நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09

5
(12)

காதல் : 09 

தனது வீட்டிற்கு கூடச் செல்லாமல் வாசுவை தேடி அவனது ஊருக்கு வந்தான் சக்தி. அங்கே வாசு இருந்த நிலையைப் பார்த்த சக்திக்கு உயிரே போனது போல் இருந்தது. 

சக்தியைப் பார்த்தவர்கள் “நீங்க யாரு தம்பி…….?” என்று கேட்டனர். 

“நான் சக்தி…. வாசுவோட நண்பன்… இவனுக்கு என்னாச்சி ஏன் சங்கிலியால கட்டிப் போட்டிருக்கிறீங்க…..?” 

“அது வந்து தம்பி வாசு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்க அம்மா அப்பாவோட போட்டோவையே பார்த்திட்டு இருந்தான்…. அப்புறம் ஏதேதோ பேசினான்…. நாங்களும் அதிர்ச்சியில இருக்கிறான் சரியாயிடுவான்னு பார்த்தா நேற்று இருந்து சத்தம் போட்டு கத்தி பக்கத்துல போறவங்களுக்கு அடிச்சி பை……. பைத்தியம் போல நடந்துக்கிறான்…. 

நாங்க என்ன செய்றதுனு தெரியாமல் பக்கத்து ஊரு வைத்தியரை கூட்டிட்டு வந்து வாசுவுக்கு மயக்க ஊசி போட்டு வச்சிருக்கிறோம்… எப்பிடி இருந்த குடும்பம்… இன்னும் எத்தனை விவசாயியோட குடும்பம் தற்கொலை பண்ணிக்க போகுதோ தெரியலை….” என்றார் வருத்தத்துடன்.

மெல்ல தனது நண்பன் அருகில் சென்றான் சக்தி. எப்போதும் துருதுருனு தன்னை சுற்றிக் கொண்டு இருப்பான். சக்தி என்றால் வாசுவுக்கு அவ்வளவு பாசம் ‘மச்சான் உன்னைப் போல நல்ல நண்பனைப் பார்த்ததே இல்லைடா’ என்பான்.

சக்தியிடம் வாசுவுக்கு பிடிக்காத ஒரே விசயம் அவன் ஜீவிதாவை விரும்புவது மட்டுமே. இருந்த போதும் வாசு சக்தியின் காதலுக்கு இடையே வருவதில்லை. 

வாசுவின் தோளைத் தொட்டான். அவனை திரும்பி பார்த்த வாசு “நீ யாரு எதுக்கு வந்த…? ஓ… அப்பாவையும் அம்மாவையும் பார்க்க வந்தியா….? அவங்க இங்க இல்லை… சாமிக்கிட்ட போயிட்டாங்க…” என்றான்.

அவனை இவ்வாறு பார்க்க சக்தியின் மனம் வலித்தது.. 

“என் கூட வர்றியா….?” 

“வர மாட்டேன்….” 

“ஏன் வரமாட்ட…?” 

“என் சக்தி வருவான் என்னைப் பார்க்க… அவன் வரும்போது நான் இங்க இல்லைனா அவன் கவலைப்படுவான்…..” இதைக் கேட்டதும் சக்தி கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கரை கடந்தது.

“உன்ன சக்திக்கிட்ட கூட்டிட்டு போறன் நீ வர்றியா…..?”

“உண்மையாவா சக்திக்கிட்ட கூட்டிட்டு போவியா…..?” 

“ஆமா.. உண்மையா சக்திக்கிட்ட கூட்டிட்டு போறேன்…..”

“அப்போ உன் கூட நான் வர்றேன்….”

“சரி வா…” என்றவன் அங்கிருந்தவர்களை பார்த்தான். அவர்களிடம் “நீங்க கவலைப்படாதீங்க… நான் வாசுவை எங்கூட கூட்டிட்டு போறேன்.. அவனை நல்லா பார்த்துப்பேன்… வாசுவை குணமாக்கி இங்க கூட்டிட்டு வர்றேன்…”

“ரொம்ப நன்றி தம்பி… வாசு தம்பியை பத்திரமா பார்துதுக்கங்க..” 

“சரி நாங்க போயிட்டு வர்றோம்….” 

“சரி….” 

“வாசு போலாமா….?” 

“ஓ… போலாமே…” தனது நண்பனை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றான்.

வாசுவை அவனது ஊருக்கு அருகிலுள்ள டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தான் டாக்டரிடம் காட்டுவதற்கு. அங்கே இருந்த டாக்டர் சக்தியைப் பார்த்து, 

“அடடே சக்தி….. நீ எப்படா வந்த….?”

“ராகுல் நீ எங்க இங்க…..?”

“நான் இந்த ஆஸ்பத்திரியில தான் வேலை பார்க்குறேன். ஆமா இது யாருடா….?”

“ராகுல் இவன் என்னோட பிரண்ட் வாசு.. வாசுவோட அம்மாவும் அப்பாவும் நாலு நாளுக்கு முன்னாடி இறந்திட்டாங்க… நேற்றிருந்து வாசு இப்படி இருக்கிறான் இவனை குணப்படுத்த முடியுமா ராகுல்….?” 

வாசுவை செக் பண்ணிய ராகுல், 

“இவரு ரொம்ப மன அழுத்தத்தில இருக்கிறாரு சக்தி….” 

“வாசுவை குணப்படுத்திடலாமா ராகுல்….?”

“ஆமா சக்தி. நிச்சயமா குணமாக்கலாம்…. நீ பயப்படாத… வாசுவை அவரோட அம்மா அப்பா ரெண்டு பேரோட இறப்பும் ரொம்ப பாதிச்சிருக்கு… அதனால தான் இப்படி ஆகிட்டாரு… கொஞ்ச நாளைக்கு ட்ரீட்மென்ட் குடுத்தா சரியாகிடும்…..”

“ஆமா சக்தி… இவரோட பெற்றவங்க எப்படி இறந்தாங்க….?”

“தற்கொலை பண்ணிட்டாங்க ராகுல்…..?”

“என்ன தற்கொலையா….?”

“ஆமா ராகுல்… கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறாங்க… கடன் கட்ட முடியாம தற்கொலை பண்ணிட்டாங்க.. “

“கடவுளே… இப்போ நிறைய விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் இறந்து போறாங்க சக்தி… இங்கே கூட நேற்று ரெண்டு பேரு விவசாயம் செய்ய கடன் வாங்கியிருக்கிறாங்க… ஆனால் அவங்களுக்கு பெரிசா விளைச்சல் இல்லை போல.. அதனால கடன் கட்ட பணம் இல்லாமல் விஷம் குடிச்சிட்டாங்க… ஆனால் கடவுள் புண்ணியத்துல அவங்களை காப்பாத்தியாச்சு… “

“என்ன சொல்ற ராகுல்…..”

“ஆமா சக்தி இங்க வாரத்துக்கு மூணு நாலு பேரு இப்பிடி வருவாங்க… ஆனால் அவங்க விவசாயத்தை விட்டுக் குடுக்கிறதே இல்லைடா.. அவங்களைப் பார்க்கும் போது பேசாம இந்த வேலையை விட்டுட்டு போய் விவசாயம் செய்யலாம்னு தோணும்… என்ன பண்றது…? நம்மளை கடன் வாங்கிபடிக்க வச்ச பெத்தவங்களை நினைச்சா இந்த வேலைய விட மனசு வரமாட்டேங்குதுடா…..”

இவற்றை கேட்ட சக்திக்கு ஒரு யோசனை வந்தது.. அதனை எப்படியாவது செய்ய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது… முதலில் வாசு நிலை பற்றி அறிய விரும்பினான். 

“ஏன் ராகுல் நிச்சயமாக வாசு குணமாகிடுவான்ல….”

“கண்டிப்பா சக்தி.. வாசு குணமாகிடுவான்.. அவனை குணமாக்க வேண்டியது என்னோட பொறுப்பு….. நீ வாசுவை என்னோட வீட்டில விட்டுட்டு போ… இரு நான் காப்பகத்திற்கு போன் போட்டு இன்னைக்கு வரலைன்னு சொல்லிட்டு வர்றேன்….நீ முன்னாடி வாசுவை கூட்டிட்டு போ… வீவீட்டில அம்மா இருப்பாங்க…. பேபேசிட்டு இருங்க நான் வந்திடுறன்….”

“என்ன ராகுல் உன்னோட காப்பகமா….?” 

“ஆமாடா..நல்லா இருக்கிறவங்களுக்கு வைத்தியம் பார்க்க இங்க நிறைய பேரு இருக்கிறாங்க… ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவங்களை பார்க்க யாருமே இல்லடா.. அதனால அப்படிப்பட்டவங்களை பார்த்துக்கணும்னு இந்த காப்பகத்தை நான் ஆரம்பிச்சேன்… வாரத்தில இரண்டு நாள் போய் அவங்களை செக் பண்ணிடுவேன்… நீ பயமில்லாமல் வாசுவை என்னோட விட்டுட்டு போ… அடிக்கடி வாசுவை வந்து பாரு… சரியா….?”

“சரிடா…..” என்ற சக்தி வாசுவை ராகுலின் வீட்டில் விடுவதற்கு அழைத்துச் சென்றான். அங்கே செல்லும் போது வாசு சக்தியிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான். 

“நாம எங்க போறோம்…..?”

“ஒரு முக்கியமான இடத்திற்கு…..”

“எங்க இருக்கு…..?”

“இங்க பக்கத்தில்தான் கொஞ்ச தூரம் நடந்தா வந்திடும்…. உனக்கு கால் வலிக்குதா…..?” 

“இல்லை இல்லை… எனக்கு கால் வலிக்கலை.. ஆனால் சக்திக்கிட்ட கூட்டிட்டு போறன்னு சொன்ன….?” 

“சக்திக்கு கொஞ்சம் வேலையாம் அவனால இப்போ இங்க வரமுடியாதாம்…. அதனால உன்னை இங்க இருக்க சொன்னான்… அவன் உன்னை வந்து பார்ப்பானாம்”

“உண்மையாவா….?”

“ஆமா….?”

“சரி…” என்றவன் சக்தியின் முகத்தை பாவமாக பார்த்தான். அவனது பார்வையை கவனித்த சக்தி, “என்ன…?” என்றான். 

வாசு அந்த தெருவோரத்தில் இருந்த கடைகளை காட்டி பின் தனது வயிற்றைத் தொட்டு “பசிக்குது….” என்றான் ஒரு குழந்தை போல… அவன் சொன்னதை கேட்டதும் சக்திக்கு கண்ணீர் வந்தது. 

“பசிக்குதா…..? வா சாப்பிடலாம்….” என்றவன் அவனே அழைத்துக் கொண்டு அருகிலிருந்த சிறிய ஹோட்டலுக்குள் சென்றான். 

“என்ன வேணும்….?” 

“நீயே சொல்லு….” 

“சரி…” என்ற சக்தி இட்லியும் தோசையும் ஆடர் கொடுத்தான். சிறிது நேரத்தில் அவன் ஆடர் கொடுத்தது வந்ததும் வாசுவுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான். 

“சாப்பாடு போதுமா…..? இல்லை வேற ஏதும் சொல்லணுமா…?” 

“வேணாம் போதும்….” 

“சரி வா போகலாம்….” என்றவன் வாசுவை அழைத்துக் கொண்டு எழுப்பினான். அப்போது அவனது மேசையை துடைப்பதற்கு வந்த பெண் சக்தியைப் பார்த்து மறைந்து நின்றார். சக்தி அவரை கவனிக்கவில்லை. வாசுவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். 

ராகுல் வீட்டில் வாசுவை விட்டு விட்டு “என்னை தவிர வேறு யாரு வந்து கூப்பிட்டாலும் நீ போகக் கூடாது….” என்றான். 

“சரி.. ஆனால் சக்தி வந்தா நான் போயிடுவேன்…..” 

“சக்தி தனியா வரமாட்டான்.. நான் தான் அவனை கூட்டிட்டு வருவன்… சரியா…. ? பார்த்து இரு…” 

“சரி…. ” என்றான் வாசு…. 

அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வாசுவை மறுமுறை பார்த்துவிட்டு தனது ஊருக்கு செல்ல பேரூந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் சக்தி… 

நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சக்தியை சேவல் கூவி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

அட இவ்வளவு நேரத்திற்கு பழசையே யோசிச்சிட்டு தூங்காம இருந்திருக்கிறியே சக்தி… என்று தன்னைத் தானே திட்டியவன் பொழுது விடிந்த பிறகு தூங்க முடியாது என்று உணர்ந்த சக்தி எழுந்து வயலைப் பார்க்க சென்றான்…. 

தனது குடிசையில் படுத்திருந்த சரஸ்வதி சத்தியாவை எழுப்பினார். 

“என்னம்மா…….?” 

“என்னடி பொழுது விடிஞ்சிருச்சி… எழும்பு.. பெரிய வீட்டம்மா இன்னைக்கு நேரத்துக்கு வரச் சொன்னாங்க……..” 

“நேரத்துக்கு எதுக்கும்மா…..?” 

“எனக்கு என்னடி தெரியும்…..? அங்க போனாதான் தெரியும்……” 

“சரி சரி நீ போ… நான் இங்க இருக்கிற வேலைய பார்க்கிறன்…..”

“சரி…நான் போய் குளிச்சிட்டு வர்றேன்…..”

“சரிமா….” என்ற சத்தியா முகத்தை கழுவி விட்டு வந்து தாய்க்கு தேநீர் போட்டாள். அவள் தேநீர் போட்டு முடிக்கவும் சரஸ்வதி வரவும் சரியாக இருந்தது. 

“அம்மா இந்த தேநீரை குடிச்சிட்டு போங்க….”

“சரி சத்தியா..”

“ஆமா அந்த சுமதி பொண்ணு கொஞ்ச நேரம் தூங்கட்டும்… அவளை எழுப்பாத….. ” 

“சரி மா…” என்றவள் சரஸ்வதியை அனுப்பி வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

பின் காலை உணவினை செய்ய தொடங்கும் போதுதான் சுமதி நித்திரையிலிருந்து எழும்பி சத்தியாவைத் தேடி வந்தாள்.. சத்தியா அருகில் வந்த சுமதி செய்த செயலில் சத்தியா அதிர்ச்சி அடைந்தாள்.. 

சுமதி என்ன செய்தாள்???? 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!