் இதுக்கு காரணம் மிதுன் இல்லப்பா.. அவன் ஒரு வெத்துவேட்டு.. அவன் இவ்ளோலாம் யோசிக்கவே மாட்டான்.. அவன் கூட ஒரு பொண்ணு இருக்கா.. அவ தான் இதெல்லாம் யோசிச்சு புத்திசாலித்தனமா காய் நகர்த்தி இந்த வாட்டி என்னை தோற்கடிச்சுட்டா… இனிமேல் அவளையும் வாழ்க்கையில ஜெயிக்க விட மாட்டேன்..”  தீர்க்கமான பார்வையோடு சொன்னான்..

“பொண்ணா.. நீ அந்த பொண்ணை புத்திசாலின்னு வேற சொல்றேன்னா நிஜமாவே அவ பெரிய ஆளா தான் இருக்கணும்.. ஆமா நீ தான் பொண்ணுங்களையே பார்க்க மாட்டியே.. நீ எப்படி ஒரு பொண்ணை அவ்வளவு கவனிச்சு இவ்வளவு தூரம் அவளை பத்தி நோட் பண்ணி வச்சிருக்கே”

அவர் விழிகளில் ஆச்சரியத்தோடு கேட்டார்..

“அப்பா.. அவ முதல்ல வேலைக்கு சேர வந்தது நம்ம கம்பெனில தான்.. உங்களுக்கு தான் தெரியுமே எனக்கு பொண்ணுங்களை கண்டாலே அலர்ஜி.. அதனால அவளை கண்ணா பின்னான்னு திட்டி அனுப்பிச்சிட்டேன்.. போறா குறைக்கு அவ வந்த அன்னிக்கு என்னை பாத்து தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசி பயங்கரமா வாங்கி கட்டிட்டு போனா என்கிட்ட..” அவன் கூறியதை கேட்டு அவர் கவலை கொள்ளலானார்..

“என்னடா பண்ண அந்த பொண்ணை.. ?அவ என்ன பேசினா? ஒழுங்கா சொல்லு..”

அவர் கேட்க “அவ வந்த உடனே நான் பொண்ணுங்களை ரொம்ப கேவலமா பேசுறேன்.. என்னை பெத்த அம்மாவே என்னை கேவலமா நினைப்பான்னு சொன்னா.. “

அன்று நடந்ததை விவரித்துவிட்டு, “என்னை பெத்த அம்மா ஒழுங்கா இருந்தா நான் ஏன் பொண்ணுங்களை பத்தி இவ்வளவு கேவலமா நினைக்க போறேன்.?”

வெறுப்புடன் தன் பல்லை கடித்துக் கொண்டு கையை இறுக்கிக் கொண்டு சொன்னான் அவன்..

அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்த அவன் தந்தை “சாரிப்பா அந்த ஒரு சம்பவம் உன் வாழ்க்கைல நடந்ததால உனக்கு எவ்வளவு கஷ்டம்..? நீ ஆளே அதனால எப்படி மாறி போயிருக்க? என்னால இதுக்கு எதுவுமே செய்யமுடியாம கையாலாகாதனத்தோட நான் உட்கார்ந்து இருக்கேன்.. என்னால பண்ண முடிஞ்சதெல்லாம் உங்க அம்மா கொடுக்க வேண்டிய அன்பையும் சேர்த்து நானே உனக்கு கொடுக்கறது மட்டும் தான்” என்றார் அவர்..

“அப்பா.. ப்ளீஸ்.. நீங்க ஃபீல் பண்ணாதீங்க.. நான் அதனாலதான் இதை உங்ககிட்ட சொல்லவே இல்ல.. இப்ப நீங்க கேட்டதாலதான் சொன்னேன்.. நீங்க கேட்டு என்னால உங்க கிட்ட பொய் சொல்ல முடியாது..” என்றான்.. தந்தையின் மேல் அவன் வைத்திருந்த மதிப்பு அப்படி..

“ஆதி..ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா பொண்ணுங்களும் உங்க அம்மா மாதிரி கிடையாதுப்பா.. நீ இப்ப சொன்ன இல்ல அந்த பொண்ணு மாதிரி நல்ல பொண்ணுங்களும் இங்க இருக்காங்கடா.. நீ ஒரேயடியா இப்படி பொண்ணுங்க எல்லாரையும் வெறுத்து தள்ளாதடா.. யாராவது அன்பான பொண்ணுங்க இருந்தா அவங்களை மதிக்க கத்துக்கோடா.. எல்லாரையும் ஒரே மாதிரி எடை போட்டு நல்ல பொண்ணுங்களோட சாபத்தையும் சேர்த்து வாங்கிக்காதே.. அது உன் வாழ்க்கையை அழிச்சுடும்.. ஒரு அப்பாவா உன் வாழ்க்கையை பத்தி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா..” கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார் அவர்..

“அப்பா என் வாழ்க்கையில பொண்ணுங்க இருக்கணும்னு அவசியமே இல்லப்பா.. நான் பொண்ணுங்களே வேண்டான்னு சொல்றேன் என் வாழ்க்கையில.. அப்புறம்  அவங்களை வெறுக்கிறது விரும்பறதுங்கற கேள்விக்கே இடம் கிடையாது.. அதனால நீங்க கவலைப்படாதீங்க.. முதல்ல பொண்ணுங்களை என் வாழ்க்கையில விட்டாதானே அவங்களை வெறுத்து நான் கஷ்டப்படுவேன்னு நீங்க சொல்ல முடியும்..‌‌ என் வாழ்க்கையில் பொண்ணுங்களுக்கு இடமே கிடையாது..”  அவன் தெளிவாய் உறுதியாய் சொன்னான்..

ஆனால் அவன் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் வந்திருந்தாள் என்று அவனுக்கு தெரியவில்லை.. அவன் நினைத்தாலும் அந்தப் பெண் அவன் வாழ்க்கையின் பெரும் பகுதி ஆகப்போவதை அவனால் தடுக்க முடியாது என்பதும் அவனுக்கு புரியவில்லை.. காலத்தின் விளையாட்டு நடக்கும்போது சிறிது சிறிதாக அவன் புரிந்து கொள்வான் வாழ்க்கையின் நிதர்சனத்தை…

“சரி ஆதி.. நீ போய் சாப்பிட்டு தூங்கு நானும் என் ரூமுக்கு போறேன்.. குட் நைட் டா..” என்று சொல்லியவர் தன் மகன் பேச்சிலும் மனத்திலும் ஒரு நல்ல பெண்ணால் ஏற்பட்டிருக்

கும் சிறிய மாற்றத்தை தன் கவனத்தில் வைத்து ஒரு சிறு நம்பிக்கையோடு அவர் அறைக்கு சென்றார்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!