ராம் புரியாமல் கேட்க “அம்மாவும் அந்த அங்கிள் கூட வந்திருந்தாங்கப்பா.. அவங்க எங்ககிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? உங்களை மாதிரி தான் அந்த அங்கிளும்.. இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு நியூ டாடியாக போறாரு.. அதனால அவர் சொன்னதெல்லாம் கேட்கணும்.. அவர் சாக்லேட் கொடுத்தா வாங்கி சாப்பிடணும்.. அப்படின்னு சொன்னாங்க..”
பூஜா சொல்ல சொல்ல அப்படியே அதிர்ந்து போய் அதே இடத்திலேயே அமர்ந்து விட்டான் ராம்சரண்…
“இப்படி எல்லாம் அம்மா தான் சொன்னாங்களா இல்ல அந்த அங்கிள் சொன்னாரா?”
ராம் நம்ப முடியாமல் திரும்ப கேட்கவும் “இல்லப்பா.. அம்மா தான் சொன்னாங்க.. அப்புறம் எங்களை நம்ம வீட்டை விட்டு உங்களை விட்டு தனியா அவங்க கூட கூட்டிட்டு போயிருவாங்களான்னு நாங்க கேட்டதுக்கு இப்போதைக்கு அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்.. நான் அப்பப்ப இப்படி வந்து ஸ்கூல்ல உங்களை பார்த்துக்குறேன்னு சொன்னாங்கப்பா..” என்று சொன்னாள் பூஜா..
“அம்மா உங்க கிட்ட இப்படி சொல்லி இருக்கான்னா யாரோ மிரட்டி தான் இப்படி சொல்லி இருக்கணும்.. நிச்சயமா ஏதோ பெரிய ஆபத்துல இருக்கா என் தேஜூ… எப்படியாவது சீக்கிரம் அவளை தேடி நான் கண்டுபிடிக்கணும்..” என்று சொன்னவன் “என்னோட கொஞ்சம் உள்ள வாங்க” என்று அவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு பள்ளியினுள் சென்று நேரே பள்ளி முதல்வரை சந்திக்க அவருடைய அறைக்கு போனான்..
முதல்வரின் அறைக்கு சென்றவன் “எக்ஸ்கியூஸ் மீ மேடம்..” என்று கேட்கவும் கதவருகில் ராமை பார்த்தவர் “ஹலோ.. ராம்.. குட் ஈவினிங்.. வாங்க.. உக்காருங்க..” என்று எதிரில் இருந்த நாற்காலியை காண்பித்தார் அவர்..
“சொல்லுங்க ராம்.. என்ன விஷயம்?”
“மேடம்.. என் வைஃப்ப ரெண்டு நாளா காணோம்.. நேத்து காலையில அவங்க ஸ்கூல்ல இருந்து போனவ இப்ப வரைக்கும் திரும்பி வீட்டுக்கு வரல.. ஆனா இப்ப என் பசங்க மத்தியானம் லஞ்ச்ல அவங்களை பாக்குறதுக்கு இந்த ஸ்கூலுக்கு அவ வந்ததா சொல்றாங்க.. ” என்று மெதுவாக அவரிடம் சொன்னான் அவன்..
“அப்படியா பசங்களை மட்டும் வந்து மத்தியானம் பார்த்திருக்காங்களா? அவங்களை பத்தி ஏதேதோ நியூஸ் வேற வருது.. எல்லாரும் வேற வேற விதமா ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா ராம்..? அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா உடனே அதை சால்வ் பண்ணிக்கோங்க.. இப்படி அம்மா அப்பா பிரிஞ்சு இருக்கறது பசங்களோட எதிர்காலத்துக்கும் அவங்க மனநிலைக்கும் நல்லது இல்ல” என்று அவர் பேச ஆரம்பிக்கவும் “இல்ல… இல்ல மேடம்.. நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்க” என்றான் அவன்..
“சொல்லுங்க ராம்..”
“மத்தியானம் அவங்க இவங்க ரெண்டு பேரையும் பார்க்க வந்திருக்காங்க.. ஆனா இன்னொரு ஆளோட வந்திருக்காங்க.. எனக்கு என்னவோ அந்த ஆளு அவங்களை மிரட்டி கூட்டிட்டு வந்துருப்பானோன்னு டவுட்டா இருக்கு மேடம்.. தயவு செஞ்சு இதுல எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மேடம்..” கெஞ்சி கேட்டுக் கொண்டான் அவன்..
“மிஸ்டர் நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு.. சரி.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் இவங்க கிளாஸ் டீச்சரை கூப்பிடுறேன்.. நிச்சயமா அவங்க தான் அவங்க அம்மாவை பார்க்க கூட்டிட்டு போய் விட்டு இருக்கணும்.. மேரி..” என்று தன் காரியதரிசியை அழைத்தவர் “இவங்க கிளாஸ் டீச்சர் ரம்யாவை நான் வர சொன்னேன்னு கொஞ்சம் வர சொல்லுங்க” என்று அந்த பெண்ணிடம் சொல்லி அனுப்பினார்..
ஐந்து நிமிடங்களில் அந்த அறைக்குள் அனுமதியுடன் நுழைந்த ரம்யா டீச்சர் “சொல்லுங்க மேடம்” என்றார் பள்ளி முதல்வரை பார்த்து.. அப்போது ராமை பார்த்த ரம்யா டீச்சர் ஏனோ முகத்தை சுளித்தாள்..
“மிஸ்.ரம்யா.. ராம் ஏதோ அவர் வைஃபை காணோம்னு சொல்றாரு.. ஆனா இன்னைக்கு மத்தியானம் ஸ்கூலுக்கு வந்து பசங்களை அவங்க பார்த்தாங்கன்னு பசங்க சொல்றதா சொல்றாரு.. அவங்க வந்து பார்த்தாங்களா?”
“எஸ் மேடம்.. அவங்க வந்தாங்க.. ஆனா இன்னொருத்தரோட வந்தாங்க.. வந்துட்டு இவங்க கிட்ட பேசிட்டு போயிட்டாங்க.. நான் கூட யோசிச்சேன்.. ஒண்ணு ராம் சாரோட மேடம் வருவாங்க இல்லன்னா தனியா வருவாங்க.. இவர் யார் புதுசா இருக்காருன்னு யோசிச்சேன்”
அதற்குள் முதல்வர் பூஜாவையும் அஸ்வினையும் பார்த்து “பூஜா.. அஸ்வின்.. உங்க அம்மா உங்க கிட்ட வந்து என்ன சொன்னாங்க?” என்று கேட்கவும் அன்று மதியம் தன் அம்மாவிடம் பேசிய அனைத்தையும் இருவரும் ஒப்பித்தார்கள்..
அதைக் கேட்ட பிறகு ராமை ஒரு அர்த்தம் உள்ள பார்வை பார்த்தார் பள்ளி முதல்வர்..
“என்ன ராம்.. இவங்க இப்படி சொல்றாங்க.. இதுக்கு மேலயுமா நீங்க இதை கடத்தல்.. மிரட்டல்ன்னு சொல்றீங்க? உங்க வைஃபே அவரை நியூ டாடின்னு சொல்லி இருக்காங்க சார் பசங்க கிட்ட.. இதைவிட அவங்க இஷ்டத்தோட தான் அவரோட போய் இருக்காங்கங்கறதுக்கு உங்களுக்கு என்ன சார் ஆதாரம் வேணும்?”
“நீங்க சொல்றது சரிதான் மேடம்.. ஆனா அந்த கூட வந்த ஆளு மிரட்டி கூட இப்படி அவங்க சொல்லி இருக்கலாம் இல்லையா? யோசிச்சு பாருங்க மேடம்..”
“ஆக்சுவலா ராம்.. நீங்க சொல்றபடி இருக்கலாம்ங்கறது ஒரு யூகம்தான்.. மத்தபடி அவங்க வேற யாரோடயாவது அவங்க இஷ்டத்தோடு வந்து இருக்கலாம்.. அதனால ஒருவேளை நீங்க சொல்றபடி இது ஒரு கடத்தலா இருந்தா இதை நாம இப்படியே டீல் பண்ண முடியாது.. ஸ்கூல் ரூல்ஸ்க்கு அது சரிப்பட்டு வராது.. பசங்களை உங்க வைஃப் மீட் பண்ண ரூம்ல நிச்சயமா சிசிடிவி கேமரா இருக்கு.. ஆனா அதை உங்களுக்கு இப்ப போட்டு காமிக்கிறதுக்கு எங்களால முடியாது.. ஏன்னா அதுக்கு உங்க வைஃப்போட பர்மிஷன் வேண்டி இருக்கும்.. அப்படியே அவங்க பர்மிஷன் வாங்க முடியாத நிலைமைன்னா நீங்க போலீஸ் மூலமா வந்து தான் அதை பார்க்க வேண்டி இருக்கும்.. நீங்க போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்களை கூட்டிட்டு வந்து பாத்துக்கோங்க..”
“நான் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன் மேடம்.. நான் இன்னைக்குள்ள அவங்களை கூட்டிட்டு வந்து உங்களை பார்க்கிறேன்.. மேடம்.. எனக்காக இன்னும் ஒன் ஹவர் நீங்க இங்க வெயிட் பண்ண முடியுமா?”
“இன்னும் டூ ஹவர்ஸ் நாங்க இங்கதான் இருப்போம்.. ராம்.. நீங்க தாராளமா கூட்டிட்டு வரலாம்.. நம்ப இந்த விஷயத்தை ரொம்ப பசங்க முன்னாடி பேச வேண்டாம்.. ஏற்கனவே உங்க வைஃப் பத்தி நியூஸ் பேப்பர்ல வந்ததுனால இவங்களோட நிறைய பேரு வெளில இருந்து பேசறதாலயும் அவங்க மனசுல நிறைய கேள்விகள் இருக்கு.. இதை பத்தி கிளாஸ் டீச்சர் ஏற்கனவே என்கிட்ட சொன்னாங்க.. இவங்க எதிர இன்னும் இதை பத்தி பேசினோம்னா இன்னும் அவங்க மனசுல பாதிப்பு உண்டாகறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.. அதனால முதல்ல இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு அப்புறம் நீங்க போலீஸை கூட்டிட்டு வாங்க..”
“ஓகே மேடம்.. தேங்க்ஸ் மேடம்.” என்றவன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று அவர்களை தன் அன்னையிடம் விட்டுவிட்டு நேராக காவல் நிலையத்துக்கு சென்றான்..
காவல் நிலையத்துக்குள் நுழைந்தவன் “சார்..சார்..” என்று நேரே சென்று இன்ஸ்பெக்டர் எதிரில் நிற்கவும் “ராம்.. படபடன்னு பேசாதீங்க..முதல்ல பொறுமையா என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றார் அவர்..
“சார்.. என் வைஃப் அந்த அருணோட இன்னைக்கு மத்தியானம் ஸ்கூலுக்கு வந்திருக்கிறா சார்.. அந்த அருண் தான் சார் அவளை கடத்தி வச்சிருக்கான்.. இன்னைக்கு மத்தியானம் ஸ்கூலுக்கு வந்து என் பிள்ளைகளை மீட் பண்ணி இருக்காங்க சார்..”
“நீங்க சொல்றது உங்களுக்கே காமெடியா இல்லையா? அவரோடயே வந்து ஸ்கூல்ல அவங்க இஷ்டப்படி உங்க பிள்ளைங்களை அவங்க பார்த்து இருக்காங்க.. அப்புறம் அவர் கடத்தி வச்சி இருக்கிறார்னு எப்படி சார் சொல்றீங்க? அவரோட உங்க வைஃப் ஃப்ரீயா ஊர்ல எல்லா இடத்துக்கும் போயிட்டு தான் இருக்காங்கன்னுதான இதுக்கு அர்த்தம்..?”
“சார்.. அப்படி இல்ல சார்.. அவளை ஏதோ சொல்லி மிரட்டி தான் சார் அவன் அங்க கூட்டிட்டு வந்து இருக்கணும்.. நீங்க தயவு செஞ்சு என்னோட ஸ்கூலுக்கு வாங்க சார்.. நான் அந்த பிரின்ஸ்பலை பார்த்து பேசினேன் சார்.. அவங்க தேஜூ பசங்களை மீட் பண்ண ரூம்ல சிசிடிவி கேமரா இருக்கு.. அதோட ஃபுட்டேஜ் பாக்குறதுக்கு உங்க பர்மிஷன் வேணும்னு சொல்றாங்க சார்.. ப்ளீஸ் சார்.. நீங்க ஸ்கூலுக்கு வந்தீங்கன்னாதான் அங்க என்ன நடந்துச்சுனு என்னால கொஞ்சம் பார்க்க முடியும் சார்.. உங்களை கெஞ்சி கேட்கிறேன் சார்..” அவன் குரல் தழுத்தழுக்க கெஞ்சினான்..
“சார்.. ஏன் சார் இப்படி இன்னசென்ட்டா இருக்கீங்க? அவங்க அவரோட வந்து குழந்தைகளை பார்த்து இருக்காங்க.. ஃபோட்டோல வேற அவரோட அவ்வளவு நெருக்கமா இருக்காங்க.. நீங்க இன்னுமா அவங்க உங்களை நினைச்சுட்டு இருப்பாங்கனு நம்புறீங்க?”
அவர் கொஞ்சம் கிண்டல் தொனியுடனேயே கேட்டார்..
“சார்.. அந்த ஃபுட்டேஜ் பார்த்துட்டா நமக்கு உண்மை தெரிஞ்சிடும் இல்ல? நீங்க சொல்றபடி இருந்தா நான் அந்த ஃபுட்டேஜ் பார்த்தப்புறம் வாயை மூடிட்டு போயிடுறேன்.. சார்.. மறுபடியும் உங்களை வந்து இந்த மாதிரி உதவி கேட்கவே மாட்டேன்.. ஆனா ஒரு தடவை அந்த வீடியோவை பார்த்துட்டு வந்துடலாம் சார்.. ப்ளீஸ் சார்..” மறுபடி மறுபடி கெஞ்சினான் அவன்..
“சரிங்க சார்.. நான் வரேன்.. வாங்க போலாம்..” என்று அவர் சொல்ல “ரொம்ப தேங்க்ஸ் சார்.. வாங்க போலாம்..” என்று அவரை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றான் ராம்..
பள்ளியில் முதல்வரிடம் சென்று இன்ஸ்பெக்டர் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்… பிறகு ராம், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ரம்யா, இன்ஸ்பெக்டர் நால்வரும் சேர்ந்து தேஜூ, அருண், குழந்தைகளை சந்தித்த அறையில் பதிவாகி இருந்த மதிய உணவு நேரத்திற்கான சிசிடிவி காணொளியை கண்டார்கள்..
அதில் தேஜஸ்வினியும் அருணும் அந்த அறையில் முதலில் சோஃபாவில் அமர்ந்து கொண்டு காத்துக் கொண்டிருந்தார்கள்.. இருவரும் தள்ளி தள்ளி தான் உட்கார்ந்து இருந்தார்கள்..
ராம் இன்ஸ்பெக்டரிடம் “சார்.. நிஜமாகவே ரெண்டு பேரும் மனசு சம்மதிச்சு கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னா இப்படி தான் உட்கார்ந்து இருப்பாங்களா சார்?” என்று கேட்டான்..
இன்ஸ்பெக்டர் அவனுடைய சந்தேகத்தை ஆமோதிப்பது போல் தலையாட்டியவர் “பார்க்கலாம்.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்றவர் தொடர்ந்து அந்த காணொளியை பார்த்துக் கொண்டிருந்தார்..
அந்த காணொளியில் அந்த அறைக்கு வந்த பூஜாவும் அஸ்வினும் ஓடிவந்து தேஜூவை கட்டிக் கொண்டனர்.. இருவரையும் அள்ளி அணைத்து மாறி மாறி முத்தமிட்டவள் அவர்களிடம் ஏதோ கண் கலங்க கேட்டாள்..
பூஜா ஏதோ கேட்கவும் அவளுக்கு ஏதோ பதில் சொன்னாள் தேஜூ..
அதற்குள் அவள் பின்னால் நின்றிருந்த அருண் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் தரையில் மடிந்து உட்கார்ந்து ஏதோ சொல்லி தான் வைத்திருந்த சாக்லேட்டை அவர்களிடம் கொடுக்க அவர்கள் இருவரும் அவனை முறைத்துப் பார்த்தார்கள்..
அஸ்வின் வேண்டாம் என்பது போல் தலையாட்டி ஏதோ சொல்லவும் அருண் தேஜூவை திரும்பி பார்க்க அவளும் அந்த குழந்தைகளின் உயரத்திற்கேற்ப கீழே முட்டி போட்டு அமர்ந்து கொண்டு குழந்தைகளிடம் ஏதோ சொன்னாள் அருணை அவ்வப்போது திரும்பி பார்த்து முறைத்துக் கொண்டே..
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏதோ கேட்டாள் பூஜா…
அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்த தேஜு அருணை திரும்பி முறைக்கவும் அவனோ கண்ணை மூடி ஏதோ ஜாடை செய்தான்..
தேஜூ தன் அழுகை அத்தனையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்வது போல் தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ குழந்தைகளிடம் எந்திரம் போல பேசினாள்..
அப்போது பூஜா ஏதோ கேட்க அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள் தேஜு..
அதற்கு மேல் தன் துக்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போல் இருந்த தேஜூ கஷ்டப்பட்டு குழந்தைகளை சமாதானப்படுத்துவது போல் ஏதோ சொல்லி அவர்கள் அந்த அறையை விட்டுப் போக திரும்பவும் அவர்களை அழைத்தான் அருண்..
அவர்களிடம் தான் வாங்கி வந்த சாக்லேட்டை கொடுத்தான்.. அவர்கள் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து போனது தான் தாமதம் அப்படியே உடைந்து போய் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் தேஜஸ்வினி..
காணொளியில் இதை கண்ட ராமின் கண்களில் கண்ணீர் பொல பொலவென கொட்டியது..
“ஐ அம் சாரி டா தேஜூ..உன்னை இப்படி கஷ்டப்பட விட்டுட்டேன்.. உன்னை அந்த ராட்சசன் என்ன கொடுமை படுத்துறான்னு தெரியல.. என்ன வேதனைப்படுறயோ நீ தேஜூ” என்று புலம்பி சுற்றி யார் இருக்கிறார்கள் என்றும் பார்க்காமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தான் அவன்..
சில நொடி ரௌத்திரமாக மாறிய முகத்துடனும்.. கோபத்தில் சிவப்பேறிய கண்களுடனும் கை விரல்களை சேர்த்து இறுக்கி பல்லைக் கடித்துக்கொண்டு
“டேய் அருண்.. நீ மட்டும் என் கையில கிடைச்ச.. தேஜூவுக்கு நீ கொடுத்த வேதனைக்கெல்லாம் உன்னை உயிரோட விடமாட்டேன் டா..” என்று அங்கிருந்த மேஜையில் தன் கையால் ஓங்கி குத்தினான்..
சுற்றி இருந்த அனைவரும் அவன் நிலையை கண்டு பயப்படுவதா இல்லை அனுதாபப்படுவதா என்று தெரியாமல் அவனை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தார்கள்..
தொடரும்..
வாசகர்களுக்கு வேண்டுகோள்
:
உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும் ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!