உள்ளே இருந்து அவள் ஏணியுடன் ஆடி அசைந்து தள்ளாடியபடி வந்து சேர்ந்தாள். மூன்று வயது சிறு குழந்தைக்கு ஏணியைத் தூக்க சுத்தமாக முடியவில்லை. ஏணியுடன் சேர்ந்து மொத்தமாக கீழே விழுந்து விட்டாள். கீழே விழுந்ததில் ஏணி அவள் மேல் இருக்க அவள் அதனடியில் எலிப் பொறியில் மாட்டிய எலியாகி விட்டாள். காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேற வலி எடுத்ததும் “ஆ…” வென வீரிட்டு கத்திக் கொண்டிருந்தாள்.
யூவியினால் கீழே குதிக்க முடியாது என்பதால் எதுவும் செய்ய முடியாதவளாக நிஸாவையும் ரோஹனையும் பார்த்து “அவளைத் தூக்கி விடுங்க…” என்றாள் பதற்றத்துடன். கீழே குதிக்க முடியாத அளவு அது ஒன்றும் பத்துப் பதினைந்து அடி சுவர் எல்லாம் இல்லை. வெறும் ஆறு அடி உயரமே. அவள் கணிப்பில் அது நூறு அடி உயரம் என்றாலும் தப்பில்லை. விழுந்து வீரிட்டு அழும் குழந்தையின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தான் ஆதி.
“நிவி…” என அவளை அழைத்தவாறே அவள் மீது விழுந்த ஏணியைத் தூக்கி விட்டு அவளை எழுப்பி கண்களைத் துடைத்து விட்டு
“இப்போ எதுக்கு இந்த லேடரை தூக்கிட்டு வந்த? சின்னக் குழந்தைன்னா சின்னக் குழந்தைங்க வேலைய மட்டும் தான் பண்ணணும். இப்படி பெரியவங்க வேலைய பண்ணக் கூடாது. ஆர் யூ அன்டர்ஸ்டேன்ட்?” என்று கேட்க அவள் அழுகையை ஒரே அடியில் நிறுத்தி விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
இந்த காட்சி முடிந்ததும் யூவியிடம் வந்தான் ஆதி. “உனக்கு அறிவில்லை? சின்னக் குழந்தைங்கள வெச்சி இப்படி பண்ணிருக்க? பூல். உனக்கு கீழ இறங்க தெரியாதா? உன் மனசுல நீ பெரிய குயீன்னு நினைப்பா? உனக்காக வேலை செய்ய வேற ஆட்கள் தேவையா?” என திட்டியதும் சிறுகுழந்தையென கண்களைக் கசக்கியவாறு “ஓஓஓ…” வென அழ ஆரம்பித்துவிட்டாள் யூவி.
“ஹேய்… வை ஆர் யூ க்ரையிங்க்?” என அதிர்ந்து கேட்க அழுகை இன்னும் பலமானது.
அதில் சற்று பயந்தவன் எச்சில் விழுங்கியவாறு “அடச் சீ… வாய மூடு… வாய மூடு… ஸ்…” என வாயில் விரலை வைத்து சிறு குழந்தையை மிரட்டுவது போல மிரட்டிட, திடுக்கிட்டு வாயை மூடிக் கொண்டாள். அதில் சற்று மூச்சை இழுத்து விட்டவன்
“சரி இறங்கு.” என கையை நீட்ட “பரவால்ல. பொண்ணுங்க அழுகைக்கு வெல்யூ அதிகம்தான்.” என நினைத்தவள்,
“எனக்கு பயமா இருக்கு. நான் குதிக்க எல்லாம் மாட்டேன்பா. என் மேல இருக்குற கோபத்துல நீங்க என்னை கீழ போட்டாலும் போட்டுடுவீங்க.” என்றாள் சிணுங்கியவாறு.
“நான் செம்ம கடுப்புல இருக்கேன். என்னை ரொம்ப கோபப்படுத்தாத. அங்க பாரு… மழை வரப்போது. என்கிட்ட வம்பு பண்ணண்ணா இங்கேயே கிடந்து தடுமல் வந்து சாவுணும்.” என்றுவிட்டு நகரப்போக
“இல்லை இல்லை…” என கூறியவாறே கீழே அவன் மீது குதித்து விடவும் கவனத் தடுமாற்றத்தில் அவனுக்கு இடுப்பு உடைந்ததுதான் மிச்சம்.
“அம்மா… என் வெய்ஸ்ட்.” எனக் கத்திக் கொண்டே இடுப்பைப் பிடித்தவன்
“எம்மா… உன் வெய்ட் என்ன தாயே? இந்த கனம் கனக்குற?” என கேட்டதில் கோபமானவள்
“பொண்ணுங்க கிட்ட வயசையும் இடையையும் கேட்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.” என்றாள் மிடுக்காக.
“உனக்கு வாய்க்கப் போறவன் ரொம்பப் பாவம்…” என்றான் பாவமாக.
அதில் அவன் நெஞ்சில் ஒரு அடி போட அதில் திடுக்கிட்டவன் கூட காதல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு விட்டான் போலும். அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவ் விழிகள் அவனை காந்த சக்தி கொண்டு ஈர்த்தது. அவனுக்கு இது என்ன உணர்வு என்றே தெரியவில்லை. ஆனால் இதுவரை எந்தப் பெண்ணின் அருகாமையிலும் கிடைக்காத ஒரு புத்துணர்வு.
அவனுக்கு அதற்குப் பெயர் காதல் என்று முழுதாக தெரியவில்லை. அதே போல்தான் யூவிக்கும். அவளும் காதல் உணர்ச்சியின் பிடியில் வசமாக சிக்கித் தவிப்பது சற்று வித்தியாசமான ஒன்றுதான். “ஏன் இவனிடம் மாத்திரம் இவ்வாறான உணர்வு தோன்றுகிறது?” என தன்னுள் ஒரு ஆராய்ச்சியை நடத்திக் கொண்டாள். ஆனால் அவனுக்கு இந்த உணர்வைத் துண்டிக்க வேண்டுமென எண்ணமோ தெரியவில்லை.
“ஏய் கொஞ்சம் தள்றியா?” என்றவாறே அவளைத் தள்ளி விட்டு நகர்ந்து எழுந்து நிற்க அப்போதுதான் கண்டான் தன் கீபோர்ட்டினது நிலைமையை.
“ஏய்… யாரு இந்த வேலையப் பாத்தது?” எனக் கத்தியதும் அவள் கால்கள் பயத்தில் நடுங்க அதைப் பார்த்தே கண்டுபிடித்து விட்டான் இதை செய்தது யாரென்பதை.
“பளார்ர்ர்ர்…” என்ற ஒரே ஒரு அறை. அவள் எதிர்பார்த்தது தான். சென்ற தடவை வாங்கியதை விட பல மடங்கு ருசியானதொரு அறை.
“இவ்ளோ நேரமும் நல்லாத்தானே இருந்தான்… இப்போ என்னாச்சு? ஒருவேளை மறுபடியும் காஞ்சனா வந்துடுச்சா?” என்றவாறு நிற்காமல் ஓடிவரும் கண்ணீருடன் அறைந்த கன்னத்தில் கையை வைத்தவாறு இருந்தாள்.
“என்ன? குளிர் விட்டுப் போச்சா? உனக்கு எல்லாம் கொஞ்சம் கருணை காட்டினது கூட தப்பாப் போச்சு. இப்போ பாரு இனிமேல் என்கிட்ட மோதுற நினைப்பு வராத அளவு ஒரு தண்டனைய கொடுக்குறேன்.” என அவளை வற்புறுத்தி இழுத்துச் சென்றான் வீட்டினுள்ளே.
“என்ன விடு.” எனக் கூச்சலிட்டவாறே அவன் கையிலிருந்து விடுபட முயற்சித்தவளின் வாயை டேப்பைக் கொண்டு அடைத்து விட்டான். கைகளையும் கயிறுகளால் கட்டிவிட்டு அவளை அடைத்து வைக்க ஒரு அறையைத் தேடினான். எந்த அறையும் கிடைக்காததால் பழைய இருண்ட வெளிச்சமே இல்லாத அறையொன்றைக் காண அதில் அவளைத் தள்ளிவிட்டு
“இனிமேல் வெளில வருவ? இங்க இருந்து நரகத்தை தினம் தினம் அனுபவி.” என்றவாறு கதைவைப் பூட்டித் சாவியை எடுத்து வீசிவிட்டு சென்றான். இருண்ட அரையில் ஒரு சிறு வெளிச்சமும் வராத இடத்தில் மாட்டிக் கொண்டு பயத்தின் உச்சத்தில் தவித்தாள் யூவி.
அதே நேரம் “ப்ளீஸ் ஹெல்ப்…” என தூரத்தில் ஒரு பெண் கத்துவது அவள் காதுகளுக்கு எட்டியது. அந்த இடத்தில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்க அக் குரல் இலகுவாக அவள் காதுகளுக்குள் ஊடுருவியது. மீண்டும் அதே குரல்.
“ப்ளீஸ்… சேவ் மீ…” அழுகுரல் கேட்க கண்களை விரித்து நெஞ்சம் படபடக்க நின்றிருந்தாள். நெஞ்சாங்கூடு வெடித்து சிதறும் அளவு பயத்தை உணர்ந்தாள்.
அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்கள் கரிய இருட்டினுள் அது யார் என்றவாறு அங்கேயும் இங்கேயும் தேடியது. ஆனால் துளி வெளிச்சம் கூட இல்லாத இருட்டில் அக் குரலைத் தவிர யாரையும் அவள் கண்களால் பார்க்க முடியவில்லை.
“என்னை காப்பாத்துங்க. நான் சாகப் போறேன். என்னை இவங்க கொன்னுடப் போறாங்க. ப்ளீஸ்… காப்பாத்துங்க…” என்ற குரலில் அவள் தன் கைகளைக் கொண்டு தளர்ந்து இருந்த கட்டை அவிழ்த்து, சுவரின் ஓரத்தில் பயத்தில் உறைந்து போய் கால்களைக் குறுக்கியவாறு அமர்ந்திருந்தாள்.
மீண்டும் அதே அழுகுரல். வேதனையின் உச்சத்தில் ஒரு பெண் துடி துடித்து கதறும் குரல். “ப்ளீஸ்… காப்பாத்துங்க. என்னால முடியல. நான் இங்கதான் இருக்கேன். ப்ளீஸ் சேவ் மீ… சேவ் மீ.. என்னை காப்பாத்துங்க. ப்ளீஸ்…” மீண்டும் மீண்டும் ஒலித்த குரலில் பயத்தில் அவள் நடுநடுங்கிய இதையம் நொடிக்கு நொடி மரணத்தை எண்ணி பயந்து கொண்டது. வியர்வை நெற்றியில் இருந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
கண்கள் கண்ணீரை வழங்க உடம்பில் நீர் குறைவானதாலும் வியர்வையின் அகோரத்திலும் சூட்டிலும் அவளுக்கு தாகம் எடுக்க விக்கல் தானாகவே வந்து விட்டது. அதில் வாயை இரு கரங்களாலும் பொத்திக் கொண்டு கண்களை மூடி அழுது கொண்டிருந்தாள். பயத்தின் காரணமாக இடை இடையே விசும்பல்களே வெளிவந்தன.
இப்போது அப் பெண்ணின் குரலுடன் கொலுசு சத்தமும் காலடி சத்தங்களும் கேட்க அவளுக்குள் அது காவ்யாவின் பேயாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. பயத்தில் அரை உயிரை விட்டு விட்டாள். இவ்வாறு நடந்ததில் பயந்து போய் மயக்கம் போட்டு அப்படியே சரிந்து விட்டாள்.
பன்னிரெண்டு மணித்தியாலங்களின் பின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஆதி. வீட்டிலேயே அபி மகாலக்ஷ்மியிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தாள், “ம்மா… அவள இன்னமுமே காணலம்மா… அவள காலையில ஒன்பது மணிக்கு பாத்தது. இப்போ பன்னிரண்டு மணி. இன்னமும் அவ வீட்டுக்கு வரலையே. பகல் சாப்பிட கூட அவ வரல. எனக்கு என்னவோ பயமா இருக்கு. அவளுக்கு ஏதோ ஆகிடுச்சு.” என அழுது புலம்ப
“வீட்டுல எல்லா இடத்துலையும் தேடிப் பாத்துட்டியாடி. அவ இங்க இல்லன்னா வேற எங்க போயிருப்பா?” என பதற்றமாக கேட்டார் மகாலக்ஷ்மி.
“ஆமாம்மா. குழந்தைங்க கிட்ட கூட கேட்டேன். அவங்க காலையில பன்னிரெண்டு மணிக்கு பிறகு அவளை காணோம்னு சொன்னாங்க. அப்போ அவ எங்கதான் போனா? இந்த ஊர்ல அவளுக்கு நம்மள தவிர யாரையும் தெரியாதும்மா. என்னாலதான் எல்லாமே. அவக்கிட்ட நான் பேசியிருக்கனும். தப்பு பண்ணிட்டேன். இப்போ அவளை எங்க போய் தேடுவேன்?’ எனக் கூறி அழுதாள்.
“அடக் கடவுளே… யூவிக்கு என்னாச்சு? அந்தப் பொண்ணு எங்க போனா? சொல்லாம கொள்ளாம ஏன் இப்படி பண்ணா? இரவு பன்னிரண்டு மணி ஆச்சே. சீக்கிரமா எல்லாரையும் சொல்லி அந்த பொண்ண தேட சொல்லுங்க.” என விஜயனிடம் கூறியவர்,
“தயவு செஞ்சு அவளுக்கு எதுவுமே ஆகக் கூடாது. சிவ சிவா…” எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார் பாட்டி.
அவர் பேச்சில் விஷ்ணுவையும் விக்ரமையும் அழைத்துக் கொண்டு “நாங்க இப்போவே போய் தேடி அந்த பொண்ணை கூட்டி வரோம். நீங்க கவலைப்படாதீங்க அத்தை.” என கொண்டு வெளியில் சென்று விட்டார் விஜயன்.
“ஓஹ் மை கோட்… அப்படின்னா அவ இன்னும் வெளில வரலையா? நான் அவ அப்போவே தப்பிச்சு வந்திருப்பான்னு நினைச்சேனே. கீ வேற என்கிட்ட தானே இருக்கு. அவ பகல் கூட சாப்பிட வரலன்னு சொன்னாங்களே.” என யோசித்த ஆதி
அவளை தேடச் சென்றவர்களிடம் “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.” எனக் கூறிக் கொண்டு அவசரமாக ஓடினான் அந்த அறைப் பக்கம்.
அனைவரும் அவன் பின்னே செல்ல. விரைவாக கதவைத் திறந்தான் சாவியினால். உள்ளே இருந்த யூவியின் நிலமையைப் பார்த்ததும் அனைவருக்கும் கதி கலங்கி விட்டது. ஆதியின் கால்கள் பின்ன சற்று தள்ளி நின்று கொண்டான்.
அனைவரும் அறையை திறந்து உள்ளே பார்க்க யூவி மயக்கத்தில் கிடந்தாள். ஆதி உள்ளே ஓடிச் சென்று அவள் தலையை தன் நெஞ்சுடன் சேர்த்து அணைத்து அவளை மடியில் போட்டுக் கொண்டு அவள் முகத்தைத் தட்டி “கண்ண முழிச்சு என்ன பாரு… என்னப் பாரு எழுந்துரு… எழுந்துரு…” என எழுப்ப அவள் உடம்பு நிறைய சிவப்பு நிற கோடுகள் தழும்பாக விழுந்திருந்ததை கவனித்தான்.
வியர்வை அவளை நனைக்க பயத்தால் சீரற்ற வெப்பநிலையில் காய்ச்சல் நெருப்பாக கொதித்தது. வலியின் தன் தாய் தந்தையரை “ம்மா… ப்பா…” என அழைத்துக் கொண்டிருந்தவள் ஆதியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அவள், சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, “கார்த்திக்… சீக்கிரமா அவள வெளில தூக்கிட்டு வா. இல்லன்னா ஏதாவது ஆகிடப் போகுது. சீக்கிரமா.” என பாட்டி பதற்றத்தில் கூறியதும் அவளை தன் கைகளில் ஏந்தியவன் வெளியில் ஓடி வந்தான்.
அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினாள் பல்லவி. அவள் அரை மயக்கத்தில் உலரிக் கொண்டிருக்க அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்த மகாலக்ஷ்மி உடனே பதற்றமாக எழுந்தவர்
“அம்மா… யூவிக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு. ரொம்ப சூடா இருக்கு. உடனே மருந்து கொடுத்தாகனும்.” எனக் கூறியதும்
“அண்ணி இப்போவே போய் கசாயம் செஞ்சு எடுத்து வாங்க. கார்த்திக் நீ முதல்ல அவளை கூட்டிட்டு போய் தூங்க வை.” என்று விஷ்ணு கூற ஆதி தலையை ஆட்டிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு போய் அறையில் படுக்க வைத்தான். அவன் அவளை விட்டு ஒரு நொடி கூட நகரவில்லை.
அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “ஒன்னும் இல்லை. சரியாகிடும்.” என்றதை மந்திரம் போல் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு அழுகை வராத குறைதான். ஏனென்றே தெரியவில்லை. யூவியை அவனால் இந்த நிலையில் பார்க்க முடியவில்லை. அவளுக்கு இப்படி ஆனதில் அவன் மனது நடுநிலையிலேயே இல்லை. உள்ளே இருந்த காதல் இப்பொழுது முழுமையாக எட்டிப் பார்க்கத் தொடங்கியது.
இது சாதாரணமான காய்ச்சல் எனத் தெரிந்தும் கூட அது அவளுக்கு வலியைத் தருகிறது என அறிந்ததும் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் ஏன் இவள் மீது இவ்வளவு அக்கரை காட்டுகிறோம். தான் எதற்காக அவளுக்காக இவ்வாறு கவலைப் படுகிறோம்? தான் எதற்காக அவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? தாம் ஏன் அவளை இவ்வாறு விழுந்து விழுந்து பராமரிக்கிறோம்? அவளுக்கும் நமக்கும் இடையிலுள்ள பகை இப்போது எங்கே போனது? அவள் பெயர் கூட சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏன் அவள் மீது இவ்வாறான ஈர்ப்பு என முக்கியமான கேள்விகளை அவன் தனக்குள் கேட்கும் அளவு அமைதியாக இல்லை.
வேகமாக எழுந்து சென்றவன் அவள் வாயில் தேர்மோமீட்டரைக் கூட வைத்து சோதித்துப் பார்த்து விட்டான். அதன் டெம்பரேச்சர் 120° ஐ தாண்டிக் காட்டியது. “ஓஹ். கோட்…” என கடவுளை வைதவன் தானே சமயலறைக்கு சென்று யூவிக்காக கொதிநீரில் டீ போட்டு தேசிக்காய், கருவா, ஏலக்காய், கராம்பு, இஞ்சி போட்டு அவளுக்காக எடுத்து வந்தான்.
அனைவரும் இவனைப் பார்த்து “இவனுக்கு என்ன ஆச்சு? கிச்சன் வாசப்படிய கூட மிதிக்காதவன், இன்னைக்கு தானே வந்து தானே டீ போட்டு எடுத்துட்டு போறான். அதுவும் அவனுக்கு பிடிக்காத ஒருத்திக்காக இப்படி அக்கரையா பாத்துப் பாத்து இதையெல்லாம் செய்றானே.” என ஆச்சரியப்பட்டுக் கொண்டனர். உடனே அவள் அருகில் சென்றவன்அவள் கைகளைப் பற்றிப் பிடித்து “உனக்கு எதுவும் ஆகாது.” என அவசரமாக அவளருகே அமர்ந்து கொண்டவன் அவள் தலையை உயர்த்தி அமர வைத்து டீயை மெதுவாக குடிக்க வைத்தான்.
இதையெல்லாம் பார்த்த கார்த்திகா “ஏய்… நான் சொன்ன மாதிரியே நடக்குதுடி. கார்த்திக் அவ பக்கம் சாய ஆரம்பிச்சிட்டான். நீ நரிக்கிட்ட வடய கொடுத்துட்டு ஆ…ன்னு பாத்துட்டு இரு. வேற எதுவும் பண்ணிடாத. இவ என்ன செத்தா போய்ட்டா? சாதாரண காய்ச்சல் தானே? அதுக்கே இப்படி உருகுறான்? இதெல்லாம் எங்கன்னு போய் சொல்ல?” என பல்லவியிடம் புகார் வைக்க அவர் தலையில் நங்கென்று கொட்டியவள்
“சித்தி… நீ ஏன் எல்லாத்தையும் சந்தேகமா பாக்குற? அன்னைக்கு அந்த பொண்ணு அவருக்கு அடிபட்டப்போ எப்படி ஹெல்ப் பண்ணா அதுக்காக அவர் இத கூட பண்ண கூடாதா? நல்லதும் கெட்டதும் நம்ம எண்ணத்துலையும் பார்வையிலையும்தான் இருக்கு. அந்த பொண்ண பாரு சித்தி. பாவம்… எவ்ளோ நல்ல பொண்ணு. ஆனா ஏன் அவ காரணமே இல்லாம அந்த ரூம்க்குள்ள போய் மாட்டிக்கிட்டா?” என யோசிக்க
“என்னடி ஆதரவு, அக்கரையெல்லாம் பலமா இருக்கு. அவளைப் பத்தி என்னமோ சொன்னா, நீ ஏதேதோ சொல்ற. அண்ணி சொல்றது நடக்கதான் போகுது. நடந்து முடிஞ்ச பிறகு நீ கண்ண கசக்கிட்டு வந்து நிக்க போற. அப்போ தெரியும் அவங்க சொல்லோட அருமை.” என்று அவளை முறைத்தார் அவளது அம்மா.
“சித்தியும் அம்மாவும் ஏன் இப்படி இருக்காங்க? மனிசங்களை எப்போவுமே தப்பாதான் புரிஞ்சிட்டு இருக்காங்க.” என தலையில் அடித்துக் கொண்டு அவளும் சென்றுவிட்டாள். மகாலக்ஷ்மி கசாயத்தை கொண்டு வந்து கொடுக்க, அவன் அதனை வாங்கி அவளுக்கு கொடுத்தான்.
அதன் பின்னர் இவனை ஆழமாக நோக்கிய பாட்டி இவன் இனிமேல் இங்கிருப்பது சரியில்லை என எண்ணி “கார்த்திக்… நீ போ… நாங்க பாத்துக்குறோம்.” என கூறவே
“இல்ல பாட்டி. நான் இருக்கேன். நீங்க போங்க.” என அவரை அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்து யோசிக்கத் தொடங்கினான்.
“ச்சேய்… நான் பண்ணது எவ்ளோ பெரிய முட்டாள்தனம். அவ என்னதான் என்ன இப்படி டோர்ச்சர் பண்ணாலும் அவளை நான் இப்படி பண்ணிருக்க கூடாது. அதுவும் இருட்டு அரையில 12 ஹவர்ஸ் அடச்சி வெச்சிருக்கேன். பகல் சாப்பிடக் கூட இல்லன்னு சொன்னாங்க. கொஞ்சம் விட்டுருந்தா செத்துப் போயிருப்பா. நல்ல வேளை. நீ ஏன் இப்படி நடந்துக்கிட்ட ஆதி?” என மனதுக்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், அப்படியே அவளருகில் தூங்கிவிட்டான்.
சூரிய பகவான் பூமியின் சுழற்சியால் கிழக்கு வானில் தென்பட அவரின் செங்கதிர்கள் தூங்கிக் கொண்டிருந்த யூவியின் தேகத்தில் பட்டு உணர்வு அழிக்க செய்ய மெல்ல காய்ச்சலின் தாக்கம் கசாயத்தால் குறைந்து கண் விழித்துப் பார்த்தாள்.
தன் அறையில் இருப்பதைப் பாரத்தவள் “நான் இங்க எப்படி வந்தேன்? என்ன யாரு காப்பாத்தினாங்க?” என யோசிக்க, அவளுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. யோசித்து யோசித்து மூளை குழம்பி போனதுதான் மிச்சம். தலைவலி உயிரை எடுக்க முயல தாங்க முடியாமல் வெளியில் வந்தாள் யூவி.
வெளியில் நொன்டி நொன்டி நடந்து வந்தவள் அபியை நோக்கிய கனம் அவள் ஓடி வந்து கட்டியணைத்து “உனக்கு ஒன்னும் இல்லல? நான் பயந்தே போய்ட்டேன். உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என சினுங்கிக் கொண்டே கேட்க
“எனக்கு ஒன்டுமே இல்லடி. நான் நல்லா இருக்கேன்.” என்று கூறிவிட்டு பாட்டியின் அறையை நோக்கி சென்றாள்.
அவர் இவளைப் பார்த்த உடனே “உனக்கு ஒன்னும் இல்லை தானே? நல்லா இருக்கியாம்மா? ஆமாம்… எப்படி அந்த அறைக்குள்ள மாட்டிக்கிட்ட? யாரு அந்த கதவை திறந்தது? உன்னை வெச்சு யாரு அந்த கதவ பூட்டினது?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்ப
அவள் அருகில் நின்றிருந்த ஆதியை முறைத்துப் பார்த்துக் கொண்டே “சொல்றேன் பாட்டி.” என்றாள்.
“இனிமேல் எங்ககிட்ட சொல்லாம எங்கேயும் போக கூடாது. உன்னை காணலன்னதும் நேத்து தவிச்ச தவிப்ப இருக்கே. அந்த நிலமை திரும்பவும் வரக் கூடாது. புரிதா?” என அவர் பாசமாக திட்ட
“இல்ல பாட்டி நான் இங்க இருந்து கிளம்பலாம்னு நினைக்கிறேன். என்னால இனிமேல் இங்க இருக்க முடியாது.” என்று கூறிவிட்டாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
“ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி சொல்ற? இங்க யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா?” என்றார் யோசனை ரேகைகளுடன்.
“வன் மினிட் பாட்டி.” என்று ஆதியின் முன் சென்று நின்றாள்.
“சோரிங்க… என்ன மன்னிச்சிடுங்க. நான் பண்ணதெல்லாம் தப்புதான். இந்த ஒரு வார்த்தைய என் வாயில இருந்து கேட்கத் தானே இதெல்லாம் பண்ணீங்க? ஹவ் சீப்… நீங்க முதல்ல மனிசனா? நீங்க ஒரு மிருகம். உங்களுக்கு மனசாட்சியே இல்லை. அதுதானே. மனிசத் தன்மைய ஒரு மிருகத்துக்கிட்ட எப்படி எதிர்பார்க்க முடியும்? நான் பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் தான். ஆனால், சோரி… நீங்க சேத்த அடிச்சிட்டு மன்னிப்பு கேட்காம போனதுக்காகத்தான் நான் கார் கண்ணாடிய கல் எரிஞ்சு உடைச்சேன். சோரி… உங்க வீட்டுலேயே எல்லார் முன்னாடியும் உங்களை பணத்த தூக்கி எறிஞ்சு அவமானப்படுத்தினதுக்கு சோரி… உங்களை அவமரியாதையா பேசினதுக்கு சோரி… உங்களோட திங்க்ஸ உடைச்சதுக்கு சோரி… உங்களை இரிட்டேட் பண்ணதுக்கு சோரி… இது எல்லாத்துக்குமே சோரி…” என கையெடுத்து கும்பிட்டு கேட்டவள் கண்களிலிருந்த வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு
“ஆனால் உங்களை மாதிரி ஒரு லோக் க்ளாஸ் சீப் லெவல் ஆள என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லைங்க. நீங்க பாக்கத்தான் ஹை க்ளாஸ். ஆனால் புத்தி மொத்தமும் லோ க்ளாஸ். உங்க ஈகோவுக்காக என்ன பண்ண சொன்னாலும் நீங்க அத பண்ணுவீங்க. அந்த அளவு சீப்பான ஒரு கேவலமான ஒருத்தன் நீங்க. ஆணவத்துக்கு உடலும் உருவமும் கொடுத்தா அது உங்க ரூபத்துலதான் இருக்கும்.” எனக் கூறியவள் உள்ளே சென்று தன் உடைகளை எடுத்து வைக்க அதிர்ந்து விழித்தார் பாட்டக.
“என்னம்மா… எங்களை விட்டு போறேன்னு சொல்ற? அவன் என்ன செஞ்சிருந்தாலும் அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன். தயவு செய்து போகாதம்மா…” என்றார் அவள் கையைப் பிடித்தவாறு.
“இல்லை பாட்டி. நான் போய்த்தான் ஆகனும் என்னை தடுக்காதீங்க. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்ளோ நாள் இருக்த இடம் கொடுத்ததுக்கு நான் உங்களையெல்லாம் மறக்கவே மாட்டேன்.” என்று கூறிவிட்டு வெளியில் செல்ல அவளைத் தடுத்து நிறுத்தினாள் அபி.
“நீ கட்டாயமா போகணுமா யூவி?” அவள் சந்தேகமாய் கேட்க
“ஆமாம். நான் போகணும். நான் இங்க இருந்த இந்த கொஞ்ச நாள் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அபி. ஆனால் எப்போ என்னோட செல்ப் ரெஸ்பெக்ட் இந்த அளவு டேமேஜ் ஆகிச்சோ அப்போவே எனக்கு இங்க இருக்க விரும்பமில்லை. நான் போய் அங்கேயே அண்ணாக்கிட்ட சொல்லி என் வாழ்க்கையை பாத்துக்குறேன். நீ கவலப்படாத. ஏதாவதுன்னா மெசேஜ் பண்ணு.” எனக் கூறியவாறு வெளியில் செல்ல முயல அவளைத் கைகளை நீட்டி தடுத்தான் ஆதி.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் பக்கம் திரும்பியவன், “நான் இப்படி பண்ணிருக்க கூடாது. நான் உன்னை யாருன்னு தெரியாத போதே கை நீட்டி அடிச்சிட்டேன். அது தப்பு என்ட், உன்னை டோர்ச்சர் பண்ணது எல்லாம் தப்பு. அது எல்லாத்தையும் விட நேத்து அப்படி ரூம்குள்ள அடச்சி போட்டது தப்பு.” என தொண்டையைப் பிடித்து மன்னிப்பு வேண்டினான். ஆனால் “சோரி.” என்ற வார்த்தை மறந்தும் கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.
“பட் இங்க இருந்து போக வேணாமே. எல்லாரும் சொல்றாங்க பாரு. எனக்காக…” என சொல்லிவிட்டு சற்று யோசித்தவன்,
“இல்லை. எனக்காக இல்லன்னாலும் இவங்களுக்காக. உன் பெஸ்ட் ப்ரண்ட் அபிக்காக…” என்றதும்,
அவனை ஆச்சரியமாக நோக்கினாள் யூவி. அப்போதும் அவள் பார்வையில் அவன் கீழ் மட்டத்திலேயே இருந்தான். “உங்க வாயில இருந்து இப்போ கூட சோரின்னு ஒரு வார்த்தை வரலல்ல? இருந்தாலும் நான் இங்க இருக்க மாட்டேன்.” என்றதும் மறுபடியும்
“ஐ ஸ்வேர்… நான் இனிமேல் உன்னை இப்படி டோர்ச்சர் பண்ண மாட்டேன். நீ உன் இஷ்டத்துக்கு இருக்கலாம். நான் உன் வழில வரவே மாட்டேன். ஆனால் அதே மாதிரி நீ என்னை டோர்ச்சர் பண்ணக் கூடாது. புரிதா”‘ எனக் கேட்க சந்தேகமாக “இவனா இவ்வாறு சொல்கிறான்?” என அவளால் நம்ப முடியவில்லை.
அதைத் தொடர்ந்து “ஆனா…” என அவள் ஆரம்பிக்க,
“ஆனாவாவது ஆவன்னாவாவது. இங்க வா.” என மகாலக்ஷ்மி கையைப் பிடித்து அவளை உள்ளே இழுத்து வைத்து
“இங்க இருந்து போனன்னா நான் பேசவே மாட்டேன். எங்க போறது? போகவே கூடாது. இது என்னோட ஓர்டர். புரிதா?” என்றார் கட்டளையாக.
“ஆமாம் இங்க இருந்து போறது உனக்கு தடை. மீறியும் போனா தண்டனை தரப்படும்.” என பாட்டி நகைச்சுவை கலந்த கட்டளையாக சொல்ல
“ஆமாம் அது என்ன தண்டனை தெரியுமா? இந்த வேர்ல்ட்லேயே பெஸ்ட்டான காத திருகுற தண்டனை.” என அவள் காதைப் பிடித்து திருகினாள் மீரா.
“அக்கா வலிக்குது…” என யூவி முகம் சுருக்க
“மீராக்கா நீங்க எப்படி அவளை அடிப்பீங்க? உங்களுக்கு அதுக்கான ரைட்ஸ யார் தந்தா? இனிமேல் இவ மேல யாராவது கை வெச்சீங்க, தொலைச்சிருவேன். அது யாரா இருந்தாலும் சரி.” என ஆதியைப் பார்த்தவாறு அவன் அருகில் சென்றவள்
“ஏன் இவரா இருந்தாலும்கூட சரி… கொன்றுவன்.” என அவனை நோக்கி கை நீட்டி எச்சரித்தாள் பல்லவி.
அவன் ஏளனமாக அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க அனைவரும் ஆதி அருகில் நின்றாலே மயக்கம் போட்டு விழுபவளுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்? என அதிர்ச்சியே ஆகிவிட்டனர்.
ஆதியே அவளிடம் “என்ன சொன்ன? திரும்ப சொல்லு?” என்றதும்தான் அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
“அது… பாட்டி… காப்பாத்துங்க. அடிக்க வராரு. ப்ளீஸ்…” என முறைத்தலனைப் பார்த்து பாட்டியின் பின் ஒளிந்து கொண்டாள்.
“பாட்டி அவளை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க. அவ மண்டைய பொழந்துர்ரேன். என்னையே கொன்னுருவேன்னு சொல்லி மிரட்டுராளா அவ?” என அவன் அவளைப் பிடிக்க எத்தனித்ததும்
“அதுக்கென்ன? ஒப்படைச்சிட்டா போச்சு. இன்னும் ரெண்டு வாரம்தான்டா. அவள மொத்தமா உன்கிட்டயே ஒப்படைச்சிர்ரேன்.” என்றார் விளையாட்டாக.
இவ்வளவு நேரமும் இவற்றை எல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த யூவியிக்கு கொஞ்சம் மனம் தடக் என்று அடித்தூக் கொண்டது. அவளுக்குள் ஏதோ ஓர் உணர்வு உயிரை அனு அனுவாக அறுத்து எடுப்பது போல் தோன்றியது. அவனுடைய ஆதியை இன்னெருத்தியுடன் சேர்த்து வைத்துப் பேசுவதைக் கேட்க அவள் காதுகள் விரும்பவில்லை.
அதே உணர்வுதான் அவனுக்கும். சிரித்துக் கொண்டிருந்த அவன்.முகம் நொடியில் பாட்டி சொன்னதைக் கேட்டு இறுகிப் போக யூவியைப் பார்த்தான். அவள் கண்களில் ஏனென்று அறியாமல் கண்ணீர் வந்துவிட அதை துடைத்துக் கொண்டு பதிலுக்கு போலியாக சிரித்தாள்.
அவனுக்கு அவள் சிரிப்பை பார்க்க முடியாமல் போக உடனே அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.
இதைக் கவனித்த பாட்டி “என்னாச்சு இவனுக்கு? நல்லா தானே இருந்தான். திடீர்னு இப்படி முகத்தை திருப்பிட்டு போறான்.” என யோசித்தார்.
இங்கு அக் கொடிய அறையில் இருள் முழுக்க சூழ்ந்திருக்க கூரையில் விழுந்த சிறு விரிசலின் ஓட்டையால் சூரிய ஒளி ஊருவிச் சென்று அவள் முகத்தில் பட்டு வியர்வை துளிர்த்தது. வாயின் அருகில் நாடி வெடித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அழுது வடிந்த சுவடு பதிந்த கன்னங்களோடு கண்கள் யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கியது.
கையில் போடப்பட்ட பூட்டுக்களை உடைக்க முயல வலி தாங்க முடியாமல் “அம்மா…” என்றவாறே எழுந்து அமர்ந்து கொண்டாள் காவ்யா.
அங்கிருந்த ராமரின் சிலையைப் பார்த்தவள் “என்னோட நிலமை இப்படி ஆகிடுச்சே. நான் நாலு வருசமா இந்த ரூம்க்குள்ளேயே ஒரு கைதியா வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு எப்போ விடுவு காலம் கிடைக்கும் கடவுளே? சொல்லுங்க. என்னால இனிமேலும் இங்க இருக்க முடியாது. இத விட கொடுமையான விசயம் என்னன்னா, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் தம்பியே எனக்கு இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணுவான்னு சத்தியமா நினைக்கல. அவன் ஏன் எனக்கு இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணான்? அவன் என்னோட வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான். அந்த ஆர்.ஜே கூட சேர்ந்து இப்படி ஒரு பெரிய துரோகத்தை எனக்கு பண்ணிட்டான். அதை நினைக்கும் போது செத்துடலாம் போல இருக்கு. ஆதி ஏன் இப்படி பண்ணான்? சொல்லுங்க. அவ ஏன் இப்படி மாறிட்டான்? அவன் எதுக்காக இதெல்லாம் பண்றான்?” என அழுதுகொண்டே ராமரின் சிலையை வணங்கிவிட்டு அருகில் தூங்கினாள் வலி தாங்க முடியாமல். விரைவில் குளிர்ந்த நீர் உடலை வேகமாக நனைக்க அதில் நடுங்கி உடனே எழுந்து அவனை “ஆதி…” என நோக்கினாள்.
தொடரும்…