9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(25)

வரம் – 09

 

 

அடுத்த அரை மணி நேரத்தில் குருவோ மோஹஸ்திராவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான்.

ஷர்வா மட்டும் அவளைத் தூக்கிக் கொண்டு மறுபக்கம் பாயாது இருந்திருந்தால் உயிருக்கே மிகுந்த ஆபத்தாகிப் போய் இருக்கும் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

இருந்தும் அதன் பின்னர் அவன் நடந்து கொண்ட செயல்களில் வெகுவாய் திகைத்துப் போனாள் அவள்.

எப்படியும் அந்தக் கட்டிடத்திற்கு மறுபக்கம் இருந்த சிலர் தங்களைப் பார்த்திருப்பார்கள் என்பதில் அவளுக்கு இன்னும் சங்கடமும் சீற்றமும் கூடிப்போனது.

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து வெளிவந்ததன் விளைவில் இன்னும் உடல் சற்றே நடுங்குவதை மறைத்துக் கொண்டு உணர்ச்சிகளை தன் முகத்தில் தொலைய வைத்தவள் முதுகில் உண்டான வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு தன்னுடைய தலையில் கரம் பதித்து தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தாள்.

நிச்சயமாக அவளால் இப்போது காரை ட்ரைவ் செய்ய முடியாது.
தலை வேறு வெடித்து விடும் என்பதைப் போல வலிக்கத் தொடங்க தன்னுடைய பயத்தையும் படபடப்பையும் கண்ணீரையும் ஒருபோதும் அங்கே இருப்பவர்களுக்கு காட்டி விடக்கூடாது என்பதில் தன்னை அடக்கிக் கொண்டதால் ஒருவிதமான அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டாள் அவள்.

நடந்து முடிந்த விடயத்தை அறிந்து கொண்ட மீடியாக்களோ அங்கு கேமராக்களுடன் படையெடுக்கத் தொடங்க யாரையும் நிமிர்ந்து பார்த்து பதில் கூறுவதற்கு அவள் சிறிதும் தயாராக இல்லை.
அதே கணம் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தவளுக்கு முன்பு மிகுந்த வேகத்தோடு ஒரு கார் மின்னல் போல வந்து நிற்க அங்கே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவர்களின் கவனம் அவ்வளவு வேகமாக வந்து நின்ற காரில் நிலைத்தது.

மின்னல் போல வந்து நின்ற காரின் கதவை வேகமாகத் திறந்து இறங்கினான் அரவிந்தன்.

அவனுடைய விழிகள் ஏகத்துக்கும் சிவந்து போயிருந்தன.

“பேபி டால்ல்….” என்ற நடுங்கிய அழைப்பில் சடாரென தன் தலையை நிமிர்த்திப் பார்த்தாள் மோகஸ்திரா.

அங்கே வந்து நின்ற தன்னவனைக் கண்டதும் அவளுக்கோ அத்தனை கட்டுப்பாடுகளும் நொறுங்கிப் போயின.

அவளுக்கு உணர்வுகளை அடக்குவது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.

ஆனால் மனதுக்குப் பிடித்த மன்னவன் தன்னைக் காண்பதற்காக ஓடோடி வந்திருக்கிறான் என்றதும் அந்த ஒரு நினைவே அவளுக்கு யானை பலத்தை கொடுக்க சிறு குழந்தை போல நொடியில் மாறிப் போனவள் வேகமாக எழுந்தாள்.

எழுந்த வேகத்தில் முதுகு வலியில் நிற்க முடியாது முழங்கால்கள் மடியத் தொடங்க சட்டென புயல் போல அவளை வந்து இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான் அரவிந்தன்.

அவன் அணைத்த வேகத்தில் அவனுடைய உடல் நடுங்குவது அவளுக்கும் தெரிந்தது.

அவனுடைய அதீத பதற்றத்தில் அவளுக்கோ உள்ளம் உருகியது.

“நீ எதுக்கு இங்க வந்த..? உனக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன்..?” என பதறியவாறு கைகளால் அவளுடைய உடலை முழுவதும் வருடியவன் அவளுக்கு எங்கேனும் அடிபட்டு இருக்கிறதா என வேக வேகமாக விழிகளாலேயே ஆராய அவனுடைய மார்புப் பகுதியில் தன் முகத்தை அழுத்திக் கொண்டவளுக்கு இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த கண்ணீர் வெடித்துக் கிளம்பத் தொடங்கியது.

அங்கே நின்ற மீடியாக்களோ இவர்கள் இருவரின் நெருக்கத்தை படம்பிடிக்கத் தொடங்க இருவருக்கும் அது பற்றிய கவலை சிறிதளவும் இல்லை என்பதைப் போலப் பிணைந்து கொண்டனர்.

“நான் ரொ… ரொம்ப பயந்துட்டேன் அர்வி..” என்றவளின் விசும்பல் அவனை மேலும் உடைக்க அவளை மேலும் தனக்குள் புதைத்து விடுபவன் போல தன் உடலோடு அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.

அந்த ஒரு நிமிடத்திலேயே அவர்களின் மீது கேமராக்களின் ஒளி வெள்ளம் வேகமாகப் பாய அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவள் சட்டென அவனை விட்டு விலகினாள்.

“ஓ காட்… என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போ அர்வி…” என அவள் பலவீனமான குரலில் கூற அடுத்த நொடியே சிறிதும் தயங்காது அவளைப் பூவைப் போல தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொண்டவன் வேகமாக காரின் அருகே செல்ல குருவோ நீங்காத அதிர்ச்சியோடு காரின் கதவை அவர்களுக்காக விரியத் திறந்து விட்டான்.

அவளை முன்னிருக்கையில் இருத்தி விட்டு குருவிடம் தலையசைத்து விடை பெற்றவன் ட்ரைவர் சீட்டில் வந்த அமர்ந்ததும் காரோ மிதமான வேகத்தில் அங்கிருந்து கிளம்பத் தொடங்கியது.

“நீ ஏன் அர்வி என்னைப் பாக்க வந்த…? நம்ம ரிலேஷன்ஷிப் யாருக்குமே தெரியக்கூடாதுன்னு நாம முடிவு எடுத்தத மறந்துட்டியா…? இப்போ பிரஸ் நம்மள பாத்துட்டாங்க… இனி எல்லா நியூஸ் பேப்பர்லயும் நம்ம நியூஸ்தான் வரும்…” என சற்றே சலிப்போடு கூறினாள் அவள்.

“ப்ச்… நீ இப்படி ஒரு நிலைமைல இருக்கும்போது என்னால எப்படி உன்னைப் பாக்காம இருக்க முடியும்..? நான் நானாவே இல்ல பேபி டால்…” என்றவன் அவளின் முகச் சுழிப்பைக் கண்டு அவளுக்கு இன்னும் வலி குறையவில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

“ஓஹ் ஷிட்.. இன்னும் உனக்கு வலிக்குதா…?”

“ம்ம்… பெயின் இருக்கு..”
அடுத்த நொடி அவனுடைய காரோ அருகே இருந்த மருத்துவமனையை நோக்கிச் செல்ல,

“ஹேய் கமான் அர்வி…. எனக்கு ஒன்னும் இல்லப்பா… நாம வீட்டுக்குக் கிளம்பலாம்…” என்ற மோஹஸ்திராவின் வார்த்தைகள் அவனிடம் எடுபட மறுத்தன.

அவள் எவ்வளவோ கூறியும் கூட அவளை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று வைத்தியரிடம் காண்பித்தவன் வலிக்கு தோதான மருந்தை எடுத்ததன் பின்னரே சமாதானம் ஆகினான்.

வழமை போல இன்றும் அவனுடைய காதலில் கரைந்து போனவளுக்கு விழிகளில் மீண்டும் கண்ணீர் பெருகியது.

எவ்வளவுதான் தன்னை பலசாலி போல காட்டிக் கொண்டாலும் அரவிந்தனின் அருகில் மட்டும் உடைந்து போய் சிறு குழந்தை போல அழுவதை அவளால் எப்போதும் தவிர்க்க முடிவதில்லை.

கண்ணீரோடு காரில் அமர்ந்திருந்தவளின் கரத்தைப் பற்றி தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவன்,

“தயவு செஞ்சு பத்திரமா இரு பேபி… இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு எதுக்குப் போன..? உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால வாழ முடியுமா…? பிஸ்னஸ் முக்கியம்தான் அதுக்காக இப்படி ரிஸ்க் எடுக்காத ப்ளீஸ்…” என அவன் அக்கறையுடன் கூற அவளுக்கோ உள்ளம் தித்தித்தது.

எந்தப் பெண்ணுக்குத்தான் தன் மனம் நிறைந்த மன்னவன் தன்னைப் பற்றிய அக்கறையோடு கூறும் வார்த்தைகள் கசக்கச் செய்யும்..?

அவளுக்கோ அவனுடைய வார்த்தைகள் சர்க்கரைப் பாகாக இனிக்க வாகாக அவனுடைய தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் பேதை.

அவளைச் சுற்றி தன்னுடைய கரத்தைப் போட்டு தோளோடு அவளை அணைத்துக் கொண்டவன்,
“இதெல்லாம் வேணாம் பேபி டால்.. போதும் எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்ட வந்துர்றியா..?” என அவன் ஆதங்கத்தோடு கேட்க அவனை நிமிர்ந்து அவனுடைய விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தவள்
“நாம முன் வெச்ச கால பின் வைக்கவே கூடாது அர்வி… இன்னும் கொஞ்ச நாள்தான் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்… எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேன்…” என்றாள் அவள்.

“எனக்கு என்னவோ அந்த ரெட் ரீபல் டைமண்ட் நம்ம கிட்ட கிடைக்கும்ங்கிற நம்பிக்கையே இல்லாம போயிருச்சு…” என சற்றே சலிப்போடு கூறினான் அரவிந்தன்.

“நான் நெனச்ச விஷயத்தை நடத்திக் காட்டாம விட மாட்டேன்.. அந்த டைமண்ட் நம்ம கைக்கு கண்டிப்பா கிடைக்கும்…” என்றாள் அவள்.

“ஒன்ன மட்டும் உன்னோட மனசுல நல்லா பதிய வெச்சுக்கோ பேபி டால்… உனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா சத்தியமா நான் உயிரோட இருக்கவே மாட்டேன்… நான் உன் மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு உனக்கு நல்லா தெரியும்…. என்னோட காதலோட அளவு எவ்வளவு ஆழமானதுன்னு உனக்குத் தெரியும்ல..? நான் நல்லா இருக்கணும்னா நீ நல்லா இருக்கணும்… நான் ஹாப்பியா இருக்கணும்னா நீ ஹாப்பியா இருக்கணும்…” என அவன் கரகரப்பான குரலில் கூறிக்கொண்டே போக அவளுடைய ஒற்றைக் கரமோ உயர்ந்து அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தை மென்மையாக வருடிவிட்டது.

“ஐ லவ் யூ பா…. உன்னோட காதல் கிடைக்க நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்…. எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான்… நான் நினைச்சத சாதிச்சு முடிச்சதுக்கு அப்புறமா எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு பழையபடி உன்கிட்டயே வந்துடுவேன்… அது மட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணு..” என மென்மையாக கூறியவள் மெல்ல அவனுடைய கன்னத்தில் தன்னுடைய முத்தத்தை சற்றே அழுத்தமாக பதிக்க அடுத்த நொடியே அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான் அரவிந்தன்.

“சாரிடி.. சாரி… நீ எனக்காக தானே இவ்வளவு கஷ்டப்படுற சாரி பேபி டால் ஐ அம் சோ சாரி…” என்றவனே விழிகளில் இருந்து ஒற்றைத் துளி கண்ணீர் வடிந்து அவளுடைய கழுத்தை ஈரமாக்கியது.

*******
குளியலறைக்குள் ஷவரின் கீழே நின்ற ஷர்வாதிகரனின் சிந்தனை முழுவதும் மோகஸ்திராவின் மீதே நிலைத்திருந்தது.

அவனுடைய உதடுகளோ மெல்ல அவளுடைய பெயரை மோஹி என முணுமுணுக்க அவளுடைய இதழ்களில் முத்தமிட்ட நினைவு அவனை சற்றே நிம்மதி இழக்கச் செய்தது.

அத்தனை பேர் இருந்த இடத்தில் அவ்வளவு ஆபத்தான நேரத்தில் தன்னை இழந்து அவளை முத்தமிட்டதன் தார்பரியம் புரிய ஆயிரம் தடவையாக தன்னையே நொந்து கொண்டவன் துவாலையை தன் இடையில் சுற்றிக்கொண்டு குளியல் அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்த நொடியே அவனுடைய அலைபேசி கதறத் தொடங்க திவாகரின் அழைப்பைக் கண்டவனுக்கு இப்போது என்ன பிரச்சனையோ என்ற எண்ணமே உள்ளுக்குள் எழுந்தது.

அழைப்பை ஏற்று அவன் காதில் வைத்த அடுத்த நொடியே, திவாகரோ அலறாத குறையாக வார்த்தைகளைக் கொட்டினான்.

“பா.. பாஸ்… பாஸ்…”

“என்ன..?”

“அ.. அந்த மேடம் நீங்க அவங்ககிட்ட மிஸ்பிஹேவ் பண்ணதா சோஷியல் மீடியால உங்கள டேக் பண்ணி போஸ்ட் போட்டுருக்காங்க.. போஸ்ட் வைரலாகிருச்சு.. கமெண்ட்ஸ்ல உங்கள பத்தி எல்லாரும் கழுவிக் கழுவி ஊத்துறாங்க பாஸ்…”

“வாட் த ஃ******…”

“உங்… உங்கள காம அரக்கன்னு மென்ஷன் பண்ணிருக்காங்க பாஸ்…” எனக் கூறியவனுக்கோ வார்த்தை தடுமாறித்தான் வெளிவந்தது.

கொதித்துப் போனான் ஷர்வாதிகரன்.

இவ்வளவு நேரமும் அவனுக்குள் உருவாகி அவனை உருக வைத்துக் கொண்டிருந்த உணர்வுகளோ முற்றிலுமாக வடிந்து போக சீற்றம் எனும் எரிமலை அவனுக்குள் உருவாகி வெடிக்கத் தயாராகியது.

“இதுக்கு மேலயும் இவங்கள சும்மா விடக்கூடாது சார்… நம்ம கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க…” என திவாகரே சீற்றத்துடன் கூற,

“நோ…. நீ எதுவும் பண்ண வேணாம் திவாகர்.. அவளோட ரெண்டு வருஷக் கனவு நாளைக்கு நடக்கப் போகுதில்ல..? நாளைக்கு அந்த முக்கியமான ஃபாரின் கிளையன்ஸோட மீட்டிங்ல அவளுக்கான பதிலடியை நான் கொடுத்துக்கிறேன்..” என்றவனே வார்த்தைகளில் வன்மமோ அளவற்று சிந்தியது.

 

💜🔥💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

1 thought on “9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!