ஆரல் -16
ரீனா அங்கு கட்டிலில் இறந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆரோனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது.
அவனால் அதை நம்பவே முடியவில்லை.
இன்று அதிகாலை வரை தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தவள், இப்பொழுது தன்னை விட்டு போய்விட்டாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.
எதுவும் புரியாமல் அங்கு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியவன், நேராக தனது வீட்டிற்கு வந்து தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான்.
அவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கடந்து வருவது என்று தெரியவில்லை.
அவனுடைய கண்கள் கூடக் கலங்கவில்லை.
ஏதோ பித்து பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.
அவனுடைய மூளையும் தற்சமயம் வேலையை நிறுத்தி விட்டது போல இருந்தது.
வெகு நேரமாகியும் அவன் வெளியில் வரவே இல்லை.
அப்பொழுது வீட்டில் அவனுடைய அக்கா மட்டுமே இருந்தாள்.
அவனை எவ்வளவு கூப்பிட்டும் உள்ளே இருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை.
அவள் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்தான் ஷாம்.
அவனிடம் அவள் கேட்டாள்.
ஷாமோ அவனும் ரீனாவும் முதலில் சந்தித்தது முதல் இன்று நடந்தது வரை ஒன்று விடாமல் அவளிடம் கூறினான்.
அதைக்கேட்டு அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும் அவள் அவனைத் தவறாக எண்ணவில்லை.
தற்சமயம் அவனுக்கு அமைதி தேவை என்று நினைத்தவள், அவனை தொந்தரவு செய்யவில்லை.
தன்னுடைய அப்பா அம்மாவிடமும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் அவன் வரும்போது வரட்டும் என்று கூறிவிட்டாள்.
அவர்களும் அவள் சொல்வதைக் கேட்டு அவனை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.
ஒரு நாள் முழுவதும் அவன் அந்த அறைக்குள்ளையே அடைந்துக் கிடந்தான்.
மறுநாள் எப்பொழுதும் போல அவன் வெளியே வந்து அனைத்து வேலைகளையும் செய்தான்.
ஆனால், அவன் முகத்தில் சிரிப்போ அல்லது கோபமோ வருத்தமோ எதுவும் தென்படவில்லை.
ஏதோ ஒரு ஜடம் போல உலாவி கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அவனது பெற்றோர்களுக்கு வருத்தம் இருந்தாலும் அவனுடைய காதல் கதையைக் கேட்டு அவனாகத் தேறி வரட்டும் என்று விட்டுவிட்டார்கள். அவர்கள் செய்த அந்த தப்பு அவன் சிறிது மாதங்களுக்கு பிறகு அவன் தவறான வழிக்குச் செல்ல ஆரம்பித்தான்.
அவனும் ரீனா எதனால் தற்கொலை செய்து கொண்டாள் என்று எவ்வளவோ யோசித்துப் பார்த்தான்.
அவனுக்கோ எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அவள் இந்த உலகில் இல்லை என்றதையே அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
பைத்தியம் பிடித்தது போல இருந்தது அவனுக்கு.
அதனால் ரீனாவை மறக்க வேண்டும் என்பதற்காக அவன் பல வழிகளில் போராடினான்.
அப்படித்தான் அவன் போதைக்கும் பெண்கள் உடனான பழக்கத்துக்கும் அடிமையானான்.
ஆனால் இதில் என்ன விடயம் என்றால் அவனால் ரீனாவை மறக்கவே முடியவில்லை.
இப்பொழுது அவளுடைய உடல் உறுப்பு ஒரு பெண்ணுக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அந்தப் பெண் மூலமாக ரீனாவை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரோன்.
ஆனால் அவளோ இவனுடைய செய்கையினால் ஏன் தனக்கு அவளுடைய உடல் உறுப்புகளை வைத்தார்கள் என்று வருந்தி கூற ஆரோனோ முற்றிலுமாக உடைந்து அவளிடம் அனைத்தும் கூறியவன், “இங்க பாரு ரினாவோட உடல் உறுப்பு உன்கிட்ட இருக்குங்குற ஒரே காரணத்துக்காக உன்ன இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வரேன். ஆனா இதுக்கு காரணமானவன நான் சும்மா விட மாட்டேன். அவன் மட்டும் என் கைல கிடைச்சான்னா அவனுக்கு சாவு கொடூரமா கொடுப்பேன். ஏன்னா என் ரீனா என்ன விட்டு போனதுக்கு இவன் தான் காரணம்..” என்றான் ஆத்திரத்தோடு. அதைக் கேட்டு மீண்டும் அதிர்ந்தாள் யாரா.
“என்ன சார் சொல்றீங்க.. ரீனா தற்கொலை பண்ணதுக்கு இவங்க தான் காரணமா..? எனக்கு புரியல..?”
“ஆமா ஆமா.. இவனுங்க தான் காரணம் உனக்கு போட்டோஸ் வந்த நம்பரை டிரேஸ் பண்ணேன் அது உன் காலேஜ் பிரின்ஸ்பல் சிவப்பிரகாசத்தோடது அவன் தான் உனக்கு போட்டோஸ் வீடியோஸ் அனுப்பி இருக்கான். அதனால அவனை தூக்கி விசாரிக்கும் போது அவனோட லேப்டாப்ல இதே மாதிரி நிறைய பொண்ணுங்களோட வீடியோஸ் போட்டோஸ் இருந்துச்சு இத இவங்க ரொம்ப வருஷமா பண்றாங்க.. அதுல மத்த பொண்ணுங்களோட வீடியோ கூட என் ரீனா..” என்று சொல்ல முடியாமல் திணறியவன் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.
“என் ரீனாவோட வீடியோவும் இருந்துச்சு.. அப்பதான் எனக்கு தெரிஞ்சது என்னை விட்டு அவள் போவதற்கு முக்கிய காரணமே இவனுங்க தான்.. உன்ன பிளாக்மெயில் பண்ண மாதிரியே.. அவளையும் பிளாக்மெயில் பண்ணி இருக்காங்க அவ ரொம்ப சென்சிடிவ்.. அதான் யார்கிட்டயும் சொல்லாம தற்கொலைப் பண்ணி செத்துப் போயிட்டா.. இதெல்லாம் எனக்கு இப்பதான் தெரிஞ்சது.. என் ரத்தம் கொதிக்குது.. அதான் அவன அந்த இடத்துலயே கொன்னுட்டேன். இன்னும் இதுக்கு முக்கிய புள்ளியான ஒருத்தன் இருக்கானே.. அவனையும் கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்..அப்பதான் என் ரீனாவோட ஆத்மா சாந்தி அடையும்..”
ஆம் ரீனாவின் பிறந்தநாள் முடிந்த ஒரு மாதத்தில் அவளுடைய மொபைலுக்கு யாராவிற்கு வந்தது போல போட்டோஸ் வீடியோவும் வந்தது. அதைப் பார்த்ததால் அதிர்ந்தாள்.
இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த போட்டோஸ் வீடியோஸ் வந்த சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் சொன்ன செய்தியைக் கேட்டு அவள் உடல் கூசியது.
“இங்க பாரு இப்போ உனக்கு அனுப்புன போட்டோஸ் வீடியோ உன்னோட போட்டோவ வச்சு மார்பின் பண்ணினது தான்.
நீ ஒரே ஒரு நாள் மட்டும் நாங்க சொல்றபடி கேட்டு நடந்தா இந்த போட்டோஸ் வீடியோஸ் வெளிய போகாது.
அப்படி நாங்க சொல்றதைக் கேட்காம ஸ்மார்ட்டா மூவ் பண்ணலாம்னு நினைச்சேன்னா.. ஒரு சேனல் விடாமல் எல்லா சேனல்லையும் உன்னோட படம்தான் லைவ்வா ஓடும்..” என்று மிரட்டினார்கள்.
அவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. தன்னுடைய போனில் இருந்த அந்த போட்டோவையும் வீடியோவையும் அழித்துவிட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
தான் உயிரோடு இருந்தால் தானே தன்னை இப்படி மிரட்டுவார்கள் என்று நினைத்தவள், உயிரை விட துணிந்தாள்.
ஆனால் அவள் கண் முன்னால் ஆரோன் தோன்றினான்.
“ என்ன மன்னிச்சிடு ஆரோன்.. எனக்கு வேற வழி தெரியல..” என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பை வேண்டியவள் அன்றைய இரவு முழுவதும் அவனுடன் மிக சந்தோஷமாக நேரத்தைக் கழித்தாள்.
அதிகாலையில் அவன் அவளை விட்டுச் சென்றதும் அவள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய இடது கையில் மணிக்கட்டில் வெட்டியவள், ஆரோனின் பெயரை முனுமுனுத்தவாறே கட்டிலில் சரிந்தாள்.
மறுநாள் காலையில் அவளது அன்னை அவளை எழுப்ப வரும் பொழுது கதவு பூட்டப்பட்டிருந்தது.
பின்பு தனது கணவரை அழைத்து கதவை உடைத்து பார்க்க அவர்களது புதல்வியோ இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள்.
“இங்க பாரு நான் உன்கிட்ட நடந்து கிட்டது தப்புதான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா என் கண்ணுக்கு நீ யாராவா தெரியல.. ரீனாவாதான் தெரியிற அதனால தான் என்னையே அறியாமை உன்கிட்ட நெருங்கிட்டேன். என்னை மன்னிச்சிரு.. இதுக்கு அப்புறம் என் நிழல் கூட உன் மேல படாது. நீ என்னை நம்புனா இங்க இருக்கலாம்..”
அதைக் கேட்ட யாராவோ,
“சாரி என்ன மன்னிச்சிடுங்க சார்.. நீங்க என்கிட்ட அப்படி நடந்துக்கவும் ஒரு பொண்ணா என்னால அதை ஏற்க முடியல.. அதனால தான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க நான் உங்களை நம்புறேன் சார்..” என்றாள் யாரா.
அதன் பிறகு ஆரோன் தன்னுடைய அறைக்குச் சென்றுப் படுத்து விட்டான்.
இங்கு யாரா தான் அவன் சொன்ன அனைத்து விடயங்களையும் கேட்ட பிறகு அவளுக்கு ரீனாவை நினைத்து கவலையாக இருந்தது.
தன்னுடைய அருகில் இருந்த கண்ணாடியின் முன்னே சென்றவள், அவளுடைய கண்களையும் மார்பையும் வருடினாள்.
அவளுடைய இதயமோ வேகமாகத் துடித்தது.
கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
யாராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. அப்பொழுது அந்த கண்ணாடியில் யாராவின் உருவத்திற்கு பதிலாக ரீனாவின் உருவம் தெரிந்தது.
அதை பார்த்ததும் சட்டென அதிர்ந்தாள் யாரா.
ஒரு அடி பின்னே எடுத்து வைக்க முயற்சிக்க அப்பொழுது அவளை தடுத்தது அந்த இனிமையான குரல். “யாரா..” என்று அழைத்தாள் ரீனா.
“யாரா பயப்படாத நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன். எனக்காக நீ ஒரே ஒரு உதவி மட்டும் செய்வியா..?” என்று கேட்டாள் ரீனா.
இவளோ கண்ணாடியில் ரீனாவின் உருவத்தைப் பார்த்து பயந்து இருந்தவள், அவள் பேச ஆரம்பிக்கவும் சற்று நடுக்கத்துடனே “எ.. என்ன..” என்று கேட்டாள்.
“ஆரோன் ரொம்ப நல்லவன். நான் அவன் கூட இல்லாம போனதுல இருந்து அவன் என்ன மறக்க முடியாம ரொம்ப தவிக்கிறான். நீ எனக்காக என் ஆரோனை கல்யாணம் பண்ணிக்கிறியா..?” என்று அவள் என்ன நினைப்பாள் என்று கூட யோசிக்காமல் பட்டென என்று கேட்டு விட்டாள்.
யாராவோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
“நீ நீங்க என்ன பேசுறீங்க.. நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்கிறது..” என்று கேட்டாள் யாரா.
அதற்கு ரீனாவோ,
“உன்னால மட்டும் தான் முடியும். ஏன்னா அவரே உன்னோட உருவத்துல என்ன பார்க்குறாரு.. அதனால உன்னால அவர்கிட்ட ஈசியா நெருங்க முடியும். உன்னை ஏத்துக்குவாரு ப்ளீஸ் யாரா.. அவரோட வாழ்க்கை இப்படியே வீணா போயிருமோன்னு ரொம்ப பயமா இருக்கு..”
யாரா யோசனையாக இருக்க, “எப்படியோ நீ ஒருத்தர கல்யாணம் பண்ணத்தான போர அதுக்கு நீ என் ஆரோனையே கல்யாணம் பண்ணிக்கோ ப்ளீஸ் யாரா.. முடியாதுன்னு மட்டும் சொல்லாத..” என்றாள்.
யாராவோ சற்று யோசித்தவள், ரீனாவிடம் “நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன். ஆனா என்னோட அவசர புத்தியால நான் அவரை ரொம்ப திட்டிட்டேன். இதுக்கு அப்புறம் அவரு என்னை ஏத்துக்குவாரா.. இல்லையானு தெரியலையே..”
“இங்க பாரு நீ நெனச்சா கண்டிப்பா அவனை மாற்ற முடியும்.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. முயற்சி பண்ணி பாரு.. நான் உனக்கு எப்பவும் துணையா இருப்பேன்..” என்று சொல்லிய ரீனா காற்றாக மறைந்து போனாள்.
கண்ணாடியில் ரீனாவின் உருவம் மறைந்து யாராவின் உருவம் தெரிய சட்டென நாலா புறமும் தேடினாள் யாரா.
எங்கும் அவள் இல்லை என்று அந்த நிமிடம் அவளுக்குத் தோன்றியது.
இப்பொழுது நடந்தது உண்மையா..? அல்லது தனது மனப்பிரம்மையா..? என்று யோசித்தாள் யாரா.
ஆனால் ரீனா அவளிடம் கேட்டது அனைத்தும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
“அவர நான் கல்யாணம் பண்ணிக்கனுமா.. நடக்குமா இது..?” என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் யாரா.
ஆரல் – 17
“டேய் **** அந்த பொண்ண கண்டு பிடிச்சு தூக்கிட்டு வர சொல்லி ரெண்டு மூணு நாளாவது இன்னும் என்னத்தடா பு***கிட்டு இருக்கீங்க..” என்று போனில் அவனுடைய ஆட்களை திட்டிக் கொண்டிருந்தான் அந்த மர்ம மனிதனான லால் திவாரி.
அவன் தான் இந்த மொத்த கேங்குக்கும் லீடர். மும்பையில் மிகப்பெரிய தாதா என்று கூட சொல்லலாம்.
அவனுடைய வலையில் சிக்கிய எந்த பெண்ணும் தப்பிக்க முடியாது.
ஒன்று அவன் கையில் மாட்டப்படுவார்கள் இல்லையென்றால் ரீனாவை போல உயிரை விடுவார்கள்.
அப்படி இருக்கும்போது யாராவை மட்டும் அவன் விட்டு விடுவானா என்ன..?
“இங்க பாருங்கடா அந்த பொண்ணு எனக்கு வேணும். உங்களுக்கு ஆள் பத்தலைன்னா இன்னும் கூட ஆட்கள சேர்த்துக்கோங்க.. பட், அந்த பொண்ணு மிஸ் ஆகவே கூடாது..” என்றான் திவாரி.
“சாரி பாஸ்.. நாங்க தேடிக்கிட்டு தான் இருக்கோம்.. இப்பதான் அந்த பொண்ணு எங்க இருக்கான்னு எங்களுக்குத் தெரிஞ்சது.. நீங்க கவலைப்படாதீங்க பாஸ் அந்த பொண்ணோட நாங்க வரோம்..” என்று போனை வைத்தான் அந்த அடியாள்.
யாராவோ ஆரோனுடைய வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகின.
அவள் கல்லூரிக்குச் செல்லவில்லை.
அவளுடைய தோழி மாயாவும், சந்தியாவும் அவளுக்கு போன் செய்து விசாரிக்க அவளோ தான் ஒரு வாரம் கல்லூரிக்கு வரமாட்டேன் என்று சொல்லி இருந்தாள்.
அவர்கள் எதற்கு என்று கேட்க, தனக்கு உடம்பு முடியவில்லை என்று அவள் சொல்ல, அவர்களோ தாங்கள் பார்க்க வருகிறோம் என்று கூற அவளோ அதற்கும் மறுத்து கூறினாள்.
ஆரோனோ அன்று அவளிடம் பேசியவன், தன்னுடைய அறைக்குச் சென்று படுத்தவன், அன்றைய நாள் முழுவதும் உறக்கத்தின் வசத்தில் இருந்தான்.
பின்பு மறுநாள் எழுந்து வர யாராவோ அவனுடைய டிரஸ்ஸை அணிந்து கொண்டு சகஜமாக அவனுடைய வீட்டில் வலம் வந்தாள்.
இவனோ கண்களை கசக்கிக் கொண்டு அவள் அருகே வர யாராவோ கையில் ஒரு காபி கப்போடு அவன் முன்னே வந்தவள்,
“இந்தாங்க சார். காபி குடிங்க..” என்று சிரித்த முகமாக அவனுக்கு காபியைக் கொடுத்தாள்.
அவனோ அவளை ஏற இறங்க பார்த்தவன், அவள் கையில் உள்ள காபியை வாங்கிவிட்டு சோபாவில் அமர்ந்து ஒரு சிப் பருகியவன் அவளிடம்,
“என்னோட டிரஸ்ஸை ஏன்போட்டு இருக்க..?”
“ஆமா என்ன..?”
“என்ன கேட்காம எதுக்கு என் டிரஸ் எடுத்த.. என் டிரஸ் போடறதுக்கு உனக்கு யார் உரிமை கொடுத்தது..” என்று கேட்டான்.
அவளோ ஒரு சிறுப் புன்னகையை உதிர்த்தவாறே,
“ஏன் சார் மாத்துறதுக்கு வேற ட்ரெஸ் இல்லையேன்னு உங்க டிரஸ் எடுத்து போட்டுக்கிட்டேன். இதுக்கு ஏன் சார் இப்படி பேசுறீங்க.. இப்ப என்ன உங்களுக்கு உங்க டிரஸ் வேணும் அவ்வளவு தானே இருங்க கழட்டி தரேன்..” என்றவள் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்ட போக அவனுக்கோ அவளுடைய செயலில் குடித்துக் கொண்டிருந்த காபி புறை ஏறிவிட்டது.
“லொக் லொக்..” என இருமியவாறே “என்னடி பண்ற.. இடியட் இப்படித்தான் என் முன்னாடி கழட்டுவியா..? நேத்து ஏதோ நான் உன்கிட்ட தப்பா நடந்துகிட்ட மாதிரி கொதிச்ச இப்போ நீ என்ன பண்ற..” என்று கேட்க அவளோ எதுவுமே தெரியாதது போல,
“அச்சச்சோ ஆமா இல்ல மறந்தே போயிட்டேன் பாருங்க.. நீங்க என்ன திட்டுனதுல நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல.. என் டிரஸ் காஞ்சதும் உங்க டிரஸ் கழட்டி தந்துடுறேன் சார்..” என்றவள் வேகமாக கிச்சனுக்குள் சென்று அவன் கண்பார்வையில் இருந்து மறைந்தவாறே அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ தன் தலையை உலுக்கியவாறே எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான்.
இங்கு கிச்சனுக்குள் ஒழிந்து பார்த்துக் கொண்டிருந்த யாரோவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.
“அயோ யாரா என்னடி பண்ணி வச்சிருக்க..அவரு என்ன நினைச்சிருப்பாரோ எல்லாம் இந்த ரீனாவ சொல்லணும்.. சும்மா இருந்த என்ன அவர் கூட கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குறாங்க..” என்று பேசிக் கொண்டிருக்க ரீனாவோ அவள் கண் முன்னால் தோன்றினாள்.
“என்ன யாரா என்ன புகழ்ந்து கிட்டு இருக்க போல இருக்கு..” என்று கேட்க, அவளைப் பார்த்து சற்று திடுக்கிட்டாலும் யாரா பயப்படவில்லை.
தைரியமாகவே அவளிடம் பேசினாள்.
“ வாங்க ரீனா வாங்க எனக்கு அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு.. இப்ப கூட பாருங்க அவரோட டிரஸ் போட்டதுக்கு அந்த குதி குதிக்கிறார்.. இதுல எப்படி அவர் என்ன கல்யாணம் பண்ணிக்குவாரு.. இதெல்லாம் நடக்கிற காரியமா..” என்று கேட்டாள்
யாரா.
அதற்கு ரீனாவோ, “இங்க பாரு கண்டிப்பா நடக்கும் நான் தான் இருக்கேன் இல்ல.. நான் பாத்துக்குறேன் நீ அவர்கிட்ட எப்படி நெருங்குறதுன்னு மட்டும் பாரு.. ஒரு தடவை நீ அவர் மனசுக்குள்ள புகுந்துட்டேனா அதுக்கப்புறம் அவரே நினைச்சாலும் அவர் உன்னை விடமாட்டார்..”
“சரி என்னமோ சொல்றீங்க பார்க்கலாம்..”எனக் கூற ரீனா மறைந்து போனாள்.
ஆரோனோ தன்னுடைய அறைக்குள் சென்றவன் குளித்து முடித்து ரெடியாகி வெளியே வந்தவன், தன்னுடைய போனை எடுத்து ஷாமிற்க்கு அழைப்பெடுத்தான்.
மறுமுனையில் அழைப்பை ஏற்ற ஷாமோ அவனை கழுவி கழுவி ஊத்தினான்.
“டேய் ஒரு மனுஷன் உனக்கு எத்தனை தடவைடா ஃபோன் பண்றது.. இப்படியாடா ஒரு நாள் கழிச்சு அதுக்கப்புறம் போனை எடுப்ப.. மனுசனாடா நீ..?” என்று திட்டிக் கொண்டிருந்தான் ஷாம்.
தன்னுடைய காதில் இருந்து போனை எடுத்தவன்,
இடது கையால் காதை குடைந்து விட்டு “டேய் டேய் இப்ப எதுக்கு இவ்வளவு கத்துற.. வீட்டுக்கு வா ஒரு இடத்துக்கு போகனும்..” என்று சொன்னான் ஆரோன்.
“வச்சித் தொலை இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்..” என்று போனை வைத்த ஷாமோ அரை மணி நேரத்திற்குள் ஆரோனுடைய வீட்டிற்கு வந்தான்.
ஷாம் வந்ததும் ஆரோன் யாராவிடம் “இங்க பாரு யாரா நான் ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்.. வர கொஞ்சம் லேட் ஆகும் நீ வெளியே எங்கேயும் போகாத.. கதவை நல்லா லாக் பண்ணிக்கோ.. நான் செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு போறேன்.. யாரு வந்தாலும் கதவைத் திறக்காத.. அப்புறம் உன்னோட போன்ல என்னோட நம்பர் சேவ் பண்ணி இருக்கேன். ஏதாவது அவசரம்னா எனக்கு போன் பண்ணு..” என்றவன் ஷாமை கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
இவளுக்கோ அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது பயமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவனிடம் “சரி..” என்று சொல்லிவிட்டாள்.
ஆரோனோ சிவப்பிரகாசத்தின் மொபைலுக்கு வந்த அனைத்து எண்களையும் ஆராய்ந்தவன் அதில் ஒரு பத்து எண்கள் மட்டும் அடிக்கடி கால் வந்திருக்க அதை மட்டும் குறித்துக் கொண்டவன், அவர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
இரவு ஒரு பத்து மணி இருக்கும் ஆரோனின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து நான்கு தடியர்கள் இறங்கினார்கள்.
நேராக கேட்டை திறந்து உள்ளே வர வாட்ச்மேன் அவர்களைத் தடுத்தார்.
அந்த நான்கு தடியர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த கட்டையால் வாட்ச்மேனின் பின்னந்தலையில் ஒரு அடி அடிக்க அவரோ சுருண்டு விழுந்தார்.
பின்னர் அந்த நான்கு பேரும் உள்ளே சென்று கதவைத் தட்ட இவளோ ஆரோன் தான் வந்து விட்டான் என்று நினைத்து கதவைத் திறக்க போக, அந்த கதவோ மீண்டும் பலமாகத் தட்டப்பட்டது.
அதில் சட்டென சுதாரித்தவள் கதவைத் திறக்காமல் பின்வாங்கினாள்.
உடனே தன்னுடைய அறைக்குச் சென்று மொபைலை எடுத்து வந்தவள், ஆரோனிற்கு அழைப்பு எடுத்தாள்.
அவனும் அந்த அழைப்பு முடியும் தருவாயில் எடுத்து காதில் வைக்க அவளோ “சார் நீங்க தான் வந்து இருக்கீங்களா..?” என்று கேட்க, அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. “என்ன பேசுற எனக்கு புரியல..” என்றான்.
“ இல்ல சார் கதவு ரொம்ப நேரமா தட்டிக்கிட்டு இருக்கிற சத்தம் கேக்குது.. அதான் நீங்களான்னு கன்ஃபார்ம் பண்ண கேட்டேன்..” அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன.
“ஏய் நான் இன்னும் வரல.. நான் வெளிய தான் இருக்கேன்.. கதவைத் திறக்காத..” என்றான் ஆரோன்.
அவன் அவ்வாறு கூறவும் அவளுக்கோ பயம் பிடித்துக் கொண்டது.
“என்ன சார் சொல்றீங்க.. நீங்க இல்லையா அப்போ யாரு கதவை தட்டுறது ரொம்ப வேகமாக தட்டறாங்க சார்.. எனக்கு பயமா இருக்கு..” என்றான்.
“ப்ச் இங்க பாரு பயப்படாதே நீ உன்னோட ரூம்ல போய் இரு.. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன். கதவை மட்டும் திறந்திறாதே..” என்றான் ஆரோன்.
அவளோ “ஓகே சார் நான் கதவை திறக்கல.. ஆனா போன் மட்டும் வச்சிடாதீங்க.. என்கிட்ட பேசிக்கிட்டே இருங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்றாள்.
“சரி நான் போன கட் பண்ணல.. நீ நேரா உன்னோட ரூமுக்கு போ.. நான் இதோ கிளம்பிட்டேன்..” என்றவன் அவளுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே வேக வேகமாக புறப்பட்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றான்.
Super sis