தன் வீட்டிற்கு சென்ற அல்லி அவள் அப்பாவிடம் சென்று “அப்பா நான் உங்களோட கொஞ்சம் பேசணும்” என்றாள்..
“சொல்லுடா.. என்னடா பேசணும்?”
“அப்பா நான் உங்க கிட்ட சொன்னேன் இல்ல..? அன்னைக்கு ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்னு ஒரு கம்பெனிக்கு போனேன்னு…”
அவள் தன் தந்தை பக்கத்தில் அமர்ந்து கொண்டே கேட்கவும் “ம்ம்ம்.. ஞாபகம் இருக்குமா.. அந்த ஆதித்யாக்கு தான் பொண்ணுங்களே புடிக்கல… உன்கிட்ட ரொம்ப மிஸ்பிஹேவ் பண்ணான்னு சொன்னியேமா.. இப்ப எதுக்கு அவனை பத்தி பேசுற?” அவர் முகத்திலும் ஒரு கேள்விக்குறியோடு கேட்டார்..
“இல்லப்பா இன்னிக்கி அவன் ஒரு விஷயம் பண்ணான்.. என்னால அவனை புரிஞ்சுக்கவே முடியலப்பா.. ஒரு சமயம் உதவி பண்றேங்குறான்.. ஒரு சமயம் வெறுத்து ஒதுக்குறான்.. திட்டுறான்.. அடிக்கிறான்.. கழுத்தை கூட நெரிக்கிறான்..இது எல்லாம் பண்றான்.. ஒரு பக்கம் கரடு முரடா இருக்கான்.. ஒரு பக்கம் அவனை பாத்தா அவனுக்குள்ள ஏதோ ஒரு நல்ல பக்கம் இருக்குன்னு தோணுதுபா.. இத்தனை நாளா அதை வெளில கொண்டு வராமலே இருந்துட்டாங்களோன்னு யோசனையா இருக்குப்பா..”
அவள் சொன்னதை கேட்டவர் “அன்னைக்கு அந்த பையனை போட்டு அப்படி திட்டுன.. இன்னிக்கு நீயே வந்து அந்த பையனை பத்தி ஏதோ அக்கறையா பேசுற.. அப்படி உன் மனசு மாறுற அளவுக்கு என்னமா நடந்துச்சு? உன் மனசை மாத்தற மாதிரி அவன் அப்படி என்ன பண்ணான்?”
அவர் புரியாமல் கேட்க அல்லி அன்று நடந்தது முழுவதும் தன் அப்பாவிடம் விரிவாக கூறினாள்..
“அன்னைக்கு தன்னோட ஆஃபீஸ்ல பொண்ணுங்களோட நிழல் கூட படக்கூடாதுன்னு சொல்லி என்னை அந்த விரட்டு விரட்டினவன் இன்னிக்கு நான் ஒரு ஆபத்துல இருக்கேன்னு தெரிஞ்சதும் காரை நிறுத்திட்டு இறங்கி வந்து அவனாவே எனக்கு ஹெல்ப் பண்ணான்பா.. ஆனாலும் அந்த மனநிலை சரியில்லாத ஆள் கிட்ட கொஞ்சம் தப்பா நடந்துக்கிட்டது எனக்கு கொஞ்சம் கோவம் தான்.. ஆனா அவன் அப்புறம் பேசுனதை பார்க்கும்போது அதை என் மேல இருந்த அக்கறையில தான் செஞ்சிருக்கான்னு தோணுச்சு..”
அவள் சொன்னதை கேட்டவர் புருவம் உயர்த்தி வியப்போடு அவள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தார்..
“ஆனா எனக்கு ஒன்னே ஒன்னு தான் பா புரியல.. அன்னிக்கு அவன் ஆஃபீஸ்க்கு போனப்போ அவன் என் கழுத்தை நெரிச்சு கொலை பண்ற லெவெலுக்கு போனான்.. இன்னிக்கு அவன் ஏம்ப்பா என் மேல அக்கறை காட்டணும்? அவனுக்கு தான் பொண்ணுங்கன்னாலே பிடிக்காது இல்ல..? நான் ஒரு பொண்ணா இருந்தும் என்னை ஏம்பா அவன் காப்பாத்துனான்..? இவனோட எந்த முகம் உண்மையான முகம்னு எனக்கு புரியலப்பா.. ஒருவேளை அவன் சொன்ன மாதிரி என்னை தோக்கடிக்கதற்காக இதெல்லாம் செஞ்சு ஏமாத்துறானோன்னு தோணுது பா..”
அவள் கவலையோடு சொல்ல “அம்மா.. நீ ரொம்ப யோசிக்கிறயோன்னு தோணுது.. எனக்கென்னவோ அவன் உண்மையான குணம் வேற மாதிரி இருக்குமோன்னு தோணுது.. அவன் அன்னிக்கு ஆஃபீஸ்ல உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கலாம்.. அவன் லைஃப்ல ஏதாவது தப்பா நடந்திருக்கலாம்.. அவன் இன்னிக்கு நடந்துக்கிட்ட விதத்தை கேட்டா அந்த பையன் நல்ல பையன்னு தான் தோணுது.. அவன் வாழ்க்கைல ஒரு பொண்ணால பர்டிகுலரா அவங்க அம்மாவால ஏதோ தப்பு நடந்திருக்குமோன்னு தோணுது… அது அவனை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்…”
“ஒரு அம்மா எப்படிப்பா தான் பிள்ளைக்கு தப்பு பண்ணுவாங்க.. அது சாத்தியமே இல்லையேப்பா..” தாமரை போன்று ஒரு அன்பான அன்னையிடம் வளர்ந்தவளுக்கு அவர் சொன்னதே விசித்திரமாய் இருந்தது..
“ம்ம்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்.. அவன் அவன் அம்மாவை தப்பா கூட நினைச்சுகிட்டு இருக்கலாம்.. யாராவது அவங்க அம்மாவை பத்தி அவனுக்கு தப்பா சொல்லி இருக்கலாம்.. ஏன்னா நீ சொல்ற மாதிரி எப்பவுமே பெரும்பாலான அம்மாக்கள் தப்பு பண்ண மாட்டாங்க.. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அன்பு கொடுக்கறது மட்டும்தான்..”
“அப்படின்னா முதல் தடவையா பாக்குற பொண்ணுங்களையே இப்படி நோகடிக்கிறவன் தன் மனசுல தப்பா நினைச்சுக்கிட்டு இருக்குற அந்த அம்மாவை எவ்வளவு நோகடிப்பான்..? அப்படி அந்த அம்மாவை பத்தி அவன் தப்பா நினைச்சுட்டு இருக்கான்னா உண்மைய அவனுக்கு யாராவது புரிய வைக்கணும் இல்லையாப்பா..? இந்த மாதிரி அவன் கோபப்படுறது அவனையும் அவனை சுத்தி இருக்குறவங்களையும் அழிச்சுடும்ப்பா.. அந்த மாதிரி ஒரு நல்லவன் அப்படி ஆகக்கூடாதேப்பா..”
தன் மேல் கொலைவெறியோடு கோபப்பட்டவன் கூட நல்வழியில் திருந்தி நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் தன் பெண்ணின் அழகான குணத்தை நினைத்து பெருமிதமாக உணர்ந்தார் செழியன்..
“ம்ம்ம்ம்.. அவனுக்கு யாராவது அவன் கோபத்தையும் மீறி அன்பை காமிச்சு அவனுக்குள்ள இருக்கிற வேதனையை தீர்த்து வச்சா அவன் மாறுறதுக்கு நிச்சயமா வாய்ப்பு இருக்குமா.. உன்னால அவனை கோபப்படுத்தாம அவனுக்கு ஏதாவது நல்லது பண்ண முடியும்னா பண்ணு.. இல்ல அவன் ரொம்ப கோவப்பட்டான்னா அவன் வழியில இருந்து விலகி வந்துடும்மா.. பொண்ணுங்களை பிடிக்காத அவன் முன்னாடி போய் போய் நின்னு அவன் கோவத்தை அதிகப்படுத்தாத..”
அவர் சொல்வதும் சரிதான் என்று மனதிற்கு நினைத்தாள் அல்லி..
“சரிப்பா.. இனிமே அவனை அதிகமா நான் மீட் பண்ணறத்துக்கு சான்ஸ் இல்ல.. அப்படி மீட் பண்ற மாதிரி ஏதாவது சந்தர்ப்பம் வந்தா அப்ப பாத்துக்கலாம்.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.. நான் போய் படுக்கிறேன்பா.. குட் நைட்..”
அவள் தந்தையின் கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போக அவரும் “குட் நைட் டா செல்லக்குட்டி” என்று சொல்லி அவளை அனுப்பினார்..
தன் அறைக்கு சென்ற அல்லி லக்ஷ்மிக்கு தன் கைபேசி மூலம் அழைத்து அந்த மனநிலை சரியில்லாதவர் அவர்கள் விடுதியில் வந்து பாதுகாப்பாக சேர்ந்து விட்டாரா என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்..
அதன் பிறகு எப்போதும் போல இளையராஜா பாடல்களை கைபேசியில் இசைக்கவிட்டு படுத்துக்கொண்டாள்.. ஆனால் அன்று அந்த பாடல்களில் முற்றிலுமாக அவள் கவனம் ஏனோ செல்லவில்லை..
ஏனோ ஆதித்யாவின் நினைவாகவே இருந்தது அவளுக்கு.. முதல் முறை சந்தித்தபோதும் இரண்டாம் முறை சந்தித்த போதும் அவன் நடந்து கொண்ட விதத்தையும் அன்று மாலை அவன் நடந்து கொண்ட முரணான விதத்தையும் யோசித்து குழம்பி போனாள் பாவை..
“யாருடா நீ? நெஜமாவே நீ இன்னைக்கு நடந்துக்கிட்டதுதான் உன்னோட உண்மையான கேரக்டரா? உன் குணம் இதுதான்னா உன்னை மாதிரி நல்லவன் இந்த உலகத்திலயே இருக்க முடியாது.. ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கும்போது ஜெனரலா ஆம்பளைங்க பாக்குற ஒரு தப்பான பார்வை கூட இல்லை உன்கிட்ட.. உன் கார்ல நீ என்னை கூட்டிட்டு வந்தப்போ நான் அவ்வளவு சேஃபா பீல் பண்ணேண்டா.. ஆனா அன்னைக்கு உன் ஆஃபீஸ்க்கு வந்தப்போ பொண்ணுங்களை அவ்ளோ கேவலமா பேசின.. அதுதான் உன் முகம்னா உன்னை விட ஒரு கேவலமானவன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.. நீ ஏண்டா இப்படி ஒரு புரியாத புதிர் மாதிரி இருக்க? நெஜமாவே நீ யாருடா?”
தனக்கு தானே பேசிக்கொண்டு யோசித்தவளுக்கு அவனிடம் சென்று நாயகன் படத்தில் வரும் வசனத்தை போல நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது..
ஏனோ அவனைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குள் எழுந்த ஒரு சிறு குறுகுறுப்புடன் கூடிய ஆர்வத்தை அவளால் அடக்க முடியவில்லை..
அன்று மாலை அவளை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவளிடம் அடாவடியாக நடந்து கொண்டு அவனின் அன்பை கூட அதிரடி செய்கைகளால் அவன் காட்டியதை எண்ணி பார்த்தவளுக்கு தன்னையும் அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது.. அவனை பற்றியே எண்ணியபடி புன்னகை முகமாக உறங்கிப் போனாள் அல்லிராணி..
##################
அடுத்து வந்த இரண்டு மாதங்கள் தினமும் அவள் வேலைக்கு செல்வதும் வருவதுமாய் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது..
அதன் பிறகு ஒருநாள் அலுவலகத்துக்கு சென்றவள் நாள் முழுவதும் தன் வேலைகளை நல்லபடியாக முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.. அலுவலகத்தில் மற்ற எல்லோரும் கிளம்பி போயிருந்தார்கள்..
இவளும் மிதுனும் அலுவலகத்தின் ப்யூனும் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தார்கள்..
அப்போது மிதுன் அவளை அழைத்து “மிஸ். அல்லி மலர் லாஸ்ட் இயர் நம்ம எடுத்த மணிபால் பிரைவேட் லிமிடெடோட டெண்டர் வருஷா வருஷம் ரிந்யூவல் பண்ணனும்.. இந்த வருஷம் பண்ணும் போது அவங்க அமௌன்ட் இன்னும் கம்மியா கோட் பண்ண சொல்லி கேட்டு இருக்காங்க.. ஆனா இந்த முறை அது மட்டும் இல்லாம நம்ம காம்பெடிட்டர் ஆதித்யா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்லயும் அவங்க ஒரு அமௌன்ட் கோட் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க.. சோ இப்போ அந்த டெண்டர் இனிமேலும் நம்மகிட்டயே இருக்கணும்னா நாம கம்மியா அமௌண்ட்டா கோட் பண்ணி ஆகணும்” அவன் விளக்கி சொன்னான்..
“ஓ அப்படியா சார்.. அதனால என்ன கம்மியா இந்த வாட்டியும் கோட் பண்ணிட்டா போச்சு..”
அவள் சாதாரணமாக கூற “இல்லை மிஸ்.அல்லி.. போன முறை மாதிரி இல்ல… போன முறை நம்மளோட இன்னொரு கம்பெனி பேரில டெண்டர் அமௌண்ட் கோட் பண்ணதனால நமக்கு அந்த டெண்டர் கிடைச்சிருச்சு.. ஆனா இப்போ ஆதித்யா உஷாராகி இருப்பான்.. இந்த முறை நம்ம என்ன டெக்னிக் யூஸ் பண்ணாலும் அது ஒத்து வராது.. அவன் எப்படியாவது நம்ம கோட் பண்ற அமௌன்ட தெரிஞ்சுக்க பார்ப்பான்..
சோ இந்த முறை நான் வேற ஐடியா பண்ணி அதை ஒர்க் அவுட்டும் பண்ண ஆரம்பிச்சாச்சு..” என்றான் அவன்…
“என்ன ஐடியா சார்?” அது என்ன புது யோசனை என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள் அவள்…
“ஆதித்யா யூஸ் பண்ண அதே டெக்னிக்கை தான் நானும் யூஸ் பண்ணி இருக்கேன்.. இந்த ஆபீஸ்ல அவனோட ஸ்பை யாருன்னு கண்டு பிடிக்க முடியல..அவன் எப்படி இந்த ஆபீஸ்ல ஒரு ஸ்பை வெச்சிருக்கானோ அதே மாதிரி அவன் ஆபீஸ்ல நானும் ஒரு ஸ்பை வச்சிருக்கேன்… அந்த ஆளு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல எனக்கு ஃபோன் பண்ணி அவங்க எவ்வளவு அமௌன்ட் கோட் பண்றாங்கன்னு சொல்லிடுவான்” அவன் இயல்பாக சொல்லிக் கொண்டிருந்தான்…
அல்லி மலர் சிறிது அதிர்ச்சி அடைந்தாள்.. “என்ன ஸ்பை வச்சிருக்கீங்களா? ஏன் சார் அவன் தான் நேர்மையா பிசினஸ் பண்ணாம எதோ குறுக்கு வழியில் பண்ணி டெண்டர் எல்லாம் ஜெயிக்கிறான்.. நம்பளும் அதையே பண்ணா நமக்கும் அவனுக்கும் என்ன சார் வித்தியாசம் இருக்கும்? இல்ல சார்.. இது வேண்டாம். நம்ம ஒரு அமௌண்ட் டிசைட் பண்ணி கோட் பண்ணி அதுல நமக்கு டெண்டர் எக்ஸ்டன்ட் ஆச்சுன்னா நம்ம அதை அக்சப்ட் பண்ணிக்கலாம்… அவன் குறுக்கு வழியில் போறாங்கறதுக்காக நம்மளும் குறுக்குவழியில போக வேண்டாம்..” அவள் குரலில் உறுதியுடன் சொன்னாள்…
“மிஸ்.அல்லி மலர் இந்த கம்பெனிக்கு பாஸ் நான்.. நீங்க இல்ல.. இதெல்லாம் சின்ன சின்ன வியாபார தந்திரம்.. இதுக்கு குறுக்கு வழின்னு நீங்க பேர் வச்சா அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. ஆனா இந்த முறை அந்த ஆளு என்ன அமௌன்ட் சொல்றானோ அதைத்தான் நம்ம கோட் பண்ண போறோம்..” என்று தீர்மானமாக சொன்னான் அவன்..
“சாரி சார்.. அப்படின்னா நான் இந்த வேலையை ரிசைன் பண்றேன்… என்னால இங்க வேலை செய்ய முடியாது.. எங்க நேர்மையா பிசினஸ் நடக்குதோ அங்க தான் நான் வேலை செய்யணும்னு நெனைக்கிறேன்.. நான் மட்டும் இல்லை நான் வேலை பண்ற இடமும் நேர்மையான வழியில தான் நடக்கணும்னு நான் நினைக்கிறேன்.. எனக்கு நான் வேலை செய்ற கம்பெனியிலிருந்து கொடுக்கிற சம்பளம் நேர் வழியில் சம்பாதிச்சதா இருக்கணும்.. ஐ அம் சாரி.. நான் போய் என்னோட ரெஸிக்னேஷன் லெட்டர் எடுத்துட்டு வந்து உங்க கிட்ட கொடுக்கிறேன்..”
அவள் வெளியே செல்ல திரும்பினாள்…
“ஒரு நிமிஷம் அல்லி மலர்.. நீங்க இந்த கம்பெனியை விட்டு தான் போகணும்னா போய்க்கோங்க…ஆனா உங்களை அப்படியே அனுப்புற மாதிரி ஐடியா எனக்கில்ல… இவ்வளவு நாள் உங்களை என் கூட வச்சிக்கிட்டு நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் நான் பண்ணதுக்கு காரணம்.. எனக்கு உங்க மேல இருந்த ஆசை.. இவ்ளோ அழகா இருக்கற உன்னை ஒரு தடவையாவது அடைஞ்சுடணும்னு என் மனசு கிடந்து துடிக்குது.. 2 மாசமா அந்த ஆசையை அடக்கி வச்சிட்டு நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கேன்.. இப்ப என்னடான்னா ஒரே நிமிஷத்துல வேலையை விட்டுட்டு போறேங்குற?” அவன் அவள் மேல் காமப்பார்வை வீசியபடி சொல்ல அதைக் கேட்டவள் அதிர்ந்தாள்..