3. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.8
(18)

வரம் – 03

 

அளவு கடந்த அதிர்ச்சியில் அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கோ விழிகளில் ரௌத்திரம் குடி கொண்டது.

 

முதுகில் குத்திவிட்டாள்.

 

இந்த நிகழ்விற்கு வரவே போவதில்லை எனக்கூறி என்னிடம் பணத்தை வாங்கி விட்டு என்னையே ஏமாற்றுவதற்கு இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்…?

 

“இவளைஐஐஐஐ..” என பற்களை நறநறத்தவனின் கைமுஷ்டிகளோ அவளை அடித்து நொறுக்கிவிடும் ஆத்திரத்துடன் இறுகின.

 

தன்னை ஏமாற்றிவிட்டு வந்தது மட்டும் இல்லாமல் தன்னருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன்னை எள்ளல் ததும்ப பேசியவளின் வாயை இப்பொழுதே கிழிக்க வேண்டும் போல உள்ளுக்குள் கனலாய் தகித்தது அவனுக்கு.

 

ஒரு கணம் தன்னை மறந்து அவளை நோக்கி வெகு சினத்தோடு தன்னுடைய கரத்தை நீட்டியவன் அந்த அரங்கம் அதிர்ந்த கரகோஷம் கேட்டு சட்டென தன்னை அடக்கிக் கொண்டான்.

 

‘நோ இப்போ கோபப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கிறதுதான் பெட்டர்…’ என தன்னைத்தானே அடக்கிக் கொண்டவன் தன்னுடைய உணர்வுக் கொந்தளிப்பை யாருக்கும் தெரியாது மறைத்து விட்டு மீண்டும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

கோபத்தை அடக்கியதால் அவனுடைய தாடையோ இறுகிப் போனது.

 

காலம் கடந்து போய்விட்டது.

 

அனைத்தும் கை மீறிப் போய்விட்டது.

 

வரமாட்டேன் எனக் கூறியவள் இதோ வந்து என்னருகிலேயே அமர்ந்து விட்டாள்.

 

இனி அரங்கில் அவன் அவமானப்படப் போவது உறுதி.

 

இத்தனை ஆணாடுகளாக தக்கவைத்துக் கொண்ட கௌரவம் இன்று பறிபோகப் போகின்றது.

 

இங்கே அமைதியாக அமர்ந்திருந்து இவள் விருது வாங்குவதைப் பார்ப்பதைவிட இங்கிருந்து சென்றுவிடலாம் என்ற எண்ணம் அவனுடைய மூளையைக் குடைய, எங்கே இங்கிருந்து சென்றால் இவளுக்கு பயந்து செல்வதைப்போல ஆகிவிடுமோ என்ற எண்ணம் சடுதியில் தோன்ற மீண்டும் அவனுடல் இறுகியது.

 

ஷர்வாதிகரன் யாருக்கும் பயப்படுபவன் அல்லவே.

 

என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் திடம் அவனுக்கு உண்டு.

 

அந்த இடத்தில் இருக்கவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல் உச்சபட்ச கோபத்துடன் அமர்ந்திருந்தான் ஷர்வாதிகரன்.

 

அவளோ ஒவ்வொரு நொடியையும் ரசித்து வைப் செய்து கொண்டிருந்தாள்.

 

இவர்கள் இருவரையும் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த திவாகருக்கு உள்ளே உதறல் எடுத்தது.

 

‘யப்பா சாமி இந்த மேடம் பொய் சொல்லி பணத்தை வாங்கினதுக்கு நமக்குதான் பாஸ் தண்டனை கொடுப்பாரோ தெரியலையே…. வேற ஏதாவது பண்ணி இவங்கள இந்த ஃபங்ஷனுக்கு வரவிடாம பண்ணி இருக்கலாம்… ச்சை.. இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு…. இனி என்ன நடக்கப் போகுதோ…?’ என மனதிற்குள் எண்ணியவாறு மறுபக்கம் திரும்பியவன் அவன் இருந்த இருக்கைக்கு இரு இருக்கைகள் தள்ளி அவனுக்கு சற்றும் குறையாத பதட்டத்தோடு அமர்ந்திருந்த மோகஸ்திராவின் பிஏ குருவைப் பார்த்தான்.

 

‘அடப்பாவி நீயும் வந்திருக்கியா…?’ என எண்ணியவன் கோபம் கொப்பளிக்க வேகமாக எழுந்து அவன் அருகே சென்று அமர்ந்தவாறு,

 

“யோவ் உங்க மேடம் பணமே வாங்க மாட்டான்னு ரொம்ப ஓவரா பில்டப் கொடுத்த…? ஆனா ஐம்பது லட்சம் பணத்தையும் வாங்கிட்டு இப்படி ஃபங்ஷனுக்கு வந்து ஸ்டைலா உக்காந்திருக்காங்களே இதெல்லாம் நியாயமா…?” என கோபத்தை உள்ளே அடக்காது திவாகர் அப்படியே கொட்ட,

 

அவனை ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்த குருவோ

“நீ வேற ஏன்யா படுத்துற..? இவங்க எப்போ என்ன பண்ணுவாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்..? உனக்கு தைரியம் இருந்தா இதோ முன்னாடி தான் இருக்காங்க… அவங்ககிட்டயே நேரா போய் கேட்டுக்கோ…” எனக் கூறிவிட்டு அவன் திரும்பிக் கொள்ள திவாகருக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது.

 

“இதுக்கெல்லாம் என்னோட பாஸ் வட்டியும் முதலுமா உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பாருடா…” என திவாகர் கோபத்தோடு கூற,

 

“ஓஹோ 50 லட்சம் பணத்துக்கு உங்க பாஸ் வட்டி கூட கொடுப்பாரா…?” என குரு வாயைப் பிளந்த வண்ணம் கேட்க,

 

அப்படியே அவனுடைய தலையைப் பிடித்து இருக்கையோடு மோதி விடலாம் போல எண்ணம் தோன்றி விட்டது திவாகருக்கு.

 

இவனுடன் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் விருது வழங்குவதற்காக மோகஸ்திராவை மேடையில் அழைக்க தன்னுடைய கவனத்தை அங்கே பதித்தான்.

 

அவளோ தனக்கு அருகே இருந்தவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் இரண்டு அடிகள்தான் முன்னே வைத்திருப்பாள் அதற்குள் அவளால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறி தரையில் விழுந்து விட இப்போது அவளை ஏளனமாகப் பார்ப்பது அவனுடைய முறையாகிப் போனது.

 

அவள் நடக்கும் போது வேண்டும் என்றே தன்னுடைய காலால் அவளுடைய காலை இடறிவிட்டவன் அவள் கீழே விழுந்ததும் தன்னுடைய ஒற்றைக் காலை மடக்கி தன் மடியில் வைத்து தூசி தட்டுவது போல பாவனை செய்ய அவளுக்கோ அவமானத்தில் முகம் சிவந்தது.

 

சிலர் அவள் விழுந்ததைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள இன்னும் சிலரோ அவளுடைய முகத்திற்கு முன்னரே சிரித்து வைத்தனர்.

 

அடுத்த நொடி குருவோ வேகமாக எழுந்து அவள் அருகே செல்ல மேடையின் அருகே நின்ற ஒரு சிலரும் அவளை நோக்கி ஓடி வந்திருந்தனர்.

 

கேமராக்களின் ஒளிவெள்ளம் அவள் மீது பாய தடுமாறி விழிகளை சுருக்கிக் கொண்டவளை நோக்கி தன் கரத்தை நீட்டியவன்,

 

“பாத்து நடக்கணும்… இல்லன்னா இனி இப்படித்தான் அடிக்கடி விழுவீங்க மிஸ் மோஹஸ்திரா…” என பொருள் பொதிந்த அர்த்தத்தோடு அவன் கூற,

 

ஒரு கணம் தன்னுடைய விழிகளை நிதானமாக மூடித் திறத்தவள் தனக்கு முன்பு நீண்ட அவனுடைய கரத்தை பிடிவாதமாக மறுத்துவிட்டு தானே சில நொடிகளில் எழுந்து நின்றாள்.

 

அடுத்த சில நொடிகளில் அவளுடைய இதழ்கள் கம்பீரமான புன்னகையை தத்தெடுத்துக் கொண்டன.

 

சற்று முன்பு அவள் கீழே விழுந்தது யாவும் கற்பனையோ என அனைவரும் எண்ணத்தக்க ஒய்யாரமாக நடந்து சென்று மேடையில் அவள் ஏறி நிற்க அவனுடைய விழிகள் இம்மியளவும் நகராது அவளையேதான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

 

அடுத்த சில நிமிடங்களில் மிகுந்த கௌரவிப்போடு அந்த வருடத்திற்கான முதல் தர தொழிலதிபர் விருது அவளுக்கு வழங்கப்பட,

 

“எக்ஸ்கியூஸ் மீ காய்ஸ்… இந்த அவார்டை மிஸ்டர் ஷர்வாதிகரன் கையால எனக்குக் கொடுத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..” என அவள் கூற அடுத்த நொடியே மேடையில் அவனுடைய பெயர் அழைக்கப்பட்டது.

 

ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளி விட்டவன் எழுந்து மேடை ஏறினான்.

 

இத்தனை வருடங்களும் அவன் தக்கி வைத்த அந்த அழகிய விருது அவனுடைய கரங்களால் அவளுக்கு கொடுப்பதற்காக தயாராக்கப்பட்டது.

 

வெண்ணிற கண்ணாடியால் ஆன அந்த விருதை அவனுடைய விரல்களோ அழுத்தமாக பற்றிக் கொண்டன.

 

தொழிலில் மோதிக் கொள்ளும் இரண்டு சிங்கங்களும் மேடையில் அருகருகே நிற்பதைக் கண்ட அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவனோ,

 

“மேடம் தி கிரேட் ஷர்வா சாரையே தோற்கடிச்சு இந்த வருஷம் அவார்ட் வாங்கிட்டீங்க.. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..?” எனக் கேட்டான்.

 

ஷர்வாவின் விழிகள் ஒரு நொடி

அவனைக் கூர்மையாகத் தீண்டி விட்டு மீண்டும் அவளை நோக்கித் திரும்பியது.

 

பாவம் கேள்வி கேட்கும் உற்சாகத்தில் இருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளனோ ஷர்வாவின் கூர்மையான விழி வீச்சைப் பார்க்கவே இல்லை.

 

“என்னை மாதிரி திறமைசாலியை உங்க கிரேட் ஷர்வா சார் இதுவரைக்கும் மீட் பண்ணலைன்னு நினைக்கிறேன்..” என எள்ளல் ததும்ப கூறினாள் மோஹஸ்திரா.

 

“புரியல மேடம் ஷர்வா சாருக்கு திறமை இல்லைன்னு சொல்ல வர்றீங்களா..?” என அதிர்ந்து போய் கேட்டான் அவன்.

“என்கூட போட்டி போடுறதுக்கு திறமை மட்டுமில்ல தகுதியும் வேணும்.. அது இங்க இருக்க யாருக்கும் இல்லை..” என்றவள் இதழ்களைப் பிதுக்கி கையை விரிக்க அவளுடைய பதிலைக் கேட்டு அங்கே இருந்த ஏனைய தொழிலதிபர்களோ கொதித்துப் போக,

 

ஷர்வாதிகரனின் விழிகளோ அவளை ஆழ்ந்து பார்த்தன.

 

அந்த ஆழ்ந்த பார்வையின் வீரியம் என்னவென்று அவள் அப்போது உணர வாய்ப்பில்லை தானே..?

அவனுடைய ஒற்றைக் கரமோ சீற்றத்தில்  கரத்தில் வைத்திருந்த விருதின் மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது.

 

சூழ்நிலையின் தீவிரம் மிக மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளனோ விருதை வழங்கும்படி அவசர அவசரமாக அறிவிக்க ஒட்டுமொத்த கோபத்தையும் அந்த விருதின் மீது தன்னுடைய அழுத்தத்தால் காண்பித்த ஷர்வாவோ ஒற்றைக் கரத்தால் தூக்கி அந்த கண்ணாடியாலான விருதை அவளிடம் கொடுத்தான்.

 

அதனை அவள் தன்னுடைய கரத்தில் பெருமிதத்தோடு வாங்கிய அடுத்த நொடி அவளுடைய அழகிய கரங்கள் தாங்கிப் பிடித்திருந்த அந்த விருதோ சடசடவென நொறுங்கி கண்ணாடித் துண்டுகளாக தரையில் சிதறின.

 

அதிர்ந்து போய் நொறுங்கிப் போன அந்த விருதை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

 

ஒரு நொடி அங்கிருந்த அனைவரும் என்ன நடந்தது எனப் புரியாது ஸ்தம்பித்துப் போக வேகமாக அவனுடைய கரத்தைப் பார்த்தாள் மோகஸ்திரா.

 

மிக உறுதியாக கண்ணாடியாலான இந்த விருது உடையும் அளவிற்கு அவ்வளவு அழுத்தத்தை தன் கரத்தின் மூலம் அவன் கொடுத்திருக்கிறான் என்பது புரிய அவளுக்கு மலைப்பாக இருந்தது.

 

அதிர்ந்து நின்றவளின் அருகே வந்தவன் “உன்ன மாதிரியே இதுவும் லோ குவாலிட்டின்னு நினைக்கிறேன்… இட்ஸ் ஓக்கே… எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துட்டுப் போ..” எனக் கூறிவிட்டு கம்பீரமான நடையுடன் அவன அந்த அரங்கத்தை விட்டு வெளியேறிவிட அவளுக்கோ அவமானத்தில் முகம் கன்றிப் போனது.

 

உடைந்த அந்த கண்ணாடித் துண்டுகளின் மீது தன்னுடைய கீல்ஸ் அணிந்த பாதங்களை வைத்து அழுத்தியவள் அடுத்த கணமே அந்த அரங்கத்தை விட்டு வேகமாக வெளியேறினாள்.

 

இவர்களுடைய முதல் சந்திப்பே முற்றிலும் கோணலாகிப் போனது.

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

இந்த அதிரடிக்காரர்களுக்கு மறக்காம லைக் போடுங்க..

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!