தடமில்லா ஓவியம் அவன்..!!

4
(34)

தடம் – 01

ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய முகத்தை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் மதுராந்தகன்.
இதற்கு முன்னாடியும் எத்தனையோ தடவை இந்தக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ரசித்து ரசித்துப் பார்த்தவன்தான் அவன்.

ஆனால் அன்றைய பார்வைக்கும், இன்றைய பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளடங்கி இருந்தன.

அன்று தன்னைப் பார்த்து ரசித்து பெருமை கொள்ளச் செய்த அவனுடைய வதனமோ இன்று அவனையே அச்சம் கொள்ளச் செய்யும் அளவிற்கு விகாரமாக மாறி இருந்தது.
அவனுடைய இரு பக்க கண்களுக்கு கீழே கன்னங்களில் தொடங்கி கழுத்து வரை சிதைந்து போயிருந்த தன் முகத்தைக் கண்டு அவனுக்கோ கண்ணீர் வழிந்தே விட, சட்டென அந்த விழி நீரைச் சுண்டி எறிந்தவன் இறுகிப்போய் நின்றான்.

ஆம் அவனுடைய முகத்தில் முக்கால்வாசிப் பகுதி மிகவும் விகாரமாக சிதைந்து போயிருந்தது.
அவனாலேயே அவனுடைய முகத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

அவன் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எத்தனையோ கோடி பேர் அன்று பார்த்து ரசித்த அவனுடைய முகம்தான் இப்போது சிதைந்து போய் அகோரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
முடிந்தது…!!

அனைத்தும் முடிந்தது..!!
அவனுடைய எதிர்காலம், ஆசை, வேலை அனைத்தும் முளையின்றி பட்ட மரமாகிப் போனதை எண்ணி மீண்டும் வருந்தினான் அவன்.
தன்னுடைய முகத்தைப் பார்த்து அவன் வருந்துவதை விட, பிறர் அவனை பரிதாபமாகப்‌ பார்ப்பதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது போனது.

கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் மிகப்பெரிய நாயகனாக வலம் வரும் அவனுக்கோ ரசிகர்கள் ஏராளம்.

அவன் உருவத்தை தங்களுடைய உடலில் பச்சைக் குத்திக் கொண்ட ரசிகர்களும் ஏராளம்.
ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாகிப் போயிருந்தது.

சயின்ஸ் லேப் ஒன்றினுள் நடந்த சண்டைக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது தன்னை மறந்து அவன் அந்தக் காட்சியில் ஒன்றி நடித்துக் கொண்டிருந்த வேளையில் தவறுதலாக மேலே வைக்கப்பட்டிருந்த ஆசிட் அவனுடைய முகத்தில் தட்டுப்பட்டு விழுந்து விட அவனுடைய கன்னங்கள் தொடக்கம் கழுத்து வரையும் முக்கால்வாசி முகம் அப்படியே சிதைந்து போனது.

ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ஆபத்தான பொருட்களோடு அமிலங்களும் அகற்றி வைக்கப்பட்டிருந்த போதும் கூட சரியாக கவனமின்றி அந்த ஆசிட் போத்தல் மாத்திரம் அகற்றப்படாது இருந்தது மதுராந்தகனுக்கு பெரும் கேடாக முடிந்தது.

விளைவு அவனுடைய அழகான முகத்தோல் எரிந்து கருகி ஆழமாக சிதைந்து போனது.

அன்றோடு அந்த படத்தில் இருந்து அவனை விலக்கி வைத்தனர்.
அன்று சிரித்துக் கொண்டான் அவன்.
அந்தப் படத்தை எடுப்பதற்கு தன்னிடம் எத்தனையோ நாட்கள் காத்திருந்து தன்னுடைய சம்மதத்தை பெற என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை எண்ணியவனுக்கோ கசப்பான புன்னகையே மலர்ந்தது.

இன்று அவனுடைய முகம் பாழாகிப் போனதும் தன்னை வேண்டாம் என ஒதுக்கி வைத்தவர்களிடம் வாதாட விரும்பாது அந்த இடத்தில் இருந்து தானே விலகிக் கொண்டான் அவன்.

ஆனால் அதன் பின்னர் அவன் சந்தித்ததெல்லாம் தோல்வி தோல்வி தோல்வியே….!!

அந்தப் படம் மட்டுமின்றி வேற எந்த இயக்குனர்களும் அவனை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க தயாராக இல்லை.

சரிதான் அவர்களையும் குறை கூறிவிட முடியாது தானே.

நடிகன் ஒருவனுக்கு அழகும், உடற்கட்டும் தானே முக்கியம்..? அவை இல்லாவிடில் அவனால் சிறந்த நடிகனாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க முடியாதே.

அழகு நிரந்தரம் இல்லை என்பதை அக்கணம் புரிந்து கொண்டான் அவன்.
நான்கு வருடங்களாக அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் கூடத் தன் முகத்தைப் பார்த்து கேலி செய்வதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இதோ இந்த ஆக்சிடென்ட் நடந்து இன்றோடு இரண்டு மாதங்கள் முடிந்தே விட்டன.

இன்னும் அந்த பாதிப்பில் இருந்து முழுதாக வெளியே வர முடியாது தவித்துக் கொண்டிருக்கிறான் மதுராந்தகன். மனம் முழுவதும் வலி.
அனைத்திலும் தன்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்ற எண்ணமே அவனைக் கலங்கடித்தது. உயிரோடு மரிக்கச் செய்தது.

அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் அவனுடைய காதல் மனைவி மாத்திரமே..

ஆம் ஒரு வருடமாக தன் பின்னாலேயே சுற்றி தன் மீது காதலைப் பொழிந்து தன்னை அவளுடையவனாக மாற்றிக் கொண்ட காதல் மனைவியே அவள்.
தாலி எதுவும் கட்டவில்லை. மோதிரம் மாற்றியதே போதும் என எண்ணிக் கொண்டவர்கள் ஒரே வீட்டில்தான் வாழ்கின்றனர்.

அவளைப் பற்றி எண்ணியதும் அவனுடைய கலக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போனது.

இதழ்கள் சற்றே விரிந்து புன்னகைக்க, இன்று தன்னவள் ஷூட்டிங் முடிந்து இந்தியா வருகின்றாள் என்பதை எண்ணி மகிழ்ந்து போனான் அவன்.

அவனுக்கு இப்படியானதும் துடித்துக் கதறிய ஒரே ஜீவன் அவள் மட்டும்தான்.

இந்த இரண்டு மாதங்களும் ஷூட்டிங் காரணத்தினால் இந்தியா வர முடியாது போக இரண்டு மாதங்களின் பின்பு இன்றுதான் அவனைக் காண வருகின்றாள் அவள்.

கண்ணாடியிடம் இருந்து விலகிச் சென்று தன்னுடைய பிரம்மாண்டமான அறை வாயிலின் அருகே வந்தவன் சிறு புன்னகையை உதிர்த்த வண்ணம் கீழே செல்லத் தொடங்கினான்‌.

இன்னும் அரை மணி நேரத்தில் அவள் இங்கே வந்துவிடக்கூடும் என்ற எண்ணமே அவனை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உயிருக்குயிராக நேசித்த உறவு ஒன்று மட்டுமே போதுமல்லவா..?

அப்படித்தான் அவனுக்கும் இருந்தது.
அவனுடைய அழகு, புகழ், ரசிகர்கள் என யார் அவனை விட்டுச் சென்றிருந்தாலும், அவனுக்கென இருக்கும் உண்மையான ஒரு உறவு தன் மனைவி மட்டுமே என எண்ணிப் பெருமிதம் கொண்டவன், அவளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தான்.

நேரமோ பல யுகங்கள் நகர்வதைப் போல மிக மிகத் தாமதமாக நகர்ந்து கொண்டிருந்தது.

அவள் வர இன்னும் அரை மணி நேரமே இருந்தது.

அதற்கு இன்னும் முப்பது நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமே.

அவனுக்கோ இந்த முப்பது நிமிடங்களும் கழிவேனா என அடம் பிடித்து ஸ்தம்பித்ததைப் போலத்தான் தோன்றத் தொடங்கியது.

ஒருவாறாக அரை மணி நேரத்தை நெட்டித் தள்ளியவன் தன் வீட்டின் வாயில் அருகில் கார் வந்து நின்றதைக் கண்டதும் உள்ளத்தில் எழுந்த பெரும் மகிழ்ச்சியோடு வாயிலை நோக்கி வேகமாகச் சென்றான்.

சட்டென அவனுடைய கால்கள் தயங்கி நின்றன.

இரண்டு மாதங்களின் பின்னர் தன்னவளைக் காணப்போகின்றேன். அவள் தன்னை இறுக அணைக்கக்கூடும்,

தன்னுடைய நிலையை எண்ணி நிச்சயம் வேதனைப்பட்டு கண்ணீர் சிந்தவும் கூடும்,

பிரிவின் ஏக்கத்தால் எண்ணற்ற முத்தங்களையும் பரிசளிக்கக்கூடும், இதெல்லாம் அனைவருக்கும் முன்பு நிகழ்வதில் அவனுக்கு சற்றும் பிரியம் இல்லை.

சட்டென தன்னுடைய கால்களை மீண்டும் வீட்டை நோக்கிச் செலுத்தியவன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று நின்று கொண்டான்.

ஏதோ பரீட்சை எழுதி முடித்து பரீட்சையின் பெறு பேறுகள் வருவதைப் போல அவனுடைய இதயமோ அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.

அவள் வந்ததும் தன் வலி அனைத்தையும் நீக்கி விடுவாள் என்பதில் அவனுக்கோ அபார நம்பிக்கை.

அவன் எதிர்பார்த்ததைப் போல அவனுடைய காதல் மனைவியோ அந்த அறையினுள் நுழைந்தாள்.

மெல்லத் தன் கரத்தில் இருந்த கைக் குட்டையை விரித்து அவனுடைய பாதி முகத்தை மூடிக்கொண்டான் மதுராந்தகன்.

அவளால் தாங்க முடியாது என எண்ணியவனுக்கோ உள்ளம் வலித்தது.

அனைத்து வலிகளுக்கும் இப்போது மருந்து கிடைக்கப் போகிறது என எண்ணியவனை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டன இரு கரங்கள்.

அவள் அணைத்த அடுத்த நொடியே வலிகள் யாவும் கற்பூரம் போல காற்றில் கரைந்து போய்விட இதழ்களில் புன்னகைப் படர்ந்தது அவனுக்கு.

“சாரி ஹனி… சாரி நான் எவ்வளவோ வர ட்ரை பண்ணினேன்.. பட் அந்த டைரக்டர் என்ன விடவே முடியாதுன்னு சொல்லிட்டாரு.. ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டு என்னால பக்கத்து ஊருக்குக் கூட போக முடியல… உங்களை இந்த நிலைமையில விட்டுட்டு இவ்வளவு நாள் வராம இருந்ததுக்குப் சாரிபா..” என்றவளின் கரத்தைப் பிடித்து அழுத்திக் கொடுத்தவன், அவள் வராததால் தனக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என ஆறுதல் அளிக்கும் வண்ணம் அடுத்த வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினான்.

“எனக்கு உன்ன பத்தி தெரியாதா பேபி..? இருந்தாலும் இந்த ரெண்டு மாசமும் நான் உன்ன ரொம்ப ரொம்ப அதிகமா மிஸ் பண்ணினேன்…. இழக்கக் கூடாத எல்லாத்தையும் இழந்துட்டமேன்னு நான் வருத்தப்படும்போதெல்லாம் நீ என் கூட எப்பவும் இருப்பேங்கிற ஒரே ஒரு நம்பிக்கை மட்டும்தான் என்ன இவ்வளவு சீக்கிரமா திடமா எழுந்து நடமாட வச்சிருக்கு.. நீ என் பக்கத்துல இல்லைன்னாலும் உன்னோட நினைப்பு முழுக்க என் மேல தான் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஐ மிஸ் யூ சோ மச்…” என்றவன் அளவு கடந்த காதலில் அவளை நோக்கி திரும்பி அணைக்க முற்பட சட்டென விலகி நின்றாள் அவள்.

அவளுடைய திடீர் விலகலில் புரியாது அவளைப் பார்த்தான் அவன்.
அவன் அணைக்க முயன்றதில் அவன் முகத்தை மூடியிருந்த கைக்குட்டையோ கீழே நழுவி தரையில் விழுந்து விட அவனுடைய சிதைந்த முகம் அப்பட்டமாக அவளுக்கு காட்சியளித்தது‌.

இந்த முகத்தை இந்த இரண்டு மாதங்களில் அவள் எத்தனையோ தடவை சோசியல் மீடியாக்களிலும் அவனுடைய வைத்தியர் அனுப்பி வைத்த புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறாள் தான்.

இருந்தும் அதை நேரில் பார்த்ததும் அவளுடைய முகமோ சட்டென சுளித்தது.

அளவுக்கு அதிகமாக அதுவும் மிக ஆழமாக அவனுடைய கன்னங்களும், கழுத்தும் சிதைந்து உருக்குலைந்துப் போய் இருப்பதைக் காண முடியாது தன் விழிகளைச் சட்டென மூடிக் கொண்டாள் அவள்.

அந்த ஒரு நிமிட முகச்சுளிப்பில் ஓராயிரம் எண்ணங்கள் அவனுள் தோன்றி அவனை வதைத்து விட உறைந்து போய் நின்றான் மதுராந்தகன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

8 thoughts on “தடமில்லா ஓவியம் அவன்..!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!