6 . மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(17)

வரம் – 06

‘என்னடா இது தியேட்டர்ல படம் பாக்குற மாதிரி அந்த மேடம் போட்டோவை இவ்வளவு பெருசா போட்டு பார்த்துகிட்டு இருக்காரு.. இந்த போட்டோல கூட அந்த மேடம் முறைச்சிக்கிட்டுதான் இருக்கு..’ என எண்ணியவன்
“பாஸ் மே‌ ஐ கம் இன்..?” என சற்றே சத்தமான குரலில் கேட்டான்.

“யு மோரான்… அதான் உள்ள வந்துட்டேல்ல அதுக்கு அப்புறம் என்ன கேள்வி..?” எரி கற்களாய் வந்து விழுந்தன அவனுடைய வார்த்தைகள்.

“சா.. சாரி பாஸ்… நான் வேணும்னா மறுபடியும் வெளியே போய்ட்டு அனுமதி கேட்டுட்டு உள்ளே வரவா..?” என கேட்ட திவாகரை அழுத்தமாகப் பார்த்தவன் சரி என தலை அசைக்க கொடுமை டா என தனக்குள் முணுமுணுத்து விட்டு மீண்டும் அந்த அறைக்கு வெளியே சென்று நின்றவன் கதவைத் தட்டி,

“பாஸ் மே ஐ கம் இன்..?” என பவ்யமாகக் கேட்டான்.

“நோ கெட் லாஸ்ட்…” என பதில் வந்தது அவனுக்கு.

‘அடப்பாவி சாரே…. இன்னைக்குள்ள டீடெயில்ஸ் வேணும்னு சொல்லிட்டு இப்போ உள்ள வர வேண்டாம்னு சொன்னா நான் எப்படி இதைப் பத்தி சொல்றது…?’ என எண்ணியவன் அந்த இடத்திலேயே நின்று,

“மோஹஸ்திரா மேடத்தைப் பத்தி டீடெயில்ஸ் கேட்டீங்களே… எல்லாத்தையும் இந்த பென்ட்ரைவில் சேவ் பண்ணி கொண்டு வந்துருக்கேன்… இப்போ நான் உள்ளே வரவா சார்..? இல்ல அப்படியே என் வீட்டுக்குக் கிளம்பவா..?” என அழுது விடுபவன் போல கேட்க அடுத்த கணம் வேகமாக திறந்தது அவனுடைய அறைக் கதவு.

தானே எழுந்து வந்து அந்தக் கதவைத் திறந்தவன் திவாகரை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்ட அதிர்ந்து பார்த்தான் திவாகர்.

‘ஐயோ இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி திடுதிப்புன்னு முன்னாடி வந்து நின்னு கையை நீட்டுறாரு..?’ என அவனை அதிர்ந்து பார்த்தான் திவாகர்.
“இடியட் எதுக்கு இப்போ இப்படி ஷாக்கா பாக்குற..? பென்ட்ரைவ்வ கொடு…”

“ச.. சரி பாஸ்… இதோ…” என்றவன் அவனுடைய கரத்தில் பென்ட்ரைவை கொடுத்த அடுத்த நிமிடம் அவனுடைய அறைக்கதவு படார் என்ற சத்தத்தோடு பூட்டிக்கொண்டது.

“சம்திங் ராங்…” என முணுமுணுத்த திவாகரோ அங்கிருந்து சென்றுவிட அறைக்குள் நுழைந்து திவாகர் கொடுத்த பென்ட்ரைவை தன்னுடைய மடிக்கணனியில் சொருகிக் கொண்டவன் அவளைப் பற்றிய விடயங்களை ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினான்.

இந்தியாவில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது முழுக்க அமெரிக்காவில் என்பதை அறிந்து கொண்டவன் இந்தியா வந்த அடுத்த மாதமே தன்னுடைய விருதை தட்டி பறித்து விட்டாளே என எரிச்சல் அடைந்தான்.
அவளைப் பற்றி அனைத்து விடயங்களையும் தன் மூளையில் சேகரித்து விட்டு அவளுடைய பிஸ்னஸ் பற்றி ஆராயத் தொடங்கியவனுக்கு இன்னும் இரண்டு நாட்களில் அவள் கலந்து கொள்ளவிருக்கும் மிகப்பிரமாண்டமான மீட்டிங் பற்றி தெரிய வந்தது.

இதற்காக அவள் இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவனுக்கு வன்மம் நிறைந்த புன்னகை இதழ்களில் தோன்றியது.

‘இந்த மீட்டிங்ல நீ எப்படி கலந்துக்கிறேன்னு நான் பார்க்கிறேன்.. உன்னோட ரெண்டு வருஷ கனவு கண்ணாடி மாதிரி நொறுங்கிப் போகப்போகுது..‌ இந்த ஷர்வாவ அவமானப்படுத்தினதுக்கு பதிலடிய நீ அனுபவிச்சுத்தான் ஆகணும்..’ என மனதுக்குள் கருவிக்கொண்டவன் நடக்கப் போகும் அவளுடைய உலகளாவிய தொழில் சந்திப்பை பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டு வரும்படி திவாகருக்கு அலைபேசியில் கட்டளை அனுப்ப,

நிம்மதியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவனுக்கு மீண்டும் தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது.

“அட ராமா எனக்கு லீவே கிடையாதா…? ஆபீஸ் முடிஞ்சதும் பொண்டாட்டி மாதிரி என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறாரு.. நைட் டைம் ஆனதுக்கு அப்புறம் கூட என்கிட்ட வேலை வாங்கினா நான் எப்போதான் ரெஸ்ட் எடுக்கிறது..?’ என சலித்துக் கொண்டவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவன் கேட்ட விடயங்களைப் பற்றி ஆராய்வதற்கான முயற்சியைத் தொடங்கினான்.

******
அடுத்த நாள் காலையில் ஷர்வாவின் கிரீன் டீயை எடுத்துக்கொண்டு அவனுடைய அறைக்குள் நுழைந்தார் ஷர்வாவின் அன்னை.

அங்கே சுவற்றில் வெண்ணிற திரையில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் புகைப்படத்தை கண்டு அவருடைய புருவங்களோ ஏகத்துக்கும் உயர்ந்தன.
சோபாவில் சாய்ந்து அமர்ந்தவாறே உறங்கி விட்டிருந்த தன்னுடைய மகனை நெருங்கியவர் ஒரு சில நொடிகள் வேதனையோடு அவனுடைய முகத்தையே பார்த்த வண்ணம் அமைதியாக நின்றார்.

அவனுடைய மனதுக்குள் எத்தனை வலிகள் இருக்கின்றன என்பதை அறிந்தவர் அவர் மட்டும் தானே..
தன்னுடைய உணர்வுகள் விருப்பப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் அடக்கி விட்டு பிஸ்னஸ் பிஸ்னஸ் என சதாகாலமும் ஓடிக்கொண்டிருக்கும் தன் மகனின் மீது அவருக்கு மிகுந்த இரக்கம் சுரந்தது.

படுக்கையில் கூட நிம்மதியாக படுக்காது சோபாவில் சாய்ந்தவாறே உறங்கி விட்டிருந்தவனின் தலையில் தன்னுடைய கரத்தைப் பதித்து அன்பாக வருடி விட்டவருக்கு அந்தப் பெண் யாராக இருக்கக் கூடும் என்ற கேள்வி எழுந்தது.

அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவாறே உறங்கி இருக்கிறான் என்பது புரிய ஒருவேளை காதலாக இருக்குமோ என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

எதுவாக இருந்தாலும் அவனிடமிருந்து வரட்டும் என எண்ணியவர் மெல்ல அவனை வருடிக் கொடுக்க அந்த அன்பான வருடலில் தன் விழிகளைத் திறந்தான் ஷர்வாதிகரன்.

விழிகளை மலர்த்திப் பார்த்தவனுக்கு தன் அன்னையின் முகம் எதிரே தெரிய தானாகவே முகத்தில் புன்னகை அரும்பியது.

“குட் மார்னிங் மாம்….” என்றவன் தன் கை கால்களை நீட்டி மடக்கியவாறு எழுந்து கொள்ள அவனை சிறு கண்டிப்போடு பார்த்தவர்,

“உனக்குத்தான் இவ்வளவு பெரிய பெட் இருக்குல்ல..? ஒழுங்கா போய் அதுல படுத்திருக்க வேண்டியது தானே..? நைட் முழுக்க சோபாலயே படுத்துருக்க.. உடம்பு என்னத்துக்கு ஆகும்..?” என திட்டத் தொடங்கினார் அவர்.

“கட்டாந்தரையில படுத்தா கூட எனக்கு எதுவுமே ஆகாது மா ஜிம் பாடி…” என சிரித்தவாறு கட்டு கட்டாக இருந்த தன்னுடைய புஜங்களைத் தட்டிக் காண்பித்தவன் அவருடைய கரத்தில் வைத்திருந்த கிரீன் டீயை வாங்கி சோபாவின் முன்னே இருந்த டீபாயில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தான்.
அவருடைய பார்வை அடிக்கடி சுவற்றில் மாற்றப்பட்டிருந்த திரையில் தெரிந்த மோஹஸ்திராவின் மீது படிந்து மீள்வதை கண்டவனுக்கு சட்டென ஒரு மாதிரியாகிப் போனது.

‘ஓஹ் ஷிட்… தூங்குறதுக்கு முன்னாடி ஸ்கிரீனை ஆஃப் பண்ணனும்னு நினைச்சுட்டு மறந்து போய் அப்படியே தூங்கிட்டேனே… மாம் என்ன நினைச்சாங்கன்னு தெரியலையே…’ என தனக்குள் எண்ணியவன் வெளியே காட்டிக் கொள்ளாதவாறு இயல்பாக இருக்க
அவனுடைய அன்னையோ “நேத்து என்ன பிரச்சனை…? அவார்ட் ஃபங்ஷன் ல நீ யாரோ ஒரு பொண்ணு கூட பிரச்சனை பண்ணியாமே.. நமக்கு இருக்கிற பிரச்சனை போதாதாடா? நீ வேற எதுக்காக அங்க போய் அவ கூட சண்டை போட்ட..?” என சிறு கண்டிப்போடு அவர் கேட்க,
“நான் சண்டை போட்ட பொண்ணு இவதான் மா…” என திரையில் இருந்த மோஹஸ்திராவின் புகைப்படத்தைக் காட்டினான் அவன்.

“அடப்பாவி சண்டை போட்டுட்டு வந்த பொண்ணோட போட்டோவ எதுக்காக டா இங்க மாட்டி வச்சிருக்க..? நான் கூட ஏதோ லவ்வுன்னு நினைச்சேன்..” என்ற அன்னையைப் பார்த்து முறைத்தவன்
“நானே செம்ம கோவத்துல இருக்கேன் மா… நீங்க வேற என்ன டென்ஷன் பண்ணாதீங்க… கொஞ்சம் கூட மரியாதையே தெரியாத பொண்ணுமா இவ… அவார்ட் ஃபங்ஷனுக்கு வர மாட்டேன்னு சொல்லி என்கிட்ட 50 லேக்ஸ் வாங்கிட்டு என்னையே ஏமாத்திட்டா… சரியான பிராடு…. மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேப்பா…. இவளைப் போய் எவனாவது லவ் பண்ணுவானா…? என்கிட்ட வாங்கின பணத்துக்கும் என்னை ஏமாத்தினதுக்கும் என்னை இன்சல்ட் பண்ணதுக்கும் இவ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்…. அதுவரைக்கும் நான் அவளை சும்மா விடப் போறது கிடையாது…” என்றவனை முறைத்துப் பார்த்தவர்,

“முதல்ல காணாம போன நம்ம பரம்பரை டைமண்ட்ட கண்டுபிடிக்கிற வழிய பாரு… இதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை ஷர்வா….” என்றார்.

“ப்ளீஸ் மாம் நீங்க இதுல தலையிடாதீங்க…”

“அந்தப் பொண்ண நீ எதுவும் பண்ணக்கூடாது அவ்வளவுதான்…” எனக் கட்டளையாகக் கூறினார் அவர்.
இவனைப் பற்றித் தான் அவருக்கு நன்றாகத் தெரியுமே..

கோபத்தில் யாருடைய வாழ்க்கையை என்றாலும் இலகுவில் அழித்துவிடும் குணம் தன்னுடைய மகனுக்கு உண்டு என்பதை அறிந்தவர் இவனால் அந்த பெண் பாதிக்கப்படக்கூடாது என கவலை கொண்டவாறு கூற சட்டென சீற்றத்தில் வெடித்தான் அவன்.

“லீவ் மீ அலோன் மாம்…” என்ற கர்ஜனையோடு அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள அதற்குமேல் அவனிடம் பேச முடியாது என்பதை உணர்ந்து கொண்டவர் சலிப்போடு தலை அசைத்தவாறு அவனுடைய அறையை விட்டு வெளியேறினார்.

“பொண்ணுன்னா பாவம் பார்த்து விட்ரணுமா…? என்னால அவளை சும்மா விட முடியாது…” என தனக்குள் கருவிக் கொண்டவன் தொடர்ந்து இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த தன்னுடைய அலைபேசியை சற்றே கோபத்தோடு திரும்பிப் பார்க்க திவாகரின் அழைப்புகளோடு இன்னும் சிலரின் அழைப்புகளும் தவறவிடப்பட்டிருந்தது.

முதலில் திவாகருக்கு அழைத்தவன்,
“எதுக்காக இத்தனை தடவை கூப்பிட்ருக்க..?” என நிதானம் இழந்த குரலில் கேட்க,

“சார் அந்த மோஹஸ்திரா மேடம் அவார்ட் பங்ஷனுக்கு அவங்க வரக்கூடாதுன்னு நீங்க அவங்கள பிளாக் மெயில் பண்ணதாவும் பணம் கொடுத்து வராம தடுக்க ட்ரை பண்ணதாவும் உங்கள பத்தி தப்பு தப்பா பிரஸ்ல பேட்டி குடுத்து இருக்காங்க.. பிரஸ் உங்கள மீட் பண்றதுக்கு என்கிட்ட பெர்மிஷன் கேட்டுக்கிட்டே இருக்காங்க..‌ இப்ப நான் என்ன பண்ணட்டும் சார்…?” என பதற்றத்தோடு திவாகர் கேட்க “செத்துரு…” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் ஷர்வாதிகரன்.

💜😍🔥😍💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!