1. இது ஒருநாள் உறவா தலைவா..?

4.5
(18)
இது ஒரு நாள் உறவா தலைவா….?
-ஸ்ரீ வினிதா-

உறவு – 01

இந்தியாவின் மேற்கு மாநிலமான சுற்றுலாவிற்கு பெயர் போன கோவா எனும் மாநிலத்தே உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்றில் முதல் நாள் வேலையில் இணைவதற்காக சென்று கொண்டிருந்தாள் அவள்.

அவள் தன்ஷிகா….!!
அவளுடைய பால் வண்ண வதனத்திலே வெளிப்பட்டது சிறு கீற்றுப் புன்னகை. எத்தனையோ இடர்களின் மத்தியில் அவள் செல்ல நினைத்த வேலைக்கே வந்தடைந்ததன் மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது.
இந்த வேலை அவளின் மூன்று வருட போராட்டத்தின் பயன் அல்லவா?.
அதனால் ஆர்வமும் கொஞ்சம் பதற்றமும் அந்த பிரமாண்டமான வளாகத்தினுள் நுழையும் போது அவளின் முகத்தில் ஓடி மறைந்தன.
ஒரு சில நிமிடங்களில் மின்னுயர்த்தியின் அருகில் வந்தவள் எட்டாம் தளத்திற்குச் செல்லத் தயாராகினாள்.
அந்த மின்னுயர்த்தி முற்று முழுதாக கண்ணாடியால் செய்யப்பட்ட அழகிய குடுவை போலக் காணப்பட்டது.
அந்தக் கண்ணாடி குடுவையில் அடைபட்டிருக்கும் குவளை மலர் போலவே அவளது வாழ்க்கையும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பேரழகாகவே தெரியும். ஆனால் உள்ளுக்குள் தீயினால் கருகிய மலராய் வாடிவதங்கி துவண்டிருப்பது அவள் மாத்திரம் அறிந்த ரகசியமாகிப் போயிற்று.
மின்னுயர்த்தியின் உள்ளே நின்றவள் அக்கட்டடத்தின் பிரமாண்டத்தை கண்களால் அளவிட்டபடியே சென்றாள்.
தன்னுடைய படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணிடம் “குட் மார்னிங் ஐ ஆம் மிஸஸ் வருண் தன்ஷிகா.” என்று தனது விபரத்தை உரைத்தாள்.
அந்த வரவேற்பு மங்கையோ தனது மேசையில் இருந்த ஃபோனின் இலக்கங்களை சுழற்றிக் காதில் வைத்தவள்; முன்னால் “ட” வடிவில் போடப்பட்டிருந்த சோபா நாற்காலியைத் தன் கண்களால் சுட்டிக் காட்டினாள்.
“மிஸஸ் வருண் தன்ஷிகா, எம்.டி இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துருவார்; ப்ளீஸ் வெயிட் ஹியர்.”
அந்த வரவேற்பு பெண்ணைப் பார்த்து சரி எனும் விதமாக தலை அசைத்தவள் அந்த வரவேற்பறையை தன் விழிகளால் அலசினாள்.
அந்த வரவேற்பறையின் அழகு அவளை கவர்ந்திருந்தது என்றே சொல்லலாம். சுவரில் சமமான இடைவெளியில் மூன்று ஓவியங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றின் கீழே ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த ஆறு கறுப்பு நிற சோபா நாற்காலிகள், அவற்றில் வலதுபுறமாக அவளைப்போல இன்னும் நான்கு பெண்கள் காத்திருந்தனர்.
அங்கே இருந்த கண்ணாடி மேசையில் நான்கு மஞ்சள் வண்ண பூக்களை தாங்கிய ஒரு சாடியும் சில நாளேடுகளும் இருந்தன.
ஒருபகுதிச்சுவர் முழுமையாக கண்ணாடியால் அமைக்கப்பட்டு வெளிப்புற அழகை காட்டி நின்றன.
நாற்காலியில் வந்து பவ்வியமாக இருந்தவளின் சிந்தையை அப் பூச்சாடி கவர்ந்தது போலும்.
‘என் வாழ்க்கையைப் போலத்தான் இதுவும் எழிலுற செய்யப்பட்டு பின் கூரிய வாள் அதனை இரு கூராக்கியதா….!? இல்லை நான் தனியாக வாழப் படைக்கப்பட்டவள் போல அதையும் பாதியாக மாத்திரமே படைத்து விட்டார்களா.?
அதன் சரி பாதி மட்டும் உள்ளதே….! என் உருவம் முழுதாய் தெரிந்தாலும் நானும் கண்ணாளனை காவு கொடுத்த பாதி மனிதை அல்லவா…? இந்த அபலையின் வாழ்வு தொடங்க முன்னரே மண்ணில் போட்டு புதைக்கப்பட்டு விட்டதே.’ என பெருமூச்சோடு எண்ணிக் கொண்டவள் பாதியாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த பூச்சாடியில் இருந்து தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
மலர்வாய் இருந்த அவளுடைய வதனம் அவளுடைய எண்ணங்களின் விளைவால் சடுதியில் வாடிப் போனது.
அடுத்த நொடி அந்த அலுவலகத்தில் துரித கதியில் ஏற்பட்ட மாற்றங்கள் அவளுடைய வாடிய முகத்தில் சற்றே ஒரு விதமான பதற்றத்தைக் கொண்டு வந்தது.
“எம்டி வந்துட்டார்.” என்ற கிசுகிசுப்பு கேட்ட அடுத்த நொடி அந்த அழகிய அலுவலகமே மயான அமைதியை சடுதியில் சூடிக் கொண்டது.
ஒருவனின் வருகை அங்கிருந்த அத்தனை ஊழியர்களின் முக பாவத்தையும் மாற்றக் கூடுமா….?
ஆம் என்பதை அக்கணம் உணர்ந்து கொண்டாள் அந்த மாது.
அவள் உணர்ந்த விடயத்தை மெய்ப்பிக்கும் வகையில் அந்த அலுவலக ஊழியர்கள் யாவரும் பரபரப்பாக இயங்க, அவள் முன்னே தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வரவேற்பு பெண்ணோ அந்த மேஜையில் சற்றே படிந்திருந்த தூசியை சட்டென தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து குப்பைத் தொட்டியில் அதைப் போட்டு விட்டு தன்னுடைய இருக்கையில் நேராக அமர்ந்தாள்.
இவ்வாறாக அங்கிருந்த அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவன் கறுப்பு நிற பி.எம்.டபிள்யு காரில் வர, அந்த காரின் பின்னால் வந்த இரு சிவப்பு வண்ண கார்களும் தம் வேகத்தை குறைத்து நிறுத்திக்கொண்டன.
பின்னால் வந்த காரிலிருந்து இறங்கி ஓடிவந்த அவனது பி.ஏ தனசேகரனோ கார்க் கதவை திறந்து சற்று படபடப்புடன் கார் கதவின் அருகே நின்றான். சற்று கால தாமதம் ஆனால் கூட தன் எம்டி தன்னை பார்வையால் எரித்து விடுவாரே என்ற அச்சம் அவனுக்கு.
இவ்வாறு அனைவரையும் கத்தி முனையில் நிற்க வைத்து விட்டு தனது இடது காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி கம்பீரமாக எழுந்து நின்றான் அவன்.
அவன் விதார்த் ஆர்யன்….!!
அந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி…!!
தன் காதில் உள்ள ப்ளுடூத்தை ஆன் செய்து “எஸ், ஐ அம் நாட் அஃபரைட் எனி திங்” என்றவன் அடுத்த வினாடி நேர் கொண்ட பார்வையாய் நடக்க, அவனுடைய இரு பாதங்களும் சம இடைவெளியில் துரித கதியில் இயங்கத் தொடங்கின.
இரண்டு கைகளின் பெருவிரல், மற்றும் நடுவிரலால் அவனது கோர்ட் சூட்டின் நடு தெறியோட்டை இணைத்து விட, தான் எண்ணியது நடந்தது போல கோர்ட் அவன் உடலை மேலும் இறுகத் தழுவிக் கொண்டது.
அந்தக் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட மின்னுயர்த்தியோ விதார்த் ஆர்யனை மேலே கொண்டு வந்தது. அலுவலகத்தின் வாயிற் கதவை இரு மெய்க்காப்பாளர்கள் வலது,இடதாக இழுக்க வாயிற் கதவு வாய் பிளந்து விதார்த்திற்கு வழிவிட்டது.
எம்டி வருவதை பார்த்த வரவேற்பு மாது சரிதாவோ ‘கறுப்புன்னாலும் நம்ம பாஸ் டார்க் சாக்லேட்தான்’ என தன் மனதினுள் நினைத்துக்கொண்டே “இன்டர்வியூக்கு வந்தவங்க கெட் ரெடி எம்டி வந்துட்டார்” எனக் கூறி அலர்ட் செய்தாள்.
யார் அவனைப் பார்த்தாலும் மறு முறை பார்க்கச் சொல்லும் தோற்றம் கொண்டவன் விதார்த். ஓரமாக வகிடு பிரித்த தலைக்கேசம் என்றாலும் ‘சொன்னால் கேட்க மாட்டேன்’ என முடிகள் எல்லாம் அவனைப்போல் நிமிர்ந்தே நிற்கும்.
மெல்லிய மீசை தாடியோடு வசீகரிக்கும் வதனம். சற்றுக் கறுப்பு நிறம் என்றாலும் அவன் கருவிழிகள் அகன்ற தாடைகள் அவனின் அகன்ற தோள்களுக்கு இணையாய் தோன்றுவது அவனை பேரழகன் என்றே சொல்லும்.
அவனுடைய உடல் அசைவுகள் ஒவ்வொன்றிலும் கம்பீரமே மிளர்ந்திருந்தது. கம்பர் தற்காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அவனுடைய கம்பீரத்தை கவி வடித்திருப்பார்.
உடல் தோற்றம் மட்டுமல்ல அவனது மூளையும் அதிவிஷேடமானதே….! அவனின் தொழில் அப்படிப்பட்டது.
விதார்த் தன் ஒற்றைப் பார்வையாலேயே எதிரில் நிற்பவரை ஆராய்ந்து விடுவான்; தனது தொழிலிற்காக வளர்த்துக் கொண்ட திறமைகளில் இதுவும் அடங்கும்.
புத்திஜீவிகளை இனங்கண்டு அவர்களை தன்னோடு இணைப்பதில் வல்லவன் அவன். அதனால்தான் அவனின் கம்பனி மேலாண்மை ஆலோசனையில் கொடி கட்டிப் பறக்கிறது. அதற்கான செயலின் ஒரு பகுதிதான் தற்போது நடைபெறவுள்ள இன்டர்வியூ ‘மல்டி லான்ங்குவேஜ்’ தெரிந்த ஒரு பெண்ணை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அந்த நேர்முகத் தேர்விற்காகவே தன்ஷிகாவும் அங்கு வந்திருந்தாள்.
விதார்த்தோ தன் நேர் கொண்ட பார்வையுடன் வரவேற்பறையைத் தாண்டிச் செல்ல, தன் முன்னே நடந்து செல்பவனுக்கு மரியாதை செலுத்தும் முகமாக எழுந்து நின்றவள்,
அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
அவனைப் பார்த்த கணம் அவளுடைய உடலோ சாபம் பெற்ற அகலிகை சிலை போல அசைவற்று நின்று போனது.
நம்ப முடியாத அதிர்ச்சியில் தன் கரு விழிகளை இறுக மூடி மூடித் திறந்தாள் அந்தப் பேதை.
தன் விழிகளே தன்னை ஏமாற்றக் கூடுமோ என்ற ஐயம் அவளை சடுதியில் ஆட் கொண்டது.
வியர்த்துப் போன தன் மெல்லிய ஒற்றைக் கரத்தை சிரமப்பட்டு உயர்த்தி தன் விழிகளை கசக்கி விட்டு தன் எதிரே கம்பீரத்தின் உருவமாய் நின்ற ஆடவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவ்வளவுதான். அவ்வளவே தான் அவளுடைய மொத்த உடல் பாகங்களும் தம் கட்டுப்பாட்டை இழந்தன. உடலோ வெடவடக்கத் தொடங்கியது.
உள்ளம் பதை பதைக்க….!!
அங்கம் விதிர் விதிர்க்க….!!
இதயம் துடிதுடிக்க….!!
தேகம் படபடக்க….!!
அசைவற்று தன்னிலை மறந்திருந்தாள் அந்த அறியாப் பேதை.
வரவேற்பறையினுள் நுழைந்து அடுத்த பத்து நொடிகளில் அவளைக் கடந்து விட்டிருந்தான் விதார்த். ஆனால் அவனை நேரில் கண்ட பெண்ணவளுக்குத்தான் நேரம் அந்த நொடியிலேயே ஸ்தம்பித்து நின்று போனது. உலகமே தன்னோடு அசைவற்று நின்று போனதாக எண்ணிக் கொண்டாள் அவள்.
அவளால் தன்னை சுதாரித்துக் கொண்டு சூழ்நிலையை வெல்ல முடியவில்லை. உணர்வற்றே நின்றாள்.
இதயம் மட்டும் சமநிலை இன்றி துடிக்க இடம், பொருள் அனைத்தையும் முழுதாக மறந்து நின்றிருந்தாள் அக் காரிகை.
“தன்ஷிகா டேக் யுவர் சீட் ப்ளீஸ்” என்றாள் சரிதா.
“சிட் டவுன் தன்ஷிகா…”
“ஹேய் உங்களுக்கு என்னாச்சு..? ஏன் இப்படியே நிற்கிறீங்க..? ப்ளீஸ் சிட்.” என சரிதா இரண்டு மூன்று முறை கூறியும் தன்ஷிகா ஏனோ அசைவின்றியே நின்றாள். அவள் மூளைதான் சில விநாடிகளுக்கு முன்பே செயலற்றுப் போயிருந்ததுவே.
நிலைமையை சற்று உணர்ந்த அருகில் இருந்த பெண்ணோ எழுந்து “என்னாச்சுங்க.? வாட் ஹப்பன்ட்….?” என அவளது இடது கையால் தன்ஷிகாவின் வலது தோள் பட்டையைப் பிடித்து உலுப்பியவாறு கேட்டு சாதாரண நிலைக்கு அழைத்து வர முயற்சி செய்தாள்.
அதில் சுயம் அடைந்து தொப்பென தன் இருக்கையில் அமர்ந்தவளுக்கோ இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
அவளுக்கு நடந்தது அவ்வளவு எளிதான விடயமா….? இல்லையே அவளது உயிரையே வேரோடு பிடுங்கி எறிந்தது போன்றல்லவா அன்று அவள் பட்ட துயர்….! அதை இன்றும் உணர்ந்தாற் போல துடிதுடித்துப் போனாள் பாவை.
அதே சமயம் விதார்த்தின் மேற்பார்வையில் மேனேஜர் முத்துராமன் ஒவ்வொரு பெண்களையும் இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார்.
விதார்த்தின் கம்பனியில் கொஞ்சம் வயது முதிர்ந்தவர் அவர்தான். எம்டியின் அதிகபட்ச நம்பிக்கை பெற்றவரும் முத்துராமன் என்பது மிகையாகாது. அனைத்தையும் பார்வையிட்டு முடிவின் போது மட்டும் ஒரு சில வினாக்களை தொடுத்து அனைவரையும் நிராகரித்துக் கொண்டிருந்தான் விதார்த்.
மீண்டும் தன்ஷிகா அழைக்கப்பட்டாள்.
தன்ஷிகாதான் இன்னும் தன்னிலைக்கு வரவில்லையே….! அவளுக்கு அழைத்தது காதில் விழவேயில்லை; அவள் மனம் சதுரங்க விளையாட்டுப்போல் கட்டம் கட்டமாக தாவிக் கொண்டே இருந்தது.
“தன்ஷிகா…? தன்ஷிகா…..” என சரிதா சற்று அழுத்தமாக அழைத்தாள்.
சரிதா எத்தனை முறை அழைத்தாலும் தன்ஷிகாவின் முகத்திலோ, உடலிலோ எவ்வித மாற்றமும் இல்லை. இதனை அவதானித்த சரிதாவோ “ஆ..ஆஆ எல்லாம் என் நேரம்” என தன்னை நொந்து கொண்டவள். “ஹலோவ் தன்ஷிகா உங்களைத்தான் எம்.டி பல தடவை கூப்பிட்டுட்டார். ப்ளீஸ் கோ இன்சைட்.” என கொஞ்சம் கடுமை தெறிக்கக் கூறினாள். அவளுக்கோ எரிச்சலாக இருந்தது.
தன் சிந்தை குழம்பிச் செய்வது அறியாத சிறு குழந்தை போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு உள்ளே சென்றாள் தன்ஷிகா.
இன்டர்வியூவிற்கு வந்த ஐந்து பெண்களிலும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவள் இவள் மட்டும்தான். அதனாலோ என்னவோ தமிழ் கலாசாரம் மிளிரும் வண்ணம் புடவை உடுத்தியிருந்தாள்.
இன்னும் அவள் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதை அவள் நீண்ட கரு விழிகள் காட்டிக் கொடுத்தன.
விதார்த் அவளைப் பார்த்து எதிரே இருந்த நாற்காலியை நோக்கி கையை நீட்டி உட்காரும் படி சைகை செய்தான்.
அவள் விதார்த்தை மீண்டும் அதிர்ச்சியுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர இருக்கையில் அமரவில்லை.
“நீ…. நீங்க…. வரு…ண்…. தானே….!” என அவள் சிவந்த செவ்விதழ்கள் வார்த்தையை நடுக்கத்தோடு உதிர்த்தன.
விதார்த்தின் புருவங்கள் நெற்றிப் பொட்டை நோக்கிச் சுருங்கின.
“வாட் ஆர் யு டாக்கிங் அபௌட்….?” என தன் சினத்தை அழுத்தமான வார்த்தைகளில் கக்கினான் விதார்த் ஆர்யன்.
தன்ஷிகாவிற்கு விதார்த்தின் வார்த்தைகள் காதில் நுழையவேயில்லை. மாறாக அவள் “நீங்க…. நீ….ங்….க வருண் தானே உண்மையை சொல்லுங்க. இல்ல… எ…. எனக்கு தெ…. தெரியும் நீ…. நீங்க என்….னோட வருணேதான்.” எனக் கூற விதார்த்தின் கோபமோ எல்லையைக் கடந்தது.
“ஷட் அப்.” என தன் முன்னே இருந்த மேஜையில் ஓங்கித் தட்டியவாறு கர்ஜித்தவன் தன் அருகே இருந்த முத்துராமனைப் பார்த்து “வாட் இஸ் திஸ் அங்கிள்.?” என எரிச்சலோடு கேட்டான்.
முத்துராமனோ புரியாது விழித்தார்.
“மென்டலை எல்லாம் எதுக்கு உள்ளே அலோவ் பண்றீங்க..?” என குரல் உயர்த்தி உறுமினான் அவன்.
தன்ஷிகாவிற்கு எதுவுமே புரியவில்லை. அவன் கோபத்தில் கத்தியது கூட அவளின் மூளையால் உணர்ந்து கொள்ள இயலவில்லை. அவளின் சிந்தனை முழுக்க அவளது கடந்த கால வாழ்க்கையைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.
‘இது விதார்த் இல்லை வருண்….! என்னோட வருணே தான். அதே முகம்…. பார்பவரை ஆராய்ந்து எடுக்கும் கருவிழிகள்…. இவன் என் வருண் தான்….! என் முற்றுப்பெற்ற வாழ்க்கை இன்னும் முடியவில்லை. நான் தொலைத்த என் வாழ்க்கை இதோ என் கண் முன்னே நிற்கிறதே….!’ என எண்ணியவளுக்கு கண்ணீர்த் துளிகளோடு சிறு புன்னகை கூட தோன்றியது.
மிகுந்த தாகத்தோடு தண்ணீர் தேடி பாலைவனத்தில் திரிந்தவனுக்கு ஓர் தடாகமே கண்ணில் தென்பட்டால் எப்படி இருக்குமோ அதே மன நிலையில் இருந்தாள் தன்ஷிகா.
ஆனால் அவன் அவள் தேடிய தடாகம் அல்ல. கானல் நீர் என்பதை அறியாது போனாள் மங்கை.
விதார்த்தின் கோபத்தை பார்த்த மேனேஜர் முத்துராமனுக்கு கை,கால் ஓடவில்லை. அவனுடைய கர்ஜனையில் வெலவெலத்துப் போனார் அவர்.
“ஏ…. ஏங்க என்…. என்னைத் தெ…. தெரியலையா.? நா… நான்தான் உங்களோட ம…. மனைவி” என திக்கித் திணறி கூறி முடித்தவள் ஏக்கமாக அவனுடைய வதனத்தை கண்ணீரோடு ஏறிட்டாள்.
“வாட்….? மனைவியா.? ஹா… ஹா… குட் ஜோக்.” என ஏளனமாக கூறியவன் அடுத்த நொடியே “கெட் அவுட் ஆஃப் திஸ் பிளேஸ் ரைட் நவ்” என முழங்கி விட்டிருந்தான்.
நிலைமையை உணர்ந்த மேனேஜர் முத்துராமனோ சட்டென எழுந்து தன்ஷிகாவை வெளியே அழைத்துச் சென்றார்.
அதிர்ச்சியோடு வெளியேறியவளை பார்த்தவனுக்கு சினம் இன்னும் அடங்கவே இல்லை.
‘ஷிட்…. எனக்கு இவ மனைவியா.? ரப்பிஷ்.’ என மனதினுள் எண்ணிக் கொண்டவன் மேஜை மீது கிடந்த அவளுடைய பைலை தூசு போல தட்டி விட்டான்.
அடுத்த கணம் அவனுடைய மூளை சுறுசுறுப்பாக வேலையில் இணைந்து விட, தன்ஷிகாவின் மூளையோ தன் செயற்பாட்டை இழந்து ஸ்தம்பித்துப் போனது.
💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “1. இது ஒருநாள் உறவா தலைவா..?”

  1. 💜💜💜 ஸ்ரீமா சூப்பர் டா 💜💜💜 எனக்கு ரொம்ப பிடிக்கும் டா 💜💜💜 இந்த கதையை படித்து இருக்கிறேன் ஆடியோ நாவல் கேட்டு இருக்கேன் டா 💜💜💜💜 ஸ்ரீமா 💜💜💜 திரும்ப படிக்கிறேன் டா 💜💜

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!