பரீட்சை – 3
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உயிரை காணவில்லை
உடல் தேடி
அலைகிறதே
நினைவை காணவில்லை
மனம் தேடி
அலைகிறதே..
மணத்தை காணவில்லை
மலர் தேடி
அலைகிறதே..
கரையை காணவில்லை
கடல் தேடி
அலைகிறதே..
கனவில் கண்ட
ஒரு நிகழ்வு
காட்சி ஆகிப்
போனதேனோ..?
நினைக்கவும்
பயந்த ஒன்று
நிகழ்ந்துவிட்ட
நேரமிதுவோ…?
###############
எங்கே போனாயடி என்னுயிரே…!!
தன் பள்ளிக்குச் சென்ற தேஜஸ்வினியின் மனமோ ராமையே நினைத்துக் கொண்டிருந்தது.. அவன் கையை விட்டு தன் கையை பிரித்த போது அவளுக்கு ஏதோ தன் உயிரையே பிரிந்து வந்தது போல் மனம் கலக்கமுற்று இருந்தது…
தன் வேலையில் மனம் ஓடாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.. பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் போது கூட ஏதோ யோசனையில் அவ்வப்போது அவள் உறைந்து விட பிள்ளைகளும் “மிஸ் மிஸ்.. இது எப்படி பண்ணனும் மிஸ்?” என்று பல முறை கேள்வி கேட்ட பிறகே சுய நினைவுக்கு வந்து தொடர்ந்து பாடம் நடத்தினாள்..
வகுப்பறையில் இப்படி இருப்பது சரி இல்லை என்று உணர்ந்தவள் ஆசிரியர்களின் அறைக்கு சென்று அப்படியே மேஜையில் தலை கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்..
தன் சக ஆசிரியையும் நெருங்கிய தோழியுமான மகா அவள் அருகில் வந்து அமர்ந்தாள்..
“ஏ தேஜூ.. என்னடி ஆச்சு? என்ன..? செகண்ட் ஹவரே வந்து படுத்துட்டே.. உடம்பு சரியில்லையா?”
மகாவின் பக்கம் திரும்பி “மகா.. என்னால ரொம்ப முடியல டி… ரொம்ப தலை வலிக்குது.. எனக்கு பதில் அடுத்த கிளாஸ்க்கு நீ போறியா?” தன் நெற்றியை விரல்களால் அழுத்தமாக வருடியபடி கேட்டாள் தேஜூ..
“ஏய் தேஜூ.. என்னடி ஆச்சு? நீ இவ்ளோ டல்லா இருந்து நான் பார்த்ததே இல்லையே… தலைவலி இருந்தா கூட எப்படியோ சிரிப்பை வர வச்சுட்டு கிளாசுக்கு வருவியே… என்ன ஆச்சு?”
“இல்லடி ரெண்டு நாளா ஒரே கெட்ட கெட்ட கனவா வருது.. நான் ராமை பிரிஞ்சிடுற மாதிரி கனவு வருது… அதான் கொஞ்சம் பயமாவும் இருக்குடி. இன்னிக்கு காலையில இருந்து ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு மனசுக்கு தோணிக்கிட்டே இருக்கு.. அதனால தான் என்னால எதிலயுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியல… சரி.. எனக்கு பதிலா நீ அந்த தெர்ட் பி கிளாஸ்க்கு போயிட்டு வரியா?” என்று கேட்கவும் “ஒன்னும் பிராப்ளம் இல்ல.. நான் பாத்துக்கிறேன்..” என்றாள் மகா..
அதற்குள் தன் கைபேசி சிணுங்கவும் அதை எடுத்து பார்த்தவள் ராம் சரணிடம் இருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருப்பதை பார்த்து இதழ் விரித்து பிரசன்னமானாள்..
அந்தக் குறுஞ்செய்தியில் “எனக்கு என்னமோ இன்னிக்கு பேங்குக்கு வந்ததிலிருந்து உன்னை பாக்கணும் போலவே இருக்கு.. அதான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்ணி வச்சிருக்கேன்.. நான் ஒரு அட்ரஸ் அனுப்புறேன்.. அங்க வந்துரு.. அங்க வந்தேன்னா உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு.. வந்துடுறியா?🥰😍”
அவனுடைய குறுஞ்செய்தி கேட்கவும் அவளோ “நான் ஏற்கனவே கிளம்பிட்டேன் ராம் 😍🥰😘 வந்துட்டே இருக்கேன்” என்று அவனுக்கு மறு செய்தி அனுப்பி விட்டு முகம் முழுவதும் பிரகாசத்துடன் மகா பக்கம் திரும்பினாள்..
“ஏய்.. மகா… என் ஆள் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு.. எனக்கு சர்ப்ரைஸ் பிளான் பண்ணி இருக்காராம்.. நான் இன்னைக்கு அப்படியே லீவ் போட்டுட்டு கிளம்பி போக போறேன்.. மிச்ச கிளாஸையும் நீயே பார்த்துக்கோடி.. நான் ஆஃபீஸ்ல சொல்லிட்டு ஒரு லெட்டர் குடுத்துட்டு போறேன்.. ப்ளீஸ் டி” என்று சொன்னவளை “இவ்வளோ நேரம் உன் முகத்தை பார்க்கவே பிடிக்கல.. இப்பதான் உன் முகத்தில சந்தோஷத்தை பார்க்கிறேன்.. போயிட்டு வாடி.. நீயே லீவ் போட மாட்ட.. அதிசயமா நீயே லீவு போட்டுட்டு எங்கேயோ உன் ஆளு கூட டைம் ஸ்பென்ட் பண்ணப் போறேன்னு சொல்ற.. போய்ட்டு வா.. நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா.. இங்க எதை பத்தியும் கவலப்படாத.. நான் பாத்துக்குறேன் உன் கிளாஸ் எல்லாம்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் மகா..
ஏற்கனவே தான் செல்லவேண்டிய முகவரியை ராம் அனுப்பி இருக்க
வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து குறுஞ்செய்தியில் தன்னவன் அனுப்பிய முகவரியை நோக்கி வண்டியை செலுத்த சொன்னாள்..
அந்த முகவரிக்கு வந்து ஆட்டோ நின்ற இடம் ஒரு பெரிய மாளிகையாய் இருந்தது..
“இது யாரோட வீடு? ராம் எதுக்கு இங்க வர சொன்னாரு நம்மள? ஒரு வேளை இங்கே ஏதாவது சர்ப்ரைஸ் பிளான் பண்ணி வச்சிருப்பாரு..” என்று எண்ணியவள் மெதுவாக அந்த மாளிகையின் வாயிற் கதவின் முன் போய் நின்றாள்..
அங்கே இருந்த காவலரோ அவள் அருகில் வந்து “வாங்க மேடம்.. உங்களுக்காக தான் சார் உள்ள காத்திட்டு இருக்காரு.. போங்க.. உள்ள போங்க..” என்று கதவை திறந்து விட்டார்..
“நம்மாளு பார்க்க தான் சிம்பிளா இருக்காரு.. இவ்வளவு பெரிய பெரிய வீடு வச்சிருக்கிற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்கு அவருக்கு… அவருக்காக எனக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறாங்க..” என்று எண்ணியபடி “சரி.. உள்ள போய் பார்க்கலாம்..” என்று அந்த மாளிகையின் உள்ளே போனாள்..
உள்ளே சென்றவள் மாளிகையின் வாயிலில் எல்லா இடங்களிலும் எழுதி வைத்திருந்த வாசகங்கள் தன்னவனின் காதலை பறை சாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்தாள்.. அங்கங்கே தோரணங்கள் போல பல வண்ண விளக்கொளியில் மினுமினுவென “என் உயிர் காதலியே வருக” என்றும் “வெல்கம் மை லவ்.. வெல்கம் மை லைஃப்..” என்றும் தொங்க விடப்பட்டிருக்க தரையிலோ மலர் பாதை அமைக்கப்பட்டு இருந்தது..
அதில் கால் வைத்து நடக்க மனம் இல்லாமல் அவள் ஓரமாக நடந்து உள்ளே வர அங்கே உள் கதவின் முன்னே பூக்களாலே தன் முகம் வரையப்பட்டு அதன் கீழே “என்னுயிரே வா” என்று எழுதி இருந்தது..
“ஐயோ… இது என்ன.. திடீர்னு ராம் இவ்ளோ ரொமாண்டிக்கா ஆயிட்டாரு..’ என்று எண்ணியவாறு சிரித்துக் கொண்டே கதவை லேசாக தள்ளி உள்ளே நுழைந்ததும் அங்கு வீடு முழுவதும் ஜெகஜோதியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது..
உள்ளே எங்கும் அழகாக தோரணங்கள், பலூன்கள், அலங்கார விளக்குகள் என அனைத்தும் போடப்பட்டு அங்கே காதுக்கு இனிய மெல்லிய இசை இசைத்துக் கொண்டிருந்தது… இவள் உள்ளே நுழைந்த நேரம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் எண்ணம் உன் வண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்..
நீலம் கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி..
என்ற பாடலை இசைத்துக் கொண்டிருந்தது..
மெதுவாக உள்ளே வந்தவள் அங்கே எதிரில் இருந்த ஒரு மேஜையில் கேக் வைக்கப்பட்டிருக்க அந்த கேக்கில் “எனது உயிர் காதலி அஸ்வினிக்கு..” என்று எழுதியிருந்தது..
“ராம் செல்லம் நம்மளை தேஜுன்னுதான கூப்பிடுவாரு.. இது என்ன இதுல அஸ்வினின்னு எழுதி இருக்கு… ம்ம் ம்ம் ம்ம்… புதுசா அஸ்வினிங்கற பேர் பிடிச்சு போச்சு போல இருக்கு… இதுவும் நல்லாத்தான் இருக்கு.. இனிமே இப்படியே கூப்பிடட்டும்” என்று வாய் விட்டு சொன்னவள் அந்த கேக்கின் பின்னே சுவற்றில் ஒரு பெரிய படம் ஒன்று மாட்டி இருப்பதையும் அது திரை போட்டு மறைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தாள்..
அந்தப் படத்தின் கீழே “என்னோடு என்னவள்” என்று எழுதியிருந்தது..
“இவரு என்ன.. ஒரே நாள்ல நம்பள திக்கு முக்காட வச்சிருவார் போல இருக்கே.. ரொமான்ஸ்ல பின்றாரு… கொஞ்சம் ஓவர் லோடா இல்ல போயிட்டு இருக்கு..” என்று நினைத்தவள் அந்த திரையை விலக்க இருந்த கயிற்றை பிடித்து இழுக்கவும் மெதுவாக அந்த திரை விலக ஆரம்பித்தது..
திரை விலகவும் அதன் பின்னே இருந்த படத்தை பார்த்தவள் அப்படியே உறைந்து நின்றாள்..
முகம் தெரியாத ஒரு ஆணின் பக்கத்தில் அவன் அணைப்பில் தான் இருப்பது போல் ஒரு பெரிய படம் அந்த சுவற்றில் மாட்டப் பட்டிருந்தது..
அதை பார்த்தவள் கண்களோ அதிர்ச்சி, ஏமாற்றம், துக்கம், கேள்வி என பல உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டு இருந்தது..
############
இங்கே வங்கியில் இருந்த ராம் சரணுக்கோ வங்கிக்குள் நுழைந்ததிலிருந்தே இருப்பு கொள்ளவில்லை.. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஏனோதானோ என்று செய்து கொண்டிருந்தவன் பல தவறுகளும் செய்து திருத்தி திருத்தி ஒரு நிலையில் தன்னையே நொந்து கொண்டான்..
‘என்ன ஆச்சு எனக்கு? என்னமோ மனசே சரியில்ல..’ என்று எண்ணியவன் பக்கத்தில் சிவா வந்து அமர்ந்தான்..
“டேய் ராம்.. என்னடா ஒரு மாதிரி இருக்க? ஒரே ரெஸ்ட்லெசா இருக்க? என்ன ஆச்சு?” என்று கேட்கவும் “அதை ஏன்டா கேட்கிற? இன்னிக்கு காலையிலிருந்து என்னவோ ஒரு மாதிரி இருக்குடா.. மனசே சரியில்ல.. ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோணிட்டிருக்குடா.. ” என்று புலம்பினான்..
“நீ அப்படி எல்லாம் யோசிக்க மாட்டியே டா.. என்ன ஆச்சு உனக்கு? சரி வா.. போய் எதிரே இருக்குற டீ கடையில டீ குடிச்சிட்டு வரலாம்.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்ணுவே” என்று சொல்லி அவனை தேநீர் குடிக்க அழைத்து சென்றான்..
தேநீர் குடிக்க சென்றவன் தன் பக்கத்தில் கைபேசியை அங்கே மேஜை மேல் வைத்துவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தான்..
அவன் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது கைபேசி மூலம் தேஜூவை அழைக்கலாம் என்று தன் கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன்.. பார்த்த நொடியில் அது தன்னுடைய கைபேசி இல்லை என்று புரிந்து கொண்டான்..
“டேய் சிவா.. இது என்னோட ஃபோன் இல்லடா.. இங்க தான்டா இப்போ வந்து வெச்சேன்.. இது யாரோட ஃபோன்னு தெரியலையே..” என்று சொல்லி அந்த கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் அருகில் ஒரு ஆள் வந்து “ஹலோ சார்.. சாரி.. நான் இங்க உங்க பக்கத்துல உக்காந்து டீ குடிச்சிட்டு இருந்தேன்.. உங்க ஃபோனும் என் ஃபோனும் ஒரே மாதிரி இருக்கவே என் ஃபோனுக்கு பதிலா உங்க ஃபோனை மாத்தி எடுத்துட்டு போயிட்டேன்.. சாரி சார்.. இந்தாங்க” என்று அவன் கையில் இருந்த ராமின் கைப்பேசியை அவன் இடத்தில் கொடுத்தான்..
“ஓ.. அப்படியா.. இட்ஸ் ஓகே சார்.. இந்தாங்க உங்க ஃபோன்..” என்று அவர் கைப்பேசியை திருப்பி கொடுத்தவன்.. தன் கைபேசியில் இருந்து தேஜஸ்வினிக்கு அழைத்தான்.. அவள் கைப்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கவே மிகவும் சோர்வாகி போனான்..
சிவாவிடம் “சிவா தேஜூவோட ஃபோன் அடிச்சிட்டே இருக்குடா.. ஏன்னே தெரியல.. எனக்கு என்னவோ கொஞ்சம் டென்ஷனா இருக்குடா..” என்றான் கவலை தோய்ந்த முகத்துடனேயே..
“டேய் அவங்க கிளாசுக்கு எதுக்காவது போயிருப்பாங்கடா.. அதனால ஃபோன் அடிச்சிட்டே இருக்கும்.. ஃபோனை ஸ்டாஃப் ரூம்லயே வச்சுட்டு போயிருப்பாங்க.. நீ ஏண்டா இப்படி இருக்க?” என்று கேட்டான் அவன்..
“இல்லடா.. எனக்கு என்னவோ எதுவுமே சரியா படலை… ஒருவாட்டி தேஜூவை போய் பாத்துட்டு வந்தா எனக்கு கவலை இருக்காதுன்னு தோணுது”
“அப்படின்னா போய் பாத்துட்டு வா.. வேணுன்னா ஒரு ஒன் ஹவர் பர்மிஷன் கேட்டுக்கோ.. போய் உன்னோட தேஜூவை பாத்துட்டு வா.. அதுக்கப்புறம் நிம்மதியா வந்து வேலை செய்யலாம்ல?”
“நீ சொல்றதும் கரெக்ட் தான்டா.. சரிடா.. நான் போய் பர்மிஷன் போட்டுட்டு தேஜூவை போய் பாத்துட்டு வரேன்”
அவனிடம் சொல்லிவிட்டு தேஜஸ்வினியை பார்க்க அங்கிருந்து கிளம்பினான் ராம் சரண்..
தேஜஸ்வினியின் பள்ளிக்கு மதியம் ஒரு மணிக்கு வந்தவன் அது மதிய உணவுக்கான இடைவேளை என்று தெரிந்ததால் நேரே அவளுடைய ஆசிரியர் அறைக்கு சென்றான்..
அங்கே மகா மட்டும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்கவும் உள்ளே நுழைந்தவன் “ஹாய் மஹா.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்..
“ஹலோ ராம்.. என்ன.. இங்க வந்து இருக்கீங்க? நீங்க கூப்பிட்டீங்கன்னு உங்க ஆளு என்னடான்னா லீவு போட்டுட்டு போய் இருக்கா.. நீங்க என்னடான்னா இங்க வந்து இருக்கீங்க? என்ன.. ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுறீங்களா?” என்று கேட்ட மகாவை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்..
“நான் தேஜுவை கூப்பிட்டேனா?” என்று கேட்டவனை பார்த்து மகாவும் அதிர்ச்சிக்கு உள்ளானாள்..
தொடரும்…
வாசகர்களுக்கு வேண்டுகோள்:
உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும் ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!